SSKN — epi 21

அத்தியாயம் 21

 

ஒரு பூவிலும்

மணம் பார்க்காதவள்

உன் வேர்வையில்

புது மணம் பார்க்கிறேன்…

 

“இப்போ எதுக்கு விழுந்து விழுந்து வேலைத் தேடிட்டு இருக்க நீ?”

சமையலறையில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த மணியின் பின்னால் நின்று காட்டுக் கத்தல் கத்தினாள் கவி.

கவி என ஒரு ஜந்து அங்கிருப்பதாகவே கண்டுக் கொள்ளாமல் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே வாணலியில் கரண்டியை வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தான் மணி.

அவன் என்ன பாடுகிறான் என கேட்க நெருங்கி வந்தாள் கவி.

“நாலும் நடந்து முடிந்த பின்னே

நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா!!!!”

“என்ன சிச்சுவேஷன் சாங்கா? கேக்க சகிக்கல! இப்ப நீ கிண்டிட்டு இருக்கற சட்டி சுட்டுருச்சுன்னு பாடறியா? இல்ல என்னை சட்டியா நினைச்சு நான் சுட்டுட்டேன்னு பாடறியா?”

அவள் பேசுவதே கேட்காதது போல பாடலைத் தொடர்ந்தான் மணி.

“மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று

ஓய்வு கொண்டதடா!”

“தோ பாரு மணி! பாட்டுல கூட உன் வாயில சாந்தி பூந்தின்னு பொண்ணுங்க பேரு வரத நான் விரும்பல!” அவன் அருகே போய் கரண்டியைப் பிடிங்கியவாறே கத்தினாள்.

அவள் கரண்டியைப் பிடிங்கிக் கொள்ளவும், இவன் விலகி வந்து விட்டான்.

“டேய்! எங்க போற நீ? இந்தக் கரண்டிப் பிடிக்கற வேலைலாம் எனக்கு வராது. ஒழுங்கா வந்து சமைச்சு முடி”

அவள் கத்த கத்த ஹோலுக்குப் போய் விட்டான்.

அடுப்பை அணைத்து விட்டு அவன் பின்னாலேயே ஓடினாள் கவி.

“நம்ம சண்டைய அப்புறமா வச்சுக்கலாம் மணி. ப்ளீஸ் வந்து சமையல முடி! நான் சமைச்சு நீ சாப்பிட்டா , செத்துருவடா! ப்ளீஸ் வா! பசிக்குது” கெஞ்சினாள் கவி.

ஹாலில் இருந்த சோபாவைக் கண்களால் சுட்டியவன், வாயில் விரல் வைத்து அமைதியாக அங்கே அமரும்படி சைகை காட்டினான். அவள் அங்கே போய் அமரவும் தான் கிச்சனுக்குள் நுழைந்தான்.

‘வாயத் திறக்காமலேயே என்னை அடக்கி வைக்கிறான்! இவன் கிட்ட மட்டும் ஏன் நான் அடங்கிப் போறேன்னே தெரில. இவன மடக்க என்ன திட்டம் போட்டாலும் பொசுக்குனு ஊத்திக்குது. சை!’ முனகியபடியே அமர்ந்திருந்தாள் கவி.

அவன் சமைத்து முடித்த பதினைந்து நிமிடமும், போனை நோண்டிக் கொண்டு சோபாவிலேயே சாய்ந்திருந்தாள்.

‘ஓவரா பண்ணுறான். இங்க வந்து இத்தனை நாள் ஆச்சு இன்னும் வாய் பூட்டைத் திறக்கல. நானும் எவ்வளவோ சாரி சொல்லிட்டேன், காலுல கூட விழுந்துட்டேன்! எகிறி குதிச்சு எட்டப் போயிட்டான், ராஸ்கல். இன்னிக்கு ஒரு வழி பண்ணிருறேன் இவன!’ கருவியபடியே பேஸ்புக்கில் பீலிங் டவுன் என ஸ்டேட்டஸ் போட்டு அவளே அதற்கு ஹார்டும் போட்டுக் கொண்டாள். போட்ட சிறிது நேரத்துற்குள் ஹாஹாவைத் தட்டி பலர் கொண்டாடி இருந்தார்கள் அவள் ஸ்டேட்டசை.

