SSKN — epi 14

அத்தியாயம் 14

 

இதயத்தைப் பறித்ததற்கா

என் ஜீவன் எடுக்கிறாய்?

 

 

தென்றல் மெல்ல மேனி தழுவ விரித்திருந்த பாயில் கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்திருந்தார் வெங்கி. அவருக்கு சற்று தள்ளி மீரா, மாலை நேர காற்றை அனுபவித்தப்படி அருகே தெரிந்த கிரிஸ்டல் லேக் என அழைக்கப்படும் ஏரியை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அவர்களுக்கு நடுவே ஹேரி லேகோவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

நேதனுக்கு உடம்பு முடியாமல் போகவும் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். ஸ்ப்ரிங் சீசன் வந்தாலே வயதானவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பிரச்சனைகளும் சேர்ந்தே வரும். புதிதாக செடி கொடிகள் மொட்டு விட்டு பூக்க ஆரம்பிப்பதால் கண்ணுக்குத் தெரியாத அதன் தூசிகள், உயிரணுக்கள் மனிதனின் சுவாசத்துக்கு ஊறு விளைவிக்கும். அலர்ஜி, மூக்கடைப்பு, ஆஸ்மா என பல வியாதிகள் இந்த சீசனில் வந்து சேரும். நல்ல உடல் நலம் உள்ளவர்களை இது தாக்காவிட்டாலும், வயதானவர்கள் பாடாய் பட்டுப் போவார்கள். நேதனும் மூச்சு விட சிரமப்படவும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்கவே மகளுக்கும் மருமகனுக்கும் நேரம் சரியாக இருந்ததால், ஹேரி வெங்கியின் வீட்டிலே சில நாட்கள் தங்கி இருந்தான்.

வீட்டிலே அடைந்துக் கிடப்பதால் மீராவை அவன் போட்டுப் பாடாய் படுத்தி எடுத்தான். கொஞ்ச நேரம் கூட மீராவால் அக்கடாவென உட்கார முடியவில்லை.

“கேம்மா, லெட்ஸ் ப்ளே! கேம்மா லெட்ஸ் சிங்! கெம்மா லெட்ஸ் டான்ஸ்! கேம்மா பசிக்குது! கேம்மா என் கலர காணோம்! கேம்மா ஜூஸ் வேணும்!” என ஒரே கேம்மா மயமாக இருந்தது. வெங்கி விளையாட்டுக் காட்டி திசைத் திருப்பினாலும், மீண்டும் கேம்மாவிடமே போய் நின்றான் சின்னவன். இரவிலும் மீராவிடமே படுப்பேன் என்றவன் பல தடவை பாத்ரூம் போக வேண்டும் என தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி அட்டகாசம் செய்தான்.

அவனிடம் பொறுமையாக இருந்த மீரா, எடுத்ததுக்கெல்லாம் வெங்கியிடம் பாயவும் மனிதன் பயந்துப் போனார்.

‘ஒரு காபி கேட்டா கூட கிஸ் கேட்ட மாதிரி வள்ளுன்னு விழறாளே! காபிக்கு பதில் கிஸ்சே கேட்டுருக்கலாமோ!’ என நொந்துப் போனார் வெங்கி.

கவியும் மணியும் லாப்டோப்பே கதியென கிடக்கவும் வெங்கியும் மீராவுமே ஹேரி புயலால் அதிகமாகத் தாக்கப்பட்டனர். அவனுக்கோ பட்டியில் இருந்து அவிழ்த்து விடபட்ட ஆடு போல ஒரே குஷி. வெங்கியும் மீராவும் பாசமாகப் பார்த்துக் கொள்வதால் சென்ட்ரா கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள். சில நாட்களாக முழு நேரமும் கேம்மா, கேப்பா அரவணைப்புக் கிடைக்கவும் குட்டி ஆடு ஆட்டமாய் ஆடியது.

மீராவின் களைத்த தோற்றம் தாங்காமல், ஸ்ப்ரீங் ஆவது ஒன்னாவது என இருவரையும் கிளப்பிக் கொண்டு வெளியே வந்துவிட்டார் வெங்கி. ஓடி ஆடி விளையாடியவன், இப்பொழுதுதான் ஓர் இடத்தில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தான். பின் லேகோவை வைத்து விட்டு மீராவை நெருங்கினான் ஹேரி.

