SSK —EPi 28

அத்தியாயம் 28

 

நெஞ்சே என் நெஞ்சே

செல்லாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய்

அதுதானே பெரும்பாடு!!!

 

வெங்கி தன் அக்காவின் கதையை சொல்லி முடித்ததும் அங்கே கணத்த மௌனம் நிலவியது. தொண்டையை செருமி குரலை சரிப்படுத்திக் கொண்ட மணி வெங்கியை ஏறிட்டுப் பார்த்தான். சிரிப்பில் என்றும் மலர்ந்திருக்கும் முகம் கலங்கிப் போய் காணப்பட்டது. எழுந்து போய் அவர் அருகில் அமர்ந்துக் கொண்டான் மணி. மெல்ல அவர் கைப்பற்றி அழுத்திக் கொடுத்தான். அவர் மணியின் தோளில் சாய்ந்து கதறிவிட்டார்.

எத்தனை வருடங்களாய் அடைத்து வைத்திருந்த சோகமோ, கண்ணீர் கரை புரண்டு ஓடியது. சற்று நேரம் அவரை அப்படியே அழவிட்டான் மணி. அவர் மெல்ல தன் நிலை அடையவும், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

“அங்கிள், இந்த மாதிரி மீராம்மா முன்னுக்கு அழுதுறாதீங்க. முகமெல்லாம் வீங்கிப் போய் பம்ப்கின் மாதிரி இருக்கீங்க. ஏற்கனவே ஃபிப்டியாச்சு, இந்த முகத்த வேற பார்த்தா வேணாம்னு ஓடிறப் போறாங்க!”

“தப்பா சொல்லுற மணி! ஐம் ஜஸ்ட் ஃபோர்டி நைன்” என அவசரமாக சொன்னார் வெங்கி. அதை கேட்டவனுக்கு வெங்கி மறுபடியும் ஃபார்முக்கு வந்து விட்டார் என புரிந்துவிட்டது. அதற்குள் மீராம்மாவும் போன் செய்து இன்னும் வரவில்லையா என விசாரிக்க, கவிக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அவசரமாக மீண்டும் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பினார்கள்.

இவர்கள் அங்கே ரூமில் நுழையும் போது கவி விழித்திருந்தாள். வெங்கி மகளை நெருங்கி அணைத்துக் கொண்டார்.

“என் செல்ல மகளுக்கு எப்படி இருக்கு இப்போ?”

“வலிக்குதுப்பா!” வலித்த கையைக் காட்டி செல்லம் கொஞ்சினாள் மகள்.

“வீர தீர சாகசமெல்லாம் செஞ்சா கைல சூடு, காலுல சூடெல்லாம் படத்தான் செய்யும்” என சொல்லிக் கொண்டே அவள் வலது கைப்பற்றி மீண்டும் அந்த மோதிரத்தை அணிவித்து விட்டான் மணி.

“மோதிரம் போட்டா, அந்த விரலுக்கு முத்தம் குடுக்கனும்னு தெரியாது? குடு!” என மிரட்டினாள் கவி.

முறைத்தாலும் மெல்லிய முத்தம் ஒன்றை அவள் விரலுக்குக் கொடுக்கத் தவறவில்லை மணி. நர்ஸ் இனிமேல் சாப்பாடு கொடுக்கலாம் என சொல்லி இருந்ததால், டயட் பார்த்து அவர்களே கொடுக்கும் உணவை ஊட்டி விட்டான் மணி. மீராம்மா உதவ வந்தும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டான்.

உணவருந்தி மருந்து சாப்பிட்டவள், கொஞ்ச நேரத்தில் சாமியாட தொடங்கிவிட்டாள். அவள் தூங்கும் வரை பக்கத்திலேயே கைப்பிடித்து அமர்ந்திருந்தான் மணி. அவள் உறங்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சேண்ட்ராவும் அவள் கணவனும் ஹேரியுடன் வந்துவிட்டார்கள். கவியின் நிலையைப் பற்றி சொல்லி கொஞ்ச நாட்களுக்கு ஹேரியைப் பார்த்துக் கொள்ள முடியாது என மீரா அவர்களுக்கு மேசேஜ் போட்டுவிட்டுத்தான் வந்திருந்தார். மேசேஜ் பார்த்து தங்கள் வேலைகளை செட்டில் செய்து விட்டு, விமானம் எடுத்து வந்திருந்தார்கள் அவர்கள்.

