SSKN — epi 23

அத்தியாயம் 23

 

ஆசை வெள்ளம் பாயும் போது

வங்க கடலும் வாய்க்கால் தான்

அன்பே வா!!!!

 

படம் முடிய பதினொன்றுக்கும் மேல் ஆகிவிட்டது. அங்கே பஸ், டாக்சி என பொது போக்குவரத்து இருந்தாலும் சப்வே என அழைக்கப்படும் ரயில் சேவையும் மிக முக்கியமானது. இருவரும் ரோட்டோரம் இருக்கும் ஸ்டாலில் ஹாட்டோக் வாங்கி சாப்பிட்டப்படியே சப்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள்.

“நடு ராத்திரி ஆகுதுடி. வீட்டுல இருந்துருந்தா இந்நேரம் ஒரு ரவுண்ட் முடிஞ்சிருக்கும். படத்துல இவனுங்க பாஞ்சு, பறந்து, நெருப்பு விட்டு சண்டை போடறத கஸ்டப்பட்டு என்னைப் பார்க்க வச்சுட்ட” சலித்துக் கொண்டான் மணி.

“உன்னைப் போய் இந்தப் படம் பார்க்கக் கூட்டிட்டு வந்தேன் பாரு, என் புத்திய! இங்கிலீசு படத்துல மோஸ்ட்லி ரேப் இருக்காது மணி! உன் டேஸ்ட்டுக்கு தமிழ் படமோ, இந்தி படமோ வந்துச்சுனா கண்டிப்பா கூப்டு வரேன்”

“ஏய், என்னடி லந்தா? எனக்கு ரேப் படம் பிடிக்கும்னு நான் எப்போடி சொன்னேன்?”

“சொன்னாதான் தெரியுமா? அதான் நீ என்னை தினம் ரேப் பண்ணறதுலயே தெரியலையா!”

அவன் முகம் போன போக்கைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள்,

“மணி ரேப்பிஸ்ட்! ரேப்பிஸ்ட்கெல்லாம் ரேப்பிஸ்ட்” என கத்தினாள். சுற்றி உள்ளவர்கள் இவர்கள் இருவரையும் ஒரு மாதிரி பார்க்க, கவியின் வாயைப் பொத்த துரத்தினான் மணி. அவனிடம் அகப்படாமல் ஓடினாள் அவள்.

இருவரும் ஓடியே சப்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். சிரித்தப்படியே தங்களிடம் இருக்கும் சப்வே பாஸ் வைத்து உள்ளே நுழைந்தார்கள். ரயில் வரும் வரை இருவரும் பார்த்தப் படத்தைப் பற்றி பேசி சிரித்தப்படி நின்றிருந்தார்கள். ரயில் வந்ததும் உள்ளே நுழைந்து காலியான இருக்கையில் அமர்ந்தார்கள். அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த வெள்ளைக்காரப் பெண், தன் காதலன் தோளில் சாய்ந்திருந்தாள்.

“மணி, அவள பாரேன்! என்னமோ அவளுக்கு மட்டும் தான் பாய்ப்ரேட்ண்ட் இருக்கற மாதிரி சீன் போடுறா! ஏன் அவளால மட்டும்தான் சாய முடியுமா? நானும் சாய்வேன், எனக்கும் புருஷன் இருக்கான்” என சொல்லியவள் மணியின் தோள் வளைவில் சாய முயன்றாள், எட்டவில்லை.

“டேய் நெட்டைக் கொக்கு, கொஞ்சம் கீழ சரிஞ்சு உட்காரு!”

முகத்தில் சிரிப்புடன் சரிந்து அமர்ந்தான் மணி. வாகாக அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் கவி. இங்கே நடக்கும் கூத்தை அறியாத எதிர் சீட்டுப் பெண், தன் காதலனின் கழுத்தில் மூக்கை வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“பாரேன்! எப்படி தேய்க்கறான்னு! நானும் தேய்ப்பேன், எனக்கும் புருஷன் இருக்கான்” என மணியை நெருங்கினாள் கவி.

