sontham – 23

sontham – 23
அத்தியாயம் – 23
காயத்ரி அறிவிப்பு படி குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்த மதியை பார்த்ததும் அனைவரும் கத்தி கூச்சலிட அடுத்த சில நிமிடங்கள் காரிலிருந்து இறங்காமல் மதுவின் வரவை எதிர் பார்த்தாள். நேரம் கடந்ததே தவிர மது கடைசிவரை வரவேயில்லை.
அதுவரை பொறுமையாக இருந்த மதி சட்டென்று காரைத் திருப்பிக்கொண்டு வேகமாக அவர்கள் வந்த பாதையில் திரும்ப சென்றாள்.
அங்கிருந்த அனைவருக்கும் மதுவுக்கு என்ன ஆனதோ என்ற பயம் அதிகரித்தது. அவளை தேடிச்சென்ற மதியிடமிருந்து எந்தவிதமான தகவலும் வராமல் இருக்கவே, “இப்போ என்ன பண்றது?” என்ற கேள்வியுடன் ஆளுக்கு ஆள் வந்திருந்த ஸ்கூட்டி, பைக் எல்லாம் எடுத்துகொண்டு சென்றனர்.
அவர்கள் முக்கால்வாசி தூரம் கடக்கும் வேளையில் மதியிடமிருந்து காயத்ரிக்கு போன் வந்தது.
“ஹே மதி எங்க இருக்கீங்க இருவரும்? நாங்க எல்லாம் அந்த சிக்னலுக்கு பக்கத்தில் வந்துட்டோம்” என்று கோபத்துடன் கேட்டாள்.
“காயூ சிக்னலுக்கு இடதுபுறம் ஒரு மண்ரோடு போகும் அது வழியாக கொஞ்சதூரம் உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு அவள் பட்டென்று போனை வைத்துவிட்டாள் மதி.
அவள் சொன்ன இடத்திற்கு சென்றபோது மதி கண்களிரண்டும் சிவக்க அழுகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, “ஏய் என்னடி ஆச்சு” என்று கேட்ட அனைவருக்கும் தூரத்தில் மரத்துடன் மோதி நின்ற காரைக் காட்டினாள்.
மற்றவர்கள் பதறியடித்துக்கொண்டு அருகே சென்று பார்க்க மது ரத்த வெள்ளத்தில் டிரைவர் சீட்டில் ஸ்டேரிங்கின் மீது தலை கவிழ கிடப்பதை பார்த்தவர்கள் அவள் உயிருடன் இருக்கிறாளா என்று பரிசோதிக்க அவள் இறந்து வெகுநேரம் ஆனது என்ற உண்மை தெரிந்து அனைவரும் கலக்கத்தில் ஆழ்ந்தனர்.
அவளை அப்படியொரு கோலத்தில் பார்க்க முடியாமல் மது கொஞ்ச தூரம் தள்ளியமர்ந்து அழுது கொண்டிருந்தாள். இத்தனை நாளில் அவள் அழுது யாருமே பார்த்ததில்லை.
“ஏய் மது இங்கே இருக்கான்னு நீ எப்படி கண்டுபிடிச்ச?” என்று காயத்ரி அழுகையூடே கேட்டாள்.
“நான் இந்த சிக்னலை தாண்டியபிறகு வெகுநேரம் ஆகியும் மது பின்னாடி வந்தமாதிரி தெரியவே இல்ல காயூ. அதுதான் வழியெல்லாம் தேடிவிட்டு இந்த பாதையில் விட்டேன் இங்கு வந்து பார்த்தா இப்படியொரு கோலத்தில் கிடக்கிற” என்று சொன்ன மதி கதறி அழுகவே அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு காயத்ரியும் அழுதாள்.
அந்த இடம் சுற்றிலும் காடு மட்டுமே. அவளின் கார் இடித்த மரத்திற்கு பக்கத்தில் ஒரு பாழடைந்த கட்டடம் மட்டுமே இருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் போலீஸ், மதுவின் வீட்டினருக்கு தகவல் கொடுக்கவே அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
மதுவை அப்படியொரு கோலத்தில் கண்ட தமயந்தி அந்த இடத்திலேயே மயங்கி சரிய, “ஐயோ என் செல்லப்பேத்தியை இப்படியொரு நிலையில் பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லையே. எந்த நேரமும் சாந்தமான முகமும், சத்தமில்லாமல் சிரித்தபடி வலம்வரும் இவளுக்கு இப்படியொரு தண்டனை தேவையா? வாழ்ந்து முடிந்த நான் எல்லாம் இன்னும் உயிரோடு இருக்கும் போது என் பேத்திக்கு இப்படியொரு நிலையா?” என்று தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதார் ராஜலட்சுமி.
