SSKN — epi 17

அத்தியாயம் 17

 

விழியும் விழியும் கலந்து கலந்து

பார்வை ஒன்று ஆனதே

உயிரும் உயிரும் கலந்த போது

உலகம் நின்று போனதே!!!

 

ஹோட்டலில் குவீன் பெட் இருக்கும் ஓர் அறை மட்டும் எடுத்திருந்தான் மணி. தனி தனி ரூம் எடுக்கத்தான் முயன்றான். அதற்குள் கவி,

“அதான் தாலி கட்டி எனக்கு புருஷன் ஆகிட்டல்ல! அப்புறமும் என்ன வெட்டி சீனு! ஒரு ரூம் எடு போதும்! சிக்கனமா இருந்து பழகு மணி, இனி நீ சிங்கிள் இல்ல” என கடுப்பேற்றி இருந்தாள்.

ஹோட்டலுக்கு வந்து உடை மாற்றியவர்கள், ஏர்போர்ட்டுக்கு பயணப்பட்டனர். பிரகாஷும் குடும்பமும், தீபேஷீக்காகவும் நிலாவின் குழந்தைகளுக்காகவும் மீண்டும் டிஸ்னிலேண்ட் செல்கிறார்கள். அங்கிருந்து மற்ற இடங்களையும் சுற்றி விட்டு அப்படியே இந்தியாவுக்கு புறப்பட்டுவிடுவார்கள்.

மீராவும் வெங்கியும் வீட்டில் இருந்தே அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டார்கள். மீரா வந்தால் கவியால் நார்மலாக இருக்க முடியாது என்பதே இதற்கு காரணம்.

ஏர்போர்ட்டில் தீபாவும் தீபீயூம் மணியைக் கட்டிக் கொண்டார்கள்.

“மாம்ஸ், போய்ட்டு வரோம்! சீக்கிரம் அத்தையோட இந்தியா வாங்க!” என தீபா ஒரே ஆர்ப்பாட்டம்.

சித்ரா வாஞ்சையாக கவியைக் கட்டிக் கொண்டாள்.

“கவிம்மா, இவன் எங்க வீட்டு செல்லக் குழந்தைடா! இப்ப முழு மனசோட உன் கிட்ட குடுத்துருக்கோம். அவன நல்லா பாத்துக்கோ! மத்தவங்களுக்காக கேட்காமலே எல்லாம் செஞ்சுதான் அவனுக்குப் பழக்கம். அவனுக்குன்னு நாங்க எதையும் செஞ்சது இல்ல. அவனோட ஜீஜூ வந்ததுக்கப்புறம் தான் அவன் வாழ்க்கையையே நிறுத்தி நிதானமா வாழ்ந்தான். அதுக்கு முன்ன படிப்பு, டியூசன் சொல்லிக் குடுக்கறது, வீட்டு வேலை, தீபான்னு பையன் ரொம்ப கஸ்டப்பட்டுட்டான். அவன் எங்க கிட்ட ஆசையா கேட்டது உன்ன மட்டும்தான். புரிஞ்சு நடந்துக்கோம்மா! நீ சும்மாவே புத்திசாலி, கல்யாணம் அவசரக்கோலமா நடந்துருச்சுன்னு கவலைப்படாம வாழ்க்கையை நல்லா பார்த்துக்க கண்ணு” என சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள் சித்ரா.

“அக்கா, நகரு! நானும் கொஞ்சமா இந்த பல்செட்ட கொஞ்சிக்கறேன்!” என சித்ராவை நகர்த்திவிட்டு அருகே வந்தாள் நிலா.

அவளைப் பார்த்ததும் கவிக்கு உதறியது. மணியை விழிகளால் தேடினாள். அவனோ கையில் தீபேஷை ஏந்தியபடி தன் மாமாக்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன லுக்கு அங்கயும் இங்கயும் போகுது?”

“ஒன்னுமில்ல அண்ணி!”

