siraku21

siraku cp-88aefb9d

சிறகு 21

மாலை நேரத்து மரகத வெயிலோடு மங்கையும் கொஞ்ச நேரம் மயங்கிப் போய் நின்றிருந்தாள். அலைகளின் ஓசையும் ஸ்பரிசமும் அவளை வேற்று கிரகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாற் போல இருந்தது.

“அஞ்சு போதும், போகலாம்.”

“இன்னும் கொஞ்ச நேரம் சீனியர், ப்ளீஸ்.”

“இதையே நாலு தரம் நீ சொல்லிட்டே, இதுக்கு மேல லேட் பண்ணினா அம்மா திட்டுவாங்க, பார்த்தேயில்லை, நாம இந்நேரம் வெளியே கிளம்பினதே அவங்களுக்குப் புடிக்கலை.” ஷியாமின் வார்த்தையில் பெண் இப்போது மனமேயில்லாமல் கிளம்பியது.

“நாளைக்கும் கூட்டிட்டு வர்றீங்களா?” அவள் குழந்தை போலக் கெஞ்சினாள்.

“நாளைக்கு எனக்கு ட்யூட்டி இருக்கும்மா, டெய்லி இப்பிடி வரமுடியாது, நான் எப்பல்லாம் வீட்டுல இருக்கனோ அப்பல்லாம் கூட்டிட்டு வர்றேன்.”

“ம்…” அவள் முகம் வாடிப்போனது. ஷியாம் புன்னகைத்துக் கொண்டான். இருவரும் வந்து காரில் ஏறிக் கொண்டார்கள். அலையில் நனைந்திருந்த அவள் புடவை முழுதாகக் காய்ந்திருக்கவில்லை. அம்மா பார்த்தால் நிச்சயம் திட்டுவார்கள் என்று நினைத்துக் கொண்டான் ஷியாம்.

“ஏதாவது சாப்பிடுறியா அஞ்சனா?”

“வேணாம்.” 

“கடல் காத்துல நின்னது உனக்குப் பசிக்கும்.” என்றவன் காரை வீட்டை நோக்கிச் செலுத்தாமல் மெயின் ரோட்டிற்கு வந்தான். அங்கே ஹோட்டல்கள் இருக்கும் பகுதியில் காரை நிறுத்தியவன், 

“இப்போ சூடா ஆப்ப (ஆப்பம்) போடுவாங்க, சாப்பிடுறியா?” என்றான்.

“ம்… பித்தர ஆப்ப (முட்டை ஆப்பம்).” சூடாக ஆப்பம் வார்த்து அதில் முட்டையை முழுதாக ஊற்றி மேலே உப்பும் மிளகுப் பொடியும் தூவியிருந்தார்கள். ஏதோ பெரிதாக உண்பவள் போல சப்புக் கொட்டிக்கொண்டு வாங்கியவள் பாதிகூட உண்டிருக்க மாட்டாள். மீதியை வைத்துக்கொண்டு திருதிருவென விழித்தாள்.

“என்னாச்சு?!”

“எனக்குப் போதும் சீனியர்.”

“ஒன்னு கூடச் சாப்பிடல்லையே அஞ்சனா.”

“ம்ஹூம்… வேணாம்.” அவள் மறுத்துவிட அவளுடைய மீதியையும் சேர்த்து அவனுண்டான். அந்தப் பாதியுணவு உள்ளே போனதற்கே பெண் களைத்துப் போனது.

“ஆர் யூ ஓகே?”

“ம்…” முனகலாக மட்டுமே வந்தது பதில். வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அவர்களது அறைக்குப் போனவள் அங்கிருந்த குளியலறையில் மீண்டும் வாந்தி எடுத்தாள்.

“அடடா! திரும்பவுமா?” புலம்பியபடி உள்ளே வந்தார் கண்மணி. ஷியாம் அவள் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அன்றைக்கு உண்டது எதுவும் அவள் வயிற்றில் தங்கவில்லையாதலால் பெண் மிகவும் சோர்ந்து போனாள். வாயைக் கொப்பளித்துக் கொண்டு நிமிர்ந்தவள் அப்படியே ஷியாமின் தோளில் சாய்ந்து விட்டாள்.

“என்னால முடியலை ஷியாம்.” உடல் பலவீனமுறும் நேரங்களில் மாத்திரம் அவள் நா அவன் பெயரை உச்சரித்தது. 

“என்னடா ஷியாமா இப்பிடி வாந்தி எடுக்கிறா? ஏதாவது மாத்திரைக் குடுத்து இதை நிறுத்த முடியாதா?” 

“ம்ஹூம்… அதெல்லாம் கூடாதும்மா.”

