சிறகு 23
அடுத்த நாள் அழகாக விடிந்திருந்தது. ஷியாம் படுக்கையை விட்டு எழும்போது நேரம் காலை ஏழு மணி. பக்கத்தில் அஞ்சனா இன்னும் தூங்கிக் கொண்டிருக்கவே சத்தம் செய்யாமல் மெதுவாக எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வெளியே வந்தான். கிச்சனில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
“குட் மார்னிங் ப்பா, குட் மார்னிங் ம்மா.” காலை வணக்கம் வைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். கிச்சனிலேயே சின்னதாக ஒரு வட்ட மேஜை போட்டு நான்கு நாற்காலிகளும் இருந்தன.
“குட் மார்னிங் ஷியாமா, நேத்து ரொம்ப பிஸியோ?” இது அப்பா.
“அம்மாடியோவ்! அதை ஞாபகப் படுத்தாதீங்கப்பா, ஒரு குட்டிப்பொண்ணு நாலு டாக்டர்ஸுக்கு தண்ணி காட்டிட்டுத்தான் பூமிக்கு வந்திச்சு.”
“ஹா… ஹா… உங்களை மிரட்டவும் அப்பப்ப ஆளுங்க வரணுமில்லை ஷியாமா?” சுந்தர்ராமின் பேச்சில் மூவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“ரெண்டு உயிரும் நல்லா இருக்காங்களாப்பா?”
“ஆமாம்மா, எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிட்டு வரக் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.”
“அஞ்சு எங்க?”
“இன்னும் தூங்குறாம்மா.”
“தூங்கட்டும் விடு, பாவம் அந்தப் பொண்ணு, ராத்திரியெல்லாம் அதுக்கு நிம்மதியே இல்லை.”
“என்னாச்சு கண்மணி?” மனைவியின் பேச்சில் ஆச்சரியப்பட்டார் சுந்தர்ராம். நேற்றிரவு அவர் பிஸியாக இருந்ததால் வீட்டில் நடந்த களேபரம் அவருக்குத் தெரியாது.
“ஷியாம் அவன் பாட்டுக்குக் கிளம்பி ஹாஸ்பிடல் போயிட்டான், ஃபோனும் பண்ணலை, இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதான், நீ சாப்பிடும்மா, தூங்கும்மான்னாக் கேட்கலையே, பதட்டமாவே உட்கார்ந்திருந்தா.”
“ஓ… அஞ்சனாக்கு இதெல்லாம் புதுசில்லை.” அப்பா புன்னகைத்தார்.
“அதான், இங்கப்பாரு ஷியாமா, எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சு, ஆனா அஞ்சு அப்பிடியில்லை, உன்னோட வேலை, உன்னோட வழமை இதெல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரியாது, இதெல்லாம் நீதானே அவளுக்குச் சொல்லிக் குடுக்கணும்? அதுவும் இப்போ அவ இருக்கிற நிலைமைல உன்னை இன்னமுமே தேடுவா, நீ பக்கத்துல இருக்கணும்னு எதிர்பார்ப்பா, புரிஞ்சு நடந்துக்கோ.”
“அம்மா சொல்றது கரெக்ட் ஷியாமா, இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க சைக்காலஜி என்னன்னு நம்மாலப் புரிஞ்சுக்கவே முடியாது, அனுபவஸ்தன் சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ.”
“ஆமா, நாலு பெத்துக்கிட்ட உங்கப்பா சொல்றாரு கேட்டுக்கோ.”
“ஏன் கண்மணி? நானா மாட்டேன்னு சொன்னேன்? எங்க குடும்பத்துல எல்லாமே ஒன்னோட நின்னு போச்சு, அதுக்கு நான் என்னப் பண்ணுறது?”
“நல்லவேளை, நான் தப்பிச்சுட்டேன் ப்பா.” வெடிச்சிரிப்புடன் மகன் சொல்ல அவனோடு சேர்ந்து சிரித்தார் தந்தை.
“ஆமா ஷியாமா, நீ தப்பிச்சுட்டேடா, பார்த்தியா இந்தக் கிழவியை? பேரப்புள்ளை பார்க்கிற வயசுல என்னைக் குத்தம் சொல்றதை!”
“போதும் நிறுத்துங்க நீங்க, ஷியாமா… இது ரெண்டும் பொண்ணுங்களாப் பொறந்தா நல்லா இருக்குமில்லை? அடுத்த ஸ்கேன்ல தெரிஞ்சிடும் இல்லைப்பா?”
“ஆமாம்மா.” ஆசையாகக் கேட்ட அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான் மகன்.
“கொஞ்சம் கொஞ்சமா இப்ப இருந்தே எல்லாம் வாங்கணும், தனியா ஒரு ரூமை குழந்தைங்களுக்குன்னே ரெடி பண்ணணும்.”
“ஏம்மா? எங்க ரூம் போதாதா?”
“ம்ஹூம்… நர்சரி மாதிரி ஒன்னு தனியாப் பண்ணணும், எல்லாம் ரெண்டு ரெண்டா வாங்கிப் போடணும்.” கனவில் மிதந்தார் கண்மணி.
“அப்போ அடுத்த குழந்தைப் பொறந்தா என்னப் பண்ணுவே கண்மணி?” மனைவியை மீண்டும் வம்புக்கிழுத்தார் சுந்தர்ராம்.
