SSKN — epi 12

அத்தியாயம் 12

 

நெஞ்ச வயல் எங்கும்

உன்னை நட்டு வைக்கிறேன்

நித்தம் அதில் காதல்

உரம் இட்டு வைக்கிறேன்

 

முகத்தை ஏழு முழத்துக்கு நீட்டி வைத்திருந்தார் வெங்கி.

“இந்த ஈவ்னிங் ட்ரேஸ் வேணா! போய் சேலை கட்டிட்டு வா. அதுதான் வின்டர் முடிஞ்சிருச்சுல, இனி சேலை கட்டலாம். ஒன்னும் குளிராது, போ!” என மீராவை விரட்டினார்.

இன்று ஹேரியின் பிறந்த நாள். அதற்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் மீராவும் வெங்கியும். மணியும் கவியும் ஹேரிக்கு பரிசு வாங்கிக் கொண்டு நேராக அங்கே வந்து விடுவதாக சொல்லி இருந்தார்கள்.

“இப்ப இந்த சட்டைக்கு என்ன குறைச்சல்? அங்க வரவங்க எல்லாம் இப்படித்தானே கவுன் போட்டிருப்பாங்க. அதான் கவி மேடம் இத போட்டுட்டு வர சொன்னாங்க சார்” எரிச்சலை மறைத்தபடி சுவற்றைப் பார்த்துப் பேசினார் மீரா.

“நீ எதிர்த்துப் பேச பேச எனக்குத் தலை ரொம்ப வலிக்க ஆரம்பிக்குது. கட்டிப்பிடி வைத்தியம் பாத்துக்கனும் மாதிரி இருக்கு. பக்கம் வரவா?” என மீராவை ஆழப் பார்த்து கேட்டார் வெங்கி.

“இல்ல, வேணாம். போய் மாத்திட்டு வரேன்” என குடுகுடுவென ரூமுக்கு ஓடினார் மீரா.

“எதை சொன்னாலும் கேக்கறது இல்ல. எனக்கு மட்டும் இவ கவுன் போடறது பிடிக்காமலா இருக்கு! ரொம்ப ரொம்ப பிடிக்குது தான். இப்ப போட்டிருந்த லெமன் யெல்லோ கவுன் அவ கலர எவ்வளவு அழகா காட்டுச்சு. கலர மட்டுமா உடம்போட ஒட்டி, வளைவு சுளிவு எல்லாத்தையும்ல பளிச்சுன்னு காட்டுச்சு. ஹ்ம்ம்ம். நான் மட்டும் ரசிச்சா பரவாயில்லையே, அங்க அந்த நாலு கண்ணு நேதன் வேற இருக்கானே.” வாய் விட்டே புலம்பினார்.

நேதன் வேறு யாரும் இல்லை, சேன்ட்ராவின் தந்தைதான். இவர்களோடு கோபமாக இருந்து இத்தனை நாட்களாக பிரிந்து இருந்தவர், மனைவி இறந்தவுடன் மகளோடு இருக்க வந்திருந்தார். வந்த மனிதன் வீட்டோடு இருந்திருக்கலாம், ஹேரியை விட இங்கே வந்தவர் கண்களுக்கு மீரா பட்டுவிட்டார். அதில் இருந்து ஹேரியை விடுவதும், அழைத்துப் போவதும் அவரின் பொறுப்பு ஆகிவிட்டது. தன்னோடு வயதில் மூத்தவர் என மரியாதையாகவே பழகிய வெங்கிக்கு போக போக தான் அவரின் விஜயங்கள் தனது காதலுக்கு ஆப்படிக்க வந்த வினையாக கண்ணுக்குப் பட்டது.

பிறந்ததில் இருந்து பேரனை ஒதுக்கி வைத்தவருக்கு திடீர் அக்கறை முளைத்தது ஹேரியின் மேல். ஹேரியை சாக்கு வைத்து மீராவிடம் எதையாவது பேசியபடி இருப்பார். பேரன் என்ன விரும்பி சாப்பிடுவான், அவனுக்கு என்ன கார்ட்டூன் பிடிக்கும் இப்படி. மீராவும் சிரித்த முகமாகவே பதில் அளிப்பார். இதை எல்லாம் பெரிதாக நினைக்கவில்லை வெங்கி. போக போக, மீரா காபி கிடைக்குமா? உன் கையால் காபி குடித்தால் தான் எனது மாலையே மலர்ந்து மணம் விடுகிறது! உன் முகத்தைப் பார்த்தால்தான் என இரவே இனிமையாய் இசை பாடுகிறது என ரக ரகமாக ஆங்கிலத்தில் ரவுண்டு கட்டவும் தான் வெங்கி விழித்துக் கொண்டார்.