“என் தம்பி பாட்டுக்கு அக்கடான்னு படிச்சு முடிச்சு இந்நேரம் கல்யாணம் புள்ளை குட்டின்னு செட்டில் ஆகிருப்பான். அந்த வயசுலயே லவ் பண்ணு, லவ் பண்ணுன்னு அவனை விரட்டி மனசை கலைச்சு விட்டுட்டு, இப்போ அவனே தேடி வந்தா ஓவர் சீன் போடறியா நீ? கொன்னுருவேன் பாத்துக்கோ! பாவம்டி அவன்! எத்தனை பொண்ணுங்க அவன் பின்னாடி சுத்துச்சுங்க, எல்லாரையும் சிஸ்டர்னு கூப்பிட்டு மனசை உடைச்சான். இப்ப நீ கல்யாணம் வேணாம்னு கதறி அவன் மனச உடைச்சிட்ட! அவன் கண்ணுல வலி தெரியுதுடி! எங்களுக்காக சிரிச்சுட்டு நிக்கறான், ஆனா உள்ளுக்குள்ள நொருங்கிப் போயிருக்கான்! அடுத்த தடவை நான் பார்க்கறப்போ அவன பழைய மணியா, சந்தோஷமா பார்க்கனும்! இல்லைன்னு வை” செஞ்சிருவேன் என அவள் வாய் சொல்லவில்லை கண்கள் சொன்னது.

கண்கள் கலங்க, மெல்ல சரியென தலையாட்டினாள் கவி. அவள் கலங்கிய கண்களைப் பார்த்ததும் இழுத்து அணைத்துக் கொண்டாள் நிலா.

“எல்லாம் சரியா போகிரும். நாங்களாம் இருக்கோம். என் தம்பிய முழுசா நம்பு! உன்னைப் பூப்போல பாத்துக்குவான்”

மறுபுறம் மணியை தனியாக தள்ளிக் கொண்டு போன சிவா,

“மணி, இனிமேதான்டா வாழ்க்கையோட துன்ப பக்கமே ஸ்டார்ட் ஆகும். பாட்டுல வருமே, தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்னு. அந்த புதிய பொருள மட்டும் தேடிட்டன்னு வை, பத்து மாசத்துல இன்னொரு புதிய பொருள் வந்துரும். அதுக்கப்புறம் பல புதிய பொருள்கள் லிஸ்ட்ல ஆட்டோமடிக்கா சேர்ந்துரும் மச்சான்! என்னன்னு கேக்கறியா? வேற ஒன்னும் இல்ல மச்சான் தூக்கமின்மை, களைப்பு, சோர்வு, குடைச்சல், குடுமிப்பிடி சண்டை, சில சமயம் அடி பல சமயம் உதை இப்படின்னு வாழ்க்கை வண்ண மயமா போய்கிட்டே இருக்கும். இதெல்லாம் சேர்ந்தா தான் மச்சான் இனிமையான வாழ்க்கை. தங்கச்சிய நல்லா பாத்துக்கோ! கோபத்துல அவ திட்டினாலும் பொறுமையா போ!” என சொல்லிக் கட்டிக் கொண்டான் சிவா.

கடைசியாக பிரகாஷ் மணியின் அருகே வந்தான்.

“உனக்கு நான் ஒன்னும் சொல்லத் தேவை இல்ல மணி! சின்ன வயசுலேயே ரொம்ப பொறுப்பா இருந்து ரெண்டு அக்காவையும் பாதுகாப்பா பாத்துக்கிட்டவன் நீ. உன் வாழ்க்கைய எப்படி பார்த்துக்கனும்னு கண்டிப்பா உனக்குத் தெரியும். டேக் கேர்”

மணி தன் ஜீஜூவை இறுக அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் ஃபோர் எவிரிதிங் ஜீஜூ! ஐ லவ் யூ!”

“லவ் யூ டூடா மணி”

“பொண்டாட்டி வந்தாலும் இவன் ஜீஜூவ லவ் பண்ணறத விடமாட்டான் போல” நிலா தான் கலாய்த்தாள்.

“போடி நிலா! எங்கள கண்ணு போடாத போ” என தன் அக்காவைப் பார்த்து சிரித்தான் மணி.