“ஏன்? நீங்க தாத்தா எதுக்கு இருக்கீங்க? இன்னும் நல்லா ஓடி சம்பாதிச்சு இன்னொரு வீடு கட்டுங்க.”
“ஏம்மா? நீ என்ன ஸ்கூலா நடத்தப் போறே?”
“ஐயையோ! வாயை மூடுங்க! எதுக்கு இப்போ இப்பிடிக் கண்ணு வெக்கிறீங்க?” கணவன் மேல் பாய்ந்த கண்மணி இப்போது மகனிடம் திரும்பினார்.
“இங்கப்பாரு ஷியாமா, இப்பவே உங்கிட்ட நான் சொல்லிட்டேன், உனக்கு வயசு முப்பத்தைஞ்சு ஆச்சு, சட்டு சட்டுன்னு நாலு புள்ளைங்களைப் பெத்துப் போடுற வழியைப் பாரு, அதை விட்டுட்டு ஏதாவது ப்ளான் அது இதுன்னு சொன்னே… அம்மா கொலை வெறியாகிடுவேன் சொல்லிட்டேன்!”
“ஆமா! என்னவோ இவ மகன் பெத்துப் போடுற மாதிரி இவளுக்கு நினைப்பு, அந்தப் பொண்ணு பாவம் கண்மணி.”
“அதெல்லாம் ஒன்னும் பாவமில்லை, பெத்துப் போடுறது மட்டுந்தான் அவளோட வேலை, அதுக்கப்புறம் அவ எதைப் பத்தியும் கவலைப்பட வேணாம், ஜாம் ஜாம்முன்னு நான் பசங்களை வளர்த்திடுவேன்.” கண்மணியின் ஆசையில் அப்பாவும் மகனும் நெகிழ்ந்து போனார்கள்.
“இந்தப் பொம்பளைங்க எப்பத் தென்றலாவாங்க, எப்பப் புயலாவாங்கன்னு நம்மால கண்டுபிடிக்க முடியாதுடா மகனே! அஞ்சனாவை வேணாம்னு சொன்ன உங்கம்மாவா ஷியாமா இது?!” கண்மணி கிச்சனை விட்டு வெளியே போகவும் மகனின் காதைக் கடித்தார் அப்பா.
“இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்த ஒருத்தி நேத்து ராத்திரி நான் லேட்டா வந்தேன்னு எம்மேல புலி மாதிரிப் பாய்ஞ்சான்னாப் பார்த்துக்கோங்கப்பா, நான் மிரண்டு போய்ட்டேன்!”
“ஆங்… அதேதான், நம்பிடாதே ஷியாமா, எங்களுக்குக் கல்யாணமான புதுசில உங்கம்மா எப்பிடி இருந்தாத் தெரியுமா? நில்லுன்னா நிற்பா, உட்காருன்னா உட்காருவா, இப்போப் பார்த்தியா?” சோகம் போல அப்பா சொல்ல சத்தமாகச் சிரித்தான் மகன்.
***
அன்று அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம். சம்பத் குமாருக்கு சேர்ந்தாற் போல ஒரு வாரம் லீவு கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது கூட மூன்று நாட்கள்தான் அவனால் விடுமுறை எடுக்க முடிந்திருந்தது. கல்யாணம் திடீரென்று முடிவானதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
“அப்போ அடுத்த வருஷம் கல்யாணத்தை வெச்சுக்கலாமா?” சொந்தத்தில் யாரோ கேட்ட கேள்வியும் மறுக்கப்பட்டது. மருத்துவம் என்று படிக்க ஆரம்பித்துவிட்டால் வயது சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போகிறது. இந்த லட்சணத்தில் இன்னொரு வருடத்தைத் தள்ளிப் போடுவதா?! இரு வீட்டாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சிங்கப்பூர் அத்தனைத் தூரத்தில் இல்லை என்பதால் நிச்சயதார்த்தம் நடக்கும் தினத்தில்தான் மாப்பிள்ளை புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். இன்றைக்கு நிச்சயதார்த்தம். நாளைக்கு ஹாஸ்பிடலில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதற்கு சம்பத் குமாரையும் ஷியாம் அழைத்திருந்தான். சம்பத்தும் ஷியாமும் ஒன்றாக சிங்கப்பூரில் வேலை செய்திருந்ததால் அவனது திறமை என்னவென்று ஷியாமிற்கு தெரியும்.
“சீனியர், உங்களுக்கே இது நியாயமா இருக்கா? ரெக்கையைக் கட்டிக்கிட்டு அந்த மனுஷன் பறக்கிறாரு, ஒழுங்கா எங்கூடப் பேசக்கூட அவருக்கு நேரமில்லை, இருக்கிற மூனு நாள்ல நீங்களும் ஒரு நாளைப் புடுங்கிக்கிட்டா எப்பிடி?” அபிநயா கொதித்தாள்.
“சாரிம்மா, தப்புத்தான், எனக்கும் புரியுது, ஆனா என்னோட சிட்டுவேஷன் அப்பிடி, ரொம்ப க்ரிட்டிக்கலான ஒரு கேஸ், க்ரூப் டிஸ்கஷன் போகப்போகுது, எல்லாரும் கையை விரிச்சுட்டாங்க, ஆனா என்னால முடியும்னு தோணுது, சம்பத்தும் எங்கூட இருந்தா எனக்கு யானை பலம் வந்த மாதிரி இருக்கும்.”
“என்னமோப் பண்ணுங்க.”
