59830825

அத்தியாயம் – 14

ஒருநாள் முழுக்க வண்டியை ஓட்டியதும், அருவியில் ஆட்டம் போட்டதும் சேரவே வீடு வந்ததும் கேள்வி கேட்டவர்களுக்கு ஆளுக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு அறைக்கு சென்று படுத்துவிட்டாள் ஸ்ரீமதி.  

அவளுக்கு பின்னாடி வந்த மதுவிடம், “என்னடா ஒரு மாதிரி இருக்கிற? அருவியில் குளிச்சதால் சோர்வாக இருக்கா?” பரிவுடன் கேட்ட தாய்க்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல், “ஆமாம்மா” என்று சொல்லிவிட்டு உடனே தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அங்கே சென்று உடைமாற்றிவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்த மதுவின் மனம் முழுவதும் அவனையே சுற்றி வந்தது. அவன் தனக்கு குங்குமம் கொடுத்தது, அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மனதில் படமாக ஓடியது.

இத்தனை வருடங்களில் ஒருநாள் கூட மது அமைதியிழந்து இருந்தது இல்லை. ஆனால் முதல்நாள் சந்தித்தவுடன் அவளின் இயல்பையே தலைகீழாக மாற்றிவிட்டான் கௌதம். அனைவரிடமும் அன்பாக பழகுபவள் அவனிடம் கோபத்தை காட்டியதை நினைத்து, ‘ஏன் எனக்கு அப்போ அவ்வளவு கோபம் வந்துச்சு?’ என்று தனக்குதானே கேட்டுக் கொண்டாள்.

அவனின் சிந்தனையோடு வெகுநேரம் விழித்திருந்துவிட்டு பொழுது விடியும் நேரத்தில் தூங்கினாள். அவர்கள் இருவரும் அருவியில் குளித்துவிட்டு வந்ததால் சோர்வாக இருப்பதாக நினைத்து அமைதியாக அவரவர் வேலைகளைக் கவனித்தனர்.

சீக்கிரமே தூங்கியதால் விடியற்காலை நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்த ஸ்ரீமதி பக்கத்தில் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்தும், “இவ எங்கே போனா?” கேள்வியுடன் பார்வையை சுழற்றினாள்.

பால்கனியில் குழந்தைபோல தூங்கும் மதுவைப் பார்த்து, “குற்றாலம் கிளம்பும்போது தெளிவாக இருந்தவள் வரும்போது ரொம்பவே கோபமாக வந்தா.. என்ன விஷயமாக இருக்கும்?” என்ற யோசனையோடு அவளின் அருகே தூங்கும் அவளுக்கு போர்வை போர்த்தி விட்டாள்.

வழக்கம்போல சீக்கிரமே குளித்துவிட்டு கீழே சென்ற மதி, “பாட்டி மது இன்னைக்கு நல்லா தூங்கறா அதனால் அவளை டிஸ்டப் பண்ணாமல் நீங்களோ அம்மாவோ பூஜை செய்து சாமி கும்பிடுங்க” என்வளின் முதுகில் செல்லமாக அடிபோட்டார் தமயந்தி.

“அம்மா” என்ற அலறலோடு திரும்பி, “ஏன் அம்மா அடிச்சீங்க” என்று புரியாமல் கேட்டாள்.

“ஏன் மேடம் பூஜை பண்ணினால் கடவுள் வேண்டான்னு சொல்ல போறாரா?” கோபத்துடன் கேட்டவரின் தோளில் கைபோட்டுக் கொண்டு, “அம்மா எனக்கு இதெல்லாம் பிடிக்காது சோ என்னையும் மது மாதிரி நினைக்காதீங்க” முடிவாக சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு அவளிடம் பேசி பலனில்லை என்று தமயந்தியே பூஜையை முடித்துவிட்டு சமையலையும் கவனித்து கணவனை ஆபிஸிற்கு அனுப்பி வைத்தார். வெகுநேரம் சென்று கண்விழித்த மதுவிற்கு தூக்கி வாரிப்போட்டது.

