Sontham – 27

56958caa3540f48a952bd685ba975e4c

Sontham – 27

அத்தியாயம் – 27

வீட்டிற்கு வந்த பிறகுதான் கையிலிருந்த கடிகாரத்தை கவனித்த மதியில் தலையில் கைவைத்தபடி சிலநொடிகள் அங்கேயே நின்றாள்.

 “கடவுளே பொழுது விடியவே போகுதே. இந்நேரம் வரை கௌதம் தூங்கிட்டு இருப்பானா? இன்னைக்கு அவனிடம் சிக்காமல் தப்பிச்சிட்ட அதுதான் பெரிய விஷயம்..” என்று நினைத்தபடி வீட்டிற்குள் நுழைய போனவளின் உடல் சட்டென்று சிலிர்த்தது.

அடுத்த நிமிஷமே எதைபற்றியும் யோசிக்காமல் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும்போது கௌதம் ஹாலில் கிடந்த சோபாவில் சாய்ந்தபடி அவளையே இமைக்காமல் பார்க்க, அவளும் அவனையே பார்த்தாள். வீடு முழுவதும் கலைந்து அலங்கோலமான நிலையில் கிடப்பதைக்கண்டு ஓரளவு நடந்தவற்றை யூகித்தாள்.

அவள் சென்ற சில நிமிடங்களில் கண்விழித்த கௌதம் தன்னருகே படுத்திருந்தவளை திடீரென்று காணவில்லை என்றவுடன், ‘ச்சே நைட் நான் குடிச்சிட்டு வந்து செய்த காரியத்தில் வெறுத்து எங்காவது போயிட்டாளா?’ என்ற எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்தவனாக எழுந்து வீட்டிற்குள் தேடிவிட்டு அங்கே இல்லை என்றவுடன் எங்கே சென்று இருப்பாளோ என்ற பயத்தில் வேகமாக பைக்கை எடுத்துகொண்டு தேனியின் அனைத்து ரோடுகளிலும் சல்லடைப் போட்டு அவளை தேடினான்.

மது அவனின் கண்ணில் சிக்காமல் போகவே மீண்டும் வீடு திரும்பியவன், ‘இதுக்கெல்லாம் காரணம் என்னோட முன் கோபம் தான். இல்லன்னா நடுராத்திரியில் சொல்லாமல் வெளியே போகும் அளவுக்கு அவளுக்கு என்ன அவசரம் வரப்போகுது’ என்று தன்னைத்தானே திட்டித்தீர்த்த கௌதமிற்கு அவள் கோபத்தில் எங்கே சென்றாளோ என்ற எண்ணம் எழுந்து அவனை ஸ்தம்பிக்க வைத்தது.

இதுநாள்வரை கௌதம் யாருக்காகவும் கலங்கி நின்றது கிடையாது. ஆனால் இன்று அவளைக் காணவில்லை என்றவுடன் தன் செய்த தவறு ஒருபுறம் அவனின் மனத்தைக் குத்திக் கிழிக்க மற்றொருபுறம் அவள் எங்கே சென்றாள் என்று கண்டுபிடிக்க முடியாத கோபத்தில் வீட்டிலிருந்த அனைத்தையும் போட்டு உடைத்தெறிந்தான்.

அதன்பிறகு அவனின் கோபம் கொஞ்சம் குறையவே சோபாவில் வந்து அமர்ந்தவன், ‘இந்நேரத்தில் கிளம்பிப் போனதுக்கு காரணம் நானா? இல்ல..’ என்று அவன் யோசிக்கும்போது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம்கேட்டது.

ஸ்ரீமதி வீட்டிற்குள் நுழைவதை கண்டவுடன், “இந்த நேரத்தில் எங்கே போயிட்டு வர?” என்று கேட்டான்

“ஒருத்தர் உயிருக்கு ஆபத்துன்னு ஹாஸ்பிட்டல் வரை போயிருந்தேன்” அவள் அலட்டிகொள்ளாமல் பதில் சொல்லவே அவனுக்கு சுள்ளேன்று கோபம் வந்தது.