“இப்பிடியே வாந்தி எடுத்துக்கிட்டு இருந்தா களைச்சுப் போவாளேப்பா?” கண்மணியின் குரலில் அதிக கவலைத் தெரிந்தது. மெதுவாக அவளை அழைத்துக்கொண்டு வந்தவன் கட்டிலில் சாய்ந்த படி உட்கார வைத்தான். 

“இப்பவே தூங்க வேணாம் அஞ்சு.” சொல்லிவிட்டு அவளருகிலேயே அமர்ந்து கொண்டான். ரூமைவிட்டு வெளியே போயிருந்த கண்மணி இப்போது மீண்டும் உள்ளே வந்தார். கையில் பொறுக்கும் சூட்டில் சூப் இருந்தது. 

“அஞ்சனா, இதுல சூப் சூடா இருக்கு, ரெண்டு வாய் குடிச்சுட்டுத் தூங்கு.” அதிகாரமாக வந்தது பெரியவரின் குரல். 

“எனக்கு வேணாம்.”

“அதெல்லாம் சரிவராது, டக்கு டக்குன்னு இப்போ எல்லாத்தையும் குடிச்சு முடிக்கணும்.”

“என்னால முடியலை ஷியாம், ப்ளீஸ்…” அவனை இப்போது உதவிக்கழைத்தது பெண்.

“குடுங்கம்மா நான் குடுக்கிறேன்.” அம்மாவின் கையிலிருந்ததை வாங்கியவன் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஒவ்வொரு ஸ்பூனாக‌ ஊட்டினான். 

“இப்பிடிச் சாப்பிடாம இருந்தா வெயிட் குறையும் அஞ்சு, அது நல்லதில்லை.” பேசியபடியே நான்கைந்து வாய் ஊட்டியிருப்பான். அதற்கு மேல் உண்ண மறுத்தது பெண். கண்மணியின் முகம் கோபத்தைக் காட்ட,

“பாவம் விடுங்கம்மா.” என்றான் மகன்.

“இங்கப்பாரு, நாளைக்கு நீ மரியாதையா ஹாஸ்பிடல் கிளம்பிப் போயிடு, உம் பொண்டாட்டியை நான் பார்த்துக்கிறேன், ரெண்டு அதட்டல் போடாம இப்பிடிக் கொஞ்சினா அவ எப்பிடிச் சாப்பிடுவா?” ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு கண்மணி வெளியே போய்விட்டார். அம்மா திட்டியிருந்தாலும் மகனுக்கு அந்த வார்த்தைகள் இனித்தன.

“நீங்க போய் சாப்பிடுங்க.”

“பரவாயில்லைம்மா.” அவள் முதுகை கொஞ்ச நேரம் நீவிக் கொடுத்தவன் மெதுவாக அவள் தலையைத் தலையணையில் வைத்தான். அவள் விழிகள் அவனையே பார்த்திருந்தன. இதுபோலவொரு ஆதரவான தீண்டலுக்காக, ஸ்பரிசத்துக்காக, வார்த்தைக்காக பல பொழுதுகள் அவள் ஏங்கிக் கிடந்திருக்கிறாள். மாதாந்திரத் தொல்லைகள் வரும் சில நாட்களில் அவள் துவண்டு போவதுண்டு. அந்தக் கணங்களில் இதுபோன்ற சின்னச்சின்னப் பணிவிடைகளுக்காக அவள் ஆசைப்பட்டிருக்கிறாள். ஒருதரம் பயங்கரமான ஜுரம் வந்திருந்தது பெண்ணுக்கு. என்னவென்று கேட்கவும் நாதியற்றுக் கிடந்தவள் கடைசியில் அம்மாவை அழைத்து அங்கே போய்விட்டாள். 

“அஞ்சு…” அந்தக் குரலில் சிந்தனை கலைந்து திரும்பினாள் பெண்.

“ம்…” ஷியாமின் முகத்தில் ஏதோ ஒரு விண்ணப்பம் இருந்தது. ஆனால் அதைக் கேட்கத் தயங்கியவன் போல அமைதி காத்தான்.

“சொல்லுங்க…”

“அஞ்சு… நான் ஒன்னு கேட்பேன்…”

“கேளுங்களேன்…” அவன் எதற்காகத் தயங்குகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

“நீ தப்பா எடுத்துக்கப்படாது.” தயங்கித் தயங்கி வந்த அவன் குரல் அவளுக்கு ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. 

“இல்லை… சொல்லுங்க.”

