siraku25

siraku cp-ab43370e

சிறகு 25 (final episode)

அஞ்சனா கட்டிலில் சோர்ந்து போய் கிடந்தாள். குழந்தைகள் இருவரையும் நர்ஸ் வெளியே இருப்பவர்களிடம் காட்டக் கொண்டு போய்விட்டார். மனைவிக்குச் செய்ய வேண்டிய அனைத்து சிகிச்சைகளையும் முடித்துவிட்டுக் கையைச் சுத்தம் செய்துகொண்டு அவளருகே வந்தான் ஷியாம். முகம் முழுவதும் புன்னகை.

“இப்போ எப்பிடி இருக்கு?”

“ம்…”

“அப்பிடின்னா?” வேண்டுமென்றே அவளைக் கேலி பண்ணினான். 

“உங்கப் பொண்ணுங்களை நான் இன்னும் ஒழுங்காப் பார்க்கலை சீனியரே.”

“உங்கம்மாவும் எங்கம்மாவும் அவங்களை நம்மக்கிட்டக் குடுத்துட்டுத்தான் வேற வேலை பார்ப்பாங்க.” அவன் பேச்சு கேலியாக வந்தாலும் அதில் உண்மை இருந்தது. இரு வீட்டாருக்கும் இவர்கள்தான் முதல் வாரிசு.

“ஆளுக்கொன்னை எடுத்துக்கிட்டா நாம என்னப் பண்ணுறதாம்?”

“இன்னொன்னுப் பெத்துக்கோ.” கணவனின் பேச்சில் அஞ்சனா சிரித்தாள். அவளருகே வந்தவன் சிரித்த அந்த உதடுகளில் அழுந்த முத்தம் வைத்தான்.

“ஐவிஎஃப் ன்னு என்னை முதல் தடவை நல்லா ஏமாத்திட்டே, ஆனா இந்த வாட்டி அதெல்லாம் நடக்காது டார்லிங்.” இதைச் சொல்லிவிட்டு மனைவியின் கையால் அடி வாங்கினான் ஷியாம். அடியை வாங்கிக் கொண்டும் அவன் அடங்கவில்லை.

“தனியா எங்கிட்ட வரத் தைரியம் இல்லாம காவலுக்கு எம் பொண்ணுங்களை வயித்துல வெச்சுக்கிட்டு வந்தே, இனி என்னப் பண்ணுறேன்னு நானும் பார்க்கிறேன்.” மேலும் அவளோடு வம்பு வளர்த்து சில பல அடிகளை வாங்கிக் கொண்டிருந்தான் டாக்டர்.

“பார்த்தியில்லை, இனி நாம ஃப்ரீதான்.”

“சும்மா இருங்க ஷியாம்.” சிணுங்கினாள் அஞ்சனா. வாய்விட்டுச் சிரித்தவன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். 

“ரொம்பக் கஷ்டமா இருந்துதாடா?” அவன் குரல் மிகவும் கனிவோடு வந்தது.

“நான் செத்துப் போயிடுவேனோன்னு எனக்குப் பயம் வந்திடுச்சு ஷியாம்.”

“சீச்சீ! என்னடா பேச்சு இது?”

“உண்மைதான், ஒரு மாதிரியா மயக்கம் வந்திச்சு, நான் பயந்துட்டேங்க.”

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா, ரெண்டு மூனு நாள் லேபர் பெயின்ல கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க.”

“ஐயையோ!”

“ம்… அப்பக் கூட பேபி நார்மல் டெலிவரிக்கு ஹாப்பியா இருந்துதுன்னா நான் சிசேரியன் பண்ண மாட்டேன்.”

“ஓ…” 

“கொஞ்ச நேரம் வலியைப் பொறுத்துக்கிட்டா அதுக்கப்புறம் எவ்வளவு ஈஸி தெரியுமா? ஆப்பரேஷன் அப்பிடியில்லைம்மா, ஈஸியா பெத்துக்கலாம், ஆனா அதுக்கப்புறமாக் கஷ்டப்படணும்.”

“ஓ…”

“நல்லா இப்போக் கதை கேளு.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அத்தனைப் பேரும் அட்டகாசமாக உள்ளே நுழைந்தார்கள். ஷியாமின் பெற்றோர், அஞ்சனாவின் பெற்றோர், அபி, சம்பத், புருஷோத்தமன், ரம்யா என அந்த அறையே நிறைந்து போனது. 

“பேபி, இந்தச் செல்லத்தை எனக்குக் குடுத்திடேன், அம்மாடியோவ்! என்ன அழகா இருக்காங்க!” அபியின் வாய் ஓயவில்லை.

“ஏன்? நீ ஒன்னைப் பெத்துக்கோ.” இது கண்மணி.

“பெத்துக்கலாம், அதுவரைக்கும் இந்தக் குட்டி எனக்கு.” அபி சிரித்தாள். ரம்யாவின் வயிறும் மேடிட்டிருந்தது. ஆளுக்கொன்றென மாறிமாறி அனைவரும் குழந்தைகளைத் தூக்கிய வண்ணம் இருந்தார்கள். ஷியாமும் அஞ்சனாவும் இப்போது பார்வையாளர்கள் ஆகிப் போனார்கள்.

***

அந்த அறையில் டாக்டர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். சம்பத்தும் வந்திருந்தான். டாக்டர் லதா கொஞ்சம் சங்கடப்பட்டாற் போல அமர்ந்திருந்தார்.

“டாக்டர் ஷியாம்கிட்ட அப்பவே நான் சொன்னேன் மேடம், இந்த கேஸ் சக்ஸஸ் ஆகுறது ரொம்பக் கஷ்டம், பேஷன்ட்டுக்கு ஹெல்ப் பண்ணத்தான் டாக்டரும் முயற்சி பண்ணுறாங்க, ஐ அன்டர்ஸ்டான்ட், ஆனாக் கஷ்டம் மேடம்.” ஒரு டாக்டர் பேச்சை ஆரம்பித்தார். டாக்டர் லதா இப்போது ஷியாமை பார்த்தார்.