மணி மதியம் இரண்டை நெருங்கிக் கொண்டிருக்கவே, “இந்நேரம் வரையுமா தூங்கினோம்” என்று தலையிலடித்துகொண்டு கௌதமை மனதிற்குள் வருத்தேடுத்தபடி குளித்துவிட்டு கீழிறங்கி சென்றாள்.

அப்போது அவர்களின் உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்ததால் பிரசாதம் கொடுத்துவிட்டு சென்றிருக்கவே, “என்னம்மா பஞ்சாமிர்தம் எல்லாம் டைனிங் டேபிளில் இருக்கு” என்று சொன்னபடி அவள் ஒரு ஸ்பூன் எடுத்து அதை ருசி பார்த்தாள் மது.

அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும் என்பதால் மற்றவர்கள் யாரும் அவளை எதுவும் சொல்லாமல் இருக்க, “என்ன மது குங்குமம் கூட எடுத்து வைக்காமல் பிரசாதம் சாப்பிடுற? இது என்ன புது பழக்கம்?” தமயந்தி மகளைக் கடிந்துகொண்டார்.

உடனே அவளின் முகம் செந்தணலாக மாறிவிடவே, “என்னால குங்குமம் வைக்க முடியாதும்மா” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அவளை விநோதமாக பார்த்த ராஜலட்சுமி, “சரி நீ வைக்க வேண்டாம் நானே உனக்கு வெச்சுவிடுகிறேன்” என்றார்.

அதற்கும் மறுப்பாக தலையசைத்துவிட்டு, “எனக்கு எதுவும் வேண்டாம். நான் ரூமிற்கு போறேன்” என்ற மது வேகமாக மாடியேறிச் செல்வதைக் கூர்மையாக கவனித்த மதி பெருமூச்சுடன் பாட்டியைத் திரும்பிப் பார்த்தாள்.

“பாட்டி அவள் நேற்றிலிருந்தே ஒரு மாதிரியாக இருக்கிற? எப்போது அருவின்னு சொன்னால் ஆனந்த குளியல்னு ஆட்டம்போடும் மது நேற்று தண்ணிரில் கூட கால் வைக்கல. வீட்டுக்கு வரும் வழியில் கூட ரொம்ப கோபமாக வந்தாள். நான் கேட்டதுக்கு தலைவலின்னு சொல்லி சமாளிச்சிட்டா” என்று அனைத்தையும் பாட்டியிடம் ஒப்பித்துவிட்டு விட்டால் போதுமென்று காரை எடுத்துகொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள்.

அதே நேரத்தில் அமர்ந்திருந்த மதுவோ, “ஏண்டா எனக்கு குங்குமம் கொடுத்த? இனிமேல் சாமி கும்பிட்டு குங்குமம் வேச்சாகூட உன் நெனப்புதான் வரும். நீ ஏன் என் வாழ்க்கையில் வந்த? உனக்கும், எனக்கும் என்னடா தொடர்பு..” என்று தலையில் கைவைத்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

அடுத்த இரண்டு நாளும் கௌதம் மீது கோபமாக இருந்தவள் ஓரளவு தன்னை சமாளித்துக்கொண்டு எப்போதும் போல இருக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டாள். ஆனால் குங்குமம் என்றதும் மனதில் அவன் நினைவு வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.

கல்லூரியில் கல்சுரல்ஸ் போட்டிகளுக்கு பெயர் எழுதுவதற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளிடம் போட்டியின் பெயரைச் சொல்லி பெயரை பதிவு செய்தனர். இறுதியில் பியானோ வாசிக்கும் போட்டிக்கு யாரும் பெயர் கொடுக்கவில்லை என்று டிப்பார்ட்மெண்ட் பேராசிரியரிடம் இருந்து தகவல் வரவே மதியின் மூளை வேகமாக வேலை செய்தது.

மது உடல்நிலை சரியில்லாமல் கல்லூரிக்கு வராமல் இருந்தது அவளுக்கு வசதியாக போய்விடவே, “மேடம் மது நல்ல பியானோ வாசிப்பாள்” என்று மதி எழுந்து சொல்லவே, “அப்போ அவளோட பெயரை போட்டியில் எழுதிகோங்க” என்று சொன்னார்.