“வேணான்டி! நான் இன்னும் குளிக்கல.”

“குளிக்கலைனா என்னா? உன்னோட வியர்வை வாசம் கூட பெர்பியும் வாசம் மாதிரி ஜிவ்வுன்னு தான் இருக்கும்!”

“கவி, சுத்தி ஆளுங்க இருக்காங்கம்மா! மூக்க வச்சு தேய்ச்சிக்கறதெல்லாம் வீட்டுல போய் வச்சிக்கலாம்டா! ப்ளீஸ்” நெளிந்தான் மணி.

“சுத்தி ஆளுங்க இருந்தா என்ன? நீ என் ஹஸ்பெண்ட் தானே? டீஷர்ட் காலர நகர்த்து! நானும் அவள மாதிரியே செய்யனும்” அவன் நெளிய நெளிய மூக்கை வைத்துத் தேய்த்தாள் கவி.

“சரியான இம்சைடி நீ!”

இவள் மணியின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்த்த சீட்டில் லிப் டூ லிப் ஆரம்பித்திருந்தார்கள்.

‘ஐயோ! இதுங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையா! இத வேற இந்த குட்டி சைத்தான் பாத்துச்சுனா, எல்லார் முன்னுக்கும் என் உதட்ட கடிச்சு வைச்சிருமே!’ மனதிலேயே அலறியவன் அவளை தன் கழுத்திலேயே இறுக்கி நகராமல் வைத்துக் கொண்டான்.

“விடுடா, மூச்சு முட்டுது”

“வாசம் பூ வாசம், மணியின் கழுத்துல வீசும்னு இப்பத்தானே பாட்டா பாடுன. இறங்கற வரை அப்படியே இரு”

அடுத்த ஸ்டேசனில் அந்த ஜோடி இறங்கி விடவும்தான் அவளை விலக்கினான் மணி.

“உன் புருஷன்னு உனக்கு தெரிஞ்சா பத்தாதா? ஊருக்கே காட்டனுமா லயனஸ்?”

“நான் காட்டுவேன்! அவ பாய்ப்ரேண்ட் ரொம்ப மொக்கையா இருக்கான்! அதுக்கே அந்த பில்ட் அப் குடுக்கறா அவ! நீ எவ்வளவு ஹேண்ட்சமா இருக்க, இவன் என் ஆளுன்னு நான் காட்டிக்கக் கூடாதா?”

“அதில்லைடி..”

அவன் இன்னும் பேச வருவதற்குள்,

“போதும் நிறுத்து மணி! நான் உனக்குப் பொருத்தமா இல்லைன்னு தானே மத்தவங்க முன்னுக்கு என்னை நெருங்க விட மாட்டற!” கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.

“சரியான பைத்தியம்டி நீ! இப்ப என்ன நான் உனக்குத்தான்னு ஊருக்கே காட்டனும், அவ்வளவுதானே? சரிடி, என்ன வேணா பண்ணிக்கோ! வா!”

பட்டென அழுகை நின்றது கவிக்கு.

“நெஜமாவா மணி?”

“சத்தியமாடி!”

கண்ணைத் துடைத்துக் கொண்டவள், அவன் முகத்தை நெருங்கினாள்.

தனது பெரியப்பா தமிழ் வாத்தியின் போதனையில்,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும் “ என அடித்து அடித்துப் பயிற்றுவிக்கப் பட்டவன் தன் காதலியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க மற்றவர்கள் முன் முத்தமிட்டுக் கொள்வதை அனுமதித்தான்.

அவன் முகத்தையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவள், கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு நகர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

“ஏன்டி கன்னத்தோட நிறுத்திட்ட?”

“கன்னத்துக்குக் குடுத்ததுக்கே பாக்கியராஜ் அந்த ஏழு நாட்கள் படத்துல கிஸ்சோ அப்படின்னு கேட்ட மாதிரி முகத்த வச்சிருக்க! லிப்ல குடுத்துருந்தா, அழுதுருப்ப போல! நானும் தமிழச்சிதான், எனக்கும் பச்சை பயிரேல்லாம் இருக்கு” வாய் விட்டு நகைத்தாள் கவி.