‘ஹெப்பி ஸ்டேட்டஸ் போட்டா ஒருத்தன் கூட லைக் போட மாட்டான். சோகமா ஏதாச்சும் போட்டா ஹாஹா வந்து குவியுது. நன்றி கெட்ட உலகமடா! அது சரி, நமக்கு அணுசரனையா எந்த ப்ரேண்ட் இருக்கா? இருந்த ஒருத்தனும் இப்போ புருஷனாகி புயலா சுத்திட்டு இருக்கான்’

போன் மேசேஜ் வந்த ஒலி எழுப்பியது.

“கம், ஈட்!”

‘கிச்சன்ல இருந்துகிட்டே மேசேஜ் அனுப்பறான் பாவி! வாய் திறந்து கூப்பிட்டா முத்து சிந்திரும்!’

மனதில் ஏசியபடியே எழுந்து சாப்பாட்டு அறைக்குப் போனாள் கவி.

உணவின் வாசம் நாசியை நிறைத்தது.

“நல்லா வாசமா இருக்குடா மணி! என்ன சமைச்ச இன்னிக்கு?”

மேசேஜ் டோன் வரவும் போனை எடுத்துப் பார்த்தாள் கவி.

“ஸ்மோக்ட் சால்மன் பாஸ்தா” என மேசேஜ் வந்திருந்தது மணியிடமிருந்து.

அவனும் அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிர்புறம் கவிக்கு உணவை செட் செய்திருந்தான். க்ரீன் டீ ஆவி பறக்க அவள் பாஸ்தாவின் அருகே வீற்றிருந்தது.

இவனுக்கு பாஸ்தா ஒரு தட்டும் ஐஸ் வாட்டரும் வைத்திருந்தான். அவள் நாற்காலியில் அமரும் வரை தட்டை மட்டுமே பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் அமர்ந்து சாப்பிடவும் தான் இவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிடும் போது, அவன் போனுக்கு மேசேஜ் வந்தது. எடுத்து மேசேஜைப் பார்த்தான்.

“சால்மன் கான் பாடியோட உன்னோட பாடி தான் கிண்ணுன்னு இருக்குடா மணி. சோ சால்மன் கான் பாஸ்தாலாம் செய்யாதே இனி. மணி கான் பாஸ்தா போதும் எனக்கு” என மேசேஜ் போட்டு வாயில் இருந்து எச்சில் வழியும் இமோஜியை வரிசையாகத் தட்டி விட்டிருந்தாள் கவி.

சிரிப்பு வரப் பார்த்தது, அடக்கிக் கொண்டான்.

“சிரிப்பு வந்தா சிரிக்கலாம். நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ரொம்ப நல்லா இருக்குடா மணி! உன் கையில என்னமோ மேஜிக் இருக்குடா. மேகி நூடுல்ஸ் செஞ்சா கூட ஆளை அசத்துது. சமையல தவிர இந்த கை வேற என்ன மேஜிக்லாம் செய்யும்? எப்போ அந்த மேஜிக் ஷோவ எனக்குக் காட்டப்போற?” என கேட்டாள்.

அவளுக்கு மேசேஜில் பதில் சொல்ல போனை கையில் அவன் எடுப்பதற்குள் பாய்ந்து வந்துப் பிடிங்கினாள் கவி. அவன் போனை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துக் கொண்டவள்,

“ஒழுங்கா வாய தொறந்து பேசு! இல்ல போனை வாஷிங் மிஷின்ல போட்டுருவேன்” என மிரட்டினாள்.

“என்ன பேசனும்?”

“வாவ் காதுல இன்ப தேன் வந்து பாயுதுடா மணி! எத்தனை நாள் ஆச்சு உன் குரல கேட்டு. ஐ மிஸ் யூடா மணி”

அவள் அப்படி சொல்லவும், பாதி சாப்பாட்டில் எழுந்தான் மணி.

“சரி, சரி! மிஸ் யூ சொல்லல! உட்காந்து சாப்பிடு ப்ளிஸ்” அவள் கெஞ்சவும் மீண்டும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

அதற்கு பிறகு அமைதியாகவே இருவரும் உண்டார்கள். சாப்பிட்டு முடித்து அவன் பாத்திரங்களை கழுவ, அவள் அருகிலேயே நின்று அதைத் துடைத்து அடுக்கினாள். அவன் மேசையைத் துடைக்க அவள் அடுப்பைத் துடைத்தாள்.

