sathyaraj-stills-photos-pictures-22

அத்தியாயம் – 5

மூவரும் பேசியபடி அவர்கள் வீட்டிற்கு செல்ல, அவர்களின் வரவை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்த மகனின் கண்களில் தேடலைக் கண்டதும், ‘இவங்க கூட பேசிட்டு இருந்ததில் இவனை மறந்துவிட்டேனே’ என்று எண்ணியபடி வேகமாக அவனை நெருங்கினாள்.

அவனோ ஜெனிதாவைப் பார்த்தும் தாயிடம் பேசாமல், “ஜெனிக்கா” அவளை நெருங்க அதைப் பார்த்த தோழிகள் இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

“கௌதம் இன்னைக்கு ஏண்டா ஸ்கூலிற்கு வரல” என்று தம்பியின் கரம் கோர்த்து நடந்தவளிடம், “இன்னைக்கு அப்பா ஊரில் இருந்து வந்திருக்காரு. அதன் அக்கா நான் ஸ்கூலிற்கு வரல” என்று ஜெனியுடன் பேசியபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

அப்போது தான் வாசலின் அருகே சத்தம்கேட்டு வெளியே வந்த யுகேந்திரன், “வாங்க மேடம் வேலை முடிய இவ்வளவு நேரமா” என்று அவர்களை எதிர்கொண்டான்.

அவனின் குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்த எஸ்தர், “அண்ணா நல்லா இருக்கீங்களா? நீங்க வந்த விஷயத்தை இவள் என்னிடம் சொல்லவே இல்ல” என்று வந்தும் புகார் பத்திரம் வாசித்தவளை பார்த்து நகைத்தான்.

அவர்கள் இருவரும் பேசிகொண்டிருக்க தனம் சென்று உடையை மாற்றிவிட்டு கைகால் அலம்பிவிட்டு வெளிவர, “உனக்கு எப்போம்மா கல்யாணம்?” என்றவனின் கேள்வி மனையாளின் காதில் விழுந்தது.

எஸ்தர் பதில் சொல்லாமல் தன்னருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் மீது பார்வை பதித்தபடி மெளனமாக இருக்க சமையலறையில் இருந்து காபியுடன் வெளியே வந்த தனமோ, “மேடம் நம்ம கேட்டப்ப எல்லாம் கல்யாணம் வேண்டான்னு சொன்னதுக்கு காரணம் என்ன தெரியுமாங்க” என்று கணவனிடம் குறும்பு பேசியபடி தோழியை ஓரக்கண்ணால் பார்க்க அவளின் முகம் சிவக்க தலை குனிந்தாள்.

அவளின் முகம் சிவப்பும், மனைவியின் கேள்வியும் அவனின் மனதில் சந்தேகத்தைக் கொடுக்க, “தனம் என்ன நடந்தது சொல்லு” என்று அவளை இழுத்து அருகே அமரவைத்தான்.

“மேடம் போலீஸ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாங்க. சார் ஊட்டியில் போஸ்டிங்ல இருக்காரு” என்று ராஜேந்திரனை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்து நிமிர்ந்தாள்.

“வாவ் நான் மட்டும் ராணுவத்தில் இருக்கேனே சப்போர்ட் பண்ண ஆள் இல்லையேன்னு கொஞ்சம் கவலையாக இருந்தேன். இப்போ பார்த்த உன் ஆளும் போலீஸ் ஆபிசரா” என்று சிரிப்புடன் கேட்டு கேலியில் இறங்கினான்.

தனத்தின் விருப்பபடி ஒரு ராணுவ வீரனையே குணசேகரன் திருமணம் செய்து வைக்க அவர்களின் திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும் வகையில் பிறந்தான் கௌதம். தனத்தின் மீதுள்ள காதலை தாண்டியும் நாட்டின் மீது அவன் வைத்திருந்த பற்றுதான் அவனை இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

வருடத்தில் பலமாதங்கள் நாட்டுக்காக எல்லையில் ஆயிரம் போராட்டத்தை சந்திப்பவனுக்கு குடும்பத்தின் மீது காதல் இருக்காதா?

அவன் ஒவ்வொரு முறை சோதனைகளை சந்திக்கும்போது அவனின் உள்ளத்தில், ‘இதே நாட்டில் தான் என் உறவுகளும் இருக்கிறது, அவர்களுக்கு நான் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் செல்வான்.

அவன் சென்றபிறகு அவனின் நினைவில் வாழும் அவளுக்கு மட்டுமே தெரியும். தன் கணவன் என்றோ ஒரு நாள் தாய் நாட்டிற்காக தன் உயிரைக் கூட தயங்காமல் கொடுப்பான் என்ற உண்மை. அதெல்லாம் அறிந்தபோதும் அவனின் மீது கொள்ளை பிரியத்துடன் அவன் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் அவளுக்கென்று எந்தவிதமான தனிபட்ட எதிர்பார்ப்பும் இல்லை.

ஜெனியும், கௌதமும் விளையாட்டில் மும்பரமாகிவிட கணவனும், மனைவியும் பேசி சிரித்தபடியே வேலைகளை கவனிக்க எஸ்தரின் மனம் மட்டும் ராஜேந்திரனை சுற்றி வந்தது.

குலசேகரன் ராஜேந்திரனைப் பார்க்க அவனோ எஸ்தர் சென்ற திசையைப் பார்த்தபடியே நின்றிருக்க, “ம்ம் நீங்க சொல்லுங்க” என்றவர் அவனின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.

அவர் மெல்ல நடக்க அவருடன் இணைந்து நடந்தான்.

மேற்கு வானம் சிவக்க சிவக்க பகலவன் வானத்தில் இருந்து மறைய, மாலை வேலையில் வீசும் தென்றல்காற்று இருவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்ப முயற்சி செய்தது.

இருவரின் இடையே பலத்த அமைதி நிலவியது. அதை முதலில் கலைத்தது ராஜேந்திரனே!

“நான் ஊட்டியில் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறேன் சார்” எனவும் எதுவும் சொல்லாமல் தன்னுடைய நடையைத் தொடர்ந்தார்.

அவரின் அமைதியையையும், நிதானமான நடையையும் கவனித்தவன், “எனக்கு என்று யாரும் இல்லங்க சார், எனக்கு எல்லாமே என் நண்பன் தாமோதரன் தான்” என்றவன் தன்னை பற்றிய விவரம் சொல்ல கைநீட்டி தடுத்தவரின் செயலில் அவனின் பேச்சு தடைபட அவரின் முகத்தை கேள்வியாக நோக்கினான்.

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர், “என் மகள் எஸ்தரும் உங்களை விரும்புகிறாளா..” என்றவரின் குரலில் நிதானம்.

“அவளும் என்னை காதலிக்கிறாள். ஜெனியை எங்களோட மகளாக நினைக்கிறோம். எங்க திருமணத்திற்கு பிறகு அவளை முறைப்படி தத்தெடுக்கலாம் என்று இருக்கிறோம்” என்றான் வேகமாக.

அவனை மகள் காதலிக்கிறாள் என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஜெனியைத் தத்தேடுக்கும் விஷயம் தெரிந்ததும் திகைப்புடன் நின்றுவிட்டார்.

அவரின் முகத்தில் அதிர்ச்சியை கண்டவுடன்,  “நீங்க எதுக்கு சார் அதிர்ச்சி ஆகிறீங்க..” அவன் புரியாமல் கேட்க, “இல்ல படத்தில் வருவது போல நாங்க குழந்தையை தத்தெடுக்க போறோமே என்று சொல்றீங்களே. இது நடை முறைக்கு சாத்திப்படுமா என்று யோசிக்கிறேன்” அவர் சாதரணமாக கூறினார்.

‘என்ன இவரு தேவை இல்லாமல் குழப்பம் பண்றாரு’ என்றவன் சிந்தனை செய்ய அவனின் முகத்தை வைத்தே மனதைப் படித்தவர், “இத்தனை வருட அனுபவம் தம்பி” அவன் மனதினை படித்தது போல கூறினார். இப்போது அதிர்ந்து நிற்பது ராஜேந்திரனின் முறை ஆயிற்று.

அவனை புன்னகையுடன் ஏறிட்டவர், “என்னப்பா ஷாக் ஆ இருக்கிறதா?” என்றவர் பொறுமையுடன் கேட்க அவனோ அமைதியாக இருந்தான்.

“இத்தனை வருட அனுபவம்” தோட்டத்தில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தவர்  அவனையும் அமரும்படி செய்கை செய்ய அவனும் அவரின் அருகே அமர்ந்து அவரை கேள்வியாக நோக்கினான்.

அவனின் பார்வையில் இருந்த கேள்வியை கவனித்து, “இந்த ஆசரமத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தேடுத்துட்டு போவாங்க. அவங்க பாசம்  எல்லாமே ஒருவாரம் இரண்டு வாரம்தான். மறுபடியும் அந்த குழந்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயிருவாங்க” என்றவரின் குரலில் அவ்வளவு நிதானம்!

அவர் சொல்ல வரும் விஷயம் புரிந்துவிட, “நாங்க ஜெனியை விட்டுவிட்டு இருக்க மாட்டோம் ஸார்” அவன் குரல் உறுதியுடன் ஒலிக்க அவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

 “இந்த மாதிரி பலபேரை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பிறகு இந்த ஆசரமத்தை நீங்க இருவரும் சேர்ந்து நல்ல பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றவர் அவனிடம் பொறுப்பை ஒப்படைக்க திகைத்து போனான் ராஜேந்திரன்.

எஸ்தர் பற்றி ஏதாவது பேசுவார் என்ற எண்ணத்தில் அவனிருக்க அவரோ ஆசரமத்தை பற்றி பேசியபோதுதான் அவரின் மனம் உணர்ந்தான். அவரின் உரிமையான பேச்சிலிருந்து கல்யாணத்திற்கு சம்மதம் என்பதை புரிந்து கொண்டவனோ, ‘இவ்வளவு சீக்கிரம் திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று நான் நினைக்கவே இல்லையே’ மனதிற்குள் யோசிக்க அவனின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக ஒலித்தது குணசேகரனின் குரல்.

“நான் இன்றும் சிரித்துக்கொண்டே இருப்பது இந்த பிள்ளைகளின் முகத்தில் தோன்றும் சின்ன புன்னகைக்காகத்தான். எனக்கு பிறகு இவர்களை என்னைவிட பத்திரமாக பார்த்துக்கொள்வது எஸ்தரின் பொறுப்பு. இதையெல்லாம் உங்களிடம் நான் சொல்ல காரணம்” என்றவர் நிறுத்திவிட்டு ராஜேந்திரனின் முகம் பார்த்தார்.

அவரின் பேச்சில் இருந்தே அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்து அதை காப்பாற்ற வேண்டுமென்று மனதிற்குள் உறுதியுடன் நிமிர்ந்து அவரின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டான்.

அவனின் தீர்க்கமான பார்வையில் இருந்த உறுதியைக் கண்டு, “நீங்க என்னதான் காதலித்தாலும் இன்றைய காதலர்களுக்கு இடையே புரிதல் என்பது சுத்தமாகவே இல்லை. இந்த ஆசரமத்தினால் உங்களுக்கும் என்னுடைய மகளிற்கும் இடையே சண்டை வரக்கூடாது என்றுதான் முன்னாடியே உங்களிடம் இந்த விஷயத்தை சொல்கிறேன்” என்றவர் தெளிவாக சொல்லி முடித்தார்.

அவரின் கைகளைப் பிடித்தவனோ, “நான் இந்த ஆசரமத்தை பத்திரமாக பார்த்துகொள்வேன் மாமா” என்றவன் புன்னகையுடன் அவருக்கு உறுதி கொடுக்க அவரின் மனதை அழுத்தியிருந்த பாரம் குறைந்தது போல உணர்ந்தவர், “ரொம்ப நன்றிப்பா” என்றார்.

“அடுத்த முறை வரும் பொழுது என்னோட நண்பனுடைய குடும்பத்தையும் கூட்டிட்டு வருகிறேன் மாமா” அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வர,  “உன் நண்பனுக்கு திருமணம் ஆகிவிட்டதா?” என்றவர் அவனிடம் தாமோதரனைப் பற்றி விசாரித்தார்.

“அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது மாமா. அவன் மனைவி கலைக்டர். உங்களுக்கு அந்த பொண்ணை ரொம்ப நல்லாவே தெரியும்” அவர் சிந்தனையுடன் அவனை கேள்வியாக நோக்கினார்.

“தமயந்தி தான்” என்றதும், “அட நம்ம எஸ்தரின் ஃபிரெண்ட் தமயந்தி கடைசியில் அங்கே சுற்றி இங்கே சுற்றி நீங்களும் சொந்தமாக போறீங்க.” என்றவரின் மனம் நிம்மதியடைந்தது.

“சரி லேட் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் மாமா” அவன் அவரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச்சென்றான்.

அவன் சென்ற திசையைப் பார்த்தவரின் மனம், ‘எத்தனை வருடமாக தேடிய நிம்மதி இது’ என்றவரை மெல்ல வருடிச்சென்ற தென்றல் காற்றில் பலவருடமாக தொலைந்து போன நிம்மதியை மீட்டு எடுத்தது போல அமைதியாக அமர்ந்திருந்தார்.

அந்த ஆசரமத்தை பாதுக்காப்பேன் என்றவன் எஸ்தரையும், ஜெனிதாவையும் பாதுகாப்பேன் என்ற வாக்கியத்தை சொல்லாமல் விட்டுவிட்டான்.

அதை கவனித்த விதியோ வாய்விட்டு நகைக்க, ‘நான் உங்களை எல்லாம் சும்மா விடுவேன் என்று வேறு நினைக்கிறயோ’ நக்கலுடன் நின்றிருந்தது.

விதியின் கைகளில் மானிடர் எல்லோருமே பொம்மைகளாக இருப்பதை அறியாமலே இருக்கிறோம். 

அவரிடம் பேசிவிட்டு அவன் கேட்டின் வெளியே வரும்போது, “ஹாய் போலீஸ் ஆபீசர்” என்றபடி அவனின் எதிரே வந்து நின்றான் அவன்.

அவனின் முகத்தைப் பார்த்தும், “சார் நீங்க தனத்தின் கணவர் தானே” என்று கேட்ட ராஜேந்திரன் தன்னை அவரிடம் அறிமுகம் செய்துகொள்ள இருவரும் தங்களின் வேலையை பேசியபடியே நடக்க நேரம் சென்றதை இருவரும் கவனிக்கவில்லை. அப்போது அவர்களின் அருகே வந்து ஒரு கார் நிற்க இருவரும் காரை கேள்வியாக நோக்கினர்.

அதிலிருந்து இறங்கிய தாமோதிரன், “டேய் எப்போடா இங்கே வந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லல” என்று உரிமையுடன் ராஜேந்திரனோடு சண்டைபோட யுகேந்திரன் சிரித்தான்.

“வாங்க ராணுவ வீரரே எங்களை எல்லாம் நினைவு வருதுங்களா?” என்று நக்கலடிக்க ராஜேந்திரன் இருவரையும் கேள்வியாக நோக்கினான்.

“டேய் போதும் நிறுத்துடா” என்று தாமோதரனின் தோளில் கைபோட்டான் யுகேந்திரன்.

“டேய் இவன் என்னோட காலேஜ் மெட்” என்று தாமோதரன் அறிமுகபடுத்த, “அப்போ அங்கே சுற்றி இங்கே சுற்றி எல்லோரும் நண்பர்கள் தானா?” என்று தலையிலடித்துகொண்டான் ராஜ்.

அதன்பிறகு நண்பர்கள் மூவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு யுகி நேராக வீட்டிற்கு செல்ல ராஜேந்திரனை அழைத்துக்கொண்டு வீடு திருப்பினான். அவனின் கார் பங்களாவிற்குள் நுழைய காரின் சத்தம்கேட்டு வாசல் வரை வந்தாள் தமயந்தி.

அப்போது காரில் இருந்து இறங்கிய ராஜேந்திரனைப் பார்த்தும், “அண்ணா” என்றபடி அவனை நெருங்கிட, “என்னம்மா சொல்றாங்க என் மருமகள் இருவரும்” என்று இயல்பாக கேட்டான்.

“அவங்களுக்கு என்ன” என்ற தமயந்தியின் கரங்களைப் பிடித்த தாமோதரன், “இந்நேரம் வரை தூங்காமல் என்ன பண்ற” என்று கண்டிப்புடன் கேட்டான்.

அவள் காத்திருந்தது தவறென்று மெளனமாக தலைகுனிய மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். ராஜேந்திரன் இதையெல்லாம் பார்த்து புன்னகைத்தபடி முன்னே சென்றான்.

அவனைப் பார்த்தும் சமையலறைஇலிருந்து வெளியே வந்த ராஜலட்சுமி, “வாடா நல்லவனே இப்போதான் தேனிக்கு உனக்கு வழி தெரிந்ததா?” என்றார் கோபத்துடன்.

“அம்மா கொஞ்சம் வேலை அதிகம்” என்றவர் சமாளித்தபடி அவன் சோபாவில் அமர்ந்தான்.

“ஆமா ஆமா போலிஸ் ஆபிசருக்கு எஸ்தரை ரூட் விடவும், சைட் அடிக்கவும் நேரம் இருக்கும். இந்த அம்மா நினைவு எல்லாம் வந்தா அது அதிசயம் தான்” என்றார் குறும்புடன்.

அவர்களின் மோதலைக் கண்ட தாமோதரன், “அம்மா வந்தும் ஆரம்பிச்சிட்டாங்க அவங்க வழக்கமான பல்லவியை” என்று மனைவியின் காதில் கிசுகிசுத்தவன் ராஜேந்திரனிடம் பஞ்சை எடுத்து காட்டி காதில் வைத்துகொள்ள அவனோ தலையிலடித்துக் கொண்டான்.

“என்னடா அங்கே என்ன நடக்குது” என்றபடி வந்தவர் மருமகளுக்கு பாலைக் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு மகனின் அருகே அமர்ந்து, “எஸ்தரின் அப்பா என்னப்பா சொன்னார்” என்று அவர் அக்கறையுடன் விசாரிக்க அவனும் அங்கே நடந்த அனைத்தையும் அவரிடம் பகிர்ந்தான்.

“இந்த காலத்தில் இப்படி சிலர் இருக்காங்க என்று நினைக்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றவர் அவனின் திருமண விஷயம் பேச எப்போது செல்லலாம் என்று அவனிடமே கேட்டார்.

“அம்மா உங்களுக்கே தெரியும் எனக்கு யாரும் இல்லன்னு. சின்ன வயசில் அப்பா நிழலில் வளர்ந்தவன். இப்போ எனக்குன்னு நீங்களும், தாமோதரனும் மட்டும் தான் இருக்கீங்க. அதனால் தமயந்தி டெலிவரிக்கு அப்புறம் என்னோட கல்யாணத்தை வெச்சுக்கலாம்” தெளிவாக முடிவைக் கூறினான்.

அவனின் இந்தப் பேச்சு அவரின் மனதிற்கு நிறைவைக் கொடுத்தது. அதன்பிறகு வரும் ஒரு நல்ல நாளை சொல்ல அதுக்கு அனைவரும் மனதார சம்மதித்தனர். அவர்களுக்கு தெரியாதே எல்லாம் பாதியுடன் நிற்க போகிறதென்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!