“நான்… நான் இங்கத் தொட்டுப் பார்க்கட்டுமா?” அவள் வயிற்றைப் பார்த்தபடி அவன் கேட்டுவிட்டான். அவன் ஆசையைக் கூறிவிட்டான். அஞ்சனா சில நொடிகள் திணறினாள். இப்போது அவன் ஒரு டாக்டராக தன்னைத் தொட நினைக்கவில்லை. இந்தக் கணம் அவனது எண்ணம் வேறு. அன்றைக்கு ஹாஸ்பிடலில் வைத்து ஸ்கேன் பண்ணும் போதும் அவன் அவளைத் தொட்டிருக்கிறான். ஆனால் அன்றைய சூழ்நிலை வேறு. 

“ப்ளீஸ் அஞ்சு…” அவன் குரல் கெஞ்சியது. அந்தக் குரல் மன்றாடியதை அவளால் தாங்க முடியவில்லை. 

“ம்…” என்றாள் கூச்சத்தோடு. அவன் இப்போது மலர்ந்து போனான்.

“இதை எடுத்திடட்டுமா?” இடைச் சேலையை அவன் சுட்டிக்காட்ட அவளே அதைத் தளர்த்தினாள். அவள் பக்கத்தில் வாகாகத் திரும்பி அமர்ந்தவன் ஏதோ புதையலைத் தொடுபவன் போல அவள் வயிற்றில் கை வைத்தான். அவனது காதல், அந்தப் படுக்கையறை, அவனோடு தனித்திருக்கும் அஞ்சனா… அனைத்தும் அந்த நொடி அவனுக்கு மறந்துபோனது. அவள் அடிவயிற்றில் கையை வைத்து லேசாக அழுத்தினான்.

“ஷியாம்…” அவளுக்குக் கொஞ்சம் வலித்தது.

“ஒன்னுமில்லைடா… அஞ்சு… ஹேய் அஞ்சு… அஞ்சும்மா…” பேச்சற்றுத் திணறினான் அவன்.

“சொல்லுங்க.”

“இங்க… இங்கதான்…” அவன் கண்களில் கண்ணீர் திரளப் புன்னகைத்தான். 

“நிஜமாவா?! உங்களுக்குத் தெரியுதா?!” பெண் இப்போது வெகுவாக ஆச்சரியப்பட்டாள். 

“ஏய்! இங்க இருக்காங்கடி பொண்ணே!” சந்தோஷத்தில் சத்தம் போட்டவன் அவள் கையை எடுத்து அங்கே வைத்தான்.

“அம்மா! இங்க வாயேன்! அம்மா!” தன்னை மறந்து ஷியாம் கத்த கண்மணி அடித்துப் பிடித்து ஓடிவந்தார்.

“என்னாச்சு ஷியாமா? திரும்பவும் வாந்தியா?” கண்மணியை அங்கே எதிர்பாராத பெண் புடவையைச் சரி பண்ணியது. அதைக் கண்டுகொள்ளாதவன் புடவையை விலக்கிவிட்டு அம்மாவின் கை பிடித்து அவள் வயிற்றில் வைத்தான்.

“என்னடா ஷியாமா?!” கண்மணிக்கு மகனின் மனது புரிந்தது.

“அம்மா! இங்கம்மா! இங்கதான்…” ஆர்பரித்த மகனின் தலையை ஒரு புன்னகையோடு தடவிக் கொடுத்தார் அம்மா. 

“சந்தோஷமா இருக்குடா.” அம்மா சொன்னதுதான் தாமதம், எழுந்து அம்மாவை அணைத்துக் கொண்டவன் சட்டென்று குலுங்கி அழுதான்.

“டேய் தம்பி! ஷியாமா!” கண்மணி மகனின் செய்கையில் விக்கித்துப் போனார். அவர் கண்களும் கண்ணீர் வடித்தது. அஞ்சனா தனது சீனியரை இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

“என்னடா ஷியாமா இது, சின்னக் குழந்தை மாதிரி?!” கண்களைத் துடைத்துக்கொண்ட கண்மணி அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டார். ஷியாம் இப்போது அவளிடம் ஓடி வந்தான். நடப்பது அனைத்தையும் ஒருவித மலைப்போடு பார்த்தபடி அப்படியே படுத்துக் கிடந்தாள் அஞ்சனா.

“அஞ்சு…” அவள் முகமெங்கும் அவன் முத்தம். காதல் கடந்து, காமம் கடந்து அவன் மகிழ்ச்சி மட்டுமே அவளுக்கு அந்த இதழொற்றல்களில் தெரிந்தது. 

“தான்க் யூ! தான்க் யூ டா!” 