அன்று ஹோட்டலில் மணி ‘ஐ ஹேட் யூ டூ த கோர்’ என கத்தியது தான் அவன் கவியிடம் பேசிய கடைசி வார்த்தை. அதற்குப் பிறகு எல்லாமே மேசேஜ் தான். அதோடு இடம் மாறி வந்து, செட்டில் ஆகவும் நேரம் எடுத்தது. ஏற்கனவே அந்த வீடு முழுதாக பர்னீஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. சமையல் பொருட்கள், டாய்லட்டெரிஸ் தவிர வேறு எதையும் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

கவியின் கம்யூட்டர்களை அங்கிருந்து எடுத்து வர உதவிய நிறுவனமே பொருத்திக் கொடுத்து விட்டது. ஏற்கனவே இருந்த அலமாரியுள் இவர்களின் துணிகளை அடுக்கி, இவர்களுக்குப் பிடித்த வகையில் வீட்டுத் தளவாடப் பொருட்களை நகர்த்தி வைத்து என நேரம் பறந்தது.

ரோவனின் பேரில் இருந்து பிரகாஷின் பேருக்கு வந்திருந்த இந்த வீடு இப்பொழுது மணியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. திருமணப் பரிசாக இவர்களுக்கு இந்த வீட்டை எழுதிக் கொடுத்திருந்தான் பிரகாஷ்.

மணி மறுத்துப்பார்த்தான். விலைமதிப்பில்லாத என் அன்பையே உனக்கு அள்ளிக் கொடுக்கிறேன், கல்லால் ஆன இந்த வீடு எம்மாத்திரம் என சொல்லி வாயை அடைத்துவிட்டான் மணியின் ஜீஜூ.

ரோவனும் ஆராவும் மகிழ்ந்து குழாவி பிரகாஷை உருவாக்கிய இந்த வீடு கவிக்கும் மணிக்கும் மகிழ்ச்சியைத் தருமா? அல்லது அவர்களைப் பிரித்து சதி செய்தது போல இவர்கள் வாழ்க்கையிலும் ருத்ரதாண்டவம் ஆடுமா என விதி தான் சொல்ல வேண்டும்.

மணிக்கு விஷயம் தெரிந்ததில் இருந்து குற்ற உணர்ச்சியில் தவித்த கவி, அவன் பாராமுகத்தைத் தாங்கிக் கொண்டு ஒதுங்கியே போனாள். அவன் மாஸ்டர் பெட்ரூமை எடுத்துக் கொள்ள, இவள் அதன் பக்கத்து அறையை எடுத்துக் கொண்டாள்.

தனியாக இருக்கும் போதெல்லாம் நிறைய யோசித்தாள். மண்டை சூடாகி காயும் வரை யோசித்தாள். புது பிஸ்னசை ஆரம்பிக்கும் முன் பல நிறுவனங்கள் ஸ்வோட் ஆனலிசில் செய்வார்கள். தங்களிடம் இருக்கும் வலிமை, வீக்னஸ் ஒரு புறமும், வெளியில் இருந்து தங்களுக்கு வரும் வாய்ப்புகள், இன்னல்களை ஒரு புறமும் லிஸ்ட் போட்டு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து மார்க் போட்டு ஆதாயம் வரும் என தெரிந்தால் மட்டுமே தொழிலைத் தொடங்குவார்கள்.

அது போல கவியும் ஒரு ஸ்வோட் அனலிசிஸ் செய்தாள். மணியுடன் சேர்ந்து வாழ போவதால் தனக்கு கிடைக்கும் நன்மை தீமைகள், மணியால் வரப்போகும் இன்னல்கள், இன்பங்கள் என கட்டம் போட்டு கணக்கு செய்தாள். அவள் போட்ட லிஸ்டில் இன்னல்கள், இன்பங்கள் இரண்டுமே சரி பங்காக இருந்தது. முடிவெடுக்க முடியாமல் மனம் சோர்ந்து போனாள் கவி.

