SSKN — epi 15

அத்தியாயம் 15

 

கண்ணாடி நீ

கடிகாரம் நான்

உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன் !!!

 

“மாம்ஸ்” என கத்திக் கொண்டே ஓடி வந்து மணியைக் கட்டிக் கொண்டாள் தீபா.

அவளை ஆரத்தழுவிக் கொண்டான் மணி.

“தீபாக்குட்டி, கம் கம்! வெல்கம் டூ யூஎஸ்! ஐ மிஸ்ட் யூ சோ மச்”

“நானும் தான்” குதித்தாள் அவள். நீண்ட நாட்கள் சென்று தன் மாமனைப் பார்த்ததில் மற்றது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. மணியின் பின்னால் நின்றிருந்த கவி லேசாக தொண்டையை செருமவும், தீபாவைத் தோள் வளைவிலேயே வைத்துக் கொண்டு திரும்பினான் மணி.

“லயனஸ், மீட் மை அக்கா மக மை டார்ல்ஸ் தீபா. ஸ்கூல் டைம்ல எனக்கு போன் பேசறப்போ இவளும் உன் கிட்ட பேசியிருக்கா!” என அறிமுகப்படுத்தினான்.

“தீபாம்மா மீட் யுவர் அத்தை கவிலயா”

இவனை விட்டுவிட்டு கவியை ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள் தீபா.

“மாம்ஸ்கு உங்க மேல ஒரே லவ்ஸ். அடிக்கடி என் கிட்ட உங்கள பத்தியே தான் பேசுவாங்க. பாருங்களேன் என் ஒரு பக்க காது வீங்கிப் போய் இருக்கு” என தன் காதைக் காட்டி கலகலவென நகைத்தாள் அவள்.

அடாலசண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் அந்த அழகிய குட்டிப் பெண்ணை கவிக்கும் பிடித்து விட்டது.

“ரொம்ப அழகா இருக்கீங்க தீபா”

“நோ வாங்க நோ போங்க! ஜஸ்ட் தீபா போதும் அத்தை. அதோட நான் அழகுன்னு யாராச்சும் சொன்னா எனக்குப் பிடிக்காது, கெட்ட கோபம் வரும். அழகு ஒரு இலுஷென் அது ஒரு மாயை. அறிவு மட்டும்தான் ரியலிசம், உண்மை. எனக்குப் பிடிச்ச அத்தைன்றதனால அழகுன்னு சொன்னதுக்கு சும்மா விடறேன். இல்லைனா அடிதடியாயிருக்கும்” என மிரட்டினாள் அந்த ரௌடி பேபி.

“ஏய் வாண்டு, அத்தைய மிரட்டாதே! நீ அழகு இல்ல, அசிங்கம் பிடிச்ச அறிவாளி! போதுமா? அம்மாவும் பிதாஜியும் எங்க?”

“வழக்கம் போல தீபேஷ் ஒரே சேட்டை. வர வழியில ஐஸ்க்ரீம் வேணும்னு அடம். அம்மா முடியாதுன்னு சொல்ல, பிகாஷ் பாவம்மா அழறான்னு சொல்ல ஒரே வாக்குவாதம். உங்கக்கா பிடிச்சா உடும்பு பிடிதான், தெரியாதா? பிகாஷ் மறுவார்த்தைப் பேச முடியுமா! இங்க ரீச் ஆனதும் காரை விட்டு இறங்க மாட்டேன்னு தீபேஷ் ஒரே அழுகை. அவனை சமாதானப் படுத்திட்டு இருக்காங்க பிகாஷூம் தீபீ அக்காவும். உங்கக்கா சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கறாங்க! நான் உங்கள பார்க்கனும்னு இறங்கி ஓடி வந்துட்டேன்.”

அவள் சொல்லி முடிக்கவும், பிரகாஷ் அழும் தீபேஷை தூக்கிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. தீபீ சித்ராவின் கரம் பிடித்து மென்னடையுடன் வர, அழும் மகனை சமாதானப் படுத்தியபடியே வந்தான் பிரகாஷ் கப்பூர். காதோரம் மட்டும் லேசாக வெள்ளை முடி எட்டிப் பார்க்க, அதே கம்பீரத்துடனும், உடற்கட்டுடனும் நடையிட்டு வந்த தன் ஜீஜூவை பாசத்துடன் பார்த்திருந்தான் மணி. அவன் பக்கத்தில் மணியின் அக்கா சித்ரா பௌர்ணமி இன்னும் கொஞ்சமாக சதைப்போட்டு அழகு பொம்மையாக நடந்து வந்தாள்.

