Sontham – 21

38960b7ce437656ff3f7676008ceaae4

அத்தியாயம் – 21

கௌதம் மதுவை அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றான். வழக்கமாக உட்காரும் இடத்தில் இருவரும் அமர்ந்தனர். மது என்னதான் அவனோடு இயல்பாக பேசியபோது மனதில் அந்த குரல்மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவள் சிந்தனையோடு கௌதமை இமைக்காமல் பார்க்க, “மது உன்னிடம் ரொம்பநாளாகவே ஒரு விஷயம் கேட்கனும்னு நினைப்பேன். அப்புறம் எல்லாம் மறந்து போயிருவேன். இப்போ அந்த விஷயத்தை கேட்கட்டுமா?” அவளின் மனதை திசைதிருப்ப எண்ணி கேட்டான்.

“ம்ம் கேளு கௌதம்” என்றாள் சிரிப்புடன்.

“ஆமா அன்னைக்கு குற்றாலத்தில் நீ ஏன் மது அருவியில் குளிக்கில” என்று வில்லங்கமான கேள்வி கேட்டவனை அவள் கொலைவெறியுடன் பார்த்தாள்.

அவளின் கோபபார்வையை மனதிற்குள் ரசித்த கௌதம், “என்ன இப்படி பார்க்கிற? நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல” என்றான்.

“இப்போ அதை தெரிஞ்சி நீ என்ன பண்ணப்போற?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்” அவன் வேண்டும் என்றே இழுக்க மது அமைதியாக கைவிரல்களை ஆராய்வதை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தான்.

அவள் பதில் எப்படி சொல்வதென்று புரியாமல் மெளனமாக இருக்க, “உனக்கு அருவி பிடிக்காதா?” என்றதும் மறுப்பாக தலையசைத்தவள், “அருவி ரொம்ப பிடிக்கும்” என்றவளின் கன்னங்களில் லேசாக சிவக்கத் தொடங்கியது.

“அப்புறம் ஏன் அதில் நீ நனையல” என்று அவன் அந்த கேள்வியிலேயே நின்றான். ஆனால் அவனின் மனமோ அவளின் பதிலை ஆர்வமாக எதிர்பார்த்தது.

சிறிதுநேரம் இருவரின் இடையே மௌனம் நிலவிட, “அன்னைக்கு நீ என்னை பார்த்துட்டே இருந்த கௌதம். அது எனக்குள் ஒரு மாதிரி மாற்றத்தை உருவாக்குச்சு. தண்ணீரில் நனைந்தால்..” என்றவள் அதற்கு மேல் சொல்ல தாங்கியபடி உதட்டைக் கடித்துக்கொண்டு மௌனமானாள்.

அவள் சொல்லாமல் விட்ட விஷயத்தை அவளின் கதுப்பு நிற கன்னங்களில் அங்கங்கே எட்டிப்பார்த்த சிவப்பு ரோஜாக்கள் சொல்லிவிடவே, அவனின் இதயத்தில் பனிச்சாரல் வீசியது. 

“அப்போவே நீ என்னை விரும்பி இருக்கிற இல்ல” ரகசியமாக அவளின் கன்னம் வருடியபடி கேட்டான்.

அவள் சட்டென்று நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, “நீ வேற என்ன பதில் சொல்லி இருந்தாலும் உன்னைக் கிண்டல் பண்ணிருப்பேன். ஆனால் நீ நனையாமல் இருந்ததுக்கு சொன்ன காரணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பெண்ணை பெண்ணாக உணர வைப்பது தான் ஒரு ஆணின் வெற்றி அடங்கியிருக்கு. என்னைப் பார்த்த முதல்நாளே நீ அப்படி நினைச்சிருக்கிற என்றால் அப்போவே என்னை காதலிச்சிருக்கிறன்னு தானே அர்த்தம்” என்று கேட்டபடி அவளை இழுத்து நெஞ்சுடன் சேர்த்து அணைத்தவன் அவளின் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான்.