“இன்னொருமுறை என்னிடம் சொல்லாமல் நீ வெளியே போகக்கூடாது” என்றவன் கண்டிக்க புருவம் உயர்த்தி அவனை நோக்கியவளின் தோரணையே மாறிப்போனது.

“என்னைக் கண்டிக்கவோ கட்டுபடுத்தி வைக்கவோ உன்னால முடியாது கௌதம். நான் யாரோட கட்டுப்பாட்டுக்கும் அடங்கி போகின்ற பொண்ணு கிடையாது. உன் பொண்டாட்டிகிட்ட என் பேச்சைக் கேட்காதேன்னு சொல்லு. அவ என்னைக்கு அதை செய்யாமல் இருக்கிறாளோ அப்போ நீ நினைக்கிற மாதிரியே அவ இந்த நேரத்தில் வெளியே போகாமல் உன்னோடு இருப்பா. என் பேச்சைக் கேட்கும் வரையில் நான் இப்படித்தான் அர்த்தராத்திரியில் அவளை வெளியே கூட்டுட்டுப் போவேன்” என்று சொன்னவள் அவனை சட்டை செய்யாமல் அறைக்குள் சென்று மறைவதை கண்ட கௌதமிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

அவளின் பேச்சும் தோரணையும் முற்றிலுமாக மாறியிருக்கவே, ‘என்மேல் கோபத்தில் இப்படி பேசறாளா?  உன் பொண்டாட்டின்னு சொல்லுது. அப்போ பேசியது அவ இல்லையா?’ என்ற சிந்தனையோடு சோபாவில் அமர்ந்தவனுக்கு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு உண்மைக்கு முன்னும், பின்னும் ஏதோவொரு ரகசியம் மறைக்கபடுவது போல தோன்றவே தலையே சுற்றியது.

கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ?” மதியின் குரலில் அருமையாக ஒலித்த பாடலின் வரிகள் அவனின் கவனத்தை ஈர்த்தது. கௌதம் அமர்ந்தபடி அறைக்குள் எட்டிப்பார்த்தான்.

மதியின் பளிங்குமுகம் மலர விடியற்காலையில் குழப்ப மேகங்கள் விலகி வானில் வெளிச்சம் பரவுவதை பார்த்தவளின் மீது அவனின் மனம் படர்ந்தது.

கௌதம் எழுந்து அவளின் அருகே சென்று, “நான் செய்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு மதி. நேற்று நைட் குடித்துவிட்டு வந்தவுடன் நீ கட்டியிருந்த புடவையும், நெற்றியில் வைத்திருந்த குங்குமமும் என்னை தடுமாற வைத்துவிட்டது” என்று சொல்லவே சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள் ஸ்ரீமதி.

“எனக்கு உன்மேல் கோபமில்ல கௌதம். நீ போய் ரெஸ்ட் எடு” என்பதோடு பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு நகர்ந்தவளின் முகத்திலிருந்து அவனால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாட்களில் கௌதம், ஸ்ரீமதியை நேருக்கு நேர் பார்ப்பதை தவிப்பதே வேலையாக வைத்திருந்தான்.

அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கௌதம் சீக்கிரமே வேலைக்கு கிளம்புவதால் அவளிடம் சாப்பாடு செய்யும்படி கூட சொல்வதில். தனக்கு தெரிந்ததை சமைத்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மதி எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.

ஆனால் அவளின் பார்வையை தவிர்த்துவிட்டு கௌதம் நகரவே, “இந்த வீட்டில் இருப்பது நீயும், நானும்தான். இப்படி முகம் கொடுத்து பேச முடியாத அளவுக்கு என்ன நடந்துவிட்டது?” என்று கேட்கவே பட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“உன்மேல் எனக்கு கோபம் இல்ல. சில விஷயங்களில் நிறைய குழப்பமாக இருக்கு. அதுக்கு தனிமை ரொம்ப தேவைன்னு தோணுது. அதுதான் உன்னை பார்த்து பேச முடியல” என்றதோடு அவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். இப்படியே தாமரை இலையில் தண்ணீரைப்போல இருவரின் உறவும் இருந்தது.

அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டின் சோபாவில் அமர்ந்து வேறொரு கேஸ் பைலைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம் எப்போது கிளம்புவான் என்ற சிந்தனையோடு அடிக்கடி வெளியே வருவதும் அவனைப் பார்ப்பதும் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்த மதியைக் கவனித்தவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

அவள் மீண்டும் வெளியே வரும்போது, “மதி என்ன குட்டிப்போட்ட பூனைபோல சுத்திட்டு இருக்கிற? நீ வெளியே எங்காவது போகணுமா?” என்று கேட்டதும், “இல்ல ஆமா கௌதம்” என்று தடுமாற்றத்துடன் அவளிடமிருந்து பதில் வரவே சிந்தனையோடு அவளை பார்த்தான்.

“சரி எங்கே போறேன்னு சொல்லு” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“அப்பா கம்பெனிக்கு வர சொன்னாரு” பட்டென்று அவளிடமிருந்து பதில் வந்தது.

“அப்படியா சரி இரு நான் மாமாவிடம் கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவளின் முன்னாடியே தாமோதரனுக்கு போன் அடித்தான் ஸ்ரீமதியோ முள்ளின் மீது நிற்பதுபோல பொறுமையை இழுத்துப் பிடித்துகொண்டு நின்றிருந்தாள்.

அவனை வேண்டாமென்று தடுக்க அவளால் முடிந்தபோதும் அமைதியாக இருக்கவே, “ஹலோ மாமா.. மதியை நீங்கதான் ஆபீஸ் கிளம்பி வர சொன்னீங்களா?” என்று கேட்டான்.

“………………….” மறுபக்கமிருந்து பதில் வரவே, “ம்ம் சரி மாமா” என்றவன் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.

அவள் கௌதமை கேள்வியாக நோக்கிட, “நீ கிளம்பு மதி.. மாமா உனக்காக அங்கே வெயிட் பண்றேன்னு சொன்னாரு” என்று அவளை அனுப்பிவிட்டு மீண்டும் தன் கவனத்தை பைலின் மீது திருப்பிவிட்டான்.

அவள் சென்று சிறிது நேரத்தில் அசோக்கிடம் இருந்து போன் வரவே, “இன்னைக்கு நான் லீவ் அசோக் நீயே அதை ஹேண்டில் பண்ணு. நாளை மற்றவற்றை பேசலாம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

அசோக் சென்ற சிறிதுநேரத்தில் கடத்தபட்ட குழந்தையை மீட்டேடுத்துவிட்டு அசோக் அங்கிருந்து கிளம்பும்போது மதி ஸ்கூட்டியை எடுத்துகொண்டு செல்வதை கவனித்தவன், “ஏய் நீ வீடே தங்கமாட்டியா மதி? இந்த இடமெல்லாம் எவ்வளவு ஆபத்தான இடம்னு தெரிஞ்சுதான் வருகிறாயா? உன் உயிருக்கு ஏதாவது ஆகிடும் என்ற பயமே உனக்கு வராதா?” என்று அவளின் வழியை மறித்து நின்று கேட்டான்.

“என் புருஷன் போலீஸாக இருக்கும்போது நான் எதுக்குப் பயப்படணும் அசோக்” என்று கேட்டாள்.

“அதுதான் அவன் வேலையே போகும் அளவுக்கு பண்ணி வெச்சிருக்கீயே மதி.. இதுக்குமேல் நீ என்ன பண்ணனும்?” என்று அவளிடமே நியாயம் கேட்க திருதிருவென்று விழித்தாள் ஸ்ரீமதி.

“என்னாச்சு அசோக்? நான் என்ன பண்ணேன்” என்று அவள் புரியாமல் கேட்கவே, “இந்த கேள்வியை நீ அவனிடமே போய் கேளு” என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு கௌதமிற்கு போன் செய்து மதி அங்கே வந்த விசயத்தைக் கூறினான்.

