SSKN — epi 24

அத்தியாயம் 24

 

அவன் முகம் பார்த்தால்

அது பசி போக்கும்

அவன் நிறம் பார்த்தால்

நெஞ்சில் பூ பூக்கும்…

 

டீ ஷர்ட் ரத்தத்தில் குளித்திருக்க, கைகளிலும் ரத்தம் காய்ந்துப் போய் கிடக்க தலையை கைகளால் தாங்கிக் கண்ணீருடன் அமர்ந்திருந்த மணியைத் தொட்டு அசைத்தார் வெங்கி. நிமிர்ந்துப் பார்த்தவன், தன்னவள் உருவாக காரணமாக இருந்த அவள் தகப்பனைப் பார்க்கவும் அவர் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கதறி விட்டான். வெங்கிக்கும் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. அவரின் கண்ணீர் மணியின் தலையை நனைத்தது.

ஐசியூவின் முன்னால் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த மணியையும் அவனை அணைத்திருந்த வெங்கியையும் பார்த்த மீராவுக்கும் கண்ணீர் பொங்கியது. இரு ஆண்களும் தன் வசம் இழந்திருப்பதை கண் கூடாக கண்டவர், இனி தான் தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என புரிந்துக் கொண்டார்.

செய்தி கேட்டு அர்த்த ராத்திரியில் ஏர்போர்ட் போனவர்களுக்கு முதல் ப்ளைட் காலை ஏழு மணிக்குத்தான் என தெரியவும் அங்கேயே ரெஸ்டிங் லவுஞ்சில் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. ப்ளைட் ஸ்கேடுல் எல்லாம் அடிக்கடி அந்நாட்டில் பல இடங்களுக்குப் போய் வரும் வெங்கிக்குத் தெரியும் தான். ஆனால் மகள் அப்படி இருக்கும் போது அவருக்கு எதையுமே சிந்திக்க முடியவில்லை. இவரின் நிலையைப் பார்த்து, அழுது கொண்டிருந்த மீரா தன்னையேத் தேற்றிக் கொண்டார். இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தானர். அவ்வப்பொழுது வெங்கியின் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார் மீரா. காத்திருந்த நேரம் முழுக்க சித்ரவதையாகப் போனது இருவருக்கும்.

“மீரா, என் பொண்ணு பொழச்சுக்குவா தானே? எனக்கு பயமா இருக்குடி! மணிக்கிட்ட தைரியமா இருக்க சொல்லிட்டாலும், எனக்கு மனசு கிடந்துத் துடிக்குது மீரா! எங்க குடும்பத்துக்கு சந்தோஷம்கிறது என்னிக்குமே ஒட்டாதா? இப்படிப் போட்டு சோதிக்கறானே உன் கடவுள்!” கலங்கிய குரலில் பேசினார் வெங்கி.

“ஒன்னும் ஆகாதுங்க நம்ம பொண்ணுக்கு! தைரியமா இருங்க! நாம போகறதுக்குள்ள முழிச்சிருவா! உங்களப் பார்த்ததும் அப்பான்னு கட்டிக்குவா பாருங்களேன்” என நல்லவிதமாக கற்பனையை விதைத்து வெங்கியைத் தேற்றுவார் மீரா. அதைக் கேட்டு முகம் மலரும் வெங்கி, மீண்டும் அரை மணி நேரத்தில் என் பெண் பிழைத்துக் கொள்வாளா என ஆரம்பிப்பார். பொறுமையாக மீண்டும் சமாதானப் படுத்துவார் மீரா. இப்படித்தான் மருத்துவமனைக்கு வந்து சேரும் வரை மீரா வெங்கியை சமாளித்தார்.

மிகவும் களைத்துப் போயிருந்த வெங்கியை மணியின் பக்கத்திலேயே அமர வைத்தார் மீரா. அவருக்கும் களைப்புத்தான். ஆனாலும் முதலில் இரு ஆண்களையும் தேற்றுவதுதான் அவருக்கு முக்கியமாகிப் போனது. பல நேரங்களில் ஆண்களை விட பெண்களே இந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் சமயோசிதமாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆண்கள் பார்க்க திடமாக தெரிந்தாலும், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது என்றால் சீக்கிரம் உடைந்து விடுவார்கள்.

