அத்தியாயம் – 7
வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருக்க குருவிகள் அனைத்தும் சிறகடித்து வானில் சிறகடித்து பறப்பதை ஒருவிதமான மன நிறையுடன் கண்டவளின் மனதில் ஏனோவொரு தடுமாற்றம். இதுதான் அந்த உணர்வென்று வரையறுத்து கூற முடியவில்லை.
அந்த சிந்தனையுடன் அவள் வழமைபோல கேம்பஸ் கிளம்பிய மகளிடம், “இன்று வகுப்புக்கு லீவ் போட்டுவிடும் நிலா” என்றவரை அவள் கேள்வியாக நோக்கினாள். இத்தனை நாட்களில் மல்லிகா அவளிடம் இப்படி கதைத்ததில்லை.
“உனக்கு வயதாகிறது நிலா. இரண்டு பெண்கள் போராடி வளர்த்த வளர்ப்பில் பிழை நிகழ்ந்து விடுமோ எண்டு ஒவ்வொரு முறையும் என்ர மனம் பதை பதைக்கிறது. இன்றோடு இதற்கொரு முற்றுபுள்ளி வைத்துவிட விரும்புகிறன்” என்றார் அவர் தெளிவான குரலில்.
தாய் பேசும் வரையில் அமைதியாக இருந்தவளோ, “இப்போது எங்கே சென்று யாரைக் காண வேண்டும் எண்டும் சொல்லுங்கோவன்” என்றாள் குரலில் எரிச்சலை மறைத்தபடி.
அவள் கையில் போட்டோவை கொடுத்து, “இவண்ட பெயர் சுதர்சன். இவரின் குடும்பம் யாழ்பாணத்தில் இருக்கிறது. பெடியன் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்கிறன். நல்ல பெடியன் நல்ல குடும்பம். நீ பார்த்து சரியென்றால் அடுத்த மாதமே திருமணம்” என்றார் தாய் ஒருவிதமான வேகத்தோடு.
என்னதான் பிள்ளைகளின் வளர்ப்பில் தாயின் பங்கு வேண்டும் என்று சொல்லும் இதே சமூகம் சில நேரத்தில் அவளுடைய வளர்ப்பை தவறு சொல்லும் பொழுது அவளும் ஒரு முறை வாழ்வில் தோற்றுத்தான் போகிறாள்.
தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காக அனைத்தையும் மறந்து மனதோடு மறைத்துவிட்டு என்று இன்று வரை புன்னகை முகமாக வளம்வரும் தாய்க்கு அவள் என்ன செய்துவிட போகிறள்?
“அதனால் என்னம்மா நான் போய் கதைக்கிறேன். எனக்கு பிடிக்கவில்லை எண்டால் என்னை கட்டாயம் படுத்தாதீர்” என்றாள் மகள் மெல்லிய குரல் என்றபோதும் தெளிவாக கதைத்தாள்.
அவளின் தலையை பாசத்துடன் வருடியவர், “நீதான் எண்ட கனவே. உனக்காக தானே நான் இன்றும் புன்னகையுடன் வலம் வருகிறன். உண்ட விருப்பம் இல்லாது நான் எதையும் செய்ய மாட்டன்” என்றார்.
அவரின் குரலில் இருந்த உறுதியே மகளுக்கு நிம்மதியை கொடுத்தது.
இருவரின் இடையே பேச்சு வார்த்தை நிகழ்வதை கவனித்த கீதாவோ, ‘இவளுக்கு பிறந்தவன் யாரென்று என் மகள் முடிவெடுக்கிறாள். ஆனால் அவளுக்கென்று பிறந்தவன் இந்த புகைப்படத்தில் இருப்பவன் அல்லவே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
அவரை பொறுத்தவரை மறுஜென்மத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாது இருந்தது பேத்தியின் பருவத் தோற்றம் காணும் வரை. ஆனால் இன்றோ அவரும் இது அவளிண்ட மறு ஜென்மம் என்றே நம்புகிறார்.
ஒருநாள் வழமைபோல மாலை கோவிலுக்கு சென்றபோது அங்கே கிட்டதட்ட முகிலனின் தோற்றத்தில் ஒரு பெடியனை காண நேர்ந்தது. அந்த பெடியன் சிலநொடியில் அவரின் கண்ணில் மண்ணைத் தூவியது போல மறைந்துவிட்டான்.
