SSKN– EPI 29

அத்தியாயம் 29

 

நீ போன பாத மேல

சருகாக கடந்த சுகமா

உன்னோட ஞாபகம் எல்லாம்

மனசுக்குள்ள இருக்கும் ரணமா!!!

 

 

“யாரையும் நான் பார்க்க விரும்பல. போக சொல்லுங்க!” இயல்புக்கு மீறி கத்தினாள் அபிலயா.

அவளது அம்மாவால் கூட அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆபரேஷன் செய்திருந்த உடம்பு வேறு, நாராய் கிடந்தாள் மருத்துவமனை கட்டிலில்.

கையைப் பிசைந்த அவள் அம்மா, மெல்ல வெளியே வந்தார்.

“மன்னிச்சிருங்க தம்பி! ஊமைக்கொட்டான் மாதிரி இருந்த என் மகளான்னு இருக்கு. பேய் பிடிச்ச மாதிரி கத்துறா! உங்களப் பார்க்கவே பிடிக்கலன்னு சத்தம் போடுறா! நீங்க வந்துட்டுப் போனாலே பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறா! டாக்டர் வேற அவள அமைதியா வச்சிக்க சொல்லுறாங்க.”

தயங்கி தயங்கி பாலாவிடம் சொன்னார் அவர்.

பாலாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏற்கனவே நாலு வார்த்தைதான் பேசவாள், இப்பொழுது அதுக்கூட பஞ்சமாகிப் போனது. விழித்திருக்கும் போது இவனைப் பார்த்து விட்டாளே முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் அபி. கண்களிலோ நிற்காமல் கண்ணீர் வழிகிறது. பேசினாலும் பதில் இல்லை. தொட்டாலே நடுங்குகிறாள். முரடனான பாலாவுக்கு அவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது எனவே தெரியவில்லை. மனதுக்குள்ளேயே மடிந்துப் போனான் அவன்.

ஆசையாய் எதிர்ப்பார்த்த குழந்தையும் இல்லாமல் போய், அன்பு வைத்த மனைவியும் உள்ளுக்குள் சுருண்டு கொள்வது அவனுக்கு மரண வேதனையைக் கொடுத்தது.

அன்று அவளை ரத்த வெள்ளத்தில் பார்த்தவன், அதிர்ந்தது சில நொடிகள் தான். அப்படியே தன் மனைவியைக் கையில் அள்ளிக் கொண்டவன், காரில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தான். எவ்வளவு நேரம் கீழே விழுந்து கிடந்தாளோ அவள், மருத்துவமனைக்குப் போவதற்குள் வயிற்றில் இருந்த சிசு கடவுளின் பாதம் அடைந்திருந்தது. இடிப்பிலும், தலையிலும் அடிப்பட்டிந்தவளை போராடி தான் மீட்டிருந்தார்கள் மருத்துவர்கள். நிறைய ரத்தம் சேதாரம் ஆகி இருந்தது. அதோடு கர்ப்பப்பையும் பிரச்சனை ஆகியிருந்தது. அடுத்த குழந்தைப் பிறப்பது மிகவும் கஸ்டம் என சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்.

பல நாட்கள் சுயநினைவு இல்லாமல் கிடந்தாள் அபி. நேர்ந்த அதிர்ச்சிகளை அவள் உடம்பும் மனமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் படுத்தப் படுக்கையாக இருந்தாள். முதலில் அபியின் அம்மா மட்டும் வரவழைக்கப்பட்டார்.

வெங்கி ஸ்காலர்சிப் மூலம் படிக்கப் போயிருந்ததால், அவரால் அடிக்கடி இந்தியா வர முடியாது. பணப்பிரச்சனை வேறு. கீதாவின் பிரசவத்துக்கு வர மட்டுமே டிக்கேட் போட்டிருந்தவருக்கு, அக்காவின் இந்த இழப்பு இடியாய் இறங்கியது. அவளுக்குத் தேவைப்பட்ட நேரத்துக்கு தன்னால் தோள் கொடுக்க முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் குமைந்தார் அவர். இந்தக் காலம் போல் செல் போன் வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலகட்டத்தில், தன் அக்காவுடன் தொடர்பு இல்லாமல் துடித்துப் போனார் வெங்கி. பாலா அனுப்பி இருந்த பணத்தைக் கொண்டு ஒரு முறை வந்து பார்த்துப் போனார். அப்பொழுது அபி இன்னும் சுயநினைவு பெற்றிருக்கவில்லை.