“கேம்மா”

“என்னடா?”

“தூக்கம்!”

“களைச்சுப் போச்சா? ஒரு இடத்துல நின்னு விளையாடுனா தானே! வால் அறுந்த குரங்காட்டம் அங்கயும் இங்கயும் தாவறது!” செல்லமாக வைது கொண்டே குட்டி தலையணையை வெங்கியின் அருகே வைத்துப் படுக்க சொன்னார் மீரா.

“கால் வேணும்” என சொல்லியவன் மீராவின் நீட்டி இருந்த காலில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். மரத்தில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்ட மீரா, அவனை மடியில் சரியாகப் படுக்க வைத்தார். மெல்ல தலைக் கோதிக் கொடுக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் தூங்கி இருந்தான் அவன்.

அதற்கு பிறகு தான் நிமிர்ந்துப் பார்த்தார் மீரா. பார்த்தவருக்கு குப்பென வியர்த்தது. நெஞ்சத்தில் இருந்த அத்தனை ஏக்கமும் முகத்தில் பிரதிபலிக்க மீராவைப் பார்த்தவாறே படுத்திருந்தார் வெங்கி.

“எ..என்ன சார்?” லேசான தடுமாற்றம் மீராவின் குரலில்.

“ஒன்னும் இல்ல. ஏதோ ஒரு யோசனை”

என்னவென்று மீரா கேட்டவில்லை. அமைதியாக ஏரியைப் பார்த்தவாறு இருந்தார்.

“என்ன யோசனைன்னு கேட்க மாட்டியா மீரா?”

“சொல்லுங்க சார்”

“ஹேரி மாதிரி நானும் உன் மடியில படுத்துக்கிட்டா எவ்வளவு சுகமா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். ஹ்ம்ம்!” பெருமூச்சு ஒன்று எழுந்தது வெங்கியிடம். ஹேரியின் தலையைத் தடவிக் கொடுத்த மீராவின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன.

“அவனுக்கு தலைக் கோதி விடற மாதிரி எனக்கும் நீ கோதி விட்டா எவ்வளவு இதமா இருக்கும்னு நினைச்சேன். அதுக்கெல்லாம் ஒரு குடுப்பிணை வேணும். எனக்கு மட்டும் அதெல்லாம் என்னைக்கும் கிடைக்கப் போறது இல்லன்னு மேல உள்ள வில்லன் எழுதி வச்சிருக்கான்” மெல்லிய குரலில் சொன்னவர் கண்கள் இரண்டையும் அழுத்தமாக மூடிக் கொண்டார்.

மீராவுக்கு நெஞ்சம் கணத்துப் போனது.

கண் மூடிப் படுத்திருந்த வெங்கியின் மேலேயே முழு பார்வையும் இருந்தது மீராவுக்கு.

அன்று கவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்து தனதறைக்குள் நுழைந்துக் கொண்டார் மீரா. மணி வந்து அழைக்கவும் தான் சாப்பிட வந்தார். மேசையில் இருந்த யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் சாப்பிட்டவர், பின் டைனிங் டேபிளை சுத்தம் செய்து விட்டுப் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தார்.

மகளும் மணியும் ஹாலுக்குப் போய் விட மீராவின் பக்கத்தில் வந்து நின்றார் வெங்கி. மீரா பாத்திரத்தைக் கழுவ, இவர் துடைத்து அடுக்கி வைத்தார். வேண்டாம் என மீரா வாய் வார்த்தையாக கூட சொல்லவில்லை. அமைதியாகவே வேலையைப் பார்த்தனர் இருவரும்.

