Sontham – 17

images (63)

அத்தியாயம் – 17

அதே நேரத்தில் தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த கௌதம் அந்த பெண்ணைக் காப்பாற்றிவிட்ட மனநிறைவுடன் தன் வேலையைத் தொடர்ந்தான். ஒரு மனிதனாக அவனின் மனம் அந்த செயலை ஆதரித்தது. அந்த பெண்ணைக் கடத்தி செல்ல நினைத்தவனின் பின்னணி என்னவென்று விசாரிக்க சொன்னான்.

அதை விசாரித்ததில் பணத்திற்காக அவர்கள் இந்த தவறை செய்ததாக சொல்லவே, ‘இப்படித்தான் எல்லா கேஸும் முடிவுக்கு வருது’ மற்ற வேலைகளை கவனித்தவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

இரவானது கூட உணராமல் அமர்ந்திருந்த கௌதம் அருகே வந்தவன், “ஸார் நேரமாச்சு” என்றான் அசோக். “சரி நீ கிளம்புடா நானும் கிளம்பறேன்” என்றவன் ஆபீஸில் இருந்து கம்பீரமாக வெளியே வந்து ஜீப்பில் ஏறினான்.

அசோக்கிற்கு கௌதம் கீழேதான் வேலை. கௌதம் தன் குடும்பத்தை டெல்லியில் விட்டுவிட்டு தனியாக தேனி வந்துவிட்டான். ஆனால் அசோக்கை அப்படி அனுப்ப மனமில்லாத அவனின் குடும்பம் முழுவதும் தேனிக்கு இடம் மாறியதால் இடையில் கௌதமை சந்திக்க அசோக்கிற்கு வாய்ப்பில்லாமல் போனது.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் முன்னாடி ஜீப்பை நிறுத்தினான் கான்ஸ்டபிள். அவனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த கௌதம் நேராக சென்று  உடையை மாற்றிவிட்டு ஒரு குளியலை போட்டு வெளியே வந்தான்.

அப்போது அவனின் செல்போன் சிணுங்கிட எடுத்துப் பார்க்க ‘அம்மா’ என்றதும் உடனே போனை எடுத்தான்.

“ஹலோ கௌதம் என்னப்பா பண்ற?” என்ற தனத்தின் குரல் சாந்தமாக ஒலித்தது.

“நான் சமைக்க போறேன் அம்மா” என்றான் மகன்.

அவனின் பதிலில் கடுப்பான தனம், “என்னையும் உன்னோடு தேனி கூட்டிட்டுப் போயிருந்தா உனக்கு இந்த பிரச்சனை வருமா?” என்றார்.

அவரின் நோக்கம் என்னவென்று தெரிந்ததால், “அம்மா உங்க மனசு எனக்கு தெரியும்.  கொஞ்சநாள் என்னை என்போக்கில் விடுங்கம்மா. என் கடமையை சரிவர செய்துவிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் எதுவும் அறியாதவன் போன்ற பாவனையோடு.

“ஆமாண்டா உனக்கு இந்த வயசில் என்ன கடமை இருக்குன்னு எனக்கு தெரியாதா?” என்று மதுவை மனதில் வைத்துகொண்டு கூறவே அவனும் சிரித்தபடி, “அம்மா” என்று அதட்டினான்.

“சரிப்பா நான் எதுவும் சொல்லல” என்றவர் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைக்கவே  சமையலறைக்கு சென்று இரவு உணவை  செய்தவனின் மனக்கண்ணில் அவளின் பளிங்கு முகம் வந்து அவனை கோபமாக முறைத்தாள்.

‘என்ன முறைக்கிற’ என்று அந்த பிம்பத்தை மிரட்ட சட்டென்று மறைந்தது அவளின் உருவம். அவனின் உதட்டில் புன்னகையின் சாயல் வந்து சென்றது.

காலையில் நடந்த விஷயங்கள் அவனின் மனதில் படமாக விரிந்திட, ‘செம தில்லுதான். நடுரோட்டில் நின்னு என்ன சாகசம் எல்லாம் பண்ற’ தன்னை மறந்து மதுவை பற்றி நினைத்தான்.

