siraku17

siraku cp-678f098f

சிகு 17

அன்றையோடு அஞ்சனா ஹாஸ்பிடல் வந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்திருந்தன. அவளது உடல் இப்போது நன்றாகத் தேறியிருந்தது. ஷியாம் அவள் அறையில்தான் தங்கிக் கொண்டிருந்தான். அவனது அப்பா டாக்டர் லதாவிடம் பேசிவிட்டுச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே அங்கே இன்னொரு கட்டில் வந்துவிட்டது. இன்றைக்கு அவனுக்கு மார்னிங் ட்யூட்டி. அதிகாலையிலேயே எழுந்து குளித்து ரெடியாகிவிட்டான்.

“சீனியர்…” முக்கியமான ஒரு ஃபைலை பார்த்தபடி இருந்தவனை அழைத்தாள் பெண். அவள் இன்னும் கட்டிலிலிருந்து எழுந்திருக்கவில்லை.

“ம்…”

“இன்னைக்கு அம்மாவை வரச்சொல்லட்டுமா?” அவள் கேள்வியில் ஃபைலிலிருந்த பார்வையைத் திருப்பி அவளைப் பார்த்தான். 

“பார்க்கணும் போல இருக்கா?”

“அப்பிடியெல்லாம் இல்லை… ரெண்டு மூனு தடவை ஃபோன்ல பேசிட்டேன், ஆனா… நேத்து நைட் பேசும்போது கொஞ்சம் கலங்கிட்டாங்க.”

“என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”

“இல்லையில்லை, இங்க ஒருதடவை வந்துட்டுப் போனா ஓகே ஆகிடுவாங்கன்னு எனக்குத் தோணுது.”

“இங்க அவங்க வர்றது ஒன்னும் ப்ராப்ளம் இல்லைம்மா, ஆனா நீ எந்த வகையிலயும் டிஸ்டர்ப் ஆகக்கூடாது, எனக்கு அதுதான் முக்கியம்.”

“புரியுது சீனியர்.” 

“கவனமா இருந்துக்கோ, நர்ஸ் இப்போ வருவாங்க, நான் லன்ச்சுக்கு வரும்போது ரிந்போர்ட்ஸ் பார்க்கிறேன் என்ன?”

“ம்…” அவள் தலையை ஆட்ட அவன் அவசரமாகக் கிளம்பிவிட்டான். அன்றைக்கு ஷியாமிற்கு தியேட்டரில் வேலை இருந்தது. மதியம் நெருங்குவதற்குள்ளாகக் களைத்துப் போயிருந்தான். லேசாகப் பசிக்கவும் ஆரம்பித்திருந்தது. அறைக்குச் சென்று உண்டுவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே அவசரமாக ரூமிற்கு வந்தான். 

அறைக்கதவை அவன் திறக்க உள்ளே அஞ்சனாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் இருந்தது. ஷியாம் அவர்களை அப்போது அங்கே எதிர்பார்க்கவில்லை. காலையில் அவள் பேசியதையே அவன் முழுதாக மறந்து போயிருந்தான். அப்படியே இருந்தாலும் அவள் அம்மா மட்டும்தான் வருவார் என்று அவன் நினைத்திருக்க அவள் குடும்பமே அங்கே அமர்ந்திருந்தது. ஏற்கனவே பசியோடும் சோர்வோடும் வந்திருந்தவனுக்கு அங்கிருந்த சூழல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மதிய நேரத்தில் வரும் நர்ஸ் அப்போது அஞ்சனாவின் ரத்த அழுத்தத்தைச் சோதித்துக் கொண்டிருந்தார். அமைதியாகக் கட்டிலின் அருகே வந்தவன் அங்கிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்தான்.

“எல்லாம் நார்மலா இருக்கா?”

“இருக்கு டாக்டர்.” நர்ஸ் பதில் சொன்னாள். இவன் தலையைக் கண்டதும் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.

“சாப்பாடு ஆச்சா?”

“அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்திருக்காங்க சீனியர்.” அவசரமாகப் பதில் சொன்னாள் அஞ்சனா.

“ஓ… வீட்டுல இருந்தா…” அவன் லேசாகத் தயங்கினான்.