“சாரி அபிம்மா.” ஷியாம் அபியிடம் கெஞ்சியிருந்தான். அடுத்த மாதம் திருமணம் வைத்திருந்தார்கள். சம்பத் குமாரின் பெற்றோர் இங்கேயே தங்கியிருந்து அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிக்க மகன் சிங்கப்பூர் போய் மீண்டும் வருவதாக ஏற்பாடு.
“டாக்டர் மாப்பிள்ளைதான் வேணுமாப்பா? இப்போப் பாரு, எத்தனைச் சிக்கல்?!” அபிநயாவின் அப்பாவிடம் சொந்தக்காரர் ஒருவர் அங்கலாய்த்தார்.
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லை, அமைஞ்சு போச்சு, நல்ல பையன் கிடைக்கும் போது எதுக்கு வேணாம்னு சொல்லணும்னு நாங்களும் சம்மதம் சொல்லிட்டோம்.”
“அபி என்ன சொல்றா?”
“அவளோட விருப்பம்தான் இதுல முக்கியம் பெரியப்பா, அவ சம்மதம் சொன்னப்புறம்தான் பேச்சுவார்த்தையே ஆரம்பிச்சுது.”
“நல்லது நல்லது.” சொந்தங்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.
“அஞ்சு நீ ரெடியா?” கேட்டபடி தங்கள் அறைக்குள் நுழைந்தான் ஷியாம். புடவையை முழுதாகக் கட்டியிருந்தவள் ப்ளீட்ஸ்ஸை சொருகாமல் வைத்துக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள். இளரோஜா வண்ணப் பட்டுப்புடவை. தங்க வேலைப்பாடுகள் அள்ளி இறைக்கப்பட்டிருந்தன.
“எதுக்கு இவ்வளவு க்ராண்டா புடவை? வேணாம் சீனியர், கல்யாணப் பொண்ணுதான் இப்பிடி உடுத்தணும்.”
“எனக்கு எம் பொண்டாட்டிதான் எப்பவுமே கல்யாணப் பொண்ணு.”
“அத்தை, நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.” புடவையை அவன் வாங்கி வந்திருந்த அன்று பெரிய வாக்குவாதம் நிகழ்ந்தது.
“ஷியாமா, அவ சொல்றது கரெக்ட்தானே? எதுக்குடா இவ்வளவு ஜரிகையோட புடவை? கல்யாணப் பொண்ணை விட்டுட்டு எல்லாரும் உன்னோட பொண்டாட்டியைத்தான் பார்க்கப் போறாங்க.” இது கண்மணி.
“எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையில்லை, மேக்கப்புக்கு யாரையாவது கூப்பிடலாம்னு சொன்னேன், இவதான் வேணாம்னு சொன்னா, ஒழுங்கு மரியாதையா இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு ஃபங்ஷனுக்கு வரச் சொல்லுங்க.” கறாராக முடித்துவிட்டான் ஷியாம்.
“நீங்க என்னங்க வாயைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? அவனுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?” டீவி பார்த்துக் கொண்டிருந்த சுந்தர்ராம் மேல் பாய்ந்தார் கண்மணி.
“அவனுக்குப் புடிச்சிருக்கு, ஆசையா வாங்கிட்டு வந்திருக்கான், ஒருநாள்தானே அஞ்சனா? உடுத்திக்கிட்டுப் போம்மா.” சுந்தர்ராம் மகனுக்கு வக்காளத்து வாங்கினார்.
“இந்த மனுஷனைப் பார்த்தியா அஞ்சனா? மகனுக்குப் புத்தி சொல்லச் சொன்னா நமக்குச் சொல்றதை?” கண்மணி அன்றைக்குப் பார்த்த பார்வையில் அனல் பறந்தது.
“இன்னும் ரெடியாகலையா?” அவன் ஃபுல் சூட்டில் இருந்தான்.
“என்னால குனிஞ்சு பார்க்கக்கூட முடியலை, எல்லாம் சரியா இருக்கா சீனியர்?” பாவம் போல அவள் கேட்க அவள் வயிறு அத்தனைப் பெரிதாக இருந்தது. ஒரு புன்னகையோடு அவள் காலருகே மண்டியிட்ட கணவன் எல்லாவற்றையும் சரி பண்ணினான்.
“இப்போ சரியா இருக்குடா.” அவன் சொல்லவும் புடவையைச் சொருகியது பெண். அவள் பின்புறமாக வந்தவன் சேலையை ஒருசில இடங்களில் நீவி நேர் பண்ணிவிட்டான்.
“எல்லாம் கரெக்டா இருக்கா?”
“சூப்பர்! பூ வெச்சுக்கோ.”
“ம்…” அவள் குண்டு மல்லியைச் சூடிக்கொள்ள அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் டாக்டர்.
“அட்டகாசமா இருக்கேடி.” அவளின் குடை ஜிமிக்கியைச் சுண்டிவிட்டுக் கொண்டான்.
“ம்… இருப்பேன் இருப்பேன்!” அவனை முறைத்தது பெண். லேசான ஒப்பனைதான். ஆனால் கண்ணைப் பறித்தாள். புடவையில் அதிகம் வேலைப்பாடு இருந்ததால் நகைகளைப் பெருமட்டிற்குத் தவிர்த்திருந்தாள். இரு கைகளிலும் முழங்கை வரை மெஹந்தி போட வைத்திருந்தான். அவளின் வெண் பளிங்கு தேகத்திற்கு அந்தச் சிவப்பு நிறம் அத்தனை எடுப்பாக இருந்தது.