தன் மகளை உயிரற்ற உடலாக பார்த்ததில் அப்படியே சரிந்து அமர்ந்தவருக்கு பேச வார்த்தை வரவில்லை. அவளுக்கு இப்படியொரு நிலை வருமென்று யாருமே நினைத்ததில்லை. அவர்களின் பின்னோடு அந்த இடத்திற்கு வந்த யுகேந்திரன் – தனம் இருவருக்கும் அழுகையைக் கட்டுபடுத்த முடியவில்லை.
கௌதம் உயிராக விரும்பிய பெண்ணை உயிரற்ற உடலாக பார்த்ததில், “ஐயோ நான்தான் அன்னைக்கு வாய் தவறி அப்படி சொல்லிட்டேன். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா என் மகனுக்கு மதுவையே கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேனே. ஐயோ எல்லாமே போச்சே” என்று குற்ற உணர்வுடன் அழுத மனைவியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் யுகேந்திரன்.
பிரபல தொழிலதிபர் மகள் விபத்தில் அறிந்த தகவல் கிடைத்த அடுத்த நொடியே அங்கே மீடியா ஆட்கள் குவிந்தனர். சிறிது நேரத்தில் மதுவின் புகைப்படத்துடன், “தேனியில் பிரபல தொழிலதிபர் தாமோதரனின் மகளான மதுவின் கார் பிரேக் பிடிக்காத காரணத்தினால் எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதி அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்” என்று ஒளிபரப்பானது.
அந்த நேரத்தில் ஒரு கேஸ் விசாரணைக்காக வெளியே வந்திருந்த இடத்தில் நியூஸ் பார்த்த கௌதமிற்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது. சற்றுமுன் அவனோடு பேசி சிரித்துவிட்டு போனை வைத்த மதுவின் குரல் அவனின் காதில் ரீங்காரமிட அந்த இடத்திலேயே பொத்தென்று அமர்ந்தான்.
அதற்குள் தகவல் அறிந்து கௌதமை தேடி வந்த அசோக் அவனின் நிலையைக் கண்டு கலங்கி நின்றான். கௌதம் பார்வை இரண்டும் டி.வியின் மீதே பதிந்திருக்க சுற்றி இருந்த உலகத்தை மறந்து உணர்வுகளை கட்டுபடுத்திக்கொண்டு அமர்ந்திருந்தவனின் கண்கள் மட்டும் கோவைப்பழம் போல சிவந்திருந்தது. அசோக் மெல்ல கௌதமை தோளில் கைவைக்க அந்த ஸ்பரிசத்தில் உள்ளுணர்வு பெற்று சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.
“டேய் கௌதம் வாடா இதுக்குமேல் உன்னை இப்படி என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றான் அசோக்.
கௌதம் மதுரைக்கு தான் மாற்றாலாகி இருந்தான். அதனால் உடனே அங்கிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் தேனி சென்று சேர்ந்தனர். மதுவின் உடல் போஸ்ட் மாட்டம் செய்ய மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருப்பதாக சொல்லவே இருவரும் அங்கே சென்றனர்.
தாமோதரன் – தமயந்தி, யுகேந்திரன் – தனலட்சுமி, ராஜலட்சுமி மற்றும் மதுவின் வகுப்பில் படிப்பவர்கள் அனைவரும் அங்கேதான் இருந்தனர். அவளின் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் வாங்க வரச்சொல்லி நர்ஸ் ஒருத்தி வந்து சொல்லவே மதி திரும்பி மற்றவர்களைப் பார்த்தாள்.
யாருக்கும் டாக்டருடன் பேசும் தெளிவு இல்லை என்ற உண்மையை உணர்ந்து, “நான் வருகிறேன்” என்றவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்து சென்றாள். அவள் சென்ற கொஞ்சநேரத்தில் மதியை தன்னருகே காணாமல் பதட்டத்துடன் எழுந்த ராஜலட்சுமி மனதில் உறுதியை வரவழைத்துகொண்டு டாக்டரின் அறையை நோக்கி சென்றார்.
