Sontham – 1

Sontham – 1

கருவில் உருவான சொந்தமிது

அத்தியாயம் – 1

பனிபடர்ந்த ஓடை அமைதியாகத் தன்வழி செல்ல, அதைச் சுற்றிலும் இருந்த பசுமையான மரங்களும், பறவைகளின் கூட்டமும் என்று திரும்பும் திசை எங்கிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது கொடைக்கானல். இயற்கை மொத்த எழிலையும் குத்தகைக்கு எடுத்திருந்தது.

அன்பு இல்லம் என்ற அந்த அனாதை இல்லத்தில் அன்புக்கு மட்டும் பஞ்சமே இல்லை. எழில் கொஞ்சும் இயற்கையுடன் இணைந்த அந்த இல்லத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கின்றனர். அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பாதுக்காப்பாக இருக்கிறது.

காலையில் பொழுது விடியும் முன்னரே எழுந்து குளித்துவிட்டு பள்ளிக்குக் கிளம்பிய எஸ்தரின் மனமோ, ‘இன்னைக்கு என்ன புத்தகத்தை தூக்கிட்டு வந்து மனுஷனை என்ன பாடுபடுத்த போறாளோ’ என்ற எண்ணத்தில் கண்ணாடி முன்னே நின்றிருந்தாள் பள்ளி சீருடையில்.

“என்னம்மா ஸ்கூல் கிளம்பிட்ட போல” என்ற குணசேகரனின் குரல்கேட்டு மகள் புன்னகையைப் பதிலாக கொடுக்க வாசலில் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம்கேட்டு அறையிலிருந்து வாசலை எட்டிப் பார்த்தார்.

தமயந்தி மற்றும் தனலட்சுமி இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“உன்னோட தோழிகள் இருவரும் வந்தாச்சு” என்று மகளிடம் கிண்டலாக கூறியவர், “வாங்க இருவரும் சாப்பிட்டுவிட்டு போலாம்” என்றார்.

“அப்பா இப்போதான் நம்ம ஆசரமத்தில் சாப்பிட்டு வரோம்” என்றனர் இருவரும் ஒரே குரலில்.

அவர்கள் இருவரையும் சந்தேகமாக பார்த்தவர், “யாரு நீங்க இருவரும் ஆசரமத்தில் சாப்பிட்டுட்டு வந்துட்டீங்க” அவரின் பார்வை கடிக்காரத்தை தொட்டு மீண்டது. ‘இன்னைக்கும் அப்பாகிட்ட வசமாக மாட்டிகிட்டோம்’ இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறியபடி நின்றிருந்தனர்.

ஆனால் தமயந்தி தான் எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் பெண் ஆயிற்றே.

“இல்ல அப்பா காலை சீக்கிரம் நம்ம ஜோதி அக்கா சமையல் பண்ணிட்டாங்க” என்றாள் அவள் சமாளிக்க, அவரோ மணி இன்னும் எட்டு கூட ஆகாத நிலையில் இருவரும் சொல்லும் பொய்யை நம்ப மறுத்தவர், “எஸ்தர் நீயும் வாம்மா” அவர் சமையலறைக்குள் புகுந்தார்.

“நீ அப்பாவிடம் திட்டு வாங்காமல் அமைதியா இருக்க மாட்டடி” திட்டியபடியே எஸ்தரின் அறைக்குள் நுழைய அவள் தோழிகள் இருவரையும் முறைக்க தமயந்தி மெல்ல தன் கையிலிருந்த கதை புத்தகத்தை எஸ்தரின் பேக்கில் வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல நின்றிருந்தாள்.

அவளின் திருட்டு வேலையை கவனித்த தனம் தலையிலடித்துக்கொண்டு, “எஸ்தர் இன்னைக்கும் நம்ம கிளாசில் நல்ல மாட்டிகிட்டு முழிக்க போறோம்” என்று சொல்லும்போது மீண்டும் குணசேகரனின் குரல் கேட்டது.

அதன்பிறகு தோழிகள் மூவரும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு ஸ்கூலிற்கு சைக்கிள் கிளம்பினர். அவர்கள் மூவரும் செல்வதை கவனித்தவர் தன்னுடைய மற்ற வேலைகளை கவனிக்க சென்றார். அவர் இராணுவத்தில் இருந்து வந்ததும் அவரின் மனைவி இறந்துவிட மகளை வளர்த்து ஆளாக்கினார். கடைசியாக மனைவியின் நினைவாக அன்பு இல்லம் தொடங்கினார்.