அன்றே கீதாவிற்குள் ஒரு தடுமாற்றம். அவர் வேண்டும் என்றால் மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் மறு ஜனனம் அன்றே முடிவான ஒன்று என்று தெளிவாக உணர்ந்தார்.
அவர்களாக சந்திக்கும் வாய்ப்பு அமையும் வரை நிகழ்ந்த எதுவும் அவர்களிடம் கதைக்க வேண்டாம் என்று மேகாவின் நினைவுகளை மனதோரம் ஒதுக்கினார்.
அவர் சிந்தனையுடன் கதிரையில் அமர்ந்திருக்க பேத்தியோ கெதியாக கிளம்பி அவரின் அருகே வந்து, “அம்மாம்மா நான் போய்ட்டு வாறன்” என்றாள் அவரின் கன்னத்தை தட்டியபடி.
அவளின் விரல் ஸ்பரிசத்தில் நடப்பிற்கு திரும்பியவரின் கண்களில் விழுந்தது அந்த மோதிரம். கேம்பஸில் யாரோ ஒருவர் மோதிரத்தை தொலைத்துவிட அது என்னிடம் கிடைத்தது என்று வந்த பேத்தியின் நினைவு வரவே, “உன் கைவிரலில் இருக்கும் மோதிரம் நினைவிருக்கிறதோ? யாருக்கோ கொடுக்க வாங்கியது அதை கொடுக்க சரியான நபர் அமையவில்லை என்றாயே. அதை இன்று சந்திக்கும் பெடியனிடம் கொடுத்துவிடு” என்றார்.
அவள் இடது கைகளில் பார்க்க ஒரு விரலில் அவள் வாங்கிய மோதிரம். ஒரு இதயம் மட்டும் இருக்க அதை யாரிடம் கொடுக்க என்ற சிந்தனையில் நின்றிருந்தாள். அதே நேரத்தில் மற்றொரு விரலில் ஒரு கொடியில் இரண்டு இதயம் பின்னி பிணைந்திருந்தது.
அதைப் பார்த்தும் அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது. அதற்கான காரணம் என்னவென்று அவள் அறியாள்.
அவர்களைப் பார்த்துவிட்டு மல்லிகா விலகிச் செல்ல அம்மம்மாவின் அருகில் அமர்ந்தவளோ, “அம்மம்மா இந்த மோதிரம் நான் அவனிடம் கொடுக்க மாட்டன். இந்த மோதிரம் யாருக்கோ காத்திருக்கு. அதேநேரத்தில் இம்மோதிரம் தொலைத்தவரிடம் சேர்ப்பதே நம் கடமை” என்றவள் பட்டென்று எழுந்து சென்றாள்.
“அந்த மோதிரத்தை தொலைத்தவன் அவனாகவே வந்தால் கொடுப்பேன் என்றாய். அதை மறந்துவிடாமல் அவனிடம் பத்திரமாக சேர்த்துவிட்டு வீடு வாரும்” என்றார் குரலில் கேலியுடன்.
அவள் புன்னகைத்துவிட்டு அவருக்கு ஒரு பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள். அங்கே தாய் சொன்ன நபரை எதிர்ப்பார்த்து அவள் காத்திருக்க அங்கே அப்படி யாரும் வரவில்லை. நேரம் கடந்து சென்றது.
அன்று வழக்கத்திற்கு மாறாக கேம்பஸ் செல்லாமல் அவனுடைய பள்ளி நண்பர்களுடன் அவன் உள்ளே நுழைய அவனை பார்த்துவிட்டு கோபத்துடன் முகத்தை திருப்பினாள்.
அவனும் அவனோ அவளுக்கு முன்னே இருந்த டேபிளில் சென்று அவளை பார்த்தபடி கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தான். அவனின் பார்வை இவளின் மீது நிலைத்தபோதும் நண்பர்களுடன் கதைப்பதை நிறுத்தவில்லை அவன்.
அவனை பொறுத்தவரை மழை நிலாவை அவன் தனியாக கண்டதில்லை. எந்தநேரமும் தாயோ இல்லை அவளின் அம்மம்மாவும் உடன் இருப்பர். இன்று எல்லாம் வழமைக்கு மாறாக நடக்க அவனுக்குள் சந்தேகம் எழுந்தது.
அவன் நண்பனோடு பேசிவிட்டு கோப்பியை குடித்துவிட்டு அவர்களோடு இணைந்து வெளியே செல்லும் வரைகூட அவள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நபர் மட்டும் வரவில்லை.