மதி டாக்டரின் அறையில் நின்று பேசுவதைக் கண்டவர் அவர்களை நெருங்கும்போது பட்டென்று கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவளின் முகம் கசங்கி இருந்தது. அவர் மதியைப் பார்த்து கண்ணீர் விடவே, “பாட்டி அவள் உடலை எடுத்துட்டுப் போக சொல்லிட்டாங்க” என்று நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கூறினாள் ஸ்ரீமதி.
அங்கிருந்த அனைவரைவிட மதி மட்டும் கொஞ்சம் தைரியமாக நடமாடினாள். அவள் உடலை ஆம்பிலன்சில் ஏற்றும்போது கௌதம் அங்கே வந்தவனின் பார்வை மதுவின் முகத்திலேயே நிலைத்தது. பொது இடத்தில் தன் உணர்வுகளை வெளிபடுத்த கூடாதென்று தன்னை அடக்கிக்கொண்டான்.
சற்று நேரத்தில் மதுவின் உடலை வீட்டினுள் கொண்டு வந்து வைக்கவே தாமோதரன் – தமயந்தி இருவரும் மகளின் நிலையைக்கண்டு வாய்விட்டு கதறினார். யுகேந்திரன் – தனலட்சுமி இருவரும் மற்றொரு புறம் அழுதனர்.
அதே நேரத்தில் புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த கௌதம் அவளின் உடலருகே மண்டியிட்டு, “மது உனக்கு ஆபத்து வராது என்ற தைரியத்தில் தானே உன்னை இங்கே விட்டுட்டுப் போனேன். இப்படி என்னை ஏமாற்றிட்ட இல்ல. என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும். நான் சொன்னால் கேட்ப இல்ல எழுந்து வா மது” வாய்விட்டு கதறினான்.
அவனின் கதறலைகேட்டு அங்கிருந்த அனைவருமே திகைத்து நின்றனர். தன் காதலியின் மரணத்தை ஏற்க முடியாமல் கதறிய அவனை அசோக் தேற்றிட, “அசோக் அவ எனக்கு வேணும். மதுதான் இந்த கௌதமோட உயிர் மூச்சுடா. அவ எப்படி என்னை இப்படி ஏமாற்றலாம்” என்று அழுதவனை கட்டுபடுத்த யாராலும் முடியவில்லை.
அங்கே நடக்கும் அனைத்தையும் பார்த்த மதியோ அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனிக்கும்படி சொன்னாள். எல்லோரும் மதுவின் இறப்பை தாங்க முடியாமல் இருந்தனர்.
முகம் இறுகிட இரும்பு போல நடமாடும் தன் மகளைப் பார்த்த தாமோதரன், “மதி ஒரு நிமிடம் கண்ணீர்விட்டு அழுதுவிடு” என்று சொல்லவே மறுப்பாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
மது இறந்து அன்றுடன் ஒரு வாரம் சென்று மறைந்தது. யுகேந்திரன் – தனலட்சுமியுடன் அந்த வீட்டில் தங்கிருந்த கௌதமின் மனமோ நிலையில்லாமல் தவித்தது. வீட்டின் ஹாலில் மதுவின் புகைப்படத்தின் முன்னால் ராஜலட்சுமி கண்ணீரோடு அமர்ந்திருந்தார்.
தாமோதரனும், யுகேந்திரனும் ஹாலில் அமர்ந்திருக்க அவர்களுக்கு கொடுக்கபட்ட காபி பாலாடை கட்டி வீணாகவே போயிருந்தது. தமயந்தி படிக்கட்டில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்க அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார் தனம்.
இதையெல்லாம் தன் அறையில் இருந்து பார்த்துகொண்டு இருந்த கௌதமின் மனமோ மதுவையே சுற்றி வந்தது. அவளை முதலில் சந்தித்த நாளில் தொடக்கி நடந்த அனைத்தும் மனதில் படமாக ஓடியது. மது அவனின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருப்பதை அப்போதுதான் அவனே உணர்ந்தான்.