“இல்லைங்கத் தம்பி, உப்பு, காரம், எண்ணெய் எதுவுமே ரொம்பச் சேர்த்துக்கலை, பார்த்துப் பார்த்துத்தான் பண்ணியிருக்கேன்.” இது வெண்பா.

“ஓ…” ஷியாம் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

“டாக்டர், உங்களோட லன்ச்சை இப்பவேக் கொண்டுவரவா, இல்லை லேட்டாகணுமா?” 

“இப்பவே அனுப்பச் சொல்லுங்க, எனக்கு ஒன் அவர் ப்ரேக்தான்.” நர்ஸின் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்த பாத்ரூமிற்குள் போக எத்தனித்தான் ஷியாம்.

“சாப்பாடு நிறையவே இருக்கு தம்பி.” தயங்கியபடி சொன்னார் வெண்பா. அம்மாவின் செயலில் வேதனைப்பட்டுக் கொண்டு அவன் தன் வீட்டிற்குப் போகாமல் ஹாஸ்பிடலில் தங்கியிருக்கும் தகவல் இவர்கள் வரை வந்திருந்தது. உபயம் அபிநயா. ஆனால் டாக்டர் அவர்கள் மகளின் அறையில்தான் ஒன்றாகத் தங்குகிறான் என்ற விஷயம் ரம்யாவுக்கு மட்டுமேத் தெரியும்.

“பரவாயில்லைம்மா, கேன்டீன் சாப்பாடும் இங்க நல்லாத்தான் இருக்கும்.” 

“சீனியர்.” முகம் கழுவப் போனவனை அழைத்தது பெண். ஷியாம் நடந்துபோனவன் நின்று திரும்பிப் பார்த்தான். சோஃபாவில் கோவிந்தராஜனும் புருஷோத்தமனும் அமர்ந்திருந்தார்கள். ரம்யா தன் நாத்தனாரின் படுக்கைக்கு அருகில் நின்றிருந்தாள்.

“அதான் அம்மா நிறையக் கொண்டு வந்திருக்காங்கல்லை, எதுக்கு கேன்டீன் சாப்பாடு? எங்கூட நீங்களும் சாப்பிடுங்களேன்.” அஞ்சனாவின் மனதில் வேறெந்தத் தவறான எண்ணமும் இல்லை. தனக்கு இத்தனைத் தூரம் சகாயம் செய்யும் சீனியருக்கு‌ செய்யும் சின்ன உதவியாகவே அவள் இதை நினைத்தாள். மூன்று நாட்களாக அவளோடு சேர்ந்து அவனும் கேன்டீன் சாப்பாடுதான் சாப்பிடுகிறான். அப்படியிருக்க அவள் மட்டும் அவனை விட்டுவிட்டு எப்படி வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது?! ஆனால் அங்கு கூடியிருந்த மற்றையவர்களின் பார்வையில் அவன் மீதான அவள் கரிசனம் வேறுவிதமாக விளங்கிக்கொள்ளப்பட்டது. கோவிந்தராஜன் மகனை ஒரு பார்வைப் பார்த்த அதே நொடி வெண்பாவும் மருமகளைத்தான் பார்த்தார்.

“ம்…” அதற்கு மேல் ஏதும் பேசாமல் ஷியாம் போய் முகம் கழுவிவிட்டு வந்தான். தனது வேலையை முடித்துக்கொண்டு நர்ஸ் போயிருந்தாள். இவன் வெளியே வரவும் புருஷோத்தமன் எழுந்து அறையை ஒட்டியிருந்த கார்டனுக்குள் போய்விட்டான். இருவருக்குமே ஒருவரை ஒருவர் பார்க்கச் சங்கடமாக இருந்தது. 

“உட்காருங்க டாக்டர்.” சொன்ன ரம்யா அவனுக்கு அவசர அவசரமாக ஒரு ப்ளேட்டில் பரிமாறினாள். அவன் அமர்ந்த சோஃபாவில் இன்னும் கோவிந்தராஜன் அமர்ந்திருந்தார்.

“நீயும் சாப்பிடு அஞ்சு.” நாத்தனாருக்கும் பரிமாறியது பெண். அவன் சாப்பிட சிறிது அவகாசம் கொடுத்த கோவிந்தராஜன் இப்போது பேச ஆரம்பித்தார்.

“அஞ்சனா இப்போ எப்பிடி இருக்கா தம்பி?”