தனது மாமியார், அபிக்குத் தன்னைப் பார்க்க இஸ்டம் இல்லை என சொல்லியது பாலாவுக்குக் கோபத்தைக் கொடுத்தது. அவரை தள்ளி நிறுத்தி விட்டு உள்ளே போனான். அங்கே விட்டத்தை வெறித்தப்படி கன்னத்தில் கண்ணீர் கரையோடு படுத்திருந்தாள் அவனது சுந்தரி. தலையில் பெரிய கட்டு. கையில் எழும்பு முறிவென அதற்கும் கட்டுப் போட்டிருந்தார்கள். ஏற்கனவே ஒல்லி, இப்பொழுது இன்னும் எழும்பு மட்டும் தான் அவள் உடலில் தெரிந்தது.

தன் கணவனின் வாசனை உணர்ந்துத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் ஒளிர்ந்தன. சட்டென அதை தனக்குள் மறைத்துக் கொண்டாள் அவள்.

“சுந்தரி!”

முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அபி.

அருகில் சென்றவன், அவள் தாடையைப் பற்றி தன் முகம் பார்க்க வைத்தான்.

“என்னடி என் கிட்ட மூஞ்ச திருப்பற? உன்னை மனசார காதலிச்சத தவிர நான் என்னடி தப்பு பண்ணேன்? கண்ணு முழிச்சதுல இருந்து என் முகத்தையேப் பார்க்க மறுக்கற! என்னால முடியலடி! பேசுடி, என் முகத்தப் பார்த்து பேசு சுந்துக்குட்டி” கண்ணில் நீர் மல்க பேசினான் பாலா.

“என்ன பேசனும்?” மெல்ல கேட்டாள் அபி.

“நமக்குள்ள பேச ஒன்னுமே இல்லையாடி?”

“இல்ல! நமக்குள்ள பேச ஒன்னும் இல்ல. அம்மா, அப்பா அடிச்சாங்கன்ற பயத்துல உங்கள கட்டிக்கிட்டேன். உங்க மேல உள்ள பயத்துல குடும்பம் நடத்துனேன், உங்க பிள்ளையையும் சுமந்தேன். பயத்துக்கு வந்த புள்ளயும் பாதியிலேயே போயிருச்சு. இனிமே மத்தவங்க இஸ்டத்துக்கு வாழ நான் விரும்பல. சாவோட விளிம்ப தொட்டுட்டு வந்துருக்கேன். இனி என் வாழ்க்கை என் விருப்பம்தான்.”

“என்னடி சொல்லற?”

“உங்களப் பிடிக்காம சகிச்சுக்கிட்டேன்னு சொல்லுறேன். உங்க அடாவடி பிடிக்கல, உங்க காட்டுக்கத்தல் பிடிக்கல, உங்க ஆணாதிக்கம் பிடிக்கல, நீங்க தொடறது பிடிக்கல. மொத்தத்துல உங்களையே பிடிக்கல. என்னை விட்டுருங்க ப்ளிஸ்”

அவள் தன்னைப் பிடிக்கவில்லை என சொன்னது பாலாவுக்கு அப்படி ஒரு கோபத்தைக் கொடுத்தது.

