SSKN— epi 25

அத்தியாயம் 25

 

காதல் மழையினிலே

உயிர் நனைகின்ற வேளையில்

நனையாத பாகங்கள்

எதுவுமில்லை!!!!

 

மணியை வம்பிழுத்துவிட்டு மயங்கிய கவி அதற்குப் பிறகு தூங்கிக் கொண்டே இருந்தாள். வலி தெரியாமல் இருக்க கொடுத்த மருந்துகள் அவளைத் தூக்கத்திலேயே வைத்திருந்தன. அதோடு ட்ரிப்ஸ் ஏறவும் உணவு கொடுப்பதைப் பற்றி பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என நர்ஸ் சொல்லி விட்டார். வெங்கியும் மீராவும் திரும்பி ரூமுக்கு வரும் போது, மணிக்கு உணவு வாங்கி வந்திருந்தார்கள்.

கவிக்குத் தனியறை கொடுத்திருந்தார்கள். வெங்கி மகளுக்கு நல்ல இன்சுரன்ஸ் பாலிசி வாங்கி வைத்திருந்தார். அதோடு எக்ஸ்ட்ரா வந்தால் பணமாகவும் கட்டிவிடுவதாக சொல்லி இருந்தான் மணி. அந்த ரூமில் ஒற்றை சோபாவும், அதோடு ஒரு சோபா பெட்டும் இருந்தது. கவி எழுந்து பேசினாள் என மகிழ்ச்சியாக விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்ட மணி, வெங்கி வாங்கி வந்திருந்த உணவை வயிறார சாப்பிட்டான். அதன் பிறகு மூவரும் அமர்ந்து மெல்லியக் குரலில் பேசிக் கொண்டிருக்கும் போது, தலைமை நர்ஸ் வந்தார்.

கவியின் ரத்த அழுத்தம், காய்ச்சல் இருக்கிறதா என பல சோதனைகளை செய்தவர் அவர்களிடம் ஒரு பையைக் கொடுத்துச் சென்றார்.

“பேஷண்டோட துணி அண்ட் ஜீவல்ஸ் அதுல இருக்கு” என சொல்லி தந்தார்.

மீரா அதை வாங்கி, நாப்கினில் மடித்து வைத்திருந்த தாலிக்கொடி, சின்ன சங்கிலி, அவளது குட்டி தோடு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தினார். ரத்தம் படிந்திருந்த துணியை குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டார். படீர் என சத்தம் கேட்டது. மீண்டும் துணியை எடுத்துப் செக் செய்துப் பார்த்தார். அவளது ஜீன்சில் செல் போன் இருந்தது.

“மணி, போன் பத்திரமா இருக்குப்பா ஜீன்ஸ்ல”

எழுந்து வந்தவன், அவளது ஜீன்ஸ் பாக்கேட்களை நன்றாக ஆராய்ந்தான். அதில் இருந்தது கவியின் உயிரைப் பறிக்கப் பார்த்த மோதிரம். இவனுக்கு அழவா சிரிக்கவா என தெரியவில்லை.

“அங்கிள், குண்டடிப்பட்டும் ரிங்கை ஜின்ஸ் குட்டிப் பாக்கேட்ல பாதுக்காப்ப வச்சிருக்கா உங்க கேடி மக”

மோதிரத்தை அவர் முன் ஆட்டிக் காட்டினான் மணி.

முகம் மலர சிரித்தார் வெங்கி.

“இந்த டாடிக்குப் பொறந்தவ கேடியாத்தான் இருப்பா” தன்னையேப் புகழ்ந்துக் கொண்டார்.

“மீராம்மா உங்காளுக்கு நெனைப்பப் பார்த்தீங்களா?”

“விடு மணி! கேடியா இருந்து என்னத்தப் பண்ண? நாம மட்டும் வாழ்க்கைக் குடுக்கலனா ரெண்டு பேரும் தெருக்கோடில நிப்பாங்க” நக்கலாக சிரித்தவருக்கு ஹை ஃபை கொடுத்தான் மணி.

மூவருக்கும் மீண்டும் சிரிப்புத் திரும்பி இருந்தது. பெரிய கண்டத்தைத் தாண்டிய கணம், மனது பஞ்சாய் பறந்தது.

