Sontham – 3

MV5BY2JhMDk1YzQtMjc0Ny00ZmQ2LWJhZGItNWJmZjM3MDRlOWEyXkEyXkFqcGdeQXVyMjkxNzQ1NDI@._V1_UY1200_CR90,0,630,1200_AL_

Sontham – 3

அத்தியாயம் – 3

காலையில் இருந்து வேலை செய்த தனமும், எஸ்தரும் மாலைநேரம் மூன்று மணிபோல எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்த இருவரின் மனமும் இருவேறு திசையை நோக்கிப் பயணிக்க தோட்டத்தின் உள்ளே நுழைந்தனர்.

இருவரின் இடையே நிலவிய அமைதியைக் கலைத்தாள் எஸ்தர்.

“ஆமா கௌதம் எங்கேடி இன்னைக்கு அவன் ஸ்கூலிற்கு வரவில்லை” என்றதும் கவனம் கலைந்து நிமிர்ந்த தனம், “அவன் இன்னைக்கு லீவ் எஸ்தர் வீட்டில் அவங்க அப்பாவுடன் இருப்பான்” என்றாள்.

“கௌதம் செம சுட்டி. ஏழு வயதில் என்ன ஒரு கம்பீரம். அவன் சொல்வதைத்தான் நம்ம கேட்கணும் போல” என்றாள் எஸ்தர் சிரிப்புடன்

தனம் புன்னகையை பதிலாக கொடுக்க மெல்ல நடந்த இருவரும் தோட்டத்திற்குள் செல்ல செடியையும் பார்த்த எஸ்தரின் கால்கள் அங்கிருந்த ஜாதிமல்லி பூ செடியின் அருகே சென்று நின்றது.

அவளின் கைகள் தானாக எழுந்து அதிலிருந்து ஒரு பூவைப் பறித்து முகார்ந்து பார்க்க அதன் மனத்தில் அவளின் மனம் அவனை நோக்கி பயணித்தது.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா எஸ்தர் எனக்கு பூக்களில் ரொம்ப பிடித்த பூ ஜாதிமல்லி, மாலை நேரத்தில அதோட மனசில் மனம் பறிபோகும் எஸ்தர்” என்றவனின் குரல்கள் காதோரம் ஒழிக்க அவனின் நினைவுடன் நின்றிருந்தாள் பாவை அவள்.

அவள் தன்னை மறந்து நின்றிருக்க, “எஸ்தர் அங்க நின்னு என்ன யோசனை இங்க வந்து உட்காரு” என்ற தனத்தின் குரல் அவளின் கவனத்தை ஈர்த்தது.

அங்கிருந்த இன்னொரு சிமிண்ட் பெஞ்சில் அமர மாலை நேரத்து தென்றல் இருவரையும் தழுவிச்செல்ல ஏதோவொரு இதம் மனம் முழுவதிலும் பரவிவிட அந்த தருணத்தை ஆழ்ந்து ரசித்தது. எஸ்தரின் மனம் ஏனோ அவனின் நினைவில் ஆழ்ந்தது.

அவளின் நினைவுகள் கல்லூரி நாட்களை நோக்கி பயணிக்க அதில் அவனின் நினைவுகளை மட்டும் தேக்கி வைத்திருந்தது அவளின் காதல் கொண்ட மனம்.

எதைபற்றியும் கவலை இல்லாமல் தன்னையே சுற்றி வரும் அவனின் முகத்தை மனதில் கொண்டு வந்த எஸ்தர் எதையோ நினைத்து சிரித்தது. அதே நேரத்தில் தமயந்தியின் நினைவில் சிரித்த தனத்தை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் எஸ்தர்.

அவளின் பார்வையை உணர்ந்து, “என்ன எஸ்தர் தமயந்தி மட்டும் இங்கு இருந்த இன்னும் நல்ல இருக்கும் இல்ல” என்று தனம் வாய்விட்டுக் கேட்டதும், ‘ஹப்பாடி இவ என்னோட எண்ணவோட்டத்தைக் கவனிக்கல’ என்று பெருமூச்சு விட்டாள்.

அவளின் முகம் தமயந்தியை நினைத்ததும் தானாக மலர, “அது எப்படிடீ நான் மனசில் நினைச்சதை நீ அப்படியே சொல்ற?” என்று ஆச்சரியமாக கேட்ட எஸ்தரே மீண்டும் தொடர்ந்தாள்.