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லைங்க, ஷி இஸ் ஃபைன்.”

“அப்போ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா?” பெரியவரின் கேள்வியில் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான் ஷியாம். கட்டிலில் அமர்ந்தபடி உண்ண ஆரம்பித்திருந்தவள் இவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பதிலை அவள் கண்கள் ஆவலோடு எதிர்பார்த்தது போலத் தோன்றியது.

“கூட்டிட்டுப் போகலாந்தான், ஆனா… நிம்மதியான இந்த ஹாஸ்பிடல் சூழல்ல அவ ஒரு ப்ராப்ளமும் இல்லாம இருக்கா, உங்க வீட்டுல அவளால அப்பிடி இருக்க முடியுமா?” அவன் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. நடந்த குளறுபடிகளுக்கு அவன் அம்மா மட்டும் காரணமில்லை. தருணும் காரணம்தான். 

“வேணாம் மாமா, அஞ்சு இங்கேயே இருக்கட்டும், அதான் நல்லது.” ரம்யா முடிவு போல சொல்லிவிட அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை. அவர்கள் வீட்டிற்கு தருணின் வருகையை யாரால் தடுக்கமுடியும்? அப்படி அவன் மீண்டும் வந்து நின்று சத்தம் போட்டால் பாதிக்கப்படப்போவது அவர்கள் பெண்தானே? பெற்றவர்களின் முகத்தில் கவலை மண்டிக்கிடந்தது. 

“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க டாக்டர்.”

“இல்லைங்க, போதும்… சாப்பாடு நல்ல டேஸ்ட்டா இருக்கு.”

“அத்தையோட சமையல், எப்பவும் டேஸ்ட்டாத்தான் இருக்கும்.” ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக ரம்யாவும் ஷியாமும் பேசிக்கொண்டார்கள். ஷியாம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அத்தோடு எழுந்துவிட்டான். அவனுக்கு ட்யூட்டிக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. 

“நீங்கெல்லாம் இங்க ரொம்ப நேரம் இருக்க வேணாம், உங்கப் பொண்ணுக்கு இப்போ ரெஸ்ட் ரொம்ப முக்கியம், அம்மா வந்திருக்கா, அண்ணி வந்திருக்கான்னு அவ பாட்டுக்கு எழும்பித் தோட்டத்துக்கு நடந்திரப்போறா, கட்டிலை விட்டு காலை நிலத்துல வெக்க விடாதீங்க, நர்ஸ் அடிக்கடி வந்து பார்த்துப்பாங்க, அதால வீணாக் கவலைப்படத் தேவையில்லை, லன்ச் கொண்டுவந்து குடுக்கறதா இருந்தா இன்னைக்கு மாதிரிப் பார்த்துச் சமைங்க, படிக்கிறதுக்கு ஏதாவது தேவைன்னா நல்ல புக்ஸ்ஸா கொண்டுவந்து குடுங்க, இந்த நிலைமைல இருக்கிற ஒரு பொண்ணை எப்பிடிப் பார்த்துக்கணும்னு ரெண்டு கொழந்தைங்கப் பெத்துக்கிட்ட உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை, அஞ்சு பத்திரம்.” வெண்பாவை பார்த்தபடி அவன் பேசி முடிக்க அவர் தலையை மட்டும் ஆட்டினார். வார்த்தைகள் வரவில்லை அவருக்கு.

“நான் கிளம்பறேன்.” அஞ்சனாவை பார்த்துச் சொன்னவன் ரம்யாவிடமும் ஒரு தலையசைவால் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.

“என்ன டாக்டர் இத்தனை ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு?!” அவன் தலை மறைந்ததும் தைரியமாகப் பேசினாள் ரம்யா.