‘எங்கிருந்துடா எனக்கு மட்டும் இப்படி வந்து அமையறீங்க? இந்த ஒரு வருஷமா இவ வேணாம், மறக்கனும், சரிப்படாதுன்னு நான் மனசுக்குள்ளயே போராடனப்ப எங்கடா இருந்தீங்க எல்லாரும்? இப்ப நான் இவதான் எனக்கு எல்லாம்னு கம்மிட் ஆன உடனே டிசைன் டிசைன்னா சோதனை குடுக்கறீங்களேடா!’ என நொந்துப் போனார்.

எவ்வளவு சொல்லியும் மீரா சாமுவேலை பார்ப்பதை நிறுத்தவில்லை. இன்னும் அவருடன் மாதத்துக்கு இரு முறையாவது வெளியே செல்கிறார். அவரைப் பார்க்கும் போது அடை, கேசரி, புட்டு இப்படி எதாவது செய்து வேறு எடுத்து செல்கிறார். அதற்கு பதிலாய் சாமுவேல், இவருக்கு இந்திய இனிப்புகள், கஸ்டர்ட், கேபாப் போன்ற ஐட்டங்களை வாங்கி கொடுத்து விடுவார். அதை மீரா சாப்பிடுவதற்குள் வெங்கியே சாப்பிட்டு முடித்து விடுவார். வெங்கியின் சின்னப் பிள்ளைத்தனத்தைப் பார்த்து கோபமாக முறைத்தாலும் ஒன்றும் கடிந்து சொல்லாமல் விலகி விடுவார் மீரா. மொத்தத்தில் வெங்கியின் வாழ்க்கையில் நேதனும் சாமுவேலும் மாறி மாறி கபடி விளையாடினார்கள்.

மீரா பத்து நிமிடங்களிலே சேலையுடுத்தி அழகாக வந்து நின்றார். குட்டி தாமரைப் பூக்கள் உடலெல்லாம் விரவிய சந்தன கலர் புடவை. மீராவை சேலையில் பார்த்ததும் வெங்கிக்கு உடலெல்லாம் பரவச அலை அடித்தது.

“ஒரு சின்னத்தாமரை என் கண்ணில் பூத்ததே” என மெல்லப் பாடினார் வெங்கி.

“வயசாகுதுல்ல, கண்ணுல பூ விழுந்துருக்கும். கண்டிப்பா டாக்டர பாருங்க சார்” என்றபடியே வாசலுக்கு விரைந்தார் மீரா.

“ஓய், என்ன நக்கலா? கண்ணுலாம் நல்லா கிளியராதான் வேலை செய்யுது!”

மிரட்டி சேலையை மாற்ற வைத்த வெங்கி மீது செம்ம கடுப்பில் இருந்தார் மீரா. கவுனுக்காக செய்திருந்த ஹேர்ஸ்டைலை கலைத்து அவசர அவசரமாக சடை வேறு போட வேண்டியதாகி விட்டது.

“ஓஹோ! கண்ணாடிய கலட்டிட்டு, நான் விரல காட்டுறேன் என்ன நம்பர்னு சொல்லுங்க சார். அப்புறம் ஒத்துக்கறேன் இது நல்ல பார்வையா இல்ல நொள்ள பார்வையான்னு” என சவாலாக கேட்டார். இருவருக்கும் பத்தடி தூரம் இருந்தது.

“கரேக்டா சொல்லிட்டா என்ன தருவ?” என கேட்டப்படியே கண்ணாடியை ஸ்டைலாக மேல் தூக்கி தலையில் பொருத்திக் கொண்டார் வெங்கி.

“என் கிட்ட இருந்து கட்டிப்பிடி வைத்தியம், முத்தம் இதெல்லாம் கேக்காம வேற எதாச்சும் கேளுங்க. கண்டிப்பா தரேன்” என உஷாராக சொல்லி வைத்தார் அவர்.