 “அவள் நம்முடன் இல்லாட்டி என்ன தனம். நம்ம எல்லோரும் சேர்ந்து ஒரே காலேஜ் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்” என்று தங்களின் பள்ளிக்கூட நினைவுகளை அசைபோட மீண்டும் அவனின் நினைவே அவளின் மனதில் எழுந்தது.

மீண்டும் அந்த நாட்களை எல்லாம் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தபடி நினைத்துப் பார்த்த தனமும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

“அவள் இருந்த இந்த சோர்வு எல்லாம் நமக்கு வருமா? இந்நேரம் ஸ்கூல் முடிந்து வந்தும், ஸ்கூலில் படித்த நாவலை முழுசாகச் சொல்லி நம்மை ஒருவழி பண்ணிட்டு இல்ல மற்ற வேலையே பார்ப்பா” என்ற தனமும் தங்களின் பள்ளிக்கூட நாட்களை சுற்றி வந்தது.

“அவள் சொல்ற ஒவ்வொரு கதையும் கம்பீரமான பெண்களைப் பற்றியே இருக்கும் எப்பவும் மனோதிடம் மட்டும் இழக்க கூடாதுன்னு சொல்வா. இப்போ தாமோதரன் சாரை கல்யாணம் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமாக இருக்கிற” என்று சொன்ன எஸ்தர் குரலில் இருந்த ஏதோவொன்று தனத்தைக் கவர்ந்திழுக்க தோழியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

அவளின் பார்வை தன்னைத் துளைப்பதைக் கண்ட எஸ்தர், “ஏய் மனக்கோட்டை எல்லாம் தப்பு தப்பாக கட்டாதே, கடைசில் அது உடைந்து விழுந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லம்மா” கிண்டலுடன் கூறிவிட்டு அவள் எழுந்து சென்றாள்.

அப்போதுதான் தனத்திற்கு ஒரு விஷயம் சந்தேகத்தை உருவாக்கியது. எஸ்தர் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கும், தமயந்தியின் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ என்ற கேள்வி அவளின் ஆழ்மனதில் எழுந்தது.

அவளுடன் சேர்ந்து எழுந்த தனம், “ஏய் நீ தாமோதரன் சாரை காதலிச்சியா?” என்று மனதில் நினைத்ததைப் பட்டென்று கேட்டுவிட்டாள் தனம்.

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக விழிமூடி நின்று அவனின் தோற்றத்தை மனத்திரையில் கொண்டு வந்தவள் காரணமே இல்லாமல் சிரித்தவளை தனம் கேள்வியாக நோக்கினாள்.

மாலை சூரியனின் ஒளியில் அவளின் மேனி பொன்வண்ணம் கொண்ட தோற்றத்தை கொடுக்க அவளின் அழகு இன்னும் கூடிவிட அவளைப்பார்த்தபடி நின்ற தனத்தின் பார்வை மாறியது. எஸ்தரின் முன்னே வந்து சூரியனின் ஒளி அவளின் மீது படாதபடி மறைத்து நின்றான்.

எஸ்தரைப் பார்வையால் வருடியவன் அவளை இமைக்காமல் நோக்கிட தனத்திற்கு அவனை சட்டென்று அடையாளம் தெரியவில்லை. அவனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தும், ‘இவன் ராஜேந்திரன் தானே?’ என்ற சிந்தனையுடன் நின்றிருந்தாள். தன்முன்னே நிழலாட கண்டு விழி திறந்தாள்.

அவளின் எதிரே ஆறடி உயரத்தில் கண்ணனின் நிறத்தில் அவள் எப்பொழுதும் பார்க்கும் அதே கம்பீரம் துளியும் மாறாமல் அழுத்தமான உதடுகளுடன் அவளைத் துளைக்கும் பார்வையுடன் நின்றிருந்த ராஜேந்திரனைப் பார்த்த எஸ்தர், “இந்தர்” என்று காதலுடன் அழைத்தாள்

அதில் தனத்தின் மனக்கோட்டை எல்லாம் ஒரு நொடியில் தவுடுப்பொடியாக மாறிவிட, “அடிப்பாவி” என்று வாய்விட்டு அலறினாள்.

அவளின் குரல்கேட்டு காதலியின் முகத்தில் பதிந்திருந்த பார்வையை தனத்தின் பக்கம் திருப்பிய ராஜேந்திரன், “என்னம்மா நல்ல இருக்கிறாயா?” என்றவனின் கேள்வியில் பேந்த பேந்த விழித்த தனத்தின் முகத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் எஸ்தர்.