கணவன் மனைவி இருவரின் விழிகளும் மணியைப் பார்த்ததும் பாசத்தில் மலர்ந்தது. ஓடிப்போய் தன் ஜீஜூவைக் கட்டிக் கொண்டான் மணி.

“மீஸ் யூ ஜீஜூ!”

“மிஸ் யூ டூ மணி.” ஒரு கையில் தீபேஷ் இருக்க மறு கையால் மணியைக் கட்டிக் கொண்டான் பிரகாஷ்.

“ஹ்கும்!” தொண்டையைக் கணைத்தாள் சித்ரா.

சிரிப்புடன் தன் அக்காவையும் தழுவிக் கொண்டான் மணி.

“இன்னும் கொஞ்சம் குனிடா மணி! முத்தம் கூட குடுக்க முடியலை” என அவள் சலிக்கவும், குனிந்து தன் அக்காவின் கன்னத்தில் முத்தமிட்டான் மணி. அவன் காதருகே,

“என்னடா உன் கல்யாணத்துக்கு கூப்புடுவேன்னு பார்த்தா, மாமனார் கல்யாணத்துக்கு வர வச்சிருக்க” என குசுகுசுவென கேட்டாள் சித்ரா.

“நான் கல்யாணம் செஞ்சா, ஆசீர்வாதம் செய்ய மாமனாரோட சேர்ந்து மாமியார் வேணும்ல அதுக்குத்தான் இந்த ஏற்பாடு” என மெல்லிய குரலில் சொல்லி சிரித்தான் மணி.

அமைதியாக அருகில் வந்து நின்ற தீபீயின் நெற்றியில் முத்தமிட்ட மணி,

“வெல்கம் பியூட்டி” என வரவேற்றான்.

இவ்வளவு களேபரம் நடந்தும் தீபேஷ் அழுகையை நிறுத்தவில்லை. பிரகாஷ் சித்ராவைக் கண்களாலேயே கெஞ்சிக் கொண்டிருந்தான். அவளோ முடியவே முடியாது என தலையை ஆட்டினாள். தீபேஷ் அப்படியே தீபாவை உரித்து வைத்திருந்தான் குணநலன்களில். அவளுக்கு இருந்த, இருக்கும் பிடிவாதம் அப்படியே இவனுக்கும் இருந்தது. தீபாவுடன் மல்லுக்கு நின்ற சித்ராவுக்கு இப்பொழுது நேரமெல்லாம் இவனுடன் மல்லுக்கு நிற்பதில் போனது. தீபாவுக்காக கெஞ்சிய பிரகாஷ் இப்பொழுது தீபேஷுக்காக கெஞ்ச ஆரம்பித்திருந்தான். மொத்தத்தில் அவர்கள் இல்லறத்தில் இன்னும் சித்ராவின் கைதான் ஓங்கி இருந்தது. மொத்தம் அவளிடம் இருந்தாலும் இன்னும் முத்தம் இவனிடம் தான் இருந்தது.

இவர்கள் குடும்பமாக வெங்கியின் திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்திருந்தார்கள். நிலாவின் குடும்பம் நாளை வருவதாக இருந்தது. திருமணம் இன்னும் மூன்று நாட்களில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. குடும்பமாக மட்டும் திருமணத்தை முடித்துக் கொண்டு, பின் சின்னதாக ஒரு விருந்து கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது வெங்கியால்.

மிஷிகனில் இருந்த தேவி பராசக்தி மாதா கோவிலில் திருமணத்தை அரேஞ்ச் செய்திருந்தார்கள். அங்கேயே குருக்கள் இருப்பதால் முறைப்படி திருமண சடங்குகள் அங்கே நடத்துவதற்கு பணம் கட்டி இருந்தார்கள்.