“சரி, டீல்”

‘என்ன பொசுக்குன்னு ஒத்துக்கிட்டாரு. எதுக்கும் இன்னும் கொஞ்சம் தூரமா போய் நிப்போம்’ என நினைத்தவர் இன்னும் தள்ளி போய் நின்றுக் கொண்டார். வெங்கிக்கு சிரிப்பு வரப் பார்த்தது அடக்கிக் கொண்டார். நிறைய படிப்பதால், கம்ப்யூட்டரே கதி என கிடப்பதால் கிட்டப் பார்வை மட்டும்தான் அவருக்குப் பிரச்சனை. தூரப் பார்வை நன்றாகவே தெரியும். இது அறியாமல் மீரா பந்தயம் கட்டி பலி ஆடாய் ஆனார்.

“சரி விரல காட்டு, கண்ணு தெரியுதா இல்லையான்னு பார்க்கறேன்” என்றார் வெங்கி.

நடுவில் மூன்று விரல்களையும் மடக்கி, இரண்டு விரல்களைக் காட்டினார் மீரா.

“சரியா தெரியல, இன்னும் கொஞ்சம் கிட்ட வா” என படம் காட்டிய வெங்கி, இரண்டு என கரெக்டாக சொன்னார்.

“ரெண்டு இல்ல மூனு!” என அவசரமாக இன்னொரு விரலை நிமிர்த்தினார் மீரா.

வாய்விட்டு சிரித்தார் வெங்கி.

“பொய்க்காரி! உள்ளுக்குள்ள பொய் வேஷம் போடறது பத்தாதுன்னு இப்ப வாயிலயும் பொய் வருது. சரி விடு! விரல ஏத்தி மடக்கி ஏமாத்துற அதனால இங்கே இருந்தே மத்தது எல்லாம் சொல்லவா?”

“எ…என்ன மத்தது? என்ன சொல்லப் போறீங்க?” பதட்டத்துடன் கேட்டார் மீரா.

“என்னன்னவோ சொல்லலாம்! உன் கழுத்து கிட்ட குட்டியா ஒரு மரு இருக்கே அத பத்தி சொல்லலாம். அந்த மருவுல குட்டி குட்டியா ப்ரௌன் கலர்ல பூனை முடி இருக்கே அதப்பத்தி சொல்லலாம்.”

தூரமாய் நின்றுக் கொண்டே துள்ளியமாகப் பார்த்து சொல்லும் வெங்கியை நினைத்து மீராவுக்கு வியர்த்து வழிந்தது.

‘இந்தாளு இப்பத்தான் பாத்து சொல்லுதா! இல்ல ஏற்கனவே பார்த்தத சொல்லுதா?’

“போதும், போதும் போகலாம் சார்”

என வெங்கிக்கு முதுகு காட்டி கதவைத் திறக்கப் போனார் மீரா.

“நில்லு மீரா!”

மெல்ல நடந்து வந்த வெங்கி மீராவுக்கு மிக அருகில் நின்றார். அவர் சடைப் போட்டு அதை முன்னே இழுத்து விட்டிருந்ததால் ரவிக்கை மறைக்காத முதுகின் பாகம் பளிச்சென தெரிந்தது வெங்கிக்கு.

“மீரா, உன் முதுகுல என்னமோ டிசைன் போட்டு நீ பச்சை குத்திருக்கன்னு தெரியுது! ஆனா ரவிக்கை மறைச்சதுல கொஞ்சமா தான் தெரியுது. ஏற்கனவே மறைஞ்சும் மறையாமலும் இருக்கும் அந்த பச்சையை பல முறை பார்த்திருக்கேன். என்ன டிசைனா இருக்கும்னு தூங்காம பல ராத்திரி ஆராய்ச்சிலாம் பண்ணியிருக்கேன்.”

அவரின் மூச்சுக்காற்று முதுகில் பரவ மெல்ல நடுங்கிய மீரா,

“எதுக்கு தேவை இல்லாத இந்த ஆராய்ச்சிலாம் சார்?” என கேட்டார்.

“ஹ்ம்ம்! இந்த ஜென்மத்துல எனக்கு அந்த பச்சைய பார்க்க சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல. என்ன டிசைன்னு சொல்லேன்! கர்ப்பனையிலயாச்சும் பாத்துக்கறேன்!” என ஆசையாக கேட்டார் வெங்கி.

“அது வந்து..”