அஞ்சனா வீட்டிலிருந்து அத்தனைப் பேரும் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்தார்கள். கண்மணியும் வந்திருந்தவர் சொந்தத்தில் இன்னுமொரு திருமணம் இருந்ததால் அவசரமாகக் கிளம்பிவிட்டார். வீடு ஜேஜே என்று இருந்தது. சம்பத் குமார் பெரிய கலாட்டாப் பேர்வழியாக இருந்தான்.
“என்ன ஷியாம், பொண்ணு ரொம்பக் கலகலப்பான ஆளு, துறுதுறுன்னு இருப்பான்னு சொன்னீங்க? இப்ப என்னடான்னா இவ்வளவு அமைதியா இருக்கா?” வேண்டுமென்றே அபியை கேலி பண்ணினான்.
“சீனியர், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தயவு செஞ்சு உன்னோட வாயை மூடிக்கிட்டு இருன்னு அம்மா சொன்னதால அமைதியா இருக்கேன், உங்க ஃப்ரெண்ட்டை அடக்கி வாசிக்கச் சொல்லுங்க, இல்லைன்னாச் சந்தி சிரிச்சிடும்.” ஷியாமை அருகே அழைத்து அவன் காதில் முணுமுணுத்தாள் அபிநயா.
“டேய் சம்பத்! அடக்கி வாசி! எங்கப் புயல் ரொம்ப நேரத்துக்குக் கட்டுப்பாட்டோட இருக்காது, மானம் போச்சுதுன்னா அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை, சொல்லிட்டேன்.” மேடை ரகசியம் போலச் சத்தமாகச் சொன்னான் ஷியாம்.
“பார்த்தியா பேபி இந்த சீனியரோட கொழுப்பை! எப்பிடி பேபி சமாளிக்கிறே இந்தாளை?” கோபமாக அபி கேட்க அஞ்சனா புன்னகைத்தாள். அத்தனைப் பேரையும் ஆட்டுவிப்பவன் தான் சொல்லும் ஒரு வார்த்தைக்கு மறுவார்த்தைப் பேசாமல் கட்டுப்படுவான் என்று நான் சொன்னால் இவர்கள் நம்புவார்களா?!
“பேபி…” அபி மீண்டும் அழைக்க அஞ்சனா திடுக்கிட்டு விழித்தாள்.
“என்னாச்சு?! சீனியரை பார்த்துக்கிட்டுக் கனவு காணுறே?” கண் சிமிட்டினாள் அபி. அஞ்சனாவின் முகம் இப்போது சிவந்து போனது.
“பார்றா! அஞ்சு பேபி! நீயாடி இது?! சும்மா சொல்லக்கூடாது, சீனியர் பெரிய ஆளுதான்!” அவர்கள் இருவருக்கும் கேட்கும் வகையில் அபி ஆர்ப்பரிக்க அந்த இடத்தை விட்டு நகரப் போனாள் அஞ்சனா.
“எதுக்கு இப்போ எம் பொண்டாட்டி இவ்வளவு வெட்கப்படுறா?” கேட்டபடி அவர்களின் அருகே வந்தான் ஷியாம்.
“என்னடா இன்னமும் மூக்குல வேர்க்கலையேன்னுப் பார்த்தேன், வேர்த்திடுச்சா?” சலித்துக் கொண்டாள் மணப்பெண்.
“எங் கண்ணு முன்னாடியே எம் பொண்டாட்டியைக் கொடுமைப் படுத்துவீங்க, அதை நான் பார்த்துக்கிட்டு இருக்கணுமா?”
“எதே?! கொடுமைப் படுத்தினேனா?!” அபி அலறினாள்.
“சும்மா இருங்க ஷியாம்.” இது அஞ்சனா.
“சீனியர்! பேபி உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுறா!” ஆச்சரியத்தில் தன்னை மறந்தாள் அபிநயா.
“அது மட்டுமா அபி? இன்னம் என்னெல்லாமோ சொல்லுறா, திட்டுறா, பண்ணுறா.” அவன் ஆரம்பிக்க அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள் அஞ்சனா.
“என்னால நம்பவே முடியலை சீனியர்!”
“நாந்தான் அப்பவே சொன்னேன்ல அபி, ஆசை எனக்கு மட்டும் இருக்கலை, அவளுக்கும் இருந்துச்சு.”
“ம்…” அபி தலையை ஆட்டிக் கொண்டாள். மனது நிறைந்தாற் போல இருந்தது.
“மாப்பிள்ளை…” தயங்கியபடி அழைத்தார் வெண்பா. இப்போதெல்லாம் ஷியாமை அவர் அப்படித்தான் வாய் நிறைய அழைக்கிறார். நிச்சயதார்த்த விருந்தை முடித்துவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சொல்லுங்கத்தை.”
“அஞ்சுவை ரெண்டு நாள் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?” ஆசையாகக் கேட்டார் அந்த அம்மா. ஷியாமிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்தான். அங்கேயும் ஆசையின் சுவடுகள்.
“இதையெல்லாமா கேட்டுக்கிட்டு இருப்பாங்கத்தை? நீங்கத் தாராளமாக் கூட்டிட்டுப் போங்க.” எதைப்பற்றியும் யோசிக்காமல் பதில் சொன்னான் ஷியாம்.
