sontham – 8

748196

sontham – 8

அத்தியாயம் – 8

வீட்டிற்கு சென்றதும் தாமோதரன் நடந்த விஷயத்தை ராஜலட்சுமியிடம் சொல்லவே அவர் கொஞ்சம் பதறிவிட்டார். தமயந்தி குழந்தைக்காக ஏங்கிய நாட்கள் எல்லாம் அவரின் மனதில் படமாக ஓடவே, “நல்ல வேளை அந்த குட்டிப்பொண்ணு வந்து காப்பாற்றினா. இல்லன்னா என் மருமகளோட நிலைமை” என்றுவரின் வார்த்தைகள் பயத்துடன் வந்தது.

“அம்மா தப்பா நினைக்கலைன்னா நான் ஒரு விஷயம் சொல்லவா?” என்ற மகனை கேள்வியாக நோக்கினார் ராஜலட்சுமி.

“அந்த குட்டிப்பாப்பா உங்க மருமகள் வளர்ந்த ஆசரமத்து பொண்ணுதான். நம்ம அவளை தத்து எடுத்துக்கலாம் அம்மா” என்று தாமோதரன் மனதை மறைக்காமல் சொல்லிவிட அவர் தமயந்தியைப் பார்த்தார்.

“அவர் சொல்வதும் சரிதானே அத்தை. இன்னைக்கு அந்த குட்டிப்பொண்ணு இல்லன்னா என்ன ஆகி இருக்குமோ? அதுதான் அத்த சொல்றேன்” அவள் தன்மையாக கூறவே அவரும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவிடவே, “சரிம்மா உனக்கு குழந்தை பிறந்தபிறகு அந்த குட்டிப்பாப்பாவை தத்துக்கு எடுத்துக்கலாம்” என்றதும் மற்ற இருவரின் முகமும் பூவாக மலர்ந்தது.

அடுத்த ஒரு வாரத்தில் தமயந்தி வளைகாப்பிற்கு நாள் குறித்து எடுத்துகொண்டு குணசேகரனை நேரில் சென்று சந்தித்தார் ராஜலட்சுமி. ஏற்கனவே ராஜேந்திரன், யுகேந்திரன் இருவரும் தமயந்தி வளைகாப்பை சேர்த்து நடத்துவாதாக சொல்லியிருந்தனர். அவர்களின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அத்தோடு ராஜேந்திரன் – எஸ்தரின் திருமண நாளும் முன்னரே குறிக்கபட்டது. தமயந்தியின் டெலிவரிக்கு பிறகு வரும் நல்ல முகூர்த்த நாளில் இருவருக்கும் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவேடுக்கப்பட்டது.

இந்த முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியை மட்டும் பரிசாக கொடுத்தது. தமயந்தியின் வளைகாப்பிற்கு இரண்டு நாள் முன்னரே தேனி வந்து சேர்ந்தவன் எஸ்தர், ஜெனிதா இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். மூவரும் மனமார தெய்வத்தை வணங்கிவிட்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்தனர்.

“என்னங்க தமயந்தி வளைகாப்புக்கு முன்னாடியே கிளம்பி வந்துட்டீங்க” பேச்சைத் தொடங்கினாள் எஸ்தர்.

“ஆமா அவளுக்கு அண்ணனாக இருந்து எல்லாம் செய்ய போறேன்னு ராஜிம்மாகிட்ட சொல்லி இருக்கேன். அதுதான் சீக்கிரமே கிளம்பி வந்தேன்” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க ஜெனிதா அங்கிருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கே அவளைவிட சின்ன குழந்தை ஒன்று தாயின் சேலை முந்தாணியை பிடித்துகொண்டு அழகாக கோவிலை சுற்றி வருவதை சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்தாள். மாலை நேரம் என்பதால் நிறைய குழந்தைகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

ஜெனிதா சுவாரசியமாக வேடிக்கை பார்க்கும்போது அவளின் அருகே இருந்த ஒருவன் எஸ்தரை பார்த்துக்கொண்டு இருந்தான். சட்டென்று தன் போனை எடுத்து ஜெனிதாவை போட்டோ எடுப்பது போல எஸ்தரை புகைப்படம் எடுப்பதை கவனித்துவிட்டாள் ஜெனி.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரிக்க எழுந்து அந்த ஆணின் அருகே சென்ற ஜெனிதா, “நீங்க என்னை போட்டோ எடுத்தீங்களா அங்கிள்” என்று கேட்டாள்.