‘இன்னும் வரவில்லை’ அவளோ எரிச்சலோடு யன்னலின் வழியாக பார்க்க எழிலன் மட்டும் நண்பர்களை அனுப்பிவிட்டு அங்கிருந்த ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸ் உள்ளே நுழைவது இவளின் விழிகளில் விழுந்தது.
அவன் மீண்டும் வெளியே வரும்போது அவனின் கையில் சில பொருட்கள் இருப்பதை கவனித்தாள். அவளின் பொறுமை எல்லை கடக்க எரிச்சலோடு சேர்த்து கோபம் வந்துவிட அவளின் மனம் திடீரென்று படபடவென்று அடித்துக் கொண்டது.
அவளின் மனநிலையை அவளால் கணிக்க முடியவில்லை. முகம் முத்து முத்தாக வேர்த்துவிட அவளின் ஆழ்மனதில், ‘ம்ம் கண்ணீர் விட்டு அழு. நீ நினைத்தது உனக்கு கிடைக்கவில்லை. ம்ம் அழு’ என்று கட்டளையிட அவளுக்கு கத்தி அழவேண்டும் என்ற எண்ணம் அவளிண்ட மனதில் வேர் ஊன்றியது.
அந்த நேரத்தில் அவளின் எதிரே வந்து அமர்ந்தவனை கண்டு அவளையும் அறியாமல் அவளின் கண்கள் கலங்கிவிட, “மழைநிலா நம்ம இருக்கும் இடம் தெரியும் அல்லவா. நீ கண் கலங்குவதை யாரேனும் கண்டுவிட்டால் என்னை தவறாக நினைப்பர்” என்றான் குரலில் கண்டிப்புடன்.
அவளோ கலங்கிய விழிகளை துடைக்காமல், “எனக்கு ஏன் எண்டே தெரியல. கத்தி அழனும் போல தோன்றுகிறது. இந்த நிகழ்வெல்லாம் முதலில் நடந்து போலவொரு பிரம்மை. என்னை ஒருத்தன் வேண்டாம் என்று தூக்கி எரிந்தது போல ஒரு எண்ணம்” என்றாள் அவள் மனதை மறைக்காமல்.
அவனோ அவளை இமைக்காமல் நோக்க அவளின் கண்கள் கலங்குவதை கண்டதும் அவனின் கைகள் அவனின் கட்டளையை மீறி அவளின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டான். அவளின் வதனத்தில் கண்ணீர் கோடுகள் வெளிப்படையாக தெரிய அவனின் மனம் வலித்தது.
அவள் திகைப்புடன் அவனை பார்க்க, “வாரம் ஒரு மாப்பிள்ளை பார்த்தால் நடப்பதனைத்தும் முதலில் நிகழ்ந்து போலத்தான் தோன்றும்” என்றான் அவளை கேலி செய்யும் குரலில்.
அவனின் முகமோ அதற்கு எதிர்மறையாக வருத்தம் காட்டுவதை உணர்ந்து அவனையே கண்டவளுக்கு உள்ளுக்குள் ஏதோவொரு சந்தோஷம் அலைபோல ஊரெடுத்தது.
“இல்லை எனக்கு பார்த்த முதல் மாப்பிள்ளை இவர்தான். ஏனோ என்னை வர சொல்லிவிட்டு அந்த பெடியன் வரவில்லை” அவள் கோபத்துடன் கதைக்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“என்ன முதல் மாப்பிள்ளையா? அப்போ இந்த மாதிரி முதலில் நிகழ்ந்து போல தோன்றுகிறது எண்டு நீ கதைப்பது உன்னிண்ட முதல் ஜென்மமோ” என்றவன் கேலியுடன் புருவம் உயர்த்த அவனை முறைக்க முயன்று தோற்று கலகலவென்று சிரித்தாள்.
அவன் அவளின் மலர்ந்த வதனத்தின் மீது பார்வையை பதிக்க, “இருக்கலாம். யார் கண்டது. எனக்கு தெரிந்து இவன்தான் முதல் மாப்பிள்ளை. அப்படியிருக்க முதலில் இந்த மாதிரி நிகழ்ந்த எண்ணம் என் மனதில் வருகிறது எண்டால் அது நிச்சயம் முதல் ஜென்மமாக இருக்கத்தான் வேண்டும்” என்றவளின் உள்ளத்தில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.
“ஓம் அப்போ முதல் ஜென்மத்தில் உன் பெயர் மேகவர்ஷினியா?” என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்திட, “அப்போ உங்க பெயர் கார்முகிலனோ” என்று அவளும் கிண்டலோடு கேட்டாள்.