கையில் கட்டுடன் இருக்கும் தன் கவிமியைப் பார்த்து ஹேரிக்கு ஒரே அழுகை. எங்கே கவியை எழுப்பி விடுவானோ என மணிதான் அவனை கடை இருக்கும் பகுதிக்கு அழைத்துப் போயிருந்தான். அவன் கேட்ட விளையாட்டு கார், பலூன் எல்லாம் வாங்கி கொடுத்து, அங்கிருக்கும் சிறுவர் விளையாட்டு இடத்தில் கொஞ்ச நேரம் விளையாட விட்டு ரூமுக்கு அழைத்து வந்தான்.

இவர்கள் உள்ளே வரும் போது விழித்திருந்தாள் கவி. ஹேரி ஓடிப்போய் கட்டிலில் ஏறி அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

“வலிக்குதா கவிமி?”

“இல்லடா, வலிக்கல” என ஹேரியை சமாதானப்படுத்தினாள் கவி.

அவன் மணியின் செலவில் வாங்கி வந்திருந்த கெட் வெல் சூன் பலூனைக் கவிக்குக் கொடுத்து கன்னத்தில் முத்தமிட்டான். இவளும் பதில் முத்தம் கொடுத்தாள்.

“காசு கொடுத்தது நானும்மா! முத்தம் மட்டும் அவனுக்கா?” என சன்னமான குரலில் கேட்டான் மணி.

“காசு நீ தான் குடுத்த, ஆனாலும் எனக்கு வாங்கித் தரனும்னு அவனுக்குத்தானே மனசு இருந்துச்சு! உனக்காக குண்டடிப்பட்டுருக்கேனே என்ன வாங்கிக் குடுத்த நீ?” இவளும் சன்னமான குரலில் சண்டைப் பிடித்தாள்.

“ஓ, மேடம் எனக்காகத்தான் திருட்டுப் பயலுங்க கூட பாஞ்சி பாஞ்சி சண்டைப் போட்டீங்களோ? பல்ல பேத்துருவேன்! வேணாம் வேணாம்னு சொல்ல வம்ப விலைக்கு வாங்கி இங்க வந்துப் படுத்துட்டு பேசற பேச்ச பாரு!”

“திட்டறதுனா நீ ஒன்னும் பேச வேணாம் போ! நெக்ஸ்ட் ஃபீடிங் மீராம்மாவே குடுக்கட்டும். நீ எனக்கு எதுவும் செய்ய வேணாம்”

“நீ பொறந்த குழந்தைப் பாரு! மீராம்மா மடில போட்டு பால் குடுப்பாங்க!”

“ஆமாடா, அவங்க என் அம்மா! மடியில போட்டும் பால் குடுப்பாங்க, இடுப்புல தூக்கி வச்சும் குடுப்பாங்க! உனக்கு எங்க வலிக்குது?”

“கேப்பா! மணியும் கவிமியும் சண்டை போடறாங்க”

“நாங்க எங்கடா சண்டை போட்டோம்! சும்மா பேசிட்டு இருந்தோம்” என குரல் கோரசாக வந்தது.

அவர்களைப் பார்த்து வெங்கியின் முகத்தில் ஆராய்ச்சியும், மீராவின் முகத்தில் மகிழ்ச்சியும் தெரிந்தது. சேண்ட்ராவும் அவள் கணவனும் லவ் பேர்ட்ஸ் என கிண்டலடித்து இருவரையும் ஒரு வழி செய்தார்கள். விசிட்டர் நேரம் முடியவும் அவர்கள் கிளம்ப, இவர்கள் நால்வர் மட்டும் இருந்தார்கள்.

“அங்கிள், நீங்களும் மீராம்மாவும் வீட்டுல போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குக் காலையில வாங்க” என அவர்களையும் அனுப்பி வைத்தான் மணி.

தூங்கி எழுந்த கவி கண்டது கட்டிலில் அவள் கை அருகே தலை சாய்த்துப் படுத்திருந்த மணியைத்தான். அடிபடாத கைக் கொண்டு அவன் தலையை வருடிக் கொடுத்தாள். அந்த சின்ன அசைவுக்கே எழுந்துக் கொண்டான் மணி.

“என்னம்மா வேணும்? வலிக்குதா?”

“பாத்ரூம் போனும் மணி!”