“மீரா, ஒரு கப் காபி வேணும்”

தலையை சரி என ஆட்டிய மீரா, வெங்கிக்குப் பிடித்தப் பதத்தில் காபியை கலக்கி அவர் விரும்பி குடிக்கும் கப்பில் ஊற்றிக் கொடுத்தார். அந்த கப்பில் ‘எங்கள் காலத்தில் ஒன்பது ப்ளேனெட்கள் இருந்தன’ என ஆங்கிலத்தில் எழுதி இருக்கும். இப்பொழுதுதான் ப்ளூட்டோ ப்ளேனெட் இல்லை என சொல்லி ஒன்பதை எட்டாக்கி விட்டார்களே.

காபியை அருந்தியவாறே மீராவை நோட்டமிட்டார் வெங்கி.

“என்னாச்சு மீரா? ஏன் அமைதியா இருக்க?”

ஒன்றும் இல்லையென தலையை மட்டும் ஆட்டினார் மீரா.

“என் கிட்ட பேச கூட பிடிக்கலையா?”

கவி கேட்ட கேள்வியின் தாக்கத்தில் இருந்தவருக்கு வெங்கியிடம் பேச முடியவில்லை. வாயைத் திறந்தால் அழுது விடுவோமோ என வாயை இறுக்க மூடிக் கொண்டார்.

“மீரா!”

திரும்பி உள்ளே போக முனைந்தவரின் கைப்பற்றி நிறுத்தினார் வெங்கி.

“மீரா! என்னால இன்னும் இந்த பொம்பளைங்கள புரிஞ்சிக்க முடியலடி! கீதா, கவி இப்போ நீ! அண்ட சராசரத்தை அக்குவேரா ஆணிவேரா அலசி ஆராய்ஞ்சி அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு என்னால கரெக்டா சொல்ல முடியுது. ஆனா முந்தானை மறைச்சிருக்குற ஒரு பொண்ணோட மனசுக்குள்ள என்ன நடக்குதுன்னு ஒரு மண்ணும் விளங்க மாட்டுது. என்னைப் பிடிக்கலையா, சரி விடு. நான் தான் வற்புறுத்த மாட்டேன்னு சொல்லிட்டேனே! அப்புறமும் ஒரு பேச்சு, ஒரு சிரிப்புக்கு என்னடி பஞ்சம்? வேலை முடிஞ்சு உன் அழகான முகத்துல அழகா பூக்கும் புன்னகையப் பார்க்கனும்னு ஆசையா ஓடி வரேண்டி. இப்படி முகத்த சோகமா வச்சிக்கிட்டா எனக்கு எப்படி நிம்மதியா தூக்கம் வரும் சொல்லு!”

கண்ணில் நீர்  இறங்கியது மீராவுக்கு.

“அழாதடி, அழாதே! கவிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டு, உன் வாழ்க்கைக்கும் ஒரு வழி பண்ணிக் குடுத்துட்டு நான் எங்கயாச்சும் தொலைஞ்சு போறேன்! அது வரைக்கும் என்னை சகிச்சுக்கிட்டு இரு” ஆத்திரத்தில் கத்தியவர் மீராவின் கையை விட்டுவிட்டு எழுந்துப் போய் விட்டார். கிச்சன் ஓரத்தில் நின்று இதையெல்லாம் கவனித்தப்படி இருந்தாள் கவி.

அன்றிரவு நடுநிசியில் மீராவின் அறை கதவு தட்டப்பட்டது. அழுது அழுது அப்பொழுதுதான் தூங்கி இருந்த மீரா எழுந்துப் போய் கதவைத் திறந்தார்.

“என்ன கவி? எதாச்சும் வேணுமாமா?”

“நீங்கதான் வேணும்” என்றபடி உள்ளே வந்தாள் கவி.

கட்டிலில் போய் அமர்ந்தவள்,

“வந்து உட்காருங்க மீராம்மா” என அழைத்தாள். மீரா வந்து அமரவும், அவர் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டாள் கவி. அவரையும் அறியாமல் தானாகவே மீராவின் கைகள் கவியின் நெற்றியை வருடிக் கொடுத்தன.

“என்ன கவி? தூக்கம் வரலியா?” என கேட்டார் மீரா.

“மனசு சரியில்ல மீராம்மா!”

“என்னாச்சுடா?”