ரத்த வெள்ளத்தில் கவியை ஐசியூவுக்குக் கொண்டு சென்றவர்கள் ஒரே ஒரு முறை வெளியே வந்து சர்ஜரிக்காக சைன் வாங்கினார்கள். அதற்கு பிறகு வெளியே வந்த டாக்டர் தோட்டாவை வெளியேற்றி விட்டதாகவும், கவி கீழே விழுந்து தலையிலும் அடிப்பட்டிருப்பதால் அதற்குறிய நியூரோ சர்ஜன் வந்துக் கொண்டிருப்பதாகவும்  சொல்லிவிட்டு சென்றுவிட்டார். முழு மெடிக்கல் கண்டிஷனை இன்னும் தனக்கு தெரிவிக்கவில்லை என வெங்கியிடம் தெரிவித்தான் மணி. ஆதரவுக்கு வெங்கி பக்கத்தில் இருந்தது அவனைக் கொஞ்சம் திடப்படுத்தி இருந்தது. இருவரும் அழுகையை கொஞ்சமாக நிறுத்திப் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

“என்னங்க, வாலட் குடுங்க!” என வெங்கியிடம் இருந்து வாலட்டை வாங்கி பணம் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் மீரா.

அவசரமாக வெளியேறிய மீரா, ரேஸ்ட்ரூமில் நுழைந்து முகத்தை நீர் அடித்துக் கழுவினார். கொஞ்சம் தெம்பு வந்ததுப் போல இருந்தது. பின் வெளியே வந்தவர், கபிடேரியா சைன் பார்த்து அவ்விடத்தை நோக்கி விரைந்தார். ப்ரேட் வகையில் சிலவற்றையும், இரண்டு காபியும் வாங்கிக் கொண்டார். பிறகு அதன் பக்கத்தில் இருந்த இன்னொரு கடைக்குள் நுழைந்தார் மீரா. அங்கே கெட் வேல் சூன் கார்டுகள், பலூன், பூங்கொத்துகள், டீ சர்டுகள் இப்படி மருத்துவமனையில் தங்குபவர்களுக்கு உகந்தப் பொருட்கள் இருந்தன. அதில் பெரிய சைஸ் டீ சர்ட் ஒன்றை வாங்கிக் கொண்டு ஆண்கள் இருவரும் இருந்த இடத்துக்கு நடையை எட்டிப் போட்டார். புதிய இடமாக இருக்கவும் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. அங்கங்கே வைக்கப் பட்டிருந்த சைன் போர்டுகளைப் பார்த்து ஐசியூவை மீண்டும் அடைந்தார் அவர்.

வாங்கியப் பொருட்களை வெங்கியின் அருகே வைத்தவர், டீ சர்டை மட்டும் எடுத்துக் கொண்டு மணியை நெருங்கினார்.

“மணி!”

நிமிர்ந்துப் பார்த்தான் மணி.

“இந்தா, டீ சர்ட். பாத்ரூம் போய், முகம் கை காலெல்லாம் கழுவிட்டு இத மாத்திக்க. பழைய டீ சர்ட தலைய மூனு முறை சுத்தி குப்பைத் தொட்டியில போட்டுட்டு வா”

“மீராம்மா, கவி மீராம்மா! என்னோட கவி, அப்படியே ரத்த வெள்ளத்துல! ” என இன்னொரு மூச்சு அழ ஆரம்பித்தவனை,

“மணி!” என அழுத்தமாகக் கூப்பிட்டார் மீரா.

பாவமாக அவரைப் பார்த்தவனை,

“கவி எழுந்து உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா பயந்துருவா மணி! போப்பா, போய் நான் சொன்னத செய்” என லேசாக கண்டிப்பு கலந்த குரலில் சொன்னார்.

அவர் கொடுத்த டீ சர்டை வாங்கிக் கொண்டே,

“கவி எழுந்துருவாளா மீராம்மா?” என வெங்கியைப் போலவே கேட்டான்.

“கண்டிப்பா எழுந்து உட்காருவா! அழுமூஞ்சியோட உன்னைப் பார்த்தா அவளும் அழுவா மணி. உன்னோட உணர்வுகள பிரதிபலிக்கற கண்ணாடி அவ. போ, சட்டை மாத்திட்டு வா” என அனுப்பி வைத்தார்.

