images (55)

அத்தியாயம் – 16

தன் பின்னோடு வந்த மதுவைக் காணாமல் வேகமாக திரும்பிய காயத்ரி மதுவைப் பார்த்தும், ‘இவ என்ன நடுரோட்டில் நிற்கிற..’ என்று யோசித்தபடியே சாலையின் மீது கவனத்தை திருப்பினாள்.

மதுவை நோக்கி மஞ்சள் நிற ஆமினி கார் வேகமாக வருவதைக் கவனித்த காயத்ரி, “ஏய் மது கார் வருது பாரு..” என்று கத்தினாள்.

அவள் குரல்கேட்டு திரும்பிப் பார்த்த மது பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் காதை கைகளால் அடைத்துக்கொண்டு கண்ணை இறுக்கமாக மாடிகொண்டு நடுரோட்டில் நின்றுவிட, காயத்ரியோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றாள்.

“என்னடா இந்த பொண்ணு மட்டும் நடுரோட்டில் நின்னுட்டு என்ன கனவு கண்டுட்டு இருக்கு?” என்று எரிச்சலுடன் கூறியவன் நொடியில் காரை பிரேக் போடவே, “மது” என்ற அழைப்பைக் கேட்டு சாலையைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளை நோக்கி கார் ரொம்ப வேகமாக வருவதைக் கண்டு சாலையில் கண்ணை மூடி உட்கார்ந்துவிட்டாள். மற்ற மாணவிகள் எல்லோரும் சாலையைக் கடந்து கல்லூரியின் உள்ளே சென்றனர். அதற்குள் கார் அவளின் அருகில் வந்து சடர்ன் பிரேக் போட்டு நின்றது.

அவர்களைக் கடந்து சென்ற கௌதம் திரும்பிப் பார்க்க நடுரோட்டில் கண்மூடி நின்றிருந்த மதுவே முதலில் விழுந்தாள். கார் அவளை நோக்கி வேகமாக வந்து சடர்ன் போட்டு நிற்பதைக் கவனித்த கௌதம் அவர்களை நோக்கி வண்டியைத் திருப்பினான்.

தன்னருகே வந்து சடர்ன் பிரேக் போட்டு நின்ற காரின் சத்தத்தில் கண்ணிரண்டையும் இறுக்கமாக மூடிக்கொண்டு, ‘நம்ம செத்துடோமா?’ என்ற கேள்வியுடன் மெல்ல கண்திறந்து பார்த்த மதுவை நோக்கி ஓடி வந்தாள் காயத்ரி.

அந்த நேரத்தில் மதுவை சுற்றிலும் ஒரே ஜாதிமல்லி வாசனை கமகமக்க, ‘என்ன இது ஜாதிமல்லி வாசனை என்னை என்னவோ பண்ணுதே’ என்று நினைத்தாள்..

“மது உனக்கு ஒண்ணும் இல்லையே?” என்றவளைக் கேட்க தன்னுடைய பதட்டம் தணிந்து எழுந்து நின்ற மது, “எனக்கு ஒன்னும் இல்ல காயூ..” என்றவள் சொல்லும் பொழுது அவளின் விழிகள் இரண்டும் கலைங்கிவிட அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள் காயத்ரி.

அதற்குள் அவளின் பக்கத்தில் வந்து, “சரக்” என்று பிரேக் போட்டு நின்ற பைக்கில் இருந்து இறங்கியவனைப் பதட்டம் மாறாமல் திரும்பிப் பார்த்த மதுவின் விழிகள் வியப்பில் விரிந்தது. மீண்டும் கௌதமை அந்த சூழ்நிலையில் எதிர்பார்க்காதவள், ‘இவன் என்ன ஹீரோவா? அன்னைக்கு சொன்ன மாதிரியே நேரில் வந்து நிற்கிறான்’ என்று இன்ப அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள்.

ஆனால் அவனோ அவளைக் கவனிக்காமல் நேராகச் சென்று  கார் ஓடியவனின் கழுத்தை சுற்றி இறுக்கிபிடித்து அவனின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து, “டேய் குழந்தைக் கடத்திட்டு எங்கடா போறீங்க.. உண்மையை சொல்ல போறீயா இல்ல” என்று மிரட்ட மற்றொரு பக்கம் இருந்த அவனின் கூட்டாளி காரில் இருந்து இறங்கி ஓடினான்.