 “சரி அசோக். நீ போனை வை. அவ வந்தால் நான் பேசிக்கிறேன்” என்றவன் போனை வைக்கும்போது ஸ்ரீமதி குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழையவே கௌதம் தன் கையிலிருந்த பைலை மூடி வைத்துவிட்டு அவளை கோபத்துடன் முறைத்தான்.

அவனின் பார்வையில் கோபத்தை உணர்ந்தபோதும் வீம்புடன் வீட்டிற்குள் நுழைந்தவளிடம், “என்ன மதி போன இடத்தில் குழந்தையை ஒரு ஆபத்தும் இல்லாமல் காப்பாத்திட்ட போல” என்று நக்கலோடு கேட்டான்.

அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழப்பத்துடன், “ம்ம் ஆமா” என்றாள்.

“ஞாயிற்று கிழமை உனக்கு மட்டும் ஆபீஸ் திறந்து இருந்ததா மதி?”  அழுத்தத்துடன் அவன் கேட்கும்போது, ‘தன் தந்தை மறுபுறம் என்ன சொல்லி இருக்கிறார் என்று புரிந்துகொண்டாள் மதி,

“நான் உங்ககிட்ட பொய் சொன்னது தப்புதான் கௌதம். நான் உண்மையைச் சொன்னால் என்னை அங்கே அனுப்ப மாட்டேன்னு சொல்வீங்க. அதுதான் பொய் சொல்ல வேண்டியதாக போச்சு” என்றாள் கணீர் குரலில்.

அவளை உற்று நோக்கிய கௌதம், “நீ இந்த பொய் மட்டுமா மதி சொல்லி இருக்கிற? அதுதான் நிறைய சொல்லி இருக்கிறாயே.இந்த பொய்க்காக மட்டும் எதுக்கு மன்னிப்பு கேட்கிற மதி?” இருபொருள்பட கூறியவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் மதி.

“நீங்க சொல்றது எனக்கு புரியல கௌதம்” என்றாள் தெளிவாகவே.

“நாடகத்தில் நடிக்க வேஷம் போட்டால், கொடுத்த வேடத்துக்கு தகுந்த மாதிரி  நடிச்சுதான் ஆகணும்னு சொன்னேன்” என்றவன் தன் பைலை எடுத்துகொண்டு அறைக்குள் செல்ல நினைக்கும்போது அவனை தடுத்தாள் மதி.

“உங்களுக்கு வேலை போகும் அளவுக்கு என்ன நடந்தது?” என்றவுடன் சட்டென்று திரும்பிப் பார்த்தான் கௌதம்.

“ஓ இந்த உண்மை உனக்கு தெரியாதா மதி?  உன் பிறந்தநாள் அன்னைக்கு நீ நடுராத்திரி வெளியே போயிட்டு வந்த இல்ல. அந்த இடத்தில் ஒரு கொலை நடந்திருக்கு. அங்கே அந்த நேரத்தில் உன்னை அங்கே பார்த்தாக சிலர் சொல்லி கமிஷனர் ஆபீசில் கூப்பிட்டு விசாரிச்சாங்க” என்று அவன் ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு ஒரு நொடி பார்த்தான்.

அவள் குழப்பத்துடன் அவனையே பார்க்க, “உன் மனைவிக்கு தவறு நடக்கும் இடத்தில் என்ன வேலை? அந்த கொலையை செய்தது உன் மனைவிதான். அதுக்கு நீயும் உடன்தையான்னு கேட்டாங்க. அந்த கொலையை என் மனைவி செய்யலன்னு நிரூபிக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்” என்ற கௌதம் பேச்சு அவள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அவள் அவனை இமைக்காமல் பார்க்க, “அதை நிரூபிக்க முடியாமல் போனால் என் வேலை போகும். உன் கழுத்துக்கு தூக்கு கயிறு வரும். தாலிகட்டிய நானே உன் கழுத்துக்கு தூக்கு கயிறை வர விடுவேனா? அதுதான் உண்மையை நிருபிக்க தடையங்களை தேடிட்டே இருக்கேன்” என்றவன் அறைக்குள் சென்று மறைந்தான்.