அவன் திருதிருவென்று விழித்தபடியே, “நான் எதுக்கு பாப்பா உன்னை போட்டோ எடுக்கணும்?” என்றான் புரியாத பாவனையோடு.

“அப்போ என் பக்கத்தில் இருந்த எஸ்தர் அக்காவை போட்டோ எடுத்தீங்களா?” என்றவள் அவன் சுதாரிக்கும் முன்னாடியே அவனின் கையிலிருந்து செல்லை பிடுங்கிய ஜெனிதா அதிலிருந்த போட்டோவை எல்லாம் பார்த்துவிட்டு செல்லை தூக்கிப்போட்டு உடைத்தாள்.

அவளின் இந்த செயலைக் கண்டவனோ, “ஏய் பிசாசே எதுக்கு இப்போ என் செல்லை உடைச்ச?” என்று அவளின் கையைப்பிடித்து திருக நினைக்கும் முன்னரே அவர்களின் சத்தம்கேட்டு எழுந்து ஓடி வந்தனர் எஸ்தரும், ராஜேந்திரனும்!

“என்னாச்சு” என்று இருவரும் கேட்க, “அங்கிள் இவன் நம்ம அக்காவை தப்பாக போட்டோ எடுத்து இருந்தான். அதுதான் போனை போட்டு உடைச்சேன்” என்றாள் அந்த ஆளை முறைத்தபடி.

அதிலிருந்த சிம் கார்டு, மேமரிகார்டு இரண்டையும் எடுத்து ராஜேந்திரனிடம் கொடுத்து, “அங்கிள் இவன் மேல கேஸ் போடுங்க” என்றவள் தைரியமாக சொன்னாள்.

அவள் பேசுவதைக்கேட்டு திடுகிட்ட எஸ்தர் ராஜேந்திரனை பார்க்க, “குழந்தைக்கு போய் சொல்ல தெரியாது” என்று சொல்லிவிட்டு அவள் கொடுத்த மேமரிகார்டை போட்டு பார்க்க அதில் நிறைய போட்டோக்கள் இருந்தது. அதில் எஸ்தரின் போட்டோவும் இருக்கவே அதை டெலிட் செய்தவன்,

“இங்கே பாரு இதே மாதிரி நீ இன்னொரு முறை பண்ணின உன்னை தூக்கி உள்ளே போட்டுவிடுவேன்” என்று எச்சரித்துவிட்டு அவனை அனுப்பிவைக்க தன் உடைந்த செல்லை எடுத்துகொண்டு ஜெனிதாவை முறைத்தபடியே சென்றான் அந்த புதியவன்.

அவளும் சளைக்காமல் அவனை முறைப்பதை கண்ட ராஜேந்திரன், “ஜெனிக்குட்டி ஏன் அவங்க மேல் அவ்வளவு கோபம்” என்று சிரித்தபடியே கேட்டான்.

“அந்த அங்கிள் செய்தது தப்புதானே? அதை நான் தட்டிக்கேட்டது தப்பா?” என்று நேருக்கு நேர் கேட்டவளின் தைரியம் அவனின் மனதை கவர அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “நீங்க செய்தது தப்புன்னு சொல்லல கண்ணம்மா. இன்னும் நீங்க கொஞ்சம் பெருசாக வளர்ந்தபிறகு இதே மாறி கேட்கணும்” என்றான் அவளின் கூந்தலை பாசத்துடன் வருடியபடி.

“நீங்க போலீஸ் தானே நீங்க ஏன் அந்த அங்கிளை உள்ளே போடாமல் கண்டிச்சு அனுப்பினீங்க?” என்று அவனையே மடக்கி கேள்வி கேட்டவளை பார்த்து எஸ்தர் சிரித்தாள்.

அவனோ திகைப்புடன், “இது முதல் முறைதானே குட்டிம்மா. அதுதான் இப்படி பண்ணேன். அவன் திரும்ப தப்பு பண்ணின அப்புறம் உள்ளே தூக்கி போடலாம்.” என்று அவளுக்கு பதில்கொடுத்தான்.