தலைக் குனிந்து அமர்ந்திருந்த வெங்கியை நிமிர்த்திய மீரா,

“இந்தாங்க காபி, குடிங்க! இந்த ப்ரேட்டையும் சாப்பிடுங்க. ராத்திரியில இருந்து ஒன்னும் சாப்பிடல” என்றார்.

“எனக்கு ஒன்னும் வேணா மீரா”

“இப்போ சாப்பிட போறிங்களா இல்லையா? அவ எழுந்ததும், எங்கப்பாவ ஏன் பட்டினிப் போட்டு வச்சிருக்கீங்கன்னு என்னைப் பிடிச்சு பேய் ஓட்டனுமா?” மிரட்டியே அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். இரண்டு கப் தான் காபி வாங்க முடிந்தது மீராவால். ஒற்றை ஆளாய், இரண்டு கப் காபி, பிரேட், டீ சர்ட் பை என சமாளிக்கவே கஸ்டப்பட்டவர் மணிக்கும் வெங்கிக்கும் மட்டும் வாங்கி வந்திருந்தார்.

அவர் இருந்த நிலையில் கூட அதை கவனித்து, மீராவையும் அமர வைத்து பாதி கப் காபியையும் பன்னையும் கொடுத்தார் வெங்கி.

“நீயும் சாப்பிடும்மா!” அவரின் அக்கறையில் லேசாக கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்ட மீரா, மறுக்காமல் சாப்பிட்டார். மணி திரும்பி வரவும், அவனையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார் மீரா. அவர்கள் அமர்ந்திருந்த போது, போலிஸ்காரர்களும் வந்து மணியிடம் ரிப்போர்ட் வாங்கிப் போனார்கள். அவர்களிடம் இவன் பேசும் போதுதான் என்ன நடந்தது என வெங்கியும் அறிந்துக் கொண்டார். போலிஸ் போனதும், வெங்கியின் அருகில் வந்து அமர்ந்த மணி,

“பைத்தியக்காரி அங்கிள் உங்க மக! சாதாரண மோதிரத்துக்காக இப்படி வந்துப் படுத்துக் கிடக்கறா!” கோபத்தில் பொரிந்து தள்ளினான்.

“உனக்கு சாதரண மோதிரம்! அவளுக்கு அதுதான் காதல் சின்னம் மணி! அந்த மோதிரத்த நீ போட்டதுல அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். என் மணியோட காதல் பரிசுப்பான்னு என் கிட்ட சொல்லி சொல்லி மாஞ்சுப் போவா கவி. பைத்தியக்காரிதான் என் மக! அவ பைத்தியமெல்லாம் உன் மேலதான். அது தெரிஞ்சு தானே, உன்னைத் தேடிப் பிடிச்சு வர வச்சேன்.” பெருமூச்சு விட்டார் வெங்கி.

ஐசியூவின் கதவு திறக்கவும், மூவரும் கலவரத்துடன் எழுந்து நின்றார்கள். தலைமை நர்ஸ் தான் இவர்களை நோக்கி வந்தார். இவர்கள் முகத்தைப் பார்த்தவள், லேசாக புன்னகைத்தாள்.

“இப்போதைக்கு பேஷண்ட் ஓகேவா இருக்காங்க. நீங்க போய் டாக்டர முதல்ல பார்த்துட்டு வாங்க. ஐசியூக்குள்ள யாரையும் அனுமதிக்க முடியாது. டாக்டர் எப்போ சொல்லுறாரோ அப்போ ரூமுக்கு ஷிப்ட் பண்ணுவோம். அப்போ பார்க்கலாம்” என டாக்டரின் அறைக்கு எப்படி போவது என சொல்லி அனுப்பினார்.