இவர்களிடம் பாய் சொல்லி எல்லோரும் கிளம்பவும், கண் விட்டு அவர்கள் மறையும் வரை மணி அமைதியாக நின்றிருந்தான். அவன் கையைப் பற்றிய கவி,

“போலாம் மணி” என்றாள்.

மெல்ல அவள் பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவன்,

“லெட்ஸ் கோ” என முன்னே நடந்தான்.

அங்கே வெங்கியின் வீடே வெறிச்சென கிடந்தது. சோபாவில் அமர்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தார் மீரா. அவருக்கு டீ போட்டு எடுத்து வந்த வெங்கி, அவர் அருகே இடித்துக் கொண்டு அமர்ந்தார்.

“இந்தா மீரா! டீ குடி”

“எனக்கு ஒன்னும் வேணா!”

“ஏன்டி என் கையால தாலி வாங்கிகிட்டது அவ்வளவு கஸ்டமாவா இருந்துச்சு? எல்லோரும் கிளம்பனதுல இருந்து குடம் குடமா கண்ணீர் விட்டுட்டே இருக்கே! கண்ணீர்ல வீடு நனைஞ்சு ஈரமா போச்சுன்னா நீதான் புது பொண்ணுன்னும் பார்க்காம மோப் போடனும்! என்னால குனிஞ்சு நிமிர்ந்து இந்த வேலைலாம் செய்ய முடியாது”

வெங்கியை முறைத்துப் பார்த்தார் மீரா.

“ஆசையா லுக் விடறதெல்லாம் அப்பறம் பண்ணலாம், இப்ப டீ குடி” என கப்பை மீராவின் உதட்டருகே எடுத்து சென்றார் வெங்கி.

கப்பை வாங்கி மெல்ல அருந்தினார் மீரா. பாதியை வெங்கிக்கும் கொடுத்தார் அவர்.

“பாதி பாதி குடிச்சிக்கிறது, கடிச்சிக்கறது எல்லாம் நைட்ல தான் மீராக்குட்டி! இது முழுக்க உனக்கே உனக்குத்தான்”

“மக வீட்ட விட்டுப் போயிட்டா, கொஞ்சமாச்சும் மனசு பதறுதா பாரேன்! எந்த நேரத்துல ரோமென்ஸ் பண்ணறதுன்னு விவஸ்தை இல்லை” கப்பை டேபிளில் வைத்து விட்டு வெங்கியின் காதைப் பிடித்துத் திருகினார் மீரா.

“வலிக்குது விடுடி. இதே, நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டே பாத்துக்கோ!”

“என் தலைவர் பாட்ட எனக்கே பாடி காட்டறீங்களா?” இன்னும் காதைத் திருகினார் மீரா.

மீராவின் கையில் இருந்து தன் காதை விடுவித்துக் கொண்டவர், அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

“கவி கிளம்பிட்டான்னு எனக்கு மட்டும் கவலை இல்லையா மீரா! நெஞ்சு நிறைய இருக்கு! எப்பவோ ஒரு நாள் கல்யாணம் ஆகி போக போறவத்தானே, அதை நினைச்சுச் தான் மனச தேத்திக்கிட்டேன். நம்ம மருமகன் சொல்லிட்டுப் போனத மறந்திட்டீயா? கொஞ்ச நாள் தனிச்சு இருந்தா அவளும் நம்மள சார்ந்து இருக்காம மணி கூட சேர்ந்து இருப்பா. அதான் மணி அவள நல்லா பார்த்துக்குவேன், நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாம சந்தோஷமா இருங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்கான்ல. விடு மணி பார்த்துப்பான்”

“எனக்கு வேற வழி தெரியல வெங்கி சார். அதிரடியா கல்யாணத்த நடத்த வேண்டியதாப் போச்சு. நல்ல வேளை பாதியில நீங்க புரிஞ்சுகிட்டு ஒத்துழைச்சீங்க!”

“நான் கொஞ்சம் விவரமா இருக்கவும் புரிஞ்சுகிட்டேன்! ஏன் இந்த திட்டத்தப் பத்தி முதல்லயே என் கிட்ட சொல்லல?” என கேட்டார் வெங்கி.