அவனின் மனம் நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்தவே, ‘இவ இந்த ஊருதான்னு அப்பா சொன்னது எவ்வளவு சரியாக இருக்கு. முதலில் அவ குடும்பத்தை பற்றி விசாரிச்சிட்டு அப்பாவுக்கு தகவல் கொடுக்கணும்’ என்ற எண்ணத்தோடு சமையலை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

மீண்டும் அவளின் கோபம் முகம் மனதிற்குள் வந்து செல்ல, “இங்கே பாரு உனக்கு அவ்வளவு தான் மரியாதை இன்னொரு முறை என்னை கோபமாக முறைச்ச மகளே உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அவன் வாய்விட்டு கூற அவளின் பிம்பம் மறைந்தது.

அவன் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகரும்போது தான் காலையில் நடந்த விசயத்தில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தது கௌதம் மனம்.

‘ஒரு பொண்ணு உயிர் பயம் எதுவும் இல்லாமல் நடுரோட்டில் நிற்க முடியுமா?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தபோது அவள் பயத்தில் கண்மூடி நின்றது அவனின் நினைவிற்கு வந்தது. அவன் சிந்தனையோடு அங்கிருந்து நகர கௌதம் அமர்ந்திருந்த டைனிங் டேபிளில் வெள்ளை நிற புகை மண்டலம் காற்றோடு கலந்து மறைந்து போனது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் மது ரொம்பவே குழப்பத்துடன் இருந்தாள். ஒருபுறம் தன்னை அடிக்கடி சூழ்ந்து வரும் ஜாதி மல்லி வாசனைக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அத்தோடு அன்று பியானோ வாசிக்கும் போட்டியில் தன் கையை யாரோ தொட்டது போல உணர்ந்தது இன்றும் அவளின் நினைவில் தெளிவாக இருந்தது.

இன்னொரு புறம் கௌதம் அன்று தன்னை திருமணம் செய்வதாக சொன்னதும், அதற்கு அடுத்த சந்திப்பில் யாரென்று தெரியாது போல அவன் பேசியது அவள் மனதை வெகுவாக பாதித்திருந்தது. ஒவ்வொரு நாளும் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது தன்னை மீறி எழும் அவனின் நினைவை அவளால் ஒதுக்க முடியாமல் போராடினாள்.

தனக்குள் நிகழும் இந்த போராட்டத்தை அவள்  அப்போதே வாய்விட்டு சொல்லி இருந்தால் பின்னாடி வரபோகும் பெரிய பின் விளைவை தடுத்து இருக்கலாமா என்னவோ?

அந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பிடிவாதமாக பியானோ கற்றுக்கொள்ள கிளாஸ் செல்ல தொடங்கினாள். அன்றும் அதுபோல பியானோ கிளாஸ் சென்றுவிட்டு ஜூஸ் குடிக்க ஒரு கடையின் முன்னாடி ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

அப்போது அந்த வழியாக கமிஷனர் ஆபீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கௌதம் இவளைப் பார்த்தும், ‘அன்னைக்கு தெரியாத மாதிரி பேசியதில் கடுப்பாகி இருப்பாளோ?’ என்ற சந்தேகத்துடன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மதுவைப் பின் தொடர்ந்தான்.

அவள் அங்கிருந்த ஒரு டேபிளில் அமரவே, “ஹாய் மது என்னை ஞாபகம் இருக்கா?” அவளின் எதிரே அமர்ந்தபடி அவளை குறும்புடன் வம்பிற்கு இழுத்தான். அவள் பதில் பேசாமல் அங்கே வந்த பேரரிடம் ஜூஸ் ஆர்டர் கொடுத்தாள்.

 தன் கைவிரல்களை ஆராய்ந்தபடி அவள் மெளனமாக இருக்கவே, “மது” என்றழைத்தான் கௌதம். அவள் நிமிராமல் வேறுபுறம் திரும்பினாள். ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனை மௌனத்தினால் சிதைத்து கொண்டிருந்தாள். அதில் இருந்தே அவள் தன் மீது கோபமாக இருப்பது புரிந்துகொண்டு கௌதம் எழுந்து செல்ல நினைக்கும்போது தான் அவளின் நெற்றியை கவனித்தான்.