“நான் கேடி தான் மீரா! இல்லைனா நம்ம மக மனசுல மணி இருக்கான்னு கண்டுப்புடுச்சி அவளுக்குத் தெரியாம வேலைப் பார்த்து மாப்பிள்ளைய வீட்டு வரைக்கும் கொண்டு வந்துருப்பேனா?”

“இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல்ல இருந்துப் பழக்கம்னு கவி சொல்லிருக்கா! மணி நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு நீங்கதான் காரணம்னு புரிஞ்சது. ஆனா எப்படி இதை நடத்தனீங்க? கல்யாணத்துக்கு முன்ன கேட்கனும்னு நினைப்பேன், ஆனா அப்போலாம் பேசவே தயக்கம். அதுக்கு அப்புறம் என்னன்னவோ நடந்துருச்சு. எதையும் கேட்டுத் தெளிவு படுத்திக்குற நிலையிலும் நான் இல்ல. இப்போ சொல்லுங்க ரெண்டு பேரும்” என கேட்டவர் கவி அசையவும் அவள் தலை வருடி, மீண்டும் தூங்க வைத்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார்.

மாமாவும் மருமகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். வீட்டில் மீரா கவனித்த வரை இருவரும் என்னவென்றால் என்ன எனும் அளவுக்குத்தான் பேசிக் கொள்வார்கள். நீண்ட பேச்சு வார்த்தை என்றால் ஜெர்னல் பேப்பர் பற்றியதாக தான் இருக்கும். இருவரின் சிரித்த முகத்தைப் பார்த்த மீராவுக்கு, அவர்களின் அந்நியோன்யம் புரிந்தது.

“எங்களுக்குத் தெரியாம மாமாவும் மருமகனும் டேட்டிங் போய் உறவை வளர்த்திருக்கீங்களா?” என சந்தேகமாகக் கேட்டார் மீரா.

“பின்ன? உன் மக முன்னுக்கு நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசி பாசப் பயிர வளர்க்க முடியுமா? மூக்கு வேர்த்த மாதிரி வந்து எங்க நடுவுல உட்கார்ந்துருவாளே! மணி கூட கார் முன்னுக்கு நான் உட்கார்ந்தாலே அவ்வளவு கோபம் வரும் அவளுக்கு!” சிரித்தார் வெங்கி.

“நாங்க இந்த நாள்னு ஃபிக்ஸ் பண்ணிக்கறது இல்ல. டைம் கிடைக்கறப்போ பாருக்குப் போவோம். பியர் வாங்கி சியர்ஸ் பண்ணிக்கிட்டே ஃபுட்பால் பாப்போம்! சம்டைம்ஸ் ஸ்நூக்கார் விளையாடுவோம். மோஸ்ட் ஆப் த டைம்ஸ் நிறைய பேசுவோம் மீராம்மா. நான் சின்ன வயசுலயே அப்பாவ இழந்தவன். அங்க ஜீஜூ எனக்கு முதல் அப்பான்னா, அங்கிள் எனக்கு ரெண்டாவது அப்பா. ஜீஜூ கூட தண்ணியெல்லாம் அடிக்க முடியாது. அவர் ஸ்ட்ரீக்ட்னு சொல்ல மாட்டேன். ஆனா எனக்குத்தான் ஒரு தயக்கம், ஒரு மரியாதை. ஆனா அங்கிள் கூட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவேன்! தயக்கம் இல்லாம நாங்க ரெண்டு பேரும் பார்ல வர போற பொண்ணுங்கள கூட சைட் அடிப்போம்”

“மணி, மணி! கண்ட்ரோல் பண்ணிக்கப்பா!” என்றவர், போதும் நிறுத்து என கண்களால் கெஞ்சினார்.

“ஓஹோ! சைட் அடிக்கற வேலைலாம் செய்வீங்களோ ரெண்டு பேரும்” சிரித்தப்படி சொன்னாலும், மீராவின் பார்வை வெங்கியை எரித்தது.

‘நம்ம மேல உள்ள பாசத்துல பையன் ஆப்படிச்சுட்டானே! இதுக்கு எத்தனை தடவை காலைப் புடிச்சு கெஞ்சி சமாதானப் படுத்துனும்னு தெரியலையே’

“அதெல்லாம் சும்மா லுல்லலாய்க்கு சொல்றான் மணி! சைட்டெல்லாம் அடிச்சது இல்ல நானு. நம்பு மீரா!” கண்ணை சுருக்கி, உதட்டை சுழித்துக் கெஞ்சுவது போல சொன்னார் வெங்கி.