“ஷியாம், நீ இதுக்கு என்ன சொல்றே?”

“கரெக்ட்தான் மேடம், ஆனா நான் என்னோட முயற்சியை விடப்போறதில்லை.”

“வாட்! என்ன சொல்றே நீ?” 

“இன்னொரு முறை ஐவிஎஃப் பண்ண பேஷன்ட் ரெடியா இருக்காங்க, அதனால ட்ரீட்மெண்ட் குடுக்க நானும் ரெடியா இருக்கேன்.” அந்தப் பதிலில் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். சம்பத் குமார் சிரித்துக் கொண்டான். 

“ஷியாம், இந்த கேஸை எடுத்த நாள்ல இருந்து நீ எவ்வளவு கஷ்டப்படுறே, எத்தனை புக்ஸ் ரெஃபர் பண்ணுறேன்னு இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும், மேல மேல இன்னும் உன்னோட டைமை இதுக்காக நீ வேஸ்ட் பண்ணணுமாங்கிறதுதான் இப்போ எல்லாரோட கேள்வியும்.” 

“கண்டிப்பா மேடம், என்னோட முயற்சி வீண்போகாது, இந்த கேஸ் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும், அந்த நம்பிக்கை எனக்கிருக்கு.” ஷியாம் தன் பிடியில் உறுதியாக நின்றான். இதற்கு மேல் என்னப் பேசுவதென்று தெரியாமல் கூடியிருந்த அனைவரும் கலைந்து போய்விட்டார்கள். டாக்டர் லதா போகாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

“ஷியாம், அம்மா நேத்து எனக்கு கால் பண்ணி இருந்தாங்க.” சம்பத் குமார் தவிர மற்றைய எல்லோரும் போய்விட்டதால் குடும்ப விஷயத்தைப் பற்றிப் பேசினார் லதா.

“சொல்லுங்க மேடம்.”

“ஹாஸ்பிடல்ல ஷியாமுக்கு ரொம்ப வேலை குடுக்காதீங்க மேடம்னு என்னைச் சத்தம் போடுறாங்கப்பா.”

“அவங்களுக்கு வேற வேலை இல்லை மேடம்.”

“நோ நோ, நீ வீட்டுல இருக்கிற நேரம் ரொம்பவே குறைஞ்சு போச்சுன்னு வருத்தப்பட்டாங்க.”

“அதான் ஒன்னுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்கல்லை? அதுங்களோட விளையாடச் சொல்லுங்க.”

“அவங்க கவலைப்படுறது அஞ்சனாவை பத்தி, பொண்டாட்டி கூட நேரம் செலவழிக்க முடியாத அளவுக்கு இவனுக்கு அப்பிடியென்ன வேலைன்னு கேட்கிறாங்க, நியாயந்தானே?”

“நான் பிஸியா இருக்கேன்னு அஞ்சுக்கு தெரியும் மேடம், இவங்க சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, வயசு ஆச்சில்லை?” 

“எனக்குத் தெரியாது ஷியாம், நீ இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் இந்த கேஸ்ல ட்ர்ரை பண்ணு, நான் வேணாங்கலை, ஆனா ஃபேமிலியையும் பார்த்துக்கோ, அவ்வளவுதான் சொல்வேன்.” அத்தோடு லதாவும் போய்விட்டார். 

“அப்போ நான் கிளம்பட்டுமா ஷியாம்?” சம்பத் கேட்கவும் எழுந்து அவனைக் கட்டிக் கொண்டான் ஷியாம்.

“ரொம்ப தான்க்ஸ்டா, ‌நாட்டுக்கு வர்றப்ப எல்லாம் எனக்காக டைம் ஒதுக்கிறே, இந்த ஹெல்ப்பை நான் மறக்க மாட்டேன் சம்பத்.”

“அடப்போ மேன், அங்க ஒருத்தி இப்போக் கோபத்துல ஜொலிப்பா, அவளைப் போய் மலை இறக்கணும், நான் கிளம்பறேன்.” அதற்கு மேலும் தாமதிக்காமல் சம்பத் கிளம்பிவிட்டான். அபிக்கு சிங்கப்பூரில் நல்லதாக ஒரு வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சரியானதொன்று அமையும் வரை இங்கேயே வேலையைத் தொடரலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். அதுவரை லீவு கிடைக்கும் போதெல்லாம் சம்பத் குமார் இலங்கை வந்தான். சில நாட்கள் அபி சிங்கப்பூர் போய் வந்தாள். அவர்கள் வாழ்க்கை இப்படி ஓடிக்கொண்டிருந்தது. ஒழுங்காக ஓரிடத்தில் இருவரும் ஒன்றாக வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.

ஷியாம் தனது அறைக்கு வந்துவிட்டான். தருண் கேஸ் விஷயத்தில் அவனது ஒட்டுமொத்தத் திறமையையும் முழுதாக இறக்கியிருந்தான். வெளிநாடுகளில் நடைபெற்ற இதுபோன்ற சிக்கலான ஐவிஎஃப் சிகிச்சை முறைகளைப் படித்துப் பார்த்துப் புதுப்புது நுணுக்கங்களை அறிந்துகொண்டான். தனக்குத் தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டான். பல வெளிநாட்டு டாக்டர் நண்பர்களோடும் தொடர்பு கொண்டு இந்த கேஸ் பற்றி விவாதித்தான். அவர்களது அறிவுரைகளைக் குறித்துக் கொண்டான். நேரம் தண்ணீராய் செலவழிந்தது. 

