2fba1e6bc8863327925b29cc88a143e2

அத்தியாயம் – 15

இதற்கிடையில் கௌதம் டெல்லி சென்று சேர்ந்தான். நடு இரவில் காலிங்பெல் சத்தம்கேட்டு தனம் எழுந்து வந்து கதவைத் திறந்தார். கௌதம் ஒரு கையில் பேக்குடன் நெற்றியில் பிளாஸ்திரி போட்டதை மறைக்கவே வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

“ஏய் கௌதம் நில்லு! நெற்றியில் என்ன காயம்?” என்ற கேள்வியில் மகனின் தோளைப்பிடித்து நிறுத்தினார்.

அவன் சோர்வுடன் சோபாவில் அமரவே, “ஏன்டா ஒரு இடத்திற்கு போனால் சர்வ ஜாக்கிரதையாக வண்டி ஓட்டிட்டுப் போகணும்னு தெரியாதா?” என்று நடந்ததை ஓரளவுக்கு கணித்தபடி மகனை திட்டினாள் தனம்.

“இல்லம்மா பசங்க வர வழியில் கம்பம் வழியாக வண்டியை விட்டுட்டாங்கனுங்க. அதில் தண்ணியடித்துவிட்டு கார் ஓட்டியதால் தேனியில் ஆக்சிடென்ட் ஆகிருச்சும்மா. என்னைத் தவிர மற்ற எல்லோருக்குமே செம அடி. நிறைய பிளட் லாஸ் வேற ஆகிருச்சு” என்று சோபாவில் சாய்ந்து கண்மூடினான்.

தன் மகனின் மீது தவறில்லை என்று உணர்ந்து, “அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டார்.

“அப்புறம் என்ன வருண் என்ற காலேஜ் பையன் வந்து பிளட் கொடுத்தான். எனக்கும், அசோக்கிற்கு மட்டும் அடி ரொம்ப குறைவு. மற்ற எல்லோரும் இப்போ தேனியில் இருக்காங்க. அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லி எல்லோரும் வந்தபிறகு நாங்க இருவரும் ரயிலில் வந்தோம்” என்றான் மைந்தன்.

அதன்பிறகு அவனிடம் காரணம் கேட்காமல் எழுந்து  சமையலறைக்கு சென்றவர் வரும்போது கையில் பால், பிரட் இரண்டையும் எடுத்து வரவே அவனும் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்.  தனம் அவற்றை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வரவே கௌதம் குரல்கேட்டு யுகேந்திரனும் எழுந்து வந்தார்.

அவர் வந்தும் தனம் நடந்தவற்றை சொல்லவே, “ஏன்டா வண்டி ஓட்டும்போது கவனமாக இருக்கணும்னு தெரியாது. ஏதோ மரத்தின் மீது விட்டதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. இதே வேற யார் மீதாவது மோதியிருந்தால் என்ன ஆகிருக்கும்?” என்று மகனைக் கடிந்து கொண்டார். தந்தையின் பேச்சில் நியாயம் இருந்ததால் அவனும் அமைதியாக கேட்டுக் கொண்டான்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது..

திடீரென்று மதுவின் ஞாபகம் வரவே கௌதம் முகம் பிரகாசமாக மாறிவிட, “அம்மா நான் ஊருக்கு போவதற்கு முன்னாடி கல்யாணம் பண்ண போகின்ற பொண்ணு இப்படி எல்லாம் இருக்கணும்னு சொன்னேன் இல்ல” என்று தாய்க்கு அன்று பேசியதை நினைவுபடுத்தினான்.

“ம்ம் சொல்லிட்டு இருந்த இல்ல. ஏன் ஊருக்குப் போன இடத்தில் ஏதாவது பெண்ணை பார்த்தியா?” என்று கேட்டார் யுகேந்திரன் ஆர்வமாக.