“ஹ்ம்ம்! நம்பிட்டேன்!” என முறுக்கிக் கொண்டார் மீரா.

“மீராம்மா, என் அங்கிள சந்தேகப்படறீங்களா? ஓ காட்! இது வரைக்கும் எத்தனைப் பொண்ணுங்க அங்கிள டான்ஸ் ஆட கூப்பிட்டுருக்காங்க தெரியுமா? அவர் அசையவே மாட்டாரே! ஓன் டைம் ஒரு பொண்ணு அங்கிள் மடியே டாண்ஸ் ப்ளோர்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்து உட்கார்ந்து ஆடினா! ஊஹூம்! அசையலையே அங்கிள்!” சொல்லிவிட்டு வெங்கியைப் பார்த்து மீரா அறியாமல் கண் அடித்தான் மணி.

‘அடேய்! மகனா நினைச்சு உன் கூட எல்லா எடத்துக்கும் வந்ததுக்கு, உன்னால என்ன பண்ண முடியுமே அதை சிறப்பாப் பண்ணிட்ட!’ மீராவை ஓரக்கண்ணால் பார்த்தார் வெங்கி. அங்கே உலகத்தைக் கடக்கும் போது தீப்பிழம்பாக ஒளிர்விடும் மெத்தியோர்(meteor) கற்களைப் போல அவர் முகம் சிவந்து கோபத்தில் ஒளிர்விட்டது.

இத்தனை நாள் பழக்கத்தில் மீராவின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு அத்துப்படி. இந்த கோப முகம் சொல்லும் சேதி என்னவென்றால், தான் மீண்டும் பிரமச்சாரி என்பதே!

‘கதைய திசைத் திருப்பலனா, என் வாழ்க்கை திசை மாறிடும்.’

“மணி! உங்க மீராம்மா உன்னை இங்க எப்படி வரவழைச்சேன்னு கேக்கறாங்க, அதை விட்டுட்டு உப்புசப்பு இல்லாத விஷயமெல்லாம் பேசற! அது வந்து மீரா..”

“நீ சொல்லு மணி!” என பேச வந்தவரை கட் பண்ணி விட்டார் மீரா.

“என்னோட மேசெஞ்செர்க்கு ஒரு நாள் அங்கிள் மேசேஜ் போட்டிருந்தாரு மீராம்மா! இவர் என் பேஸ்புக் ப்ரேண்ட்ல இல்லைனால, அது நியூ மேசேஜ் ரிக்வெஸ்ட்ல போயிருச்சு. நானும் கவனிக்கல! ஜிம் ஆரம்பிச்ச புதுசு அப்போ, ரொம்ப பிசி. அப்புறம் தான் ஜீம்முக்கு ஒரு பேஜ் திறந்தோம். அதுல குடுத்த போன் நம்பர் வச்சு, அங்க அடிச்சுக் கேட்டு என்னை லைன்ல புடிக்க ட்ரை பண்ணிருக்காரு! அதுவும் முடியல. சோ ஓன் ஃபைன் டே என் முன்னால வந்து நின்னு ஹலோ, ஐம் வெங்கின்னு கைய நீட்டிட்டு நின்னாரு. மீதத்தை அங்கிளே சொல்லுவாரு”

“அப்போலாம் நீ இன்னும் எங்க வீட்டுக்கு வரல மீரா! எனக்கு தனிமை ரொம்ப கொடுமையா இருந்துச்சு. கவிய கல்யாணம் செஞ்சு குடுத்தாலாச்சும், அவ லைப்ப பாத்துகிட்டு அவ பிள்ளைங்கள கொஞ்சிகிட்டு காலத்தை ஓட்டிரலாம்னு நினைச்சேன். இவளும் இவ வயசு பசங்க கூட வெளிய போறதே விட்டுட்டா! கல்யாணம்னு பேச்செடுத்தாலே, ஒரு வாரம் காணாம போயிருவா! எனக்குப் பைத்தியமே பிடிச்சது இவளோட. கொஞ்சம் சத்தம் போட்டா, எனக்கு கல்யாணம் வேணாப்பா, உங்க கூடவே இப்படியே இருந்திடறேன்னு அழுகை. எனக்கு எப்படி ஹேண்டில் பண்ணன்னு தெரியல”

அப்பொழுது அவர் அடைந்த மன உளைச்சல் இப்பொழுது கூட குரலில் தெரிய, மணியும், மீராவும் அமைதியாக அவரைப் பார்த்திருந்தனர்.