“அம்மா ஞாபகம் வந்துருச்சு” கவியின் கண்ணில் இருந்து வெளியேறிய கண்ணீர் மீராவின் தொடையை நனைத்தது.

அவளின் கன்னத்தைத் துடைத்தவர்,

“அழாதே கவி! அம்மாவோட இடத்த யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பாசமான அம்மா கிடைக்கறது எல்லாம் நாம் பண்ண புண்ணியம். இப்ப அவங்க இல்லைன்னாலும் அவங்க காட்டுன பாசம் உனக்குள்ளத்தானே இருக்கு. அதை மீட்டிப் பார்த்து மனசை சந்தோஷமா வச்சிக்கனும். நீ அழுதா அவங்களுக்குத் தாங்குமா சொல்லு” மெல்ல அவளைத் தேற்றினார் மீரா.

“நான் எவ்வளவோ மீண்டு வந்துட்டேன் மீராம்மா! அப்பா தான் இன்னும் அப்படியே இருக்காறோன்னு எனக்கு மனசு கவலையா இருக்கும்”

மீரா அமைதியாகவே இருந்தார்.

“இத்தனைக்கும் ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசிக் கூட நான் பாத்தது இல்லை. இருந்தும் அவங்க இறந்து, இப்ப வரைக்கும் அப்பா தனக்குன்னு ஒரு துணை தேடிக்காம தனியாத்தான் இருக்காரு”

“ரெண்டு பேரும் சிரிச்சுக் கூடப் பேசனது இல்லையா?” தானாகவே கவியின் வலையில் விழுந்தார் மீரா.

“ஆமா மீராம்மா. உங்களுக்கு முதல்ல இருந்து சொன்னதான் புரியும். எங்க காவிய கதைய கேக்கறீங்களா? இல்லைனா பரவாயில்ல, நான் போறேன்! உங்க கிட்ட சொன்னா எனக்கு மனசு பாரம் நீங்கன மாதிரி இருக்கும்னு தான் இங்க வந்தேன்”

“சொல்லும்மா! நான் கேட்கறேன்”

“அப்பா ஜீனியஸ்னு உங்களுக்குத் தெரியும் தானே?”

ஆமென தலையாட்டினார் மீரா. ஆனால் எந்த வித புத்திசாலித்தனத்தையும் தன்னிடம் காட்டாமல், விளையாட்டுப் பிள்ளையாய் சிரிக்கும் வெங்கிதான் இவருக்குப் பழக்கம். காதலை சொல்லும் முன் சிடுசிடு வெங்கி, சொல்லியபின் சிரித்த மூஞ்சி வெங்கி. வேறு எந்த முகத்தையும் வெங்கி இவரிடம் காட்டியதில்லை.

“இருபது வயசுலயே அவர் சப்மிட் பண்ண ஆராய்ச்சி பேப்பர் ஒரு கலக்கு கலக்கிருச்சு. வெளிநாட்டுல இருந்து வேலைக்கு ஆஃபர் வந்தது. அப்பாவும் ஒத்தக்காலுல நின்னாரு அமெரிக்கா போக. என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒரே பயம், எங்கடா பையன் யாராயாச்சும் இழுத்துட்டு வந்துருவானோன்னு. உடனே கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவெடுத்துட்டாங்க”

“இருபது வயசுலேயா?”

“ஆமா! பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கிட்டாங்க. எங்கம்மாவுக்கு அப்போ பதினெட்டு வயசுதான். ஏதோ சுமாரா படிச்சிருந்தாங்க. ஆனா ரொம்ப அழகா இருப்பாங்க. அப்பாவும் ஆசைப்பட்டுத்தான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்”

‘ஹ்க்கும்! அழகா இருக்கவும் அப்படியே தொபுக்கடீர்னு கவுந்துருப்பாரு உங்கப்பா’ மனதுக்குள்ளேயே நொடித்துக் கொண்டார் மீரா.