அனாதை இல்லத்தினை தன்னால் முடிந்த வரையில் எந்த குறையும் இல்லாமல் நடத்தி வருகிறார் குணசேகரன். அவர் ராணுவத்தில் இருந்து வந்தபிறகு அவரின் மனதிற்கு அமைதியைக் கொடுத்தது அந்த இல்லம். என்னவோ இந்த குழந்தைகளின் முகத்தில் தோன்றும் அந்த புன்னகை தான் அவரை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 

எஸ்தருக்கு குணசேகரன் இருக்க, தமயந்திக்கு அன்பு இல்லம் தான் எல்லாம். தனத்திற்கு தாய் இருக்க அவர்கள் மூவரையும் இணைத்தது பள்ளிக்கூடம்.

அவர்களுக்கு மலைபாதையில் சைக்கிளில் என்ன மிகவும் பிடிக்கும் மூவரும் போட்டிபோட்டுக் கொண்டு வேகமாக செல்ல ஒரு திருப்பத்தில் அவனும், அவனின் தோழனும் சைக்கிளில் அவர்களோடு வந்து இணைந்தான்.

அவனுக்கு இணையான வேகத்தில் வந்தவன், “என்னடா சிட்டுகள் மூன்றும் கண்டுக்காமல் போகுது” என்று சத்தமாக கேட்டு எஸ்தரின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டான்.

“காலைபொழுது விடிந்தா போதும் வந்துவிடுது வானரம் இரண்டும்” என்று தமயந்தி கொஞ்சம் சத்தமாக முணுமுணுக்க அது தாமோதரனின் காதில் தெளிவாக விழுந்தது.

“என்னடா பண்றது காலையில் உன்னை பார்க்காட்டி இந்த வாரனத்துக்கு நைட் தூக்கம் வர மாட்டிங்கிறதே” அவன் பெருமூச்சுடன் அவளின் மீது பார்வையை படரவிட்டான்.

“உனக்கு தூக்கம் வராமல் இருந்தா அதுக்கு நான் என்னடி பண்றது” அவளும் தனத்தை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க ராஜேந்திரனின் பார்வை எஸ்தரின் மீது பதித்து மீண்டது.

எஸ்தரும் தனமும் யாருக்கோ வந்த விருந்து என்பது போல சாலையில் கவனமாக வர, “ஏன் நீங்க மட்டும் பேசறீங்க? உங்க உயிர்தோழி பேச மாட்டாங்களோ” என்றவனின் குரல்கேட்டு திரும்பிய எஸ்தர் அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

‘இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல’ என்ற எண்ணம் அவனின் மனதில் நினைக்க, “ரோட்டில் போறதுக கூட என் தோழிவென சரிக்கு சரி வாயடிப்பா நான் அந்த மாதிரி இல்ல” என்றவள் உள்ளர்த்தத்துடன் சொல்ல தாமோதரனின் பார்வை நண்பனின் மீது கேள்வியாக படித்தது.

அவனோ கோபத்துடன் எஸ்தரின் முகம் பார்க்க அவளோ ஒரு திருப்பத்தில் தங்கள் பள்ளியை நோக்கி சைக்கிளைத் திருப்பிவிட அதன் எதிர்புறம் திரும்பினர் தோழர்கள் இருவரும்.

வழக்கம்போல வகுப்புக்குள் நுழைந்தும் எஸ்தரின் பேக்கை எடுத்து தனக்கு தேவையான கதை புத்தகத்தை வாசிக்க அம்ர்ந்தவளைப் பார்த்து, “இதெல்லாம் திருந்தவே திருந்தது” என்றபோது வகுப்புகள் தொடங்கியது

தமயந்தி ஒரு புத்தகப்புழு. அவளுக்கு கிளாஸில் படிக்கும் புத்தகம் பாடப்புத்தகம் என்று சொல்ல எனக்கும் ஆசைதான். என்ன அவளை அப்படி சொல்ல முடியாது. அவளோட பேக்கில் பாடப்புத்தகத்தைவிட கதை புத்தகம்தான் அதிகம்.

அவ்வளவு தீவிரமாக வகுப்பில் கணக்குபாடம் நடந்துக் கொண்டிருக்க அதையெல்லாம் கவனிக்காமல் தூக்கத்தில் தூங்கி வழிந்த தனத்தைத் தலையில் நறுகென்று கொட்டி எழுப்பிவிட்டாள் எஸ்தர்.