எவ்வளவு முயன்ற போதும் மூன்றாம் முறையாக இம்முறையும் தோல்வியே கிடைத்திருந்தது. இரண்டு சிகிச்சைகளுக்கு நடுவே இரண்டு தொடக்கம் மூன்று மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதால் எல்லாவற்றிலும் கவனமாக இருந்தான் ஷியாம். குழந்தைகளுக்கு நான்கு மாதங்கள் நிறைவடைந்திருந்தன. அஞ்சனாவும் குழந்தைகளோடு மிகவும் பிஸியாக இருந்தாள். ஆனாலும் வாரத்தில் ஒரு நாளை கட்டாயமாக அவர்களுக்கென்று ஒதுக்கினான். அந்த ஒருநாள் அவனுக்கும் போதவில்லை, அவர்களுக்கும் போதவில்லை. ஆனாலும் அவன் செய்யும் தொழில் அப்படியென்பதால் எதையும் பொறுத்துக்கொள்ளவே வேண்டியிருந்தது. அபிநயாவைத்தான் இன்றுவரை ஷியாமால் சமாளிக்க இயலவில்லை. அன்றைக்கு முறைக்க ஆரம்பித்தவள்தான். இன்றுவரை முறைத்துக் கொண்டுதான் திரிகிறாள்.

ஷியாம் மிகவும் களைப்பாக உணர்ந்தான். உடலின் களைப்பை விட மனது மிகவும் களைத்துப் போயிருந்தது. தருணை இதுவரை அவன் நேருக்கு நேராக சந்திக்கவில்லை. அந்த வாய்ப்பை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டான். டாக்டர் லதா தலைமையில் ஒரு டாக்டர் குழுவை அமைத்தான். அந்தக் குழுவை இவனே வழிநடத்தினான். தருணை சந்திக்கும் வாய்ப்புகள் அனைத்தும் டாக்டர் லதாவிற்கே வழங்கப்பட்டது. தருணின் மனைவி மிகவும் நல்ல பெண்ணாக இருந்தாள். வலது காலில் சின்னதாக ஏதோ ஒரு பிரச்சனை இருந்ததால் அவளால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. ஆனாலும் மிகவும் தைரியமான, பாஸிட்டிவ் சிந்தனைகள் உள்ள பெண்ணாக இருந்தாள். ஷியாமிற்கு அந்தப் பெண்ணின் மேல் பரிவைத் தவிர்த்துப் பாசமே உருவானது. கொஞ்சம் பூசினாற் போல உடம்பு வாகு. 

கர்ப்பம் தரிக்காமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம் என்பதால் அந்தப் பெண்ணையும் சோதனைப் பண்ணினார்கள். கர்ப்பப் பையில் கொழுப்புக் கட்டிகள் இருந்தன. அதையும் ஆப்பரேஷன் மூலம் அகற்றியிருந்தார்கள். இந்தமுறை முயற்சிக்கும் போது ஷியாம் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தான். ஆனாலும் தோல்வியே கிட்டியிருந்தது. பணிநேரம் நிறைவு பெற காரை எடுத்துக்கொண்டு நேராக வீடு வந்துவிட்டான். அந்த ப்ளாக் ஆடி உள்ளே நுழையும் போதே கண்மணி கோபமாக வாசலுக்கு வந்துவிட்டார். இவன் காரை விட்டு இறங்கியதுதான் தாமதம். பேச்சு எகத்தாளமாக வந்தது.

“வாங்க டாக்டர் சார், வாங்க வாங்க! உங்களுக்குன்னு ஒரு வீடு, அங்கப் பொண்டாட்டின்னு ஒருத்தி, பொண்ணுங்க ரெண்டு, இதெல்லாம் இருக்கிறது ஞாபகம் இருக்கா இல்லையா?”

“சாரிம்மா.”

“என்னடா சாரி? வாசல்ல உங்கப்பா கார் வந்து நின்னதும் அதுங்க ரெண்டும் சிரிக்குதுங்க, நீதான் வர்றேன்னு, பொண்டாட்டி, புள்ளைங்களைப் பார்க்க நேரமில்லாம டாக்டர் சார் ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறீங்களோ?!”

“சரிவிடும்மா.” இது சுந்தர்ராம்.

“நீங்க சும்மா இருங்க, எல்லாத்துக்கும் அவனுக்கு இப்பிடி சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுக்கிறதே நீங்கதான்.”

“பாவம்மா அவன், வேணும்னா பண்ணுறான்? அவன் பார்க்கிற தொழில் அப்பிடி.” அப்பாவும் அம்மாவும் வாக்குவாதத்தில் இறங்க ஷியாம் மெதுவாகத் தங்கள் அறைக்கு வந்தான். அஞ்சனா அங்கேதான் நின்றிருந்தாள். டவலையும் இரவு ஆடையையும் அவனிடம் கொடுத்தாள். அவன் எப்போதும் அப்படித்தான். ஹாஸ்பிடலில் இருந்து வந்தால் குளிக்காமல் மனைவியையோ பிள்ளைகளையோ தொட மாட்டான். 

“வெளியே போனியா அஞ்சு?” கேட்டபடியே குளியலறைக் கதவைத் திறந்தான். ஏனென்றால் மனைவி அன்றைக்குப் புடவைக் கட்டியிருந்தாள். குழந்தைகள் பிறந்த பிற்பாடு இப்போதெல்லாம் வசதி கருதி அவள் புடவைக் கட்டுவதில்லை. அதில் ஷியாமிற்கு மிகுந்த வருத்தமுண்டு.

“இன்னைக்கு இன்ஜெக்ஷன் இருந்துது, நேத்தே உங்கக்கிட்டச் சொல்லியிருந்தேன்.” கதவை மூடப்போனவன் இப்போது சட்டென்று நின்றான். இன்றைக்குச் சீக்கிரமாக வீடு வரவேண்டும் என்று அவனும் நினைத்திருந்தான். ஆனால் திடீரென்று லதா மேடம் மீட்டிங்கிற்கு அழைப்பார் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் களேபரத்தில் வீடு மறந்து போனது.