சில கணம் அங்கே அமைதி நிலவ ஒருவரையொருவர் பார்க்க தங்களை மீறி சட்டென்று சிரித்துவிட்டனர். அப்போதுதான் அவன் தன்னிடம் கோபம் கட்டாமல் தனக்கு ஒரு பாதுக்காப்பு கொடுப்பது போல வந்திருக்கிறான் என்ற உண்மை உணர்ந்தாள்.
“ஸாரி நான் வேண்டும் என்றே அன்று உங்களோடு கதைக்கவில்லை. வம்பளக்க எண்ணமும் எங்கில்லை..” அவள் தலையைக்குனிந்து மெல்லிய குரலில் உரைக்க, “ம்ம் எனக்கும் தெரியும்” என்றான் அவன் புன்முறுவலோடு.
அதன்பிறகு இருவரும் இயல்பாக கதைக்க தொடங்கிய சமயத்தில் அவனுக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர கண்டு, “ஒரு கணம்” எழுந்து வெளியே சென்றான்.
அவன் மீண்டும் வரும்போது அவனிண்ட கைகளில் ஒரு ரோஜா போக்கே, ஒரு கிப்ட் பேக் அதோடு சேர்ந்து சாக்லேட் இருக்க இவளோ சந்தேகமாக அவனை பார்த்தாள். என்னதான் சிந்தித்தபோதும் மூன்றும் எதற்கு என்ற கேள்வி அவளின் மனதில் தோன்றியது.
அவளின் எதிரே வந்து அமர்ந்தவனோ, “இந்த இந்த மூன்றும் உனக்கென்று வாங்கிட்டு வந்தனன்” என்று அவளின் கையில் கொடுக்க திகைப்பும் தவிப்புமாக அவன் கைகளில் இருந்து மூன்றையும் வாங்கியவள், “நீங்கதான் எனக்கு பார்த்த மாப்பிள்ளையா?” என்று கேட்டாள்
அவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு, “உனக்கு அப்படி தோன்றுகிறதோ” என்றான் அழுத்தமாக அவளை நோக்கியபடி. அவளிடம் பதில் இல்லை.
அவள் சிந்தனையோடு அனைத்தையும் பார்த்துவிட்டு அவன் கொடுத்த கிப்ட் பேக்கை பிரித்து பார்க்க அது ஒரு கண்ணாடி பொம்மை. சின்ன பொம்மை என்ற போதும் ரொம்பவே நுட்பமாக அந்த சிலையை வடிவமைத்து வைத்திருந்தனர்.
அவள் மெல்ல அதை வருடிவிட்டு அவனை நிமிர்ந்து நோக்கிட இரண்டு கரங்களையும் கோர்த்து அதில் தன் தாடையை பதித்து அவளையே பார்த்தவன், “வாழ்க்கை இன்னும் மூன்றும்தான்” என்றவனை அவள் புரியாத பார்வை பார்த்தாள்.
“சில நேரத்தில் உனக்கு தித்திக்கும் சம்பவங்கள் நடக்கும் அதுக்கு சாக்லேட். பல நேரங்களில் மற்றவர்களுக்காக நாம் சுயநலம் இல்லாமல் புன்னகைக்க பழக வேண்டும் இந்த மலர்களை போல. அந்த கண்ணாடி பொம்மை நீதான்.” என்றபோது அவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள்.
அவளின் அதிர்ச்சி பார்வை அவனின் தெளிந்த மனதில் கல்லை எறிந்தது. அந்த பார்வையை கண்டதும் மனதளவில் திடுக்கிட்டுப்போனேன் எழிலன்.,
“இந்த பார்வை” அவன் வாய்விட்டு உளற, “என்ன” அவள் பொறுமை இல்லாமல் கேட்க அப்போதுதான் அவனின் மனம் நடப்பிற்கு திரும்பியது.
அவளின் பார்வையை எதிர்கொண்டவனோ, “நீ மற்றவர்களின் கண்களுக்கு குறிப்பாக மாப்பிள்ளை எண்டு வருபவன் முன்னே கண்ணாடி பொம்மைதான்..” என்றபோது அவள் புரியாமல் திருதிருவென்று விழித்தாள்.
அந்த பார்வை கண்டு அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட, “இவளும் நம்மை போல ஒரு மனுஷி தான் என்று நினைக்கிறாரோ? யார் உன்னை சுவாசம் உள்ள பெண் எண்டு உணர்ந்து உன்னை நேசித்து கரம்பிடிக்க நினைக்கிறானோ அவனின் முன்னே இந்த சிலையை போட்டு உடைத்துவிட்டு நீ அவரோடு இணைந்துவிடும்” என்றவன் எழுந்து சென்றான்.