அவள் சரியென்று தலையசைத்துவிட்டு அமைதியாகிவிடவே, “ஹப்பா இந்த வயசில் எந்தளவுக்கு கோபம் வருது? ஆமா இவளோட வயசில் பிள்ளைகள் இவ்வளவு மெச்சூரிட்டியா இருப்பதில்லையே எஸ்தர்.” என்றான் சந்தேகமாகவே.

“நம்ம ஸ்கூலில் இதுக்கென்று தனி வகுப்புகள் நடக்குது ராஜேந்திரன். அதாவது சின்ன பிள்ளைகளுக்கு குட் டச், பேட் டச் இந்த மாதிரி சில விஷயங்களை சொல்லி தரோம். தினமும் பேப்பர் படிப்பதால் அந்த வகுப்பில் சொல்லி தராங்க. அதில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நடக்கும் பிரச்சனைகளையும் இவ தெளிவா புரிஞ்சிக்கிற. பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்கணும்னு சொல்லி கராத்தே கிளாஸ், மனசு அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க பியானோ கிளாஸ் இரண்டுக்குமே அனுப்பறோம்” என்று சரளமாக அவள் சொல்லி முடித்தாள்.

அவர்களின் பள்ளியில் இந்த மாதிரி ஒரு வகுப்பு இருக்குமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு இதெல்லாம் இந்த வயதில் சொல்லி தர வேண்டி உள்ளதே என்று மனசுக்குள் வருத்தப்பட்டான் ராஜேந்திரன்.

“பரவல்ல எஸ்தர் நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க. இந்த காலத்தில் பெண்கள் இதெல்லாம் ஆரம்பத்தில் இருந்து கத்துக்கணும். அப்போவே பெண்களுக்கு சிலம்ப பயிற்சி, வாள் பயிற்சி, அம்பு விடுவதும், ஈட்டி ஏய்வது இதெல்லாம் கத்துகொடுத்தாங்க. ஆனால் காலபோக்கில் நம்ம அதெல்லாம் மறந்துட்டோம். நீங்க இதெல்லாம் செய்வதை பார்க்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்று மனதார பாராட்டினான்.

அதன்பிறகு மூவரும் வீட்டிற்கு சென்றனர். மறுநாள் காலை தமயந்தியின் வளைகாப்பு. அவளை அலங்காரம் செய்து மனையில் அமர வைத்தனர். கௌதம், ஜெனிதாவோடு விளையாடிக்கொண்டு இருக்க பெரியவர்கள் தங்களின் வேலையில் மும்பரமாக இருந்தனர்.

தமயந்திக்கு சந்தானம் பூசி வளையல் அணிவித்து ஐந்து வகை சாப்பாடு பரிமாறினார். விழா விமர்சியாக நடந்து முடியவே தாமோதரன், யுகேந்திரன், ராஜேந்திரன் மூவரும் ஒருபுறம் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

மற்றொரு புறம் தமயந்தி, எஸ்தர், தனம் மூவரும் பேசிக்கொண்டு இருக்கவே, “ஆன்ட்டி இப்போ குட்டி பாப்பா முழிச்சிட்டு இருப்பாளா? நான் அவகிட்ட பேசணும்” என்று அவளின் அருகே வந்தாள் ஜெனிதா.

“நீ பாப்பாவோடு பேசணும் என்றால் பேசும்மா. பாப்பாவுக்கு இப்போ நல்ல காதுகேட்கும்” என்று சிரித்தபடியே சொன்னாள் தமயந்தி.

“அப்போ பாப்பா முழிச்சிட்டு இல்லையா? தூங்கறாளா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் ஜெனிதா

“பாப்பா முழிச்சிட்டு இருப்பது எப்படி தெரியும்?” கௌதம் தீவிரமாக யோசனையோடு பெண்கள் மூவரிடமும் கேட்க, ‘தெரியாது’ என்பது போல உதட்டைப் பிதுக்கினார்.

“இது கூட தெரியாமல் இருக்கீங்க” என்று அவன் தலையிலடித்துக் கொள்வதை பார்த்து மூவருக்கும் சிரிப்பு வந்தது.