அவள் சொன்னதை கேட்ட அதிர்ச்சியில் சட்டென்று நிமிர்ந்த காயத்ரி, “ஏய் ஏண்டி இப்படி அவளை தேவையில்லாமல் மாட்டி விடுற” என்று கோபத்தில் மதியைத் திட்டினாள்.

“பியானோ வாசிக்க தெரியாமல் வீட்டில் வாங்கி இடத்திற்கு கேடாக போட்டு வச்சிருக்கிறா. அதுதான் அவளை நேரம் பார்த்து மாட்டிவிட்டேன்” அலட்டிகொள்ளாமல் பதில் சொல்வதைக் கண்ட வருணிற்கு கோபம் தலைக்கு ஏறியது.

மதுவிற்கு பியானோ வாசிக்க தெரியாது என்பது அவர்கள் வகுப்பிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று மதி செய்த காரியத்தால் விளையபோகும் பின்விளைவுகளை நினைத்து வகுப்பறையே கதிகலங்கி அமர்ந்திருந்தது. அத்தனைக்கும் காரணமான மதியோ சாந்தமாக அமர்ந்திருந்தாள்.

தன் கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் எழுந்து அவளின் அருகே சென்ற வருண், “ஏன் மதி உன் பணக்காரத் திமிரை உன் தங்கச்சிகிட்ட கூட காட்டுவியா? நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என்று எரிந்து விழுந்தான்.

அவனை கோபத்துடன் முறைத்த மதியோ, “நான் அப்படிதான் பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியும்? அவ என் தங்கச்சி அதை நினைவில் வெச்சுகிட்டு பேசு” என்று அவனை திட்டி தீர்த்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

வருண் கோபத்துடன் தன் இடத்தில் சென்று அமர்ந்து, “இவளோட பணக்காரத் திமிர் எல்லை கடந்து போயிட்டு இருக்கு. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்” என்றவன் வேகமாக டேபினின் மீது அடிக்க அந்த சத்தம்கேட்டு வகுப்பறையில் இருந்த அனைவரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறையவே மதி ஆவலோடு எதிர்பார்த்த கல்சுரல்ஸ் நாளும் இனிதே விடிந்தது. காலையில் வழக்கமான துள்ளலோடு கல்லூரிக்கு கிளம்பிய மதுவிடம், “இன்னைக்கு உனக்கு பியானோ போட்டி இருக்கு” குண்டைத் தூக்கிப் போட்டாள் மதி.

அதைகேட்டு, “ஏய் என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கிற தெரியுமா? காலேஜ் கல்சுரலில் கலந்துக்காமல் இருந்தாலும் டிப்பார்ட்மெண்ட் மானம் போகும். அதே நான் போட்டியில் கலந்துகிட்ட குடும்ப மானமும் சேர்த்து போகும் மதி. எனக்கு வாசிக்க தெரியாதுன்னு தெரிஞ்சும் நீ ஏன் இப்படி பண்ணின” அவளை திட்டிக்கொண்டே கல்லூரிக்கு வேகமாக கிளம்பினாள்.

மது திட்டுவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட மதி போட்டிகளை காணும் ஆர்வத்தில் சீக்கிரமாகவே கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல, மதுவிற்கு என்ன செய்வதென்று சுத்தமாக புரியாதபோதும், ‘இனி என்ன பண்ணமுடியும்? வேற வலியே இல்ல போட்டியில் கலந்துகிட்டு மானம் கெட வேண்டியதுதான். மதி உன்னை என்ன பண்ணனும் தெரியுமா?” கோபத்துடன் கல்லூரிக்கு சென்றாள்.

அங்கே ஒவ்வொரு போட்டி முடியும்போதும் எல்லோரும் உற்சகமாக இருக்க மதுவிற்கு தான் தலைவலி அதிகமானது. கடைசியில் அவள் எதிர் பார்த்து போலவே மதுவின் பெயர் வந்ததும், ‘எல்லாம் என்  தலைவிதி’ என்றபடி எழுந்து மேடைக்கு சென்றாள்.