“ஆமாப்பா. குற்றாலத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளைப் பார்த்தும் தான் அம்மா அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்திருப்பதாக போன் பண்ணினாங்க. நிஜமாவே அவளை அங்கே சந்திப்பேன்னு நினைக்கல அப்பா. ஏதோ என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு இப்படியெல்லாம் இருக்கணும்னு சொன்னேன். ஆனால் அதே மாதிரியே இருந்தவளை பார்த்து நான் ஃபுல் ப்ளாட் ஆகிட்டேன்” என்ற கௌதம் மனக்கண்ணில் மதுவின் முகம் வந்து சென்றது.

இதுநாள்வரை பெண்களைப்பற்றி பேசாத மகன், இன்றோ ஒரு பெண்ணைப் பற்றி கதை கதையாக சொல்வதைக்கேட்டு, “நீ மட்டும் மருமகளைப் பார்த்தால் போதுமா? எங்களுக்கும் போட்டோ காட்டுடா” சந்தோசத்தில் முகம் மலர கேட்டார் தனம்.

அப்போதுதான் அவளை ஒரு போட்டோ கூட எடுக்காமல் வந்தது நினைவு வரவே, “ஸாரிம்மா அவளை பார்த்தேனே தவிர போட்டோ எடுக்க மறந்துட்டேன்” அவன் சோகமாக சொல்லவே காலிங்பெல் அடிக்கும் சத்தம்கேட்டு கதவை திறந்தார் தனம்.

அசோக் வாசலில் நிற்கவே, “என்னடா உங்க அம்மா கதவை திறக்கலயா?” என்று கேட்க அவனும் தலையசைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

அங்கே யுகேந்திரனிடம் மதுவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த கௌதம், “அவளை பார்த்தும் மற்றது எல்லாமே மறந்துபோச்சுப்பா. இல்லன்னா ஒரு போட்டோ எடுத்துட்டு வந்திருப்பேன்” வருத்தத்துடன் கூறினான்.

“ஆனால் நான் எடுத்தனே” என்றபடி அங்கே ஆஜரானான் அசோக்.

அவன் ஜங்கென்று குதித்திதை கூட பெருசாக நினைக்காமல், “நீ எப்போடா அவளை போட்டோ எடுத்த?” என்றவன் கோபத்துடன் அசோக்கை முறைத்தான்.

“உன் பச்சைக்கிளி கூடத்தான் காயத்ரி என்ற பெண்ணும் என்னை சைட் அடிச்சிட்டே சுத்திட்டு இருந்தா. அதுதான் போன் நம்பர் வாங்கும்போது ஒரு செல்பி எடுத்து தரசொல்லி அவகிட்ட சொன்னேனா.. அவளும் எதுவும் கேட்காமல் அந்த பெண்ணை போட்டோ எடுத்து கொடுத்துட்டா” என்றவனின் தலையில் நறுக்கென்று கொட்டினார் யுகேந்திரன்.

அசோக் அலறியபடி தலையைத் தேய்க்கவே,“டூர் போறேன்னு சொல்லிட்டு போன இருவரும் வரும்போது ஆளுக்கு ஒரு ஜோடியைத் தேடிட்டு வந்திருக்கீங்களோ?” கோபத்துடன் பேசுவது போல பாவனை செய்தார்.

அதெல்லாம் பார்த்த தனம், “உங்க நடிப்பில் சிவாஜி கூட தோத்துப் போயிரணும்” என்றவர் அசோக்கிடம் போனை வாங்கி, “கௌதம் இரண்டு பெண்களில் யாருடா உன் ஜோடி” என்று ஆர்வமாக கேட்டார்.

அவரின் செயலைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட அசோக், “அப்பா நல்ல பாருங்க தாய்ன்னா இப்படிதான் இருக்கணும். வருங்கால மருமகளைப் பார்க்க என்ன ஆர்வமாக இருக்கான்னு நீங்களே பாருங்க” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க மதுவை தனத்திடம் காட்டினான்.

அவளைப் பார்த்தும் தனத்தின் முகம் மலர, “ரொம்ப அழகாக இருக்கிற” என்றவர் சொல்ல அசோக் அங்கே நடந்த கூத்தை சொல்லி முடிக்க யுகேந்திரன் மட்டும் போட்டோவை பார்த்துவிட்டு சிந்தனையோடு அமர்ந்திருந்தார். அதுவும் மகன் சொன்ன ‘டிவின்ஸ்’ அவரை யோசிக்க வைத்தது.