அவளின் கன்னங்கள் மீண்டும் சிவக்க அதை மறைக்க எண்ணி, “ஹலோ பாஸ் இது பார்க்” மது குறும்புடன் அவனை வம்பிற்கு இழுத்தாள்.

“அது எனக்கு நல்லாவே தெரியும்” என்றான் சிரிப்புடன் அவளின் உதட்டை கிள்ளியபடி.

“அப்போ நாளைக்கு பேப்பரில் நம்மதான் ஹெட் லைனில் வரபோறோம் இல்ல” என்று அவள் கிண்டலாக கேட்டாள்.

“ம்ம் தேனியின் ஏசிபி கௌதம் பப்ளிக் வந்து செல்லும் பூங்காவில் தன் காதலியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்தப்பெண் தேனியின் பிரபல தொழிலதிபர் தாமோதரனின் மகள் மதுஸ்ரீ. அவளின் அம்மா தமயந்தி தேனியின் முன்னாள் கலெக்டர் என்பது குறிப்பிட தக்கது” என்று அவன் பத்திரிகையில் வாசிப்பது போல கூறவே கலகலவென்று சிரித்தாள் மது.

“கௌதம் சான்சே இல்ல. செம நியூஸ். அடுத்த நாள் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியை நான் சொல்லவா. இந்த விஷயத்தை அறிந்த தாமோதரன் உடனே தன் மகளை ஏசிபி கௌதமிற்கு மணமுடிக்க முடிவெடுத்தார். கௌதமின் தந்தை தாமோதரனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிட தக்கது. வெகு சீக்கிரத்தில் தேனியில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்குமென்று சட்டபூர்வமாக அறிவித்தார்” என்று அவள் அதே ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு பக்கென்று சிரித்தனர். சிறிதுநேரம் அவளிடம் வேறு விஷயங்களை பேசிய கௌதமின் காதுகளில் அந்த பாடல் தெளிவாக கேட்டது. அவன் ஆவலோடு மதுவிடம் சொல்ல திரும்ப அவளின் உதடுகள் பாடலின் வரிகளை முணுமுணுப்பதை கவனித்தான்.

கௌதம் மெல்ல அவளின் கரங்களில் கைவைக்கவே மது சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றாக கவ்வி நின்றது.

விண்ணும் மண்ணும் வண்ணம் மாறலாம்
நான் கொண்ட நேசம் எந்த நாளும் மாறாது
இன்னும் இன்னும் ஏழு ஜென்மங்கள்
நான் போடும் மாலை வேறு தோளை சேராது
பாய் போடும் பாட்டு பாடும் காலம் எப்போது
காலங்கள் ஆனால் கூட தாளம் தப்பாது
நான் கேட்கும் தேனும் பாலும் வேண்டும் இப்போது
நாணல் போல் நாணம் கொண்டு நானும் ஆட நீயும் கூட” அந்த வரிகள் அவர்களின் மனதை அப்படியே பிரதிபலித்தது.

“கௌதம் என்னை மறக்க மாட்ட இல்ல” என்று கேட்டவளின் கரங்களைக் கோர்த்து நெஞ்சோடு சேர்த்து வைத்துகொண்டு, “உன்னைத் தவிர வேற பெண்களுக்கு என் மனசில் அணுவளவும் இடமில்ல மது” என்றான் காதலோடு.

அவள் ஆனந்த கண்ணீரோடு அவனின் தோள் சாயவே அவனும் அவளை அணைத்தபடி சிறிதுநேரம் மெளனமாக இருந்தான். அதன்பிறகு மதுவை அவளின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீடு நோக்கி பயணித்தவனின் மனமோ மதுவையே சுற்றி வந்தது.

‘என் பக்கத்தில் இருந்தா அவ வேற யாரைப்பற்றியும் யோசிக்காமல் சிரித்து சந்தோசமாக இருக்கிறா. அதே நான் கொஞ்சம் விலகி இருந்தால் அவளை அந்த புகைமண்டலம் தொல்லை கொடுக்கிறது. இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு சீக்கிரம் மதுவை கல்யாணம் செய்வதுதான்’ என்ற முடிவிற்கு வந்தான்.