“எதுக்கும் உங்கம்மாக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுக்கலாமா மாப்பிள்ளை?”
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, நான் அம்மாக்கிட்டச் சொல்லிக்கிறேன்.” அவன் பதிலில் அஞ்சனாவின் வீட்டார் மகிழ்ந்து போனார்கள். தங்கள் பெண் நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வருகிறாள். அதுவே அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது.
“ரம்யா…”
“சொல்லுங்கண்ணா.”
“அஞ்சு பத்திரம், அத்தை ஆசையாக் கேட்கிறாங்களேன்னு நானும் தலையை ஆட்டிட்டேன், அவ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்கப் போகுது.”
“புரியுது ண்ணா.”
“அம்மா திட்டினாலும் திட்டுவாங்க.”
“எதுக்கு?” இவர்களின் பேச்சில் குறுக்கிட்டாள் அபிநயா.
“உனக்கென்ன இங்க வேலை? சம்பத் கூப்பிடுறான் போ!”
“பேச்சை மாத்தாதீங்க சீனியர், அம்மா திட்டுவா, அப்பா திட்டுவார்னு சும்மா கதை விடுறாரு அண்ணி, இவருக்குப் பொண்டாட்டியை விட்டுட்டு இருக்க முடியாது, அதான் உண்மை.” அபியின் பேச்சில் ரம்யா புன்னகைத்தாள்.
“ஆமா, அதுதான் உண்மை, அதை எதுக்கு நாங்க மறைக்கணும்? ரம்யாக்கிட்ட அதை எங்களால சொல்ல முடியாதா என்ன? அம்மாவும் அஞ்சு இல்லாமக் கஷ்டப்படுவாங்க, அதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன், டேய் சம்பத்! இவளை அங்கக் கூப்பிடு, இந்தக் கொசுத்தொல்லைத் தாங்க முடியலை.”
“ஏன் சொல்ல மாட்டீங்க! அதான் உங்க அஞ்சு உங்களுக்குக் கிடைச்சுட்டா இல்லை, இனி நாங்கெல்லாம் உங்களுக்குக் கொசு மாதிரித்தான் தெரியும், வெச்சுக்கிறேன் சீனியர், இன்னொரு நாளைக்கு உங்களுக்கு இருக்கு!” மிரட்டி விட்டு அபிநயா செல்ல ஷியாம் புன்னகைத்தான்.
“இந்தப் பொண்ணு மட்டும் இல்லைன்னா என்னோட வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் ரம்யா?!” ஏதோ கனவில் பேசுபவன் போல ஷியாம் பேச அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட பெண்ணும் சிரித்துக் கொண்டது.
***
அந்த அறையில் நான்கைந்து பேர் மாத்திரமே இருந்தார்கள். மேஜையில் காகிதங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அபிநயாவும் சம்பத்தும் கூட அந்த மீட்டிங்கிற்கு வந்திருந்தார்கள்.
“உனக்கு இது சக்ஸஸ் ஆகும்னு நம்பிக்கை இருக்கா ஷியாம்?” இது டாக்டர் லதா.
“கண்டிப்பா மேடம், முயற்சி செஞ்சு பார்ப்போம், கஷ்டந்தான், இல்லேங்கலை, ஆனா என்னால முடியும்னு நான் நம்புறேன்.”
“குட்! சக்ஸஸ் ஆனா இந்த ஹாஸ்பிடலுக்கு அது ரொம்பப் பெரிய நல்ல பேரைத் தேடிக் குடுக்கும்.” ஷியாமின் நம்பிக்கையான பேச்சிற்கு லதா பச்சைக் கொடி காட்டினார். ஆனால் அபி சம்பத் குமாரை பார்த்து உதட்டைப் பிதுக்கினாள். அவனும் புன்னகைத்துக் கொண்டான்.
“மேல ப்ரொசீட் பண்ண என்னத் தேவைன்னாலும் கால் மீ ஷியாம்.”
“ஷ்யூர் மேடம்.” அத்தோடு அத்தனைப் பேரும் கலைந்து போய்விட்டார்கள். ஷியாமின் அறை வரை அபியும் சம்பத் குமாரும் வந்திருந்தார்கள்.
“எனக்கு நம்பிக்கையே இல்லை சீனியர், நைன்ட்டி பர்சன்ட் ஃபெயிலியர் ஆகத்தான் சான்ஸ் இருக்கு.”
“பத்துப் பர்சென்ட் சக்ஸஸ் ஆக வாய்ப்பிருக்கில்லை அபி? அதை ஏன் நீ பார்க்க மாட்டேங்கிறே?” இது ஷியாம்.
“சீனியர், என்னப் பேசுறீங்க நீங்க?!”
“ஒரு வீதம் வாய்ப்பிருந்தாக் கூட நான் இந்த கேஸ்ல இறங்கியிருப்பேன், எனக்கு பத்து வீதம் இருக்கு, இதை ஒரு கை பார்க்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் அபி.”
“வெரிகுட் ஷியாம், ஐ அப்ரிஷியேட் யூ! கண்டிப்பா பண்ணலாம்,” சம்பத்தும் தன் நண்பனோடு கை கோர்த்தான்.
“என்னமோப் பண்ணுங்க.” சலிப்புடன் சொன்ன அபிநயா நாற்காலியை விட்டு எழுந்தாள். அவள் கை பட்டு மேஜை மீதிருந்த ஃபைல் கீழே விழுந்தது.