ஒரு போட்டோவில் மதுஸ்ரீ, ஸ்ரீமதி இருவரும் இருப்பதை பார்த்தவர், “தனம் உன்கிட்ட தமயந்தி போட்டோ இருக்கும் இல்ல அதை கொஞ்சம் எடுத்துட்டு வா” என்று சொல்ல அவரும் விளக்கம்கேட்ககாமல் எழுந்து சென்றார்.

தந்தையின் முகம் சிந்தனையோடு இருப்பதை பார்த்த கௌதம், “என்னப்பா ஏதாவது பிரச்சனையா?” என்று புரியாமல் கேட்டான்.

அதற்குள் தனம் போட்டோ ஆல்பத்தில் இருந்த தாமோதரன் – தமயந்தி போட்டோவுடன் மற்ற இருவரின் போட்டோவை வைத்து பார்த்தவர், “தனம் இவங்க தமயந்தி ஜாடையில் இருக்காங்க பாரு. இவன் பார்த்தது தாமோதரன் மகள்களாககூட இருக்கலாம். ஏன்னா தமயந்தி அப்போ கர்ப்பமாகதானே இருந்தாள். அதுவும் இரட்டைக் குழந்தைகள்” என்று அவர் அடுக்கவே கௌதம், அசோக் இருவரும் திகைப்புடன் அவரை ஏறிட்டனர்.

அப்போதுதான் போட்டோவில் இருந்த பெண்களின் முகத்தைக் கூர்ந்து கவனித்த  தனம், “ஆமாங்க” என்றார்.

“கௌதம் இது என் நண்பனோட மகள்களாக இருக்குமோன்னு சந்தேகமாக இருக்குப்பா. நீ தேனி போனதும் மீண்டும் இந்த பெண்ணைப் பார்த்தால் கொஞ்சம் விசாரிச்சு தகவல் சொல்றீயா? அவனை பார்த்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல ஆச்சு” என்றவர் நண்பனின் நினைவில் கூறினார்.

“அப்போ கௌதம்க்கு தேனியில் தான் வேலை கிடச்சிருக்கா அப்பா” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் அசோக்.

அவரும் ஒப்புதலாக தலையசைக்கவே, “ஹே மச்சி கடைசியில் பொண்ணு இருக்கிற ஊருக்கே போஸ்டிங் கேட்டு வாங்கிருக்க இல்ல இரு மகனே உன்னை நம்ம ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கோர்த்து விடுகிறேன்” என்று அவனை கலாய்க்க தொடங்கிவிட்டான்.

“ஆமா அப்போதானே என் லவரை அடிக்கடி பார்க்க முடியும்” என்று பதிலுக்கு பதில் கொடுத்துவிட்டு மதுவின் போட்டோவை தன் போனிற்கு மாற்றிவிட்டு தூங்குவதற்கு எழுந்து சென்றான்.

 கௌதமிற்கு தேனியில் தான் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்(A.C.P.) போஸ்டிங் போட்டு இருந்தனர். அடுத்த ஒரு வாரமும் மின்னல் வேகத்தில் பறக்க தாய் – தந்தையை டெல்லியில் விட்டுவிட்டு தேனி சென்று சேர்ந்தான்.

கௌதமிற்கு அங்கே போலீஸ் கோர்டரஸில் தனியாக தங்கிக்கொண்டான். அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறையவே அவனும் டியூட்டியில் சேர்ந்தான்.

கிட்டதட்ட மூன்று வாரங்கள் சென்ற நிலையில் காலையில் எழுந்ததும் ஜாக்கிங் சென்று உடல் முழுவதும் வியர்வையுடன் வீடு திரும்பிய கௌதம் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றான்.

அவன் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து டவலில் தலையைத் துவட்டியபடியே வெளியே வந்தான். தெருவில் விளையாடிய குழந்தைகளையும் அங்கே ஆமினி காரின் மீது சாய்ந்து நின்றவர்களை பார்த்தவன், “இங்கே இவனுங்களுக்கு என்ன வேலை?” என்று யோசித்தவன் அவர்கள் பார்வை சென்ற திசையைக் கவனித்தான்.