மணி முகம் சிவக்க கழுத்து நரம்பு புடைக்க சொன்ன ஐ ஹேட் யூ விழித்திருக்கும் போதும், தூங்கும் போதும் வந்து இம்சிக்க நொந்துப் போனாள். எப்பொழுதும் சிரித்த முகமாகவே இவள் எந்த சேட்டை செய்தாலும் அனுசரித்துப் போகும் மணியை அப்படி ஆங்காரமாக பார்த்ததை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

என்னதான் வெறுப்பதாக சொல்லி பேசாமல் தள்ளி நிறுத்தினாலும், அவளுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து செய்தான். வீட்டை சுத்தம் செய்வதாகட்டும் அவளுக்கு வேளா வேளைக்கு சமைத்துப் போடுவதாகட்டும் எதிலுமே அவன் முகம் சுளிக்கவில்லை.

கம்பர்டபிள் சைலென்ஸ் என்பார்களே அதைப்போல் ஒரே ஹாலில் அமர்ந்திருப்பார்கள், ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள் ஆனால் மௌனமே இருவரிடம் பேச்சு வார்த்தையாக இருக்கும்.

இதுவே தொடர்ந்தால் சாகும் வரை நண்பர்களாகத்தான் இருப்போம் என கவி தான் முதலில் தெளிந்தாள். மனதில் கண்டதையும் நினைத்து கொண்டு தன்னையும் வருத்தி அவனையும் வருத்த வேண்டாம் என முடிவெடுத்தாள் கவி. இனி எக்காரணம் கொண்டும் தானாக அவனைப் பிரிய நினைக்கக்கூடாது என உறுதி எடுத்தாள்.

‘சீப்போன்னு நீயா துரத்துனா மட்டும்தான் இந்தக் கவி இனிமே உன்னைப் பிரிஞ்சுப் போவாடா மணி! எனக்குத் தெரியும் எப்படியும் ஒரு நாள் அது நடக்கும்னு! நான் கண்டிப்பா உனக்குத் தாங்க முடியாத தொல்லையா போயிருவேண்டா மணி. ஆசையா என்னைப் பார்த்த நீ வெறுப்பா பார்த்துறக் கூடாதேன்னு மனசு கடந்து அடிச்சிக்கிது. அப்படி எதுவும் நடக்கறதுக்குள்ள உன்னில் ஒரு பாகத்தை எனக்குள்ள எடுத்துட்டுப் பிரிஞ்சு போகனும்னு நினைச்சேன். ஆனா விதி சதி செஞ்சிருச்சு. இனி எதையும் போட்டு மனச குழப்பிக்காம உன் கூட சந்தோஷமா இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். தெ ரெஸ்ட் இஸ் இன் தெ காட்ஸ் ஹேண்ட்’ கடவுள் மேல் பாரத்தைப் போட்டவள், அவனோடு சேர்ந்து வாழ தன்னாலான முயற்சியை எடுக்க ஆரம்பித்தாள்.

அதன் ஆரம்பமாகத்தான்  இவளே வலிய போய் அவனிடம் பேச ஆரம்பித்தாள். அவன் ரேஸ்பாண்ஸ் செய்யாவிட்டாலும் விடாமல் பேசினாள். முதலில் அறவே முகம் பார்க்க மறுத்தவன், கேட்ட கேள்விக்கு மேசேஜில் பதில் அளிக்கத் தொடங்கி இப்போது பேசவே ஆரம்பித்திருந்தான்.

மணி ஹாலில் போய் உட்கார, அவன் பக்கத்தில் நெருக்கிக் கொண்டு அமர்ந்தாள் கவி.

“சுத்தி நாற்காலி இருக்குத்தானே, தள்ளிப் போய் உட்கார்ந்தா ஆகாதா?”

“நான் பேசறது நல்லா கேட்கனும்ல! அதான் கிட்ட உட்கார்ந்தேன் மணி! காட் ப்ராமிஸ், வேற எந்த எண்ணமும் எனக்கு இல்ல மணி”

நம்பிட்டேன் உன்னை என்பது போல ஒரு லுக் விட்டவன், வேறு ஒன்றும் சொல்லவில்லை.