“சாரி சீனியர்.” மன்னிப்பு வேண்டியவள் குனிந்து கலைந்து கிடந்த காகிதங்களை ஒன்று திரட்டினாள். ஒரு காகிதத்தின் மேல் அவள் கண்கள் நிலைகுத்தி நின்றன. காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டு பெண் நிமிர்ந்த போது அவள் முகம் செந்தணலாக மாறியிருந்தது.
“யோவ் சீனியர்! இவ்வளவு நேரமும் நீ யாருக்கு வக்காளத்து வாங்கிக்கிட்டு இருந்தே?” கோபத்தில் மரியாதை பறந்தது. சம்பத் குமார் திடுக்கிட்டுப் போனான்.
“அபி! என்ன லாங்குவேஜ் இது?! எவ்வளவு பெரிய டாக்டர்கிட்டப் பேசுற நீ? ஒரு மரியாதை வேணாம்?”
“மண்ணாங்கட்டி! இந்த மனுஷன் யாருக்காக இவ்வளவு மல்லுக்கட்டுறார்னு தெரிஞ்சா நீங்க இப்பிடிப் பேச மாட்டீங்க சம்பத்.”
“யாரா வேணா இருக்கட்டும், அதுக்காக நீ இப்பிடித்தான் பேசுவியா?”
“உங்களுக்குத்தான் இந்த லூசு மனுஷன் பெரிய டாக்டர், எனக்கு வெறும் சீனியர்தான்! முட்டாள் சீனியர்! மனசுல இருக்கிற இந்த எண்ணத்தை இந்த நிமிஷமே விட்டிருங்க சீனியர், இது நடக்கவே நடக்காது! கண்டிப்பா நடக்காது!” காட்டுக் கத்தல் கத்தியவள் கதவை ஓங்கி அறைந்துவிட்டு வெளியே போய்விட்டாள்.
“என்னாச்சு ஷியாம்?! எதுக்கு அபி இவ்வளவு கோபப்படுறா?!” சம்பத் குமார் கேட்க ஷியாம் பெருமூச்சு விட்டான். இதுவரை நேரமும் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த கேஸ் தருண் சம்பந்தப்பட்டது. ஃபைலில் தருணின் ஃபோட்டோவை பார்த்ததால்தான் அபிக்கு இவ்வளவு கோபம் வந்தது. இப்போது தருண் யாரென்பதை சம்பத்திடம் சொன்னான் ஷியாம்.
“ஓ…” சம்பத் குமாருக்கு நடந்தது எல்லாம் தெரியும் என்பதால் சற்று நேரம் அமைதி காத்தான்.
“அபியோட கோபத்துலயும் நியாயம் இருக்கு ஷியாம்.”
“இல்லேங்கலை சம்பத், ஆனா அதைவிட அவனோட குறைதான் எனக்குப் பெருசாப் படுது, ஒரு ஆம்பிளைக்குத் தன்னால அப்பா ஆக முடியாதுங்கிறது எவ்வளவு பெரிய வேதனை? அபியால அதைப் புரிஞ்சுக்க முடியாது சம்பத்.”
“ம்…” ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டினான் சம்பத் குமார்.
“அந்த ராஸ்கல் மேல எனக்கும் அவ்வளவு கோபம் இருந்துச்சு, ஆனா இப்போ அவன் என்னோட பேஷண்ட் சம்பத், நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ.”
“ஆனாலும் உனக்குப் பெரிய மனசு ஷியாம்!”
“அது அப்பிடியில்லை சம்பத், ஒருவேளை அஞ்சனா என்னோட வாழ்க்கைல வராமலே போயிருந்தா இதே தருணை ஒருவேளை நானே கொலை பண்ணி இருந்திருப்பேன்.”
“ஐயையோ!”
“உண்மைதான், ஆனா நான் இப்போ இவ்வளவு சந்தோஷமா இருக்கும் போது என்னால அவனைத் தண்டிக்க முடியலை, அவன் கெட்டவன் கிடையாது, அம்மாப் புள்ளை, அவனோட அம்மா சரியா இருந்திருந்தா அவனும் நல்லதா ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பான்.”
“ம்…”
“டைவர்ஸ்ல ஏதாவது ஏடாகூடம் பண்ணிடுவானோன்னு எனக்கொரு பயம் அப்போ இருந்துச்சு, இதே குறையை வெச்சு அவனை நானே ப்ளாக் மெயில் பண்ணியிருக்கேன், கெட்ட வார்த்தையால திட்டியிருக்கேன்.”
“ஷியாம்! என்னப்பா இதெல்லாம்?!”
“எனக்கு வேற வழி தெரியலை சம்பத், எனக்கு என்னோட அஞ்சு வேணும், அவ்வளவுதான்.”
“இப்போ என்னப் பண்ணுறதா ஐடியா?”
“இந்த கேஸை நான் டீல் பண்ணணும் சம்பத், இந்த முயற்சி சக்ஸஸ் ஆகணும், இந்த ஸீன்ல நான் இருக்கேன்னு இதுவரைக்கும் அவனுக்குத் தெரியாது.”
“முன்னாடி ஃபோன்ல அவங்கிட்டப் பேசினது யாருன்னு தெரியுமா அவனுக்கு?”
“ம்ஹூம்… தெரியாது, இப்போ இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கான், இவ்வளவு நாளும் அம்மா பேச்சுக்குத் தாளம் போட்டவன் இந்தத் தடவை அப்பிடிப் பண்ணலை.”
