sontham – 25

a600d54dc957365b6b375fe5a75e8c0f

sontham – 25

அத்தியாயம் – 25

வீட்டிலிருந்த யாரிடமும் அவன் அதிகம் பேசாமல் இருந்தபோது வழக்கம்போலவே வீடு வந்து சேர்ந்த கௌதம் மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான். ஒருப்பக்கம் மதுவின் கேஸ் விசாரணை தொடர, ‘அவளை கற்பழித்தது யாராக இருக்கும்?’ என்ற கேள்விக்கு இன்றுவரை அவனால் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எந்த நேரமும் ஜல்லிக்கட்டு காளைபோல கண்ணில் குறும்பு மின்னும் பார்வையுடன் வலம்வரும் மகன் இடிந்துபோய் அமர்ந்திருப்பது கண்டு யுகேந்திரனின் மனம் கலங்கிப்போனது.

“கௌதம் நீ மதுவை மறந்துட்டு மதியைக் கல்யாணம் பண்ணிக்கோ” மெல்ல அவனிடம் திருமணம் பற்றி பேச்சை எடுத்தாள் தனம்.

அதுவரை மதுவின் நினைவில் அமர்ந்திருந்தவன், “அன்னைக்கு நீங்கதான் மது இறந்து போவான்னு சொன்னீங்க. இன்னைக்கு அது மாதிரி அவ என்னைவிட்டுட்டு நிரந்தரமா போயிட்ட. இப்பவும் நீங்க மதியைக் கல்யாணம் பண்ணிக்க சொல்வதில் நியாயமே இல்லம்மா. மனசு முழுக்க மது இருக்கும்போது மதிகூட நான் எப்படிம்மா வாழ முடியும்” என்று வலியோடு கேட்டான் மைந்தன்.

ஆனால் அவனை இப்போது அப்படியே விட்டுவிட்டால் பட்டமாரமாக நின்ருவிடுவான் என்று தெரிந்து கொண்டவர், “அன்னைக்கு பேசியது என் தப்புதான் கண்ணா. என்னைக்கும் நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறையான எண்ணங்களுக்கு சக்தி அதிகம்னு இப்போ புரிஞ்சிகிட்டேன்” என்று பெருமூச்சு விட்டவர் மீண்டும் தொடர்ந்து,

“உனக்கு மதுதான் மனைவியாக வரணும்னு இருந்திருந்தால் அது கண்டிப்பா நடந்திருக்கும். ஆனால் உனக்கு மதிதான் மனைவியாக வரணும்னு இருக்குப்பா. நீ நேசிச்ச மதுவும், மதியும் உருவத்தில் ஒன்றுதான். அதனால் உன் மனசு மாறி சீக்கிரமே  அவளோட வாழ தொடங்குவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குப்பா. எனக்காக மதியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு கௌதம்” என்று கண்களில் கண்ணீர் வழிய நின்ற தாயைப் பார்த்தான்.

அவனால் மறுப்பு சொல்ல முடியாமல் போகவே, “அன்னைக்கும் உங்களுக்காக ஆர்மிக்கு போகாமல் இங்கே போலீஸ் வேலையில் சேர்ந்தேன். இன்னைக்கும் உங்களுக்காக மட்டும் மதியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்” என்று சொன்னவன் வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

அவன் உள்ளுணர்வு, மது இறக்கவில்லை என்ற எண்ணம் அவனின் மனதில் ஆழப்பதிந்து போன நேரத்தில் மதி திருமணத்திற்கு சம்மதித்ததில் உண்மை வெட்டவெளிச்சம் ஆகிவிடவே, ‘எனக்கு தெரிஞ்ச விஷயம் நிருபிக்க படும்வரை அப்படியே இருக்கட்டும்’ என்று நினைத்தான் கௌதம்.

கௌதம் – ஸ்ரீமதி இருவருக்கும் பெரியவர்களால் முறைப்படி நிச்சதார்த்தம் நடக்க அதற்கு அவளின் வகுப்பு தோழிகள் அனைவருமே வந்திருந்தனர். அவர்களின் பேச்சு அப்படி இப்படியென்று திசைமாறி கடைசியில் ரேஸில் வந்து நின்றது.