“பச்சைப் பயிரா?”

“அதான்பா அந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”

“ஓ, இருக்கா? அப்பாடா, இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு! இத்தனை நாள் பழக்கத்துல இதெல்லாம் நீ டீசரா கூட காட்டனது இல்லையே லயனஸ்!”

“இதெல்லாம் ஆத்துக்காரு கிட்ட காட்டத் தேவையில்லையாம் மணி! கட்டிக்கிட்டவன் கிட்ட மட்டும் அச்சப்படாம மிச்சத்தையும் காட்டனுமாம், மடத்துக்கு பதில் நல்லா படம் காட்டனுமாம், நாணத்தைத் தூக்கிப் போட்டுட்டு அப்படியே சரணமாயிடனுமாம், பயிர்ப்ப ஒதுக்கிப்புட்டு உயிர்ப்பா ஈருடல் ஓருயிர் ஆகிடனுமாம். அப்போத்தான் இல்லறம் இனிக்குமாம்”

“பார்டா! என் ஜீனியஸ் என்னமா புது மொழி சொல்லுது!” பூரித்துப் போனான் மணி.

அதற்குள் அவர்கள் ஸ்டேசன் வந்திருந்தது. சப்வேயிலிருந்து வெளியேறியவர்கள், கைக்கோர்த்துக் கொண்டு மெல்ல தங்களின் வீடிருக்கும் பகுதிக்கு நடந்தார்கள். ரயில் ஸ்டேசனில் இருந்து அவர்கள் வீட்டுக்குப் போக இருபது நிமிடங்கள் நடக்க வேண்டும். அன்றுப் பார்த்து மெயின் ரோடுக்கு வரும் முன், இவர்கள் பயன்படுத்தும் குறுக்குப் பாதையில் விளக்கு வெளிச்சம் இல்லாது இருட்டாக இருந்தது. கவியின் கையை இறுகப் பற்றிக் கொண்டான் மணி.

“சீக்கிரம் நட கவி! மெயின் ரோடுக்கு போயிரலாம்! இங்க ஆள் நடமாட்டம் இல்லாம இன்னிக்குன்னுப் பார்த்து இருட்டா இருக்கு”

இருவரும் நடையை எட்டிப் போட்டார்கள். வெளிச்சம் இருக்கும் மெயின் ரோடை அடைவதற்குள் திடீரென இருவர் இவர்களை சுற்றிக் கொண்டார்கள். இருட்டில் கருப்பர்களா, வெள்ளையர்களா என கூட தெரியவில்லை. சட்டென கவியைத் தன் பின்னால் மறைத்துக் கொண்டான் மணி.

“அசையாதீங்க! சுட்டுத் தள்ளிருவேன்” என சின்னக் குரலில் எச்சரித்தான் அதில் ஒருவன். இருவரும் பார்க்க வாட்டசாட்டமாக இருந்தனர். அதில் ஒருவன் துப்பாக்கி ஏந்தி இருந்தான். அவர்கள் கையில் துப்பாக்கி இல்லையென்றால் மணி இந்நேரம் பந்தாடி இருப்பான். இவன் அசட்டுத் துணிச்சலில் ஏடாகூடமாக ந்ந்தாவது செய்யப் போய், சுட்டுத் தள்ளி விட்டுப் போய் விடுவார்களே! எத்தனை செய்திகளில் காட்டுகிறார்கள். கவியோ அவன் பின்னால் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“சுட்டுறாதே! என் கிட்ட உள்ள பணத்தை எல்லாம் தரேன்” என்ற மணி பாக்கேட்டில் இருந்த வாலட்டை தூக்கி தரையில் எறிந்தான்.

துப்பாக்கி வைத்திருந்தவன், மணியைக் குறிப்பார்த்திருக்க, அடுத்தவனோ வாலட்டைப் பொருக்கிக் கொண்டான்.