அவன் வீட்டிற்கு சென்றதும் தந்தைக்கு அழைத்து உடனே தேனி புறப்பட்டு வரும்படி கூறினான். அவர்கள் இருவரும் அடுத்த ஒரு வாரத்தில் தேனியை வந்தடைந்தனர்.

“அம்மா நீங்க தாமோதரன் மாமாகிட்ட பேசி மதுவை எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. ஏன் எதுக்கு என்ற காரணம் எல்லாம் என்னிடம் கேட்காதீங்க” என்று சொல்லிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பிச் சென்றான்.

அவன் செல்லும் வரை அமைதியாக இருந்த தனம், “என்னங்க இவன் நம்மள திடீரென்று கிளம்பி வரச்சொல்லி இப்படியொரு குண்டைத்தூக்கி போட்டுட்டுப் போறாங்” என்றார் அவர் பதட்டத்துடன்.

“தனம் இதுக்காக ஏன் பயப்படற? கௌதம் சொன்னால் அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும். நீ வா நம்ம தாமோதரன் வீட்டிற்குப்போய் இதுபற்றி பேசிவிட்டு வரலாம்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு மதுவின் வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் வீட்டிற்கு சென்றபோது மதுவைத் தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருந்தனர். தாமோதரனும் – தமயந்தியும் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

“என்ன தனம் திடீரென்று கிளம்பி வந்திருக்கிற?” என்று ராஜலட்சுமிதான் முதலில் கல்யாணப் பேச்சிற்கு புள்ளையார் சுழிபோட்டு தொடக்கி வைத்தார்.

கணவனும் – மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு, “இல்லம்மா நம்ம மதுவை கௌதமிற்கு பெண்கேட்டு வந்திருக்கிறோம்” என்று அவர்கள் வந்த விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்தனர். ஆனால் மகனின் காதல் விவகாரத்தைப் பற்றி அவர்கள் இருவருமே வாய்திறக்கவில்லை.

அதைகேட்ட தாமோதரன் – தமயந்தியின் முகம் பளிச்சென்று மலரவே, “உன் மகனுக்குப் பொண்ணுதானே வேணும். நீ இப்போ சரின்னு சொல்லு நாளைக்கே கல்யாணத்தை முடித்துவிடலாம்” என்றனர் கணவனும், மனைவியும் ஒரு மனதாகவே.

ஆனால் மதுவிற்கு முன்னாடி ஸ்ரீ மதி இருப்பதால், “தம்பி நல்ல காரியம் பேசும்போது அபசகுமா பேசறேன்னு நினைக்காதீங்க. மதுவுக்கு முன்னாடி பிறந்தது மதிதான். கௌதமிற்கு அவதான் சரியான ஜோடி. மது எல்லாத்துக்குமே கொஞ்சம் பதட்டபடுவாள். கௌதம் போலீஸ் ஆபீசர் வேற! அவன் வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவ பதறிப் போயிருவாள்” என்று மதுவின் குணத்தை அடிக்கிகொண்டு சென்றார்.

யுகேந்திரனுக்கும், தனத்திற்கும் மகனின் மனம் என்னவென்று தெரியும் என்பதால், “இல்லம்மா மது கொஞ்சம் அமைதியான பொண்ணு அதுதான் அவளைக் கேட்டோம். நீங்க மதிக்கு வேற இடத்தில் வரன் பார்த்து இருப்பீங்கன்னு நினைச்சோம்” என்று பட்டும்படாமல் பேசினாள்.

“அதனால் என்ன தனம். கௌதம் நம்ம பையன்தானே. நம்ம மதியைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னால் பண்ணிக்க மாட்டானா? அதுமட்டும் இல்லாமல் மதி ரொம்ப தைரியமான பொண்ணு. அதனால் எதுக்கும் பயப்பட வேண்டாம். நீ எதுக்கும் அவனிடம் ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லும்மா” என்று சொல்லி இருவரையும் வாயடைக்க வைத்துவிட்டார் ராஜலட்சுமி.