“ஏன் காயூ அன்னைக்கு மது சூப்பரா கார் ஓட்டுவான்னு மதி சொன்னதாக சொல்லி ரேஸ் ஏற்பாடு செஞ்ச. மது இறந்ததால்  மதி வின் பண்ணியதை சுத்தமாக மறந்துட்டோம். அது எப்படி மதுவை வின் பண்ணவே முடியாது என்று சொன்ன மதி அன்னைக்கு வின் பண்ணினா?” என்று ஒருத்தி தீவிரமான யோசனையோடு கேட்பது அந்தபக்கம் வந்த கௌதம் காதுகளில் எதர்ச்சியாக விழுந்தது.

அவனுக்கும் ஸ்ரீமதி, மதுஸ்ரீ இருவருக்கும் இருக்கும் திறமைகள் நன்றாக தெரியும். அதுவும் மது பலமுறை கார் ரேஸில் மதியை வென்றதாக அவனிடம் அடிக்கடி சொல்வதுண்டு.

‘இந்த பொண்ணு சொல்வதும் சரிதானே? அன்னைக்கு மட்டும் எப்படி மதி வெற்றிபெற முடியும்? அப்போ நான் சந்தேகப்பட்ட மாதிரி இறந்தது மதுவாக இருக்க வாய்ப்பே இல்ல. இரண்டுக்கும் இடையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது’  என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த பெண்களின் பேச்சு அவனின் கவனத்தை ஈர்க்கவே தன் சிந்தனையை ஓரங்கட்டிவிட்டு அவர்களை கவனித்தான் கௌதம்.

“ஏன் எப்போதும் மதுவே வின் பண்ணுவான்னு சொல்ல முடியுமா? அன்னைக்கு மதுவுக்கு விபத்து நடந்ததால் கூட மதி வின் பண்ணி இருக்கலாமே?” என்று இன்னொரு சொல்லவே மதி வழக்கம்போல உதட்டை பிதுக்கி தோளைக் குலுக்கிவிட்டு எழுந்து சென்றாள்.

அவள் சென்றவுடன் அதே யோசனையோடு அங்கிருந்து நகர நினைத்த கௌதமின் தடுத்தது ஒரு பெண்ணின் குரல்!

அப்போது காயத்ரியின் அருகே அமர்ந்திருந்தவள், “ஏய் அதைவிடு இந்த வருணுக்கு இன்னைக்கு மதிக்கும், கௌதம்க்கு நிச்சயதார்த்தம்னு நல்லாவே தெரியும். ஆனால் அவன் ஒண்ணுமே சொல்லல கவனிச்சியா? கொக்குக்கு ஒரே மதின்னு சொல்லிட்டு இருந்தவன் எப்படி இப்படி மாறிப்போனான் புரியவே இல்ல” என்றாள் குழப்பத்தோடு.

“ஏய் உனக்கு விசயமே தெரியாதா?அன்னைக்கு மது விபத்து நடப்பதற்கு முன்னாடியே அவன் அங்கிருந்து கிளம்பிட்டான். மறுநாள்தான் அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும்போல அதிலிருந்து அவன் மதியை வெறுப்பேற்றுவதை கூட மறந்துட்டான். அந்த அளவுக்கு அவளோட இழப்பு அவனை பாதிச்சிருக்கு” என்று பெருமூச்சுடன் கூறினாள் காயத்ரி.

‘அப்போ அவளைக் கெடுத்தது வருணாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்துடன் நின்றிருந்தான் கௌதம். ஏதோ கேட்க வந்த மதி அங்கே வந்த மதி அவன் அங்கே நிற்பதை கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

அவளின் செயலை கண்ட கௌதம், ‘நீ போட்ட வேஷத்திற்கு தகுந்தமாதிரி எவ்வளவு நாள்தான் அடிக்கிறன்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்து தனக்குள்  சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பிறகு அவன் எதுபற்றியும் யோசிக்கவில்லை. அவனின் கவனம் முழுவதும் வருணின் பக்கம் திரும்பியது. இதற்கிடையே வந்த ஒரு சுபயோக சுபதினத்தில் கௌதம் – ஸ்ரீமதியின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான்.

பட்டுவேட்டி சட்டையுடன் தன் அறையில் நின்று ஜன்னலின் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த கௌதமின் கவனத்தை ஈர்த்தது மதியின் கொலுசொலி. அந்த சத்தம்கேட்டு சட்டென்று திரும்பிய கௌதமின் பார்வை மதியின் மீது நிலைத்தது.