“ஷியாம்!” அவள் அழைப்பில் வெடித்துச் சிரித்தவன் அப்படியே அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

***

இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இந்த இரு வாரங்களிலும் ஷியாம் மிகவும் பிஸியாக இருந்தான். அடுத்தடுத்து அவன் பார்க்க வேண்டிய பிரசவங்கள் வரிசைகட்டி நின்றன. ஆனாலும் அவளுக்கான நேரத்தை அவன் கொடுக்கத் தவறவில்லை. வீட்டிலிருக்கும் அவன் நேரம் முழுவதும் அவளுடனேயே கழிந்தது. தினமும் அவனிடம் வரும் கேஸ்கள் பற்றியும் பிரசவம் பற்றியும் விபரித்துச் சொல்லுவான். பெற்றோரின் அனுமதியோடு எடுத்த ஒரு சில குழந்தைகளின் ஃபோட்டோக்களை காட்டுவான். 

கண்மணியின் கவனிப்பில் அஞ்சனா கொஞ்சம் சதை போட்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஷியாமிடம் எடுபடும் அவள் சிணுங்கல்கள் கண்மணியிடம் வேலைக்காகவில்லை. உருட்டி மிரட்டி அவளை உண்ண வைத்தார். ஆகமொத்தம், அந்தக் கடற்கரையோர வீட்டு வாசம் அவளுக்குப் பழகிப் போயிருந்தது. குடும்பத்தினரோடு அலைபேசியில் பேசுவாள். அவ்வளவுதான்.

“யோவ் சீனியர்!” ஆர்ப்பாட்டமாக ஷியாமின் அறைக்குள் நுழைந்தாள் அபிநயா. அப்போதுதான் ஒரு பிரசவத்தை முடித்துவிட்டுக் களைப்பாக இருக்கவும் டீ அருந்திக் கொண்டிருந்தான் ஷியாம்.

“வாம்மா அபிநய சுந்தரி!” என்றான் முகம் முழுவதுமான சிரிப்போடு.

“கொலை வெறியில வந்திருக்கேன், இதுல உங்களுக்குச் சிரிப்புக் கேட்குதா?” எகிறினாள் பெண்.

“சரி சரி, எதுக்கு இவ்வளவு கோபம்? என்னாச்சு?”

“மனுஷனா அவன்? சரியான காட்டானா இருக்கான்?!”

“அபி!” இப்போது ஷியாமின் குரல் உயர்ந்தது.

“என்ன அபி?”

“அவன் எவ்வளவு பெரிய டாக்டர், இப்பிடித்தான் மரியாதை இல்லாமப் பேசுவாங்களா?”

“பள்ளிக்குப் போற பிள்ளை பஞ்சுமிட்டாயைப் பார்க்கிற மாதிரி வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறான், உங்க ஃப்ரெண்ட்டுன்னதால தப்பினான், இல்லைன்னாக் கண்ணை நோண்டியிருப்பேன்.” பெண் மீண்டும் கொதிக்க ஆரம்பிக்க ஷியாம் பக்கென்று சிரித்தான். நடந்தது இதுதான். ஷியாமின் நண்பன் ஒருவன் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வருகிறான். ஷியாமிற்கு‌‌ நிறைய வேலைகள் இருந்ததால் ஏர்போர்ட்டிற்கு போகும் வேலையை அபியிடம் ஒப்படைத்திருந்தான் டாக்டர்.

“இப்போ எங்கம்மா அந்த அப்பாவி? ஹோட்டல்ல கொண்டு போய் விட்டியா, இல்லை கடல்ல தள்ளிட்டியா?”

“ம்… ம்… அதெல்லாம் கரெக்டா கொண்டு போய் விட்டுட்டேன்.”

“பையன் எப்பிடி? பார்க்க நல்லா இருக்கானா?”

“ஆமா! வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம்! அவனும் அவனோட பார்வையும்!” வாய்க்குள் முணுமுணுத்தாள் பெண்.

“இதேதுடா வம்பாப் போச்சு! அவன் கட்டிக்கப்போற பொண்ணை அவன் பார்க்காம பின்னே ரோட்டால போறவனாப் பார்ப்பான்?”

“எதே!” ஷியாமின் வார்த்தைகளில் இதுவரை உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த பெண் இப்போது எழுந்து நின்றுவிட்டாள். 

“சீனியர்?!” என்றாள் அதிர்ச்சியாக.

“பேரு சம்பத் குமார், பொறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூர்தான், தங்கமான பையன், நான் சிங்கப்பூர்ல வொர்க் பண்ணினப்போதான் பழக்கமாச்சு, கிட்டத்தட்ட நாலு வருஷமா எனக்கு அவனைத் தெரியும் அபி, ரொம்பக் கலகலப்பான பையன், உனக்கு ரொம்ப மேட்ச்சா இருப்பான்.”