ட்ரீப்ஸ் ஏறிய ஸ்டேண்டைத் தள்ளிக் கொண்டே அவளை மெல்ல நடக்க வைத்து வாஷ்ரூம் அழைத்து சென்றான் மணி. பின் அதே போலவே அழைத்து வந்துப் படுக்க வைத்தான்.

“தூக்கம் வரலடா எனக்கு! நான் உட்கார்ந்திருக்கேன், நீ போய் அந்த சோபா பெட்டுல படுத்துக்கோ மணீ! குனிஞ்சு எவ்வளவு நேரம் படுப்ப! இடுப்ப வலிக்கப் போகுது!”

“இல்ல பரவாயில்ல லயனஸ்! இப்ப தூக்கம் வரல”

“ம்ப்ச்! சொன்னா கேக்க மாட்டியா? போ, போய் படு!”

முடியாது என தலையாட்டினான் அந்தப் பிடிவாதக்காரன்.

“சரி, மேல ஏறி என் கட்டுலுக்கு வா!”

“எதுக்கு? எதுக்கு என்னை மேல கூப்புடற? அடிக்கடி நர்ஸ் வந்து செக் பண்ணிட்டுப் போறாங்கடி! பேசாம படு”

“அடேய்! இந்த நேரத்துல உன் நினைப்பு போற பாதையப் பாத்தியா? கொன்னுடுவேன் ராஸ்கல்! மனுஷனே கை வலிக்குதுன்னு இருக்கான், உனக்கு ஜல்சா கேக்குதா?”

“அப்புறம் என்ன கர்மத்துக்கு என்னை மேல கூப்பிட்ட?”

“பச்சக்குழந்தை மாதிரி பாவமா படுத்துருக்கியேன்னு பரிதாபப்பட்டு பக்கத்துல படுக்க வச்சிக்கலாம்னு கூப்பிட்டேன்!”

“ஓ, அதுக்குத்தானா!”

“வேற எதுக்குன்னு நீ நெனச்சே?”

“இல்ல லயனஸ்! இந்த மாதிரி உடம்பு சரி இல்லாத நேரத்துல ஜல்சா வச்சிக்கிட்டா ஓக்சிதோக்சின் அப்படிங்கற ஒரு ஹோர்மோன் நம்ம உடம்புல சுரக்குமாம். அது நேச்சுரல் பேய்ன் கில்லராம். நாம வீட்டுக்குப் போய் நெறைய ஜல்சா வச்சிக்கலாம். நீ இந்த வலி மருந்துலாம் சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்கத் தேவையில்ல! என்ன நான் சொல்லுறது?”

“எப்படிடா என் வலியில கூட உனக்கு சாதகமான விஷயத்தைக் கண்டுப்பிடிக்கற?”

“அதெல்லாம் அப்படித்தான், கூடவே பொறந்தது”

“மேல வாடா மணி!”

“நோ, முடியாது! பேய்ன் கில்லர் மேட்டர்லாம் வீட்டுக்குப் போய்தான்! இப்ப இல்ல”

“வருவியா மாட்டியா?”

“நோ!”

“இப்ப நான் மூனு வரைக்கும் எண்ணுவேன்! அதுக்குள்ள வரனும்! இல்லைனா ட்ரீப்ஸ் புடுங்கிப் போட்டுட்டு நான் கீழ இறங்கி வருவேன். ஒன்னு….ரெண்டு..மூ..”

அதற்குள் கட்டிலின் மேலே ஏறி அவள் அருகில் அமர்ந்திருந்தான் மணி.

“மூ.. சொல்லுற வரைக்கும் கெத்து காட்டறியா? இனிமே ஒன்னு சொல்லி முடியற முன்னுக்கே சொன்ன வேலைய செஞ்சிருக்கனும்” என சொல்லி நன்றாக இருந்த கையால் அவன் தொடையைப் பிடித்துத் திருகினாள்.

“வலிக்குதுடி!”

“நல்லா வலிக்கட்டும். இப்போ சரிஞ்சு படு” அவள் நன்றாக நகர்ந்து அவனுக்கு இடம் விட்டுக் கொடுத்தாள். அவன் படுக்கவும்,

“கண்ணை மூடுடா மங்கி!” என மிரட்டினாள்.

அவன் கண்ணை மூடவும், நெற்றியைத் தடவிக் கொடுத்தாள் கவி.