“யாரடி பிடிக்கலன்னு சொன்ன? என்னையா? என்னையா? நெஞ்சு முழுக்க உன் மேல காதல வச்சிருக்கேண்டி பாவி! ஆசையா நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பிள்ளைய உன் அலட்சியத்தால நீ கொன்னுப் புதைச்சும் உன் மேல வச்சக் காதல் அப்படியே தான்டி இருக்கு. நான் காட்டுன பாசத்துக்கு எதிர்வினை வராமப் போனாலும் கால சுத்தற நாய்க்குட்டி மாதிரி என் காதல் மனசு உன்னையேத்தாண்டி சுத்தி வருது. என்னைப் பிடிக்கல, நான் வேணாமுன்னு சொன்ன, கொன்னுப் புதைச்சிருவேண்டி” கோபத்தில் கழுத்தைப் பிடித்துவிட்டான்.

அவன் கண்களைப் பார்த்தப்படி அமைதியாகத்தான் இருந்தாள் அபி.

“விடுண்ணா! விடு அண்ணிய!” என அவன் கைப்பிடித்துத் தடுத்தாள் நிறைமாத கர்ப்பிணி கீதா. அப்பொழுதுதான் வந்து இறங்கி இருந்தாள் தன் அபி அக்காவைப் பார்க்க. தன் அண்ணி என்பதை விட, தன்னைப் பாசமாகப் பார்க்கும் அக்காவென அபியின் மேல் கொள்ளைப் பாசத்தை வைத்திருந்தாள் அவள்.

தங்கையைப் பார்த்ததும் கையை எடுத்துக் கொண்டான் பாலா.

‘ஏண்டி என்னை இப்படியெல்லாம் செய்ய வைக்கிற’ என்பதைப் போல அபியைப் பார்க்கத் தவறவில்லை அவன்.

“அண்ணிய நான் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்! இனிமே இங்க இருக்க வேணாம் அவங்க. உன் முரட்டுத்தனத்தால நீ அவங்கள கொன்னுப் போட்டுருவ! பூவ வளர்த்து உன்னை மாதிரி குரங்கு கையில குடுத்துட்டாங்க. எப்படி இருந்தாங்க அவங்க, உன்னை கட்டி இப்படி வாடி வதங்கிப் போயிட்டாங்க! போதும் உன் கூட அவங்க வாழ்ந்த வாழ்க்கை. காலம் முழுக்க எங்கண்ணிய நான் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன். போ, போ” என கத்தினாள் கீதா.

அவள் கத்தலில் அபியின் அம்மாவும் உள்ளே வந்தார்.

“ஏ புள்ள! கத்தாதடி! வயித்துப் புள்ளக்காரி கொஞ்சம் சூதனமா இரு. இல்லைனா இவள மாதிரி தான் விளங்காம நிப்ப”

அவர் சொன்ன சொல்லில் அபியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாலாவுக்கு கோபம் வந்து விட்டது.

“எதுக்குடி இவங்கள இன்னும் இங்க இருக்க சொல்லுற? இப்படி வாங்கிக் கட்டவா? நான் உன்னைப் பார்த்துக்க மாட்டேனா? இந்தப் பேச்சுலாம் நமக்குத் தேவையா?” என அபி அழுவதைப் பார்த்து மனது கேட்காமல் சத்தம் போட்டவன் தன் மாமியாரிடம் தங்கையிடமும்,

“வாய வச்சிட்டு சும்மா இருக்கறதுன்னா இங்க இருங்க! இல்லைனா கிளம்பி போயிட்டே இருங்க.” என எரிந்து விழுந்தான்.

நர்ஸ் வந்து சத்தத்தைக் குறைக்க சொல்லவும் தான் எல்லோரும் அமைதி ஆனார்கள். தன் அண்ணன் குணத்தை அறிந்திருந்த கீதா, அவன் கண்டிப்பாக அபியை இப்படித்தான் கொடுமைப் படுத்தி வாழ்ந்திருப்பான் என நம்பினாள். அவ்வளவு மென்மையான அதிர்ந்து பேசத் தெரியாத அபிக்கு தன் தமையன் பொருத்தமே இல்லை என மனதில் விழுந்திருந்த எண்ணங்கள் கண் முன்னே ஊர்ஜிதமானதை அவளால் தாங்கவே முடியவில்லை.