கவி தயக்கத்துடன் வந்தவர்களை வரவேற்றாள். வெங்கி வெளியே சென்றிருக்க, மீராவும் சமயல் அறையில் இருந்து வெளி வந்து சிரித்த முகமாக இவர்களை வரவேற்றார். கவியை அன்பாக அணைத்துக் கொண்டாள் சித்ரா.

“போட்டோல மணி காட்டியிருக்கான். இதான் முதன் முதலா உன்னை நேருல பார்க்கறேன் கவிம்மா. என் மணிக்கு ஏத்த மாதிரி ரொம்ப அழகா இருக்கேடா! ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“வாங்க சித்ராக்கா!” அவளின் அணைப்பில் நெகிழ்ந்தவள் திக்கித் திணறி வரவேற்றாள்.

“அக்கா இல்ல அண்ணி! இவர் உனக்கு அண்ணா. உன் மணிகிட்டே எதாச்சும் காரியம் ஆகனும்னா இவரப் பிடிச்சாத்தான் நடக்கும்” என தன் கணவணை அறிமுகப்படுத்தினாள் சித்ரா.

சிரிப்புடன் கவியை நோக்கினான் பிரகாஷ்.

“நான் உன்னை நிறைய தடவைப் பார்த்திருக்கேன் கவி. தூரத்துல இருந்து இவன் உன்னைப் பார்க்க, இவன் பார்க்கறத நான் பார்க்கன்னு ஒரே ஜாலியா இருக்கும்” என புன்னகைத்தான் பிரகாஷ்.

“ஓ!” வார்த்தை வராமல் புன்னகை மட்டும் செய்து வைத்தாள் கவி.

ஏர்போட்டில் இருந்து நேராக இங்கே வந்திருக்கவும், கவி அவர்களுக்கு தங்க இடம் பார்த்துக் கொடுத்தாள். நான்கு அறைகளை மட்டுமே கொண்ட அந்த சிறிய வீடு இவர்களின் அதிரடியில் களைகட்டியது. மணி வெங்கியுடன் தங்கி கொள்ள, மீராவுடன் கவி என முடிவானது. பிரகாஷின் குடும்பத்துக்கு மணியின் ரூமும், தீபா தீபீக்கு கவியின் ரூம் என அரென்ஜ் செய்யப்பட்டது. நாளை வரும் நிலா குடும்பம் தூங்க மட்டும் ஹோட்டல் ரூம் புக் செய்திருந்தான் மணி. நிலாவுக்கு குட்டிப் பாப்பா ஒன்று இருப்பதால் அவள் தூங்க வசதியாக இருக்க இந்த ஏற்பாடு.

தீபாவும் தீபியும் குளிக்கப் போக, மீரா மற்றவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தார்.

“மீராம்மா, டேஸ்டியா இருக்கு நீங்க சமைச்சது. எங்க வீட்டுல நம்ம சாப்பாடு கிடைச்சாலும், நார்த் சைட் டிஸ் மட்டும் வெரைய்ட்டியா வச்சுக் கொல்லுவாங்க” என தன் கணவனைப் பார்த்து குறும்பு புன்னகை செய்து கொண்டே சாப்பிட்டாள்.

மகனை மடியில் வைத்து ஊட்டிக் கொண்டிருந்த பிரகாஷ், அவள் புறம் குனிந்து மெல்லிய குரலில் பேசினான்.

“எப்பவுமே உனக்கு வாய் மட்டும் அடங்காதுடி சிமி. ஆசைப்படறியேன்னு சேப் செய்யறது பத்தாதுன்னு நானும் வேற கத்துக்கிட்டு ஆக்கிப் போடறேன். நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு கொளு கொளுன்னு ஆகிட்டு, என்னை அவங்க முன்னே டேமேஜ் வேற பண்ணறியா! அரே பாப்ரே! இந்த பொம்பளைங்களே இப்படித்தான்”

அவன் சொன்ன மற்றதையெல்லாம் கிடப்பில் போட்டவள்,

“யாரு, நான் கொளு கொளுன்னு ஆகிட்டேனா ப்ரௌனி? ஓஹோ! இனிமே வந்து, நீ இப்படி கொளுக் மொளுக்னு இருக்கறது தான் எனக்குப் பிடிக்குது! வாய்டீ குடுடி சோனி குடின்னு கொஞ்சு, மொத்தறேன்!” என சிலிப்பிக் கொண்டாள்.