 “என்னடி..” என்று அரைத்தூக்கத்தில் கேட்டவளிடம், “அடியே கதையில் கதாநாயகன் வந்துடாண்டி” என்று தீவிரமான முகபாவனையுடன் கூறிய தமயந்தியைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட தனமோ, “இதை சொல்லத்தான் என்னை அடிச்சு எழுப்பிவிட்டாயா?” என்று எரிந்து விழுந்தவள் மீண்டும் டெஸ்கில் படுத்தாள்

இருவரையும் பார்த்த எஸ்தர் தன்னுடைய வேலையை சரியாக செய்ய, “எஸ்தர் இவள பாரு. இந்த மிஸ் கிளாஸ் எடுத்தாதான் எனக்கு தூக்கம் நல்ல வருது. போன ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக பிறந்திருப்பாங்க போல எஸ்தர். எவ்வளவு அருமையாக தாலாட்டு படறாங்க தெரியுமா.. அவங்க தாலாட்டின் சுகமே தனி” என்று சொல்லிக் கொண்டே கணக்கு புத்தகத்தைத் தேடியேடுத்தாள்.

மொத்த தூக்கமும் களைந்துவிட, “என்னை அடிச்சு எழுப்பி என் தூக்கத்தைகே கெடுத்துட்டா” என்று கொட்டாவி விட்டபடி உட்கார்ந்திருக்கும் தனத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் எஸ்தர்.

 கடைசி டெஸ்கில் உட்கார்ந்து இவர்கள் பண்ணும் சேட்டையில் முன்னாடி இருந்தவர்கள் சத்தம்கேட்டு திரும்பிப் பார்க்க, “இங்க என்னடி பார்வைஅங்கே கவனிங்க” மெல்லிய குரலில் எஸ்தர் மிரட்டிட நமக்கு என்ன வந்தது என்று அவர்கள் திரும்பிக் கொண்டனர்.

அவர்களின் கணக்கு டீச்சர் நிர்மலா தீவிரமாக பாடம் நடத்த போர்டை பார்த்த தனம் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட, “என்னடி ஆச்சு?” என்று எஸ்தர் தலையைக் குனிந்து எழும் பாவனையுடன் கேட்டாள்.

 “மேம் போர்டை ரப் பண்ண போறாங்கடி..” என்று பல்லைக் கடித்தாள். இவர்கள் இருவரின் பேச்சுக்குரல் கேட்டுத் திரும்பிய ஆசிரியர் எஸ்தரைப் பார்த்துவிட்டார்.

“எஸ்தர் அங்க உங்களுக்குள் என்ன பேச்சு?” என்று கேட்க தனத்தையும், தமயந்தியையும் பார்த்து முறைத்தபடியே எழுந்து நின்றாள் எஸ்தர். தமயந்தி கதை புத்தகத்தில் இருந்த மீண்டவள் எழுந்து நின்ற எஸ்தரைக் கேள்வியாகப் பார்த்தாள்.

தனத்தைப் பார்த்து அவள் சைகை செய்ய, “மிஸ் அவள் பேசியதை பார்த்துட்டங்க” என்றதும் அவள் உடனே அமைதியாகிவிட “சொல்லு அங்க என்ன பேசிட்டு இருந்த?” என்று கேட்டார் நிர்மலா டீச்சர்.

தமயந்தி பயத்துடன் எஸ்தரைப் பார்க்க அவளோ ஒன்றுமே அறியாத பெண்போன்ற பாவனையுடன்  அவரின் கேள்விக்கு எல்லாம் பயப்படாமல், “மிஸ் நீங்க அந்த பார்முலா எழுதியபிறகு வரும் ஸ்டெப்ஸ் எதுவுமே புரியல” என்றாள் பட்டென்று.

 அவளைப் பார்த்த தனம், “அடிப்பாவி” என்று வாய்மீது கைவைத்தாள். தமயந்தி கதை புத்தகத்தைவிட இங்கிருக்கும் கிளாஸ்ரூம் எஸ்தரால் கலைகட்டுவதை பார்த்து அவளின் மீது பார்வையை படரவிட்டாள்.

அவளிடம் இருந்து இப்படியொரு பொய்யை இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “டவுட் என்றால் பயப்படாமல் கேளுமா” என்று சொல்லிவிட்டு போர்டில் இருந்த கணக்கை விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.

