Sontham – 22

images (58)

Sontham – 22

அத்தியாயம் – 22

மறுநாள் வழக்கம்போல ஸ்ரீமதியும், மதுஸ்ரீயும் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றனர். ஏற்கனவே கௌதம் சொல்லாமல் வேறு ஊருக்குச் சென்றதற்கான காரணம் புரியாமல் குழப்பத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தனர்.

அனைவரும் வகுப்பறைக்குள் நுழையும்போது எல்லோரும் சீனியர் பெண்ணுடன் பேசிக்கொண்டு இருக்கவே, “ஹாய் சீனியர்! என்ன இன்னைக்கு காத்து எங்க கிளாஸ் பக்கம் வீசுது” என்று கிண்டலாகக் கேட்டாள் ஸ்ரீமதி

“வாங்க மேடம்! என்ன இப்போதான் உங்க கண்ணுக்கு நான் சீனியர்னு தெரியுதா?” என்று அவளை வம்பிற்கு இழுத்தாள் மேகலா.

இருவரும் விட்டால் ஒருவரையொருவர் வம்பிழுத்து கொண்டே இருப்பார்கள் என்று உணர்ந்து, “நீங்க இருவரும் முதலில் பேசுவதை நிறுத்துங்க. மேகலா அக்கா இப்போ என்ன விசயமாக வந்து இருக்கீங்க” ஆர்வத்துடன் கேட்டாள் மதுஸ்ரீ.

“அதை நான் சொல்றேன்” என்று அங்கு வந்த காயத்ரி, “அக்காவுக்கு அடுத்தவாரம் அவங்க ஊரில் கல்யாணம். நம்மள எல்லாம் ஸ்பெஷலாக இன்விடேஷன் கொடுத்து இன்வெயிட் பண்ண வந்திருக்காங்க.” என்று குறும்புடன் முடித்தாள்.

அதைகேட்டு அக்கா, தங்கை இருவரும் மேகலாவிற்கு வாழ்த்துச் சொல்லவே, “இங்கே பாருங்க இந்த கிளாஸில் எல்லோரும் என் கல்யாணத்திற்கு கண்டிப்பா வரணும். உங்களுக்கு எல்லா ஏற்பாடும் நான் அங்கே செய்து வைக்கிறேன். அதனால் எல்லோரும் ஊர் வந்து சேரும் வழியைப் பாருங்க” என்று செல்லமாக சொல்லிவிட்டு அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்பினாள்.

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம் சீனியர் அக்கா கல்யாணத்திற்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கீங்க?” என்று அனைவரையும் அமைதிபடுத்தி அமர வைத்துவிட்டு கேட்டாள். வருண், காயத்ரி, மதுஸ்ரீ மற்றும் இன்னும் சிலர் கை தூக்கவே மற்றவர்கள் வீட்டில் கேட்டுவிட்டு சொல்வதாக கூறினார். 

“அப்போ ஓகே நம்மளும் போய் கல்யாணத்தில் கலந்துக்க வேண்டியதுதான்” என்ற முடிவுடன் அவள் இடத்தில் சென்று அமரவே வருணின் பார்வை மதியின் மீது படிந்து மீண்டது.

மதிய உணவு இடைவேளையில் மது, மதி, காயத்ரி மூவரும் பேசியபடி சாப்பிட்டு முடித்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர்.

வருண் மட்டும் அவனின் இடத்தில் அமர்ந்திருப்பது கண்டு, “என்ன வருண் சாப்பிட போகலயா?” என்று கேட்டாள் மது. அவன் மறுப்பாக தலையசைக்கவே, “ஏன் நீ போகல” என்று கேட்டாள்.

அவன் காரணம் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மது உனக்கு ஒரு சப்ரைஸ்” என்றவள் மதுவிடம் காரணம் சொல்லாமல் இழுத்துச் சென்றாள். மதி வழக்கம்போலவே தன் செல்லை எடுத்து நோண்ட துவங்கிட அவளின் மீது பார்வை பதித்தபடி அமைதியாக இருந்தான் வருண்.

காயத்ரி இழுத்த இழுப்பிற்கு சென்ற மது, “ஏண்டி என்னை இவ்வளவு பாடுபடுத்திற? இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை?” எரிச்சலோடு கேட்டாள்.