“சிமி குட்டி, இப்படிலாம் சொல்லி என்னை பயம் காட்டக்கூடாது. நான் பாவம்ல!”

“யாரு நான் குட்டியா? எனக்கே மூனு குட்டி இருக்கு ப்ரௌனி! உன் ஜொள்ஸ் மழைய அடக்கி வை. மீராம்மா நம்மளயே குறுகுறுன்னு பார்க்கறாங்க” என்றவள், மகனைத் தூக்கிக் கொண்டு வாய் கழுவி விட சென்றாள்.

அங்கே தன் ரூமில் உடைகளை எடுத்துக் கொண்டிருந்த மணியைத் தேடி வந்தாள் கவி. அவளது ரூமில் தீபாவும், தீபீயும் இருக்க மெல்லிய குரலில் இவனிடம் பேசினாள்.

“மணி!”

“என்ன லயனஸ்?” துணியை மடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான் மணி. அவள் முகம் கலங்கிப் போய் இருந்தது. அவள் அருகே வந்தவன்,

“என்னடா? என்னாச்சு? ஏன் முகம்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” என பாசமாகக் கேட்டான்.

“இதை கூட இவ்ளோ தூரமா நின்னுகிட்டுத்தான் விசாரிப்பியா? போடா டேய்!” என்றவள் நெருங்கி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

“சரி, கட்டிக்கிட்டாச்சு! இப்ப சொல்லுடா, என்ன பிரச்சனை?”

“எனக்கு ஒரு மாதிரியா ஃபீல் ஆகுது மணி”

“ஏய்! நான் ஒன்னுமே செய்யலியே, நீயேதானே வந்து கட்டிப் பிடிச்சுட்டு நிக்கறே! என்னமோ பண்ணுதுனா, அதுக்கு நான் பொறுப்பு இல்ல” என நகைத்தான்.

“மணி! பீ சீரியஸ்”

“சரி, சரி சொல்லு”

“கல்யாணத்துக்கு எங்க பக்கத்துல யாரும் இல்லைன்னு சொன்னேந்தான்! மீராம்மாவும் யாரையும் கூப்பிட இஸ்டப்படல! சோ நாமளே செய்யலாம்னு சொன்னப்ப நீ என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“உன் வீட்டு ஆளுங்க சுத்திப் பார்க்க வரதுக்கு இருக்காங்க. அப்படியே வெடிங் அட்டேண்ட் பண்ணட்டும்னு சொன்ன!”

“ஆமா, சொன்னேன்”

“உங்க அக்கா, மாமா, குட்டிங்க எல்லாம் என்னை உன் பொண்டாட்டி மாதிரியே ட்ரீட் பண்ணுறாங்க. எனக்கு ஓன் கைண்டா ஃபீல் ஆகுது மணி.”

“என் மனசுக்கு ஏத்தப்படிதான் அவங்க நடந்துக்கறாங்க லயனஸ்! உனக்கு எப்படியோ தெரியலை ஆனா நான், என் முடிவுல ஸ்டேடியா தான் இருக்கேன் கவி! இப்படி கட்டிப் பிடிக்க விடறது, முத்தம் குடுக்க விடறது எல்லாத்தையும் என் பொண்டாட்டி கிட்ட மட்டும்தான் அனுமதிப்பேன். அந்த உரிமையத்தான் உனக்கு குடுத்துருக்கேன். ஆனா உனக்கு அப்படி இல்லையோ! யாரை வேணும்னாலும் நெருங்குவ போல இருக்கே, இப்போ என்னை நெருங்கி நிக்கற மாதிரி” என காட்டமாகக் கேட்டான் மணி.

தன்னைக் கணவனாக மனதில் நினைக்காமலா இப்படி நெருங்கி இழைகிறாள் என்பதை உணர்த்தவே இப்படி பேசினான் அவன். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதுபோல, கொஞ்சமாக நெருங்கி வருபவள் பின் ஏகத்துக்கும் விலகுவதை இவனாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு காதலைக் கொட்டினாலும், சட்டென முகத்தில் அடித்த மாதிரி பேசி அவனை விலக்கி வைப்பது ரொம்பவே பாதித்திருந்தது. அதனாலேயே வார்த்தைகளை யோசிக்காமல் விட்டான் மணி.

அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு சட்டென அணைப்பில் இருந்து விலகினாள் கவி. கண்கள் சிவந்துப் போய் கோபமாக மணியை உறுத்து விழித்தாள் அவள்.

“கண்டவன் கூடவும் இழைஞ்சி நிப்பேன்ற மாதிரி பேசிட்டல மணி! அப்படி எத்தனைப் பேரை கட்டிப்பிடிச்சு நான் கிஸ் அடிச்சத நீ பார்த்துருக்க? சொல்லு மணி, சொல்லு! என்னை மறைஞ்சிருந்து பார்த்துருக்கத்தானே? நானா போய் யாரயாச்சும் கொஞ்சி குலாவனத பார்த்துருக்கியா? சின்ன வயசு பசங்க கூட டேட் போனா அந்த மூனு வார்த்தைய பத்தி மட்டும்தான் பேசறாங்கன்னுதானே, எங்கப்பா வயசு உள்ளவங்க கூட பழகனேன். அதுக்கூட வெங்கி வேணாம்னு சொல்லிட்டாரு! ஏன் தெரியுமா, அவங்க கூட பழகி பழகி என் வயசுக்குரிய உணர்ச்சிகள் எதுவும் இல்லாம நான் சாமியாரிணியா போயிருவெனோன்னு பயம் அவருக்கு. உன் கிட்ட மட்டும் தான்டா நானாவே வந்து ஒட்டுனேன்! அதுக்கு நீ நல்ல பட்டம் குடுத்துட்ட போடா!” கண்கள் கலங்க அவனை முறைத்தப்படியே நின்றாள் கவி.

“கவிம்மா! அதைத்தான்டா நானும் சொல்லுறேன். என் கிட்ட மட்டும் தான் உன்னால இப்படி நடக்க முடியுதுன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? என்னை காதலன், கணவன் ஸ்தானத்துல வச்சிருக்கேன்னுதானே? அதை ஏன் ஒத்துக்க மாட்டற? எதுக்கு இந்த தயக்கம், இந்த ஒதுக்கம்? யோசிம்மா. இப்படியே என்னை ஒதுக்கிட்டே இருக்காத லயனஸ்!” தள்ளி நின்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் மணி.

“விடு, விடு! நீ வேணா எனக்கு. யாருமே வேணா! அப்பா கல்யாணம் முடிஞ்சதும், நான் எங்கயாச்சும் காணா போயிருவேன். எனக்கு கல்யாணம் கருமாதி எதுவும் வேணா. என் ப்ளானே அதுதான். அப்பா கல்யாணத்துக்குத் தான் வெயிட்டிங். எப்படியும் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஆறு மாசமாச்சும் ஆகும்னுதான் உன் கிட்ட ஆறு மாச டைம் கேட்டேன். அவருக்கு ஒரு துணை தேடிக் குடுத்துட்டு நான் போயிருவேன். நீயும் என்னை மறந்துட்டு யாரயாச்சும் கட்டிக்கோ.” என அவன் அணைப்பில் தேம்பியபடியே மனதில் உள்ளது அனைத்தையும் வெளியிட்டாள் அவள்.

இன்னும் அவளை தனக்குள் புதைத்துக் கொண்டவனின் கண்கள் மட்டும் இடுங்கியது.

அதன் பிறகு மற்றவர்களுக்காக கலகலவென இருந்தாலும், இருவரும் தனிமையில் பேசிக் கொள்ளவில்லை. பேசிக் கொள்ளாவிட்டாலும் மணியின் பார்வை மட்டும் யோசனையாக கவியைத் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

மறுநாள் நிலாவும், சிவாவும் அவர்களின் மகன் மகளுடன் வந்து விட இன்னும் கலகலவென இருந்தது வெங்கியின் இல்லம். பகல் பொழுது முழுவதும் ஹேரியும் பிள்ளைகளுடன் விளையாடியபடி இங்கேயே இருந்தான். நிலா வந்ததும் முதல் வேளையாக கவியைத் தனியாக தள்ளிக் கொண்டு போனாள்.