நெற்றியில் போட்டிற்கு மேல் கீற்றாக குங்குமம் வைத்திருப்பதை பார்த்தும், “மது தினமும் என்னை நினைக்கிறீயா?” ஆழ்ந்த குரலில் கேட்டவன் அவளை இமைக்காமல் பார்த்தான். அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் அவனுக்கு மீண்டும் முதல் நாள் சந்திப்பை நினைவுபடுத்தியது.

தன்னை வெறுக்கும் பெண் அவன் நினைவாக இருக்கும் சில விஷங்களை தவிர்ப்பார்கள் என்று  அவன் சில புத்தகங்களில் படித்திருந்தான். அப்படி பார்க்கும்போது மதுவிற்கு குங்குமம் பார்க்கும்போது எல்லாம் அவனின் நினைவு கட்டாயம் வரும். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் அதை வைக்கும்போது தன் நினைவு வராமல் இருந்திருக்குமா என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.

அதற்குள் ஜூஸ் வந்துவிடவே அதை வாங்கிக் குடித்துவிட்டு அதற்கான பணத்தை கட்டிவிட்டு எழுந்து சென்றாள். கௌதம் அவளை தடுக்கவில்லை. அவள் செல்வதை சிந்தனையோடு பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அதற்குமேல் அதை யோசிக்க நேரம் இல்லாமல் கமிஷனர் ஆபீஸ் கிளம்பிச் சென்றான்.

அன்றைய நாளுக்குப் பிறகு மதுவை அவன் சந்திக்கவில்லை. அவளை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தாலும் அவளிடம் பேசாமல் கடந்து செல்ல தொடங்கிவிட்டான். மதுவிற்கு அவனின் மனது புரிந்தபோதும், ‘மனமே அவனுக்காக இழகிவிடாதே’ என்று இறுக்கமாகவே இருந்தாள்.

மதுவின் நடவடிக்கைகள் மாறி இருப்பதை கவனித்த மதியோ, ‘இவ ஏன் இப்படி இருக்கிற? முதலில் அமைதியாக இருந்தா. இப்போ எல்லாம் யாரைக் கண்டாலும் எரிந்து விழுகிறாளே என்ன விசயமாக இருக்கும்?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள். 

நாட்கள் அதன்போக்கில் செல்ல காயத்ரியும், அசோக்கும் காதல் பறவைகளாக மாறியிருந்தனர். கல்லூரி இறுதியாண்டில் காலடி எடுத்து வைத்தனர். மது கௌதம் நினைவுகளில் இருந்து தப்பிக்க தன்னை படிப்பில் மூழ்கடித்துக் கொண்டாள். ஆனால் அவளைத் தொடர்ந்து வரும் ஜாதிமல்லி வாசனையிலிருந்து அவளால் தப்பிக்க முடியாமல் போனது.

அன்று வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிய மது பஸ் ஸ்டாப்பிற்கு வரவே, “மது இன்னைக்கு நான் கிளாசிற்கு வரல. அசோக் என்னை வெளியே கூட்டிட்டுப் போவதாக சொல்லி இருக்கான். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே. நாங்க இருவரும் போயிட்டு வந்தபிறகு உன் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தரேன்” என்று சொல்லிவிட்டு அசோக்குடன் பைக்கில் சிட்டாக பறந்துவிட்டாள்.

அவள் சென்றபிறகு காலேஜ் போக விருப்பமில்லாமல் கால்போன போக்கில் பார்க்கிற்கு சென்றவள் அங்கிருந்த புல் தரையில் அமைதியாக அமர்ந்து தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை வேடிக்கைப் பார்த்தபடி சிந்தனையோடு அமர்ந்திருந்தாள்.

“என்ன மது இன்னைக்கு காலேஜ் போகலையா?” என்ற கேள்வியுடன் கௌதம் அருகே அமர்ந்தான். இருவருக்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தது. அவனின் மீது அவள் வளர்த்து வைத்திருந்த கோபம் அவனைப் பார்த்தும் காற்றில் கலந்த கற்பூரமாக மாறிப்போனது.