“ஹே லூசு அங்கே திரும்பிப் பாரு. அப்புறம் எல்லாம் உனக்கு தெளிவா புரியும்” என்று அவள் கைகாட்டிய திசையைத் திரும்பிப் பார்த்தாள் மது.

அங்கே கௌதம் சிரிப்புடன் நின்றிருப்பதை கண்டு கோபத்துடன், “இதுதான் நீ சொன்ன சப்ரைஸா?” என்று பல்லைக்கடித்துக்கொண்டு திரும்பி வகுப்பறையை நோக்கி நடக்க தொடங்கினாள்.

மதுவிடம் சொல்லாமல் சென்றது கௌதம் மனதை வெகுவாக பாதிக்கவே அவளைப் பார்ப்பதற்காகவே தேனி வந்திருந்தான். அசோக் தான் காயுவிடம் சொல்லி மதுவை கீழே அழைத்துவர சொன்னான்.

அவளை குழப்பத்துடன் பார்த்த காயத்ரி, “ஸாரி அண்ணா. அவ ஏன் இப்படி பண்றான்னு புரியல” என்று கௌதமிடம் சொல்லிவிட்டு செல்லும் மதுவைக் கேள்வியாக நோக்கினாள்.

“காயூ நீ அவளை டிஸ்டப் பண்ணாதே. நான் சொல்லாமல்  கிளம்பி போயிட்டேன்னு கோபமா இருக்கிறா. இன்னும் இரண்டு நாளில் அவளே எனக்கு கால்பண்ணி பேசுவ என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் வேறொரு வேலை விசயமாக வந்தேன் அப்படியே இவளையும் பார்த்துட்டு போகலாம்னு தான் காலேஜிற்கு வந்தேன். ஆனால் அவ முகத்தை திருப்பிட்டுப் போற. சரி விடு பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப நினைத்து சிறிதுதூரம் சென்றவன் மீண்டும் அவளின் அருகே வந்தான்.

“என்ன அண்ணா?” என்று அவள் கேட்கவே, “எங்க வீட்டில் மதியைப் பெண்கேட்ட விஷயம் அவளுக்கு தெரியாது காயூ. நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிட்டதாக நினைச்சிட்டு இருக்கிற. நீ அவளிடம் இந்த விஷயத்தை சொல்லாதே அவ அதை தாங்கமாட்டா. அதுக்குபிறகு தேவையில்லாமல் பிரச்சனை வரும்” என்று சொல்லவே அவளும் சரியென்று தலையசைக்கவே கௌதம் அங்கிருந்து கிளம்பிச் செல்ல காயத்ரி வேகமாக கிளாஸ் ரூம் நோக்கி நடந்தாள்.

மது வேகமாக வகுப்பறைக்குள் நுழைய, “ஐ லவ் யூ மதி” என்று அவளின் முன்னாடி ரோஜா பூவை நீட்டியபடி நின்றிருந்தான். ஏற்கனவே கௌதமை திருமணம் செய்ய சொல்லி நடந்த பிரச்சனையே இன்னும் தீராமல் இருந்தது. அதே நேரத்தில் வருண் வந்து அவனின் காதலை சொல்லவே மதியின் மொத்த கோபமும் அவனின் மீது திரும்பியது.

அடுத்த நிமிடமே எதைபற்றியும் யோசிக்காமல், வருண் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிடவே, “மதி” என்று கத்தினாள் மது.

வருண் தன் கன்னத்தை தொட்டுப் பார்த்துவிட்டு, “மதி” என்று தொடங்கும்போது, “வருண் நீ பேசாதே” மது இடையில் புகுந்து அவனை தடுத்தாள்.

மதி கோபத்துடன் வருணை முறைத்துக்கொண்டு, “தினமும் நான் போட்டுட்டு வரும் துணியிலிருந்து வரும் கார்வரை கமெண்ட் அடிக்கிறன்னு உன்னை சும்மாவிட்டது என் தப்பு. காலேஜ் உள்ளே நுழைந்த முதல்நாளே உனக்கு என் கைவரிசையைக் காட்டி இருக்கணும்” என்றாள்.

வருண் அவளை முறைக்கவே, “மதி நீ என்ன பேசற? முதலில் ஒரு பொண்ணு ஒரு ஆணை கைநீட்டி அடிப்பது சரியா? உனக்கு பிடிச்சிருந்தால் பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லன்ன விருப்பம் இல்லன்னு சொல்லி ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? இப்போ எதுக்கு அவனை அடிச்ச நீ பணக்காரி. அவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் என்றா?” என்று கோபத்துடன் கேட்டாள்.