“ரெண்டு பேரும் வெளியே போங்க. நான் அண்ணிக்கூட இருக்கேன்” என சொன்னாள் கீதா. அபியின் கைகளும் ஆதரவாய் கீதாவின் கைப்பற்றுவதைப் பார்த்த பாலா பெருமூச்சுடன் வெளியே வந்தான். அவனோடு அபியின் அம்மாவும்.

“கீதாம்மா, வெங்கி போன் செஞ்சானா?” என கேட்டாள் அபி.

“நான் வீட்டுல இருந்தப்போ பண்ணாரு அபிக்கா” அபியை அண்ணி என மற்றவர்களிடம் சொன்னாலும் சின்ன பிள்ளையில் இருந்து கூப்பிட்டுப் பழகியது போல அக்கா எனவே அழைப்பாள் கீதா.

சிறு வயதில் இருந்தே விசேஷ வீடுகளில் அபியைப் பார்த்து விட்டாள் ஓடிப் போய் செல்லம் கொஞ்சுவாள். நிறையப் பேசாவிட்டாலும் ஆசையாக அரவணைத்துக் கொள்வாள் அபி. கீதாவின் அப்பா பிஸ்னஸ் காரணமாக ஊர் மாறி போனதும் கொஞ்சம் உறவு விட்டுப் போனாலும், அபி அவர்களோடு வந்து தங்கிய நாட்களில் மீண்டும் ஆசையாக ஒட்டிக் கொண்டாள் கீதா. வெங்கியை கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதித்ததுக் கூட தன் அபிக்காவின் தம்பி எனும் காரணமாகத்தான். இவள் வேண்டாம் என சொல்லி இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் கேட்டிருக்கப் போவது இல்லை என்பது வேறு விஷயம்.

“என்ன சொன்னான்?”

“உங்கள போய் பார்க்க சொன்னாரு. இன்னும் மூனு நாளுல இந்தியா வந்துருவாராம். அதை உங்க கிட்ட சொல்ல சொன்னாரு. எதுக்கும் கவலைப்பட வேணாம். அவரு வந்ததும் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு சொன்னாரு”

“ஹ்ம்ம் பண்ணிடலாம்” என விட்டத்தை வெறித்தாள் அபி. பின் மெல்ல கீதாவைத் தன் அருகே இழுத்தாள்.

“கீதாம்மா, பாப்பாவ நான் தொட்டுப் பார்க்கவா?” என ஆசையாக கேட்டாள்.

கீதா இன்னும் நெருங்கி வந்தாள். அபியின் கையை எடுத்துத் தன் வயிற்றில் வைத்தாள். கண்கள் ஒளிர பரவசமாக கீதாவின் வயிற்றைத் தடவிக் கொடுத்தாள் அபி. தன் அத்தையின் ஸ்பரிசத்தில் உள்ளிருந்த கவி வேகமாக அசைந்தாள்.

“புள்ள அசையறாம்மா! நான் தொட்டதும் அசையறா பாரேன்!” குரலில் சின்ன குதூகலம் அபிக்கு.

“ரொம்ப முண்டுறா அபிக்கா! இன்னும் ஒரு மாசம் இருக்கு வெளிய வர. அதுக்குள்ள அவசரம். ரொம்ப ராங்கியா வரும் போல”

“புள்ளைய அப்படிலாம் சொல்லாதம்மா! எனக்கு ஒரு ஆசை கீதாம்மா. நிறைவேத்தி வைப்பியா?”

“சொல்லுங்க அபிக்கா”

“புள்ள பொறந்தா க எழுத்துல வர மாதிரி பேரு வைக்கறியா?”

“எதுக்கு க?”

‘உங்கண்ணாவ நான் மனசுல கொஞ்சுறப்போ கணான்னு(பாலகணபதி) தான் கூப்புடுவேன். அதனாலதான்னு எப்படி உன் கிட்ட சொல்லுவேன்! உன்னை கேடயமா வச்சித்தானே நான் உங்கண்ணன பிரியப் போறேன்! என் நேசத்த உன் கிட்ட எப்படி நான் ஒத்துக்குவேன்!’