“என்ன பல்செட்டு, எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் நிலாக்கா”

“அது என்ன நிலாக்கா பலாக்கான்னுகிட்டு! அண்ணின்னு அழகா கூப்புடு. எங்கக்கா சித்ரா மாதிரி கண்ணு, பொண்ணுன்னுலாம் கொஞ்ச மாட்டேன் நான். ஒரே போடுதான். என் தம்பிய அலைய விடறியாமே? இன்னாமே லந்தா? கீசிப்புடுவேன் கீசி! ஒழுங்கா அவனைக் கட்டற, கடகடன்னு புள்ளை குட்டிங்கள பெத்துப் போடற! இல்லைன்னு வை, ஒரே அனுப்புல எமன பார்க்க ஏரோப்ளேன் ஏத்திருவேன்” என மிரட்டினாள் அவள்.

கவிக்கு வார்த்தையே வரவில்லை. முழித்துக் கொண்டு நின்றாள். கவி மேலேயே கண் வைத்திருந்த மணிக்கு, நிலாவின் மிரட்டலும், கவியின் பம்மலும் சிரிப்பை வரவைத்தது. தன் ஜீஜுவிடம் ஜாடை காட்டினான் மணி. சிவாவிடம் சொன்னால் கூட தன் அக்கா அடங்கமாட்டாள் என தெரியுமாதலால் தான் பிரகாஷை உதவிக்கு அழைத்தான்.

“நிலா, எனக்கு உன் கையால ஒரு ஜீஸ் போட்டுக் குடேன்! தொண்டை வரண்டு போச்சு” என கூப்பிட்டான் பிரகாஷ்.

“ஏன் மாம்ஸ்! உங்க சிமி எங்க? மறுபடியும் லடாயா? இருங்க வரேன்” என கவியை விட்டுவிட்டு கிச்சனுக்குப் போனாள் நிலா.

பெரிய மூச்சை இழுத்து விட்ட கவியை, ரூமுக்குப் போக சொல்லி ஜாடைக் காட்டினான் மணி. அவள் விட்டால் போதும் என ஓடியே விட்டாள்.

வெங்கிக்கு வந்தவர்களை கவனிக்கவே சரியாக இருந்தது. ஏற்கனவே சித்ரா சென்னையில் இருந்து மணமக்கள் உடுத்தப் போகும் துணிமணிகளை வாங்கி வந்திருந்தாள். அங்கிருந்து வீடியோ கால் செய்தே மீராவை சேலை செலக்ட் செய்ய வைத்த பெருமை சித்துவையே சேரும். மீராவுக்கு வாங்கியது போலவே கவிக்கும் அழகான புடவை எடுத்து வந்திருந்தாள் சித்து.

அங்கிருந்த தமிழர் டைலரிங் கடையில் சீக்கிரம் வேண்டும் என சொல்லி, அதிக விலை கொடுத்து ரவிக்கையை ரெடி செய்தார்கள். மீரா மறுக்க மறுக்க, நிலாவே அவருக்கு பேசியல் செய்து விட்டாள். தீபீ அழகாக ஹென்னா வைத்துவிட, பிரகாஷும் சிவாவும் வீட்டை அலங்கரிக்க என கல்யாணக் களை வந்திருந்தது அவ்வீட்டுக்கு.

மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரே வீட்டில் இருக்க, எங்கும் இல்லாத அதிசயமாக அவர்களை அருகருகே அமர்த்தி நலங்கு வைத்தனர். மீரா வெட்கத்துடன் தலை குனிந்திருக்க, வெங்கியோ ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து செய்தார். வயது ஏற ஏறத்தான் எல்லாவற்றையும் அப்ரிஷியேட் செய்யும் மனபாவம் வரும் போல!

கவியும் மணியும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு இவர்களின் ஊடல் தெரிந்ததோ இல்லையோ, சித்ராவுக்கு நன்றாக தெரிந்தது.

இரவில் மகன் தூங்கியதும், அவனை மெத்தைப் போட்டு கீழே படுக்க வைத்தவள் பிரகாஷை நெருங்கிப் படுத்தாள்.

“ப்ரௌனி!”

“சொல்லும்மா” என்றவன் தன் மனைவியை நெஞ்சில் போட்டுக் கொண்டான்.

“மணி முகமே சரியில்ல, கவனிச்சீங்களா?”