அவளின் இறப்பை ஏற்க முடியாமல் மனம் வலிக்க நின்றிருந்த அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீமதி. அவள் அங்கே வந்து வெகுநேரம் ஆனபிறகும் அவன் அதை உணராமல் நின்றிருப்பதில் எரிச்சலடைந்து, “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பதாக உத்தேசம்” என்றாள்.
அவளின் குரல்கேட்டு கவனம் கலைந்து திரும்பியவனின் பார்வை மதியின் மீதே நிலைத்தது. அவள் முகம் இறுகியிருந்ததே தவிர மற்றபடி எந்தவொரு மாற்றமும் இல்லாமல் திமிருடன் நின்றவளை பார்த்தும் அவனுக்கு உலகமே வெறுத்தது.
“நான் இங்கே இருக்கப்போவதில்லை. இப்போவே கிளம்பிடுவேன் சரியா மதி. ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியல மதுவை உயிராக காதலிச்ச என்னாலேயே அவளோட இழப்பை ஏற்க முடியல. ஆனால் ஒரே கருவில் தொடக்கி இத்தனை வருஷம் அவளோட இருந்த உனக்கு அழுகை கூட வரல இல்ல. அந்தளவுக்கு அவ உனக்கு என்னடி துரோகம் பண்ணிட்டா” என்று கோபத்துடன் கேட்டான்.
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இங்கே பாருங்க கௌதம் எனக்கு அழுகை வரல. வராத அழுகையை வருதுன்னு சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கும் பெண் நான் இல்லை. ஆனால் அவளோட இழப்பு உங்க எல்லோரைவிடவும் எனக்குதான் அதிகம். அதனால் என்னை தரக்குறைவாக எடைபோடும் வேலை வச்சுகாதீங்க” என்று எடுத்தெறிந்து பேசியவள் கொண்டு வந்த உணவை அங்கிருந்த டேபிளில் பட்டென்று வைத்துவிட்டு சென்றாள்.
அங்கிருந்து கௌதம் சந்தேகம் தொடங்கவே, ‘நான் வருந்துவதைப் பார்த்து இவ ஏன் துடிக்கனும். ஒருவேளை இறந்தது மதியாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் மனதில் எழுந்ததும் வேகமாக மாடியேறிச் சென்று மதியின் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
அவள் சத்தமில்லாமல் அழுவதை கண்டவனின் சந்தேகம் உறுதியாகவே வந்த சுவடு தெரியாமல் கீழிறங்கி சென்றுவிட்டான். ஸ்ரீமதி அனைவரையும் அதட்டி உருட்டி மிரட்டி அவரவர் வேலைகளை கவனிக்க வைத்தாள்.
ஸ்ரீமதி அன்று பேசிய பேச்சில் கோபமடைந்த கௌதம் தன் தாய் – தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அப்போது யாரோ உற்று பார்ப்பது போல தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அந்த வீட்டின் ஹாலில் இருந்த மதுவின் முகமே அவனுக்கு தெரிந்தது. அவள் அன்று உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த ஜன்னலின் மீது அவனின் பார்வை படிய அங்கே காற்றோடு பச்சை நிற தாவணியின் முந்தானை காற்றில் பறக்க மதியின் கரங்கள் வெளியே நீண்டது.
அதிலிருந்தே அவனின் சந்தேகம் உறுதியாகிவிடவே கண்ணை இறுகிமூடி திறந்தவன் திரும்பிப் பார்க்காமல் சென்றான். அதன்பிறகு பெரியவர்கள் இருவரும் அங்கு வந்து செல்ல ஸ்ரீமதி வழக்கம்போலவே காரில் கல்லூரி சென்றாள்.
நாட்கள் அதன்போக்கில் செல்லவே கௌதம் மீண்டும் ட்ரான்ஸ்பர் வாங்கிகொண்டு தேனிக்கு வந்து சேர்ந்தான். மதுவின் இழப்பில் இருந்து மீளவே முடியாவிட்டாலும் தங்களை மீட்டுக்கொண்டு அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
தேனி வந்தவுடன் மதுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சொல்லி நீதிபதியிடம் சொல்லி மதுவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதி வாங்கினான். கௌதம், அசோக் மற்றும் ஒரு கவர்மெண்ட் டாக்டர் மூவரும் சேர்ந்து புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.