அதன்பிறகு அவளால் எதுபற்றியும் யோசிக்க முடியாமல் போகவே சோபாவில் தொப்பென்று அமர்ந்த மதுவிற்கு எங்கே எப்படி தவறு நடந்திருக்கும் என்று சத்தியமாக புரியவில்லை. அன்னைக்கு குடிபோதையில் இருந்தவனை மது எதுவும் செய்யாமல் ஆட்டோவில் ஏறி வீடு வந்தபிறகு அங்கே என்ன நடந்ததென்று இப்போது கௌதம் சொன்னபிறகுதான் புரிந்தது.

அவள் கவலையோடு அமர்ந்திருப்பதை பார்த்த கௌதம், “நீ என்னிடம் பொய் சொன்னால் கூட நான் உன்கிட்ட உண்மையாகத்தான் இருக்கேன்னு புரிஞ்சிக்கோ. அதே மாதிரி இதை கைமாறுன்னு நினைக்காதே” என்றவன் சொல்லும்போது விழி உயர்த்தி அவனை பார்த்தாள் மதி.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவே, “எனக்கு புரியுதுங்க” என்பதோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவன் அங்கிருந்து ஆபீஸ் சென்று மாலை சீக்கிரமே வேலையை முடித்துவிட்டு வீடு வந்தவன் சோபாவில் அமர்ந்ததும் சோர்வுடன் விழி மூடினான். மதியை எப்படி இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவது என்ற சிந்தனையில் தன்னை மீறி உறங்கிவிட்டான்.

ஒருபுறம் குட்டிப்பெண்ணின் ஆன்மாவும், மறுபுறம் மதியும் நேருக்கு நேர் நின்றிருக்க கௌதம் நடுவே நின்று இருவரையும் பார்த்தான்.

“எழிலே உன் நிழல்கூட எனைச் சேர்ந்தது..

நீவேறு நான் வேறு யார் சொன்னது..” குழந்தையின் உருவம் மதியைப் பார்த்து பாடியது.

“பொன் வேந்தன் பூ மேனி என் மேனிதான்..

என்மேனி என்னாளும் உன் மேனிதான்..” மதியின் உருவம் குழந்தைப் பார்த்துப் பாடவே, ‘இவங்க இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த குட்டிப்பெண் யாரு?’ என்ற சந்தேகத்துடன் மனதில் எழவே பட்டென்று கண்விழித்தான் கௌதம்.

மதுவை சுற்று வரும் புகைமண்டலம் இப்போது அவளோடுதான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்த கௌதமின் நினைவில் வந்து போனது அன்று மதி தன்னிடம் எதிர்த்து பேசியது அவள் கிடையாது என்பது புரியவே வேகமாக எழுந்தவன் உடையை மாற்றிக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றான். மதுவிற்கு தியானம் கற்றுகொடுத்த முகுந்தனை நேரில் சென்று சந்தித்தான்.

கௌதம் மனதளவில் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தவர், “என்னப்பா திடீரென்று கிளம்பி வந்திருக்கிற?” என்று கேட்டார்.

“மது கத்தி கூச்சலிட்ட போட்ட அன்னைக்கு அவளைவிட்டு கொஞ்சநாள் என்னை விலகி இருக்க சொன்னீங்க. அதனால் தான் நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு மதுரை போனேன். நான் திரும்ப வந்தபோது மது இருந்த சமயத்தில் என் உள்ளுணர்வு அவ சாகல. தன் பக்கத்தில் இருக்கான்னு சொன்னதாக உங்ககிட்ட சொன்னேன்” என்றவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஒரு காற்று வேகமாக வந்து புழுதியைக் கிளம்பிவிட்டு சென்றது.

கௌதம் பேச்சு பாதியில் நின்றுவிடவே,, “என்னைக்கும் உள்ளுணர்வு பொய் சொல்லாது கௌதம். அதுமட்டும் இல்ல மதுவுக்கு எதுவும் ஆகல. அவ உன் பக்கத்தில் இருப்பது உண்மைதான்னு நான்தான் சொன்னேன்” என்றவர் அந்த வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!