அவனை பார்த்தவுடன் மற்றது அனைத்தும் பின்னுக்கு தள்ளபடவே வியப்புடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவனின் கையில் துப்பாக்கியைக் கண்டவுடன் போலீஸ் என்றுதெரிந்துகொண்டாள். அதே நேரத்தில் தப்பியோடிய அந்த ஆளின் காலிற்கு குறிவைத்த கௌதம் துப்பாக்கியைப் பார்த்து நடுங்கினாள் மது.

அவளின் விழிகளில் தெரிந்த பயத்தைப் பார்த்து, ‘கீழே உட்காரு..’ என்பது போல கண்ணசைக்க அவனின் கண்ணசைவு புரியாமல் நின்றாள் மது. அவள் அசையாமல் மதுவையும், சுட தயாராக நின்ற கௌதமையும் பார்த்த காயத்ரிக்கு தான் தலையே சுற்றியது.

அவள் அசையாமல் நிற்பதை கண்டு கண்டுப்பானவன், “ஏய் கீழே உட்காரு..” என்ற அதட்டலுக்குப் பயந்த மது வேகமாக கீழே அமர அவன் சுட அவன் துப்பாக்கி குண்டு தன்னை நோக்கி வருவதைப் பார்த்த மது மீண்டும் பயத்துடன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

அவனின் குறி தப்பாமல் தப்பித்து ஓடியவனின் காலில் பட்டுவிட, “அம்மா” என்ற அலறலுடன் கீழே விழுந்தவனை வந்து தூக்கிச் சென்றனர் போலீஸார்.

தன்னுடைய கூட்டாளி காலில் அடிப்பட்டு கீழே விழுவதைப் பார்த்தவனின் மனதில் பயம் ஏற்பட, “சார் என்னை ஒன்னும் பண்ணிறாதீங்க.. நான் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன்..” என்று சொல்ல, “குழந்தையைக் கடத்திட்டு இப்போ நல்லவன் மாதிரி நடிக்கிற.. நீ ஸ்டேஷன் வா உன்னை நான் கவனிக்கிறேன்..” என்று கூறினான் கௌதம்.

இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடியவே அந்த காரை சுற்றி வளைத்த போலீசாரைப் பார்த்தும் அந்த மாய உருவம் காற்றோடு கலந்து மறைந்தது. அதுவரை மதுவைச்சுற்றி வீசிய அந்த ஜாதிமல்லி வாசமும் காற்றில் மறைந்துவிட தன்னைச் சுற்றி எழுந்த மாயவலை ஒன்று அறுந்து விழுந்ததைப்போல உணர்ந்தவள் மெல்ல கண்திறந்து பார்த்தாள்.

அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று புரியவே அவளுக்கு வெகுநேரமானது.

அவளின் முகம் பார்த்த காயத்ரி, “என்னடி நடக்குது இங்கே?” என்று பயத்துடன் கேட்டாள்..

“எனக்கு மட்டும் எப்படி தெரியும்? நானும் உன் கூடத்தானே இருக்கேன்!” என்றவள் கௌதமைத் திரும்பிப் பார்க்க அவன் இன்னொரு போலீசிடம் பேசிக்கொண்டிருந்தான்..

“அசோக் இவனை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போ”  என்றவன் கூட்டாளியின் தலைவனை பிடித்து கொடுத்தவனை பார்த்தவள், “ஏய் அது அசோக் தானே? இந்த காரில் வந்தவனுக்கும், உன் குற்றால பார்தடிக்கும் ஏதாவது தகராறோ” என்றவள் யோசிக்க அவளின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் மது.

அவள் பாவமாக நிமிர்ந்து பார்க்க, “நானே இங்க என்ன நடக்குதுன்னு புரியாமல் இருக்கேன்.. நீ என்ன அவனைப் பற்றி பேசிட்டு இருக்க?” என்று எகிறினாள்.

‘இப்போதான் மதியோட தங்கை மாதிரி பேசற..’ என்று மனதிற்குள் மட்டுமே நினைத்தாள்.. அவள் நினைத்தை அவளால் வாய்விட்டு சொல்ல முடியாமல் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். இவர்களைக் கவனிக்காத கௌதம் காரின் பின் கதவைத் திறந்து குழந்தையின் முகத்தைப் பார்த்தான்.