“நம்ம நன்மைக்குத்தானே சொல்லுறாரு ரம்யா.” வெண்பா சொல்லிக் கொண்டிருக்கும் போது இதுவரை வெளியே தோட்டத்திலிருந்து அறைக்குள் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த புருஷோத்தமன் அவசரமாக அறைக்குள் வந்து வெளியே போனான். அவன் செய்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வேகமாக வெளியே வந்தவன்,

“டாக்டர்.” என்றான் சத்தமாக. சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த ஷியாம் அந்தக் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தான். அது ஹாஸ்பிடல். அங்கே பலர் பல டாக்டர்களை அழைக்கலாம். ஆனாலும் எதுவோ ஒரு உணர்வு உந்தித்தள்ள அவன் திரும்பினான். அவனை நோக்கி வந்தது புருஷோத்தமன். ஷியாமிற்கு ஒன்றும் புரியவில்லை. எந்த வம்பை இழுக்க இவன் இப்போது தன்னிடம் வருகிறான் என்று யோசித்தபடி நின்றிருந்தான் டாக்டர். அருகே வந்தவுடன் சட்டென்று பேசிவிடவில்லை புருஷோத்தமன். சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தவன்,

“உங்களுக்கு நேரமிருந்தா… நான் கொஞ்சம் பேசணும்.” என்றான் தயங்கியபடி. ஷியாமிற்கு பணிநேரம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. 

“வாங்க.” அவனைத் தன் பிரத்தியேக அறைக்குள் அழைத்துச் சென்றவன் அங்கிருந்தபடி யாரையோ தொலைபேசியில் அழைத்தான்.

“நான் இன்னும் ஒரு ஹாஃப் அன் அவர் ப்ரேக் எடுத்துக்கிறேன், ஜூனியரை பார்த்துக்கச் சொல்லுங்க, ஏதாவது அவசரம்னா கூப்பிடத் தயங்காதீங்க.” என்றான்.

“இல்லை… உங்களுக்குச் சிரமம்னா…” புருஷோத்தமன் தடுமாறினான்.

“பரவாயில்லை, இது அஞ்சனாவோட ப்ரதர் எங்கிறதையும் தாண்டி என்னோட சீனியருக்கு நான் செய்யுற மரியாதை.” சொல்லிவிட்டு அழகாகப் புன்னகைத்தான் ஷியாம். உண்மையிலேயே பள்ளிக்காலத்தில் புருஷோத்தமன், ஷியாமிற்கு சீனியர். ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்தவர்கள்தான். பெரிதாகப் பேசிக்கொண்டதில்லை. பாடசாலையின் பெருமதிப்பைப் பெற்ற அந்த ஜூனியரை புருஷோத்தமனும் மதித்தான். ஆனால் அதே ஜூனியரின் பார்வை தன் தங்கை மேல் பட்டபோது அவன் ஒரு அண்ணனாக ஆகிப்போனான், அவ்வளவுதான்.

“இல்லை… ஹாஸ்பிடல் ரூமுக்கு பணம் கட்டுறதுக்காகப் போயிருந்தேன், அவங்க… உங்க பேரைச் சொல்லுறாங்க, அதான்…”

“ஓ…” இருவரும் இப்போது எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அஞ்சனாவின் அண்ணன் அவளுக்காகப் பணம் கொடுப்பதுதான் நியாயம். அது ஷியாமிற்கும் புரிந்தது. எந்த உரிமையும் அற்ற அவன் அவளுக்காகச் செலவு செய்வதை அவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். அதுவும் புத்திக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவனுக்குக் கடைசிவரை எந்த உரிமையும் இல்லைதானா? 

“ரூம் என்னோட பேர்லதான் இருக்கு.”

“அது பரவாயில்லை, அவசரத்துக்கு நீங்க உங்க பேரைக் குடுத்திருக்கீங்க, ஆனா நான் பணம் குடுக்கணுமில்லை?” சமாதானமாகத்தான் பேசினான் புருஷோத்தமன். குரலில் எந்தக் கசப்போ வன்மமோ இருக்கவில்லை.

“ஏன் சீனியர்? அந்தப் பணத்தை உங்கத் தங்கைக்காக இப்பகூட நான் குடுக்கக் கூடாதா?” ஷியாமும் மிகவும் தன்மையான குரலில் கேட்டான். இருவருக்கு நடுவேயும் கண்ணுக்குத் தெரியாத பனிப்பாறை ஒன்று நின்றிருந்தது. அதை எந்தத் தயக்கமும் இன்றி இப்போது புருஷோத்தமனே உடைத்தான்.

“குடுத்திடுங்கன்னு நானும்‌ சிம்பிளா சொல்லிடலாம் ஷியாம், ஆனா அது எவ்வளவு பெரிய சுயநலம்!” தன்னைப் பேச்சால் எந்தவிதத் தயக்கமுமின்றி நெருங்கிய‌ பெரியவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ஷியாம்.