“பிடிக்கலனா விடு கீதாம்மா! ஏதோ ஒரு ஆசை, கேக்கனும்னு தோணுச்சு”

“அப்படிலாம் இல்ல. க லயே வைக்கிறேன் அபிக்கா. நீங்க கவலைப்படாதீங்க!” கண் கலங்கிய அபியை அணைத்துக் கொண்டாள் கீதா.

சட்டென்று தேறிக் கொண்டாள் அபி.

“கீதாம்மா, டாக்டர் உன் கர்ப்பப்பை வீக்கா இருக்கு, நிறைய ட்ராவல் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காரு தானே! எதுக்கு இங்க வந்த?”

“போன தடவை வந்தப்ப உங்களுக்கு இன்னும் முழிப்பு வரல. அதான் இப்ப வந்தேன் அபிக்கா. நீங்க இப்படி இருக்கறப்போ என்னால அங்க நிம்மதியா இருக்க முடியல.”

“கீதாம்மா, என்னை உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறியா?”

“எங்கம்மா வீட்டுக்கா?”

“உன் வீடுன்னு சொன்னேன்!”

“ஓ நம்ம வீட்டுக்கா! அண்ணா விடுவாறான்னு தெரியலையே! ஏற்கனவே வெட்டவா, குத்தவான்ற மாதிரி பார்க்கறாரு!”

“இப்போ வெளிய போய் உங்கண்ணா இருக்காறான்னு பாத்துட்டு வரியா?”

போய் பார்த்துவிட்டு வந்தவள், அவன் அங்கே இல்லையென திரும்பினாள்.

“நீ பார்த்தப்போ அவரு என் கழுத்தப் பிடிச்சிட்டு இருந்தாரே, ஏன்னு உனக்குத் தெரியுமா கீதா?”

“அவர் பிடிச்சததான் பார்த்தேன். ஏன்னு தெரியலையே அபிக்கா”

“இனிமே என்னால பிள்ளைப் பெத்துக் குடுக்க முடியாதுல, அதனால வேற கல்யாணம் செஞ்சுக்கறேன்னு கேட்டாரு. நான் முடியாதுன்னு சொன்னேன்! அதான் கோபம்”

“என்ன சொல்லுறீங்க?” அதிர்ந்தாள் கீதா.

“ஆமா! அதுக்குள்ள நீங்கலாம் வந்துட்டீங்கல அதான் என் மேல அக்கறை இருக்கற மாதிரி நடிச்சாரு!” என தான் சொன்ன பொய்யினால் உண்மையாக கண் கலங்கினாள் அபி.

அபியின் கண்ணீரைப் பார்த்து கோபம் பொத்துக் கொண்டு வந்தது கீதாவுக்கு.

“அவன என் அண்ணன்னு சொல்லவே கேவலமா இருக்கு. எங்கம்மா அப்பாட்ட சொல்லி அவன கிழி கிழின்னு கிழிக்கறேன் பாருங்க”

“அப்படிலாம் மரியாதை இல்லாம பேசாத கீதாம்மா!”

தன் அண்ணன் இப்படி இருந்தும் பாசம் காட்டுகிறாரே என கலங்கிப் போனாள் கீதா.

“முதல்ல அதிர்ச்சியா இருந்துச்சு அதான் சம்மதிக்கல. ஆனா யோசிச்சுப் பார்த்தா இன்னொரு கல்யாணம் தான் இதுக்கு முடிவு. அவருக்கு என் மேல காதல் இல்லைனாலும், நான் வச்ச காதல் உண்மை கீதா! காதல் கணவன் இன்னொரு கல்யாணம்னு கேக்கறப்போ அத மறுக்காதவ தான் உண்மையான பொண்டாட்டி. இனிமே நான் அம்மா வீட்டுல உன் புள்ளையப் பார்த்துகிட்டு நிம்மதியா இருந்துருவேன். எனக்கு ஒரு சத்தியம் பண்ணு கீதா”

என்னமோ பாதகமாக கேட்கப் போகிறார் என பயந்த கீதா முடியாது என தலையை ஆட்டினாள்.