“…” இதுவரை வாய் வலிக்கும் அளவிற்கு திட்டித் தீர்த்தவள் இப்போது சட்டென்று அமைதியாகிவிட்டாள்.

“உன்னோட ஃபோட்டோவை காமிச்சேன், பயலுக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு, உன்னைப் பத்தி ரெண்டு வார்த்தை சொல்லியிருப்பேன், அடுத்த ஃப்ளைட்ல பொறப்பிட்டு வந்துட்டான்.” அவன் சுலபமாகச் சொன்னான்.

“…”

“நீ என்ன சொல்றே அபி?”

“நான் இதை எதிர்பார்க்கலை சீனியர்.”

“ஏம்மா, கண்டவனையும் கூட்டிட்டு வர உன்னை நான் அனுப்புவேனா? கொஞ்சம் யோசிக்க வேணாம்?” ஷியாம் புன்னகைத்தான்.

“நான் அவர்கிட்டக் கொஞ்சம் கோபமாப் பேசிட்டேன்.”

“அவன் அதுக்கும் பல்லைக் காட்டியிருப்பானே?”

“ஆமா… அதான் எனக்கு இன்னும் கோபம் வந்திச்சு.”

“இவ்வளவு நேரமாகியும் இன்னும் நான் வந்து சேர்ந்துட்டேன்னு படவா எனக்கொரு ஃபோன் பண்ணலை, இதுலயே தெரியலையா, பயபுள்ள இந்நேரம் கனவுல மிதக்கிறான்னு?” சொல்லிவிட்டு ஷியாம் கடகடவெனச் சிரித்தான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சீனியர்.” பெண் திணறினாள்.

“ஒரு வாரம் இங்கதான் இருப்பான், பழகிப்பாரு, புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.”

“ஐயையோ! வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு தெரியாதே?”

“அதெல்லாம் உங்க வீட்டுல ஏற்கனவே பையனோட ஃபோட்டோவை காட்டிப் பேசியாச்சு, உங்கப்பா சம்மதம் சொல்லியாச்சு.”

“என்ன சீனியர் இதெல்லாம்?!” அவன் வேகத்தில் அபிநயா மருண்டு போனாள்.

“இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வரப்போறான், நாளைக்கு உங்க வீட்டுல பிடிக்காமப் போனாப் பாவமில்லை? அதான் நான் அப்பிடிப் பண்ணினேன், இப்போ மீதமிருக்கிறது மேடம் நீங்கதான்.”

“அப்போ அவங்க வீட்டுல?”

“அதெல்லாம் பையன் பேச்சுக்கு மறுபேச்சுக் கிடையாது.” 

“ஓ…” 

“ஒன்னும் அவசரமில்லை அபி, பொறுமையாப் பேசிப்பாரு, புடிக்குதான்னு பாரு, என்னைக் கேட்டா உன்னோட கேரக்டருக்கு சம்பத் நல்லா செட் ஆகுவான்.”

“என்ன சீனியர் திடீர்னு இந்த வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க?” குறும்பாகக் கேட்டது பெண். ஷியாம் புன்னகைத்தான். 

“எனக்கு வாழ்க்கைப் பிச்சைப் போட்டப் பொண்ணு நீ!”

“ஐயையோ சீனியர்? இதென்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?!” அபிநயா அவன் வார்த்தைகளில் திடுக்கிட்டுப் போனாள். 

“நான் உண்மையைத்தான் சொல்றேன், அன்னைக்கு நீ நினைச்சிருந்தா அஞ்சுவை பத்தி எதுவும் எங்கிட்டச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமில்லை, நானிருந்த மனநிலைக்கு நிச்சயமா அந்தக் கல்யாண ஏற்பாட்டுக்குச் சம்மதம் சொல்லியிருப்பேன், ஒரு உயிர்ப்பில்லாத வாழ்க்கையும் வாழ்ந்திருப்பேன்.”

“சீனியர்…”

“உண்மைதாம்மா, ஆனா அப்பிடி எதுவும் நடக்கலை, இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்குச் சொன்னாப் புரியாது அபி, அந்த சந்தோஷத்தை நீயும் அனுபவிக்கணும், அந்த எண்ணம் என்னோட அடிமனசுல இருந்துக்கிட்டே இருந்துச்சு, உங்கப்பாக்கிட்ட அன்னைக்குப் பேசும்போதும் அதைத்தான் சொன்னேன், அபிக்கு நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்னு, பாருங்க ஷியாம்னு சொன்னார், சட்டுன்னு சம்பத் ஞாபகம் வந்தான், அபிக்கு இவன் ரொம்பப் பொருத்தமா இருப்பான்னு மனசு சொல்லிடுச்சு.” ஷியாம் பேசிக்கொண்டே போக பெண் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போலக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“பேபிக்கு இது தெரியுமா?”