குழந்தையின் கன்னத்தில் இருந்த கைதடத்தை பார்த்தவன், ‘குழந்தை அடிச்சிருக்கான் ராஸ்கல்..’ என்று மனதிற்குள் நினைத்தவன் குழந்தையை இரண்டு கைகளில் தூக்கினான்.

அவனை ஜீப்பில் ஏற்றிவிட்டு வந்த அசோக், “ஸார்” என்று அழைத்தான்.

“இந்த குழந்தை என் எதிர் வீட்டில் இருக்கும் பங்கஜம் என்ற பாட்டியோட பேத்தி. இவள முதலில் ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு அவங்க அப்பா அம்மாவுக்கு தகவல் கொடுங்க” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தான்..

“அசோக் இந்த விஷயம் எக்காரணத்தைக் கொண்டு மீடியாவிற்கு போகவே கூடாது” என்று எச்சரிக்கை செய்ய சரியான தலையசைத்து அவன் சென்றதும் கௌதம் திரும்பிப்பார்க்க தோழிகள் இருவரும் அவனை பார்த்தபடி நின்றிருந்தனர்.

மது, காயத்ரி இருவரையும் அவனுக்கு  ஏற்கனவே தெரியும் என்றபோதும் அவன் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் மது செய்த செயலால் அவனுக்கு கோபம்  தலைகேறியது.

அவன் அவர்களை நோக்கி வர, ‘இவரு இப்போ எதுக்கு வராருன்னு தெரியல’ என்று மனதிற்குள் புலம்பினாள் காயத்ரி.

“ஏய் உனக்கு அறிவில்ல?! நடுரோட்டில் கண்மூடி நின்னுட்டு இருக்கிற. அவன் வந்தே வேகத்திற்கு உன்மேல காரை விட்டிருந்தால் நீ இந்நேரம் பரலோகத்திற்கு டிக்கெட் வாங்கியிருப்ப” என்ற கௌதமை அவள் முறைத்தாள்.

அவளின் மீது கடலளவு கோபம் இருந்தபோதும் அவளின் கொபபார்வையை மனதிற்குள் ரசித்தவனிடம், “என்ன சார் மரியாதை இல்லாமல் பேசறீங்க” என்ற காயத்ரியை ஏறயிரங்க பார்த்தான் கௌதம்.

“முதல்ல உன் ஃப்ரெண்டுக்கிட்ட நடுரோட்டில் நின்னு கனவு காணாமல் இருக்க சொல்லு” என்றதும் அவள் சரியென்று தலையாட்ட அவன் மீண்டும் மதுவைப் பார்த்தான்.

யாருக்கு என்னானா எனக்கு என்ன என்ற ரீதியில் பேசியவனின் பேச்சில் அவளுக்கு வரவே, ‘இவன் எல்லாம் போலீஸ்..’ என்று மனதிற்குள் கறுவ காயத்ரி அவனைப் பார்த்து திருதிருவென விழித்தாள்.

“நீ மட்டும் இன்னொரு முறை நடுரோட்டில் நிற்பதை நான் பார்த்தேன்னு வை.. அப்படியே பளார் பளார்ன்னு விட்டிருவேன்..” அவளை மிரட்டிவிட்டு தன் பைக்கை ஸ்டார்ட் செய்து அவன் சென்றுவிட முதல் ஹவர் முடிந்து அடுத்த ஹவர் ஸ்டார் ஆக கல்லூரியின் பெல் அடிக்க அதைக் கவனிக்காமல் பைக்கில் சென்றவனை முறைத்தாள் மதுஸ்ரீ.

நடுரோட்டில் தன்னை மிரட்டிவிட்டு செல்பவனை கோபத்துடன் முறைத்தவளின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றாள்  காயத்ரி. அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை அவள்.

‘மனசுக்குள் பெரிய ஹீரோன்னு நினைப்பு. என்னை வந்து மிரட்டிட்டு போறான் ராஸ்கல். இனிமேல் ரோட்டில் பார்த்தா அடிப்பியோ? அப்புறம் ரோட்டில் நடந்து போகாமல் வேற எப்படி போவாங்கலாம். இன்னொரு முறை  அவனைப் பார்க்கட்டும் இருக்கு அவனுக்கு கச்சேரி’ பல்லைக் கடித்துக்கொண்டு மனதிற்குள் அவனை வருத்தேடுத்தாள் மதுஸ்ரீ.