“நீ சத்தியம் பண்ணிக் குடுக்கலனா, நான் செத்துப் போயிருவேன்! உங்கண்ணாவ பிரிஞ்சு நான் வாழவா, இல்லை கூடவே இருந்து சாகவா? சொல்லு கீதாம்மா”

சாவு எனும் வார்த்தையில் ஆடிப்போன கீதா, எந்த உதவியும் செய்வேன் என சத்தியம் செய்தாள். அபியின் உபதேசத்தின் படி தன் அம்மாவிடம் வாரிசு சுமக்க முடியாத அபியை விலக்கி விட்டு இன்னொருத்தியை மருமகளாக்க சொல்லி நஞ்சை விதைக்க சொன்னாள். அபியா தன் குடும்பம் தழைக்க வாரிசா எனும் கேள்வி எழும் போது அவரும் வாரிசையே தேர்தெடுத்தது அபிக்கு சாதகமாகிப் போனது. அவர் மூலமாக மாமனாரையும் சரிக்கட்டினாள் அபி. அபியின் மேல் வைத்திருந்தப் பாசத்தில் அவள் தன் அண்ணனின் கொடுமையில் இருந்து தப்பித்து வந்தால் போதும் என முடிவெடுத்து அபி கொடுத்த சாவிக்கு பொம்மையாக ஆடினாள் கீதா.

வீட்டில் அபியை விலக்கி விட்டு வேறு திருமணம் செய்ய சொல்லி குடைச்சல் ஆரம்பிக்கவும் நொந்துப் போனான் பாலா. அபியோ இவனை விட்டு விலக, வீட்டில் உள்ளவர்களோ அவளை விலக்கி வைக்க சொல்ல மன இறுக்கத்திற்கு ஆளானான் பாலா. யார் பேச வந்தாலும் கோபத்தைக் கையில் எடுத்தான்.

அந்த நேரத்தில் தான் அபியை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என டாக்டர்கள் அனுமதி கொடுத்தனர். அன்றுதான் வெங்கியும் இந்தியாவுக்கு வந்திறங்கினார். வந்தவர் நேராக தன் அக்கா இருந்த ஊருக்குப் போனார். ஆண்கள் இருவருமே ஒன்றாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள்.

தன் மாமாவின் இளைத்து வாடிப் போன தோற்றத்தைப் பார்த்து மனம் வருந்தினான் வெங்கி.

“எப்படி மாமா இருக்கீங்க?”

“நல்லா இல்லடா! உங்கக்காவும் என்னை சுத்தி உள்ளவங்களும் என்னை உயிரோட சாகடிக்கறாங்க” என தன் மனதில் உள்ளதை மச்சானிடம் பகிர்ந்துக் கொண்டான் பாலா.

வெங்கிக்கு மனது வலித்தது. ஒன்றும் பேசாமல் பாலாவை அணைத்துக் கொண்டான்.

தன் வாழ்க்கையின் வெளிச்சப் பூவாக உதித்த இரு ஆண்மகன்களையும் ஒன்றாகப் பார்த்த அபிக்கு கண்கள் கலங்கியது. இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். கண்ணை மறைக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பார்த்தாள். அவளின் இரு பக்கமும் வந்து நின்றவர்களை தன் மனதில் நிறைத்துக் கொண்டாள்.

“வெங்கி, கொஞ்சம் வெளிய இருடா! உன் மாமா கிட்ட நான் கொஞ்சம் பேசனும். அம்மாவையும் கூட்டிட்டுப் போ”

சரியென தலையாட்டி தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியேப் போய்விட்டான் வெங்கி.

அவன் போனதும் நெருங்கி வந்து தன் மனைவியின் உதட்டில் காதலாக முத்தமிட்டான் பாலா. எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே அந்த முத்தத்தில் கரைந்துப் போனாள் அபி. விடவே மாட்டேன் என்பது போல அவன் நீட்டித்த முத்தத்தை இவள் தான் நிறுத்தினாள்.