மீரா ஐசியூ அருகிலே அமர்ந்திருக்க, ஆண்கள் இருவரும் டாக்டரை தேடி சென்றார்கள். வந்தவர்களை அமர வைத்த டாக்டர்,

“துப்பாக்கி குண்டு முழங்கைக்கு மேல துளைச்சிருக்கு. அங்கிருந்த எலும்புலா லேசான உராய்யு இருக்கு. ஆனா தசைநாண் செவியரா பாதிச்சிருக்கு. அதற்குரிய ட்ரீட்மேண்ட் செஞ்சிருக்கோம். இருந்தாலும் இப்போதைக்கு வலது கையைப் பயன்படுத்த முடியாது. அட்டவணைப்படி இனிமே பிசியோ வரனும். கொஞ்சம் பழகனதும் வீட்டிலேயே செஞ்சிக்கலாம். எப்படியும் வலது கை முழுதா செயல்பட ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் கூட ஆகலாம். நல்லா குணமானாலும், கையை ரொம்ப ஸ்ட்ரேய்ன் பண்ணக் கூடாது. ஹேவியான பொருள தூக்கறதுலாம் அறவே கூடாது.” என சொன்னவர் அவர்களின் முகத்தைப் பார்த்தார்.

இன்னும் கலக்கத்துடன் தான் இருந்தது இருவரின் முகமும்.

“தலைலயும் அடின்னு சொன்னாங்களே டாக்டர்?” என கேட்டான் மணி.

“ஆமா! கீழ விழுந்ததுல தலைல அடிப்பட்டிருக்கு. தேவையான ஸ்கேன், எம் ஆர் ஐ எல்லாம் எடுத்துப் பார்த்தாச்சு. நியூரோ சர்ஜன் டிட் ஆல் தே டெஸ்ட். மண்டை வெளியில தான் அடி. உள்ளுக்குள்ள எந்த விதமான டேமேஜிம் இல்ல. டிஸ்சார்ஜ் ஆகி, குடுத்த டேட்ல மறுபடியும் வந்து செக் பண்ணிக்குங்க. ப்ளட் க்ளோட் இப்போதைக்கு கண்டுப்பிடிக்க முடியலைனாலும், அடுத்த டெஸ்ட்ல தெரிஞ்சாலும் தெரியலாம். மோஸ்ட்லி அப்படி எதுவும் இருக்க சான்ஸ் இல்லைன்னு நியுரோ சர்ஜன் சொல்லுறாரு. சோ டோண்ட் வோரி. அவங்க இப்ப மயக்கத்துல இருக்காங்க. அப்டர் டூ ஹவர், ரூமுக்கு மாத்திருவோம். அப்போ பார்க்கலாம். ஐசியூக்குள்ள போறது நல்லதில்ல. மத்த பேஷன்ஸ்சும் இருக்காங்க. ஜெர்ம் ஸ்ப்ரேட் ஆக சான்ஸ் இருக்கு. சோ ப்ளீஸ் வேய்ட் அனதர் டூ ஹவர்.” என்றார்.

வெங்கியும் மணியும் மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்து அனுப்பி வைத்தார் அந்த டாக்டர்.

அவர் ரூமில் இருந்து வெளியே வந்த இருவரின் முகமும் தெளிந்திருந்தது.

“மணி, கொஞ்ச நாளைக்கு கைய தூக்க முடியாதுன்னு சொல்லுறாங்களே! நான் அழைச்சிட்டுப் போயிரவா கவிய?” என கேட்டார் வெங்கி.

“என்ன அங்கிள் விளையாடறீங்களா? எப்போ என் மனைவியா கூட்டிட்டு வந்துட்டனோ, இனிமே பிரசவத்துக்கு மட்டும்தான் அனுப்புவேன். அதுவும் பை ஓன் ப்ரீ ஓன்ங்கற மாதிரி இலவச இணைப்பா நானும் கூட வருவேன். அதனால இப்படிப் பேசாதீங்க இனிமே. அவளுக்கு வலது கையா நான் இருக்கறப்ப அவளுக்கு எதுக்கு தனியா வலது கை? அவ இனிமே அந்தக் கையைத் தூக்கவே வேணாம்” என்றவனை இழுத்து அணைத்துக் கொண்டார் வெங்கி.

“என் கவி உயிரோட இருக்கறதே எனக்குப் போதும் அங்கிள்! கை இல்லாம போயிருந்தா கூட நான் அவள விட மாட்டேன்.”

அவனும் வெங்கியை இறுக அணைத்துக் கொண்டான். இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தத் துக்கமெல்லாம் கண்ணீராய் கரைந்தது இருவருக்கும்.