“மது.. மது..” என்று அழைத்த அழைப்பெல்லாம் அவளின் காதிற்கு எட்டியதா என்றே தெரியவில்லை. கோபத்தில் அவன் சென்ற திசையை உறுத்து விழித்தபடி காயத்ரியின் இழுப்பிற்கு சென்றாள் மது.

அவனை சந்தித்த முதல் நாளே தன் இயல்பை தொலைத்திருந்தாள். இப்போது கேட்கவே வேண்டாம் அவனின் மீது கொலைவெறியில் இருந்தவளின் விழிகள் இரண்டு கோவைப்பழம் போல சிவந்திருந்தது.

 “மது இங்கே நான் சொல்வதை கேளுடி. அடுத்த ஹவர் ஸ்டார்ட் ஆகிருச்சு” என்று காட்டு கத்து கத்தினாள். அதற்கெல்லாம் அவளிடம் பதிலில்லை.

“ஷ்..ப்பா.. என்னால முடியல..” என்ற காயு மதுவை நடப்பிற்கு இழுத்துவர பெரும்பாடுபட்டாள்.

அவளின் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதற்குமேல் கல்லூரிக்குள் சென்றாலும் அரைநாள் ஆப்செண்ட் என்ற காரணத்தினால், “இப்போதைக்கு இவளை காலேஜ்க்கு கூட்டிட்டு போவதை விட, இப்படியே ஏதாவது ரெஸ்டாரண்ட் போவது பெட்டர்” என்ற எண்ணத்துடன், “மது..” என்று அவள் போட்ட அதட்டலில் நடப்பிற்கு வந்தாள்.

அவனின் மீதிருந்த கோபம் அப்படியே காயுவின் பக்கம் திரும்பிட, “உனக்கு என்னடி இப்போ பிரச்சனை? காலேஜ் போற எண்ணமிருந்தா இப்படியே போயிரு” என்று விரலை நீட்டி மிரட்டியவளை பார்த்து மிரண்டு விழித்தாள் காயத்ரி.

எப்போதும் அமைதியின் மறு உருவமாக நடமாடும் தன் தோழியின் முகத்தில் கோபத்தை கண்ட காயத்ரி, ‘எங்கிருந்துடா வந்த பூ மாதிரி இருந்தவளை இப்படி புயல் மாதிரி மாத்திட்டியே’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

“எங்கோ போற மாரியாத்தா என்மேல வந்து ஏறாத்தா என்ற கணக்கா அவன் மேல இருக்கிற கோபத்தை ஏண்டி என்மேல் காட்டுற” என்றவள் அருகே வந்து நின்ற பஸில் ஏற அவளோடு ஏறினாள் மது.

இருவரும் காலியான சீட்டில் அமர, “அவனுக்கு என்னவொரு தைரியமிருந்தா இந்த மதுவையே மிரட்டிட்டு போவான். அவன் மட்டும் கையில் கிடச்சான்” என்றவள் கைகளை மடக்கி சீட்டை குத்தினாள்.

அவளின் செயல்களை கவனித்த காயத்ரி, “ஏன் மது இவ்வளவு கோபம்” என்று கேட்க, “என்னவோ தெரியல அவனைப் பார்த்தா எரிச்சல் அப்படி வருதுடி” என்றாள் கடுப்புடன். இருவரும் எப்போதும் வரும் ரெஸ்டாரண்ட் இடம் வந்துவிட இறங்கினர்.

அங்கே உள்ளே சென்று மறுநிமிடமே பேரர் வந்து ஆர்டர் கேட்க, “ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் இருந்தா ஒரு பாட்டல் கொண்டு வாங்க..” என்று அவனை அனுப்பிவிட்டு மதுவின் பக்கம் திரும்பினாள்.

இன்னும் கோபம் குறையாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, “மது ரிலாக்ஸ்டி” அவளின் கையைபிடித்து அழுத்தம் கொடுத்தாள்.

ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தவள், “ஸாரி காயத்ரி கோபத்தில் ஏதாவது பேசியிருந்தா என்னை தப்பா நினைக்காதே” என்று மன்னிப்பு கேட்டாள்.

அவளின் மனநிலை உணர்ந்து காயு புன்னகைக்க அதற்குள் வாட்டருடன் வந்த பேரரிடம் சாப்பிட ஆர்டர் கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு கிளாசில் தண்ணீரை ஊற்றி அவளிடம் நீட்டி, “இந்தா இதை முதலில் குடி” என்றதும்  அவள் மறுத்து பேசாமல் வாங்கிக் குடித்தாள்.