“பள்ளிக்காலம் முடிஞ்சு போச்சு, அப்போ வாழ்க்கையைப் பத்தின புரிதல் இல்லை, தங்கச்சியைப் பாதுகாக்கணுங்கிற எண்ணம் மட்டுந்தான் அப்போ இருந்துச்சு.” வெளிப்படையாகப் பேசினான் புருஷோத்தமன். 

“பாதுகாத்த நீங்க பாதுகாப்பான கைகள்ல அவளை ஒப்படைக்கலையே?” குற்றம் சாட்டினான் ஷியாம்.

“மனுஷங்களை ஒரு எல்லைக்கு மேல தூண்டித் துருவிப் பார்க்க முடியாது ஷியாம், பெரிய தப்பு நடந்து போச்சு, அந்த ராஸ்கலை நான் எவ்வளவு நம்பினேன், மதிச்சேன்னு உங்களுக்குத் தெரியாது.” இதை புருஷோத்தமன் சொல்லும் போது ஷியாம் கசப்பாகப் புன்னகைத்தான்.

“உங்களுக்கும் ஒரு தங்கை இருந்திருந்தா என்னோட மனநிலை என்னன்னு உங்களுக்கும் புரியும்.”

“நல்லவேளை, எனக்கு அப்பிடி யாருமில்லை சீனியர், இன்னொரு மனுஷனை உசிரோட சாவடிக்கிற கஷ்டத்தை ஆண்டவன் எனக்குக் குடுக்கலை.”

“சாரி.” செய்த தவறை நினைத்து வருந்துபவன் போல மன்னிப்புக் கோரினான் புருஷோத்தமன்.

“செஞ்ச தப்பையே திரும்பவும் செய்யுறீங்களே சீனியர்.”

“புரிஞ்சுக்கோங்க ஷியாம், இப்பவும் அஞ்சனாவுக்கு ஒரு நல்ல அண்ணனா நீங்க சொல்ற எல்லாத்துக்கும் என்னால‌ ஈஸியா தலையாட்ட முடியும்.”

“அப்போ ஏன் அதைச் செய்ய மறுக்கிறீங்க?”

“அது எவ்வளவு பெரிய சுயநலம்னு உங்களுக்குப் புரியலையா? அஞ்சனா இன்னொரு மனுஷனோட வாழ்ந்துட்டா, அவளை இப்போ உங்கத் தலையில கட்டுறது எந்தவகையில நியாயம்?”

“அஞ்சனா இல்லாம இனி எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லை சீனியர், அதை நீங்கப் புரிஞ்சுக்கோங்க, முன்னாடியாவது எங்கயோ அவ சந்தோஷமா இருக்கான்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன், இப்ப அதுவும் இல்லை, அவளை இப்பிடியொரு நிலைமைல விட்டுட்டு எனக்குன்னு ஒரு வாழ்க்கையா? அது இந்த ஜென்மத்துல நடக்கும்னு நீங்க நம்புறீங்களா?” 

“நேத்து உங்கப்பா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க.”

“ஓ… எதுக்கு?! தப்பா எதுவும் பேசிட்டாங்களா?”

“இல்லையில்லை, அவங்களும் உங்களைப் போலத்தான் பேசினாங்க.”

“அப்புறமென்ன?”

“உங்கம்மாவை யோசிச்சுப் பார்த்தீங்களா?”

“அஞ்சனா எவ்வளவு நல்லப் பொண்ணுன்னு அம்மாக்குத் தெரியாது, கொஞ்ச காலம் போச்சுன்னா அவங்கப் புரிஞ்சுப்பாங்க, குழந்தைங்க இருக்கு, எல்லாம் காலப்போக்குல சரியாகிடும் சீனியர்.”

“எல்லாத்தையும் சிக்கலாக்கி வெச்சிருக்கீங்க ஷியாம் நீங்க, டொனேட் பண்ணுறதுக்கு முன்னாடி நீங்க அஞ்சுக்கிட்ட அதைத் தெரியப்படுத்தியிருக்கணும்.”

“இப்பிடியெல்லாம் நடக்கும்னு எனக்கு அப்பவேத் தெரியும் சீனியர், இன்னொரு முறை என்னால அஞ்சனாவை விட்டுக்குடுக்க முடியாது, தெரிஞ்சுதான் எல்லாம் பண்ணினேன்.”

