sontham – 10

Moonsong Daily Magick

sontham – 10

அத்தியாயம் – 10

அவளை அங்கிருந்து தூக்கிச்சென்று சில மணிநேரத்தில் ராஜேந்திரனுக்குள் தகவல் கொடுக்கபட்டது. அவனிடம் உண்மையைச் சொல்லாமல் உடனே கிளம்பி வரும்படி மட்டும் சொன்னான் தாமோதரன். அவன் காரணம் கேட்டதற்கு கூட ஏதேதோ சொல்லி சமாளித்தான்.

ராஜேந்திரன் வழக்கம்போல எஸ்தரை நேரில் பார்க்க எண்ணியபடி சந்தோஷமாக ஆசரமத்திற்கு வரவே அங்கே அவளிடம் உடலை நடுவீட்டில் பார்வைக்கு வைக்கபட்டிருந்தது.   தமயந்தி, தாமோதரன், ராஜலட்சுமி, தனம், கௌதம், குணசேகரன், ஜெனிதா எல்லோரும் அழுது கொண்டிருந்தனர்.

அந்த காட்சியை நேரில் கண்ட ராஜேந்திரனுக்கு ஒரு நிமிடம் மூளை வேலை நிறுத்தம் செய்தது. கடைசியாக ஊருக்கு செல்லும்போது புன்னகையோடு வழியனுப்பிய பெண் இப்போ சடலமாக கிடப்பதை கண்டு, “எஸ்தர் இந்தர் வந்து இருக்கேன் கண்ணு முழிச்சு பாருடி” என்று அவளின் கன்னம்தட்டி எழுப்பினான். உயிரற்ற சடலம் அவனிடம் எப்படி பேசும்?

“எஸ்தர் பிளீஸ்டி என்னை தனியாக விட்டுட்டுப் போகாத. எல்லாம் தெரிஞ்ச நீயே என்னை தவிக்கவிட்டால் நியாயமா சொல்லு எஸ்தர். நான் சொன்ன கேட்ப இல்ல எழுந்திருடி. பிளீஸ்”அவளிடம் பேச அவனின் கதறல்கேட்டு சுற்றி இருந்த அனைவரும் அழுதனர். 

அவர்களின் முறைப்படி எஸ்தரை அடக்கம் செய்துவிட்டு எல்லோரும் வீடு திரும்ப தனம் குணசேகரனை சாமதானம் செய்து சாப்பிட வைக்க முயற்சித்தாள். ஆனால் அது முடியாமல் போகவே, ‘எங்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரம் விட்டுட்டுப் போக உன்னால் எப்படி முடிஞ்சிது’ என்று ஒருபக்கம் அழுதாள்.

எஸ்தரின் இழப்பில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் மௌனமாக வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவனை நெருங்கவே எல்லோருக்கும் பயந்தனர். இன்னொரு புறம் எஸ்தரின் இறப்பை நேரில் கண்டதும், அதன்பிறகு அழுதுகொண்டே இருந்தால் ஜெனிதாவிற்கு காய்ச்சல் வந்தது.

எஸ்தரை நினைக்கும்போது எல்லாம் அவனின் உள்ளத்தில் வலி அதிகரித்தது. அவனின் மனம் முழுவது ஆக்கரமித்து இருந்தாள் எஸ்தர். செல்ல சண்டைகள் போட்டு அவனின் மனதில் ஆழமாக பதிந்து போனவள் அவனிடம் சொல்லாமல் தவிக்கவிட்டு சென்றபோது தாயை இழந்த பிள்ளையாக மாறிபோனான் ராஜேந்திரன்.

அவனின் மனம் புரிந்து மெல்ல அருகே வந்த தாமோதரன், “டேய் இப்படியே இருந்தா என்னடா அர்த்தம்?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

அவனுக்குமே எஸ்தரின் இழப்பு பெரிய விஷயம் தான். அண்ணா என்று சொல்லி சிரித்தபடியே சுற்றிவரும் பெண். அவளுக்கு இப்படியொரு நிலை ஏற்படும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“எஸ்தரால் எப்படிடா முடிஞ்சுது” என்று நண்பனின் தோளில் சாய்த்து அழுதான். அவனை ஆறுதலாக அணைத்துகொண்ட தாமோதரன் சிறிதுநேரம் மெளனமாக இருந்தான்.