மது கோபமாக இருப்பதை பார்த்த காயத்ரி, “மதி நீயேன்டி இப்படி செஞ்ச? அவ ரொம்ப பாவம் தெரியுமா?” என்றவளின் பார்வை மேடையின் மீதே நிலைத்து நின்றது. கடைசி நிமிஷம் வந்தபிறகும் மதி உண்மையைச் சொல்லாமல் இருப்பதைக்கண்டு எரிச்சலடைந்த வருண் எழுந்து ஆடிடோரியத்தைவிட்டு வெளியே சென்றான்.

காயத்ரியின் தவிப்பு புரியவே, “மது நல்லா வசிப்பா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றாள் மதி தைரியமாக.

அதைகேட்டு மதியை முறைத்த காயத்ரி, “அவளுக்கு சரியாக வாசிக்க தெரியாது என்று தெரிந்தும் நீ அவளை இப்படியோரு நிலைக்கு தள்ளுவன்னு நான் நிஜமாவே நினைக்கலடி” என்று மதியை திட்டிவிட்டு கோபமாக திரும்பிக்கொண்டாள்.

மேடை ஏறிய மதுவை எல்லோரும் வாசிக்க சொல்லவே, ‘ஐயோ கடவுளே! எனக்கு வாசிக்க தெரியாதுன்னு தெரிஞ்சும் வம்பில் மாட்டிவிட்டாளே இந்த மதி இப்போ நான் என்ன பண்றது?’ என்றபடியே சிலநொடிகள் அமைதியாக நின்றிருந்தாள்.

எல்லோரும் சத்தமிட்டு கூச்சல் போடவே, ‘எனக்கு பியானோ வாசிக்க தெரியாது. யாராவது பியானோ வாசிக்க தெரிஞ்சவங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன்’ விழிமூடி வேண்டிக் கொண்டாள்.

அடுத்தநொடியே வேகமாக மரங்கள் அசந்திட சில்லென்ற காற்று வந்து மதுவைத் தீண்டிச்செல்ல கைகால்கள் சிலிர்த்துவிட ஜாதி மல்லியின் வாசனை அவளின் நாசியைத் துளைத்தது. அவள் மெல்ல பியானோவில் விரல்களை வைத்த மதுவின் விரல்கள் தன்னப்போல இசையை மீட்டிட அந்த இடமே அவளின் இசைக்கு மயங்கி அமைதியானது.

அவள் வாசிக்கும் இசை மட்டும் அனைவரின் மனதையும் கவர மகுடிக்கு மயங்கிய பாம்பு போல அனைவரும் அவளை பார்த்துக்கொண்டே இசையை ரசித்தனர். ஆனால் விரல்கள் கட்டுபாடு இல்லாமல் வாசிப்பதை உணர்ந்த மதுவின் வயிற்றிற்குள் பயபந்து உருண்டது. அவளின் கைகள் விரைத்துவிடவே, ‘யாரோ பக்கத்தில் இருக்கிற மாதிரி தோணுதே’ என்று அவள் வலதுபுறம் பார்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளை வாயடைக்க வைத்தது.

வெள்ளை நிற புகைமண்டலம் காற்றுடன் கலந்து செல்லாமல் அவளின் அருகே நிற்ப்பது போல உணர்ந்தாள். அதே நேரம் ஜாதிமல்லி வாசனை அவளை சூழ்ந்திருக்கவே, ‘என்ன நடக்குது?’ என்று பயத்துடன் சுற்றிலும் பார்த்தாள் மது.

அதற்குள் இசை நின்றுவிட சட்டென்று கட்டிலிருந்து விடுப்பட்டது போன்ற உணர்வுடன் நிமிர்ந்தவளுக்கு வழக்கத்திற்கு மாறாக வேர்த்துக்கொட்டியது. அவள் மீண்டும் திரும்பி அந்த இடத்தைப் பார்க்கும்போது புகைமண்டலமும் அவள் கண்ணுக்கு புலப்படவில்லை.

அதுவரை அவளை சூழ்ந்திருந்த ஜாதிமல்லி வாசனையும் இல்லாமல் இருக்கவே, ‘ஒரு வேலை கனவோ’ தனக்குள் குழம்பினாள். அவள் வாசித்த இசை அருமையாக இருந்ததென்று சொல்லி அவளுக்கு முதல் பரிசை கொடுப்பதை பார்த்த காயத்ரி மதியைத் திரும்பி பார்த்தாள்.