“இப்ப நான் என்னப் பண்ணணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?”

“தங்கை, தங்கைன்னு அவளை நினைச்சு உங்க வாழ்க்கையை நீங்க வீணடிச்சது போதுங்கிறேன்.” அந்த வார்த்தைகளில் புருஷோத்தமன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

“என்ன சொல்றீங்க நீங்க?”

“போதும் சீனியர், அஞ்சனாக்கு ஒன்னில்லை, ரெண்டு குழந்தைங்க பொறக்கப் போகுது, இனியாவது புள்ளைக் குட்டின்னு உங்க வாழ்க்கையை நீங்கப் பாருங்க, பாவம் ரம்யா, இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களை நீங்க காக்க வெக்கப் போறீங்க?”

“யாரு… யாரு இதெல்லாம் உங்கக்கிட்டச் சொன்னா?” 

“யாரு சொன்னா என்ன? உண்மைதானே?”

“எனக்கு அஞ்சனா ரொம்ப முக்கியம் ஷியாம்.”

“அப்போ அவளை எங்கிட்டக் குடுத்திடுங்க சீனியர்.” அந்தக் கெஞ்சல் குரலில் புருஷோத்தமன் தலைகுனிந்து மௌனமாக அமர்ந்திருந்தான்.

***

வேலை எல்லாம் முடித்துவிட்டு ஷியாம் அறைக்கு வந்த போது பத்து மணி. அஞ்சனா அப்போதும் தூங்காமல் விழித்தபடி இருந்தாள். முகம் மலர்ந்து போய்க்கிடந்தது.

“இன்னும் தூங்கலை?”

“தூக்கம் வரலை சீனியர்.” புன்னகை முகமாகச் சொன்னது பெண். 

“என்னாச்சு?”

“ரொம்ப நாளைக்கப்புறம் வீட்டாளுங்களைப் பார்த்தது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.”

“ரொம்ப நாளைக்கப்புறமா? நீ ஹாஸ்பிடல் வந்து மூனு நாள்தான் ஆகுது பொண்ணே!” அவன் கேலியில் அவள் சிரித்தாள்.

“எனக்கென்னவோ ரொம்பநாள் மாதிரித்தான் இருக்குது சீனியர்.”

“புரிஞ்சுக்கோ அஞ்சு, உன்னோட நன்மைக்காகத்தான் சொல்றேன்.” 

“ஐயையோ! நான் உங்களை எதுவும் சொல்லலை சீனியர், ஆமா… அபி ஏன் இங்க வரலை?” 

“எதுக்கு? நீ அவகூட சண்டைப் போடுறதுக்கா?” சொல்லிவிட்டு பெண்ணையே பார்த்திருந்தான் ஷியாம். வாய்திறந்து பேசாவிட்டாலும் அவள் மனதுக்குள் ஓடும் எண்ணங்களை அவள் முகம் காட்டிக்கொடுத்தது.

“பரவாயில்லை, மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு சொல்லு.”

“அபி தப்புப் பண்ணிட்டா.” 

“ஓஹோ! தப்புன்னு மேடம் எதைச் சொல்றீங்க? அபி உங்கிட்ட உண்மையைச் சொல்லாதது தப்பா? இல்லை டோனரா நான் வந்ததே தப்பா?”

“…” அந்தக் கேள்விக்கு அஞ்சனா பதில் சொல்லவில்லை. ஆனால் இரண்டுமே தப்புதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“நீ எவ்வளவு தூரம் என்னைக் காயப்படுத்துறேன்னு உனக்குப் புரியுதா அஞ்சு?” அவன் குரலில் வலி இருந்தது.

“நீங்கப் பண்ணுறது மட்டும் சரியா சீனியர்? பெத்த அம்மாவை எனக்காக எதிரியைப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறீங்க, எனக்கு அது எவ்வளவு வலிக்குது தெரியுமா?”

“வலிச்சுதுன்னாத் தாங்கிக்கோ! எனக்காகத் தாங்கிக்கோ அஞ்சு, இத்தனை நாளும் நாந்தானே எல்லா வலிகளையும் தாங்கிக்கிட்டேன், எனக்காக ஒரேயொரு முறை நீ அதைத் தாங்கிக்க மாட்டியா? என்னோட சந்தோஷத்துக்காக, நம்ம சந்தோஷத்துக்காக.”