“சரி விட்டுப் பிடிப்போம்னு நானும் விட்டுட்டேன். ஒரு தடவை நான் வேலை முடிஞ்சு வரப்போ, ஹால்ல உட்கார்ந்து லாப்டோப்ப நோண்டிட்டு இருந்தா. நான் வந்தத கூட கவனிக்கல. முகத்துல மின்னல், ஒரு வெளிச்சம். நான் கிட்டப் போய் நிக்கற வரைக்கும் என்னமோ கனவுலகத்துல மூழ்கிப் போய் கிடந்த மாதிரி இருந்தா. என்னைப் பார்த்ததும் என்னவோ தப்பு பண்ணிட்ட மாதிரி பட்டுன்னு லாப்ப மூடிட்டா! லேசான பதட்டம். ஆனா சட்டுன்னு முகத்த நார்மலா வச்சிக்கிட்டா! அவ மூடுற கேப்புல, மணியோட படத்த நான் பாத்துட்டேன். ஆனா ஒன்னும் கேட்டுக்காம தெரியாத மாதிரி இருந்துட்டேன்”

“அப்புறம் என்னாச்சு?” சுவாரசியமாகக் கோபத்தை மறந்து கதை கேட்டார் மீரா.

“ரெண்டு நாள் அப்படியே விஷயத்தை ஆறப்போட்டேன். அவ வெளிய போயிருந்த ஒரு நாள் ரூமுக்குள்ள புகுந்து லாப்டாப்ப நோண்டிப் பார்த்தேன்.”

“பாஸ்வோர்டு கேட்டிருக்குமே?” மீராதான் கேட்டார்.

“வெங்கி மனசு வச்சா அலிபாபா குகையையே திறந்துருவேன். இது என்ன ஜுஜூபி லாப்டாப் தானே! கீபோர்ட்ல நாலு தட்டு, தொறந்துகிச்சு. அஸ் சிம்பிள் அஸ் தட்” என கவியைப் போலவே சொன்ன வெங்கியின் கன்னத்தில் முத்த மழை பொழிந்தான் மணி.

“நீ என் கன்னத்த எச்சிப் பண்ணறத மட்டும் என் மக பார்த்துருக்கனும், ரெண்டு பேரையும் வச்சி செஞ்சிருவா!” கன்னத்தைத் துடைத்துக் கொண்டே சொன்னார் வெங்கி.

“அவளுக்கு என் மேல அப்படி ஒரு பாசம் அங்கிள். அவ மட்டும் வச்சி விளையாடற பொம்மை மாதிரி, யாருக்கும் குடுக்க மாட்டா!”

‘அவ்வளவு காதலையும் வச்சிக்கிட்டுப் பிரிஞ்சுப் போக ஏன் நினைக்கறான்னு மட்டும் சொல்ல மாட்டறா அங்கிள் உங்க மக! பாசத்தை திணிச்சு என்னை மூச்சு முட்ட வைக்கறது மட்டுமில்லாம, எப்போ விட்டுட்டுப் போயுருவாளோன்னு பயத்தையும் நெஞ்சுக்குள்ள விதைச்சு என்னை கொன்னுப் புதைக்கறா!’ மனதில் மட்டுமே புலம்ப முடிந்தது அவனால். தந்தைப் போல் பாசம் காட்டும் அவரிடம் கூட தங்களது அந்தரங்கத்தைப் பகிர்ந்துக் கொள்ள முயலவில்லை அவனால். அந்தரங்கம் புனிதமானது!

“உங்க ரெண்டு பேரு பாச பிலிம்மையும் அப்புறம் ஓட்டலாம். லாப்டாப்ல என்ன இருந்துச்சுன்னு சொல்லுங்க!” என கேட்டார் மீரா.

“பெர்சனல்னு ஒரு ஃபோல்டர்ல இவன் படம்மா வச்சிருந்தா. அவ்வளவும் இவரு ஜிம் பாடிய காட்டிட்டு இருக்கற படங்க” சிரித்தார் வெங்கி.