அவர்களின் டார்கெட் யார் என்று தெரியாத காரணத்தால் தன்னுடைய செல்லில் இருந்து ஒரு மெசேஜ் மட்டும் போட்டுவிட்டு காபி கப்புடன் வேகமாக வந்து கூலாக காபி குடித்துக் கொண்டே அவர்களைப் பார்வையால் நோட்டம் விட்டான்.

அங்கே விளையாடிய குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் ரொம்பவே அழகாக இருந்ததைக் கவனித்து, ‘இந்த குழந்தைதான் இவங்க டார்கெட்’ என்று மனதில் கணித்தான்.

அதற்குள் இருவரில் ஒருவன் வேறு யாருடனோ போனில் பேசிவிட்டு,  “அந்த குட்டியைத் தூக்கிட்டு வா..” என்று கட்டளையிட்டவன் தன் கூட்டாளியிடம் சாக்லேட்டை கொடுக்க அதை வாங்கிகொண்டு அந்த குழந்தையின் அருகே சென்றான்.

அங்கிருந்த குழந்தைகள் எல்லோரும் விளையாடிக்கொண்டு இருக்க, “குட்டி பாப்பா.. இங்க வா உனக்கு சாக்லேட் தரேன்..” என்று சாக்லேட் காட்டி குழந்தையை அருகில் அழைத்தான்.

அந்த குழந்தை முதலில் அழைத்த பொழுது வரமாட்டேன் என்று தலையசைக்க அதைவிட பெரிய சாக்லேட் எடுத்து அந்த குழந்தையின் முன்னே நீட்டினான் கடத்தல் ஆளின் கூட்டாளி..

அவனைத் திரும்பிப் பார்த்த அந்த குழந்தை, “ஐ சாக்லேட்..” என்று கூறியதும் அவனை நோக்கி ஓடிவர தன்னுடைய கையில் இருந்த சாக்லேட்டை குழந்தையின் கையில் கொடுக்க அந்த குழந்தை வாங்க கை நீட்டியதும் அதன் கையைப்பிடித்து இழுத்து வாயை பொத்தி காரில் தூக்கிக் போட்டு கதவை சாத்தியதும் காரின் முன் பக்கம் ஏறினான் கூட்டாளி.

அவன் காரில் ஏறியதும் கார் மின்னல் வேகத்தில் சென்றது..

“அம்மா.. அம்மா..” என்று அலறிய குழந்தையின் கன்னத்தில் இழுத்து ஒரு அறைவிட மயக்கத்தில் பின் சீட்டில் சரிந்தது குழந்தை.

அது மயக்கம் போட்டு விழுத்த உடனே, “இந்த குழந்தைகளால் தான் எல்லா பிரச்சனையுமே வருது. ஒரு குழந்தையை கடத்திட்டு வர என்ன என்ன பிளான் பண்ண வேண்டி இருக்கு..” என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான் கூட்டாளியின் தலைவன்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பங்கஜம், “ஏண்டி என்னோட பேத்தி இங்கே விளையாட்டிட்டு இருந்தாலே நீங்க யாராவது பார்த்தீங்களா?” என்று கேட்டதும் அந்த  குழந்தைகள் எல்லாம் திருதிருவேன விழித்தனர்.

“என்னடி உங்களோட தானே விளையாட்டி இருந்தா.. நீங்க எல்லாம் இருக்கீங்க அவ மட்டும் எங்க போனா..?” என்று அதட்டியதும், “தெரியல மாமி..” என்றது ஒரு சில்லிவண்டு.

“ஹே சுவிமா எங்க இருக்கிற.. சுவி செல்லம்..” என்று குரல்கொடுக்க குழந்தை அவரின் அழைப்பிற்கு பதில் இல்லாமல் போனது.