“உன் ஆளோட பேக்கையும் குடுக்க சொல்லு”

“கவி பேக்கை குடுத்துரும்மா”

இவனைப் போலவே கையில் வைத்திருந்த அவளின் விலை உயர்ந்த எல்.வீ பேக்கை கீழே எறிந்தாள் கவி. அவள் எறிந்த வேலையில் கையில் போட்டிருந்த டைமண்ட் ரிங் நிலவொளியில் பளீரிட்டது.

“டைமண்ட் ரிங்! பாருடா, நம்மா ஊருக்கு இவனுங்க எல்லாம் வேலைக்கு வந்ததுல தான் நமக்கெல்லாம் வேலை இல்லாம இப்படி திருடிப் பொழைக்கறோம். இதுங்க டைமண்ட் ரிங் போட்டிருக்குங்க!” என இடி இடியென சிரித்தான் துப்பாக்கி ஏந்தி இருந்தவன்.

“டேய்! சத்தத்தக் குறை! யாராச்சும் வந்துறப் போறாங்க” என இன்னொருவன் எச்சரித்தான்.

“யூ பிட்ச். ரிங்க கலட்டிக் குடு” என கேட்டான் துப்பாக்கி இல்லாதவன்.

“முடியாது! எல்லாத்தையும் எடுத்துக்குங்க ஆனா ரிங் மட்டும் தர மாட்டேன்” என்றவள் கையில் போட்டிருந்த ப்ரேஸ்லேட், மற்ற மோதிரங்கள் எல்லாவற்றையும் கலட்டி வீசினாள். மணி மாதிரியே காலர் வைத்த டீ சர்ட் அணிந்திருந்ததால் தாலி செயின் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

“இப்ப கலட்டிக் குடுக்கல, சுட்டுப் போட்டுருவேன்” ஆவேசமாக மிரட்டினான் துப்பாக்கி வைத்திருந்தவன்.

“கவி, குடுத்துடுடி! நம்ம உயிர விட ரிங் பெரிசில்ல! இன்னொன்னு வாங்கித் தரேன் நான்”

“இது நீ முதன் முதலா எனக்கு குடுத்தது மணி! செண்டிமெண்டல் வேலுயூ எனக்கு. எப்படிடா குடுப்பேன்?” கலங்கினாள் அவள்.

“பைத்தியம், உசுரு போச்சுனா ஒரு செண்டிமெண்ட் மசுரும் இல்லடி! உன்னை எதாச்சும் பண்ணிற போறானுங்கடி, குடுத்துரு”

கண்ணீருடன் கையில் போட்டிருந்த ரிங்கைக் கலட்டியவள், துப்பாக்கி வைத்திருந்தவன் காலடியில் தூக்கிப் போட்டாள். அவன் எடுக்கக் குனிந்தப் போது, மணியை மீறிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தாள் கவி. இவள் வந்து மேலே விழவும் தடுமாறியவன் கையில் இருந்த துப்பாக்கி ஒரு மூளையில் போய் விழுந்தது.

சட்டென சுதாரித்த மணி, இன்னொருவன் வயிற்றில் ஓங்கி எத்தியவன், கீழே விழுந்திருந்தவனையும் சரமாரியாக எத்தினான். மோதிரத்தை எடுத்துக் கொண்ட கவி, நகர்ந்து நின்றுக் கொண்டாள். அதற்குள் முதலில் எத்து வாங்கியவனும் எழுந்து வந்திருந்தான். அவர்கள் இருவர், மணி ஒருவன். மணி மார்ஷியல் ஆர்ட் கற்றிருந்ததால் இருவரையும் பந்தாடி விட்டான். மூவருக்குமே ரத்தக் காயம்.

“அப்படித்தான் அடி மணி! நல்லா உதை! அந்த மூஞ்சிலேயே குத்து!” என மணிக்கு இண்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருந்தாள் கவி.