“சொன்னா என்ன செஞ்சிருப்பீங்க? உடனே ஓடிப் போய் லாக்கருல உள்ள நகையெல்லாம் அள்ளிட்டு வந்துருப்பீங்க! இத போடு அத போடுன்னு கவிய டார்ச்சர் பண்ணிருப்பீங்க! ஈன்னு இளிச்சிட்டே சுத்திட்டு இருந்துருப்பீங்க! உங்க மக படக்குன்னு என்னமோ நடக்குது, மர்மமா இருக்குதுன்னு கண்டுப்பிடிச்சிருப்பா. உடனே எஸ் ஆகியிருப்பா!”

“அது என்னமோ நெஜம்தான். என்னோட ஒவ்வொரு அசைவையும் படிச்சு வச்சிருக்காளே! அவ எனக்கு இன்னொரு அம்மா!” லேசாக கண் கலங்கினார் வெங்கி.

அவரை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் மீரா. வாகாக தலை வைத்துக் கொண்ட வெங்கி,

“மல்லிகையும், புது சேலை வாசமும் அப்படியே அள்ளுதுடி. ஃபர்ஸ்ட் நைட் இல்லாம ஃபர்ஸ்ட் பகல் இப்பவே வச்சுக்கலாமா?” என கேட்டு தானாகவே ஆப்பு வைத்துக் கொண்டார்.

“எட்டப் போங்க! பாவம் மனுஷன் கண் கலங்கறாரேன்னு கட்டிப் புடிச்சா உடனே வேலையை காட்டறது” என தள்ளி விட்டார் வெங்கியை.

சிரிப்புடன் விலகிய வெங்கி, மீராவை இழுத்து அணைத்து தன் நெஞ்சோடு பொத்திக் கொண்டார்.

“உன் மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா மீரா? நீ முதன் முதலா இந்த வீட்டுக்கு வந்தப்ப, பொய் சொல்லி வந்துருக்கன்னு கோபம் தான் உன் மேல! அதுவும் நீ அழுகவும் லேசா குறைஞ்சிருச்சு. ஒழுங்கா இருக்கியா, இல்ல எதாச்சும் சேட்டை செய்வியான்னு எப்போதும் உன் மேல ஒரு கண்ண வச்சிருப்பேன். அப்போ கண்ண வைக்க ஆரம்பிச்சதுதான் அதுக்கு மேல கண்ண எடுக்கவே முடியல என்னால. என்னையும் கவியையும் நீ    பார்த்துகிட்ட பாங்குல என்னையே உன் கிட்ட தொலைச்சிட்டேன். ஆனாலும் ரொம்ப தயக்கம், கலக்கம். வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு எனக்கு இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் தேவையான்னு. உன்னை விடவும் முடியல. மறக்கனும்னு நினைக்க நினைக்க உள்ளுக்குள்ள நுழைஞ்சு ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ! அதனால தான் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தேன். நீ பாவமா பார்க்கறப்போ, என் மேலயே எனக்கு செம்ம கோபம் வரும். மறுநாள் உனக்குப் பிடிச்சதா எதாவது வாங்கிட்டு வந்து வச்சிட்டு தெரியாத மாதிரி இருந்துக்குவேன். வேலைக்காரியா நடத்தறேன்னு வாயில மட்டும்தான் சொல்லுவேன். முடிஞ்ச அளவுக்கு உனக்கு தெரிஞ்சும் தெரியாமலும் வீட்டு வேலைல உதவிக்கிட்டு தான் இருந்தேன். இந்த ஒரு வருடம் எனக்கு  நரகம்டி மீரா”

மீராவை அணைத்திருந்தப் பிடி இன்னும் இறுகியது.

“கவி என்னோட மன போராட்டத்த எப்படியோ கண்டுப் பிடிச்சிருக்கா!”