மது பதில் பேசாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட கௌதம், “என்மேல் உனக்கு என்ன கோபம்? அன்னைக்கு காலேஜ் முன்னாடி உன்னைத் தெரியாத மாதிரி நடிச்சேனே அதுக்காகவா என்னை  தவிர்க்கிற?” என்று கேட்டதுதான் தாமதம் தன் கையில் வைத்திருந்த ஹென்பெக்கை எடுத்து அவனை பட்டேன்று அடித்தாள்.

அவளின் தீடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தவன், “இப்போ எதுக்கு என்னை அடிக்கிற” அவன் குறும்புடன் கண்சிமிட்டிக் கேட்டான். ஒருவர் மீது வரும் கோபத்தை கூட உரிமையால் மட்டுமே வெளிப்படும் என்று அவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டான்.

“அன்னைக்கு நடுரோட்டில் மிரட்டிட்டு போற அவ்வளவு தைரியமா? நீ ஏன் என்னைப் பார்த்த நாளே எனக்கு குங்குமம் கொடுத்த? அதை கையில் எடுக்கும்போது எல்லாம் கை நேராக நெற்றி வகிட்டுக்குப் போகுது. உன் நினைவால் கொஞ்சம் கொஞ்சமா நான் என் சுயத்தை தொலைப்பதை நினைக்கும்போது உன்னை கொல்லனும் போல வெறி வெறியாக வருது கௌதம்” என்று அருவிபோல அவள் கொட்டித் தீர்த்தாள்.

அவள் சொல்ல சொல்ல அவனின் விழிகள் வியப்பில் விரிய, “மது” என்று சொல்லி அவளின் கரம்பிடித்து தடுத்தான். அவளோ அவனை கோபத்துடன் முறைத்தபடி, “என் கையை விடு கௌதம்” என்றாள்.

அவன் மறுப்பாக தலையசைத்து, “நீ என்னை லவ் பண்ற இல்ல மது. அப்புறம் ஏன் என்னை கண்டுகாத மாதிரி நடந்துகிட்ட?” என்று அவளின் செயலுக்கான காரணத்தை கேட்டான்.

அவனை அடிப்பதை நிறுத்துவிட்டு, “நீ அன்னைக்கு என்னை தெரியாத மாதிரி நடந்துகிட்டது எனக்கு கோபத்தை வரவழைச்சது. ஆனால் அதெல்லாம் கொஞ்சநேரம் தான் இருந்தது. அன்னைக்கு ஜூஸ் கடையில் நீ வந்து பேசியதும் கோபம் எல்லாமே மறந்தே போச்சு” என்று அவள் சொல்லி முடிக்க அவளின் அருகே நெருங்கி அமர்ந்தான் கௌதம்.

மது பயத்துடன் பார்வையைச் சுழற்றிட, “இவ்வளவு காதல் என் மேல் எப்போ வந்துச்சு” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அவள் மௌனமாக சிரித்துவிட்டு, “நான் சொல்ல மாட்டேன்” மறுப்பாக தலையசைத்தாள். அவளின் செயல்கள் சிறுகுழந்தை பிடித்த சாக்லேட் வாங்கிக் கொடுத்தாலும் வாங்க மறுப்பது போலவே இருந்தது.

“இப்போ நீ உண்மையைச் சொல்லல. நான் எழுந்து போயிருவேன். இனிமேல் உன்னை பார்க்கவே வர மாட்டேன்” கௌதம் எழுந்து செல்வது போல பாவனை செய்யவே, “சரி சொல்றேன்” என்றவுடன் அவன் சிரித்தபடியே அவளின் அருகில் அமர்ந்தான்.