“சொல்லு மீரா! ஒரு வருஷ மண்டை வலி இது. ப்ளிஸ் சொல்லு”

“மீரா கையில வச்சிருப்பாங்களே தம்புரா அதை தான் சின்னதா பச்சையா குத்திருக்கேன். எங்க ஊருல ஒரு பாட்டி இந்த பச்சை குத்துற தொழில் செய்யுறாங்க. மனசு ரொம்ப பாரமா இருந்தப்போ, போய் குத்திட்டு வந்தேன். யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தான் முதுகுல குத்துனேன். அதை நீங்க கவனிச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல”

‘இந்த ஒரு வருஷமா உன்னை கவனிக்கறத தானே என் வேலையாவே வச்சிருந்தேன். அது கண்ணுல படாம போகுமா! அந்த தம்புராவ மீட்ட எனக்கு எப்ப டைம் வரும்னு தெரியலயே!’

“ஜெயிச்சா கேட்டத செய்யறேன்னு சொன்னியே மீரா!” வெங்கியின் குரலில் வெல்வெட்டையும் மீறிய வளவளப்பு.

“சொல்லுங்க” அவர் நகர்ந்து நின்றால் போதும் என்பது போல இருந்தது மீராவுக்கு. வெங்கி பேச பேச சூடான மூச்சு முதுகை வருடுவதை அவஸ்தையாக அனுபவித்தார் மீரா. அதில் இருந்து விலக வேகமாக கதவைத் திறந்தார். லேசான குளிர்ந்த காற்று மேனியைத் தடவி சென்றது. இருவருமே வெளியே இறங்கி நின்றார்கள்.

தன் கையை மீராவின் புறம் நீட்டினார் வெங்கி.

“என்ன?” என புரியாமல் பார்த்தார் மீரா.

“ஹேரி வீட்டு வரைக்கும் என் கைவளைவுல நடந்து வரனும்.”

“முடியாது சார்”

“ஏன் முடியாது? நான் கட்டிப்பிடிக்க சொல்லல, கிஸ் அடிக்க சொல்லல. கையைத் தானே பிடிக்க சொன்னேன்? இப்படி டீல டீல்ல விடறவங்களாம் டீலுக்கு வரக்கூடாது!” பொரிந்தார் அவர்.

“சரி, சரி. சத்தம் போடாதீங்க” என வேகமாகத் தன் கையை வெங்கியின் கையுடன் கோர்த்துக் கொண்டார் மீரா. முகத்தில் புன்னகை விரிய, மீராவை நெருக்கியபடி நான்கு வீடு தள்ளி இருந்த ஹேரியின் வீட்டுக்கு பதினைந்து நிமிடம் ஆகும்படி மெதுவாக நடந்தார் கேடி வெங்கி.

ஹேரியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தவும், நேதன் தான் வந்து கதவைத் திறந்தார். மீராவைப் பார்த்ததும் பல்ப் போட்டது போல அவர் முகம் மலர்ந்தது.

“வெல்கம் ஹனி. கம், கம்!” என வெங்கியின் கரத்தில் இருந்து மீராவின் கரத்தைப் பறித்தவர், உள்ளே அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

“வீங்கிப் போன செனைப்பன்னி மாதிரி இருந்துகிட்டு, என் ஆள ஹனி ஹனின்னு கொஞ்சுறான்”வாய் விட்டே முனகினார்.

“கேப்பா!” என ஓடி வந்து வெங்கியின் காலைக் கட்டிக் கொண்டான் ஹேரி.

“ஹேப்பி பேர்த்டே ஹேரி டார்லிங்”

“தேங்க்ஸ் கேப்பா!” சேன்ட்ராவும் ஜோனும் வாசலுக்கே வந்து வெங்கியை வரவேற்றார்கள்.

உள்ளே நுழைந்த வெங்கி, மீரா எங்கே என அலசினார். அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அருகே அமர்ந்திருந்தார் நேதன். நேதன் கையை ஆட்டி ஆட்டிப் பேச மீராவும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இவர் அவசரமாக மீராவின் இடதுப் பக்கம் போய் அமர்ந்து கொண்டார். வெங்கியின் தோளில் இருந்த ஹேரி மீராவிடம் தாவினான்.

“கேம்மா!”

அவன் அப்படி அழைக்கவும் நேதனுக்கு ஒரே குஷி. பேரனை ஆசையாக அவர் தூக்க வர, அவனோ வர மாட்டேன் என தலையை ஆட்டினான். பிறந்ததில் இருந்து கண்டு கொள்ளாத புது தாத்தா தூக்க வந்தால் அவனும் என்னதான் செய்வான்.