“இதே மாதிரிதான் உங்க புது பொண்டாட்டிக்கும் முத்தம் குடுப்பீங்களா?” தயங்கி தயங்கிக் கேட்டாள் அபி.

“என்ன உளறல் இது சுந்தரி?”

“உங்கம்மா உங்களுக்குப் பொண்ணுப் பார்க்கறாங்களாம்!” தரையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“பார்க்கட்டும், பார்த்து எங்கப்பனுக்குக் கட்டி வைக்கட்டும்”

புன்னகை வர பார்த்தது அபிக்கு, அடக்கிக் கொண்டாள்.

“வேற கல்யாணம் பண்ணிக்கோங்க”

“மொகரையப் பேத்துருவேன்”

இன்னும் குனிந்துக் கொண்டாள் அபி. உடல் லேசாக நடுங்கியது.

“இதெல்லாம் சரிப்படாது! கிளம்பு, நம்ம வீட்டுக்குப் போகலாம்”

“இல்ல!”

“என்ன இல்ல சுந்தரி?”

“அது நம்ம வீடு இல்ல. உங்க வீடு”

“என்னைக் கோபப்படுத்திப் பார்க்கதே சுந்துக்குட்டி! உடம்பு முடியாம இருக்கியேன்னு ரொம்ப பொறுமையா போறேன்! அதுக்கும் ஒரு அளவு இருக்குடி”

“இதுதான் நீங்க! இந்த முரட்டுத்தனம் தான் நீங்க! எனக்கு உங்களப் பிடிக்கல! நீங்க முரட்டடியா அணைக்கறது பிடிக்கல! ஏற்கனவே சொல்லிட்டேன். இன்னும் வா வான்னா என்ன அர்த்தம்? என் உடம்பு மேல உள்ள ஆசை இன்னும் தீரலையா? தினமும் நீங்க நெருங்கறப்பலாம் கஸ்டப்பட்டு சகிச்சுக்கிட்டேனே, இன்னும் அந்த வெறி அடங்கலையா?”

படபடவென பொரிந்து தள்ளிய தன் மனைவியைப் பார்த்து பேச்சிழந்து நின்றான் பாலா. தன் காதலை வெறி என அவள் சொல்லியதைக் கேட்டு அவன் ரத்தம் கொதித்தது. இவள் தன்னைப் புரிந்துக் கொண்டது இவ்வளவுதானா என மனம் வெறுத்துப் போனது.

“என்னையும் என் காதலையும் நீ புரிஞ்சிக்கவே இல்லையாடி? நாம சேர்ந்திருந்த நாட்கள்ல ஒரு நொடி கூடவா என் காதலை நான் உணர்த்தல? சொல்லுடி” அமைதியாக ஆரம்பித்து ஆக்ரோஷமாக முடித்தான் அவன்.

அவன் காட்டிய காதலை நெஞ்சுக்குள் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருப்பவள் என்ன சொல்லுவாள்! முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“உங்க கூட யாராலயும் வாழ முடியாது! நான் தான் ஆம்பளை, நான் செய்யறதுதான் சரின்னு எண்ணம் உங்களுக்கு. இன்னொருத்திய கட்டுனா கூட என்னை மாதிரிதான் வேணான்னு ஓடப் பார்ப்பா! ஏன்னா…” நிறுத்தி மூச்சு வாங்கியவள்,

“ஏன்னா நீங்க ஒரு ஆணாதிக்கம் பிடிச்ச முரடன். உங்களுக்கு காதலிக்கத் தெரியாது, காமத்தக் காட்டத்தான் தெரியும். போதும், நீங்க காட்டனதும் நான் தாங்கனதும். என்னை விட்டுருங்க, எனக்கு விடுதலை வேணும்!” என நடுங்கும் குரலில் முடித்தாள்.