“எப்படியோ என்ன எப்படியோ! நான் போற இடம்லாம் உங்க கண்ணு பின்னாலயே வந்தா, கவி என்ன ஹேரி கூடத்தான் கண்டுப்பிடிப்பான்” என கலாய்த்தார் மீரா.

“அப்போ, உனக்கும் தெரியுமா உன்னை பார்த்து நான் ஜொள்ளு விட்டது?”

“ஒரே வீட்டுல இருக்கேன், இதை கூட கண்டுப்பிடிக்க முடியாதா? பொண்டாட்டி இல்லாம இருக்கற ஆம்பளையோட வீக்னஸ்னு நான் தெரியாத மாதிரி இருந்துக்கிட்டேன். தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நீங்க என் மேல கையைக் கிய்ய வச்சிருவீங்களோன்னு ஒரு பயம்.”

“சேச்சே! அந்த அளவுக்காடி போவேன்!”

“ஒழுங்குதான்! டேட்டிங் சொல்லி தரேன்னு கிஸ் அடிச்ச ஆளுலாம் உத்தமனுக்கு அக்கா புருஷன் கணக்கா பேசக்கூடாது வெங்கி சார்”

அசடு வழிய சிரித்தார் வெங்கி.

“அது என் தப்பு இல்ல. உங்கண்ணன் சாமு மவன் தப்பு. சட்டமா ஹாலுல வந்து உட்கார்ந்துகிட்டு மீரா ரெடி ஆயிட்டாளான்னு என்னையே கேட்கறான்! எனக்கு அப்படி இருக்கும் சொல்லு? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் லவட்டிக்கிட்டு போன ஃபீல் எனக்கு. உன்னை கொஞ்சம் பயம் காட்டலாம்னு தான் நினைச்சேன். ஆனா உன் அழகுல மெர்சலாகி இச்சு இச்சு இச்சு இச்சு குடு, வச்சு வச்சு வச்சு வச்சு குடுன்னு ஆகிப்போச்சு என் பொழப்பு.”

“ஆகும், ஆகும்!” நொடித்துக் கொண்டார் மீராம்மா.

“மீராக்குட்டி!”

“ஹ்ம்ம் என்ன?”

“அன்னிக்கு அவசர அவசரமா குடுத்துட்டேன் புள்ள! இன்னிக்கு ஆற அமர ஒன்னு குடுத்துக்கவா?”

“ஆசைதான்! கெஸ்ட்லாம் வந்துட்டு போய் வீடே ஒரு வழியா இருக்கு. எழுந்து வாங்க சுத்தம் பண்ணலாம்” என எழுந்துக் கொண்டார் மீரா.

“முத்தம் வச்சி அடுத்த ஸ்டெப்புக்குப் போனா, எப்படியும் நாமளும் கலைஞ்சிதான் கிடக்கப் போறோம். அதுல வீடு கலஞ்சி கிடந்தா கிடந்துட்டுப் போகுதுடி செல்லம்!”

“யோ வெங்கி, போய் வேலைய பாருய்யா!” என சேலையை மாற்ற தன் அறைக்குப் போக முனைந்தார் மீரா.

“நீ இருக்கியே வாயால சொன்னா கேட்கமாட்டேடி! வாயால குடுத்தாத்தான் கேட்ப” என்றவர் மீராவை இழுத்து அணைத்து இதழ் ஒற்றி ஜீரா அருந்திவிட்டே விட்டார்.

“இனிமே என் ரூமுக்கு ஷிப்ட் ஆகிக்க மீரா.” என வெட்கத்துடன் ஓடும் தன் மனையாளை நோக்கி புன்சிரிப்புடன் சொன்னார் வெங்கி.

வெங்கியுடன் வீட்டை ஒழுங்குபடுத்தி, மிச்சம் மீதி இருந்த உணவை சூடு படுத்தி சாப்பிடவே இரவாகிவிட்டது. பின் தனது ரூமுக்கு குளிக்கப் போனார் மீரா. குளித்து முடித்து நைட்டி அணிந்து ரூம் கதவைத் திறந்தவர் காலின் அடியே ஏதோ தட்டுப்படவும் குனிந்துப் பார்த்தார். ரோஜாவின் இதழ்கள். இவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ரோஜா இதழ்களை பயன்படுத்தி பாதை செய்யப்பட்டிருந்தது.

