sontham – 32 Pre – Final

E_1331697163

அத்தியாயம் – 32

அனைவரும் இணைந்து ஹாலில் சென்று அமரவே, “நான் எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வரேன்” என்ற தமயந்தி சமையலறைக்குச் செல்ல அவருக்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு பின்னோடு சென்றாள் மது.

“உங்களுக்கு இத்தனை நாள் மறுவீட்டு விருந்து செய்யாதது மனசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. இப்போ மனசுக்கு ரொம்பவே நிறைவாக இருக்கு” என்றார்.

“அதனால என்ன மாமா” என்றபோது அவரின் செல்போன் அடிக்கவே, “முக்கியமான போன் இருங்க பேசிட்டு வரேன்” என்று எழுந்து சென்றார்.

அவர் சென்றபிறகு கௌதமின் கவனம் முழுவதும் ராஜலட்சுமியின் மீது திரும்பியது. கையில் வைத்திருந்த பத்து மொட்டுகளை எண்ணிவிட்டு உதட்டில் மலர்ந்த ஓர் புன்னகையுடன் அதை எதிரே இருந்த டேபிளின் மீது போட்டார்.

அதைக் கவனமாக பார்த்துக் கொண்டிருந்த கௌதம் விழிகள் வியப்பில் விரிந்தது. அவர் டேபிளில் போட்ட மொட்டுகள் நிமிடத்தில் மலர்ந்தது. மீண்டும் அவர் சிரிப்புடன் அதை கையில் எடுக்க அது மலராமல் அரும்பாக இருந்தது. அவர் மீண்டும் அதையே செய்ய பூக்கள் மலர்ந்தது.

வெறும் பத்து மொட்டுகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த ராஜலட்சுமியின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அவர் கையில் பூக்களை வைத்துக்கொண்டு போடுவது போல பாவனை செய்தாரே தவிர, ஆனால் கீழே போடவில்லை.

அவரின் செயல்கள் சிறு குழந்தையின் பந்தை எடுத்து வைத்துகொண்டு கையில் கைமாற்றி விளையாடி குழந்தையை ஏமாற்றுவதுபோல இருக்கவே, “மது” என்றான் கௌதம்.    

அதற்குள் அவள் அங்கு வரவே பூவை டேபிளில் வைத்துவிட்டு, “எனக்கு சக்கரை போடாத காபி கொடு மது” என்றார் ராஜலட்சுமி.

அவர் கீழே போட்ட பூ மலர்ந்து மனம் வீசியது. மலராத அரும்புகள் மலரவதைக் கண்டு அவனின் மனதில் சந்தேகம் எழுந்தது. அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க தமயந்தி சமையலைக் கவனித்தார். அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு எழுந்து அவரவர் அறைக்குச் சென்றனர்.

இரவு படுக்கை அறைக்கு வந்த மதுவிடம், “உங்க பாட்டி நல்லாவே மேஜிக் பண்றாங்க மது” என்ற கௌதம் மாலை நடந்ததை அவளிடம் கூறினான்.

“சும்மா கதை சொல்லாதீங்க கௌதம்” என்று சொல்லிவிட்டு படுத்து தூக்க சென்றவளிடம் சில சில்லறை விளையாட்டுகளை நடத்தியபிறகு அவளை இழுத்து அணைத்தபடி உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அடுத்து வந்த நாட்களில் கௌதம் பாட்டியின் செயலைக் கவனிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தான். அவருக்கும், அந்த ஜாதிமல்லி பூவிற்கும் இடையே ஏதோவொரு மர்மம் மறைந்திருப்பதை உணர்ந்தான்.

அந்த வார இறுதியில் மாலை நேரம் வீட்டில் பியானோ வாசிக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டவே, “இந்த அம்மாவுக்கு மாலை நேரமானால் இதே வேலையாகப் போச்சு” என்றார் தாமோதரன்.

