sontham – 9

artworks-000020682392-np0mcu-t500x500

sontham – 9

அத்தியாயம் – 9

அன்று குணசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எஸ்தர் மார்கெட் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படவே ஜெனியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு இருவரும் மார்கெட் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

“என்ன எஸ்தர் இந்த பிசாசு கூட பொடிநடையாக மார்கெட் போயிட்டு வருகிறாயா?” என்ற அவனின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.அவளை இமைக்காமல் பார்த்தபடி பைக்கில் சாய்ந்து நின்றிருந்த மகேஷை கண்டவுடன் இவளுக்கு எரிச்சலாக இருந்தது.

அன்று கோவிலில் நடந்த சம்பவத்திற்கு அவன் தன்னை தொடர்வது தெரிந்திருந்த போதும் அதை மற்றவர்களிடம் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“இப்போ அதை தெரிஞ்சி நீ என்னடா பண்ண போற?” என்றாள்.

“நான் உன் பின்னாடியே ஏன் சுற்றி வரேன்னு தெரிஞ்சும் ஒதுங்கி போறீயே இது உனக்கே நியாயமா?” என்றவனின் பார்வை அவளின் உடலின் மீது படிந்து மீண்டது.

அந்த அருவருப்பை தாங்க முடியாத எஸ்தர் கோபத்துடன், “மகேஷ் நீ பண்றது சரியில்ல. நான் ராஜேந்திரனை லவ் பண்ற விஷயம் தெரிஞ்சபிறகு நீ என்னிடம் வந்து பேசியபோதே உன் நோக்கம் என்னன்னு எனக்கு தெரியும். இதுக்கு மேல் என் வழியில் குறுக்கிடாதே அது உனக்கு நல்லது இல்ல” என்று விரல்நீட்டி எச்சரித்தும் அவனுக்கு சுள்ளேன்று கோபம் வரவே, அவளின் கையை எட்டிப் பிடித்தான் மகேஷ்.

இருவரின் வாக்குவாதத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த ஜெனிதா இருவரும் பேசியதை செல்லில் ரெகார்ட் செய்தவள், “அங்கிள் அக்கா கையை விடுங்க” என்றாள் ஜெனிதா.

“ஏய் பிசாசே அன்னைக்கு நீதானே என் போனை உடைச்ச இல்ல. உன் அக்கா கையை விட முடியாது. நீ என்ன பண்ணுவியோ பண்ணு” என்றவன் எஸ்தரின் கையை இறுக்கமாக பிடித்துகொண்டு நின்றிருக்கவே எட்டி அவனின் காலை மிதித்தாள் ஜெனிதா.

அவன் சட்டென்று எஸ்தரின் கையைவிட்டு, “ஆ” என்று அலறவே, “என்னை பிசாசுன்னு சொல்றீயா?” என்று அவனின் மறுகாலையும் நங்கென்று பிதித்துவிட்டு, “நீ வா அக்கா போலாம்” என்றவள் அவனை இழுத்துச் சென்றாள்.

ஆனால் எஸ்தரின் மனதில் அவன் பார்த்த பார்வை வந்து செல்லவே ஜெனிதாவிடம் இருந்து கையை உதறிவிட்டு அவன் அருகே சென்றவள், “உன் தேவையைத் தீர்த்துக்க உனக்கு நான் வேணுமா?” என்று பளார் என்று ஒரு அறைவிட்டாள்.

மகேஷ் கன்னத்தை கையில் தாங்கியபடி அவனை உறுத்து விழித்தவன், “என்னை கைநீட்டி அடிச்சதுக்கு நீ அனுபவிப்ப” என்றவன் அவளை எச்சரித்தான்.

“உன்னால என்னை ஒண்ணுமே பண்ண முடியாதுடா” என்றாள் அவள் நிமிர்வாக.

“உன்னை உண்டு இல்லன்னு பண்ணல நான் மகேஷ் இல்லடி” என்றவன் கர்வமாக உரைக்க, “அதையும் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு ஜெனிதாவுடன் வீடு நோக்கிச் சென்றாள். எஸ்தர் செய்த முதல் தவறு மகேஷ் பின்னணி தெரியாமல் அவனை அடித்தது தான் என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.