“நீங்கப் பிடிவாதம் பிடிக்கிறீங்க சீனியர், உங்க சந்தோஷத்துக்காக இந்த உலகத்துல இருக்கிற எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிக்க நான் தயார், அதால உங்களுக்குக் கிடைக்கப்போற லாபம் என்ன?”

“எனக்குப் புரியலை அஞ்சு! நீ எதுல லாப நஷ்டம் பார்க்கச் சொல்றே? மனசுல இருக்கிற ஆசைக்கா? காதலுக்கா? அந்த அளவுகோலுக்குள்ள இதெல்லாம் வராதும்மா.” சொல்லிவிட்டுச் சன்னமாகச் சிரித்தான் ஷியாம்.

“அஞ்சு, வாழ்க்கையில நிறைய விஷயங்களை நான் இழந்துட்டேன், இப்போ விட்டதையெல்லாம் நான் புடிக்கிற காலம், ஒவ்வொருத்தரா ரொம்பக் கஷ்டப்பட்டு என்னோட ஆட்டத்துக்குள்ள நான் இழுத்துக்கிட்டு இருக்கேன், ஒட்டுமொத்த ஆட்டத்தையும் நீ கலைச்சு விட்டுடாதே! நீ என்னோட கன்ட்ரோலுக்குள்ள வந்து ரொம்ப நாளாச்சு, இனி நான் என்ன சொல்றனோ அதை நீ கேட்டா மட்டும் போதும், உன்னோட அபிப்பிராயம் எதுவும் எனக்குத் தேவையில்லை.” அதிகாரமாகச் சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் போனான் ஷியாம். இனம்புரியாத கோபம் ஒன்று அவனை வாட்டி வதைத்தது. அதை எங்கே கொட்டுவதென்று தெரியாமல் தவித்தவன் மற்றைய ஃபோனை எடுத்து தருணை அழைத்தான். அவனும் இவனது அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தான் போலும். சட்டென்று அழைப்பை ஏற்றான்.

“டேய் பொறுக்கி டாக்டர்! உம் புத்தியைக் காமிச்சுட்டேல்லை!” அந்தப் பக்கம் தருண் உறும இங்கே ஷியாம் கோணல் சிரிப்புச் சிரித்தான்.

“பங்காளி, அன்னைக்கு நான் என்ன சொன்னேன்? உங்க வீரத்தைப் பொண்ணுங்கக்கிட்டக் காட்டாம மூடிக்கிட்டு உட்காருங்கன்னு சொன்னேனா இல்லையா? நீங்க அதையும் தாண்டி ஒரு பொண்ணுக்கு ஃபோனை போட்டுப் பேசியிருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?”

“உம் பேச்சு எம் மயிரொன்னு போச்சுன்னு அர்த்தம்டா!”

“அதேதான்! இதுக்கு மேலயும் எங்கேயாவது எகிறிக் குதிச்சே… இன்னைக்குப் பொண்ணு வீட்டுக்குப் போன ரிப்போர்ட் நாளைக்கு ஊர் முழுக்க போஸ்டரா தொங்கும், கவனமா இருந்துக்கோ!”

“டேய்! எங்கடா அவ?”

“எதுக்கு? கொழந்தைப் பொம்மை ஒன்னைக் கைல குடுத்து இன்னும் அஞ்சு வருஷம் அவளை ஏமாத்தப் போறியா?” கேலி சொட்டிய அந்தக் கேள்வியில் தருண் ஆத்திரத்தின் உச்சத்திற்குப் போனான்.

“இன்னொரு ஆளைத் தேடிப் புடிச்சிட்டத் தைரியத்துல இருக்காளா?”

“ஆமா பங்காளி! ஆள் புடிச்சது மட்டுமில்லை, இவ்வளவு நாளும் உன்னோட வெத்து விளையாட்டு விளையாடினது போதும்னு இப்பப் பெத்துக்க வேற போறாளா?‌ அந்தக் கெத்து அவளுக்கு, உன்னோட‌ அம்மைக்கிட்டயும் போய் சொல்லு, அம்மா அம்மா, அஞ்சனா உண்டாகி இருக்காளாம்னு சொல்லு.” கேலி தாறுமாறாகப் பறந்தது.