“தனம் நான் அப்போவே சொன்னேன் இல்ல. மனக்கோட்டை கட்டாத கடைசியில் அது இடிந்து விழுந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லன்னு..” என்று  காரணத்தைச் சொல்லிக்கொண்டே வாய்விட்டு சிரித்த எஸ்தரின் முகத்தை கேள்வியாக நோக்கினான் ராஜேந்தரன்.

அவனின் பார்வை புரிந்து அவள் சற்றுமுன் நிகழ்ந்ததை அவனிடம் கூற இருவரும் பேசுவதைப் பார்த்து, ‘என்ன இவங்க இவ்வளவு இயல்பாக பேசிக்கிறாங்க எங்கயோ இடிக்கிதே’ என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள் தனம்.

அவள் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் வாய்விட்டுச் சிரித்தவனின் கம்பீரமான அழகை கண்கொட்டாமல் ரசித்தாள்.அவளைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்த ராஜேந்திரன், “எஸ்தர் நீ எப்படி இருக்கிற” என்று கேட்க அப்போதுதான் அவன் நேரில் வந்திருந்த நிதர்சனம் புரிய அவனை முறைத்தாள்.

‘இப்போ இவ எதுக்கு என்னை இந்த முறை முறைக்கிற?’ அவன் புரியாமல் தவிக்க காதலியின் மீது பார்வையை படரவிட்ட ராஜேந்திரனை முறைத்தாள் தனம்.

அவன் காரணம் புரியாமல் முழிப்பதைக் கண்டு அவளின் முகம் மீண்டும் மலர, “சாருக்கு எப்போ ஊட்டியில் இருந்து டிரான்ஸ்பர் வந்துச்சு.. டிரான்ஸ்பர் கிடைச்சாதான் நான் உன்னை வந்து பார்ப்பேன்னு சொன்னீங்க?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள்

 அவனின் விசாரிப்பும், இவளின் கோபத்தையும் பார்த்த தனம், “அடியேய் இங்க என்ன நடக்குது” கோபத்தில் கத்தினாள். அதில் இருவரின் கவனமும் கலைந்து தனத்தை திரும்பிப் பார்த்தனர்.

“இவர பிடிக்காது பிடிக்காதுன்னு எங்ககிட்ட எல்லாம் இத்தனை நாள் கதையாவிட்ட?” கோபத்தின் மொத்த ரூபமாக நின்ற தோழியைப் பார்த்து பயந்தபடி அருகில் நின்ற ராஜேந்திரனின் தோளில் சாய்ந்தாள்.

“நான் சொன்னேனா நீங்களா நினைச்சுகிட்ட அதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்ற அவளின் தோளைச்சுற்றி கைபோட்டுக் கொண்ட ராஜேந்திரன் சிரிக்க அவனின் மீது பார்வைத் திருப்பிய தனம்,

 “என்ன ராஜாண்ணா நீங்களும் இவளோட சேர்ந்து எங்ககிட்ட விளையாட்டிட்டு இருந்திருக்கீங்க இல்ல” என்றாள் கோபம் மிகுந்த குரலில்.

அவன் ஏதோ சொல்லும் முன் அவனை தடுத்து அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய எஸ்தர், “தனம் நான்தான் அவரிடம் எதுவும் சொல்லாமல் இருங்க என்றுதான் சொன்னேன்” என்றாள்

“அப்போ எதுக்கு திருமணமே வேண்டான்னு சொல்லிட்டு இருந்த?” என்றாள் தோழி தன்னிடம் உண்மையை மறைத்துவிட கோபத்துடன்.

எஸ்தரின் சமாதானம் அவளிடம் எடுபடாது என்று உணர்ந்து, “எனக்கு வேலை கிடைத்தும் ஊட்டிக்கு போஸ்ட் போட்டுட்டாங்க” என்று அவன் வாக்கியத்தை தொடங்க, “அவர் இங்கு வந்ததும் அப்பாவிடம் உண்மையைச் சொல்லாமல் என்று நானும் அமைதியாகவே இருந்தேன்” வாக்கியத்தை முடித்தாள்.

“அண்ணா இதுக்கு நீங்களும் உடந்தையா?” என்றாள் எஸ்தரின் மீது பார்வையை பதித்தபடி.

அவள் அமைதியாக இருக்க, “இரண்டும் சரியான கூட்டுக்களவாணிகள்..” என்று திட்டியவள் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த தனம், “மணி நாலு ஆகிவிட்டதா?” என்று அதிர்ந்தவளை புரியாத பார்வை பார்த்தாள்.