“உன்னோட லேப்டாப்ல பார்த்தேன் நீ வேலை தேடறத! நான் தான் நல்லா சம்பாரிக்கறேன்ல! புது ஊர்ல வந்து நீ ஏன் கஸ்டப்படனும்? நான் சம்பாரிச்ச காசுன்னா நீ யூஸ் பண்ண மாட்டியா? அது என்ன புருஷன் சம்பாரிக்கனும், பொண்டாட்டி செலவு செய்யனும்? பொண்டாட்டி சம்பாரிச்சா அதுல புருஷன் செலவு செய்யக்கூடாதா? நான் சம்பாரிக்கறதெல்லாம் உனக்குத்தான் மணீ! நீ வேலைக்குலாம் போக வேணாம்”

“நான் போகனும்”

“வேணாம்னு சொல்லறேன்ல! சம்டைம்ஸ் ரொம்ப ஸ்கீன் கலர் பார்ப்பாங்கடா இங்க! உன்னை எவனாச்சும் எதாசும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாது. நம்ம பேரப்பிள்ளைங்க உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நான் சம்பாரிச்சு வச்சிருக்கேன்! இன்னும் கேம்ஸ் வழியா ராயல்ட்டி வந்துட்டே தான் இருக்கு! என்ன அவசியம் நீ வெளிய போய் வேலைப் பார்க்க? ஒரு மண்ணும் வேணா”

“வீட்டுலயே இருந்து நித்தம் உன் முகத்தப் பாத்துட்டே இருந்தா நான் மூச்சு முட்டி செத்துருவேன் கவி. பணம் எனக்குப் பிரச்சனை இல்ல. என்னோட பிஸ்னஸ் நல்லாவே போகுது இந்தியாவுல!”

“ஹ்ம்ம் தெரியும்!”

“என்ன தெரியும்?”

“நீ எக்ஸ்க்லூசிவ் ஜிம் வச்சு நடத்தறன்னு தெரியும். நிறைய கிளைகள் இருக்கு, ஆக்டர்லாம் அங்கத்தான் ரெகுலரா வராங்கன்னு எல்லாம் தெரியும்”

“அதானே பார்த்தேன்! என்னைப் பத்தி இன் அண்ட் அவுட் நியூஸ் கேதர் பண்ணி உன்னோட மிஷன் மணி ஃபைல்ல வச்சிருக்கியே, என்னோட பணவரவெல்லாம் தெரியாமலா இருக்கும்? அது சரி, என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்லாம் எப்படிடி கிடச்சது?”

“மணி, தி ஜீனியஸ் கவிகிட்ட பேசிட்டு இருக்க நீ! கம்யூட்டர்ல கில்லி நானு. உன் கிட்ட பேச்சு வாக்குல பேமிலியா நீங்க போற ஹாஸ்பிட்டல் பத்திலாம் கேட்டு தெரிஞ்சிகிட்டது எதுக்கு? கீபோர்ட்ல நாலு தட்டுத்தான், உன் ரிப்போர்ட்லாம் என்னைப் பார்த்து பல்லிளிச்சிருச்சு. அஸ் சிம்பிள் அஸ் தட்” முகத்தில் பெருமை பொங்க சொன்னாள் கவி.

“பண்ணறது கேப்மாரித்தனம், அதுல பெருமை வேறயா உனக்கு? இங்க பாரு கவி, நீ சம்பாரிச்சத யூஸ் பண்ண எனக்கு எந்த தயக்கமும் இல்ல. எதுக்குத் தயங்கனும்? கல்யாணம் செய்யறதே வாழ்க்கையில் சுக துக்கங்களை சரி சமமா பங்குப் போட்டுக்கத்தான். அதுல உன் காசு என் காசுன்னு என்ன பேதம்? அந்த மாதிரி வெட்டி ஈகோலாம் எனக்கு இல்ல.”

“நிஜமாவா மணி? இப்படி ஈகோலாம் பார்க்க மாட்டியா? நெஜமா?” குரலில் அவ்வளவு சந்தோசம் கவிக்கு.

“ஈகோ, வெட்டி பந்தா, ஆம்பளைத் திமிரு இதெல்லாம் என் கிட்ட சுத்தமா இல்ல. எனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணியிருக்க நீ, உன் மேல நெஞ்சு நிறைய கோபம் இருக்கு! ஆனாலும் நீ மூஞ்ச மூஞ்ச பார்க்கறப்போ என்னால திருப்பிக் கிட்டுப் போக முடியல. நீயா இறங்கிப் பேசறப்போ போடின்னு போகவும் முடியல. அதுதான் மணி. என்னோட இந்த குணம் தான் உனக்கு இளக்காரமா போயிருச்சு. இளிச்சவாயன் இவன், தலையில மொளகா அறைச்சிறலாம்னு நெனைச்சுட்டே!”