அதில் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்த மது, “என் வாழ்நாளில் இவனை மாதிரி ஒருத்தனை சந்திக்கவே இல்ல காயு” என்றாள் கோபத்துடன்.

“அதுதான் இப்போ சந்திச்சிட்டியே” கிண்டலோடு கூறிய காயுவின் கண்களில் குறும்பை உணர்ந்து, “அடியே விளையாடாதே. அன்னைக்கு கோவிலில் குங்குமம் கொடுத்து கடுப்பை கிளப்பினான். இன்னைக்கு யாருன்னே தெரியாத மாதிரி பேசிட்டு போறான் பாரு” என்றவளின் உதட்டில் மலர்ந்த புன்முறுவலோடு.

அவள் சிரித்தபடியே ஒப்புதலாக தலையசைக்க அதற்குள் அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்துவிடவே இருவரும் சாப்பிட்டபடி, “இன்னைக்கு உனக்கு என்னாச்சு மது? திடீர்ன்னு திரும்பிப் பார்த்த நடுரோட்டில் கண்ணை மூடிட்டு நின்னுட்டு இருக்கிற” என்றாள் சந்தேகமாக அவளைப்  பார்த்தபடி.

“இன்னைக்கு காலையிலிருந்து என்ன நடக்குது என்னை சுற்றின்னு என்னால சொல்ல முடியல காயு. ஒரு குட்டி பொண்ணு மதுன்னு கூப்பிட்டதும் எனக்கு என்னவோ ஆகிருச்சு. அதுக்கு பிறகுதான் அவன் அங்கே வந்தான்” என்றாள்.

அவள் சொல்வதை கேட்ட காயுவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. ஆனால் மதுவிடம் இன்று வந்த மாற்றத்தை அவளால் உணர முடிந்தது. இவளுக்கும், கௌதமிற்கும் இடையே ஏதோவொரு மாயவலை உருவானதை காயத்ரியால் உணர முடிந்தது.

அதன்பிறகு தோழியிடம் பேசி அவளை அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் காயத்ரி. காலையில் காலேஜ் சென்ற பேத்தி மதியமே வீட்டிற்கு வந்ததை பார்த்து துணுக்குற்றார் ராஜலட்சுமி.

எந்த நேரத்திலும் புன்னகை முகமாக  இருக்கும் பேத்தியின் முகத்தில் என்றும் இல்லாத கலக்கத்தைக் கண்டு அவரின் மனம் பதறியபோதும் அதை வெளிகாட்டவில்லை.

“என்னடா உடம்புக்கு ஏதும் முடியலையா” என்று கேட்டார் ராஜலட்சுமி.

அவருடன் சோபாவில் அமர்ந்த பேத்தி, “என்னன்னு தெரியல பாட்டி காலையிலிருந்து தலை ஒரே  பாரமாக இருக்கு உங்க மடியில் படுத்துக்கவா” என்று கேள்வியாக நிறுத்தியவளின் தலையை வருடிவிட்டார்.

“படுத்திக்கோ” என்று பேத்தியை மடியில் படுக்க வைத்து மெல்ல தலையில் தைலத்தை தடவி இதமாக பிடித்துவிட்ட அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தேறினாள்.

அதுவரை அலைபாய்ந்த மனம் இப்போது அமைதிக்கு சென்றுவிட மெல்ல விழிமூடிய மதுஸ்ரீ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பேத்தியும் பளிங்கு முகத்தை ரசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார் ராஜலட்சுமி.

மாலை பொழுது சாயும் நேரத்தில் உறக்கத்தில் இருந்து கண்விழித்த மதுவின் முகம் தெளிந்து இருந்தது. அவள் சொடக்கு போட்டபடி எழுந்து அமர, “என்ன மது இன்னைக்கு காலேஜ் வராமல் இருந்துட்டா?” என்று விசாரித்தாள் மதி.

“இல்ல மதி நான் கிளம்பி வந்தேன் நடுவுல என்னனென்னவோ நடந்துபோச்சு” என்றவளின் எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள். மது சொன்னது எதுவும் புரியாவிட்டாலும் உதட்டைப் பிதுக்கிவிட்டு தோளைக் குளிக்கிவிட்டு தன் வேலையைக் கவனிக்க சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!