அதை நூல் பிடித்து நடந்துப் போனார் மீரா. ரோஜா பாதை சரியாக வெங்கியின் அறை வாயிலில் முடிவுற்றது.

‘பாரேன் இந்தாளுக்கு அலும்ப! எனக்கு வர வழி தெரியாத மாதிரி ரோஜா பாதை போட்டு வச்சிருக்கறத!’

மீராவின் நெஞ்சில் சில்லென சாரல் மழை அடித்தது வெங்கியின் செயலைப் பார்த்து. கதவைத் தட்ட கை வைப்பதற்குள் கதவு தானாகவே திறந்து கொண்டது. சிரித்த முகத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் நின்றிருந்தார் வெங்கி. ரூமில் இருந்து வெளி வந்தவர், மீரா அசந்து நின்ற சமயம் படக்கென அவரைத் தூக்கிக் கொண்டார்.

“யோ வெங்கி! இறக்குயா, இறக்கு! இடுப்பு புடிச்சுக்கப் போகுது பார்த்துய்யா!” இவர் கத்த கத்த உள்ளே தூக்கிப் போனார் வெங்கி. கட்டிலின் அருகே வந்ததும் தான் இறக்கி விட்டார். அதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டது. பொய்யாக முறைத்தார் மீரா.

“இதென்ன கூத்து? எதுக்கு என்னைத் தூக்குனீங்க?”

“இதெல்லாம் என் சின்ன வயசு ஆசைடி! முதல் இரவு அறைக்குள்ள வர பொண்டாட்டிய அலுங்காம தூக்கி தட்டாமாலை சுத்தி கட்டிலுல தூக்கிப் போட்டு நானும் கூட விழனும்னு. இப்போ என்னால இங்க வரைக்கும் தூக்கிட்டு வர மட்டும்தான் முடிஞ்சது. தூக்கி சுத்தல்லாம் முடில. மன்னிச்சுக்கடி”

மீரா வாய் விட்டு சிரித்தார். அவர் சிரிப்பதையே ஆசையாக பார்த்திருந்தார் வெங்கி. பின் கையில் வைத்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினார் அவர்.

“என்னதிது?”

“உனக்காக நானே வாங்கன சேலை! போன தடவை இந்தியாவுக்கு செமினார் போனப்போ வாங்கிட்டு வந்தேன். இப்போ கட்டிக்கோ ப்ளிஸ் மீரா!”

“ரவிக்கை?”

“அதெல்லம் எதுக்குடி? அப்படியே முதல் மரியாதை ராதா மாதிரி கட்டிக்கிட்டு வா. நான் தானே பார்க்கப் போறேன்”

“யோவ்!”

“சரி, சரி கோச்சிக்காதே! வேற எதாச்சும் ப்ளவுஸ் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கடி செல்லம். இந்த சேலையோட ப்ளவுச மெதுவா தைச்சிக்கலாம்” தாடையைப் பிடித்துக் கொஞ்சிக் கெஞ்சினார் வெங்கி.

மீராவுக்கு கண்கள் லேசாக கலங்கியது. வெங்கிக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார். தனது ரூமுக்குப் போய் சேலையைக் கட்டும் போது கூட வெங்கியின் நடவடிக்கையே மனதை நிறைத்தது அவருக்கு. வெங்கிக்கு இது முதல் திருமணம் இல்லை. ஆனால் தனக்கு இது முதல் மணமாயிற்றே. தன்னை மகிழ்விக்கவே இப்படி எல்லாம் செய்கிறார் என புரிந்தது. கொஞ்ச நஞ்சம் மனதில் இருந்த தயக்கங்களும், பயங்களும் கண்ணில் வழிந்த கண்ணீரோடு கரைந்துப் போனது மீராவுக்கு.