தாமோதரன் – தமயந்தி இருவருக்கும் அவரின் பேச்சில் இருந்த உண்மை புரியவே, “அவங்க சொல்வதும் சரிதானே. இதை நாங்க யோசிக்கவே இல்ல” என்றனர்.

கடைசியில் வந்த விஷயத்தை நேரடியாக கேட்டும் பலன் இல்லாமல் போனதால், “சரிம்மா நான் கௌதமிடம் இதுபற்றி பேசறேன். உங்க பேத்திகளில் யார் எங்க வீட்டுக்கு வந்தாலும் எங்களுக்கு சந்தோசம்தான்” என்ற யுகேந்திரன் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தனர்.

அதன்பிறகு கௌதம் மதுவை உயிராக நேசிப்பதை உணராத இருவரும் ஸ்ரீ மதியுடன் கல்யாண தேதியை குறித்துவிட்டு வந்திருந்தனர்.

தாய் – தந்தை இருவரும் தங்களின் கல்யாண பேச்சை எடுத்து அது சுபமாக முடிந்திருக்கும் என்ற எண்ணத்துடன் வீடு வந்து சேர்ந்தவனிடம், “கௌதம் உனக்கும் ஸ்ரீமதிக்கும் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருக்கோம்” என்று குண்டைத்தூக்கி போட்டனர்.

“நான் மதுவை விரும்புவது தெரிஞ்சும் நீங்க இருவரும் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தீங்க” தாயிடம் சண்டைக்குப் போனான்.

“எங்களால் அவங்களுக்கு பதில் சொல்ல முடியலடா. அவங்க பரம்பரை பரம்பரையாகவேபணக்காரங்க. தமயந்திகாக மட்டும்தான் நம்மள அவங்க ஏத்துக்கிட்டாங்க. என்னதான் நீ போலீசாக இருந்தாலும் பணபலம் முன்னாடி நம்ம கொஞ்சம் பணிஞ்சிதான் போகணும். அதுதான் ஸ்ரீ மதியை கட்டி தரேன்னு சொன்னாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்று சொல்லி தனம் மொத்த பழியையும் தன் தலைமீது போட்டுக் கொண்டார்.

தாயின் பேச்சில் இருந்த நிதர்சனம் புரிந்தபோதும், “இல்லம்மா எனக்கு மதுதான் வேணும்” என்று முடிவாக கூறினான் கௌதம். யுகேந்திரனும், தனமும் அவனுக்கு எத்தனையோ எடுத்து சொல்லியும் அவன் தன் முடிவிலிருந்து எள்ளளவும் மாறவில்லை.

“மதுவும், மதியும் உருவத்தில் ஒரே மாதிரிதான் இருக்காங்க. இன்னைக்கு இருக்கும் மது நாளைக்கே ஏதாவது இறப்பில் இறந்துட்டா அப்போ நீ மதியை கல்யாணம் பன்னிதானே ஆகணும்” என்று சொல்லும்போது தனத்தில் நாக்கில் சனி புகுந்ததோ என்னவோ?

அதைகேட்டு, “அம்மா” என்று கோபத்தில் கர்ஜித்தவன், “என்னால் மதுவைத் தவிர வேறொரு பெண்ணை மனதளவில் கூட நினைச்சுப் பார்க்க முடியாதுன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா அவ செத்துருவான்னு சொல்றீங்க. விளையாட்டுக்கு கூட இன்னொருமுறை இப்படி சொல்லாதீங்க” என்று கூறியவன் வேகமாக தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

கணவன் – மனைவி இருவரும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “இதோ வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் வந்து ஒருவாரம் ஆச்சு. இன்னும் போகலாமான்னு முடிவுகூட பண்ணாமல் இருந்தேன். ஆனா இப்போ சொல்றேன். எனக்கு மது மட்டும்தான் மனைவியாக வரணும். அப்போதான் நான் மறுபடியும் இங்கே வருவேன். அதுவரைக்கும் என்னைபற்றி யாரும் கனவில் கூட யோசிக்காதீங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.