“டேய்! அவ எப்பிடி வாழுறான்னு நானும் பார்க்கிறேன்டா!”  கறுவினான் தருண்.

“தூத் தேவிடியா மவனே! அம்மா மடியில இன்னும் படுக்கிற நாயி நீயி! நீ எங்கிட்டச் சவால் விடுறியா? தப்பித் தவறியும் ஏதாவது ஹாஸ்பிடல் பக்கம் இப்போதைக்குப் போயிடாதே, போனாப் பொணமாத்தான் வீட்டுக்கு வந்து சேருவே! மவனே கொலை வெறியில இருக்கேன்டா! நீ குடுக்கிறே டைவர்ஸ் எனக்கு என்ன மயித்துக்கிங்கிறேன்? ஏற்கனவே அவளோட ஒன்னா ஒரே ரூம்லதான் இருக்கேன், இதுல நீ எதைக் குடுத்தா என்ன, குடுக்கலைன்னாத்தான் எனக்கென்ன? இதுக்கு மேலயும் ஆடிப்பார்க்க நினைச்சே! நான் மனுஷனா இருக்கமாட்டேன்! எவகிட்டயாவது உண்மையைச் சொல்லி வாழுற வழியைப் பாரு, அதை விட்டுட்டு ஏதாவது பண்ண நினைச்சே!” அதற்கு மேல் பேசாமல் ஃபோனை அணைத்த ஷியாம் தன்னைச் சில நொடிகளில் அமைதிப்படுத்திக் கொண்டு ரூமிற்குள் போனான்.

“இவ்வளவு நேரமும் யார்கூட பேசுறீங்க சீனியர்? இன்னமும் சாப்பிடலையே நீங்க?” 

“குளிச்சிட்டு வந்தர்றேன் ம்மா, நீ தூங்கு.”‌ இதுவரை நடந்த வாக்குவாதம் பொய்யோ எனும் வகையில் அவன் முகம் சாந்தமாக இருந்தது. அவசர அவசரமாக ஐந்து நிமிடத்தில் அவன் குளியலை முடித்துவிட்டு வந்தான்.

“அம்மா டின்னர் பண்ணி அனுப்பியிருக்காங்க, ஹாட் பாக்ஸ்ல இருக்கு, நான் பரிமாறட்டுமா?” அவள் கேட்கவும் அனைத்துப் பொருட்களையும் தூக்கி அவள் கட்டிலில் வைத்தவன் கட்டிலுக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான். இரவு உணவு என்பதால் இடியாப்பம் செய்து அனுப்பி இருந்தார் வெண்பா. கூடவே சொதி, விளைமீன் கறி, நெத்தலி வறுவல்.

“எதுக்கும்மா நீ ஒய்லி ஃபூட் சாப்பிட்டே? அதுவும் நைட்ல?”

“அது எனக்கில்லை, உங்களுக்காம்.” சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்த படியே அவள் ஒரு ப்ளேட்டில் அவனுக்கான உணவைப் பரிமாறினாள்.

“யாரு கொண்டு வந்தா?” கேட்டபடியே அவன் உண்ண ஆரம்பித்திருந்தான். அவள் பதில் சொல்லாமல் போகவும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ஷியாம். உண்மையைச் சொன்னால் எங்கே அவன் சாப்பிடாமல் போய்விடுவானோ என்ற பயத்தில் பெண் அமைதியாக இருந்தது.

“யாரு? உங்கண்ணனா?”

“ம்…”

“அதைச் சொல்ல எதுக்கு இவ்வளவு தயங்கிறே?”

“இல்லை…”

“என்ன இல்லை? அதான் இவ்வளவு இருக்கில்லை? எடுத்துப் போடு.” கோபப்படாமல் அவன் தொடர்ந்து உண்ணவும் அஞ்சனாவிற்கு மகிழ்ச்சியாகிப் போனது. புன்சிரிப்போடு அவனுக்கு இன்னும் பரிமாறினாள். இவளோடான இந்த நொடிகளுக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம்! எந்த உறவை வேண்டுமானாலும் கொஞ்ச காலம் விட்டுக் கொடுக்கலாம் என்று தோன்றியது ஷியாமிற்கு. மனதும் வயிறும் அன்று அவனுக்கு நிறைந்து போனது.