அதைக் கவனித்த எஸ்தரை திகைத்துப் பார்த்த தனத்தின் தலையில் கொட்டிய எஸ்தரோ, “கிடைத்த நேரத்தில எழுத்துடி எருமை” என்று சொல்ல அவள் சொன்னதும் போர்டைப் பார்த்து அப்படியே காபி அடித்தாள்.

தமயந்தி நோட்டிலும் எழுதுவைத்து நிமிர, “இப்போ உனக்கு டவுட் இல்லையா?” என்று கேட்டடார்.

 “இப்போ சம் புரிஞ்சிருச்சு மிஸ்..” என்று பவ்வியமாக கூறியவள் தன்னுடைய இடத்தில் அமர தோழிகள் இருவரும் எஸ்தரை முறைத்தனர்.

“அதை அவங்களிடம் கேட்ட அவங்களுக்கு எப்படி தெரியும்? என்னிடம் கேட்ட சொல்லிக் கொடுத்திருப்பேன் இல்ல..” என்றவர் வகுப்பு முடிந்ததும் வெளியே செல்ல தமயந்தி மற்றும் தனம் இருவரும் சேர்ந்து அவளைப் போட்டு மோத்தி விட்டனர்.

அதற்கு எல்லாம் கவலையே படாமல் மீண்டும் அடுத்த நாள் வகுப்பு தொடங்கியதும் மீண்டும் அதே வேலையைச் செய்யும் தமயந்தியைப் பார்த்து தலையில் அடித்ததுக் கொள்வார்கள். இப்படி இவர்கள் ஸ்கூலில் பண்ணும் சேட்டைகள் ஏராளம்.

மாலை வழக்கம்போல வீடு திரும்பிய மகனை வரவேற்ற ராஜலட்சுமி, “என்னப்பா ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது என்று சாதாரணமாக விசாரிக்க, “அதெல்லாம் நல்லா போகுது அம்மா” என்றவன் வேகமாக மாடியேறினான்.

அவன் கைகால் கழுவிட்டு கீழிறங்கி வர மகனுக்காக காபியுடன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு பள்ளியில் நடந்த சில விஷயங்களை பேசிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்.

தன் மகன் செல்வதைப் பார்த்த ராஜலட்சுமியின் மனம் கடந்தகாலம் நோக்கி பயணித்தது. அந்த பெயருக்கே உரித்தான கம்பீரமும், நேரான பார்வையும் எதிலும் நேர்மையை எதிர்பார்க்கும் ஒரு திறமை மிகுந்த பெண்மணி.

அவரின் கம்பீரத்திற்கு துணை நிற்பது போலவே இருக்கும் அவர் அணிந்திருக்கும் பட்டுசேலை. அவரின் செல்வாக்கையும் சொல்லும் அளவுக்கு இருக்கும் அவரின் உடை!

திருமணம் ஆனதும் மூன்று மாதத்தில் கணவனை இழந்து நின்ற பொழுதும் கருவில் இருந்த குழந்தைக்காக உயிர்வாழ்ந்த ராஜலட்சுமி தான் அந்த சொத்தை எல்லாம் கருத்துடன் கவனித்து அதை பெரிய அளவில் முன்னேற்றி முன்னணியில் இருக்கிறார்.

அதற்கு எல்லாம் காரணம் அவரின் தைரியம் மட்டுமே!

தன்னுடைய ஒரு மகனை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். அதன்பிறகு அவனும் ராஜேந்திரனும் இணைந்து டியுசன் சென்றனர். நாட்கள் அதன்போக்கில் சென்றது.

தமயந்தி, எஸ்தர், தனம் மூவரும் நட்புடன் கைகோர்த்து ஸ்கூல் படிப்பை முடித்தனர். சின்ன சின்ன காரணத்தால் மூவரும் பிரிந்துவிட மீண்டும் அவர்களை ஒன்றிணைத்தது கல்லூரி நாட்கள்.

அன்றிலிருந்து மூவரும் தங்களின் கஷ்டம், நஷ்டம் எல்லாவற்றையும் பகிர்ந்து ஒன்றுசேர்ந்து படித்தனர். தந்தை தொடங்கிய ஆசிரமத்தை கவனிக்க எஸ்தர் ஆடிட்டர்க்கு படிக்க, தமயந்தி கலெக்டருக்கு படிக்க முயற்சி எடுக்க, தனம் தன்னால் முடிந்தளவு ஒரு டிகிரி மட்டும் வாங்கி வெளியே வந்தாள்.