“அந்த பாப்பா முழிச்சிட்டு இருந்தா நம்ம பேசியதும் அசையும் கௌதம்” என்றாள் குஷியாகவே,

 “அப்படியா” என்று விழிவிரிய கேட்டான்.

“ம்ம் இரு நான் முதலில் பேசறேன் நீ ஆன்ட்டி வயிற்றில் கை வெச்சுக்கோ” என்றதும் எஸ்தரும், தனமும் அங்கே நடப்பதை ஆர்வமாக கவனித்தனர்.

தமயந்தியின் சிரிப்புடன் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருக்க கௌதம் அவளின் வயிற்றில் கை வைத்து கொள்ளவே, “பாப்பா நான் ஜெனிக்கா பேசறேன். எனக்கு உங்க இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என்று கேட்டதும் ஒரு குழந்தை மட்டும் அசைந்து ஆமாம் என்றது.

அதன் அசைவை உணர்ந்த கௌதம், “ஐ அக்கா குழந்தை அசையுது” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தவன் இந்த விஷயத்தை சொல்ல தன் தந்தையிடம் ஓடிவிட்டான்.

அவன் சென்றதும் தமயந்தியின் வயிற்றில் கை வைத்த ஜெனிதா, “இரண்டு குட்டிம்மாவும் சீக்கிரம் வெளியே வருவீங்களாம். நான் உங்க இருவரையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு பியானோ வாசிகக் தெரியும் உனக்கு கத்துதறேன் சரியா? நீங்களும் என்னை மாதிரி பெரிய பெண்ணா வளரும்போது கராத்தே, சிலம்பம், வாள் வீசுவதும், ஈட்டி ஏய்வது எல்லாம் கத்துகொடுக்கிறேன்” என்று அவள் பட்டியலிட்டு சொல்வதை கண்டு சிரித்தனர்.

குழந்தைகளின் உள்ளம் எவ்வளவு மென்மையானது என்று ஜெனிதா அவர்களுக்கு உணர்த்தினாள். அதே நேரத்தில் வயிற்றில் இவள் பேசுவதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த ஒரு சிசு மட்டும், ‘நானும் உன்னை மாதிரியே எல்லாம் கத்துக்குவேன்’ என்று அசைந்து தாயின் கருவறையை முட்டியது.

அந்த அசைவை உணர்த்து சிரித்தவள், “ஆன்ட்டி நான் பேசுவது எல்லாமே பாப்பாக்கு நல்லா கேட்குது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.   

அவளின் பேச்சில் இருந்த பொறுமையும், அன்பையும் உணர்ந்த தமயந்தி, “குட்டிப்பெண்ணாக இருந்தாலும் ரொம்ப விவரமாக இருக்கிற இல்ல எஸ்தர்” என்றாள்.

“அவ அப்படி இருப்பதால் தானே எஸ்தரும், ராஜேந்திர அண்ணனும் இவளை தத்துதேடுக்க முடிவு பண்ணி இருக்கின்றனர்” என்றாள் தனம் சிரித்தபடி.

அதைகேட்டு சந்தோசப்பட்ட தமயந்தி, “எஸ்தர் உண்மையாகவா?” என்று கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

அதே நேரத்தில் ஆண்கள் மூவரும் ஜெனிதாவைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருந்தனர். தாமோதரன் குழந்தையை தத்தெடுக்கப் போவதை சொல்லவும், “நீ ரொம்ப  லேட்டாக சொல்ற. ஏற்கனவே ராஜ் அந்த முடிவில் தான் இருக்கான்” என்றான் யுகேந்திரன்.

“என்னடா இவன் சொல்றது எல்லாம் உண்மையா?” என்று தாமோதரன் நம்பாமல் ராஜேந்திரனை பார்த்தான்.

“ம்ம் உண்மைதான். எனக்கும், எஸ்தருக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்குடா. எங்களுக்கு ஒரு மகள் இருந்தா அவளை மாதிரிதான் இருப்பான்னு நினைக்கும் அளவிற்கு பாசத்தை வளர்த்துகிட்டோம் இப்போ அவ இல்லாமல் நாங்க இல்ல என்ற நிலையில் இருக்கும்” என்றான்.