பட்டுபுடவையில் அளவான ஒப்பனையில் அழகுற இருந்தவளின் நெற்றியின் மீது கௌதமின் பார்வை பதிந்தது. அவள் வெறும் பொட்டு மட்டுமே வைத்திருப்பதை கண்டவுடன் அவனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஊர்வலம் போனது.

“மதுவை நான் காதலிச்ச விஷயம் உனக்கு நல்லாவே தெரியும் மதி. அவளை மனசில் வெச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னால் முடியாது மதி. சோ நீ என்னை நெருங்காமல் இருந்துட்டா அது எல்லோருக்குமே நல்லது” என்று சொல்லிவிட்டு உடனே கட்டில் ஏறி படுத்து கண்ணை மூடிக்கொண்டான்.

சிறிதுநேரம் அவனை பார்த்தபடி நின்றிருந்த மதியோ, “நீங்க உங்க முடிவை சொல்லிட்டீங்க. என்னோட முடிவை நான் சொல்றேன் அதையும் கேட்டுட்டு தூங்குங்க” என்றவளின் குரல்கேட்டு பட்டென்று விழிதிறந்து அவளை கேள்வியாக நோக்கினான் கௌதம்.

“உங்களால் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் நீங்களா என்னை நெருங்கினால் நான் அதை தடுக்கவும் மாட்டேன். அதுக்கு ஒரே காரணம் எனக்கும், மதுவுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை தான் முன்னாடியே இந்த விஷயத்தை சொல்றேன். அதுக்காக உங்களை இம்ப்ரஸ் பண்ண நான் எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன். அதனால் எல்லாத்துக்கும் என்னை காரணம் காட்டுவது, குத்திக்காட்டி பேசிற எண்ணம் இருந்தால் இப்போவே மறந்துடுங்க” என்றவள் பாலை ஊற்றிக் குடித்துவிட்டு படுக்கையில் சென்று படுத்துவிட்டாள்.

அவள் படுத்ததும் உறங்கிவிட கௌதமின் தூக்கம் தான்  முற்றிலும் பறிபோனது. அந்த விலாசமான படுக்கை அறையைப் பார்க்கும்போது அவனையும் மீறி மதுவின் எண்ணம் மனதில் எழவே கௌதம் எழுந்து பால்கனிக்கு சென்று தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்தான்.

சில்லென்ற தென்றல் உடலை தழுவிச் செல்லவே கௌதம் நிமிர்ந்து வானத்தை பார்த்தான். நீல நிற வானில் பௌர்ணமி நிலவு ஒளிவீசும் என்றவனின் எண்ணம் பொய்யாக போய்விட்டது. மழை மேகங்கள் வானில் உலா வரும் நிலவின் முகத்தை மறைத்திருந்தது.

நிலவு இருக்கும் அறிகுறியாக வெண்ணிற வெளிச்சம் மேகங்களின் முற்றுகையைத் தாண்டி பளிச்சென்று ஒளி வீசியது.  கடைசி வரை முழு நிலவை கௌதமினால் பார்க்க முடியவில்லை. அவனின் மனம் நிச்சயதார்த்தின் அன்று நடந்ததை எண்ணியபடி சிந்தனையில் ஆண்தான்.

சிறிது நேரத்தில் கௌதம் சிந்தனை கலைந்து வானத்தைப் பார்க்கும்போது குழப்ப மேகங்கள் விலகிட பௌர்ணமி நிலவு அழகாக ஒளிவீசுவது கண்டான். அதேபோல தன் மனதிலிருந்த குழப்பம் தீரும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

திடீரென்று எங்கிருந்தோ பியானோ வாசிக்கும் சத்தம் வரவே பட்டென்று எழுந்து அறைக்குள் சென்றான். அவன் சென்று அறையின் கதவைத் திறந்து உள்ளே பார்க்க அங்கே யாருமில்லை. அவன் உள்ளே நுழைந்து பியானோவின் அருகே சென்று பார்த்தான்.

ஆனால் வாசிக்கும் சத்தம் மட்டும் வந்துகொண்டே இருக்கவே குழப்பம் அதிகரிக்கவே, “இங்கே பாரு நீ மதுவை குழப்பியபோது நான் பெருசாக நினைக்கல. நீ வந்திருக்கும் நோக்கம் என்னன்னு நான் கேட்க மாட்டேன். கொஞ்ச நாளின் என் மனதிலிருக்கும் கேள்விக்கு எல்லாம் விடை கிடைக்கும். அதுவரை நீ இப்படியே உட்கார்ந்து சந்தோசமாக வாசி” மனதிலிருக்கும் கோபத்தை கொட்டி தீர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான் கௌதம்.