“தூங்கு மணீ! கண்ணுக்கு கீழலாம் கருப்பா போச்சு. அவ்வளவு ஸ்ட்ரேஸ் உனக்கு! நான் நல்லாத்தான் இருக்கேன்! நீ தூங்கு”

கண்ணை மூடிக் கொண்டே,

“நான் ரொம்ப பயந்துட்டேன் கவி! நீ ஐசியூல இருந்த நொடிகள் எல்லாம் என் வாழ்க்கையிலே ரொம்ப பயங்கரமான நொடிகள். இனிமே இந்த மாதிரி எதுவும் முட்டாள்தனமா செஞ்சிறாதடி ப்ளிஸ்! என்னால தாங்க முடியாது” குரலில் கலக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இல்ல மணி! இனிமே என் உயிர பத்திரமாப் பாத்துக்குவேன். ஏன்னா என் உயிருல தான் உன் உயிரும் ஒளிஞ்சுருக்குன்னு நல்லாவே தெரிஞ்சிகிட்டேன்! நான் மயக்கத்துக்குப் போகற முன்ன நீ கதறன கதறல் இன்னும் என் காதுல கேட்குதுடா! என்னை மன்னிச்சிருடா மணி”

“நீ செஞ்ச காரியத்துக்கு பட்டுனுலாம் மன்னிக்க முடியாது! குறைஞ்சது நாம தாத்தா பாட்டி ஆகிற வரைக்குமாச்சும் உன் தப்ப அடிக்கடி சொல்லிக் காட்டிட்டே இருப்பேன்! அப்போத்தான் என் மனசு ஆறும்”

“அவ்ளோ நாள் ஆகுமாடா என்னை மன்னிக்க? இதெல்லாம் ரொம்ப ஓவர்டா! மணி….”

“என்ன?”

“சின்ன வயசுல வந்தா அது பப்பி லவ்வு தானே?”

“ஆமா!”

“நெறைய பப்பி லவ் பொசுக்குன்னு புட்டுக்கிட்டுப் போயிருதே! நீ மட்டும் எப்படிடா என்னை மறக்காம, என்னையே நினைச்சிருந்து தேடி வந்த?”

“ஏன்னா இந்த மணி இஸ் அ மேன் ஆப் ப்ரின்சிப்பல்ஸ்! உனக்கு ஒரு சத்தியம் செஞ்சு குடுத்தேன் ஞாபகம் இருக்கா?”

“ஞாபகம் இருக்கு. ஆனா அதை நீ ஹானர் பண்ணுவன்னு நான் நினைச்சுப் பார்க்கல”

“எங்க சின்னம்மா சத்தியம் பண்ண விடமாட்டாங்க எங்கள! அப்படி செஞ்சு குடுத்தா அதை எப்பாடுபட்டாவது காப்பாத்தனும்னு சொல்லி குடுத்துருக்காங்க! உனக்கு அம்மாவா இருந்து பார்த்துக்குவேன்னு சத்தியம் பண்ணி குடுத்தேன்! உன்னை கல்யாணம் பண்ணதுல இருந்து அதை நான் நிறைவேத்திட்டுத்தான் இருக்கேன் லயனஸ். நீ வேற வாழ்க்கை அமைச்சிட்டுப் போயிருந்தா அந்த சத்தியத்துக்கு வேல்யூ இல்ல, ஆனா என்னையே நினைச்சுட்டு இருக்கேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அந்த சத்தியத்துக்கு உயிர் இருக்குடி”

“அப்போ சத்தியத்துக்காகத்தான் என்னைத் தேடி வந்தியா?”

“அதுவும் ஒரு காரணம்! இன்னொரு காரணம் மை லவ்”

“பொய் சொல்லாதடா! நான் தான் உன்னை லவ் பண்ணேன்! டார்ச்சர் பண்ணேன்! நீ மேபீ மட்டும்தான் சொன்னே! அதுவும் நான் செத்துப் போவேன்னு மிரட்டனதால”

“அதெல்லாம் லவ் பண்ணற வயசாடி? அந்த வயசுல பக்கத்து கிளாஸ் டஸ்டர எப்படி திருடறதுன்னு மட்டும்தான் யோசிக்கனும்டி, காதல், கத்திரிக்காய்லாம் இல்ல. நீ பிஞ்சிலயே பழுத்துப் போயிட்டா நானும் அப்படி இருப்பேனா?”