மீரா லேசாக இருமவும்,

“ஐல் கெட் யூ ட்ரிங்க், சுகர்(சீனின்னு கொஞ்சுறாராம்).” என எழுந்து போனார் நேதன்.

அவர் போனதும், ஹேரியும் அவனது நண்பர்களைப் பார்க்க ஓடிவிட்டான்.

“அவன் சுகர், ஹனி, பன்னு, கேக்குன்னு கொஞ்சுறான்! நீயும் ஈன்னு இளிச்சிட்டு உட்கார்ந்துருக்க” குமுறினார் வெங்கி.

சிரித்த முகமாக வெங்கியின் புறம் திரும்பிய மீரா குரலில் மட்டும் ஆத்திரத்தைக் காட்டி,

“கதவுல இருந்து இங்க நடந்து வர உனக்கு ஒன்பது மணி நேரம் எடுக்குதா? சீக்கிரமா வந்து தொலைய வேண்டியதுதானே! வயசுக்கு மரியாதை குடுத்தா இந்த நேதன் பூதன் என் காதை ஓட்டைப் போட்டு ஒட்டியாணம் சுத்துறான். காப்பாத்த வருவன்னு பார்த்தா அங்கயே ஜெர்க்காகி நின்னுட்டு, இப்ப வந்து சவுண்டு விடற! அதிரிபுதிரியாகிரும் சொல்லிட்டேன். இனிமே இந்த இடத்த விட்டு நகரக் கூடாது.” கோபம் அளவுக்கதிகமாக தன் ஊர் பாஷையை தெறிக்க விட்டார் மீரா.

“அதிரிபுதிரியா!”

“ஆமா! தோ வரான் பாரு! ஒழுங்கா அவன் ஜொள்ளு மழையில இருந்து என்னைக் காப்பாத்து!”

“காப்பாத்தனும்னா ஒரு வழிதான் இருக்கு. நான் என்ன சொன்னாலும் செஞ்சாலும் நீ பேசாம இருக்கனும்”

“அதெல்லாம் முடியாது”

“அப்போ நல்லா அனுபவி! வரான் பாரு வைன்னோட. இன்னிக்கு உன் வாயில ஊத்திவிடாம போக மாட்டான். நீயும் குடிகாரி ஆகப்போற! அது மட்டும் நடந்துச்சுன்னா உன் குலசாமி மண்டக் கருப்பன் உன்னை மன்னிக்கவே மாட்டாரு பாத்துக்கோ”

“யோ வெங்கி, ஒரே நாட்டுக்காரங்கய்யா நாம. உன் நாட்டுப் பொண்ணுக்கு ஒரு இழுக்கு வரப்போ பாஞ்சி நின்னு மானத்த காப்பாத்தனும்யா!”

“பாஞ்சி நிக்கற வயசெல்லாம் ஓடிப்போச்சு! சாஞ்சி வேணும்னா உட்காரலாம்” என்றவர் மீராவின் தோளில் கைப்போட்டுக் கொண்டு அவர் மீது பாதி சாய்ந்த மாதிரி அமர்ந்துக் கொண்டார்.

அருகில் நெருங்கிய நேதனுக்கு முகம் மாறி விட்டது.

“வா மீரா சாப்பிட போகலாம்” என ஆங்கிலத்தில் அழைத்தார்.

வெங்கியோ,

“நானும் என் பியான்சியும் அப்புறம் சாப்புடறோம் நேதன். நீங்க மத்த கெஸ்ட கவனிங்க” என சிரித்தமுகமாக சொன்னார்.

அவர் பியான்சி என சொன்னது சேன்ட்ராவுக்கும் ஜோனுக்கும் கூட கேட்டுவிட, சந்தோஷமாக இவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.

“எனக்கு அப்போவே தெரியும் இப்படி நடக்கும்னு” என ஆங்கிலத்தில் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள் கணவன் மனைவி இருவரும்.

வந்திருந்த மற்றவர்கள் கூட இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல, அந்த இடமே மகிழ்ச்சியாக மாறியது.