“ம்ஹூம்… உங்க பேபிக்கு எதுவும் தெரியாது, இன்னும் சொல்லலை நான், ஒருவேளை நீ புடிக்கலைன்னு சொல்லிட்டா? உங்க பேபி ஏமாந்து போயிடுவாங்கல்லை?”

“அடேயப்பா! அப்பவும் பொண்டாட்டியைப் பத்தின யோசனைதான்!”

“ஆமா! என்னோட டார்லிங்தாம்மா எனக்கு ரொம்ப முக்கியம்.” ஷியாம் சொல்ல இப்போது பெண் சிரித்தது.

“கேலியா பண்ணுறே? அதான் வந்திருக்கான்ல சம்பத், அவன் உங்களைப் பார்த்து அப்பிடியே உருகுவான், அதைப் பார்த்து நானும் சிரிக்கத்தானே போறேன்.” சீனியரின் பேச்சில் ஜூனியர் வெட்கப்பட்டது.

“எங்கப்பா சாமி! டேய் சம்பத்! என்னடா அதுக்குள்ளப் பண்ணினே? எங்க ஸ்கூலோட அல்லிராணி அபிநய சரஸ்வதியே வெட்கப்படுதுடா!” பெருங்குரலெடுத்து ஷியாம் சிரிக்க, அங்கிருந்த ஃபைல் ஒன்றை எடுத்த அபிநயா அவனை இரண்டு அடி அடித்தாள். சரியாக அந்த நேரம் பார்த்து ஷியாமின் ஃபோன் சிணுங்கியது. அவசர அவசரமாக அந்த அழைப்பை ஏற்றான் டாக்டர்.

“சொல்லுங்க சீனியர்.” எதிர்முனையில் இருந்தது புருஷோத்தமன். அலைபேசி அழைப்பு வந்ததும் அபிநயா அங்கிருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

“அப்பிடியா?! சந்தோஷம் சீனியர், ரொம்ப தான்க்ஸ்.” சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டவன் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான். இதுவரை நேரமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவன் சட்டென்று அமைதியாகிவிடவும் அபிநயா அதிசயப்பட்டாள்.

“என்னாச்சு சீனியர்?” பெண் கேட்ட பின்புதான் அவள் அங்கிருப்பதை உணர்ந்தாற் போல நிமிர்ந்து பார்த்தான் ஷியாம்.

“ஃபோன்ல யாரு?”

“புருஷோத்தமன்.”

“ஓ… என்னவாம்?”

“கோர்ட்ல இருக்காரு, இன்னைக்கு… டைவர்ஸ் கிடைச்சிடுச்சு அபி.” 

“வாவ்! கன்கிராட்ஸ் சீனியர்! எவ்வளவு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு, எதுக்கு இப்பிடி முகத்தைத் தூக்கி வெச்சிக்கிட்டுப் பேசுறீங்க?” அவள் கேட்ட பின்புதான் தன் இறுக்கம் முழுவதும் வடிய சிரித்தான் ஷியாம்.

“ஆங்! இந்த சிட்டுவேஷனுக்கு இதுதான் சரி.”

“அபி… வெளியே தைரியமாக் காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு, எங்க அந்த அரைக்கிறுக்கன் ஏதாவது ஏடாகூடமாப் பண்ணிடுவானோன்னு.”

“அதை விடுங்க சீனியர், இனியாவது உங்க வீட்டுக்கு வந்து உங்க மகாராணியை பார்க்க எங்க எல்லாருக்கும் அனுமதி உண்டா?” போலிப் பணிவுடன் கேட்ட பெண்ணைப் பார்த்துச் சிரித்தான் ஷியாம்.

***

ஷியாமின் வீடு அன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. மிகவும் முக்கியமான உறவினர்கள் என்று நூறு பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். வீட்டைச் சுற்றித் தாராளமாக இடம் இருந்ததால் பந்தல் போட்டிருந்தார்கள். வீட்டின் ஹாலில் அனைத்து சம்பிரதாயங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருந்தான் ஷியாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். 

அபிநயா, ரம்யா, புருஷோத்தமன் என பெண்ணின் தரப்பு ஆட்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய மணப்பெண் கொஞ்சம் இறுகினாற் போல இருந்தாள். அவள் நிலைமையில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற புரிதல் எல்லோருக்கும் இருந்ததால் யாரும் எதுவும் பேசவில்லை. சுந்தர்ராம் மட்டும் தனது மருமகளிடம் தனிமையில் பேசியிருந்தார்.