இதுவரை வாழ்க்கையின் ஒரு புள்ளியை வைத்து குழப்பத்தில் துடிப்பவளுக்கு இன்று ஒரு விடயம் தெளிவாக விளங்கியது. தன் நம்பிக்கை பாத்திரமானவன் இவனென்ற உண்மை உணர்ந்த மறுகணமே வேகமாக வாசலுக்கு விரைந்தாள்.
அங்கே அவன் பைக்கை இடைமறுத்து நின்றவளை கேள்வியாக நோக்குவது இப்போது இவனுடைய முறையானது.
“இந்த கண்ணாடி பொம்மையை நான் உடைக்க போவதில்லை..” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவள் தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை வேகமாக கழட்டி அவனின் கண்முன்னே காட்டி,
“இந்த மோதிரத்தை யாருக்கோ கொடுக்கவேண்டும் எண்டு விருப்பத்துடன் வாங்கியது. ஆனால் இந்த மோதிரத்தைக் கொடுக்க நல்ல நபர் யாரையும் நான் காணவில்லை. ஒரு வேளை தகுதி இல்லாத நபரிடம் கொடுத்துவிடுவேனோ என்ற பயத்தில் நான் பலநாள் தூங்காமல் இருந்தேன்..” என்றவள் அவனின் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்.
அவளின் வதனம் தானாக செவ்வரி ஓடிட, “இப்போது இதை உன்னிடம் கொடுப்பது நலம் என்று தோன்றுகிறது” என்றவள் கண்ணிமைக்கும் நொடியில் அவனின் விரலில் மோதிரத்தை அணிவித்துவிட்டு விலகிச் சென்றாள்.
அப்போதுதான் திகைப்பில் இருந்து மீண்ட எழிலரசன், “ஏய் நிலா இந்த மோதிரத்தை பற்றி உன்னுடைய வீட்டில் கேட்டால் என்ன சொல்வாய்” என்று அவன் கேட்டான்.
சிறிதுதூரம் சென்று திரும்பிய மழைநிலா, “இந்த மோதிரத்தை கொடுத்தவனிடம் என் மனதையும் ஒப்படைத்துவிட்டேன் எண்டு கூறுவேன்” என்றவள் அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றபின்னர் அவள் அணிவித்த மோதிரத்தை பார்த்த எழிலரசன் இனிமையாக அதிர்ந்தான். இரு இதயங்கள் இணைந்த மோதிரம் அவனின் வருங்கால மனைவிக்கு எண்டு அவன் வாங்கியது.
அது அவளின் கையில் எப்படி என்றவன் சிந்தனையுடன் நின்றிருக்கும் போதே ஹாரனின் சத்தம் காதைப் பிளக்க அவன் நிமிர்ந்து பார்க்க அங்கே புன்னகை முகமாக நின்றிந்தாள். அவன் மோதிரத்தை காட்டி, ‘இது எப்படி உன்னிடம்’ என்றான் பார்வையால்.
அப்போதுதான் மோதிரத்தை மாறியதை கவனித்துவிட்டு, “அது உங்களிடம் கொடுக்க நினைத்த மோதிரம் இல்லை. அது வேறொரு நபருக்கு சொந்தமானது” என்று அவனின் கையிலிருந்து மோதிரத்தை பறித்துவிட்டாள்.
அவன் திகைப்புடன் நோக்கும்போது அவளின் கையில் இருந்த ஒற்றை இதயம் உடைய மோதிரத்தை அவனிடம் கொடுத்து புன்முறுவளோடு நோக்கிட, “அந்த மோதிரம் கூட சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்துள்ளது” என்றான். அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தாள்.
தெளிந்த நீரோடைபோல இருந்த அவனின் மனதில் சலனத்தை ஏற்படுத்தினாள் மழைநிலா.
“நான் சொன்னது புரிந்ததா?” அவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “நீ வீட்டிற்கு போவன். நான் கெதியா வருகிறேன் உன்னை பெண்கேட்டு மணம்முடிக்க..” என்றான் உறுதியான குரலில்.
இருவரின் உதட்டிலும் புன்னகை நிலையாகிவிட இருவரையும் அதிர்ச்சியோடு நோக்கியது இரு ஜோடி கண்கள்.