கௌதம் அவரை புரியாத பார்வை பார்க்கவே, “என் அம்மா அவங்க அறையில் பியானோ மியூசிக் கேட்பாங்க. அதுவும் பூவே செம்பூவே பாட்டு மட்டும்தான் கேட்பாங்க” என்றவுடன் அவனின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

‘ஒருவேளை மதுதான் மேலே வாசிச்சிட்டு இருக்கிறாளோ’ என்ற சந்தேகத்துடன் வேகமாக மாடியேறிச் சென்றான். அங்கே சென்று பார்க்கும்போது மது பால்கனியில் நின்று தோட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

மெல்ல அவளின் அருகே சென்று அவளை பின்னோடு இருந்து கட்டியணைத்து, “நீதான் பியானோ வாசிக்கிறீயோ என்ற எண்ணத்தில் ஓடி வந்த என்னை ஏமாத்திட்டியே மது” என்றபடி அவளின் காதுமடல்களை செல்லமாக கடித்தான்.

“இந்நேரத்திற்கு நான் வாசித்தா பாட்டிக்கு அவ்வளவு கோபம் வரும். அதனால் இந்த நேரத்தில் நான் வாசிக்க மாட்டேன்” என்றவுடன் காரணமே இல்லாமல் கௌதமின் சந்தேகம் அதிகமானது.

“ஏய் இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று புரியாமல் கேள்வி கேட்டான்.

“கௌதம் கீழே எங்க பாட்டி ரூமில் இருபது வருட பழைய பியானோ இருக்கு. ஆனால் அதில் அவங்க வாசித்தும் நான் பார்த்து இல்ல. என்னையும் வாசிக்க விட்டதில்லை” என்ற அவளின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தபடி அவளிடமிருந்து விலகியவன் வேகமாக கீழிறங்கிச் சென்றான்.

திடீரென்று வந்து கட்டியணைத்து கேள்வி கேட்டுவிட்டு பதில் சொன்னவுடன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடும் கணவனின் பின்னோடு வேகமாக கீழிறங்கிச் சென்றாள் மது.

அவன் வேகமாக ராஜலட்சுமி அம்மாவின் அறையின் கதவுகளைத் தட்டுவதைக் கண்டு, ‘இப்போ எதுக்கு இவரு இங்கே போறாரு?’ என்ற கேள்வியுடன் பாட்டியின் அறைக்கு வெளியே நின்றாள் மது.

“யாரது” என்று எட்டிபார்க்க வாசலில் நின்றிருந்த கௌதமை உள்ளே வரும்படி சைகை செய்ய அறைக்குள் நுழைந்தவனின் பார்வை ஓரமாக இருந்த பியானோவின் மீது படிந்தது. அதில் வாடிப்போன ஜாதிமல்லி பூக்கள் சேகரிக்கபட்டு ஒரு கண்ணாடிக்குள் போட்டு அங்கே வைக்கபட்டிருந்தது.

அவரின் அருகே சென்று அமர்ந்த கௌதம், “மது உங்க ரூமில் பியானோ இருக்குன்னு என்னிடம் சொன்னா.. உங்களுக்கு வாசிக்க தெரியுமா பாட்டி” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்த ராஜலட்சுமி, “என் பேத்தி ஆசைபட்டு கேட்டது. அதனால் வாங்கிபோட்டு இருக்கேன். அவதான் அடிக்கடி வந்து வாசிப்பா..” என்றார் எதார்த்தமாக.

“இப்போதான் மது அவளை வாசிக்கவே விட மாட்டீங்கன்னு சொன்னா” அவன் சந்தேகத்துடன் கேட்க மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி அவனைப் பார்த்தவர் சிலநொடிகள் மெளனமாக இருந்தார்.

பிறகு, “நான் மதுவை சொல்லல கௌதம் ஜெனியைச் சொன்னேன்” என்றார் ஆழ்ந்த குரலில்.

“என்னது” என்றவனின் குரல் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிபடுத்தியது.

“ஆமா அவதான் வந்து அடிக்கடி வாசிப்பா. அவ வரும்போது அந்த கண்ணாடிக்குள் இருக்கும் வாடிப்போன பூ மலர்ந்துவிடும் தெரியுமா” சாதாரணமாகக்கேட்டு அவனை வியப்பில் ஆழ்த்தினார்.