அதில் அவள் கற்பளிக்கபட்டு இறந்ததாக வரவே, “கௌதம் இதை நாங்க யாருமே எதிர்பார்க்கலடா. மதுவை கற்பழிக்கும் அளவிற்கு யார் அவளுக்கு எதிரி இருக்க முடியும்?” என்று அசோக் அதிர்ச்சியுடன் கேட்டான்.
கௌதம் மறுப்பாக தலையசைத்து, “மதுவுக்கு யாரும் எதிரி இல்ல அசோக். விபத்தில் இறந்தது நீங்க நினைக்கிற மாதிரி மெதுவாக இருக்காது என்பது என் கணிப்பு. அது மட்டும் இல்லாமல் இப்போ நம்ம கவனம் முழுக்க மதியின் மீது தான் வைக்கணும்” என்றவன் ரகசியமாக ஸ்ரீமதியைக் கண்காணிக்க தொடங்கினான்.
அவள் வழக்கம்போல கல்லூரிக்கு சென்று வர தொடங்கினாள். மதுஸ்ரீ கேஸ் மீண்டும் பதிவு செய்யபட்டு ரகசிய விசாரணையில் இறங்கினான் கௌதம். அப்போதுதான் மேகலாவின் கல்யாணத்திற்கு சென்ற இடத்தில் இந்த ரேஸ் நடந்த விஷயம் அவனுக்கு தெரிய வந்தது.
அந்த ரேஸ் நடப்பதற்கு சற்றுமுன் தான் கௌதம் மதுவிடம் பேசியிருந்தான். ஆனால் அவள் அது பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கவே அதன்பிறகு முடிவெடுக்கப் பட்டிருக்கலாம் என்ற யுகத்திற்கு வந்தான்.
அதுபற்றி அவன் விசாரித்தபோது காயத்ரிதான் என்ற உண்மை தெரிய வந்தது. அசோக்கிடம் விஷயத்தை சொல்லி காயத்ரியை சந்தித்தான் கௌதம். அவன் கேஸ் பற்றி விசாரிப்பதாக சொல்லாமல் அவளிடம் இயல்பாகப் பேச்சு கொடுத்தான்.
“ஹாய் காயத்ரி எப்படி இருக்கிற?” என்று கேட்டான்.
“எனக்கு என்னண்ணா நான் நல்ல இருக்கேன்” என்ற காயத்ரி அவனைப் பார்த்து மனம் வருந்தினாள். தன் உயிர் காதலியைப் பிரிந்து அவன் வாடுவது பிடிக்காமல், “அண்ணா அன்னைக்கு நாங்க அந்த ரேஸ் வைக்காமல் இருந்திருந்தா மது எங்களோட இருந்திருப்பா. நான்தான் முந்திரி கொட்டை மாதிரி ரேஸ் அது இதுன்னு சொல்லி இப்படியெல்லாம் நடந்திருச்சு” என்று வருத்தபட்டாள்.
“ஏன் காயத்ரி ரேஸ் என்றால் கார் ஓட்டி பார்த்த பிறகுதானே மதுவிடம் சாவியை கொடுத்து இருப்பீங்க. அப்புறம் எப்படி பிரேக் பிடிக்காமல் போச்சு” என்று சாதாரணமாக கேட்பது போன்ற பாவனையோடு கேட்டான் கௌதம்.
“அதுதான் அண்ணா என் மண்டையை குழப்பற விஷயமே. நாங்க ஓட்டும்போது எல்லாம் சரியாக இருந்துச்சு. ஆனால் கொஞ்சநேரத்தில் பிரேக் பிடிக்காமல் மது இறந்துட்டான்னு சொன்னால் என்னால நம்ப முடியல” என்றாள் காயத்ரி..
அதற்குள் அவளுக்கு வீட்டிலிருந்து போன் வரவே, “இவளை கொண்டுபோய் விட்டுட்டு வரேன் கௌதம்” என்று கிளம்பிச் சென்றான் அசோக்.
அவன் சென்றவுடன் கௌதம் வீடு வந்து சேர்ந்தான். அன்று ரேஸ் நடப்பதற்கு முன்னாள் அங்கே யார் யாரெல்லாம் இருந்தது. யார் இடையில் கிளம்பியது என்ற தகவலை அசோக்கிடம் சொல்லி விசாரிக்க சொன்ன கௌதம் அப்படியே காரை ஆர்.டி.ஓ பரிசோதனை செய்து ரிப்போர்ட் சமர்ப்பிக்கும்படி கூறினான்.