சிறிதுநேரத்தில் தன்னை தேற்றிக்கொண்டு அவன் அமைதியாகிவிட, “ஜெனிதாவை பற்றி கொஞ்சம் யோசிடா” என்று சொல்லி அவனின் கவனத்தை மெல்ல திசை திருப்பினான்.

“அவளுக்கு என்னாச்சுடா” என்று பதட்டத்துடன் நிமிர்ந்தவனை அழைத்துக்கொண்டு தனியறைக்கு சென்றான்.

அங்கே ராஜலட்சுமி, தமயந்தி இருவரும் இருக்க படுக்கையில் மயக்க நிலையில் படுத்திருந்தவளின் கையில் குல்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது.

மெல்ல அவளின் அருகே சென்ற ராஜேந்திரன், “என் ஜெனி பாப்பாவுக்கு என்னாச்சு” என்று கேட்டவன் அவளின் கையைத் தொட்டு பார்க்க உடல் எல்லாம் அனலாக கொதித்தது.

“அவ அங்கே நடந்தெல்லாம் கண்ணால் பார்த்தும், எஸ்தரோட இறப்பும் இவளை ரொம்பவே பாதிச்சிருக்குடா. கண்ணு முழிக்காமல் இரண்டு நாளாக அழுதுட்டு இருக்கிறா. இப்போ காய்ச்சல் கொதிக்குதுடா. நடு இரவில் கெட்ட கனவு கண்டு கண்விழிக்கிற மாதிரி திடீர்னு முழிச்சிட்டு எஸ்தரை தேடுறா. எங்களால் இவளை சமாளிக்க முடியலடா” என்று நண்பனின் தோளில் கைவைத்து நடந்த அனைத்தையும் சொன்னவனின் கண்களும் கலங்கியது.

எஸ்தரின் இறப்பைவிட ஜெனிதாவின் நிலை அவனின் மனதை வலிக்க செய்தது. அவளை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் எல்லாமே கனவாகிப் போகும் என்று ஒருநாளும் நினைக்கவில்லை.

அவளின் தலையை வருடிவிட்டபடி, “நீ கவலைபடாத செல்லம் நான் உன்னோடு இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆகாது” என்று சொல்லி அவளின் அருகே வெகுநேரம் அமர்ந்திருந்தான் ராஜேந்திரன். டாக்டரை வரவழைத்து அவளுக்கு தேவையான சிகிச்சைகள் எல்லாம் கொடுக்கபட்டது.

கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்து கண்விழித்த ஜெனிதா அவனை பார்த்தும், “நான் அன்னைக்கே சொன்னேன் இல்ல அங்கிள் அவங்களை தூக்கி உள்ளே வைங்கன்னு நான் சொன்னதை யாருமே கேட்கல” என்று ராஜேந்திரனிடம் கூறியவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டான்.

குழந்தையின் மனம் மிகவும் மென்மையானது. இந்த வயதில் அவர்கள் பார்க்கும், கேட்கும் காட்சிகள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துபோகும். அதனால் தான் குழந்தைகள் முன்னாடி நல்லதை மட்டும் பேச சொல்வார்கள் பெரியவர்கள். ஜெனிதா ஒன்றும் அதற்கு விதிவிலக்கு இல்லையே..

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவள் இயல்புநிலைக்கு வந்தபிறகு அவளை அணைத்தபடியே மௌனமாக அமர்ந்திருந்தான் ராஜேந்திரன். ஒருபுறம் மகளை இழந்து வருத்ததுடன் குணசேகரன் விட்டத்தை பார்த்தபடி கட்டியிலில் படுத்திருந்தார். தனமும், தமயந்தியும் உணவு வேலையைக் கவனிக்க தாமோதரன் முக்கியமான வேலையாக வெளியே சென்றிருந்தான்.