“கவனிக்காம இருப்பேனா?” மர்மப் புன்னகை அவன் இதழ்களில்.

“இவன் கல்யாணம் குடும்பம் குட்டின்னு செட்டில் ஆவானா ப்ரௌனி? எனக்கு இவன பத்திதான் கவலையே”

“என் செல்லக்குட்டிக்கு எந்த கவலையும் தேவையில்ல. இந்த ப்ரௌனி மணிக்கு அப்பாவுக்கு அப்பாவா, மாமாவுக்கு மாமாவா இருக்கறப்ப எதுக்கு நீ வீணா கவலைப்படற சிமி? அவன் லைப் செட்டில் ஆகிரும். சந்தோஷமா இருப்பான். நீ நிம்மதியா தூங்கு”

“தூக்கம் வரல ப்ரௌனி! அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா?”

“என்னடி விளையாடறியா?”

“விளையாடலாமே!”

“சிமி! நாம நம்ம ரூமுல இல்ல. மிஸ்டர் வெங்கி வீட்டுல, குட்டி கட்டிலுல இடிச்சுப் புடிச்சுப் படுத்துருக்கோம். இங்க வந்து உசுப்பேத்தாதே என்னை”

“அப்படித்தான் உசுப்பேத்துவேன்!

ரோட்டுல நடக்குது மாடு

இந்தியா என்னோட நாடு

குருவிக்கு வேணும் கூடு

இன்னிக்கு சிமிக்கு செம்ம மூடு!” என அவனை இன்னும் ஒட்டிப் படுத்தாள் சித்ரா.

“ஹிக்கி(hickey) கிஸ் குடுக்காம நீ அடங்க மாட்டடி என் செல்ல சிமி” என சிரித்தப்படியே தன் மனைவியை இறுக்கி அணைத்து தோளில் கடித்து பின் முத்தமிட்டான் சிமியின் ப்ரௌனி.

திருமண நாளும் அழகாக விடிந்தது. வெங்கியுடன் வேலை செய்பவர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் சாமுவெல், மணியின் குடும்பம் இவர்கள் தான் திருமணத்துக்கு வாழ்த்த வந்த மக்கள்.

தோரணையாக வெங்கி மணமேடையில் அமர்ந்திருக்க, தன் தகப்பனை ஆசையாகப் பார்த்திருந்தாள் கவி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு. தன் தகப்பன் அறியாமல் அதை சுண்டி விட்டாள். ஏற்கனவே இவள் திருமணம் செய்தால் தான் தன் திருமணம் என முரண்டிய வெங்கியை அவர்களின் வயதைக் காரணம் காட்டி மிரட்டி சம்மதிக்க வைத்திருந்தாள் கவி.

வெங்கி சாங்கியங்களை செய்ய, மணப்பெண் மீரா அழைத்து வரப்பட்டார். கண் சிமிட்டாமல், அன்னநடையிட்டு அழகாக நடந்து வரும் தன் மீராவை பார்வையால் விழுங்கினார் வெங்கி. பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் வருங்கால சம்பந்திகளை நினைத்து ஜொள்ளைக் குறைத்து கெத்தாக அமர்ந்துக் கொண்டார் அவர்.

மீரா அவர் பக்கத்தில் வந்து அமர்ந்து, ஐயர் சொன்ன சாங்கியங்களை பயபக்தியாக செய்தார். முகூர்த்த நேரம் நெருங்கவும், ஐயர் தாலியை வெங்கியின் கையில் கொடுத்து கெட்டி மேளம் என சொன்னார். தாலியை மீராவின் கழுத்துக்கு கொண்டு செல்லும் முன் சடாரென எழுந்து நின்றார் மீரா.

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்!” என அவசரமாக மொழிந்தார் அவர்.

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, கையில் கிடைத்த லாலிப்பாப்பை சப்பும் முன் பிடுங்கபட்ட குழந்தை போல வாய் பிளந்து நின்றார் வெங்கி! ஓரக்கண்ணில் மகிழ்ச்சியுடன் சாமுவேல் எழுவது தெரிந்து, இவருக்கு மயக்கமே வந்தது. மயங்குகிறான் ஒரு மாதவன்……..

(கொட்டும்)