மதுவும் அவளின் பின்னோடு தாமோதரன், தமயந்தி இருவரும் நிற்பதை கவனிக்காத கௌதம், “ஜெனி இறந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?” பாட்டியிடம் அழுத்தத்துடன் கேட்டவனை படுக்கையில் அமரும்படி சொன்னார்.

அவன் சொன்னதை செய்யவே ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்த ராஜலட்சுமி, “இந்த இருபது வருடமாக மனசில் போட்டு பூட்டி வைத்திருக்கும் விஷயத்தை எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறீயே கௌதம்” என்றவரின் கண்கள் அன்றைய நாளின் நினைவில் கலங்கியது.

கௌதம் அவரை இமைக்காமல் பார்க்க அவரின் மனம் இருபது வருடம் பின்னோக்கிச் சென்றது.

***

அன்று ஜெனிதா தமயந்தியைப் பார்ப்பதற்காக ஆசரமத்தில் இருந்து கிளம்பிய சற்றுநேரத்தில் தமயந்தி மாதிரி ஒரு பெண்ணின் பின்னோடு சென்றாள். அதே நேரத்தில் அவள் காணாமல்போன விஷயமறிந்து ஆட்களை நாலாபுறமும் விட்டுத் தேட சொன்ன ராஜலட்சுமியின் மனதில் படபடப்பு அதிகரித்தது.

“தமயந்தி நீ இங்கேயே இரும்மா. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்”என்று சொல்லிவிட்டு கிளம்பிய ராஜலட்சுமி நடந்தவரின் பார்வை ஜெனியைத் தேடியது.

அப்போது ஒரு திருப்பத்தில் ஜெனிதா செல்வதைக் கண்டவர், “பாப்பா நில்லுடா” என்று கத்தியபடி அவளின் பின்னோடு செல்ல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நால்வர் சேர்ந்து ஜெனியின் வாயைக் கட்டித் தூக்கிச் செல்வதை கண்டு, ‘ஐயோ என் பேத்தி’ என்று அவர்களின் பின்னோடு ஓடினார்.

அங்கிருந்த ஒரு பழைய பாழடைந்த வீட்டிற்குள் அவளைத் தூக்கி செல்வதைக்கண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துகொண்டு உள்ளே நுழையவே அங்கே எஸ்தரை கெடுத்து கொன்ற ரமேஷ் தந்தை நின்றிருந்தார்.

‘இவன் இங்கே என்ன பண்றான்’ என்ற சிந்தனை அவரின் மனதில் எழுந்தது.

“ஏண்டா எஸ்தர் கொலை வழக்கில் என் மகனுக்கு எதிராக சாட்சி சொன்ன குட்டியைத் தூக்கிட்டு வந்துடீங்களா?” என்று கேட்கும்போது ஜெனியை கீழே இறக்கிவிட்டு அவள் ஓட முடியாத அளவிற்கு நின்றனர்.

பாட்டி சத்தம் போடாமல் அவளை அங்கிருந்து காப்பாற்றுவது எப்படி என்று யோசிக்கும்போது ரமேஷ் தந்தையின் செல்போன் சிணுங்கியது. ஜெனிதா சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி தைரியமாக நின்றபோதும் அவளின் கண்களில் பயம் தெரிந்தது.

“அந்த போலீஸ்காரன் பேரு என்ன? ம்ம் ராஜேந்திரன் அவனை போட சொன்னேனே போட்டீங்களா?” என்று போனில் வேறொரு யாருடனோ பேசினான்.

மறுபுறம் வந்த விஷயத்தைக் கேட்டு, “ஓ ஊட்டியிலிருந்து வருகின்ற வழியில் லாரியை  வச்சு அடிச்சு தூக்கிட்டீங்களா? அவன் அந்த இடத்திலேயே இறந்துட்டானா?” என்று கேட்டவர் மீசையை முறுக்கிக்கொண்டு கம்பீரமாக சிரித்தார்.

அதைகேட்டு ராஜலட்சுமிக்கு தூக்கிவாரிப் போட்டது. ஜெனிதாவின் வாயையும், கையையும் காட்டி வைத்திருந்த போதும் கண்ணிமைக்கும் நொடியில் ஒருவனின் காலில் மிதித்த ஜெனிதா கிடைத்த கேப்பில் குடுகுடுவென்று ஓடினாள்.