“ஜெனிதா ஸ்கூல் விட்டு வெளியே வந்திருப்பா” என்று கூறியவள் ராஜேந்திரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “அண்ணா நீங்க இவளோட பேசிட்டு இருங்க” என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு தனிமை வழங்கியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் நகர்ந்ததும், “என்ன எஸ்தர் நான் விளையாட்டுக்கு ஒரு வார்த்தை சொன்னால் அதை பெருசாக எடுத்துக்கிட்டு ஒரு வாரம் போனே எடுக்காமல் என்னை ஒரு வழி பண்ணிட்ட” என்று காதல் புலம்ப தொடங்கினான்.

அவள் பேசாத நாட்களில் அவன் அனுபவித்த வலி அவனின் குரல் வழியாக வெளிப்பட அவனின் காதலியோ அவனை இமைக்க மறந்து பார்க்க அதுவரை அவனின் மீதிருந்த கோபம் மறைந்துவிட்டது.

“நான் எப்பவும் எங்க அப்பா பேச்சுக்கு மறுபேச்சு பேசவே மாட்டேன். இப்போ உங்களால் தினமும் அப்பாவிட்ட வசவு வாங்கும் நிலையில் இருக்கேன். இந்த ஜெனிமா மட்டும் இல்லாட்டி அப்பாட்ட அடிதான் வாங்கணும்” என்றவளின் குரலிலும் வருத்தமே.

“குட்டிமா எங்க இருக்கா எஸ்தர்” என்றவன் பேச்சை திசை மாற்ற அவளோ மெளனமாக நின்றிருந்தாள்.

அவளின் மனம் புரிந்து அவளை நெருங்கி நின்ற ராஜேந்திரன், “ஜெனிக்குட்டி உன்கூட இருப்பதால் தானே நான் அங்கே கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கேன்” தன் வாயால் அவளிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

“இருப்படா நீ ரொம்ப சந்தோஷமாவும், அடுத்தவளை நல்ல சைட் அடிச்சிட்டு இருப்ப..” என்று திட்டியவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவனை முறைத்தவள் கையை மடக்கி அவனின் நெஞ்சில் குத்த தொடங்கினாள்.

அவள் அடித்த அடியெல்லாம் வாங்கிகொண்டு, “போலீஸ் வேலையைப் பார்க்கவே இங்க நேரம் பத்தல. இதல சைட் அடிக்கிற வேலையையும் சேர்த்து பார்க்க சொல்றாளே என் காதலி” என்றவன்  சிமிண்ட் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்ந்து வாய்விட்டுச் சிரித்தான்.

அவள் கோபத்தில் அந்த இடத்தைவிட்டு எழுந்து செல்ல நினைக்க, “எஸ்தர் இந்த கோபம்தான்டி உன்னைத்தேடி என்னை வர வைச்சிருக்கு” என்றவன் அவளைப் பின்தொடர்ந்தான்.

“நீங்க என்னை சமாதானம் பண்ண வந்துருப்பது போல தெரியலையே..” என்றதும் மெச்சுதலாக பார்த்தவனின் பார்வையே சொன்னது காதலி சொன்னது மறுக்க முடியாத உண்மை என்று!

அவள் அவனைவிட்டு விலகி நடக்க அவளின் வழியை மறித்து நின்றவனை இடதுபுருவம் உயர்த்தி கேள்வியாக நோக்கினாள்.

“நான் தாமோதரனைப் பார்த்துட்டு போக வந்தேன்” என்றதும்  அவளின் முகம் மலர்ந்துவிட, “அப்போ தமயந்தியை நான் பார்க்க முடியும் இல்ல” என்று கேட்ட எஸ்தரின் குரலில் இருந்த ஏதோவொன்று அவனைப் பாதித்தது.

அவள் தோழியின் பிரிவை அவள் சொல்லாமல் உணர்ந்தவன்,“நான் உன்னை கூட்டிட்டு போறேன். இப்போ ஜெனிதா எங்கேன்னு சொல்லுடி. என் மகளை என்னோட கண்ணுலயே காட்டவே மாட்டேங்கிற” என்றான் அவளை கொஞ்சியபடி.

அவனுக்கும் எஸ்தரின் மூலமாக ஜெனியைப் பற்றி எல்லாமே தெரியுமே தவிர ஒருமுறை கூட அவன் ஜெனியைப் பார்த்தது கிடையாது. எஸ்தர் அவனுடன் போனில் பேசினாலும் அதில் ஜெனியைப் பற்றிய ஒரு செய்தி கண்டிப்பாக இருக்கும். அதனாலோ என்னவோ ராஜேந்திரனுக்கும் ஜெனிமீது ஒரு பாசம் உருவானது.