இருவரும் வீடு வந்து சேரும்வரையில் வேறு எனது பற்றியும் பேசவில்லை. ஆனால் ஜெனிதாவின் எண்ணங்களோ எஸ்தருக்கு ஆபத்து வருமென்று சொல்லிக்கொண்டே இருந்தது. சின்ன வயது என்றபோது பெண்களுக்கு வரும் ஆபத்துகள் பற்றி தெளிவாக  படித்து இருந்ததால் பாதுக்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவள் மனம் சொல்லியது.

அவர்களின் ஆசரமத்தில் இருந்து வெளியே வந்த போலீஸை பார்த்த ஜெனிதா, “அங்கிள்” என்றாள்.

எஸ்தர் சிந்தனையோடு அவளையே பார்க்க தன் கையிலிருந்த செல்போனை அவரிடம் கொடுத்து, “இந்த போட்டோவில் இருக்கும் அங்கிள் எஸ்தர் அக்காவை கிண்டல் பண்ணினாரு. நான் அதை ரெகார்ட் பண்ணி வெச்சிருக்கேன். அவரு மேல கேஸ் போடுங்க” என்றாள் தைரியமாக.

அவளின் பேச்சைக்கேட்டு உள்ளம் பதறிபோகவே, “இல்ல சார் அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீங்க கிளம்புங்க அவ புரியாமல் பேசற” என்று எஸ்தர் சமாளிக்க அவளின் பதட்டமாக பேச்சை வைத்து ஓரளவு யூகித்துவிட்டார் இன்ஸ்பெக்டர் ஜெயராம்.

“என்னம்மா இந்த பாப்பா என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொல்லுது. நீ எதுவுமே நடக்கலன்னு சொல்ற?” என்று இருவரையும் சந்தேகமாகப் பார்த்தார்.

அப்போது அங்கே வந்த குணசேகரன், “என்ன சார் இங்கே நின்னுட்டீங்க?” என்று அவர் புரியாமல் கேட்கவே அவர் நடந்த விஷயத்தை அவரிடம் சொல்லவே தன் மகளைப் பார்த்தவருக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

‘இந்த குட்டி இப்படி பண்ணும்னு தெரியாமல் வெளியே கூட்டிட்டு போயிட்டேனே’ என்று நினைத்தபடி அவள் கையைப் பிசைய, “ஜெனிதா அந்த ரெக்கார்டை போட்டு காட்டும்மா” என்றார் குணசேகரன்.

அவள் அந்த ஒலிக்கவிட கடைசிவரை இருவரும் பேசியதை கேட்டபிறகு நிதானமாக யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவர், “ராம் இந்த பையன்மேல் கேஸ் போட வேண்டாம். எஸ்தருக்கு இன்னும் இரண்டு மாசத்தில் கல்யாணம் வெச்சிருக்கேன்” என்றார்

அதைகேட்டு எஸ்தர் பெருமூச்சுடன், ‘ஹப்பா சாமி தப்பிச்சேன்’ என்று நினைத்தபடி காய்கறிக் கூடையுடன் வீட்டிற்குள் சென்று மறையவே ஜெனிதா குணசேகரனை முறைத்துவிட்டு, “தப்பா இருந்த தட்டி கேளுன்னு சொல்லி தராங்க. நம்ம உண்மையைச் சொல்லி பிரச்சனை வரும் பாதுகாப்பு பண்ணலாம்னு நினைச்சா விடமாட்டேன்றாங்க?” என்று தரையில் காலை உதைத்துவிட்டு கோபத்துடன் சென்றாள்.

 அவளின் கோபம் நியாயமானது என்று உணர்ந்த ஜெயராமின் முகம் கனிய, “சின்ன குட்டிக்கு ரொம்ப கோபம் வருது. ஆனால் அவ சொல்வதும் உண்மைதானே குணா?” என்று அக்கறையுடன் கேட்டார்.

ஜெனிதாவின் பேச்சு அவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, “ம்ம் இந்த விஷயம் எஸ்தருக்கு தெரிய வேண்டாம்னு தான் ராம் அப்படி சொன்னேன். நீ கேஸ் பைல் பண்ணு. அவனை உண்டு இல்லன்னு நான் பண்றேன்” என்ற நண்பனின் தோளை தட்டிவிட்டு அந்த போனில் இருந்த ரேக்கார்டை வாங்கிகொண்டு சென்றார்.