காற்றோடு கலந்து வந்த பாடல் அங்கிருந்த இருவரின் மனதையும் இருவேறு விதத்தில் பாதித்தது.

“நீயும் பாயும் நதி ஆனாய்..

உன்னைத் தாங்கும் கரை ஆனேன்..

என் வாழ்க்கையில் நீ பாதி..

உன் வாழ்க்கையில் நான் பாதி..

என் கண்களில் சமுத்திரங்கள்

அதில் காண்பது நம்பிக்கைகள்

வாழ்க்கை என்று எதுவும் இல்லை..

உந்தன் எந்தன் கதையாகும்..

என் கண்கள் உறங்காது..

உன் பூமுகம் காணாது..

நான் வாழ்வதும் உன்னாலே..

நீ காத்திடும் அன்பாலே..

என் ஆயிரம் ஜென்மங்களும்..

உன் அன்பினை நான் கேட்பேன்..” என்ற பாடல் வரிகளை கேட்கும்போது மனம் லேசாக உணரவே ஜெனிதாவின் கண்களில் கண்ணீரை துடைத்துவிட்டு மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான் ராஜேந்திரன்.

இன்னொரு புறம் குணசேகரனுக்கோ மனைவி இருந்த நாள் கண்முன்னே நிழலாடியது. அன்று எஸ்தருக்காக தன் வாழவேண்டும் என்ற உறுதியை எடுத்துகொண்டு வாழ்ந்த நாட்கள் அனைத்தும் மனதில் படமாக ஓடியது.

இதெல்லாம் பார்த்த தமயந்தி கண்ணீர் விட்டபடி சமையலறை நின்றிருக்க, “ஷ்.. தமயந்தி அழுகாதே. எல்லாம் விதிப்படி நடக்குதுன்னு நினைச்சிட்டு அமைதியாக இருடா” என்று ராஜலட்சுமி மருமகளை தேற்றினார்.

அதன்பிறகு நாட்கள் அதன்போக்கில் செல்ல மீண்டும் டியூட்டியில் சேர சொல்லி  ராஜேந்திரனுக்கு கடிதம் வந்தது. ஜெனிதாவை அங்கே விட்டுச் செல்லம்  அவனுக்கு மனம் வரவில்லை. ஆனாலும் குணசேகரனின் மனநிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை அங்கேயே விட்டுவிட்டு ஊட்டி சென்றான்.

அவன் ஊருக்கு செல்லும் முன்னர் எஸ்தரின் கேஸை ஸ்டாரங் செய்ய தேவையான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லிவிட்டு சென்றான்.  ஜெயராம் அந்த கேஸை விசாரிக்க மகேஷ் ஹாஸ்பிட்டலில் அடிபட்டு படுத்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. அன்று ஜெனிதா அடித்த அடியில் ஆணி ஏறி அவனால் நடக்க முடியாமல் போய்விட்டது.

அந்த கேஸில் ஜெனிதா முக்கிய சாட்சியாக இருந்ததால் எல்லாம் விசாரிக்கபட்டு மகேஷின் மீதான குற்றம் நிரூபிக்கபடவே அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பைக்கேட்டு பெற்றவரின் மனம் குளிர்ந்து போகவே, ‘என் பெண்ணின் இறப்பிற்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது’ என்று நிம்மதியடைந்தார்.

ஆனால் எஸ்தரின் இறப்பை மட்டும் அவரால் ஏற்க முடியவில்லை. அந்த ஆசரமத்தில் எந்த இடத்தைப் பார்த்தாலும் அவளின் நினைவாகவே இருந்தது. அந்த நேரத்தில் தனத்தை உடனே டெல்லிக்கு செல்லும்படி யுகேந்திரன் கடிதம் எழுதி இருந்தான்.