“ஓ… திருந்திட்டானா?!”
“அது தெரியலை, ஆனா உண்மையைச் சொல்லி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கான், அந்தப் பொண்ணுக்குச் சின்னதாக் கால்ல ஒரு ப்ராப்ளம் இருக்கும் போல.”
“ஓ… பரவாயில்லையே!”
“அவனோட அம்மாதான் ஒருமாதிரி, அப்பா நல்ல மனுஷன் போல, இப்போ அப்பாப் பேச்சைக் கேட்டு எல்லாம் பண்ணியிருக்கானாம், எனக்கு அவனுக்கு உதவி பண்ணணும்னு தோணுது சம்பத்.”
“கண்டிப்பாப் பண்ணலாம் ஷியாம், தப்பில்லை, இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா இந்த ஷியாம் முன்னாடி அவன் கூனிக் குறுகிப் போயிடுவான், மன்னிப்பை விட பெரிய தண்டனை வேறொன்னுமில்லை ஷியாம்.”
“கண்டிப்பா, உங்க அம்மிணி கோபமாப் போறாங்க, கொஞ்சம் அவங்களை மலையிறக்குங்க சாமி.” ஷியாம் கெஞ்ச சிரித்துவிட்டுப் போனான் சம்பத் குமார். அன்றைக்கு ஷியாமிற்கு நைட் ட்யூட்டி. வீட்டிற்குப் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டுத் திரும்ப வரலாம். ஆனால் வீட்டிற்குப் போக மனம் வரவில்லை. அவளில்லாத வீட்டிற்குப் போக அவனுடைய மனம் விரும்பவில்லை. இன்றைக்குக் காலையில் கூட அம்மா புலம்பினார்.
“என்னதான் பசங்க வீட்டுல இருந்தாலும் ஒரு பொண்ணு இருக்கிற மாதிரி வராது.” அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை அப்பாவும் மகனும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருந்தது. நேரம் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. ட்யூட்டியில் இருந்த நர்ஸ் உள்ளே வந்தாள்.
“டாக்டர், டீ வேணுமா?”
“ப்ளீஸ் சிஸ்டர்.” ஏதாவது குடித்தால் தேவலாம் போலத்தான் இருந்தது ஷியாமிற்கு. சரியாக அந்தநேரம் பார்த்து அவன் ஃபோன் சிணுங்கியது. அஞ்சனாதான் அழைத்துக் கொண்டிருந்தாள். சுறுசுறுப்பாக அழைப்பை ஏற்றான் கணவன்.
“கண்ணம்மா…” அந்த ஒற்றை வார்த்தை அவன் ஒட்டுமொத்தக் காதலையும் சொன்னது.
“ஷியாம்…” அவளும் தயங்கியபடியே அழைத்தாள்.
“என்னடா இந்த நேரத்துல? இன்னும் தூங்கலை?”
“ம்ஹூம்… தூக்கம் வரலை.”
“ஏன்டா?”
“தெரியலை.” அவள் மனது அவனுக்கும் புரிந்தது. ஆனால் அது அவள் வாயிலிருந்து வரட்டும் என்று வார்த்தை வளர்த்தான். அம்மா கேட்டவுடன் இவளும் ஆசைப்பட்டுக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். ஆனால் வந்த பிறகு அவனையே மனம் தேடியது. முன்பெல்லாம் அம்மா வீட்டிற்கு வந்தால் நிம்மதியாக இருக்கும். இதுவல்லவோ சுகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் இப்போது எதுவோ குறைந்தது. இத்தனைக்கும் அம்மா உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். அண்ணி விதவிதமாகச் சமைத்துப் போட்டாள். அப்பா மகளுக்குப் பிடிக்குமே என்று என்னென்னவோ வாங்கி வந்தார். புருஷோத்தமனை கேட்கவும் வேண்டாம்!
“அஞ்சும்மா…” அவனே மீண்டும் அழைத்தான்.
“நீங்க இன்னைக்கு நைட் ட்யூட்டியா?”
“ஆமாண்டா, ஏன்?”
“இல்லை… வீட்டுல இருந்தா இங்க வர முடியுமான்னு கேட்க நினைச்சேன்.”
“காலைல வரட்டுமா?”
“ம்…” அரைகுறையாகத் தலையை ஆட்டிவிட்டு லைனை துண்டித்தாள் பெண். இவள் உறங்காமல் நடைபயின்று கொண்டிருந்ததால் வீட்டில் இன்னும் யாரும் தூங்கியிருக்கவில்லை.
“அஞ்சு, தூக்கம் வரலைன்னா வா, ஒரு ரைட் போயிட்டு வரலாம்.”
“இந்நேரம் எதுக்கு புருஷோத்தமா?” இது வெண்பா.
“மழை வர்ற மாதிரி இருக்கும்மா, அதான் வீட்டுக்குள்ள புழுக்கமா இருக்கு, ஏஸியை விட காத்தாடப் போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.” அண்ணன் சொல்லவும் அஞ்சனாவும் கிளம்பிவிட்டாள். ரம்யாவும் கூட வந்தாள். வீட்டிற்குள் இருப்பதை விட வெளியே கொஞ்சம் போய் விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது. அணிந்திருந்த நைட் ட்ரெஸ்ஸிலேயே கிளம்பினாள் பெண். கார் ஹாஸ்பிடல் செல்லும் பாதையில் செல்லவும் பெண் ஆச்சரியப்பட்டது.