கோபத்தில் முகம் சிவந்து விட கஷ்டப்பட்டு புன்னகைத்த மீராவை, வெட்கத்தில் முகம் சிவக்கிறார் என எல்லோரும் கேலி பேசி மகிழ்ந்தார்கள். வெங்கியோ இதுதான் சாக்கு என தோளில் போட்ட வலது கையை எடுக்கவே இல்லை. வைனை கூட இடது கையில் பிடித்தே குடித்தார்.

இந்த சந்தோஷ களேபரத்துக்கு சற்றும் பொருந்தாமல் நேதன், ஒரு ஓரத்தில் சோகமாக அமர்ந்திருந்தார். மனதில் வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் எனும் பாடல் ஆங்கிலத்தில் லைபே இலுஷன் திஸ் லைப்பே இலுஷன் என ஓடிக் கொண்டிருந்தது.

கவியும் மணியும் வந்து சேர, கேக் வெட்டும் வைபவம் இனிதே ஆரம்பித்தது. ஜோனின் பெற்றவர்களுக்கு முதலில் ஊட்டிய ஹேரி, வெங்கிக்கும் மீராவுக்கும் தான் அடுத்து ஊட்டினான். கேட்டரிங் செய்யப்பட்டிருந்த உணவு வகைகளை ப்ளேட்டில் எடுத்துக் கொண்டு அங்கங்கே போடப்படிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கை ஏந்தியபடியே சாப்பிட்டார்கள் அனைவரும்.

“என்னப்பா நீங்க எங்கேஜ் பண்ணிட்டீங்கன்ற விஷயம் சேன்ட்ரா சொல்லிதான் எனக்குத் தெரியுது. கல்யாணத்துக்காச்சும் என்னைக் கூப்பிடுவீங்களா மாட்டீங்களா?” என கிண்டலடித்தாள் கவி.

மணியை உரசியபடியே அமர்ந்திருந்தாள் அவள். விட்டால் அவன் மடியிலேயே அமர்ந்துக் கொள்பவள் போல் ஈசிக் கொண்டே இருந்தாள். மணியின் சைலண்ட் ட்ரீட்மெண்ட் சரியாக வேலை செய்திருந்தது. அன்றிலிருந்து அவனை விட்டு அங்கே இங்கே நகரவில்லை அவள். தூங்க மட்டும்தான் தனதறைக்கு வந்தாள், அதுவும் மணி துரத்தி விடவும்தான்.

மணி பேச்சைக் குறைக்க இவள் அதிகம் பேச ஆரம்பித்தாள். மணி ஒதுங்கி போக, இவள் நெருங்கி வர ஆரம்பித்தாள். இவனும் ரொம்பவும் பிடி கொடுக்காமல் ஓரளவு தள்ளி தான் நிறுத்தினான். அவன் இறங்கி வந்தால்தான் இவள் முறுக்கிக் கொள்வாளே!

“நீ இல்லாம எங்க கல்யாணமா? பெத்த அப்பா கல்யாணத்தை நேருல பாக்கற பாக்கியம் எத்தனை பேருக்கு அமையும் சொல்லு! உனக்கு அது கிடைக்கனும்னு நல்லா வேண்டிக்கோ ஹனிபனி”

“ஓஹோ! இன்னும் வேண்டிக்கற நிலமைல தான் இருக்கா?” என சிரித்தான் மணி.

“நான் ஐஸ்க்ரீம் எடுக்கப் போறேன்!” என எழுந்தார் மீரா.

அவர் எழவும் நேதனும் அவரிடம் இன்னொரு முறை பேசிப்பார்க்கலாமே என எழுந்தார்.

“எழுந்து போ, அவனே ஐஸ்க்ரீம் ஊட்டி விடுவான்” என மிரட்டிய வெங்கி, மீராவின் கைப்பிடித்து மீண்டும் அமர்த்தினார். பின் தானே போய் மீரா விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீமை எடுத்து வந்தார்.

சாப்பிட்டு, ஹேரிக்கு பரிசு கொடுத்து வீட்டுக்குப் புறப்பட்டனர் இரு ஜோடிகளும். கவி மட்டும் பேசிக் கொண்டே வர, மற்ற மூவரும் அமைதியாக வந்தனர்.

சின்ன ஜோடிகள் தத்தம் தங்களது அறைக்குள் அடைக்கலமாக வெங்கி டீவியைப் போட்டு அமர்ந்தார். மீரா கிச்சனுக்குள் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.

“தூங்கப் போகல?” திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்ட மீரா,

“இனிமேத்தான் போகனும்” என பதில் அளித்தார்.