மதுவின் கோபத்தில் நியாயம் இருப்பது புரிந்து மதி அமைதியாக நின்றிருக்க, “இங்கே பாரு மதி நம்ம கிட்ட கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் அது நம்ம சம்பரித்தது இல்லை. ஆனால் அவன் அப்படி இல்ல. வருண் அவனோட காலேஜ் பீஸ் கூட அவனே கட்டி படிக்கிறான். அது அவனோட டிகிரின்னு அவன் பெருமையாக சொல்லலாம். ஆனால் நம்ம அப்படியா படிக்கிறோம். தேவை இல்லாமல் ஒருத்தரைக் கைநீட்டு வேலையை வெச்சுக்காதே” என்று அவளைத் திட்டிவிட்டு வருணின் பக்கம் திரும்பினாள்.

அவன் இன்னும் கோபம் குறையாமல் நின்றிருக்கவே, “வருண் எனக்காக அவளை மன்னிச்சிரு. மதி ஏதோ கோபத்தில் உன்னை அடிச்சிட்ட. அதை பெருசு பண்ணாதே பிளீஸ்” அவனின் கோபத்தை தணிக்கும் விதமாக அவள் பேசவே வருண் சரியென்று தலையசைத்தான்.

ஒருபுறம் மது அவனுக்கு தோழியாக நின்று பேசியதில் அவன் மனம் லேசானது போல உணர்ந்தான். ஒருவரின் வாழ்க்கைத் தரம்தான் அனைத்தையும் முடிவு செய்கிறது என்று நினைக்கும்போது அவனுக்கு மனம் வலித்தது. இதுநாள் வரை பணக்காரப்பெண் என்றபோதும் மதுவை அவன் கிண்டல் செய்திருக்கிறான். ஆனால் அதெல்லாம் அவள் மனதில் வைத்துகொள்ளாமல் அவனுக்காக மதியிடம் வாதாடியதில் வருணின் மனதில் பலபடி மேலே உயர்ந்தாள் மது.

ஆனால் அப்போது கூட மதி தன் தவறை உணரவில்லையே என்ற எண்ணம் அவனின் மனதைப் புழுவாக அரிக்கத் தொடங்கியது.   அதன்பிறகு எல்லோரும் கிளாஸ் ரூம் வரவே மதியும் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிவிடவே, வருணால் அது முடியாமல் போனது.  

அந்த பிரச்சனை அத்தோடு முடிவுக்கு வரவே அனைவரும் மறுவாரம் மேகலாவின் கல்யாணத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். வழக்கம்போல மதி வீட்டில் பாட்டியிடம் அனுமதி கேட்கவே, “நீ அந்த கல்யாணத்திற்கு போயிட்டு வந்ததும் எனக்கு ஒரு பதில் சொல்லணும்” என்ற எச்சரிக்கையோடு அவளை அனுப்பி வைத்தார்.

ஸ்ரீமதியும், மதுஸ்ரீயும் மேகலாவின் கல்யாணத்தில் கலந்துகொண்டனர். அங்கே மேகலாவின் கழுத்தில் தாலி ஏறுவதை கண்ட மதுவின் மனமோ கௌதமை சுற்றி வந்தது.

இந்த இரண்டு வாரமாக அவன் செய்த எந்தவொரு போனையும் அவள் எடுக்கவில்லை. அவன் தன்னிடம் எந்தவொரு தகவலும் சொல்லாமல் சென்றது அவளுக்கு மனவேதனையை கொடுக்கவே அதை அவன் உணர வேண்டும் என்று போனை எடுக்காமல் இருந்தாள்.

ஆனால் இப்போது அவளால் அது முடியாமல் போகவே, ‘கௌதம் வேணும்னு எதுவும் செய்திருக்க மாட்டான். இந்த ஒரு முறை அவனுக்காக நம்ம கோபத்தை குறைச்சுக்கலாம்’ என்று நினைத்துகொண்டு அவனுக்கு போன் அடித்தாள்.

முதல் ரிங்கில் கால் எடுக்கபட்ட போதும் அவன் பேசாமல் இருக்கவே, “கௌதம்” என்று அழைத்தாள்.

அவன் அப்போது மெளனமாக இருக்கவே, “நீ என்னிடம் சொல்லாமல் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிட்ட என்ற கோபத்தில் தான் போன் எடுக்கல. ஸாரி கௌதம் பேசுடா” அவன் கெஞ்சும்போது அவனின் மனம் பாகாக உருகிவிட்டது.