மறுநாள் காலைபொழுது விடிந்ததும், “மாப்பிள்ளை நீங்க எங்களோடு இங்கேயே இருந்துவிடுங்கள்” என்று சொன்னார்.

“இல்ல மாமா என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது. நான் மதியை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன்”என்று சொல்லிவிட்டு வேகமாக மாடியேறி அறைக்குள் சென்று மறைந்தான்.

அப்போது தாயுடன் பேசியபடி அறைக்குள் இருந்து வெளியே வந்த மதி, “அப்பா இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. ஏற்கனவே அவரு மனசளவில் பாதிக்கப்பட்டு இருக்காரு. அதனால் அவரை அவர் போக்கில் விடுங்க” என்று சொல்லவே அவரும் சிரிப்புடன் சரியென்று தலையசைத்தார்.

கௌதமை சுற்றி இருந்த அனைவரும் அவனை தெளிவாக புரிந்துகொண்டு மதியை அவன் இருக்கும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  அடுத்தடுத்து வந்த நாட்களில் ஸ்ரீமதி ஒருபுறம் அப்பாவிடம் பிஸ்னஸ் கற்றுக் கொள்வதாக சொல்லி ஆபீஸ் சென்றுவர கௌதம் வழக்கம்போல தன் வேலையை கவனித்தான். நாட்கள் ரேக்கைகட்டிகொண்டு பறந்தது.

இரண்டு பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தபோதும் ஒருத்தரையொருத்தர் அறிமுகம் இல்லாத மூன்றாம் நபர்கள் போலவே வாழ்ந்து வந்தனர். கௌதம் வீட்டில் இருக்கும் சமயங்களில் மதி தந்தையோடு ஆபீசில் இருப்பாள். அவள் வீட்டில் இருக்கும்போது கௌதம் வெளி வேலையாக வெளியே சென்றுவிடுவான். இது இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் ஸ்ரீமதியின் பிறந்தநாள் தினம் வந்தது. வீட்டில் இருந்த அனைவரும் மதுஸ்ரீ இல்லாத வருத்தத்தில் சோர்ந்து போய் இருப்பதை மாற்றியமைக்க எண்ணிய காயத்ரி தான் மதியிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை கவனித்தாள்.

அன்று காலை பொழுது விடிந்ததும் கௌதம் வழக்கம்போல குளித்துவிட்டு கண்ணாடி முன் தயாராகி நின்றிருப்பதை பார்த்தபடி, “குட் மார்னிங்” கையில் காபியுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீமதி. அவன் பதில் பேசாமல் கண்ணாடியின் வழியாக அவளை கோபத்துடன் முறைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான். 

அவனை வெறுப்பேற்ற நினைத்த மதி, “என்ன ஆபீசர் என்னோட பேச மாட்டீங்களோ?” என்று கேட்டுகொண்டே படுக்கையில் அமர்ந்து காபியைக் குடித்தாள்.

தன் கையிலிருந்த சீப்பை தூக்கி தூர வீசியவன் அவளின் எதிரே வந்து நின்று, “என்ன விஷயம்? இப்போ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற?” என்று எரிந்து விழுந்தான்.

“இன்னைக்கு எனக்கும், மதுவுக்கும் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் அவளோடு ரொம்ப சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடுவேன். இப்போ அவ இல்லாததால் நீங்க கொஞ்சம் கம்பெனி கொடுக்குறீங்க?” என்று சிரிக்காமல் கேட்ட மதியை பார்த்து கௌதமிற்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு. அதனால் நீ காயத்ரியுடன் பிறந்தநாள் கொண்டாடு. என்னை எதிர்பார்க்காதே நான் வர மாட்டேன்” என்றவன் பட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் வாசலுக்கு செல்லும் வரை எதுவும் பேசாமல் இருந்த ஸ்ரீமதி, “வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்” என்று எங்கோ பார்த்தபடி சத்தமாக சொல்லவே அது அவனின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.