அதனால் நிகழபோகும் பின்விளைவை அப்போது யாரும் யோசிக்கவில்லை.இந்த பிரச்சனையில் மகேஷ் மீது கேஸ் ஃபைல் செய்து பதினைந்து நாள் ரிமைண்டில் வைக்கவே அவனின் கோபம் அதிகரித்தது. மகேஷ் ஆரம்பத்தில் இருந்தே எஸ்தரின் மீது கண்ணாக இருந்தான். பெண்களின் மீது பித்துகொண்டு அவன் செய்த தவறுகள் ஏராளம். ஆனால் அதற்கு எல்லாம் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததால் அவன் போலீஸ் வலையில் மாட்டிகொள்ளாமல் தப்பித்துகொண்டே இருந்தான்.

ஆனால் எஸ்தரின் பிரச்சனையில் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதில் விதையாக விழுந்து விருச்சமாக வளர தொடங்கியது.

பதினைந்து நாள் ரீமைண்டு முடிந்து வெளியே வந்த மகேஷ், ‘எஸ்தர் இதுக்குமேல் உன்னை விட்டுவைப்பேன்னு நினைக்காதே’ என்று மனதிற்குள் சூளுரைத்தவன் தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தான். அவனை உள்ளே தூக்கி வைத்த விஷயம் குணசேகரனை தவிர மற்ற யாருக்கும் தெரியாது.

ஒருநாள் தமயந்தி வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு ஜெனிதாவுடன் கிளம்பினாள் எஸ்தர். ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் நடக்கும்போது அவளுக்குள் ஏதோ உறுத்தல் ஏற்படவே சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்தாள்.

அவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “அக்கா குட்டி பாப்பா சீக்கிரம் பிறந்துவிடுவாள் இல்ல” என்று கேட்டாள்.

“ம்ம் ஆமா செல்லம். இன்னும் இரண்டே மாசம்தான் அப்புறம் குட்டிப்பாப்பா வெளியே வந்துவிடுவாள். நீயும் அவளோட ஜாலியாக விளையாடலாம்” என்று சொல்லிக்கொண்டே செல்ல அவர்கள் போக்கில் நடந்து சென்றனர்.

அப்போது கார் வந்து அவளின் வழியை மறிக்கவே நொடியில் இருவரையும் இழுத்து காருக்குள் போட்டு வாயை இறுக்கமாக கட்டிவிட்டு, “ம்ம் சீக்கிரம் காரை எடுடா” என்றான் மகேஷ். இரண்டு பேரும் அமர்ந்து இருந்த கார் தேனியைவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தது.

எஸ்தருக்கு விஷயம் விபரீதம் என்று புரியவே மகேஷை கைகளால் அடித்தாள். ஜெனிதா அழுகையோடு எஸ்தரை பார்க்க, “ஏய் பிசாசே நான் பேசியதை ரெக்கார்டு செய்து போலீஸிடம் கொடுக்கிற இல்ல. இன்னைக்கு உங்க அக்காவை நான் என்ன பண்றேன்னு பாருடி” என்று அவளை எட்டி உதைத்தான்.

ஜெனிதா வலியை பொறுக்க முடியாமல் அழுகவே, “ம்ம் நல்ல அழு” என்று மகேஷ் சொல்லிக்கொண்டு இருக்க காட்டுக்குள் ஒரு இடிந்துபோன கட்டிடத்திற்குள் எஸ்தரை தூக்கிச் சென்றவன், “என்னால் என்ன பண்ண முடியும்னு கேட்ட இல்ல. இப்போ பாருடி” என்றவன் அவளை கீழே படுக்க வைத்துவிட்டு ஆக்ரோஷமாக அவளை நெருங்கினான்.

அப்போது காரில் இருந்த ஜெனிதா டிரைவரின் கையைக் கடித்துவிட்டு எஸ்தரை தேடிக்கொண்டு அந்த இடிந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அங்கே மகேஷ் கோபத்துடன் எஸ்தரிடம் தவறாக நடந்துகொள்ள நினைப்பதை பார்த்து அங்கிருந்த கல்லைத் தூக்கி அவனின் மீது வீசினாள்.