“எப்படி மதி இவ்வளவு சரியாக கணிச்சி வெச்சிருக்கிற?” என்று கேட்டாள்.

“நீங்க எல்லோரும் நினைக்கிற மாதிரி அவ அமைதியான பொண்ணு இல்ல காயத்ரி. எனக்காக மட்டும் அவள் இப்படி அமைதியான பொண்ணாக மாறிட்டா” என்றதும் காயுவின் கண்கள் வியப்பில் விரிந்தது.

“என்ன சொல்ற?” என்று புரியாமல் கேட்டவளிடம்,

“அவ என்னைவிட நல்லாவே வாய் பேசுவா. என்னைவிட ரொம்ப போல்டான பொண்ணு மது. சின்ன வயதில் இருந்தே கராத்தே, சிலம்பம், வாள்வீச்சு என்று எல்லாமே கத்து வெச்சிருக்கிற. அது மட்டும் இல்லாமல் என்னைவிட அவ கிராண்டா சூப்பராக ட்ரஸ் போடுவாள். ஆனால் நான் அவளைப் பார்த்து அவளை மாதிரி பேச ஆரம்பிக்கவும் அவளுக்கான தனித்தன்மை இழந்துவிட்டதாக நினைக்காமல் எனக்காக அவ அமைதியான பெண்ணாக மாறிட்டா. அதே மாதிரிதான் துணிமணிகளை கூட அவள் தனியாகத் தெரியனும்னு நினைச்சு ரொம்ப சிம்பிளாக இருக்க தொடங்கினாள்” என்று மதி அடுக்க காயத்ரி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.

அவள் பார்த்த மதுவிற்கும், இப்போது மது சொல்லும் மதுவிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று நினைக்க, “உனக்கு ஒன்னு தெரியுமா?” என்று அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தாள் மதி.

காயத்ரி என்ன என்பதுபோல அவளைப் பார்க்க, “என்னைவிட பலமடங்கு அழகாக கார் ஓட்டுவாள் மது. இப்படி பல திறமைகளை தனக்குள் மறைத்துக்கொண்டு அமைதியாக வலம்வரும் அவளுக்கு பியானோ வாசிக்க மட்டும் எப்படி வராமல் போகும்? அதுதான் அவளை போட்டியில் மாட்டிவிட்டேன். ஆனால் இப்போ எவ்வளவு அழகாக வாசித்தாள்? இதற்காகவே சீக்கிரம் பியானோ கிளாஸ் போய் வாசிக்க கத்துக்குவா. அவமேல் அவளுக்கு ஒரு நம்பிக்கை வரணும் அதுக்குதான் நான் இப்படி பண்ணேன்.” என்று மனம் திறந்து பேசிய மதி கடைசியாக சொன்ன வாக்கியம் அவளை அதிர செய்தது.

“நாளைக்கு எனக்கு பார்க்கும் மாப்பிள்ளை அவளுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னால் விட்டுகொடுக்க கூட தயங்க மாட்டேன் காயத்ரி. எனக்காக அனைத்தையும் விட்டுகொடுக்கும் மதுவிற்காக நான் எதையும் செய்வேன். வாழ்க்கை கடைசிவரைக்கும் அவள் சந்தோசமாக இருக்கணும்” என்று சொல்லிவிட்டு அவள் நிமிர சந்தோசமாக ஓடி வந்த மதுவின் கையில் முதல் பரிசு தவழ்ந்ததை கண்டு சந்தோசப்பட்டாள் மதி.

“தேங்க்ஸ் மதி உன்னாலதான் இது எனக்கு கிடச்சுது” என்று சொன்ன மதுவின் முகம் மலர்ந்து இருக்கவே, ‘ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுக்காமல் இருக்காங்க’ என்று நினைத்தாள் காயத்ரி.

அதே நேரத்தில் மேடையில் தனக்கு தோன்றிய நிகழ்வை மதியிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருந்தாள் மது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!