அவள் தன்னருகே ஓடி வருவதை கண்ட ராஜலட்சுமி அவளைத் தூக்க நினைத்து இரண்டடி எடுத்து வைக்கும் முன்னரே அடியாள் ஒருவன் வந்து ஜெனியைத் தூக்கிவிட்டான்.

பாட்டி மனதிலிருந்த பயத்தைத் தொலைத்துவிட்டு அவளை நெருங்கும் முன்னர் ரமேஷ் தந்தை கோபத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவளின் வயிற்றில் குத்தி, “என் மகனை பரலோகம் அனுப்பிய உங்களை எல்லாம் சும்மா விடுவேன்னு நினைச்சீங்களா?” மறுபடியும் அவளின் வயிற்றில் குத்தினார்.

ஜெனிதாவின் வயிற்றில் ரத்தம் கொட்டிட கீழே விழுந்தவளை பார்த்தவர், “டேய் இனிமேல் கொஞ்ச நாளைக்கு யாரும் இங்கே இருக்கக்கூடாது” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்த காரில் ஏறிச் சென்றுவிடவே மற்ற நால்வரும் அவரவர் பைக்கை கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற மறுநொடி ஓடிச்சென்று, “ஜெனிதா” என்று அவளைக் கையில் தூக்கி கையிலிருந்த கட்டையும், வாயில் கட்டியிருந்த கட்டையும் அவிழ்த்தார்.

அவரைக் கண்டதும், “பாட்டி வலிக்குது” என்று சின்னவள் அழுகவே அவளின் உடை முழுவதும் ரத்தத்தால் நனைந்தது. உடனே அவளைத் தூக்கிகொண்டு அருகே இருந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்.

அவர்கள் எப்படி நிகழ்ந்ததேன்று கேட்கவே விளையாடும்போது மாடியிலிருந்து கால்தவறி கீழே விழுந்ததில் வயிற்றில் கம்பி ஏறிவிட்டதாக சொல்லவே, உடனே அவளுக்கு சிகிச்சை அளித்தனர்.

அந்த நேரத்தில் ராஜேந்திரனின் இறப்பு பற்றிய தகவல் கிடைத்தால் எல்லோரின் கவனமும் அதில் திரும்பிவிடவே இவரைக் கவனிக்க மறந்தனர்.

முதல்நாள் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டு விரைவாக வீடு வந்தவர் தாமோதரனிடம் இறுதி சடங்குகளை கவனிக்க சொல்லிவிட்டு, “நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ தாமு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இரவும், பகலும் ஜெனிதா கண்விழிக்க காத்திருந்தார் ராஜலஷுமி. மூன்றாம் நாளின் முடிவில் டாக்டர்கள் கையை விரித்துவிடவே, “ஜெனிதா” என்று அழுதபடி அவளின் அருகே சென்றார்.

ஜெனிதா இரண்டு கண்களையும் பாதி திறந்த நிலையில் அவரை நோக்கி கைநீட்டிட அவளின் கையைப்பிடித்து, “மற்றவங்களுக்கு கெடுதல் நினைக்காத உனக்கு ஏன் இப்படியொரு தண்டனை கொடுத்தான் அந்த ஆண்டவன்னு எனக்கு புரியலம்மா. இங்கே பணம் படச்சவன் ஆயிரம் பேரு இருந்தாலும் அவனையெல்லாம் தாண்டி ஒரு சக்தி இருக்குன்னு நான் நம்பறேன். நீ போய் உன்னைப் படைச்ச கடவுளிடம் கேளு கண்ணு” என்று சொல்லும்போது அவரின் கையை இறுக்கிப்பிடித்தபடி அவளின் உயிர் உடலைவிட்டு பிரிந்தது.

ஏற்கனவே இரண்டு பேரின் இழப்பை தாங்க முடியாமல் இருக்கும் குடும்பத்திடம் இவளின்  இழப்பையும் சொன்னால் என்னவாகும் என்று யோசித்த பாட்டி அவளின்  இறுதி சடங்கை முடித்தார்.