“அண்ணா! எங்கப் போறோம்?!”
“ஆங்… அங்க ஒருத்தருக்கு அவரோட பொண்டாட்டியைப் பார்க்காம ஒரு வேலையும் ஓட மாட்டேங்குதாம்! மருந்து மாத்திரையை பேஷண்ட்ஸுக்கு மாறிக் குடுத்துட்டா? எதுக்கு வம்புன்னு அங்கதான் போய்க்கிட்டு இருக்கோம்!” அண்ணாவிடம் கேட்ட கேள்விக்கு அண்ணியிடமிருந்து பதில் வந்தது. அஞ்சனா வெட்கப்பட்டவள் ஒரு புன்னகையோடு தலையைக் குனிந்து கொண்டாள். கார் பார்க்கிங்கை நெருங்கும் போது ஏற்கனவே அங்கே ஷியாம் நின்றிருந்தான். கார் நின்றதுதான் தாமதம், பெண்ணும் சட்டென்று இறங்கிவிட்டது.
“பார்த்து அஞ்சனா.” அண்ணியின் குரலை அவள் காதில் வாங்கவே இல்லை. ஒரு தயக்கம் இருந்த போதும் கணவனை நெருங்கினாள்.
“அஞ்சும்மா…” தயக்கமெல்லாம் அவளுக்குத்தான். அவனுக்கு எதுவுமே தோன்றவில்லைப் போலும். அவளை லேசாக அணைத்துக் கொண்டான். மேடிட்டிருந்த அவள் வயிறு இருவருக்கும் குறுக்கே தடை விதித்தது.
“ஹாஸ்பிடல் வரப்போறோம்னு எனக்குத் தெரியாது, நான் பாட்டுக்கு நைட் ட்ரெஸ்ல வந்துட்டேன்.”
“பரவாயில்லை டா.”
“நீங்க அண்ணாக்கிட்டச் சொன்னீங்களா?”
“மேடம் கிளம்பி வாங்கன்னு சொல்லிட்டு சிம்பிளா ஃபோனை வெச்சுட்டீங்க, மனுஷனுக்கு அதுக்கப்புறம் வேலை ஓடுமா? அதான் சீனியருக்கு ஃபோன் பண்ணினேன்.” அப்போதுதான் அண்ணா, அண்ணியின் ஞாபகம் வந்தவள் அவர்களைத் திரும்பிப் பார்த்தாள். அவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“நீ வா அஞ்சு.” அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்தான் ஷியாம். அறைக்குள் வந்ததுதான் தாமதம். இதுவரை ஒருவிதத் தயக்கத்தோடு தள்ளி நின்ற பெண் இப்போது தானாகக் கணவனை அணைத்துக் கொண்டது. அந்த அணைப்பில் இருந்த உரிமையை வேகத்தைக் கணவன் ரசித்தான். அவளின் முதல் அணைப்பு!
“அஞ்சும்மா…” அவனுக்கு ஆதி முதல் அந்தம் வரை சிலிர்த்தது.
“எனக்கு… எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருந்துது ஷியாம்.”
“ம்…” அவள் உச்சந்தலையில் மென்மையாக முத்தம் வைத்தவன் அவளே பேசட்டும் என்று ‘ம்’ கொட்டினான்.
“அம்மா வீட்டுல இருக்கணும் போலதான் இருக்கு… ஆனா… நீங்க அங்க இல்லையே… அது கஷ்டமா இருக்கு.”
“காலைல வர்றேன் ம்மா.”
“ஆனா அதுக்கப்புறம் போயிடுவீங்களே!”
“நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குதாம், அம்மா இன்னைக்குக் காலைல புலம்புறாங்க, இதுல நானும் இல்லைன்னா எப்பிடிடா?”
“ரெண்டே ரெண்டு நாள் இங்க இருந்துட்டு அதுக்கப்புறமா அங்கப் போலாமா?” அவள் ஆசையாகக் கேட்க அவன் தலையை ஆட்டினான். எப்போது அவள் சொல்வதை இவன் மறுத்திருக்கிறான்?!
“நேரமாச்சு, நீ கிளம்புடா, வெளியே காத்துக்கிட்டு இருக்காங்கல்லை?”
“ம்…” மனமேயில்லாமல் விலகியவள் கதவு வரை சென்று திரும்பிப் பார்த்தாள். ஷியாம் அவளையேப் பார்த்தபடி புன்னகைத்தான். திரும்பி வந்தவள் அவனை நெருங்கி அவன் கழுத்தை வளைத்து அந்த இதழ்களில் இதழ் பதித்தாள். டாக்டர் அதிர்ந்து போனான்.
“அன்னைக்குக் கேட்டீங்கல்லை ஷியாம்… நீங்கதானே கேட்டீங்க ஷியாம்? நீயா எப்போக் குடுப்பேன்னு கேட்டீங்கல்லை ஷியாம்?” பித்துப் பிடித்தாற் போல பிதற்றினாள் பெண். ஷியாமிற்கு தலை கிறுகிறுத்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பெரும்பாடுபட்டான்.
“அஞ்சும்மா… காம் டவுன் கண்ணம்மா… காம் டவுன்…” இன்பத்தை அள்ளிக்கொடுத்த பெண்ணைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் டாக்டர். அது ஹாஸ்பிடல் என்பதையும் மறந்து!
Leave a Reply