“ஓஹோ, நான் பிஞ்சில பழுத்த கேசா? போடா போ! உனக்கு நானெல்லாம் செட் ஆக மாட்டேன்! எவளாச்சும் குப்பம்மா, குருவம்மான்னு இருப்பா, அவள கட்டிக்கிட்டு ஓக்சிதோக்சின் குடு. போ, போடா!” கத்தினாள் கவி.

சடக்கென எழுந்து அமர்ந்தான் மணி.

“அடியே! ஹாஸ்பிட்டல்டி, கத்தாத”

“அப்படித்தான் கத்துவேன்” என இன்னும் குரலை உயர்த்தினாள் கவி.

கத்தியவள் வாயைத் தன் இதழ் கொண்டு மூடினான் மணி. அவளை ரத்த வெள்ளத்தில் பார்த்ததில் இருந்து அடக்கி வைத்திருந்த தன் மன இறுக்கத்தை அவள் இதழ் தேனால் குழைய வைக்க முயன்றான் மணி. எவ்வளவு நேரம் நீடித்ததோ அந்த இதழ் யுத்தம்,

“ஹ்க்கும்!” என சத்ததில் சட்டென முடிவுற்றது.

அங்கே இருவரையும் பார்த்தப்படி நின்றிருந்தார் நர்ஸ்.

இருவரும் அசடு வழிய புன்னகைத்தனர். அவர் கவியின் ரத்த அழுத்தத்தை செக் செய்து விட்டு மருந்து கொடுத்து விட்டு கிளம்பினார்.

“உன்னால என் மானமே போச்சுடா மணி!”

“மானம் போச்சா? ட்ரென்ல வச்சு என் கழுத்த ட்ராக்குலா மாதிரி கடிச்சு வச்சவ பேசற பேச்சா இது?”

“விடு, விடு! இப்ப பிஞ்சில பழுத்த மேட்டருக்கு வா”

“அந்த வயசுல நீ காதல்னு சொன்னதும் எனக்குள்ள ஒரு பரவசம். நம்மயும் காதலிக்க ஆள் இருக்குடான்னு ஒரு கர்வம். மத்த கேர்ல்ஸ்லாம் ஒளிஞ்சு நின்னு லவ் யூ சொன்னப்போ, நீ மட்டும் தைரியமா நேருக்கு நேர் சொன்ன! சோ அதுல லேசா விழுந்துட்டேன். ஆனா அதை காதல்னு சொல்ல மாட்டேன். ஒரு க்ரஷ்னு வேணும்னா வச்சிக்கலாம். டீச்சர் ஏசுனப்போ உதட்ட பிதுக்கி அழுத தெரியுமா, அந்த முகம்தான் ரொம்ப பாதிச்சது என்னைய. என் கூடவே படிச்சு என் கண்ணு முன்னுக்கே நீ இருந்துருந்தா அந்த க்ரஷ் கூட இல்லாம போயிருக்கலாம். ஆனா கண் காணாம போனதும் எனக்குள்ள அடிக்கடி உன் நினைப்பு. உன் அழுத முகம், பல்லுல சாக்லெட் ஒட்டுன முகம், பாடம் சொல்லிக் குடுக்கறப்போ உதட்ட கடிச்சுட்டு கான்சண்ட்ரேட் பண்ணுற முகம், லூசு மாதிரி சிரிக்கற முகம்னு தூங்கப் போறப்போ வந்து டார்ச்சர் பண்ணும். அதோட நீ கொடுத்த காதல் பாட்டு அடங்கிய ஐபோட், நைட்ல அதைத்தான் கேட்பேன்! இப்படியே க்ரஷ் காதலா மாறிருச்சுடி! அடிக்கடி ஜீஜூ கூட வந்து உன்னைப் பார்த்து என் காதல் பயிர உரம் போடாமலே வளர்த்துட்டேன்.”

வெங்கி வந்துப் பார்த்தது, பின் இங்கே வந்தது எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டான் மணி. விடிய விடிய இருவரும்,

“தூங்கினா விளங்கும்

தூக்கந்தான் வரல

பாடுறேன் மெதுவா உறங்கு”

என சங்கீத ஸ்வரங்களை மீட்டிக் கொண்டிருந்தார்கள். அதாவது வெட்டியாக ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

(கொட்டும்)