“அவங்க எப்படி வாழ்ந்தாங்க நான் எப்படி பொறந்தேன் இதெல்லாம் எனக்குத் தெரியாது மீராம்மா. ஆனா நான் ஒத்த புள்ளைதான் அவங்களுக்கு. அம்மாவுக்கு நான் பொறந்ததே பெரிய விஷயமாம். அடிக்கடி வயிறு வலி வருமாம். மந்த்லி வரப்போ ரொம்ப கஷ்டப்படுவாங்களாம். அப்புறம் தான் பைப்ரோய்ட்ஸ் கட்டி கர்ப்பப்பையில நிறைய இருக்குன்னு கண்டுப்பிடிச்சாங்க. ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணாங்களாம். ஆனாலும் திரும்ப திரும்ப வந்துச்சாம். அப்புறம் கர்ப்பப்பையையே எடுத்துட்டாங்க.”

“எதனால அம்மா இறந்தாங்க கவி?”

“கர்ப்பப்பை எடுத்தப் பிறகு ரிக்கவர் பண்ண ரொம்ப நாள் ஆச்சு. அப்புறம் கூட நல்லாத்தான் நடமாடிட்டு இருந்தாங்க. ஆனா யூரினரி இன்பெக்‌ஷன் இருந்துருக்கு. இவங்க எப்பவும் வர வலி தானேன்னு அப்படியே விட்டுட்டாங்க. திடீர்னு ரொம்ப காய்ச்சல் வந்து அட்மீட் பண்ணோம். ஒவ்வொரு பாகமா இன்பெக்‌ஷன் ஆகி கோமாக்கு போய் உயிர் போயிருச்சு. சாவு சடனா ஆயிருச்சு. அப்போ அப்பா லண்டன்ல இருந்தாங்க ஒரு செமினார்ல. அவர் வர வரைக்கும் வெய்ட் பண்ணி அப்புறம் எல்லாம் செஞ்சோம். அப்போத்தான் அப்பா முதன் முதலா அழுது பார்த்தேன் மீராம்மா. அதுக்கப்புறம் சட்டுன்னு தேறிக்கிட்டாங்க. எனக்காகத்தான் கவலைய மறைச்சிக்கிட்டாங்க. உங்களுக்குத் தெரியுமா மீராம்மா, நானும் அப்பாவும் ஒருத்தர் ஒருத்தர் பாசமா பேசி பழகிக்கறது எல்லாம் அம்மா இறந்ததுக்கு அப்புறம்தான்”

“என்னது?” அதிர்ச்சியானார் மீரா.

“எதுக்கு இந்த அதிர்ச்சி? எங்கப்பா, அவரு பொண்டாட்டி சந்தோஷத்துக்காக என்னை விட்டுக் குடுத்துட்டாரு”

“விட்டுக் குடுத்துட்டாரா?”

“யெஸ். அம்மாவுக்கு மிஸ்டர் வெங்கிய கண்டா பயம்”

“அவளோ டெரரா உங்கப்பா?”

சிரித்தாள் கவி.

“அவர் டம்மின்றது உங்களுக்குத் தெரியுது. ஆனா எங்கம்மாவுக்குத் தெரியலையே. அவரோட அறிவைப் பார்த்து பயம், அவரோட ஆளுமைய பார்த்து பயம், அவரோட, நடை உடை பாவனையப் பார்த்து பயம். அவர் முன்னுக்கு எது செய்யவும் பயம் அவங்களுக்கு. ஒரு வித தாழ்வு மனப்பான்மை.”

“ஓ!”

“கல்யாணம் ஆன ஆறு மாசத்துல அப்பா வெளிநாட்டுக்குப் போயிட்டாரு. அம்மாவ அழைச்சிட்டுப் போக நினைச்சா நான் வயித்துல வந்துட்டேன்னு பாட்டி விட மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். நான் பொறந்ததும் கூப்பிட்டிருக்காரு, அப்பவும் எனக்கு ரெண்டு வயசு ஆகட்டும்னு சொல்லிட்டாங்களாம்”

“இப்படி கல்யாணம் செஞ்சும் பிரிச்சு வைக்கறதுக்கு உங்கப்பா ஒரு வெள்ளைக்காரியையே கட்டி இருக்கலாம்.”