திரும்பவும் அவன் பழைய விஷயத்துக்குத் தாவவும் கப்சிப் என ஆனாள் கவி.

“என்னால உன்னை மன்னிக்க முடியும். ஆனா நீ செஞ்ச துரோகத்தை மறக்க முடியாது. ஐ நீட் சம் பெர்சனல் ஸ்பேஸ். நீ வீட்டுலயே இருந்து வேலைப் பார்க்கற. நான் வெளியே போய் வேலை செஞ்சா நமக்கு கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும். இல்லைனா ஒருத்தர் முகத்த ஒருத்தர் இருபத்தி நாலு மணி நேரமும் பார்த்துக்கிட்டே ரொம்ப எரிச்சலா ஆகிரும். புரியுதா கவி?”

புரிகிறது என தலையை ஆட்டினாள் கவி.

“எப்படியும் கொஞ்ச நாளைக்கு அதாவது என் கூட வாழப் போறியா இல்ல பிச்சுக்கிட்டு ஓடப் போறியான்னு நீ முடிவு எடுக்கற வரை நாம சேர்ந்துதான் இருக்கப் போறோம்! சோ இனி உன் கிட்ட ஒழுங்கா பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன். லெட்ஸ் டூ லிவிங் டூகேதர் கவி! மைனஸ் தெ தாங்கடதக்கதகதின!” மெல்லிய சிரிப்பு அவன் முகத்தில்.

அன்றைய இகுலிபிரிய விளக்கம் நினைவுக்கு வர கவியின் முகம் மலர்ந்து போனது. மணியின் சூடான அணைப்பும் தங்களின் முதல் முத்தமும் ஞாபகம் வர முகம் சூடாகி சிவக்க, ஆசையாக மணியை நோக்கினாள்.

அவள் பார்வை மாற்றத்தைப் பார்த்த மணி சட்டென எழுந்து நின்றுக் கொண்டான்.

“எனக்கு தூக்கம் வருது. நீ போய் குளிச்சிட்டுப் படு கவி! குட் நைட்” என சொல்லியவன் தனது ரூமை நோக்கி விடுவிடுவென நடந்தான். நடந்து செல்பவனையே ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் கவி.

“இன்று முதல் இரவு

நீ என் இளமைக்கு உணவுன்னு இந்த ஜென்மத்துல என்னைப் பார்த்து  பாட மாட்டியா மணி?” அவனுக்கு கேட்கும்படி சத்தமாகவே முணுமுணுத்தாள் கவி.

அவன் நடை சட்டென நின்றது. தலையை அழுந்தக் கோதிக் கொடுத்தவன், திரும்பிப் பார்க்காமலே தன் ரூமில் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்.

கடுப்பில் அவன் ரூமுக்கு வெளியே போய் நின்றவள் சத்தமாக,

“இதயமே இதயமே

உன் மௌனம் என்னைக் கொல்லுதே

இதயமே டேய் இதயமே

என் விரகம் என்னை வாட்டுதே” என கர்ணகொடுரமாகப் பாடி விட்டு

“குட் நைட் டா மட்டி மணி” என கத்தலுடன் தன் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

கம்யூட்டரின் முன்னால் அமர்ந்து தன் வேலைகளை கொஞ்சம் செய்தவள், கசகசவென இருக்கவும் குளிக்கப் போனாள். குளித்து முடித்து, எப்பொழுதும் அணியும் நைட் பேண்டையும், டீசர்டையும் போட்டுக் கொண்டு தலையைத் துவட்டிக் கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அவள் கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மணி வைத்தக் கண் வாங்காமல் அவளையேப் பார்த்திருந்தான்.

“எ..என்ன?”

“பால் பாயாசம் செஞ்சிருக்கேன்!”

“எ..எதுக்கு?”

“என்ன எதுக்கு? மறந்துட்டியா கவி? நம்ம முதல் இரவுக்கு அல்வாவுக்கு பதிலா பாயாசம் வச்சிக்கலாம்னு சொல்லி இருந்தேனே?”

“முதல் இரவா?” தந்தி அடித்தது அவள் குரல்.

“ஆமாடி பட்டுக்குட்டி, இன்று முதல் இரவுதான்.

வரவா வந்து தொடவா

உன் ஆடைக்கு விடுதலை தரவா?”

என மெல்ல நெருங்கியவனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் கவிலயா.

 

(கொட்டும்)