“சின்னவங்க இப்போ எங்கே?”

“லைட்டா ஃபீவர் இருந்துச்சு, மெடிசின் குடிச்சிட்டுத் தூங்குறாங்க, டாக்டர் உங்களைக் கேட்டாங்க.”

“அப்புறமா ஃபோன்ல பேசுறேம்மா, யாரு கூடப் போனீங்க?”

“அத்தையும் மாமாவும் வந்தாங்க” சொல்லிவிட்டு அவனையே புன்னகையோடு பார்த்தாள் பெண்.

“சாரிம்மா.” கணவன் மன்னிப்பு வேண்டினான். அம்மாவைப் போல இரண்டு வார்த்தைகள் திட்டினால் கூட மனம் ஆறிப்போகும். இப்படிப் புன்னகைக்கும் மனைவி அவனுள் குற்றவுணர்வைத் தோற்றுவித்தாள். அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வெளியே வந்தான் ஷியாம். அப்போதும் ஏதோ வேலையாக அங்கேதான் நின்றிருந்தாள் அஞ்சனா.

“ஷியாம், என்னாச்சு?!” இதுதான் அவள். கணவனின் முகத்திலிருந்த அதீத களைப்பை அவள் கண்கள் கண்டுகொண்டது. கையிலிருந்த டவலை அப்பால் போட்டுவிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் கணவன்.

“என்னாச்சு ஷியாம்.” அவள் பதறினாள். இப்போது ஒரு வேட்கையோடு அவள் இதழ்களைச் சரணடைந்தான் டாக்டர்! அஞ்சனா அசையவில்லை. அவன் அப்படித்தான். சந்தோஷமோ, துக்கமோ. எதுவென்றாலும் அதைப் பங்குபோட அவனுக்கு அவள் வேண்டும். அவன் இளைப்பாற அவள் கொடுக்கும் போதை வேண்டும். அவன் முதுகை மெதுவாக வருடிக் கொடுத்தது பெண். இனம்புரியாத ஏதோவொரு இறுக்கம் அவன் சரீரத்திலிருந்து விடுபடுவதை‌ அவளும் உணர்ந்தாள். சற்றுத் தாமதித்து அவனாக அவளை விடுவித்தான்.  

“ஷியாம், ஏதாவது டெலிவரி…” அவள் குரல் நடுங்கியது.

“இல்லைம்மா, ஐவிஎஃப், மூனாவது தடவை, இந்த முறை நான் ரொம்ப எதிர்பார்த்தேன், எனக்கே இப்பிடியிருந்தா இத்தனை வலியைப் பொறுத்துக்கிட்டுப் பாஸிட்டிவ் மைன்டோட காத்துக்கிட்டிருந்த அந்தப் பொண்ணுக்கு எப்பிடி இருக்கும்?”

“ஓ…” இதைத்தான் நாம் உணராத இறைவனின் அருட்கொடை என்பதா? அஞ்சனா திகைத்தாள். முதல் தடவையே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தனக்கு எல்லாம் சரியாக நடந்ததே! ஆண்டவா! முகம் தெரியாத அந்தப் பெண்ணுக்காக அந்த நொடி அவள் மனம் பிராத்தனைப் பண்ணியது.

“ஹாஸ்பிடல்ல எல்லாரும் கையை விரிச்சுட்டாங்க, நம்ம அபியை பார்த்தேயில்லை? இன்னமும் முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டுத்தான் திரியுறா, சம்பத்தும் லதா மேடமும் மட்டுந்தான் என்னை சப்போர்ட் பண்ணுறாங்க.” இன்றைய தேதி வரை அபிநயாவை ஷியாமால் சமாதானம் செய்யவே முடியவில்லையே! அவனைப் பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டுதானே திரிகிறாள்!

“யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“இல்லைம்மா, யாரும் எதுவும் சொல்லலை, ஆனா எனக்கு எல்லார் முன்னாடியும் தோத்த மாதிரி இருக்கு, ரொம்பக் கஷ்டமா இருக்கு.”

“இப்போ என்னப் பண்ணப் போறீங்க?”

“நாலாவது தடவையும் திரும்ப ட்ர்ரை பண்ணப் போறேன்.” உறுதியாகச் சொன்னான் டாக்டர். 

“கண்டிப்பாப் பண்ணுங்க ஷியாம், இந்தத் தடவைக் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும், நான் சொல்லுறேன், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, நீங்க மனசு‌ தளராதீங்க.” சொன்ன மனைவியை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான் ஷியாம்.

“இது போதும்டி எனக்கு, நீ சொல்ற இந்த ஒரு வார்த்தைப் போதும், ஹாஸ்பிடல் என்ன, இந்த உலகமே வேணாம்னாலும் நான் திரும்பத் திரும்ப ட்ர்ரை பண்ணுவேன்.” ஒரு வேகத்தோடு பேசியபடி அவன் அணைத்த அணைப்பில் அவள் எலும்புகள் நொறுங்கின.

“சாப்பிடலாம் ஷியாம், அத்தையும் மாமாவும் காத்துக்கிட்டு இருப்பாங்க.”

“ம்… உங்கத்தை கொலைவெறில இருக்காங்கப் போல?”

“ஆமா, டாக்டர் வேற உங்களைக் கேட்டாங்களா, இவங்களுக்கு அப்பிடியே கோபம் வந்திடுச்சு.” சொன்ன மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் ஷியாம். 