“அப்புறம் கூப்பிட்டா எங்கம்மாவே இந்தியாவ விட்டு வர மாட்டேன்னு ஒரே அழுகையாம். இவங்க எல்லாம் பண்ணற ரவுசு தாங்காம இந்தியாவுக்கே வந்துட்டாரு அப்பா. இங்கயே வேலைப் பார்த்தாலும் அடிக்கடி ட்ராவல் பண்ணுவாரு வேலை விஷயமா. திரும்பி இங்கயே வந்தப்போ எங்கப்பா இன்னும் அழகா, ஆர்ப்பாட்டமா, நுனி நாக்கு இங்லீசுன்னு வரவும் இன்னும் ஆடிப் போய்ட்டாங்க எங்கம்மா. இவர் எவ்வளவு நெருங்கியும் கீதா ஒரு வட்டம் போட்டு இருந்துகிட்டாங்க. அவருக்கு எல்லாமே செய்வாங்க, ஆனா ஒரு தயக்கம் இருக்கும்.”

“பாவம் உங்கப்பா!”

“ஆமா! எங்கம்மா எனக்கு சோறு ஊட்டுனா கூட ஏக்கமா பார்த்துட்டு இருப்பாரு. அப்போ அந்தப் பார்வைகளோட அர்த்தம் எனக்கு விளங்கல. என்னா எப்போ பாரு அம்மாவையேப் பார்க்கறாருன்னு நினைப்பேன். ஆனா இப்போ விளங்குது. பொண்டாட்டி தாயா இருந்து நம்மள தாங்குவா, காதலா இருந்து கரம் சேர்வான்னு வெங்கிக்கு கொள்ளை ஆசை போல. ஆனா கீதா செஞ்சது எல்லாமே மனைவின்ற ஒரு கடமைக்குள்ள தான் இருந்துச்சு. ஒரு தடவை நான் அவங்க ரெண்டு பேரும் பேசனத கேட்டேன் மீராம்மா”

“அடிப்பாவி! ஒட்டுக் கேட்டியா?”

“இல்லல்ல! ஸ்கூல் முடிஞ்சு வந்தப்போ அப்பா வெளிநாட்டுல இருந்து வந்துருக்காருன்னு வாட்ச்மேன் சொல்லவும் ரூமுக்கு ஓடினேன். அப்போத்தான் அந்த சண்டைய பார்த்தேன். அப்பா அவங்க கையப் பிடிச்சு கெஞ்சிகிட்டு இருந்தாரு. ‘நான் சாதாரண மனுசன் தான் கீதா. ஜீனியஸ்சா இருக்கறதனால எனக்கு கொம்பு முளைச்சிறல. எனக்குள்ளும் ஆசாபாசம் இருக்கு. இன்னும் எவ்வளவு காலம் தான் கடவுள பார்க்கற மாதிரி என்னைப் பார்ப்ப. ஒரு புருஷனா காதலா பாரு கீதா. எனக்கு அடிமையா ஒருத்தி வேணாம். எனக்குள்ள அடங்கிப் போறவதான் வேணும். நானும் மறைமுகமாவும், நேரிடையாவும் என் ஆசைய ஆதங்கத்த உன் கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். ஆனா நீ திரும்ப திரும்ப என் மனசை உடைச்சிட்டே இருக்க கீதா. உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கேன் தெரியுமாடி. என்னையும் காட்ட விட மாட்டற. நெருங்கினாலே விறைச்சுப் போன மாதிரி நிக்கறே. இன்னும் நான் எப்படிடி என்னைப் புரிய வைப்பேன். எனக்கு தாய் மாதிரி முடி கோத நீ வேணும்டி. சேயா என்னை மடி தாங்கிக்க நீ வேணும்டி. இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி என்னை சாகடிக்கப் போற’ அப்படின்னு அவரு கைப்பிடிச்சு கேட்க, இவங்க ‘என்னால முடியலையேங்க! உங்கள பார்த்தாலே உங்களுக்கு நான் சரி இல்லைன்னு காம்ப்ளேக்ஸ் தான் வருது. பேசனும்னு நினைச்சா நாக்கு மேல ஒட்டிக்கிது. காதல் வற்புறுத்தியா வர வைக்க முடியும். என் ரேஞ்சுக்கு யாரயாச்சும் கட்டி இருந்தா காதல் வந்துருக்குமோ என்னவோ! உங்க கிட்ட மரியாதை தாங்க வருது. நானும் முயற்சி பண்ணுறேன், முடியலைங்க. என்னை இப்படியே விடுங்க. இதுக்கு மேலயும் என்னால மாற முடியும்னு தோணுல. நீங்க உங்க ரசனைக்கு, படிப்புக்கு ஏத்த மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு’ திக்கித் தடுமாறி சொல்லிக் கூட முடிக்கல. பளார்னு ஒரு அறை. இவங்க அழ, ‘இன்னொருத்தி வேணும்னா, வெளிநாட்டுல இருந்தப்பவே எனக்கு வச்சுக்கத் தெரியாதா? உன் மேல தான்டி ஆசை வச்சேன். நீ சொன்ன மாதிரி காதல் பாசம் எல்லாத்தையும் பிச்சை கேட்க முடியாது. பரவாயில்ல விட்டுரு’ அப்படின்னு சொல்லிட்டு அவர் வெளிய வர சத்தம் கேட்கவும் நான் ஓடி வந்துட்டேன். இவங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் பொறந்ததே பேரதிசயம் மீராம்மா”