“வீட்டுக்குப் போனதும் மொத வேலையா உன்னைக் கொல்லுறேண்டி!” என கத்தியபடியே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் மணி. மணியை சமாளிக்க முடியாமல் போராடியவர்களில் ஒருவன், சட்டென நகர்ந்து கவியைப் பிடித்துக் கொண்டான். அவளை காப்பாற்ற இவன் முயன்ற வேளையில் மற்றொருவன் ஓடிப் போய் துப்பாக்கியைக் கைப்பற்றி இருந்தான்.

மணியை சுட அவன் குறிப்பார்த்த வேளை கவி,

“மணீ!” என அலறிக் கொண்டே அவர்கள் நடுவே பாய்ந்தாள்.

மணியைத் துளைக்க வந்த குண்டு கவியின் மேனியைத் தழுவியது.

“மணீ!” என கத்திக் கொண்டே தரையில் வீழ்ந்தாள் கவி.

“கவீ!!!!!!” என கத்தியபடியே அவளிடம் பாய்ந்து வந்தான் மணி.

அதற்குள் அடுத்த ரயிலில் இறங்கி இருந்த மற்ற பயணிகள் அந்தப் பாதையில் நடந்து வரும்  அரவம் கேட்கவும், கொள்ளையர்கள் இருவரும் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை தன் கையில் ஏந்திக் கொண்ட மணி கதறிவிட்டான்.

“மணி! அத்தை கூப்புடறாங்கடா, எங்கத்தை அபிலயா! தோ பாரு, வா வான்னு சொல்லுறாங்க! “ என ஆகாயத்தைக் காட்டினாள் கவி.

“இல்லை, இல்லை! உனக்கு ஒன்னும் ஆகாது. கவி லிஷன் டூ மீ! யூ ஆர் ஆல்ரைட். நான் உன்னை சாக விடமாட்டேன்!” வெறித்தனமாகக் கத்தியவன், அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டே ஓட ஆரம்பித்தான்.

அங்கே வெங்கி கண்களைக் கசக்கியவாறே போனைப் பார்த்தார். லாண்ட் லைன் நம்பரில் இருந்து போன் வந்துக் கொண்டிருந்தது.

“ஹலோ”

“அங்கிள் மணி ஹியர்! கவி சீரியஸ் கண்டிஷன்ல ஐசியூல இருக்கா! சீக்கிரம் ப்ளைட் புடிச்சு வாங்க! சீக்கிரம் அங்கிள்! நீங்க வரதுக்குள்ள அவளுக்கு ஏதும் ஆச்சுன்னா, எனக்கும் சேர்த்துக் காரியம் செஞ்சிருங்க அங்கிள்” என கதறினான் மணி.

“வாட்!!!!!!”

“கவி, கவி… எனக்கு அவ உயிரோட வேணும் அங்கிள். தினம் தினம் என் உயிர எடுக்க அவ வேணும்.” மணி அழுவது இவருக்கு நன்றாகவே கேட்டது. இவரின் வாட்டுக்கு மீராவும் எழுந்து அமர்ந்திருந்தார். வெங்கியும் அதிர்ச்சியில் கண்ணீர் வழிய தான் பேசிக் கொண்டிருந்தார்.

“மணீ!! கால்ம் டவுன். ஹாஸ்பிட்டல் பேரு சொல்லு. இப்பவே கிளம்பறோம்! அவளுக்கு ஒன்னும் ஆகாது மணி! உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டுப் போக மாட்டா என் மக. அவ உயிரே உனக்குள்ள தான் இருக்கு! தைரியமா இரு. நாங்க வரோம்”

விபரங்களைக் கேட்டுக் கொண்டவர், இவர் மனம் ரணமாய் வலித்ததையும் பொறுத்துக் கொண்டு மருமகனை தேற்றினார். விவரம் தெரிந்து மீராவும் கதற, அவரையும் அணைத்துக் கொண்டே விமான நிலையம் புறப்பட்டார் வெங்கி.

தன்னை உயிராய் போற்றும் இரு ஆண்களையும் மகிழ்ச்சிக் கடலில் தள்ள மீண்டு முழுதாக வருவாளா கவிலயா?

 

(கொட்டும்)