மீண்டும் எரிச்சலோடு அவளின் அருகே வந்தவன், “இப்போ உனக்கு என்னடி பிரச்சனை? எதுக்கு நீ என்னை இப்படி தொல்லை பண்ணி தொலைக்கிற?” என்று எரிந்து விழுந்தான்.

மெல்ல தலையைச் சரித்து அவனைப் பார்த்த மதி, “எனக்காக நீங்க ஒன்னும் பிறந்தநாள் கொண்டாட வர வேண்டாம். அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோரும் வராங்க. அவங்க மனசு கஷ்டபடாத அளவுக்கு நடந்துகோங்க. இதுக்குதான் உங்களை வேண்டுமென்று வம்புக்கு இழுத்தேன். மற்றபடி உங்ககிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து சென்றுவிடவே கௌதம் காலை உதைத்துவிட்டு கோபத்துடன் வெளியே சென்றான்.

‘இன்னைக்கு பிறந்தநாள்ன்னு அவனுக்கு தெரியாதா என்ன? இதை இவ சொல்லி நான் தெரிஞ்சுக்கணுமா?’ என்ற எண்ணத்துடன் அவளை திட்டிவிட நினைத்தவன் பிறந்தநாள் என்ற ஒரே காரணத்திற்காக மெளனமாக அங்கிருந்து கிளம்பினான்.

ஸ்ரீமதி காயத்ரிக்கு அழைத்து வீட்டிற்கு வர சொன்னாள். அதற்குள் தாமோதரன், தமயந்தி, யுகேந்திரன், தனலட்சுமி மற்றும் ராஜலட்சுமி அனைவரும் அவளுக்கு அடுத்தடுத்து விஷ் பண்ணினார்கள்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த காயத்ரி, “அண்ணா என்ன கிப்ட் பண்ணினாரு மதி” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“நான் பிறந்தநாள் என்று சொன்னபிறகும் எதுவும் சொல்லாமல் போயிட்டார். காலையில் நான் கொடுத்த டென்ஷனுக்கு அவர் என்னை திட்டாமல் போனதே பெரிய விஷயம்தான்” என்று அவள் சலிப்புடன் பதில் கொடுத்தாள்.

“நீயும், மதுவும் ஒரே நேரத்தில் பிறந்தவங்கதானே? அண்ணாவுக்கு இன்னைக்கு உன் பிறந்தநாள் என்று நல்லாவே தெரியும். ஆனால் நீ அவர் காதலிச்ச மது இல்லையில்ல அதுதான் இவ்வளவு கோபத்துக்கு காரணம்” என்று சொல்லவே மதியும் சிரிப்புடன் அதை ஒப்புகொள்ள வேண்டி இருந்தது.

“என்ன இன்னைக்கு நைட் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிற?” என்று காயத்ரி கேட்கவே,

“அம்மா வீட்டுக்கு கிளம்பி வர சொன்னாங்க காயூ. ஆனால் கெளதம் இல்லாமல் அங்கே போனால் நல்ல இருக்காது. அதுதான் அவர் ஆபீஸ் வேலையாக வெளியே போயிட்டார். நைட் பிறந்தநாள் கொண்டாட உங்க எல்லோரையும் வர சொல்லி இருக்கிறாருன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்” என்றவள் எழுந்து இரவு பார்ட்டிக்கு செய்ய வேண்டிய வேலைகளைக் கவனித்தாள்.

“ம்ம் பொண்ணுங்க கல்யாணம் ஆகிட்ட நிறைய பொய் சொல்ற லிஸ்ட்டில் சேர்ந்துவிடுகிறார்கள். நீயும் அதில் அடக்கம் மதி” என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தாள்.

“இதெல்லாம் நடக்கும்னு கனவில் கூட நினைக்கல தெரியுமா? கௌதம் கோபம் ஒருப்பக்கம், பிஸ்னஸ் மறுபக்கம்னு நேரம் போறதே தெரியல. என்னவோ வாழ்க்கை ஓட்டும் ஓட்டத்துக்கு நானும் ஓடுறேன். அவ்வளவுதான்” என்று விரக்தியோடு சொன்ன தோழியின் மன வருத்தம் புரியவே, “விடு மதி எல்லாமே சரியாகிடும்” என்று சொன்னாள் காயத்ரி.

“அந்த நம்பிக்கையில் தான் காயூ நானும் நடமாடிட்டு இருக்கேன்” என்றவள் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!