மீராவுக்கும் மனம் பாரமாகிப் போனது. அக்கறை வேண்டாம் காதல் தான் வேண்டும் என வெங்கி கத்தியது ஞாபகம் வந்து மனதை அறுத்தது.

“நானும் அவர் மாதிரியே ஜீனியசா இருக்கவும் என்னையும் ஒதுக்கனாங்க மீராம்மா. நான் எதாச்சும் புத்திசாலித்தனமா பேசுனா ரொம்ப அப்செட் ஆகிருவாங்க. என் கிட்டயும் வார்த்தைகள யோசிச்சு யோசிச்சிப் பேசுவாங்க. அப்போத்தான் அப்பா சொன்னாங்க, அம்மா கிட்ட சாதாரணமா நடந்துக்க கவி. உன் புத்திசாலித்தனத்த எல்லாம் அப்பாட்ட மட்டும் காட்டுன்னு. நாங்க ரெண்டு பேரும் பேசுனா கூட குறுகுறுன்னு பாப்பாங்க. அதனாலயே, அப்பா என்னை முழுசா அவங்க கிட்ட குடுத்துட்டு வெளிநாடு வேலைன்னு அலைஞ்சிட்டு இருந்தாரு. நாங்க ரெண்டு பேரும் போனுல மட்டும் தான் பேசிப்போம். அவர் என் மேல உயிர வச்சிருந்தாரு, ஆனா அம்மா கிட்ட அத காட்டிக்கல. என் கிட்டயும் நேரிடையா காட்டிக்கல. இங்க வந்து தான் நாங்க ரொம்ப நெருங்கினோம். இது தான் எங்க பைத்தியக்காரக் குடும்பத்தின் கதை. பூவு புய்ப்பம் மாதிரி எங்கள பைத்தியமுன்னும் சொல்லலாம் ஜீனியசுனும் சொல்லலாம்” என சிரித்தாள் கவி.

மீரா சிரிக்கவில்லை. சின்ன பிள்ளை போல அன்புக்கு ஏங்கித் தவிக்கும் வெங்கியின் மேல் காட்டாறாய் நேசம் சுரந்தது. ஏற்கனவே தன் மனதை மறைத்து நாடகமாடி கொண்டிருந்தவருக்கு கண்கள் உடைப்பெடுத்தது.

‘எல்லாருக்கும் எல்லாமும் கிடச்சிடறது இல்ல. வெளியில இருந்துப் பார்க்கறதுக்கு அடுத்தவங்க சந்தோஷமா இருக்கற மாதிரி தான் இருக்கும். உள்ள நுழைஞ்சிப் பார்த்தா தான் தெரியுது, நம்மளோட அவங்க இன்னும் கஷ்டத்துல இருக்காங்கன்னு. ஹ்ம்ம்! மனைவிக்கிட்ட கெஞ்சியும் கூட நேசம் கிடைக்காத மனுஷன் ஒரு வார்த்தை அவங்கள பத்தி தப்பா பேசல என் கிட்ட.’ மனதுக்குள்ளேயே வெங்கியை நினைத்துப் பூரித்துப் போனார் மீரா.