“அதுக்காக இப்படிதான் பண்ணுவியா மது” என்று அவன் கோபமாக இருப்பது போல தன்னை காட்டிக்கொண்டான்.

“அப்போ நீ செஞ்சது சரியா? ஏற்கனவே என்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு புரியாமல் இருக்கேன். ஏதோ உன்னோடு இருக்கும் நேரத்தில் கொஞ்சம் பயமில்லாமல் நிம்மதியாக இருந்தேன். இப்போ அதுவும் போச்சு தெரியுமா. வீட்டில் யாருக்கு ஆபத்துன்னு புரியாமல் தலை வெடிக்கிற மாதிரி இருக்கு. சிலநேரம் அந்த ஆபத்து எனக்குத்தானோன்னு நினைக்க தோணுது” என்று அவள் சொல்லிவிட்டு அழுதாள்.

அதுவரை தான் எடுத்த முடிவு சரியென்று நினைத்திருந்த கௌதம், ‘இவளை இப்படியொரு நிலையில் அங்கே தனியாக விட்டுவிட்டு வந்தது தவறோ?’ என்று நினைக்கும்போது அவளின் விசும்பல் சத்தம்கேட்டு அவனின் கவனம் மீண்டும் அவளின் பக்கம் திரும்பியது.

“மது நீ பயப்படாமல் இரு. உனக்கு எதுவும் ஆகாது” அவளுக்கு தைரியம் சொல்லும்போது தனக்கும் ஒருமுறை சொல்லி கொண்டான்.

“இப்போ எங்கே இருக்கிற மது” என்று அவன் பேச்சை மாற்றிட, “ஃப்ரெண்ட் மேரேஜ்க்கு வந்திருக்கோம் கௌதம். ரொம்ப நேரம் தனியாக இருந்தால் மனசு ஏதேதோ நினைக்குதுன்னு இங்கே கிளம்பி வந்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூடவே இருக்காங்க. அதனால் பயமில்ல” என்று சொன்னபிறகு அவனின் மனம் நிம்மதியானது.

“சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைக்கும்போது வருண் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

மது வேகமாக கலங்கிய கண்களை துடிப்பதைக் கண்டு, “என்ன மது யாரிடம் பேசிட்டு இருந்த?” என்று கேட்க அவளோ பதில் சொல்லாமல் திருதிருவென்று விழித்தாள்.

அவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வரவே, “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி முழிக்கிற” என்று கேட்டான்.

“இல்ல சும்மாதான்” என்று அவனை சமாளித்தாள் மது.

“மது நீ எதையோ என்னிடம் மறைக்கிற. நான் உன் பேஸ்ட் பிரெண்ட்தானே?” அவன் வற்புறுத்தி கேட்டான்.

“நான் லவ் பண்றேன் வருண். மதிக்கு கல்யாணம் முடிஞ்சதும் வீட்டில் பேச முடிவெடுத்து இருக்கோம்” அவள் உண்மையைச்சொல்லவே, “வாவ் சூப்பர் மது கங்கிராட்ஸ்” என்றான்.

அதன்பிறகு இருவரும் பேசியபடி கீழே செல்லவே, “மதி கார் ஓட்டுவான்னு உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால் மது அவளைவிட சூப்பரா கார் ஓட்டுவான்னு உங்க யாருக்கும் தெரியாது இல்ல” என்று காயத்ரி உண்மைச் சொல்லவே மதுவை எல்லோரும் வியப்புடன் பார்த்தனர்.

மதி சிரிப்புடன் அவளின் அருகே அமர்ந்திருக்க, “இன்னைக்கு இவங்க இருவருக்கும் கார் ரேஸ் வைக்கலாம். இங்கிருந்து மூன்று கிலோமீட்டருக்கு யார் முன்னாடி போறாங்க என்பது போட்டி” என்று அவள் சொல்லவே மற்றவர்கள் உற்சாகமாக கத்த தொடங்கிவிட்டனர்.

“ஏய் என்னடி விளையாடுறீயா?” என்று மது காயத்ரியிடம் சண்டைக்கு போகவே, “விடு மது அவ ஆசையை நீ ஏன் கெடுக்கிற? ஏன் என்னிடம் தோற்றுவிடுவாய் என்ற பயமா?” என்று அவளை சீண்டினாள்.