தவமாய் தவமிருந்தும் அந்த மீரா இறந்து தான் கண்ணனை சரண் அடைந்தார். ஆனால் இந்த மீராவுக்கு உயிர் இருக்கும் போதே கண்ணான கண்ணனாய் குறும்புக்கார வெங்கி காதலை அள்ளி வழங்குவது பெரும் பாக்கியமாக இருந்தது. கட்டி அணைத்து மஞ்சத்தில் வீழ்த்தி மெய் இணைவது மட்டுமா காதல்? மெய் தீண்டாமலே தன் அக்கறையால், பாசத்தால் மனதை தீண்டுவதும் காதல் அல்லவா! அதில் வெங்கி மீராவின் மனதை அள்ளி சுருட்டிக் கொண்டார்.

பதினைந்து நிமிடங்கள் ஆகியும் மீரா வராமல் இருக்கவும், அவரைத் தேடி வெங்கியே வந்தார். கட்டிலில் அமர்ந்து கண் மூடி, கன்னத்தில் நீர் வழிய அமர்ந்திருந்த மீராவைப் பார்த்ததும் பதறி போனார். வேக எட்டு வைத்து நெருங்கி மீராவைத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டார் வெங்கி.

“என்னம்மா இது? நல்ல நாளும் அதுவுமா அழுதுகிட்டு! ஷ்ஷ்!!!! அழாதேடா பட்டுக்குட்டி!” தலையைத் தடவி ஆறுதல் படுத்தினார் வெங்கி.

“வெங்கி சார்!” தேம்பியபடியே அழைத்தார் மீரா.

“என்னம்மா?”

“நான் உங்கள டாவடிக்கறேன்!”

“என்னாது?”

“ஐ லவ் யூன்னு எங்கூரு பாசையில சொன்னேன்”

வாய் விட்டு சிரித்தார் வெங்கி.

“நானும் உன்னை டாவு டாவா அடிக்கறேன் மீரா”

மீராவின் அழுத முகத்தை நிமிர்த்தி, தன் உதட்டால் கண்ணீரைத் துடைத்தார் வெங்கி.

“இனி நீ அழவேக்கூடாது மீரா! என்னை மட்டும்தான் அழ வச்சு சந்தோஷப்படனும்”

“என்னைப் பார்த்தா புருஷன அழ வச்சு சந்தோஷப்படுற ராட்சசி மாதிரியா இருக்கு?”

“சேச்சே! நான் எப்படி அப்படி சொன்னேன்? கோபம் வந்தா ரத்தம் கேட்கும் காட்டேரி மாதிரி செவசெவன்னு சிவந்துப் போய் நிப்ப! எரிச்சல் வந்தா முகம் வெளிரி போய் மோகினிப் பிசாசு மாதிரி இருப்ப! கடுப்புல இருந்தா குட்டி சைத்தான் மாதிரி குறுகுறுன்னு பார்ப்ப! மத்தப்படி நீ தேவதைதான்”

தன்னைக் கட்டியபடியே நின்றிருந்த வேங்கியைப் பட்டென கட்டிலில் தள்ளிவிட்டார் மீரா.

“யாரப் பார்த்து காட்டேரி, மோகினிப் பிசாசு, குட்டி சைத்தான்னு சொன்னீங்க? என்னையா? என்னையா? அதெல்லாம் என்ன பண்ணும் தெரியுமா?” என கேட்டவாறே வெங்கியின் கன்னத்தைப் பலமாகக் கடித்து வைத்தார் மீரா.

“ஐயோ சந்திரன ஆராய்ச்சிப் பண்ணுற எனக்கு சந்திரமுகியே பொண்டாட்டியா வந்துட்டா!” என கூச்சல் போட்டார் வெங்கி.

“கத்தாதய்யா யோவ், வெங்கி!” என அவரின் வாயைக் கையால் பொத்திய மீராவை திருப்பிப் போட்டு தன் முத்தத்தால் அவரின் பேச்சை நிறுத்தினார் வெங்கி. மீராம்மா எனும் கருந்துளையில் (ப்ளாக் ஹோல்) விரும்பியே விழுந்து காணாமல் போனார் வெங்கடேஷ ப்ரசாத்.

 

(கொட்டும்)