“சின்னதுங்க ரெண்டும் எந்திரிக்கிறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிருங்க, நானும் அப்பாவும் அப்புறமாச் சாப்பிடுறோம்.” கண்மணி சொல்லவும் இளையவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்துவிட்டார்கள். சரியாகப் பாதி உணவு தீரும் போது சொல்லி வைத்தாற் போல இரண்டு குட்டிப் பெண்களும் எழுந்துவிட்டார்கள். கண்மணி ஆதினியை தூக்கிக் கொள்ள சுந்தர்ராம் ஆர்ஷியோடு வந்தார். நான்கு மாதங்கள் நிறைவடைந்திருந்ததால் குழந்தைகள் நன்றாக வளர்ந்திருந்தார்கள். பிறந்திருக்கும் போது இரு உள்ளங் கைகளுக்குள்ளும் அடக்கிவிடலாம் போல இருந்தவர்களைச் சமாளிக்க இப்போது இரு கைகள் போதவில்லை. 

அதிலும் இரண்டாவது பெண் படு சுட்டியாக இருந்தாள். இடது புருவத்தின் மேல் அழகான மச்சமொன்று இருந்தது அவளுக்கு. சரியாக அதே போல மச்சமொன்று சுந்தர்ராமிற்கும் இருந்தது.

“என்னோட சின்னப் பேத்தி என்னைப்போல!” கேட்பவர்களிடம் எல்லாம் மனிதர் இப்படித்தான் சொல்லிக் கொள்வார். இப்போது ஆதினியோடு வந்த கண்மணி குழந்தையின் பிஞ்சுக் காலைத் தூக்கி ஷியாமின் கன்னத்தில் அடித்தார். 

“இப்பதான் வந்திருக்கான் உங்கப்பன், நல்லா நாலு அடி போடு அவனுக்கு.” பாட்டியின் செய்கையில் பிள்ளை சிரித்தது. தன் அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் கையை அசைத்தது. ஷியாம் இடது கையில் மகளை வாங்கிக் கொண்டான். சுந்தர்ராம் சின்னவளை ஷியாமின் தோளில் கொண்டு வந்து வைத்தார். 

“அவங்க இன்னும் சாப்பிட்டு முடிக்கலை…” இது அஞ்சனா.

“புள்ளைங்களை விட துரைக்கு சாப்பாடு ஒன்னும் அவ்வளவு முக்கியமில்லை.” இது கண்மணி. அதற்கு மேல் அஞ்சனா ஏதும் பேசவில்லை. கடகடவென சாப்பிட்டு முடித்துவிட்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

“நீங்க சாப்பிடுங்க மாமா.”

“சரிம்மா.” பெரியவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்துவிட ஷியாமின் குடும்பம் படுக்கையறைக்குள் நுழைந்தது. 

“ஃபீவர் இன்னும் இருக்காப் பாருங்க.”

“இல்லைம்மா, அழுதாங்களா என்ன?”

“ஆமா, ரெண்டு பேரும் நல்ல அழுகை.”

“ஐயையோ! குட்டிம்மா ரெண்டு பேரும் அழுதீங்களா இன்னைக்கு?” அப்பா தன் பிள்ளைகளைக் கொஞ்ச ஆரம்பிக்க அஞ்சனா கட்டிலில் சாய்ந்தாள்.

“இப்பதானே எந்திருச்சாங்க, இனி எப்பம்மா தூங்குவாங்க இவங்க?”

“சிவராத்திரிதான், இன்னைக்கு நைட் ட்யூட்டியின்னு நினைச்சுக்கோங்க, நான் தூங்கப்போறேன் ப்பா.”

“அடியேய்!” அவள் கண்களை மூடிக்கொள்ள ஷியாம் சத்தமாகச் சிரித்தான். 

***

மேலும் இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. அன்றைக்கு ஷியாமின் ஹாஸ்பிடலில் சின்னதாக ஒரு விழா. டாக்டர்கள் பலரை அந்த விழாவிற்குக் குடும்ப சகிதமாக நிர்வாகம் அழைத்திருந்தது. தன் குடும்பத்தோடு ஷியாமும் வந்திருந்தான். குடும்பம் என்றால் அவன், அஞ்சனா, இரண்டு பிள்ளைகள். அவர்கள் எங்கே போவதென்றாலும் கண்மணி துணைக்குப் போவதுண்டு. ஆனால் இன்றைக்கு அவருக்கு சொந்தத்தில் ஒரு விசேஷம் இருந்ததால் அங்கு போயிருந்தார்.

“கங்கிராட்ஸ் ஷியாம்!” டாக்டர் லதா இளையவனின் முதுகில் தட்டினார். அவனும் சிரித்துக் கொண்டான். அஞ்சனாவிற்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.

“அத்தனை டாக்டர்ஸும் இது ரொம்பக் கஷ்டம்னு சொன்னப்போ எனக்குக் கூட அவ்வளவு நம்பிக்கை இருக்கலை, ஆனா என்னால முடியும்னு நம்பி இன்னைக்கு ஜெயிச்சுக் காட்டியிருக்கே! ரொம்ப சந்தோஷமா இருக்கு, இந்த ஹாஸ்பிடலோட அஸெட் ஷியாம் நீ!”

“எவ்வளவு பெரிய ஜீனியஸ் நீங்க! உங்க வாயால இந்த வார்த்தையைக் கேட்கிறது எனக்குத்தான் பெருமை மேடம்.” மிகவும் பணிவாகச் சொன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தார் லதா.

“ஊருக்குள்ள மட்டுந்தான் இந்த அடக்கமெல்லாமா? வீட்டுல எப்பிடிம்மா இந்தப் பயல்? நல்ல ஹஸ்பென்ட்டா?” இப்போது கேள்வி அஞ்சனாவை நோக்கிப் பாய்ந்தது.

“ரொம்ப நல்ல ஹஸ்பென்ட், அப்பப்ப ஹாஸ்பிடல் வந்துட்டா வீட்டையே மறந்திடுற ஹஸ்பென்ட்.” பெண்ணின் பேச்சில் லதா வாய்விட்டுச் சிரித்தார். 