“யாரு நான் உனக்கு பயப்படுகிறேனா? நான் போட்டிக்கு வரேன்” என்று மது வேகமாக போட்டிக்கு ஒத்துகொண்டாள். மதி எப்போதும் போலவே பயமில்லாமல் சரியென்று தலையாட்டினாள்.

“இந்த சேலைகட்டிட்டு அவ்வளவு தூரம் கார் ஓட்ட வசதியாக இருக்காது. அதனால் இருவரும் உடை மாற்றிவிட்டு வாங்க அதுக்குள் நான் காரை ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு காயத்ரி மற்றவர்களை அழைத்துச் சென்றனர்.

மதுவும், மதியும் உடைமாற்ற சென்ற இடத்தில் இருவரும் வழக்கம்போல ஒருவரையொருவர் வம்பு இழுத்துக்கொண்டு உடை மாற்றினர். அந்த அறையின் ஜன்னலோரம் நின்றிருந்த ஒரு ஆணின் உருவத்தின் நிழல் வெயிலின் வெளிச்சத்தில் அறைக்குள் விழுந்தது. இருவரும் பேச்சின் சுவாரசியத்தில் அதை கவனிக்க மறந்தனர்.

ஸ்ரீமதி எப்போதும் போலவே சிவப்பு நிறத்தில லாங் மிடியும், நீல நிறத்தில் டாப் அணிந்திருந்தாள். மற்றொரு புறம் மதுஸ்ரீ வழக்கம்போலவே மஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தாள்.

“ஓகே இருவரும் ரெடியாக இருக்காங்க. மது, மதி ஆல் தி பேஸ்ட்” என்று சொல்லி இருவரின் கையிலும் கார் சாவியைக் கொடுக்க இருவரும் காரில் ஏறி அமரவே சுற்றியிருந்த அனைவரும் கத்தி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தனர்.

காயத்ரி, “ரெடி ஸ்டார்ட்” என்று சொல்லி கோடியை அசைக்கவே இருவரும் காரில் கிளம்பினர்.

இருவரும் ஒருவரையொருவர் முந்த நினைத்துகொண்டு வேகமாக செல்ல ஒரு திருப்பத்தில் மது சிக்னலில் மாட்டிகொள்ளவே மதியின் கார் மின்னல் வேகத்தில் முன்னே சென்றது.

“ஐயோ இந்த மதி இவ்வளவு வேகமாக போயிட்டாளே. இப்போ மட்டும் ஜெய்க்கல என்றால் மானமே போயிரும். காயூ வேற திட்டியே ஒரு வழி பண்ணிவிடுவாளே” என்றவள் சிக்னல் விழுந்ததும் வேகமாக காரை எடுத்தாள். அங்கிருந்து மது புயல் வேகத்தில் செல்ல செல்போன் சிணுங்கி அவளின் கவனத்தை ஈர்த்தது.

உடனே செல்லை அட்டன் செய்த மது, “மதி நீ என்னை இப்படி சிக்கலில் மாட்டிவிடத்தான் போட்டிக்கு வான்னு சீண்டிவிட்டியா? இரு போட்டி முடியட்டும் அப்போ கவனிச்சுக்கிறேன்” அவள் கோபத்துடன் சொல்ல மறுபுறம் மதி சிரிக்கும் சத்தம் கேட்டது.

“ஏய் சிரிக்காதே” என்று சொல்லும்போது, “இன்னைக்கு உன்னை நான்தான் வின் பண்ண போறேன் மது” என்று சொன்னால் அழைப்பைத் துண்டிக்க மதுவின் கவனம் சாலையில் திரும்பியது.

திடீரென்று மதுவின் கார் பிரேக் பிடிக்காமல் போகவே, “ஐயோ இது என்ன பிரேக் பிடிக்க மாட்டேங்குது” என்றவள் பதட்டத்தோடு ஓட்டவே அவளின் நாசியைத் துளைத்தது ஜாதிமல்லியின் வாசனை!

அதில் இன்னும் பதட்டம் அதிகரிக்கவே யாருக்கும் ஆபத்து வரக்கூடாது என்ற எண்ணத்தில் காரை காட்டு வழியாக திருப்பிய சற்றுநேரத்தில் டமால் என்ற சத்தத்துடன் ஒரு மரத்தின் மீது போய் மோதியது மதுவின் கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!