அவனின் தெளிவாக பேச்சில் மனம் மகிழ்ந்த தாமோதரன், “ஜெனிதா தான் அன்னைக்கு தமயந்தியையும், குழந்தையையும் காப்பத்தினாள். அதனால் நாங்களே அவளை தத்தெடுக்க நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் நீ எங்களை முந்திகிட்ட. எப்படி இருந்தா என்ன அவ நம்ம வீட்டு பொண்ணுன்னு ஆகிட்டா இல்ல அது போதும்” அவன் மனநிறைவுடன் கூறினான்.

அதற்குள் அங்கே ஓடிவந்த கௌதம், “அப்பா பாப்பா முழிச்சிட்டு இருந்தா. ஜெனிக்கா பேசியதும் அசைந்தால் தெரியுமா?” என்று கேட்டவனை தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டான் தாமோதரன்.

அவன் நடந்த அனைத்தையும் ஒப்பித்துவிட்டு விளையாட ஓடிவிடவே, “யுகி உனக்கு லீவ் முடிஞ்சிது இல்ல” என்ற ராஜை பார்த்து ஒப்புதலாக தலையசைத்தான்

“ஆமாண்டா இன்னும் இரண்டு வாரத்தில் கிளம்பனும். என்னை தூக்கி வளர்த்த சித்தப்பா நேற்று போன் பண்ணினாரு. என்னை குடும்பத்துடன் டெல்லி வர சொல்றாரு. நான் ராணுவத்திற்கு போனாலும் என் நினைவில் தனமும், கௌதமும் இருக்காங்க. அவரும் கூட இருந்தால் கொஞ்சம் பாதுப்பாப்பாக இருக்கும்னு தோணுது” என்றவன் குண்டைத்தூக்கி போட்டான்.

அதைகேட்டு இருவரும், “ஏன் இங்கே நாங்க எல்லாம் தனம், கௌதம் இருவரையும் பத்திரமாக பார்த்துக்காமல் இருக்கோமா?” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான் தாமோதரன்.

அவன் தவறாக நினைத்ததை புரிந்துகொண்ட யுகேந்திரன், “ஐயோ நான் அப்படி சொல்லல. நீங்களும் அவங்களை பாதுகாப்பாக பார்த்துகிறீங்க. ஆனால் அங்கே அவரும் உடல்நிலை சரியில்லாமல் இருகிறாரு அதுதான் யோசிச்சேன்” என்றான் அவசரமாகவே.

அதில் சற்று நிம்மதியுற்ற தாமோதரன், “சரி என்னவா இருந்தாலும் இவங்க இருவரின் திருமணம் முடியும் வரை தனமும், கௌதமும் இங்கே இருக்கட்டும். அப்புறம் நானே அவங்களை பத்திரமாக டெல்லி அனுப்பி வைக்கிறேன் போதுமா?” என்று நண்பனின் சுமையை குறைத்தான்.

அதன்பிறகு அவர்களின் பேச்சு திசை மாறியது. நேரம் கடந்து செல்ல மற்றவர்களும் அவர்களிடம் விடைபெற்று கிளம்பினர். இரண்டு வாரம் மின்னல் வேகத்தில் சென்று மறைய மனைவி, மகனை பிரிந்து ராணுவம் செல்ல கிளம்பிவிட்டான் யுகேந்திரன்.

அடுத்து ராஜேந்திரனும் தன் வேலையைக் கவனிக்க ஊட்டி சென்றுவிடவே நாட்கள் நீரோடை போல நகர தொடங்கியது. அடிக்கடி தமயந்தியின் குழந்தைகளோடு பேச வேண்டும் என்று சொல்லி ஜெனிதா அந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக மாறிப்போனது.

இதற்கிடையே ஜெனிதா செல்லைப் போட்டு உடைத்த அந்த புதியவன் இவர்களை பின்தொடர்வதை தன் வழக்கமாக வைத்திருந்தான். அன்று மார்கெட் சென்று வீடு திரும்பும் வழியில் நடந்த கலாட்டா அனைவரின் நிம்மதியை கலைக்க ஆரம்பபுள்ளி என்று அப்போது யாருக்கும் தெரியாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!