அது அவனின் தலையைப் பதம் பார்க்கவே, “ஏய் பிசாசே” என்று சொல்லி ஜெனிதாவை பளார் என்று ஒரு அறைவிடவே அவள் தூரத்தில் சென்று விழுந்தவள் மெல்ல மயங்குவதை கண்டு எஸ்தரின் இதயத்துடிப்பு எகிறியது..

 ‘ஐயோ யாராவது வந்து காப்பாத்துங்களேன்’ என்று மனதிற்குள் கதறவே மகேஷ் அவளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கினான். அப்போது கண்விழித்த ஜெனிதா நடந்த அனைத்தையும் நேராக பார்த்தாள்.

எஸ்தர் அவனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்து அதெல்லாம் தோல்வியில் முடியவே பூஜ்யத்தில் முடியவே, ‘ஐந்தர் எல்லாமே முடிஞ்சிபோச்சு’ என்று அவள் கதறி அழுதாள். பூவாக இருந்தவளை கசக்கி எறிந்துவிட்டு மகேஷ் அங்கிருந்து செல்ல நினைக்கும்போது ஆணியுடன் கூடிய கட்டையை தூக்கி அவனின் காலில் குறிபார்த்து வீசிவிட்டாள்.

அது அவனின் காலைப் பதம்பார்க்கவே,, ‘ஆ’ அவனின் அலறல் சத்தம்கேட்டு டிரைவர் ஓடிவந்து பார்க்கும்போது ஜெனிதா ஒரு இருளான இடத்தில் மறைந்துகொல்லவே எஸ்தர் கிடந்த கோலத்தை பார்த்து நடந்ததை புரிந்துகொண்டு, “வாங்க சார் நம்ம போலாம்” தூக்கிகொண்டு அங்கிருந்து சென்றான்.

அவர்கள் சென்றபிறகு என்ன செய்வதேன்று புரியாமல் எஸ்தரின் அருகே ஓடி வந்த ஜெனிதா, “அக்கா.. அக்கா” என்று அழுகையுடன் அவளின் கரம்தொட்டு எழுப்பினாள்.

மெல்ல கண்விழித்த எஸ்தர் ஜெனிதாவின் வீங்கிய கன்னத்தை கண்டு அழுகையுடன், “பாப்பா இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் அன்னைக்கு உன்னை அமைதியாக இருக்க சொன்னேன். பெண்கள் என்னதான் தைரியமான பெண்ணாக வெளியே காட்டிகொண்டாலும் உள்ளுக்குள் அவங்களுக்கும் பயம் இருக்கும். இப்போ எல்லாமே முடிஞ்சிபோச்சு. அக்காவும் உன்னைவிட்டு போக போறேன்” என்றவள் வலியுடன் கூறினாள்.

“இல்ல எனக்கு என் அக்கா வேணும். பிளீஸ் அக்கா எழுந்து வா நம்ம அப்பா கிட்ட போய் நடந்ததை சொல்லலாம்” என்றழைக்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள். அந்த அளவுக்கு சின்னாபின்னமாக மாற்றி இருந்தான் மகேஷ்.

இதெல்லாம் நடக்குமென்று பாவம் குழந்தைக்கு தெரியாததால், “அக்கா வாக்கா” என்று அழுதவளை கைப்பிடித்து தட்டிகொடுத்த எஸ்தர், “என்னால் முடியல கண்ணாம்மா. நீ போயிரு செல்லம் இங்கிருந்து போயிரு. அப்பாகிட்டயோ, மாமாகிட்டயோ இங்கே நடந்த எதையும் சொல்லாதே” என்று கதறியவளின் கண்ணீரை துடைத்துவிட்டு ஜெனிதாவும் அவளோடு சேர்ந்து அழுதாள்.