“என்னாச்சு? கண்ணெல்லாம் கலங்கன மாதிரி இருக்கு?” என கேட்டார் வெங்கி.

“எல்லாம் உங்களாலதான்” குரலில் அழுகை இருந்தது.

“என்ன மீரா இது! இனிமே அவன் உன் கிட்ட வரக்கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன்! அதுக்குப் போய் ஏன் அழற? உன்னோட மறுப்பு எனக்கு நல்லாவே புரியுது மீரா! நான் எதுக்கும் உன்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன். எப்போதும் போல இரும்மா. அழுகையில மூக்கு சிவந்து, கன்னம் உப்பி, கண்ணு வீங்கி பார்க்கவே நல்லா இல்ல.” என சொல்லியவர் அருகே வந்து கன்னத்தைத் துடைத்து விட்டார். மீராவிடம் இருந்து மறுப்பில்லாமல் போகவும், தலையைக் கோதிக் கொடுத்தவர் மீராவின் முகத்தைத் தன் மார்பில் அழுத்திக் கொண்டார்.

“நெஞ்சு துடிக்கறது கேக்குதா மீரா? லப் டப் லப் டப்னு துடிக்காம மீர லப், மீரா டப்னு துடிக்கிறது கேக்குதா?” இன்னும் மீராவின் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக் கொள்பவர் போல அழுத்தினார்.

“என்னைக் கட்டிகோயேன் மீரா! என்னைப் பார்த்தா பாவமா இல்லயா? சிரிச்ச முகமா சுத்துனாலும், நீ வேணாம்னு சொன்னது உள்ளுக்குள்ள ரொம்ப வலிக்குது. இந்த வயசுல வர காதல் ரொம்ப ஆழமானது தெரியுமா மீரா! சின்ன வயசுல காதல் கலர்புல்லா வரும். கல்யாணம் ஆகி குழந்தை குட்டி, சம்பாத்தியம்னு ஓடிகிட்டே இருக்கறப்போ ஆம்பளைக்கு காதலே மறந்து போயிடும். அங்க கடமை உணர்ச்சி மட்டும்தான் இருக்கும். ஆடி அடங்கி வாழ்க்கையில ஓஞ்சி போறப்பத்தான் காதல் மனைவிய மனசு தேடும். ஐயோ இவ்வளவு காலத்தையும் இப்படி ஒன்னும் இல்லாததுக்கு வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு மனசு பதறி போகும். அதுவும் அப்ப தோள் சாய மனைவின்னு ஒருத்தி இல்லாம போயிட்டா அவன் வாழ்க்கையே நரகமாயிடும். இப்படி நீ தள்ளிப் போகறது என் வாழ்க்கையை நரகமாத்தான் ஆக்குது மீரா. சரியா தூங்கவே முடியல. கட்டிப்பிடிச்சுப் படுத்துக்க நீ வேணும்னு தோணுது”

நிமிர்ந்து மீரா முறைக்கவும்,

“தப்பா எடுத்துக்காதே மீரா! இந்த கட்டிப்பிடி காமம் சார்ந்தது இல்ல, காதல் சார்ந்தது, அன்பு சார்ந்தது, பாசம் சார்ந்தது.”

நிமிர்ந்த முகத்தை மீண்டும் வெங்கியின் நெஞ்சில் புதைத்துக் கொண்டார் மீரா. தானாகவே அவர் அப்படி செய்யவும் சனி கிரகம் மற்ற கிரகங்களை விட லைட்டாக இருப்பதைப் போல வெங்கியின் மனமும் லைட்டாக பறந்தது. (சனி வந்து விட்டது, கவனிக்கவும்!)

“என்னடா காதல், பாசம், அன்பு அப்படின்னு மட்டும் சொல்லுறானே, அப்போ கல்யாணம் ஆனா நமக்குள்ள ஜிகுஜிகுச்சா இருக்காதோன்னு நீ தப்பா நெனைச்சுக்கக் கூடாது பேபி. மேட்டர் மட்டும் தங்குதடை இல்லாம நடக்கும் செல்லம். ஏன்னா ஐம் ஜஸ்ட் ஃபார்ட்டி நைன்!” என கண்ணடித்தார் வெங்கி.

அதற்கு பிறகும் உடம்பு வீங்காமலா போய் படுத்திருப்பார் வெங்கி?

 

(கொட்டும்)