“குற்றாலத்தில் உன்னை பார்த்துட்டு வந்தபிறகு உன்மேல் சரியான கோபம் இருந்துச்சு. அதுக்கு பிறகு கோபம் குறைஞ்சுபோச்சதும் அடிக்கடி நானே உன்னை நினைப்பேன். ஆனா அன்னைக்கு ரோட்டில் என்னை தெரியாத மாதிரி  பேசிட்டு போனது மீண்டும் கோபம் வந்துருச்சு. அதுதான் ஜூஸ் கடையில்  உன்கூட பேசாமல் எழுந்து போனேன். அடுத்தடுத்த சந்திப்பில் நீ பேசாமல் அமைதியா என்னை கடந்துபோகும்போது மனசு வலிக்கும். ஆனால் உன்னோட அந்த கண்ணியம் எனக்கு ரொம்ப பிடிச்சுது கௌதம்” என்றாள் அவள் காதலோடு அவன் தோள் சாய்ந்தபடி.

தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கு பின்னோடு இருக்கும் காரணத்தை தெளிவாக புரிந்து வைத்திருந்த மதுவின் மீது கௌதம் உயிரையே வைத்தான். இனிவரும் நாட்களில் அவளோடு இணைந்து வாழ வேண்டும் என்று ஆசைபட்டான்.

“வா வீட்டுக்குப் போலாம்” என்று கௌதம் சொல்லவே சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் மது. அப்போதுதான் அவன் தான் இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தான் என்ற கேள்வி மனதில் எழுந்தது.

அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிய, “நான்தான் காயத்ரியை அசோக் கூட அனுப்பிட்டு உன்னைப் பார்க்க வந்தேன், நீ இங்கே வந்து உட்கார்ந்துட்ட” என்றான் கள்ளச்சிரிப்புடன்.

அவனை முறைக்க நினைத்து முடியாமல் போகவே, “போலீஸ் செய்கின்ற வேலையா இது திருடா” என்றாள் மது புன்னகையுடன்.

“ஏன் போலீஸ்காரன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணக் கூடாதுன்னு புது சட்டம் கொண்டு வந்துட்டாங்களா?” என்று கேட்டு அவளை வியப்பில் ஆழ்ந்தினான்.

அவள் விழி விரிய அவனைப் பார்க்க, “எனக்கு எப்போதும் நீதான் பொண்டாட்டி” என்று அவளின் மனதைப் படித்தவன் போல பதில் கொடுக்கவே வெக்கத்தில் முகம் சிவக்க அவனின் தோள் சாய்ந்தாள் மது.

அவனும் அவளின் தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டு, “இப்போ போலாமா” என்று கேட்க அவளோ சம்மதமாக தலையசைத்தாள். இருவரும் சேர்ந்து அவன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர்.

கௌதம் பைக்கை நிறுத்திவிட்டு கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த ஜாதிமல்லி வாசனை இருவரின் மனதையும் இருவேறு விதங்களில் பாதித்தது. மதுவோ அந்த வாசனையை நுகர்ந்ததும், ‘இன்னைக்கு யாருக்கு என்ன ஆபத்து வருமோ? அதில் என்னை எப்படி சிக்க வைக்க போகுதோ இந்த வாசனை?’ என்று நினைத்தாள்.

மற்றொரு புறம், ‘ஜாதிமல்லிச்செடி இந்தப்பக்கம் எந்த வீட்டிலும் இல்லையே? ஆனால் வாசனை மட்டும் கமகமன்னு வருது.. என்னவோ சரியில்ல’ என்று நினைத்தபோதும் மதுவிடம் அவன் அதை வெளிகாட்டவில்லை.

அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் ஹாலில் மட்டபட்டிருந்த கௌதம் போட்டோ அண்ட் அதோடு இருந்த யுகேந்திரன் – தனத்தின் போட்டோவைப் பார்த்தும், “ஏய் இவங்க உன் அப்பா, அம்மாவா?” என்று ஆர்வமாக கேட்டான்.

“ஏன் அவங்களை உனக்கு தெரியுமா?” என்று அவன் தூண்டில் போட, “ஓ நல்ல தெரியுமே! அம்மாவும், அப்பாவும் அடிக்கடி இவங்க இவரைப்பற்றியும் வீட்டில் பேசுவாங்க. அவங்க இருவருக்கும் கௌதம் என்ற பையன் இருந்தான்னு கூட  சொல்வாங்க” என்றவள் அவனிடம் பதில் வராததை கண்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.