இப்பொழுது படிப்பு முடித்து எஸ்தர் பொறுப்பை கையில் எடுக்க அவளுக்கு உதவியாக தனமும் வந்து சேர்ந்தாள். தமயந்தி மட்டும் ஐ.ஏ.எஸ். முடித்துவிட்டு தாமோதரனை திருமணம் செய்துகொண்டாள்.

தனத்திற்கு பிடித்தமாதிரி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கட்டிவைத்தார் குணசேகரன். அவளும் திருமண பந்தத்தில் இணைந்துவிட எஸ்தர் மட்டும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆசரமத்தின் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டாள்.

அந்த சாலையில் பனிகூட மிதந்தபடி புகை மண்டலமாக நடந்து செல்வதை காண கண்ணிரண்டும் போதவில்லை.  அந்த வழியே சென்றால் பெரிய தேயிலை எஸ்டேட் ஒன்று இருந்தது. எழில் எஸ்டேட் என்று சொன்னால் எல்லோருக்குமே தெரியும். அதற்குள் நுழைந்தால் இரு புறங்களிலும் இருக்கும் தேயிலை தோட்டத்தின் வழியாக செல்ல அந்த இயற்கையின் அழகிற்கு அழகு சேர்த்தது போல அமைத்திருக்கும் பெரிய பங்களா.

போர்ட்டிகோ கடந்து வீட்டின் படிகளை ஏறினால் பெரிய ஹால். அதற்கு இடது புறத்தில் டைனிங் ஹால் மற்றும் சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம்.

வலது புறத்தில் ஒரு பெரிய பூஜையறை. அதில் இரண்டடியில் கிருஷ்ணரின் உருவம் கொண்ட சிலை. மற்ற தெய்வங்கள் எல்லாம் புகைப்படமாக மாட்டப்பட்டிருந்தது.

அதற்கு அருகிலேயே ராஜலட்சுமியின் அறை அத்துடன் சேர்த்து இரண்டு விருந்தினர்கள் அறையும் இருந்தது. ஹாலைக் கடந்து மாடியேறிச் சென்றால் அங்கே மொத்தம் ஆறு அறைகள்.

அதில் ஒரு அறை மட்டும் தாமோதரனின் பெட்ரூம். அதற்கு மேல் மாடி மொட்டை மாடியாக இருந்தது. ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக இருக்கும் பால்கனி.

அந்த வீட்டின் பின்னோடு பெரிய மலர்த்தோட்டமே அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தோட்டத்தில் இல்லாத பூக்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதை அழகுற பராமரித்து வருகின்றனர். அனைத்து வேலைக்கும் தனித்தனியாக ஆட்கள் இருக்கின்றனர்.

வானில் விடியலுக்கான வெளிச்சம் பரவுவதைப் பார்த்தபடியே பால்கனியில் அமர்ந்திருந்தாள் தமயந்தி. அவளின் பார்வை முழுவதும் வானத்திலேயே இருந்தது. மனதில் என்றும் இல்லாத ஒரு நிறைவு. சின்ன சின்ன பறவைகள் எல்லாம் இரைதேடி வானத்தில் பறந்து செல்ல வானமோ செவ்வானமாக மாறிக்கொண்டிருந்தது.

காலை விடியலை கண்ணிமைக்க மறந்து பார்த்தவளின் உதட்டில் ள உதட்டில் புன்னகை அரும்பியது.

தமயந்தி நேரான நெற்றியும், மீன் போன்ற விழிகளில் கூர்மையான பார்வையும், அழகான மூக்கும், சிவந்த இதழும் அவளின் அழகிற்கு அழகு சேர்த்திட ஐந்தடி உயரமும், மாநிறம் கொண்ட இருபத்தி மூன்று வயதான அழகிய மங்கை!

கொஞ்சம் பூசியது போல இருப்பாள். அவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு கம்பீரம் இருக்கும். அவளின் கம்பீரம் ஒன்றிற்காகவே அவளை காதலித்து கரம் பிடித்தான் தாமோதரன்.

அவளின் கைகள் வயிற்றை வருடிக்கொடுக்க உள்ளிருந்து அவளின் வருடலை உணர்ந்த கருவில் இருந்த சிசு அவளின் வயிற்றை முட்ட, “ரெண்டு பேரும் கம்முன்னு இருக்க மாட்டிங்களா?’ கருவில் இருக்கும் சிசுவிடம் பேச அவளின் குரல் கேட்ட சிசு மீண்டும் அசைய அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது.

அந்தநேரம் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!