மகேஷிடம் தப்பிக்க நினைத்து அவள் அங்கும் இங்கும் புரண்டு தப்இக்க நினைக்கையில் அங்கிருந்த இரும்புக்கம்பி அவளின் இடையில் பலமாக ஏறி இரத்தம் ஒருப்பக்கம் ஆறாக சென்று கொண்டிருக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் அழுத ஜெனிதாவின் காதுகளில் செல்போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

தமயந்தி வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பிய இருவரும் வெகுநேரம் சென்றபிறகும் ஆளை காணாமல் குணசேகரன் தேட தொடங்கினார். இன்னும் இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்திருக்கும் பெண் திடீரென்று காணவில்லை என்று சொன்னால் ஊரார்கள் தவறாக பேசுவார்கள் என்று எண்ணி ரகசியமாக தேடினார்.

காலையில் வீட்டில் இருந்து கிளம்பிய இருவரும் மாலை நேரம் ஆகியும் வரவில்லை என்ற காரணத்தினால் தமயந்திக்கு அழைத்து விவரம் கேட்க அவள் வரவில்லை என்று சொன்னதும் விஷயம் விபரீதமோ என்ற எண்ணத்தில் தாமோதரனுக்கு அழைத்து விவரம் சொன்னார்.

அவனும் ஆள்விட்டு ஊர் முழுவதும் தேட சொல்லவே நேரம் சென்றதே தவிர அவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போனது. அப்போது எஸ்தருக்கு போன் செய்யாமல் இருந்தவர்களுக்கு திடீரென்று நினைவுவரவே அவளின் செல்லிற்கு அடித்தனர்.

மகேஷ் அடிபட்டதால் அங்கிருந்த அவளின் ஹேண்ட்பேக்கை தூக்கி அங்கிருந்த செடியில் வீசிவிட்டு சென்றுவிட அதுவரை சைலன்ட் மோடில் இருந்த ஏதோ பட்டு சத்தமாக அடிக்க தொடங்கியது. அந்த சத்தம்கேட்டு சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி எழுந்து அங்கும் இங்கும் தேடி  செல்லை எடுப்பதற்கு அது மூன்றுமுறை அடித்து ஓய்ந்தது.

அடுத்த முறை போன் அடிக்க வேகமாக எடுத்தவள், “அப்பா அக்காவை அந்த அங்கிள் என்னமோ பண்ணிட்டாங்க” அழுதபடி திக்கி திக்கி பேசினாள்.

என்னமோ பண்ணிட்டாங்க என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்ததும்,  “ஐயோ என் மகள்” என்று குணசேகரனின் மனம் பதறிபோகவே, தலையிலடித்துகொண்டு அழுக ஆரம்பித்தார். தனம் அவரை தேற்ற ஜெயராம் மூலமாக இப்போது ஜெனி பேசும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான் தாமோதரன்.

ஜெனிதாவிற்கு எஸ்தரின் நினைவு வரவே, “அக்கா அப்பா பேசறாரு” என்று சொல்லி அவள் காதில் போனை வைக்க எஸ்தர் நடந்த அனைத்தும் சொல்ல முடியாமல், “அப்பா” என்று அழுதாள். அவளின் கதறல்கேட்டு இங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கியது.   

“பாப்பா உனக்கு ஒன்னும் இல்லடா. அப்பா கிளம்பி வந்துட்டு இருக்கேன். என் பொண்ணு தைரியமான பொண்ணு” என்று கண்களை துடைத்துக்கொண்டு அவசரமாக பேசினார். அதற்குள் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கபடவே தனம், தமயந்தி தவிர மற்ற இருவரும் அந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கே செல்லும்போது காலம் கடந்திருந்தது.

தாமோதரன், குணசேகரன் அந்த கட்டிடத்திற்குள் நுழையும்போது ஜெனிதாவின் அழுகைக்குரல் மட்டுமே அவர்களுக்கு கேட்டது. அவர்கள் சென்று பார்க்கும்போது எஸ்தரின் உயிர் அவளின் உடலைவிட்டு பிரிந்திருந்தது.

ஜெனிதா அவளை உலுக்கியபடி அழுதுகொண்டு இருக்கவே தாமோதரன் ஓடிச்சென்று அவளை தூக்கி அணைத்துக் கொண்டான். தன் ஒரே மகளுக்கு நடந்த கொடுமையை நினைத்து கதறி அழுதார் குணசேகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!