அதே நேரத்தில் மதுவின் வீட்டில் பெரிய பிரளயத்தையே உருவாக்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீமதி. கௌதம் பெற்றோர் செல்லும் வரை அமைதியாக இருந்தவள், “பாட்டி எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல” என்ற பேத்தியை முறைத்தார் ராஜலட்சுமி.

“இப்போ ஏன் வேண்டான்னு சொல்ற? கௌதமை உனக்கு பிடிக்கலயா?” வெடுக்கென்று கேட்டார் ராஜலட்சுமி.

“பாட்டி நான் மது மாதிரியெல்லாம் கிடையாது. எனக்கு இந்த கல்யாணம், குடும்பம், குழந்தை எல்லாம் சேட் ஆகாது. ஒரு ஆணுக்கு அடங்கி அனுபணிந்து போய் சேவகம் பண்ண என்னால முடியாது. எனக்கு அப்பா பிஸ்னஸ் எடுத்து நடத்தணும். நிறைய வெற்றியடையணும். இதை தவிர எனக்கு இப்போ வேற எண்ணம் இல்ல” என்று தன் மனதில் உள்ளதை மறைக்காமல் கூறினாள்.

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்ல” என்றார் ராஜலட்சுமி அவளையே பார்த்தபடி.

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல. கௌதமிற்கு பொண்ணு கொடுக்க நினைத்தால் மதுவை கல்யாணம் பண்ணி கொடுங்க. நான் அதுக்கு தடை சொல்ல மாட்டேன். ஆனால் என் வழியில் குறுக்க வராதீங்க. நான் படிக்க வெளிநாடு போவதாக முடிவு பண்ணிருக்கேன்” என்று கடைசிக்கு ஒரு குண்டைத்தூக்கி போட்டுவிட்டு மாடியேறிச் சென்றுவிட்டாள்.

இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் யாரை சமாதனம் செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர் தாமோதரனும், தமயந்தியும்!

தாய் தந்தையின் மீது இருந்த கோபத்தில் மறுநாளே ட்ரான்ஸ்பர் கிடைத்த இடத்திற்கு மாற்றலாகி சென்றுவிடவே யுகேந்திரன் – தனம் இருவரும் அசோக் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். இந்த பிரச்சனையில் மதுவைப் பற்றி சிந்திக்க மறந்தான் கௌதம்.

அவன் சென்றபிறகு மது மனதளவில் அதிகமாக பாதிக்கபட்டாள். ஒருபுறம் வீட்டில் இருந்த அனைவரின் முகமும் சரியில்லாமல் இருப்பதை கண்டு மதியிடம் விஷயம் என்னவென்று விசாரிக்க, “என்ன எதுக்குன்னு கேட்காமல் இருந்த பதில் சொல்வேன்” என்றாள்.

“ம்ம் சரி என்னன்னு சொல்லு” என்ற மது கௌதம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

“எனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்க பிடிக்கலன்னு சொல்லிட்டேன்” என்றாள் மதி சாதாரணமாகவே.

அதைகேட்டு, “ஹே மதி ஏன் வேண்டான்னு சொன்ன?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள் மது. அவள் பாட்டியிடம் சொன்ன காரணத்தையே இவளிடமும் கூறினாள்.

“இதுக்காக ஏன் நீ திருமணம் வேண்டான்னு சொல்ற? கண்டிப்பா உனக்கு வரபோகும் ஹஸ்பென்ட் உனக்கு பக்கபலமாக இருப்பார் மதி. அதனால் நீ இதெல்லாம் போட்டு குழப்பிக்காமல் பாட்டி விருப்பத்திற்கு ஓகே சொல்லு” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.

‘தனக்கு பார்க்கபட்டிருக்கும் மாப்பிள்ளை கௌதம்தான் என்று மதுவிற்கு தெரியவந்தால் என்ன நடக்குமோ?’ என்ற சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் மதி. திடீரென்று அவளின் மனதில் அந்த எண்ணம் உதயமானது.