“அஞ்சனா, உன்னோட மனசுல எவ்வளவு கவலைகள், வேதனைகள் இருக்கும்னு என்னாலப் புரிஞ்சுக்க முடியுது, எது எப்பிடி இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கித் தூர வெச்சுட்டு ஷியாமோட தாலியை ஏத்துக்கோ, உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்.” கண்கலங்க அந்தப் பெரியவர் கேட்டபோது மறுத்துப் பேச அவளால் இயலவில்லை. மூன்று மாதங்கள் நிறைவு பெற்றிருந்தன. வயிறு லேசாக மேடிட்டிருந்தது. புடவை கட்டினால் பெரிதாகத் தெரியாது. 

சிவப்பு, பின்க், அரக்கு என மூன்று நிறங்களையும் கலந்தாற் போல பட்டுப் புடவை. தங்க வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அடர் சிவப்பில் ப்ளவுஸ். அஞ்சனா இயற்கையிலேயே நல்ல அழகான பெண். இப்போது தாய்மையின் பொலிவு வேறு. அவளுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு புருஷோத்தமனும் ஷியாமும் காசை இறைத்திருந்தார்கள். மிகவும் பிரசித்தமான அழகுக்கலை நிபுணரை வரவழைத்து மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகை அடித்து மண்டபத்தில் நடக்கவில்லையே தவிர, மற்றையபடி எந்தக் குறையுமில்லாமல் அந்தத் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண் அலங்காரம் முடிந்தவுடன் விதவிதமாக மணப்பெண்ணை ஃபோட்டோ எடுத்தார்கள். 

“உங்க சீனியர் ஜமாய்ச்சுட்டார் போ!” ரம்யா சத்தமில்லாமல் அபியின் காதைக் கடித்தாள். அடுத்து வந்த சில மணித்துளிகளில் தன் வாழ்க்கையில் முதற் காதல் சொல்லிக்கொடுத்த அந்த மேனகையின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் ஷியாம். உற்றமும் சுற்றமும் மட்டுமல்ல, அந்த உறவுக்கு அவர்கள் குழந்தைகளும் சாட்சி! அவள் சுந்தர ரூபத்தில் ஷியாம் திக்குமுக்காடி அமர்ந்திருந்தான். மாப்பிள்ளை வீட்டாரும் சரி, பெண் வீட்டாரும் சரி மிகவும் நிறைவான மனதோடு அந்த மங்களகரமான நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்கள். தாலி கட்டிய பிற்பாடும் ஃபோட்டோ ஷூட் என்கின்ற பெயரில் ஷியாம் தன் புத்தம் புது மனைவியைக் கொஞ்சம் சிரமப்படுத்திக் கொண்டிருந்தான்.

“ஷியாமா, அஞ்சனா டயர்டாகிறா பாரு.” இது கண்மணி.

“பரவாயில்லைம்மா, இன்னைக்கொரு நாள்தானே.” அம்மாவின் பேச்சையும் கணக்கில் கொள்ளாது அவளோடு ஒட்டி உறவாடி உரசிக்கொண்டு நின்றிருந்தான். அஞ்சனா அவனைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அன்றைய இரவின் தனிமை அவளை இன்னும் பயமுறுத்தப் போவது தெரியாமல் அவன் இழுத்த பக்கமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாள் பெண்.

ஒருசில நாட்களாக அவர்கள் இருவரும் அந்த அறையில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு நாகரிகமான இடைவெளி இருந்தது. சில பொழுதுகளில் தன் குழந்தைகளை நெருங்க அவன் ஆசைப்படுவான். அப்போதெல்லாம் ஒரு தந்தைக்கான பூரிப்பை மாத்திரமே அஞ்சனா அவன் முகத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் இன்றைக்கு எல்லாம் தலைகீழாக மாறிப்போயிருந்தது. அவன் முகத்தில் ஆசையும் காதலும் கொட்டிக் கிடந்தது. அந்த விழிகளில் மோகம் புதிதாக முளைவிட்டிருந்தது. கல்யாணப் புடவையைக் களைந்துவிட்டு வேறொரு பட்டுடுத்தி லேசான ஒப்பனையில் தங்கள் அறைக்கு வந்த அஞ்சனா தவித்துப் போனாள். ரோஜா, மல்லிகை என மலர் தூவிய மஞ்சம் அவளைக் கண்சிமிட்டி வரவேற்றது. 