இப்படியொரு சூழ்நிலையில் குணசேகரனை தனியே விட்டு செல்வது சரியில்லை என்ற காரணத்தினால், “அப்பா நீங்களும் என்னோடு டெல்லி வந்துவிடுங்களேன். உங்க மனசுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் நானும் கொஞ்சம் கவலை இல்லாமல் இருப்பேன்” என்றாள் தனம்.

“இல்லம்மா நான் வரல. இந்த ஆசரமத்தை இப்படியே விட்டுட்டு வர என்னால முடியல” என்றவரின் மனமோ, ‘இத்தனை பேருக்கு நல்லது நினைக்கும் எனக்கு இப்படியொரு சோகத்தை கொடுத்ததுவிட்டாயே கடவுளே’ என்று புலம்பியது.

அவர் வரவில்லை என்று மறுப்பு சொல்லவே, “நீங்க என்னோடு கொஞ்சநாள் வந்து டெல்லியில் இருங்கப்பா. அதுவரை ஆசரமத்தை ராஜ் அண்ணாவை கவனிக்க சொல்றேன். பக்கத்தில் தாமோதரன் அண்ணாவும் இருக்காங்க அதனால் கவலைப்படாமல் கிளம்புங்க” என்று அவரை தன்னோடு அழைத்து செல்லும் முடிவுடன் பேசிய அவரின் மானத்தை கரைத்தாள்.

இறுதியில் அவரும் தனத்துடன் டெல்லி செல்வது என்று முடிவானது. ராஜேந்திரனிடம் இந்த விஷயம் சொல்லவே, “அப்போ ஜெனியை நான் வளர்த்துகிறேன். உங்க ஆசைப்படி ஆசரமத்தையும் நான் பார்த்துகறேன். நீங்க கொஞ்சநாள் போய் டெல்லியில் தங்கி இருங்க மாமா” என்றான்.

அந்த வார இறுதியில் ஜெனிதாவை அழைத்துச் செல்ல அவனே நேரில் கிளம்பி வருவதாக சொல்லவே, “அவளை அவரிடம் ஒப்படைச்சிட்டு நம்ம ஊருக்கு போலாம் அப்பா” என்றாள் தனம்.

தமயந்திக்கும் தனத்தின் முடிவே சரியென்று தோன்றியது. அதனால் அவர் செல்வதற்கு அவள் தடை சொல்லவில்லை. தாமோதரன் தன் பங்கிற்கு அவர்களை அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை கவனித்தான்.

எஸ்தர் இறந்தபிறகு ஜெனிதா அந்த ஆசரமத்தை விட்டு வெளியே போகவிட்டாலும் அடிக்கடி தமயந்தியின் நினைவு வரும். அதை எப்படி மற்றவர்களிடம் சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தாள். தமயந்திக்கு இது ஒன்பதாம் மாதம் என்பதால் அவளும் ஆசரமம் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது.

இந்நிலையில் அன்று ஜெனிதா ஒருநாள் தமயந்தியை பார்க்க யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள். அவள் சென்றதை மற்றவர்கள் கவனிக்க மறந்தனர்.

அவள் ரோட்டில் சொல்லும்போது தமயந்தியை போன்ற சாயலில் ஒரு பெண்ணை பார்த்தும், “ஆன்ட்டி நில்லுங்க..” என்று அந்த பெண்ணின் பின்னோடு ஓடினாள். அவளின் பாதை அந்த முகமறியாத பெண்ணால் வழி மாறியது.  

ஜெனிதா அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவளைத்தேடி வந்த கௌதம் தான், “அக்கா அறையில் இல்லையே” என்று தனத்திடம் கேட்டான்.  அப்போதுதான் அவள் அங்கில்லை என்ற விசயமறிந்து ஆசரமம் முழுவதும் தேட தொடங்கினர்.

அவள் எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே, “ஏன் எனக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனையாக வருது கடவுளே. என் குழந்தையை எடுத்துகிட்ட. இப்போ அந்த சின்ன பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடுகிறாயே” என்று புலம்பியபடி ஜெனிதாவை தேடினார்.