“இவனா மறக்கிறவன்? அவன் பெத்ததுகளை மறந்தாலும் உன்னை ஒரு நிமிஷமும் இந்த ராஸ்கல் மறக்கமாட்டான்! உனக்கு ஐவிஎஃப் பண்ணும் போது எத்தனை ட்ராமா போட்டான் தெரியுமா? ஸ்வீட் ராஸ்கல்!” செல்லமாக வைதுவிட்டு லதா அப்பால் போய்விட்டார்.

“சின்னதுங்க ரெண்டும் எங்கம்மா?” 

“அங்கப்பாருங்க.” மனைவி காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான் ஷியாம். கூட்டமாக நர்ஸ்கள் நின்றிருந்தார்கள். இவன் பொடுசுகள் இரண்டும் அவர்களால் மாறி மாறிக் கொஞ்சப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்ன அஞ்சு நடக்குது அங்க?!”

“ஆசையாக் கேட்கும் போது எப்பிடிங்க இல்லைன்னு சொல்றது?”

“அதுவும் சரிதான், வா நாம சாப்பிடலாம்.” பஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டது. தங்களுக்குத் தேவையானதை இருவரும் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்கள். ஷியாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். தன் முயற்சி பலித்தது என்பதைவிட நேற்று அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த அளவுகடந்த ஆனந்தமே அவனது மனதை நிறைத்திருந்தது. பெண் என்றால் தருணின் மனைவி. 

“டாக்டர்!” உணர்வு மிகுதியால் அவள் ஷியாமின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். இவனும் புன்னகைத்துக் கொண்டான்.

“நீங்க டாக்டரில்லை! அதுக்கெல்லாம் மேல! என்னோட…”

“ம்ஹூம்… அப்பிடியெல்லாம் பேசக்கூடாதும்மா, என்னை விட இந்த முயற்சியில ரொம்பவே கஷ்டப்பட்டது நீங்க, ஒவ்வொரு முறையும் எவ்வளவு வலியைத் தாங்கிக்கிட்டீங்கன்னு எனக்குத் தெரியும், அதுக்கெல்லாம் பலனில்லாமப் போயிடுமோன்னுதான் நான் பயப்பிட்டேன், ஆனா ஆண்டவன் கருணைக் காட்டிட்டான்.” ஷியாமும் மிகவும் நெகிழ்ந்து போய் பேசியிருந்தான். நான்காவது தடவை தோல்விகளுக்குப் பிறகு தருணின் மனைவி தாயாகியிருந்தாள். பெண்ணின் வீட்டார் வசதியானவர்கள் என்பதால் பொருட்செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

“இனிமேல்தான் நீங்க ரொம்பக் கவனமா இருக்கணும் ம்மா, பொண்ணை நல்லாப் பார்த்துக்கோங்க.” பெண்ணின் பெற்றோரும் கூட வந்திருந்ததால் அறிவுரைகள் சொல்லி அனுப்பியிருந்தான் ஷியாம். 

“கிளம்பலாமா அஞ்சு?” பட்டுப்புடவை சரசரக்க அருகே நின்றிருந்த மனைவியிடம் கேட்டான் ஷியாம்.

“உங்கப் பொண்ணுங்க ரெண்டையும் முதல்ல அவங்கக் கிட்ட இருந்து வாங்குங்க, அப்புறமாப் போகலாம்.” அந்த ஃபங்ஷனுக்கு வந்ததிலிருந்து குழந்தைகள் அவர்களிடம் தங்கவில்லை. யாராவது ஒருவர் மாறி மாறித் தூக்கிக்கொண்டே இருந்தார்கள். ஷியாமும் மனைவியும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கார் பார்க்கிங்கிற்கு வந்த போது மாலை ஆறு மணி. அப்போதுதான் லேசாக இருள் பரவியிருந்தது. 

“இன்னைக்கு அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் ஃப்ரீயா இருக்கனாம்… அதால… சின்னக் குட்டிங்க ரெண்டு பேரையும் தாத்தா பாட்டி பார்த்துக்குவாங்களாம்…” ராகம் போல ஷியாம் சொல்ல அஞ்சனா சிரித்தாள்.

“அப்போ அப்பா என்னப் பண்ணப் போறாங்களாம்?” இது அஞ்சனா.

“அப்பாக்கும் அம்மாக்கும் வேற வேலை இருக்காம்.”

“அப்பாக்கு இருக்கும் போல, ஆனா அம்மாக்கு அப்பிடியொரு வேலையும் இல்லைப்பா! எம் பொண்ணுங்களோட நான் அவங்க ரூம்ல போய் படுத்துக்கிறேன்.” கண்மணி குழந்தைகளுக்கென ஏற்கனவே திட்டமிட்டபடி தனியாக ஒரு அறையை ஒதுக்கியிருந்தார். அதைத்தான் இப்போது குறிப்பிட்டாள் அஞ்சனா.

“நீ அடிதான் வாங்குவே அஞ்சும்மா! மரியாதையா இவங்களை அம்மாக்கிட்டக் குடுத்துட்டு இன்னைக்கு நைட் நீ எங்கூட இருக்கிறே சொல்லிட்டேன்.”

“ஐயோ! அத்தைக்கிட்ட எப்பிடிங்க இதையெல்லாம் சொல்றது?” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ வர்றே! ஆங்… இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன், இப்போ வீட்டுக்குப் போனதும் அந்த பில்லோ கவர் மாதிரி இருக்கிற ட்ரெஸ்ஸை போட்டா எனக்குக் கெட்ட கோபம் வரும், ஒழுங்காப் பொண்ணு மாதிரி புடவைக் கட்டிக்கிட்டு வரணும்.”

“ஏன்? கொஞ்சம் பூவும் வெச்சுக்கிட்டு முதல் ராத்திரிக்குப் போற பொண்ணு மாதிரி வரட்டுமா?” அவளும் கேலியாகக் கேட்டாள்.

“வாவ்! சூப்பர் ஐடியா அஞ்சு! போகும் போதே வழியில நல்ல குண்டு மல்லி வாங்கிட்டுப் போகலாம்.”