அழகாக வெட்கப்பட்டான் மணி.

“அதெல்லாம் நம்ம ஜிம் ப்ரோமோவுக்கு நானே மாடலா இருந்த போட்டோஸ் அங்கிள். எங்க பேஜ்ல மார்க்கேட்டிங்க்காக போட்டது!”

“என் மக எல்லாத்தயும் டவுன்லோட் போட்டு, எல்லா போட்டோவையும் வச்சு வீடீயோ வேற செஞ்சிருந்தா! அந்தப் பாட்டு அப்படியே மனச உருக்கிருச்சு. லேசா கண்ணு கூட கலங்கிருச்சு எனக்கு”

“என்னப் பாட்டு அது?” கேட்டார் மீரா.

“முழுசா ஞாபகம் இல்ல ரெண்டு வரி மட்டும் மனசுல அப்படியே ஒட்டிக்கிச்சு.

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் உந்தன் கையில்

தோளில் சாய்ந்து கதைகள் பேச

நமது விதியில் இல்லை…

அப்படின்னு வந்துச்சு அந்தப் பாட்டு! ஒரு தகப்பனா அப்போ என் மனசு பட்டப்பாடு எனக்குத்தான் தெரியும். என் மகள் மனசுல இப்படி ஒரு ஏக்கமான்னு எனக்குள்ள ஒரு கலக்கம். பெத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு தெரியாத நானேல்லாம் என்ன தகப்பன்னு என் மேலயே கோபம். கவி பேஸ்புக்ல போய் கொஞ்சமா நோண்டிப் பார்த்தேன். ரெண்டு அக்கவுன்ட் இருந்துச்சு. ஒன்னு அவ சொந்தப் பேருல, இன்னொன்னு ஆம்பள பேரு போட்டு ஃபேக் ஐடி ஒன்னு வச்சிருந்தா”

“பாரேன் என் மகளுக்கு எம்புட்டு அறிவுன்னு” வியந்தார் மீரா.

“அந்த ஃபேக் ஐடி பேரு என்னன்னு நீ கேக்கலியே?”

“சொல்லுங்க!” ஆர்வமாக கேட்டார் மீரா. ஏற்கனவே தெரிந்திருந்த மணி சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“கைப்புள்ள”

“கைப்புள்ளயா?”

“ஆமா, அந்த பேருதான். டிஸ்ப்ளே போட்டோ மட்டும் என்னோடத போட்டு வச்சிருந்தா!”

மீரா வாய் பொத்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

“அந்த ஐடில தான் மணியோட ஜிம் பேஜ்ஜ ஃபோலோ பண்ணிட்டு இருந்துருக்கா. அப்படிதான் கண்டுப்புடிச்சு காண்டேக்ட் பண்ண ட்ரை பண்ணேன். இந்த அப்பாடக்கர கைல புடிக்க முடியல. அப்புறம்தான் நேரா போய் இறங்கனேன். என்னைப் பார்த்து யார்னு கேப்பான்னு பார்த்தா, ஹாலோ அங்கிள் கவி எப்படி இருக்கான்னு கேக்கறான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! அப்புறம் அதையும் இதையும் பண்ணி, யுனிவெர்சிட்டில பேப்பர் சப்மிட் பண்ண ப்ளான் போட்டு இங்க வரவச்சேன்”

கவியை அடிக்கடி தான் வந்துப் பார்த்துப் போவது, அவள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து இனிமேல் அவளை மறந்துவிடுவது என முடிவெடுத்ததை எல்லாம் மீராவிடம் பகிர்ந்துக் கொண்டான் மணி.

சிறு வயதில் இருந்தே ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்திருக்கும் அன்பைப் பார்த்து கண் கலங்கி விட்டார் மீரா. இருவருமே அன்பு செய்வதில் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என புரிந்துக் கொண்டவர் மணியின் கைப்பற்றிக் கலங்கிவிட்டார்.

“அங்கிள் வந்தப்போ கவிக்கு என்ன ஆச்சோன்னு தான் என் மனசு தவிச்சது. அவர் கவி என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கான்னு சொன்னதும் நான் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. அங்கிள வீட்டுல எல்லோருக்கும் அறிமுகம் பண்ணேன். கவிதான் என் மனைவின்ற என் முடிவையும் சொன்னேன். சென்று வா, வென்று வான்னு அனுப்பி வச்சிட்டாங்க என்னை. அதுக்கப்புறம் தான் எல்லாமே உங்களுக்குத் தெரியுமே மீராம்மா!”