“ஐயோ குழந்தையைக் காணோமே..” என்று பதறிய பங்கஜம் வேகமாக வீட்டின் உள்ளே சென்று வீட்டில் இருந்த எல்லோரிடமும் தகவலைச் சொல்ல எல்லோரும் தெரியும் கூட குழந்தை சென்ற திசை கண்டுபிடிக்கவே முடியவில்லை.  

அந்த கார் தெருமுனையைக் கடக்க அங்கே ஏற்கனவே பைக்கில் நின்றிருந்த கௌதம் அவர்களை பின் தொடர்ந்தான்.

அந்த குழந்தையைக் கடத்திக்கொண்டு வந்த ஆமினி கார் கல்லூரி பஸின் பின்னோடு வேகமாக வந்து கொண்டிருந்தது.. காரில் ஓடிய கூட்டாளியின் தலைவன், “டேய் அந்த பைக்காரன் நம்ம பின்னாடியே வர மாதிரி இருக்குடா..” என்று சொல்ல காரின் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தான் கூட்டாளி.. பிறகு ஏதோ தோன்ற பின்னாடி திரும்பிப் பார்க்க குழந்தை மயக்கத்தில் இருந்தது..

“ஒரு வேலை நம்ம குழந்தையைக் கடத்திய விஷயம் தெரிந்த யாரோ ஒருத்தர் நம்ம பாலோ பண்ணிட்டு வரங்களோ..?” என்றவன் நினைக்கும் பொழுது அவனைக் கடந்து சென்றான் கௌதம்.. அவன் தங்களைக் கடந்து சென்றதும், “அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்ற மாதிரி.. எதர்ச்சியாக வந்தவனைப் பார்த்து பயந்துட்டு இருக்கோம்..” என்றான் கூட்டாளியின் தலைவன்..

அதில் மற்றொரு கூட்டாளி பெருமூச்சு விட கார் தன்னைத் தொடர்ந்து வருகிறதா என்று கவனித்த கௌதம், ‘இந்த காரில் இருப்பங்களுக்கு இந்த கடத்தலுக்கும் என்ன சம்மந்தம் என்று இவங்கள பிடிச்ச மட்டும் தான் தெரியும்..?’ என்று நினைக்க  வெண்ணிற புகைபோல பின் தொடர்ந்த அந்த உருவம் அவனுக்கு உதவி செய்ய நினைத்தது.

அதே நேரத்தில் காலேஜ்  பஸில் மதுவிடம், “இன்னைக்கு அந்த மேம்கிட்ட நல்ல மாட்ட போகிறேன் மது. நேற்று எல்லாம் எதுவும் படிக்காமல் அத்தை பொண்ணு ரிசப்ஷனுக்கு போயிட்டேன்” என்று சொல்ல அவளோ எதையும் காதில் வாங்காமல் ஜன்னலின் வழியாக வேடிக்கை பார்த்தவளின் மனமோ படபடவென்று அடித்துக் கொண்டது.

‘என்னவோ நடக்க போகுது’ என்று மது நினைக்க பஸ் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கல்லூரியின் முன்னே பஸ் நின்றதும் மாணவிகளை இறங்கியவிட்டு பஸ் கிளம்பியது.

மாணவிகள் கல்லூரி கதையைப் பேசியபடி ரோட்டைக் கடக்க ரோடு கிராஸ் பண்ண ரோட்டைப் பார்த்த மது கார் எதுவும் வராமல் இருப்பதைப் பார்த்து வேகமாக ரோட்டை கிராஸ் பண்ணும் நேரத்தில், “மது” என்ற அழைப்பைக் கேட்டு திடுக்கிட்டு நின்றாள்.

நடுரோட்டில் ஒரு எட்டு வயதுடைய குழந்தை ரோட்டைக் கிராஸ் செய்ய முயற்சி செய்ய அப்பொழுது தூரத்தில் ஒரு கார் வருவதைப் பார்த்து பயந்து தன்னை அழைப்பதுபோல ஏற்பட்ட பிரம்மையில் வேறு எதைபற்றியும் யோசிக்காமல் அந்த குழந்தையைப் பார்த்தபடி நடுரோட்டில் நின்று விட்டாள் மதுஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!