மீராவுக்கும் விஷயம் சொல்லப்பட்டது.

“யப்பா மண்டக் கருப்பா, எங்கப் புள்ளைய காப்பாத்தி குடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா. ஊருக்கு வரப்போ, உனக்கு கிடா வெட்டிப் படையல் போடுறோம் எஞ்சாமி” என மனமுருக தன் குலதெய்வத்துக்கு நன்றியைக் காணிக்கையாக்கினார் அவர்.

மூவரும் இரண்டு மணி நேரத்தை நெட்டித் தள்ளினார்கள். மேலும் ஒரு அரை மணி நேரம் ஆகியதும் தான் கவியை ரூமுக்கு மாற்றினார்கள். நர்ஸ் வந்து ரூம் விவரங்கள் தர, இவர்கள் அடித்துப் பிடித்து அங்கே ஓடினார்கள். இவர்கள் நெருங்கும் நேரம் தான் ஸ்ட்ரெச்சரில் இருந்து தூக்கி கவியை படுக்கையில் கிடத்தினார்கள்.

மருத்துவமனை உடையில் கிழிந்துப் போன நாராக கிடந்தாள் கவிலயா. ரத்தப்பசை இல்லாது முகம் வெளுத்திருந்தது. தலைக்காயத்துக்கு பேண்டேஜ் போட்டு, மொத்த தலையையும் மூடி இருந்தார்கள். கைக்கு பெரியதாகக் கட்டுப் போட்டிருந்தார்கள். கீழே விழுந்ததால் அங்கங்கே சிராய்த்திருந்த காயங்களுக்கும் மருந்திட்டிருந்தார்கள்.

தன்னிடம் சிரித்துப் பேசி வம்பிழுத்தபடி வந்தவளை இப்படி பார்க்க தாங்கவே முடியவில்லை மணிக்கு. அவளின் இடது கையைப் பற்றியப்படி ஓய்ந்து போய் அமர்ந்து விட்டான் மணி. வெங்கி அவள் தலைப்புறம் நின்று நெற்றியை வருட, மீராம்மா அவள் கால்களை மெல்லப் பிடித்து விட்டபடி நின்றிருந்தார். அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என தங்களை தேற்றிக் கொள்ளவே மூவரும் அவளைத் தொட்டுக் கொண்டே இருந்தனர்.

“அங்கிள், நீங்க ரெண்டு பேரும் போய் எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்க. நான் இவ பக்கத்திலேயே இருக்கேன்” என வற்புறுத்தி இருவரையும் அனுப்பினான் மணி.

அவர்கள் போன பதினைந்து நிமிடத்தில் மெல்ல கண் விழித்தாள் கவி.

“கவிம்மா! கவி எழுந்துட்டியாடா?” அவளை நெருங்கி கன்னத்தைத் தடவி கண்ணீர் விட்டான் மணி.

கஸ்டப்பட்டு வாயைத் திறந்தாள் அவள்.

“பயந்துட்டியா?”

“ஆமாடி, செத்துப் பொழைச்சேன்”

“பொண்டாட்டி போயிட்டா ஜாலியா இருக்கலாம்னு பாத்தியா?” மெல்ல திக்கி திக்கிப் பேசினாள் கவி.

“என்னாது?”

“ஐ லவ் யூ!”

“வாட்?”

“போடா மணி! உனக்கு அலைபாயுதே க்ளைமேக்ஸ் வசனமே சரியா தெரியல! தப்புத் தப்பா பதில் சொல்லுறே!” என நிறுத்தி மெதுவாக குரலை செறுமிக் கொண்டே சொன்னாள் கவி.

“அலைபாயுதேவா? நல்லா தேறிவாடி, வாய் ஓயாம பேசற உன் நாக்க கட் பண்ணி வீசிட்டு சொல்லாமலே படம் காட்டறேன்!” வாய் அவளைத் திட்டினாலும், உதடு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டது. இடது கையைத் தூக்கி அவன் கண்ணீரைத் துடைத்தவள்,

“ஐ லவ் யூ மணி” என சொல்லி மீண்டும் மயக்கத்திற்கு சென்றாள்.

 

(கொட்டும்)