“மீராம்மா”

“என்ன கவி?”

“நீங்க ஏன் அழறீங்க? டெக் இட் ஈசி. என் மனசுல உள்ளத எல்லாம் சொன்னதும் எனக்கு ரொம்ப ரிலீவா இருக்கு மீராம்மா. இதெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும். அப்பாவுக்கு இதப் பத்தி பேசனா புடிக்காது. நான் உங்கள வெளியாளா பாக்காததனால சொல்லிட்டேன். நீங்க காது குடுத்து கேட்டதுல பாரம் அப்படியே இறங்கிருச்சு. ஐ லவ் யூ மீராம்மா. அன்னிக்கு ஏதோ ஆர்வத்துல நீங்க எப்ப எனக்கு அம்மாவா வருவீங்கன்னு கேட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. மிஸ்டர் வெங்கிக்கு ஆண்டவன் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதானே நடக்கும். சாவு தேடி வர வரைக்கும் அவர் தன்னந்தனிமையிலே வாடி கிடக்கனும்னா அதுக்கு நாம என்ன செய்ய முடியும். அது அவர் தலை எழுத்து. நாம படுக்கலாம் மீராம்மா. தூக்கம் தள்ளுது” என எழுந்துப் போனவள் மூடிய கதவின் மேல் காதை வைத்துக் கேட்டாள். மீரா பொங்கி அழுவது கேட்டது. இவளுக்கு முகத்தில் மெல்லிய புன்னகை கீற்றாய் வந்தது.

“பிடிச்சிருக்கு ஆனா பிடிக்கலன்னு சீன் போடறீங்க! யார் கிட்ட உங்க ஆக்டிங்க காட்டறீங்க! நான், கவிலயா  டாட்டர் ஆப் வெங்கடேஷ பிரசாத். செஞ்சிருவேன்!” என குதித்தப்படியே தனதறைக்குப் போனாள்.

பெருமூச்சு விட்ட மீரா, தன் மடியில் இருந்த ஹேரியை நகர்த்தி தலைகாணியில் படுக்க வைத்தார். மெல்ல எழுந்து வெங்கியின் அருகே போய் உட்கார்ந்தவர், தூங்கும் அவரையே உற்றுப் பார்த்தார்.

ஆதரவற்ற குழந்தைப் போல உறங்குபவரைப் பார்த்ததும் மீராவினுள் தாய்மை சுரந்தது. அவர் தலைக்குக் கீழ் கைக் கொடுத்து தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டார்.

பட்டென கண் திறந்த வெங்கி,

“மீரா!” என ஆச்சரியமாக அழைத்தார்.

“காலையில எழுந்ததும் சட்டுன்னு எனக்கு காலை கீழ ஊன முடியாது சார்”

எதற்காக இதை சொல்லுகிறாள் என விழித்தார் வெங்கி. எற்கனவே தன்னை மடியில் படுக்க வைத்துக் கொண்டதிலேயெ திக்குமுக்காடி இருந்தார்.

“அதனால, தினம் காலையில எழுந்ததும் முதல் வேலையா எனக்கு கால் பிடிச்சு விடனும். இந்த டீலுக்கு ஒத்துக்கிட்டா நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறேன் வெங்கி சார்”

“முடியாதுடி”

“முடியாதா?”

“கால் மட்டும் அமுக்க முடியாதுன்னு சொன்னேன். மொத்தமா எல்லாத்தையும் அமுக்கி விடறேன்னு சொன்னேன்”

சத்தம் கேட்டு விழித்த ஹேரி,

“கேம்மா, அப்படித்தான் கேப்பாவ நல்லா பஞ்ச் பண்ணுங்க! லெப்ட்ல, இன்னும் கொஞ்சம் ரைட்ல” என குதூகலாமாக குரல் கொடுத்தான்.

(கொட்டும்)