“ஷியாம் நீங்க அடிதான் வாங்கப் போறீங்க!” சிணுங்கிய படி மனைவி கொடுத்த செல்ல அடியைச் சிரித்தபடி ஷியாம் வாங்கிக் கொண்டான். இந்தக் காட்சியை கார் பார்க்கிங்கிற்கு அடுத்ததாக இருந்த பில்டிங்கில் இருந்தபடி இரண்டு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. 

“சிஸ்டர்…” தன்னைக் கடந்து போன நர்ஸை அழைத்தான் அவன்.

“என்ன சார்? எல்லா ரிப்போர்ட்ஸும் அதுல இருக்கே? ஏதாவது மிஸ் ஆகுதா?”

“இல்லையில்லை… அதெல்லாம் கரெக்டா இருக்கு, அவங்க யாரு?” அந்த மனிதனின் கை கார் பார்க்கிங்கை காட்டவும் நர்ஸும் திரும்பிப் பார்த்தாள்.

“அது டாக்டர் ஷியாம், வெரி ஃபேமஸ் டாக்டர், ஏன்? உங்களுக்குத் தெரியாதா?” 

“இல்லை… கூட இருக்கிறது யாரு?” கேள்வி கேட்டவனை ஒரு தினுசாகப் பார்த்தாள் அந்த நர்ஸ்.

“இல்லை… தெரிஞ்சவங்க மாதிரி இருக்காங்க, அதான்…”

“அவங்க டாக்டரோட வைஃப், அஞ்சனா மேடம், அவங்களுக்கு ரெண்டு குட்டிப் பொண்ணுங்க இருக்காங்க.” தகவல் சொல்லிவிட்டு நர்ஸ் போய்விட்டாள். தன் கேஸ் விஷயத்தில் அடிக்கடி வந்து போன அந்த டாக்டர் ஷியாமை பார்க்கும் வாய்ப்பு தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று அப்போது அவனுக்குப் புரிந்தது. வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது தவறு. மறுக்கப்பட்டிருக்கிறது! அதுதான் உண்மை. அம்மா அம்மா என்று இதுநாளும் அலைந்தவன் முதல் முறையாக  தன் இரண்டாவது திருமண விஷயத்தில் அப்பா சொன்னதற்குத் தலை சாய்த்தான். அதற்காக அவன் திருந்திவிட்டான் என்றெல்லாம் அர்த்தமில்லை. இதுவரை அவன் மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் இப்போது லேசாகப் புரிய ஆரம்பித்திருந்தன. தான் இழந்தவற்றின் பெறுமதி புரியத் தொடங்கியிருந்தது. தான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்திருந்ததாக இதுநாள் வரை இறுமார்ந்திருந்த எண்ணம் அவள் வாழும் வாழ்க்கையைத் தன் கண்ணாலேயே பார்த்த போது தகர்ந்தது. கார் பார்க்கிங்கில் இருந்து வந்த அவளின் கலகலவென்ற சிரிப்புச் சத்தத்தில் மனது வலிக்க அங்கேயே சில நொடிகள் நின்றிருந்தான் தருண்.

***

நேரம் இரவு பத்து மணி. வெளியே நன்றாக எல்லோர் கைகளிலும் ஆடிவிட்டு வந்த குழந்தைகள் உறங்கிப் போனார்கள். மகனின் பார்வை மருமகள் பின்னோடே அலைவதை கண்மணி கவனிக்கத் தவறவில்லை.

“அஞ்சனா, சின்னவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு எங்க ரூம்ல தூங்கட்டும்.”

“நைட்ல எந்திருச்சா உங்களுக்குச் சிரமமா இருக்கும் அத்தை.”

“அதெல்லாம் பரவாயில்லை, பசிச்சு அழுதா உன்னை வந்து எழுப்புறேன், நீ போய் தூங்கு.” மாமியார் சொல்லிவிட மருமகளுக்குச் சங்கடமாக இருந்தது. ரூமிற்கு வந்தவள் நேராக குளியலறைக்குள் புகுந்துவிட்டாள். நைட் ட்ரெஸ்ஸை போடாமல் காட்டன் புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். இவளைப் பார்த்ததும் கணவன் விசிலடித்தான். காதில் ‘ஏர்பொட்’ ஐ மாட்டிக்கொண்டு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். 

“பூ எங்க? வெக்கலை?” அவன் கேள்விக்கு முறைப்பே பதிலாக வந்தது. 

“எதுக்குடி முறைக்கிறே?” கேட்டபடியே வெளியே போனவன் ஃப்ரிட்ஜில் இருந்த பூவை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். இப்போதும் முறைத்தபடியே வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள். 

“ஆமா, எதுக்கு இப்போ என்னை முறைச்சுக்கிட்டே இருக்கே?” நகரப் போனவளைக் கேட்டபடி தன்னருகே இழுத்தான்.

“விடுங்க ஷியாம், அத்தை என்ன நினைப்பாங்க? மாமா வேற இருக்காங்க.”

“ஏன்? உங்க அத்தையும் மாமாவும் இதெல்லாம் பண்ணினதே இல்லையா?”

“ஐயோ! என்னப் பேச்சு இது?” 

“எல்லார் வீட்டுலயும் பேசுற பேச்சுத்தான் இது, நீ முதல்ல பக்கத்துல வா.” அவளை அணைத்தவன் அந்தக் கூந்தல் வாசத்தை நுகர்ந்தான். அருகே வந்தவனின் காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அவளுக்கும் கேட்டது.

“என்னப் பாட்டது?” கேட்டபடி அவன் ஒற்றைக் காதில் இருந்ததைக் கழட்டித் தன் காதில் வைத்தாள். 