யார் தேடியும் ஜெனிதா கிடைக்காமல் போகவே உடனே ராஜேந்திரனுக்கு இங்கிருந்து போன் போனது. ஏற்கனவே காதலியின் பிரிவில் வருத்தத்தில் இருந்தவனுக்கு இந்த செய்தி இடியாக அமைத்துவிடவே, “நான் இப்போவே கிளம்பி வருகிறேன்” என்றவன் தன் பைக்கில் ஊட்டியிலிருந்து தேனிக்கு கிளம்பினான்.

இங்கே இருந்த எல்லோரும் பதட்டத்துடன் ஜெனியை ஊர் முழுக்க தேடினர். ஆனால் பலன் என்னவோ பூஜ்யத்தில் தான் முடிந்தது. அவர்கள் எங்கு தேடியும் ஜெனிதா கிடைக்கவில்லை. அவள் எங்கே போனால் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

மற்றொரு புறம் ராஜேந்திரன் எஸ்தர் மற்றும் ஜெனிதாவின் நினைவுடன் வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அவனின் உயிர் மூச்சாக மாறி போனவர்கள். ஒருத்தியை இழந்த வலியை தாங்க முடியாமல் இருப்பவனால் ஜெனிதாவின் இழப்பை ஏற்க முடியாது என்ற நினைவுடன் வண்டியை வேகமாக செலுத்தினான்.

அவர்களின் சிந்தனையோடு இருந்த ராஜேந்திரன் எதிரே வந்த லாரியை கவனிக்க மறந்தான். அவன் சுதாரித்து விலகும் முன்னரே பலமான சத்தத்துடன் அவனின் மீது மோதியது லாரி. கண்ணிமைக்கும் நொடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட அந்த இடத்திலேயே ராஜேந்திரனின் உயிர் அவனின் உடலைவிட்டு பிரிந்தது.

 இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அவனின் செல்போனில் இருந்து தாமொதரனுக்கு தகவல் சொல்லவே இடிந்துபோய் அமர்ந்துவிட்டான். அடுத்தடுத்து இழப்புகளை ஏற்கும் அளவிற்கு அங்கு யாரின் மனதும் தைரியமாக இல்லை.

ஆனால் நடந்ததை யாரிடமும் மறைக்காமல் கூறியவனிடம், “கண்ணா எஸ்தர் இறப்புக்கு பிறகு அடுத்தடுத்து இந்த இழப்புகளை ஏற்க முடியல என்றாலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வதும் நம்ம கடமை” என்று ராஜலட்சுமி மகனை தேற்றினார்.

இந்த விஷயம் அறிந்த குணசேகரனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது. தாய் நாட்டை பாதுகாக்கும் எண்ணத்தில் எத்தனையோ இறப்புகளை நேரில் பார்த்தபோது கலங்காதவர் இப்போது ராஜேந்திரனுக்காக கண்ணீர் சிந்தினார்.

தன் நண்பனின் இழப்பை ஏற்க முடியாமல் தவித்த கணவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் அழுதாள் தமயந்தி. யாரின் கண்பட்டதோ சந்தோசமாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசியது. ராஜேந்திரனின் இறுதி காரியத்தை முடித்த சில நாட்களில் ஆஸ்ரமத்தை விற்றுவிட்டார் குணசேகரன்.

ஜெனிதாவும் கிடைக்காமல் போகவே தனத்துடன் டெல்லி கிளம்பியவரை யாரும் தடுக்கவில்லை. ஜெனிதா கிடைத்தால் தனக்கு தகவல் கொடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்று குணசேகரன், தனலட்சுமி, கௌதம் மூவரும் தேனியிலிருந்து கிளம்பினர்.

கௌதம் மட்டும்  ஜெனி எங்கே என்று அடிக்கடி கேட்டுகொண்டே இருந்தான் அவனை சமாளிப்பது தான் அவர்களுக்கு பேரும் விசயமாக இருந்தது. தாமோதரன், தமயந்தி, ராஜலட்சுமி மூவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

நாட்கள் மாதங்களாக மாறி வருடங்களாக உருண்டோடியது…

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!