அந்த பாசத்திற்கு அவன் இட்ட பெயர் ‘அப்பா’. தனக்கும் எஸ்தருக்கும் பிறந்த முதல் குழந்தையாகவே ஜெனிதாவை நினைத்தான்.

“அவள கூப்பிட்டு வரத்தான் தனம் போயிருக்கா” என்றதும் அவளின் கையைப்பிடித்து இழுத்தவன், “வா நம்ம முதல போய் மகள பார்த்துட்டு வரலாம்..” என்று சொல்ல எஸ்தரும் அவளின் முகத்தைப் பார்த்து புன்னகைப் பூத்தபடியே அவனைப் பின்தொடர்ந்தாள்.

எஸ்தருக்கும் ஜெனியின் மீது தனிபாசம் இருக்கவே செய்தது. மாலை ஸ்கூல் விட்டதும் பேக்கை மாட்டிக்கொண்டு வேகமாக வெளியே வந்த ஜெனிதா முதலில் பார்த்தது தனத்தைத்தான்.

அவளைப் பார்த்ததும், “அக்கா” என்று ஆர்பரித்தபடியே கத்திக்கொண்டு ஓடிவந்த ஜெனிதாவைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழிறக்கிவிட்டாள்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த ராஜேந்திரன், “ஜெனிக்குட்டி” என்று பாசத்துடன் அழைத்தவனின் குரல்கேட்டு திரும்பிய தனம், ‘இவருக்கு எப்படி ஜெனியின் பெயர் தெரியும்?’ என்று யோசிக்கும் பொழுதே அவனின் பின்னோடு வந்த எஸ்தரின் முகம் கண்டாள்.

அது உணர்த்திய செய்தி புரிந்ததும் அவளின் முகத்திலிருந்த குழப்பம் மெல்ல விலகியது.இருவரையும் திரும்பிப் பார்த்த ஜெனிதா முதலில் எஸ்தரின் முகத்தைப் பார்த்தாள்.

அவள் ‘போ..’ என்று கண்ணசைக்க ஜெனியின் முகம் பூவென மலர்ந்துவிட அவனை நோக்கி நடந்தவளைத் தூக்கி அவளின் பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“செல்லம் என்னை நீ அப்பான்னு கூப்பிடுவியா?” என்று ஆர்வமாகக் கேட்டவனின் முகத்தைப் பார்த்த தனத்திற்கு இந்த விஷயம் புதிதாக இருக்க மீண்டும் தோழியின் முகம் பார்க்க அவளோ விழிமூடி திறக்க தனத்தின் கவலை எல்லாம் பறந்து போனது.

அவளோ“ஓ ரூட் இப்படி எல்லாம் போகுதோ?” என்று இழுத்தவள் ஜெனிதாவின் முகத்தைக் கேள்வியாக நோக்கினாள்.  ஜெனி  எஸ்தரின் முகத்தையும், ராஜேந்திரனின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தாள்.

இருவரும் என்ன பேசிகிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை. ஜெனிதா ஸ்கூல் விட்டு இன்னும் வரவில்லை என்றதும் அவளைத்தேடி வந்தார் குணசேகரன்.

அப்பொழுது ஜெனிதாவைத் தூக்கி வைத்திருக்கும் புதியவனைப் பார்த்தும், ‘இவரு யாரு?’ என்ற கேள்வி அவரின் மனதில் எழுந்தும் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அவர் வருவதைக் கவனிக்காமல் எஸ்தர் மனதிலிருந்த உண்மையை போட்டு உடைக்க அதில் குணசேகரனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

“ஆமா தனம் இவள எங்களோட முதல் குழந்தையாகத்தான் நாங்க இருவருமே நினைக்கிறோம். என்ன நான் இதுவரை எதையும் வாய்விட்டுக் கேட்டதும் இல்ல. அவளிடம் இந்தா விஷயம் பற்றி சொன்னதும் இல்ல” என்றாள்.

அதற்குள் அவர் அவர்களை நெருங்கிவிட அவரை முதலில் பார்த்த தனம், ‘ஐயோ அப்பா வருகிறாரே’ என்று பதட்டத்துடன் நினைத்தாள்.

அவளின் பதட்டமான விழிகளைப் பார்த்த ராஜேந்திரன் அவளின் விழி போன திசையை நோக்கி தன்னுடைய பார்வையைச் செலுத்தினான். அவனின் தோளில் சாய்ந்து குணசேகரனைப் பார்த்தாள் ஜெனிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!