கடைசியாக அவளின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நின்றவர், “உனக்கு சாகும் வயசில்ல ஜெனிம்மா. உன் பெயரில் கூட ஜனனம் தான் இருக்கே தவிர மரணம் இல்ல. இதோ இந்த ஜாதிமல்லி பூவின் வாசனைபோல் நீ எங்களோடு இருக்க நீ சீக்கிரம் வரணும் ஜெனிமா” என்றவர் அவளை புதைத்த இடத்தில் மலராத மொட்டுக்கள் பத்து பூவை வைத்துவிட்டு சென்றார்.

அவர் பத்தடி தூரம் சென்றபிறகு பூவின் வாசனை அவரை சூழ்ந்து கொள்ளவே பட்டென்று திரும்பி பார்க்க அவர் போட்ட மொட்டுக்கள் மலர்ந்திருந்தது.

“என்னோடு வருகிறாயா? சரி வா..” முகம் மலர கூறிய ராஜலட்சுமி முன்னே செல்ல அவரை சூழ்ந்தபடி வந்தது பூவின் வாசனை!

கடந்த காலத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த ராஜலட்சுமி கௌதமிடமிருந்து பதில் வராததைக் கண்டு சிந்தனையோடு நிமிர்ந்து பார்த்தார். அவன் கண்கள் லேசாக கலங்கி இருக்கவே, “ஒரு குழந்தைன்னு யோசிக்காமல் இப்படி பண்ணிருக்கானே அவனை எப்படி பாட்டி சும்மா விட்டுட்டு வந்தீங்க” என்று கேட்டதற்கு கர்வத்துடன் புன்னகைத்தார்.

அவன் காரணம் புரியாமல் அவரை குழப்பத்துடன் நோக்கிட, “எல்லோருக்கும் நல்லது நினைக்கிற குழந்தையை கொன்ற பாவம் அவனை சும்மா விடுமா கௌதம். ஜெனியை குத்தி போட்டுவிட்டு போகும் வழிலேயே கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான். ஜெனி உயிர் போகும் முன்னாடியே அவன் உயிரை எடுத்துட்டான் ஆண்டவன்” என்றார்.

கௌதம் மனம் சற்று நிம்மதியடையவே, “அவ இறந்த இரண்டே வாரத்தில் தமயந்திக்கு பிரசவவலி வந்துச்சு. குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்காதுன்னு சொன்னாங்க. நான் அப்படியே இடிஞ்சுப் போய் உட்கார்ந்து இருக்கும்போது ஜெனிதான் வந்தாள். கொஞ்ச நேரத்தில் சுகப்பிரசவத்தில் இரண்டு குழந்தையும் பிறந்துவிட்டது” என்றவரின் கண்கள் அன்றைய நினைவில் கலங்கியது.

“அன்னைக்கு நான் கையில் குழந்தையை வாங்கும்போது, ‘பாப்பாவை நான் பத்திரமா பார்த்துக்குவேன் பாட்டின்னு’ காதோடு சொன்னா கௌதம். அதுக்குபிறகு ஸ்ரீமதி, மதுஸ்ரீ வளர்ந்து பெரிய பொண்ணுங்க ஆகும்வரை அவ இருக்கும் தைரியத்தில் எங்கே வேண்டுமானாலும் அனுப்புவேன்” என்றவர் சொல்லிக்கொண்டே சென்றார்.

“ஸ்ரீமதிக்கும், மதுஸ்ரீக்கும் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு கிளம்பி போனேன். அங்கே மதுவோட ஜாதகத்தை தான் முதலில் பார்த்தாங்க. அவ பூமியில் அவதரிக்க காரணமா இருந்த ஒரு ஜீவ அத்மாக்கு அவ உதவி செய்வா. அதுதான் அவளோட கடமை என்பது மறுக்க முடியாத உண்மை என்றார். அதற்குள் அவளுக்கு கல்யாணம் நடந்து அவளோட கடமைக்கு யாராவது இடையூறா வந்தால் இல்லற வாழ்க்கையை துறந்துவிடுவாள்ன்னு சொன்னாங்க” என்றவர் ஒரு பெருமூச்சுடன் கௌதமை பார்த்துவிட்டு மீண்டும் விட்ட தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!