அடர் குங்கும நிறத்தில் ஆரஞ்ச் கலர் பார்டர் வைத்த புடவை கட்டியிருந்தாள். முடியைப் பின்னல் போடாமல் லூசாக விட்டு அதில் பாதி மலர்ந்தும் மலராத குண்டு மல்லியை வளையம் போல வைத்திருந்தாள். எல்லாம் அவன் ஏற்பாடு. அவளை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டானோ அப்படியெல்லாம் அலங்கரிக்கும் படி அலங்காரத்திற்கென வந்திருந்த பெண்ணிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான். அவன் இளமை போட்ட ஆட்டத்தை, குதூகலத்தை பெண்வீடு ஒரு மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டது. புருஷோத்தமன் ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனான். 

“அஞ்சனா…” தனக்குப் பின்னால் கேட்ட குரலில் தலையை மட்டும் திருப்பினாள் பெண். அறையின் கதவை மூடிவிட்டு அவள் பின்னால் வந்து நின்றவன் பூக்காடாய் இருந்த அவள் கூந்தலை வாசம் பிடித்தான். பெண் தலையைக் குனிந்து கொண்டது. இப்போது அவளுக்கு முன்பாக வந்து நின்றவன் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது… என்னப் பார்வை?” அவள் வார்த்தைகள் நொண்டி அடித்தன.

“இல்லைம்மா… அன்னைக்கு இன்னமும் கவிதை எழுதுறீங்களான்னு கேட்டேயில்லை…” அவன் கேட்கவும் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். சற்றே எட்ட நின்றிருந்தவன் கை நீட்டி பற்களுக்குள் சிக்கியிருந்த அவள் உதட்டை விடுவித்தான்.  

“எந்தக் கவிதையை எப்பிடிச் சொன்னா என்னோட அஞ்சுக்கு பிடிக்கும்னு யோசிக்கிறேன்.” அவன் குரல் இப்போது வேறாகியிருந்தது. அவளைத் தன்னருகே அழைத்துக் கொண்டான் ஷியாம். 

“ஷியாம்…” 

“என்னடி பொண்ணே சீனியரை பேர் சொல்லிக் கூப்பிடுறே?!” அவள் கன்னத்தில் தன் கன்னத்தை இழைத்துக்கொண்டு அவன் சரசமாட ஆரம்பித்திருந்தான். அவள் மேனியிலோடிய மெல்லிய நடுக்கத்தை அவன் கண்டுகொள்வதாக இல்லை. 

“ஷியாம்…”

“காதோரம் நரைச்சிருக்கா என்ன? நரை வந்துட்டாக் கவிதை வராதா என்ன?! எனக்கு அந்தச் சந்தேகம் வரலை, நீதான் அன்னைக்குச் சந்தேகப்பட்டே, இன்னைக்கு டெஸ்ட் பண்ணிப் பார்த்திடலாமா?”

“இல்லை… ஷியாம்…” 

“இது ஷியாமோட புதுக்கவிதை அஞ்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல மரபுக் கவிதை வரும்.” கிறக்கமாகச் சொன்னவன் அவள் இதழ்களில் தனது முதல் முத்தத்தைப் பதித்தான். லேசாக விலக நினைத்தது பெண். அவள் விலகல், திணறல், தவிப்பு, துடிப்பு எல்லாம் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் கண்டும் காணாதவன் போலத் தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருந்தான். அஞ்சனா போன்ற பெண்களுக்கு அத்தனைச் சுலபத்தில் சமூக நியதிகளை மீறிவிடும் தைரியம் வந்துவிடாது. அவர்கள் வாழும் வட்டத்திற்குள் இருந்து அவர்களை வெளியே இழுக்க வேண்டும். ஷியாம் அதைத்தான் செய்ய நினைத்தான். 

மூச்சுக்கு மட்டுமே அவளுக்கு அனுமதியிருந்தது. பேச்சுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவன் முத்தப் பூக்களை அவள் மேனியெங்கும் விதைத்தான் ஷியாம். தான் முதல்முதலாக ரசித்த பெண்ணின், தன் முதல் காதலியின் வாசத்தைத் தன் உயிரின் ஆழம் வரை சுவாசித்தான். மல்லிகையும் ரோஜாவும் கசங்கிப் போயின. அவள் பட்டுப்புடவை இவன் தொல்லைத் தாங்கமுடியாமல் அந்த நொடியே தன் பணியை ராஜினாமா செய்தது! நெற்றிக் குங்குமம் அவன் இதழ்களை சிவப்பாக்கியது.

“ஷியாம்…”

“என்னோட எல்லை என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ கவலைப்படாதே கண்ணம்மா.” அந்த வார்த்தைகள் மட்டுமல்ல, அவன் செயல்களும் அதன்பிறகு மென்மையோடு தன் எல்லைத் தெரிந்து அரங்கேறிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் கலைந்து கிடந்த பெண் களைத்துப் போய் அவன் வெற்று மார்பிலேயே கண்ணயர்ந்தது!