இந்த உரையாடல்கள் மணியையும் வெங்கியையும் இமோஷனலாக்கி இருந்தது. இருவரையும் வீட்டுக்குப் போய் கவிக்கு தேவையானதை எடுத்து வர சொல்லி அனுப்பி வைத்தார் மீரா. வெளிக்காற்று அவர்களை ஆசுவாசப் படுத்தும் என எண்ணினார் அவர். அவர்கள் போனதும், கவியின் அருகே நாற்காலி போட்டு கொஞ்ச நேரம் கண்ணை மூடினார் மீரா.

அப்பொழுதுதான் கண் விழித்தாள் கவி. களைப்பாக நாற்காலியில் சாய்ந்திருந்த மீராவைப் பார்த்ததும் அவளுக்கு கண் கலங்கியது.

“மீராம்மா!”

பட்டென கண்ணைத் திறந்தார் மீரா. கலங்கிய கண்களுடன் கவியைப் பார்த்தவர் பதறிவிட்டார்.

“என்னம்மா கவி? என்ன பண்ணுது?”

“ஒன்னும் இல்ல” என்றவள் மீராவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்.

“எங்கப்பா உங்களை நல்லா பார்த்துக்கறாரா?”

ஆமென தலை ஆட்டினார் மீரா.

“நீங்க அவரை நல்லா பார்த்துக்கறீங்களா?”

அதற்கும் ஆமென தலையாட்டினார் மீரா.

“வாயத் தொறந்து சொல்லுங்க!” மெல்லிய குரலில் என்றாலும் மிரட்டிக் கேட்டாள் அந்த ரௌடி.

“ரொம்ப நல்லாவே பார்த்துக்கறேன் கவிம்மா! இன்னும் என் மேல கோபமா இருக்கியா கவி?”

“எங்க மேல எனக்கென்ன கோபம்?”

“கோபமில்லையா? அப்புறம் ஏன் வீட்டுக்கு வர மாட்டேன்ன்னு சண்டைப் போட்ட?” ஆச்சரியமாகக் கேட்டார்.

“உங்கள பத்தி எனக்குத் தெரியாதா மீராம்மா? நீங்க கல்யாணத்தப்ப அப்படி பேசனது கோபம்தான், அப்பாவ எப்படி நீங்க வேணாம்னு சொல்லலாம்னு! எமோஷனலா இருந்தப்போ என்னால உங்க ட்ரீக்க கண்டுப்புடிக்க முடியல. ஆனா கார்ல வீட்டுக்கு வரப்போவே தெளிஞ்சிட்டேன்.” பேச்சை நிறுத்தியவள், தண்ணீர் வேண்டும் என சைகை செய்தாள். கொஞ்சமாக தண்ணீரை மீரா புகட்டி விட்டார்.

“உன் நல்லதுக்குத்தான் நான் செஞ்சேன்னு தெரிஞ்சும் ஏன் எங்கள ஒதுக்கன கவிம்மா?”

“நான் ஒதுக்கவும் தானே நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தீங்க. சீக்கிரமா ஒருத்தர மத்தவங்க புரிஞ்சிகிட்டீங்க. எப்படியும் உங்களுக்கு கல்யாணம் ஆனா, நான் வீட்டை விட்டுப் போகத்தான் இருந்தேன். நான் வீட்டுல கூடவே இருந்தா எங்கப்பா, உங்க கூட ஃப்ரீயா மூவ் பண்ண தயங்குவாரு! அதுக்குத்தான் இந்த ட்ரீட்மேண்ட்” என விட்டு விட்டுப் பேசியவள் மெல்ல புன்னகைத்தாள்.

“சரியான கேடி கவிம்மா நீ! எங்கள என்ன பாடு படுத்திட்ட” ஆசையாக அவள் கைப்பற்றி முத்தமிட்டார் மீரா.

டாக்சியில் வீடு நோக்கிப் பயணப்பட்ட இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது மணியின் கேள்வி. அவன் கேள்விக்கு முகம் வெளுக்க, பேய் முழி முழித்தார் வெங்கி.

“யார் அங்கிள் அந்த அபிலயா?”

(கொட்டும்)