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது… பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது… பாடல் இனிமையாக ஒலித்தது. அவள் அந்த வரிகளைக் கேட்டுவிட்டாள் என்று தெரிந்ததும் அவன் கண்களில் இன்னும் கொஞ்சம் காதல் பித்தேறியது. அந்தப் பார்வையில் பெண்ணும் ஸ்தம்பித்தது. 

“சிட்டுவேஷன் சாங், ரொம்ப கரெக்டா பொருந்துதில்லை?”

“நீங்க கவிதை சொல்லுவீங்கன்னு பார்த்தா யாரோட பாட்டையோ சொல்லுறீங்க?”

“ஏய்…” அவன் சிரித்தான். பாடல் தொடர்ந்து ஒலித்தது.

சின்னஞ் சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… பாடலை அவனும் கூடச் சேர்ந்து பாடினான். அவன் கரங்கள் இப்போது அவள் வெற்றிடையில் நாட்டியம் ஆடின. 

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்… அவன் கைகள் இப்போது கோடு தாண்டின. 

“ஷியாம்…” பெண் தடுத்ததையோ தவித்ததையோ அவன் கண்டுகொள்ளவில்லை. மேலே மேலே என்று முன்னேறினான். 

“இன்னும் ஒன்னு அஞ்சனா… ஆனா இந்த வாட்டி பையன்!” அவனுள் காதல் பெருகும் போதெல்லாம் அவள் பெயர் முழுதாகக் கிறங்கிய குரலில் வரும்!

“ஐயையோ! உங்கப் பொண்ணுங்களுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை டாக்டரே!”

“அப்போ ஒரு வயசுக்கப்புறம் ஓகேவா?”

“ம்…” அவள் தயங்கியபடி தலையாட்டினாள். அவள் பாவனையில் சிரித்தவன் அவள் பின்னலை வருடினான்.

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்…

“ஆடடா! நான் குண்டு மல்லி வாங்கிட்டேனே! பிச்சிப்பூ இல்லை வாங்கியிருக்கணும்!”

“இது ரொம்ப முக்கியம் இப்போ!” 

“இதைவிட வேற எது முக்கியம் கண்ணம்மா?” அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்தான்.

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்… இந்த வரிகளையும் அவன் பாட பாடிய வாயை மூடினாள் பெண். கண்கள் அவனை எச்சரித்தன.

“ஏன்? நான் பித்தன்தானே?”

“உஷ்! என்ன வார்த்தை ஷியாம் இது?” கேட்டவளோடு நிலத்தில் சரிந்தான் ஷியாம். 

“உன்னைப் பார்த்த நொடி பிடிச்ச பித்து இது! என்னோட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இந்தப் பித்து எனக்குள்ள இருக்கும் அஞ்சனா!”

“ஷியாம்!” பெண் விறைத்துப் போனது.

“இந்தப் பித்தனோட சேர்ந்து நீயும் ஒரு நர்த்தனம் ஆடு அஞ்சனா!” அவன் உளற ஆரம்பித்திருந்தான். முகம் சிவந்தவள் அவன் மார்புக்குள் ஒளிந்து கொண்டாள்.

“பொண்ணே, இன்னைக்குத் தைரியம் இருந்தா எங்கே சொல்லுப் பார்ப்போம்? இந்த டீ ஷர்ட் உனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா?” அவன் வேண்டுமென்றே அவளைச் சீண்டினான். முன்பொரு முறை அம்மா வீட்டில் வைத்து அவள் சொன்னது இருவருக்கும் ஞாபகம் இருந்தது.

“பிடிக்கலை!” சிரித்தபடி சொன்னாள் அஞ்சனா.

“அடிங்!” அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவனின் ஆடை எங்கோப் பறந்தது. அந்த வெற்று மார்பில் இதமாகத் தன் முகத்தைப் பெண் புதைத்துக் கொண்டாள். 

“பார்றா! வெட்கப்படுவான்னு பார்த்தா இவ ரசிக்கிறா!”

“நீங்கதானே ஷியாம் இப்போ என்னையும் நர்த்தனம் ஆடச் சொன்னீங்க?”

“ஓஹோ! அப்போ மேடம் ஆட ரெடியா?”

“நீங்க முதல்ல ஆடுங்க, உங்க ஆட்டம் பார்த்து நானும் கத்துக்கிறேன்.” 

“அப்போ நம்ம பர்ஃபோமன்ஸை இன்னைக்குக் காட்டிட வேண்டியதுதான்.” அதன் பிறகு கணவன் அடித்த கூத்தில் அஞ்சனா ஓய்ந்து போனாள். தடுக்கத் தடுக்க அவன் வேகம் கூடிக்கொண்டே போனது. கட்டுக்குள் அடங்காத காவேரி இதுவெனப் புரிந்த போது பெண் மௌனமாகிவிட்டது. நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன. உறவு இனித்துக் கொண்டிருந்தது. இளமை களைத்துப் போயிருந்தது. போதும் போதும் என்னும் மட்டும் ஆடித்தீர்த்தவன் தன் பன்னிரெண்டு வருடக் காத்திருப்பிற்கு நியாயம் செய்தான்.

காதல் தந்தவள். காத்திருக்க வைத்தவள். இப்போது களைத்துக் கிடந்தாள். காமம் தீர்ந்திருந்தது. மீண்டும் காதல் பூத்துக் குலுங்கியது. பூக்குவியலாய் தரையில் கிடந்தவளை அள்ளிக் கட்டிலில் கிடத்தினான் கணவன். நெற்றி வருடி முத்தம் வைத்தான். தலை கோதிக் கொடுத்தான். இப்போது கண்கள் மாத்திரமே பேசிக்கொண்டன. விரல்கள் கோர்த்துக் கொண்டன.

அவளால் கவிதை பாடியவன். அவளுக்காகக் கவிதை பாடியவன். அவளோடு கவிதை போல ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தான். காலம் அவர்களுக்காக நீண்டு கிடந்தது.

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது…

பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது…