sontham – 6

images (49)

sontham – 6

அத்தியாயம் – 6

ராஜேந்திரன் கீழே இருக்கும் விருந்தினர் அறையில் தாங்கிக்கொள்ள இரவு தன் அறைக்கு செல்ல நினைத்த மகனிடம், “தம்பி தூங்க போகும் முன்னால் என்னோட அறைக்கு கொஞ்சம் வந்துட்டுப் போ” என்றார் ராஜலட்சுமி.

“என்னம்மா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று அவரின் அறைக்குள் நுழைந்தவனிடம், “தம்பி தமயந்திக்கு இது ஏழாவது மாசம். அவளுக்கு வளைக்காப்பு பண்ணனும்” கவலையுடன் கூறிய தாயை சிந்தனையுடன் பார்த்தான்.

இந்த மாதிரி நேரத்தில் வளைக்காப்பு செய்வது அந்த பெண்ணின் மனதிற்கு சந்தோசமாக இருப்பதற்காகத் தான். மற்ற பெண்களுக்கு வளைக்காப்பு செய்ய அவளின் பிறந்தவீட்டில் இருந்து வருவார்கள்.

ஆனால் தமயந்தியோ பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆசரமத்தில் தான். அங்கிருந்து யார் வந்து அவளுக்கு வளைகாப்பு செய்வார்கள் என்ற கவலை அவனை வாயடைக்க செய்தது.

மகனின் சிந்தனையைக் கண்டு, “தம்பி நம்ம பொண்ணுக்கு நம்மதான் பண்ணனும்” என்றவர் சொல்லி கொண்டிருக்க தாமோதரன் அமைதியாக நின்றிருந்தான்.

“அம்மா நான் உள்ளே வரலாமா” என்று அறையின் வாசலில் நின்று அனுமதி கேட்ட ராஜேந்திரனைக் கண்டதும், “நீ ஏன்டா அங்கேயே நிற்கிற உள்ளே வா” என்றார் ராஜலட்சுமி கண்டிப்புடன்.

“அம்மா நீங்க தப்பா நினைக்கல என்றால் ஒரு அண்ணனாக இருந்து அவளுக்கு நான் வளைக்காப்பு செய்கிறேனே” என்று கண்களில் எதிர்பார்ப்புடன் கேட்டான். அவனின் இந்த பதிலை அங்கிருந்த இருவரும் எதிர்பார்க்கவில்லை.

தாமோதரன் தன் நண்பனை அணைத்துக்கொண்டு, “தேங்க்ஸ்டா  தமயந்திக்கு யாருமே இல்லையேன்னு கவலையில் நின்றிருந்தேன். ஆன இப்போ அந்த கவலை போன இடம் தெரியலடா” என்றவன் கண்கள் கலங்கியது.

“டேய் என்னடா அவ என் தங்கச்சி” என்று கூறி மற்ற இருவரின் மனதையும் குளிர வைத்தான் ராஜேந்திரன். தாமோதரன் அவனை விட்டு விலகி தாயின் முகத்தைக் கேள்வியாக நோக்கினான்.

ராஜலட்சுமிக்கும் இதுவே சரியென்று தோன்றிட, “அதுக்கு என்னப்பா நீயே தமயந்திக்கு வளைக்காப்புக்கு எல்லா ஏற்பாடும் பண்ணு” என்றார் புன்னகையுடன்.

அடுத்து வரும் ஒரு நல்ல நாளில் தமயந்திக்கு வளைகாப்பு செய்யும் ஏற்பாடுகள் செய்வதாக சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்றான் ராஜேந்திரன். தோழன் தோள் கொடுப்பான் என்ற  உண்மையை இன்று உணர்ந்த தாமோதரன் சிந்தனையுடன் அவனின் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே படுக்கையில் பெரிய வயிறுடன் போர்வையை காதுவரை போர்த்திகொண்டு தூங்கும் மனையாளின் குழந்தை முகத்தை தன்னை மறந்து ரசித்தவனோ, ‘இவளுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்’ என்றவன் கருவிலிருந்த குழந்தைகளுடன் பேசிவிட்டு தூங்கினான்.   

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட அதை உணராமல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தன் மனைவியை எழுப்புவதில் குறியாக இருந்தான் தாமோதரன்.

“தமயந்தி எழுந்திரும்மா. இன்னைக்கு செக்கப்பிற்கு ஹாஸ்பிட்டல் போகணும்” என்று மெல்ல அவளின் கன்னம் வருடினான்.

அந்த சுகத்தை உணர்ந்து மெல்ல விழிதிறந்த தமயந்தி, “பிளீஸ் மாமா தூக்கம் கண்ணை சொருகுது. இன்னும் கொஞ்சநேரம்  தூங்கறேன் டிஸ்டப் பண்ணாதீங்க” என்று அவனின் தாடையைப் பிடித்து கொஞ்சிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவள் அப்படி கொஞ்சும்போது கணவன் மனமிறங்காமல் இருந்தால் தான் அதிசயம். அவளின் விருப்பபடி சிறிதுநேரம் தூங்கட்டும் என்ற எண்ணத்துடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தன் கையில் லேட்டாப்பை வைத்துகொண்டு வேலை செய்து கொண்டிருந்தான் தாமோதரன்.

சற்றுநேரத்தில் மெல்ல கண்விழித்த தமயந்தி மணியைப் பார்த்தும், “ஐயோ மணி எட்டு” என்று அதிர்ந்தவளோ தன்னருகே அமர்ந்திருந்த கணவனை முறைத்தாள்.

அவன் அதைகூட கவனக்காமல் வேலையில் கவனமாக இருக்கவே, “என்னங்க என்னை எழுப்பாமல் எனக்கும் ஆச்சு என்னோட லேப்டாப்பிற்கும் ஆச்சுன்னு உட்கார்ந்திருக்கீங்க” என்று சிணுங்கினாள்.

தமயந்தியின் இந்த சிணுங்கள் தாமோதிரனுக்கு பிடித்தமான ஒன்று. அவனின் உதட்டில் பூத்த புன்முறுவலோடு, “நீ தூங்கறேன்னு கெஞ்சும்போது என்னை என்னடி பண்ண சொல்ற. அதன் தூங்கட்டும் என்று அமைதியா வேலையைப் பார்க்கிறேன்” என்றவனின் கவனம் முழுவதும் லாப்டாப்பில் நிலைத்தது.

அவனின் தலையைக் கலைத்துவிட்டு, “நான்போய் குளிச்சிட்டு வரேன்” என்றவள் மெல்ல எழுந்தவள் குளியலறைக்குள் சென்று மறைந்தாள். அவள் குளித்துவிட்டு வருவதற்குள் தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்தவன்,

“தமயந்தி சீக்கிரம் கிளம்பி வா” என்று கூற, “இதோ கிளம்பிட்டேன். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தான்” என்று கூறியவள் சிவப்பு நிற சேலையில் கிளம்பி கையில் ஃபைலோடு அவனின் எதிரே வந்து நின்றாள்.

மனைவியை ரசித்தவனின் விழிகளில் மோகம் வந்து செல்வதை கவனித்தவளோ, “ஏய் ராஸ்கல் ஒழுங்கா எழுந்துவா நம்ம ஹாஸ்பிட்டல் போகணும்” என்றவளின் அதட்டலை காதில் வாங்காமல் மெல்ல அவளை அருகே இழுத்து, “அழகாக இருக்க செல்லம்” என்று அவளின் காதில் கிசுகிசுத்துவிட்டு அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“ஏங்க வெளியே கிளம்புகிற நேரத்தில் வம்பு பண்றீங்க” என்று சிணுங்கலோடு அவள் கேட்க, “என் பொண்டாட்டிக்கிட்ட அப்படித்தான் வம்பு பண்ணுவேன்” என்றவன் அவளின் மறுகன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அதன்பிறகு இருவரும் கீழே வரவே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ராஜேந்திரன் ராஜலட்சுமியுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்தான்.

“ஏன்டா நேற்றுதான் வீட்டிற்கு வந்தே.  இப்போவே ஊட்டி கிளம்பனும்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றவர் அதட்டல் போடவே அவனோ சாப்பிடுவதில் குறியாக இருந்தான்.

“நான் சொல்வதை காதில் வாங்கிறானா பாரு” என்றவர் அதுக்கும் அவனையே திட்டிட, “அம்மா முக்கியமான வேலை இருக்கும்மா. அதன் கிளம்பறேன்னு சொல்றேன்” என்றான் முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு.

“இப்படி வந்ததும் அரக்கபரக்க கிளம்புவதற்கு அந்த முக்கியமான வேலை முடிச்சிட்டு அப்புறம் வந்திருக்கலாம் இல்ல” என்றார் கோபத்துடன்.

அவரின் கேள்வியில் நியாயம் இருந்தபோதும் அதற்கு பதில் சொல்ல ராஜெந்திரனால் முடியவில்லை. எஸ்தர் தன்னோடு பேசவில்லை என்ற கவலையில் அவளை சமாதானம் செய்ய நினைத்தவன் கிடைத்த ஒருநாள் லீவில் வந்திருந்தான்.

இப்போது அவன் கண்டிப்பாக அங்கிருந்தாக வேண்டும் என்ற நிலையில் இங்கிருந்து செல்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் அமைதியாக இருந்தான்.

“நான் சொல்வதை காதில் வாங்காமல் சாப்பிடுவதை குறியாக வெச்சிருக்கான்” என்று ராஜலட்சுமி புலம்பிட, “என்னம்மா காலையில் இவ்வளவு கோபமாக இருக்கீங்க” என்ற மகனின் குரல்கேட்டு சட்டென்று திரும்பியவர் மகனையும் மருமகளையும் பார்த்தார்.

தமயந்தி கையில் ஃபைலோடு நிற்பதைப்  பார்த்தும், “என்னப்பா செக்கப் கிளம்பிட்டீங்களா” என்றவர் இருவரையும் அமரவைத்து சாப்பாடு பரிமாற ராஜேந்திரம் மௌனமாக இருந்தான்.

“ஆமாம்மா” என்ற தாமோதரன், “என்னம்மா சொல்றான் நம்ம போலீஸ் ஆபிசர்” என்று நண்பனை வம்பிற்கு இழுக்க ராஜேந்திரன் அவனை முறைத்தான்.

“அவனுக்கு வேலை இருக்காம். துரை இப்போவே ஊட்டி போகணும்னு சொல்லிட்டு கிளம்பி வந்து உட்கார்ந்து இருக்காரு” என்றவர் அவனை முறைக்க அவனோ சாப்பிடுவது போல தலையைக் குனிந்து கொண்டான்.

“ஏன்டா லீவ் போட்டவன் ஒரு மூணு நாள் போட்டிருக்கலாம் இல்ல” தாமோதரன் சாதாரணமாக கேட்க, “உனக்கு என்னடா நீ சொந்தமாக தொழில் செய்கிறவன். நினைச்ச நேரத்திற்கு வேலைக்கு போலாம் லீவ் போடலாம். ஆனால் நான் அப்படியா?” என்றான் பாவமாக.

அவனின் கேள்வியில் இருக்கும் நியாயம் உணர்ந்தாலும், “இவன் போலீஸ், இதோ இவ கலெக்டர் இப்படி மொத்த குடும்பமும் லீவ் எடுக்காமல் வேலை வேலைன்னு சுத்தின குடும்பத்தை யார் பார்ப்பது” என்றவன் கிண்டலடிக்க அதுவரை அமைதியாக இருந்த தமயந்தி,

“கலெக்டர் என்ற உண்மை தெரிஞ்சுதானே காதலிச்சீங்க. அப்போ குடும்பத்தை நீங்கதான் குடும்பத்தை அக்கறையாக பார்க்கணும் மிஸ்டர் தாமோதரன்” என்றாள் கடுப்புடன் கறாராகவே.

இருவரும் சண்டை போடுவதைப் பார்த்த ராஜலட்சுமி, “ஷ்..இதென்ன பழக்கம் சாப்பிடும் நேரத்தில் சண்டை போடுவது” என்று இருவரையும் அதட்டிட அவர்களும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு சிரிப்புதான் வந்தது.

 “இன்னும் குழந்தைகள் மாதிரி சண்டைபோடும் இவர்களை எப்படிம்மா சமாளிக்கிறீங்க” என்றவன் சிரிக்க, “என்னப்பா பண்றது இரண்டு வானரங்களுக்கு நடுவே நான் மாட்டிட்டு முழிக்கிறேன்” அவர் சிரிக்காமல் சொல்ல ராஜேந்திரன் சிரித்தான்.

மூவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொள்ள, “டேய் ராஜ் அந்த பொண்ணு பாவம்டா. இனிமேல் வரும்போது இரண்டு நாள் லீவ் இருந்தா வந்து பாரு. உனக்கும் கல்யாணம் ஆக போகுது நினைவில் வெச்சுக்கோ” என்று தாய் ஸ்தானத்திலிருந்து அவனைக் கண்டித்தார் ராஜலட்சுமி.

“சரிம்மா” என்றவன் சொல்ல, “ராஜ் ஊருக்கு போனதும் போன் பண்ணுடா. பாவம் இந்த எஸ்தர் உன்னை காதலிச்சுட்டு இப்படி சிக்கிட்டு தவிக்கிற” என்றவன் நண்பனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தான்.

கணவனின் வாக்கியத்தில் குறும்பை உணர்ந்து, “சும்மா இருங்க அண்ணனே பாவம்” என்றாள் தமயந்தி.

“உங்க அண்ணனை சொன்னா உனக்கு வந்திருமே” என்று சிடுசிடுத்த மகனின் முதுகில் ஒரு அடிபோட்ட லட்சமி, “போடா போக்கிரி” என்றார் புன்னகையுடன்.

“எஸ்தர் என்னைத்தான் காதலிக்கிற. அப்போ என்னை அவ கண்டிப்பா புரிஞ்சிக்குவா” என்ற ராஜ் வேலை விசயமாக ஊட்டிக்கு கிளம்ப, “சும்மா சொன்னேன் ராஜ். அம்மா இல்லாத் பசங்க பொண்ணுங்களை தாயை பார்த்துக்கிற மாதிரி அக்கறையாக பார்த்துக்குவாங்கலாம். அந்த விசயத்தில் எஸ்தர் ரொம்ப லக்கி..” என்றான் நண்பனின் தோளில் கைபோட்டு கொண்டு.

மூவரையும் வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தார் ராஜலட்சுமி. ராஜேந்திரனை ஊட்டிக்கு அனுப்பிவிட்டு தாமோதரன், தமயந்தி இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினார்கள்.

காலையில் பொழுது விடிந்ததும் தன்னருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழுந்து பக்கத்து அறைக்கு சென்றாள். அங்கே கெளதம் ஜெனியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு அவளின் உள்ளம் பூரித்தது.

அவளையும் அறியாமல் நேற்று நடந்த விஷயம் தனத்திற்கு நினைவு வந்தது. இரவு எஸ்தர் கிளம்பும் நேரத்தில் ஜெனிதா தூங்கிவிடவே கலக்கத்துடன் நின்றிருந்தாள். அவளை அழைத்துச் செல்ல குணசேகரன் வரவே,“நீ கிளம்பு எஸ்தர் இன்னைக்கு ஜெனி கெளதம் கூட தூங்கட்டும்” தனம் புன்னகை மாறாத முகத்துடன்.

“இல்லடி அண்ணா என்ன நினைப்பாரோ” என்றாள்

“நான் என்னம்மா நினைக்க போறேன். ஜெனிதாவும் நம்ம வீட்டு பிள்ளை மாதிரிதான். நீ அப்பாவுடன் கிளம்பும்மா உன் மகளை நான் பத்திரமாக பார்த்துகிறேன்” என்றான் புன்னகையுடன்.

அவன் கொடுத்த தைரியத்தில் தாங்கியபடி தந்தையுடன் சென்ற தோழியை நினைத்து, ‘இவ இப்போவே ஜெனியை பிரிஞ்சி அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டேன்ற. இதில கல்யாணம் முடிந்தால் கணவனும், மனைவியும் இவளை கீழே இறக்கிவிட கூட தயங்குவாங்க போல’ என்ற எண்ணத்துடன் மணியைப் பார்த்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

தூக்கம் கலைந்து கண்விழித்த யுகேந்திரன் அருகே மனைவியைக் காணாமல், ‘மனுஷன் இவளை பார்க்க அங்கிருந்து வந்தா. இவ இங்கே வேலை வேலைன்னு போறாளே. புருஷன் வந்திருக்கானே அவனை கவனிப்போம் என்ற அக்கறை கொஞ்சமாது இருக்கா அவளுக்கு’ என்ற எண்ணத்துடன் அறையைவிட்டு வெளியே வந்தான்.

வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் கடிகாரத்தை பார்த்து புலம்பிக்கொண்டு பம்பரமாக சுழன்ற மனையாளின் பின்னோடு குட்டி போட்ட பூனைபோல சுற்றிக் கொண்டிருந்தான் யுகேந்திரன்.

“இன்னைக்கு ஒருநாள் லீவ் போடு தனம்” என்றான் முகத்தை பாவமாக வைத்துகொண்டு.

“முக்கியமான வேலை இருக்குங்க. கண்டிப்பா நான் ஆபீஸ் போகணும்” என்றவள் கிளம்புவதில் குறியாக  இருக்க சமையலறையில் அவளை வேலை செய்யவிடாமல் தொல்லை கொடுத்தான்.

“என்னைவிட உனக்கு வேலை ரொம்ப முக்கியமா” என்று அவளை அணைத்துக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவனின் மீசை உரசியதில் கூசி சிலிர்ந்தது தனத்தின் தளிர் மேனி.

“என்னங்க உங்களோட காலையில் ஒரே ரோதனையாக போச்சு” என்று சிணுங்கிய தனத்தின் கரங்கள் அவளின் வேலையைத் தொடர்ந்தது.

அவனோ அவளின் இடையோடு கரத்தை கோர்த்துக்கொண்டு அவளுக்கு இம்சை கொடுக்க, “இதோ பாருங்க இதெல்லாம் சரியில்ல வருசத்துக்கு ஒரு மாசம் வீட்டிற்கு வந்தாலும் உங்களையே கவனிக்கணும்னு சொன்னா நான் என்னதான் பண்றது” என்று கோபத்தில் தொடங்கிய தனம் அவனின் கைகள் செய்த மாயத்தில் கிறக்கத்துடன் முடித்தாள்.

“இன்னும் ஒரே ஒரு பொண்ணு மட்டும் பெத்து கொடுத்திரு. அப்புறம் நான் எதுக்கு உன்னை சுத்த போறேன். என் மகளைத் தூக்கிட்டு சிம்லாவை சுத்த கிளம்பிற மாட்டேன்” என்றான் யுகேந்திரன் குறுஞ்சிரிப்புடன்.

வராத மகளுக்காக அவன் இவ்வளவு பேசுவதைக் கண்டு கடுப்பான தனம், ‘இப்போ என்னைவிட இவருக்கு மகள்தான் ரொம்ப முக்கியமா போயிட்டாளோ’ என்று மனதிற்குள் அவனை வறுத்தேடுத்துவிட்டு, “கெளதமிற்கு ஏழு வயசு ஆச்சு இப்போ இன்னொரு குழந்தை பிறந்தா நல்லாவா இருக்கும் அதெல்லாம் முடியாது.” என்று அவனின் ஆசைக்கு தடைபோட்டாள் அவனின் மனையாள்.

“உன்னிடம் கொஞ்சி இனிமேல் பிரயோசனம் இல்ல நேரடியாக வேலையில் இறங்க வேண்டியதுதான்” என்று அவளை இரண்டு கரங்களில் தூக்கிக் கொண்டான்.  ஜெனிதாவும், கௌதமும் வேறொரு அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க தங்களின் படுக்கை அறைக்குள் நுழைந்தான்.

அவன் சொன்னதை செய்தபிறகு அவளைவிட்டு விலகி, “தேங்க்ஸ் செல்லம்” என்றான் அவளின் நெற்றியில் முட்டி.

“உங்களை எல்லாம் ஆர்மிகாரன்னு சொன்னா ஊரே சிரிக்கும்” என்றவள் கிண்டலடித்தாள் தனம்.

“ஏன் ஆர்மியில் வேலை செய்யறவன் பொண்டாட்டிகிட்ட ரோமன்ஸ் பண்ணக்கூடாதுன்னு யாராவது சொன்னாங்களா” அவளை இழுத்து மார்பில் போட்டுகொண்டு குறும்புடன் கேட்டான்.

“என் செல்ல புருசா” என்று அவனை கொஞ்சியவள் பிள்ளைகள் வரும் முன்னே அவனைவிட்டு விலகி எழுந்து குளிக்க சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வெளியே வரும்போது பிள்ளைகளுக்கு டீபோட்டு கொடுத்தவன், “தனம் இவங்க இருவரையும் குளிக்க வை. நம்ம எல்லாம் இன்னைக்கு ஷாப்பிங் பண்ண வெளியே போறோம்” என்றான்.

அவனிடம் மறுப்பு சொல்ல அவளுக்கு மனவரவில்லை. நாட்டுக்காக உழைத்து வீடு வருபவனைக் கவனிக்காமல் அப்படி என்ன வேலை என்ற சிந்தனையில் உழன்ற தனம் குணசேகரனுக்கு அழைத்து விவரத்தை கூறினாள்.

“அதுனால என்ன தனம். நீங்க நால்வரும் வெளியே போயிட்டு வாம்மா. நான் எஸ்தர்கிட்ட சொல்லி மற்ற வேலைகளை கவனிக்க சொல்றேன்” என்றார்.

அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவளை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்த கணவனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, “இதோ பாருங்க இப்போ கிட்ட வந்தீங்கன்னா நான் லீவ் கேன்சல் பண்ணிருவேன்” என்று மிரட்டிய மனையாளை இழுத்து அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் யுகேந்திரன்.

“பிள்ளைகளுக்கு முன்னாடி தகப்பனா மட்டும் தான் இருப்பேன். தனியாக இருக்கும் நேரத்தில் மேடமிற்கு காதலனாக இருக்கவும் ஐயாவுக்கு தெரியும்” என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!