கட்டுப்படுத்தி இருந்த கோபம் எல்லாம் வெடித்துப் பொங்கியது பாலாவுக்கு. தன் இரு கைகளாலும் அவள் தோள் பற்றி உலுக்கியவன்,

“காதல காட்டனனோ, காமத்தக் காட்டனனோ அதுக்கு எந்த எதிர்வினையும் காட்டத நீதாண்டி ஜடம். என்னோட உணர்வையும், உணர்ச்சியையும் புரிஞ்சுக்காத நீ ஒரு கல்லுடி. மூளைக்காரில அதான் இந்த காட்டானோட காதல் கூட காமமா தெரியுது! ஆமாடி, நான் ஆணாதிக்கம் புடிச்சவந்தான்! எனக்கு கீழதான் என் பொண்டாட்டின்னு நினைப்பவந்தான்! கட்டவன அடக்கமா தனக்குள்ள அடங்கிப் போகனும்னு நினைக்கறவந்தான், ஆனா உன் வார்த்தையால என்னை மண்ணுக்குள்ள அடக்கம் பண்ணிட்டடி! காலுல விழாத குறையா கெஞ்சறேன், உனக்கு இவ்வளவு திமிர் ஆகாதுடி! என்னைக் காதலிச்சிருந்தனா இந்த மாதிரி பேசியிருக்க மாட்ட! கடைமைக்காக என் கூட படுத்தவதானே நீ!” என குமுறினான்.

அவன் மனக்குமுறல் அபியின் நெஞ்சைக் குத்திக் கிழித்தது. விழிகளுக்கு அணைப்போட்டவள், மனதையும் திடப்படுத்தினாள்.

‘எல்லாம் என் மாமானுக்காக! எல்லாம் என் மாமனுக்காக’ என மனதை உருவேற்றினாள்.

“விடுங்க, வலிக்குது” என அவன் பிடியில் இருந்து விலகினாள்.

சற்று நேரம் இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

உருகி உருகி தான் காதலைக் காட்ட, இவள் தன்னைப் புரிந்துக் கொள்ளாமல் கடமைக்காக வாழ்கிறாள் என ஏற்கனவே அவன் அறிந்தது தானே! எப்படியும் தன் பாசத்தால் அவளை மாற்றலாம் என கனவு கண்டவனுக்கு அவள் வேண்டும் விடுதலை எனக் கேட்டது மனதை அறுத்துவிட்டது.

யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்? நான் ஆண். இவ்வளவு இறங்கி வந்து கெஞ்சியதே பெரிது எனும் சுயகௌரவம் தலை தூக்க, நிமிர்ந்து அமர்ந்தான்.

“விடுதலை வேணுமா? நீ என்னடி கேக்கறது, நானே குடுக்கறேன் விடுதலை! இன்னும் என்ன சொன்ன? இன்னொருத்திய கட்டுனா, என்னை விட்டுட்டு ஓடிருவாளா? இதுக்காகவே இன்னொருத்திய கட்டுறேண்டி, வச்சி வாழ்ந்து காட்டறேண்டி என் முன்னாள் பொண்டாட்டி! பாத்திரம் அறியாம பிச்சைப் போட்டதுக்கு இந்த ஒரு தடவை மட்டும் பொறுத்துக்கோ!” என்றவன் அவளை மென்மையாய் அணைத்து வன்மையாய் இதழொற்றினான். தனக்கு கிடைக்கும் கடைசி இதழ் அணைப்பு இது என அறிந்தவள், கண்ணை மூடாமல் ஒவ்வொரு நொடியையும் தனக்குள் சேமித்துக் கொண்டாள்.

பின் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியேறினான் பாலா. போனவன் எங்கே திரும்பி வந்துவிடுவானோ என மனதை கல்லாக்கிக் கொண்டு கண்ணீர் சிந்தாமல் அமர்ந்திருந்தாள். வெங்கி வந்து,

“அக்கா மாமா பணத்தைக் கட்டிட்டு போய்ட்டார். டாக்சியும் அரேஞ் பண்ணியிருக்காரு. உன்னை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக சொன்னாரு. என்னக்கா நடக்குது இங்க?” என கேட்டான்.

“அப்புறம் சொல்லுறேன்! முதல்ல கிளம்பலாம்”

புகுந்த வீட்டைத் துறந்து மீண்டும் பிறந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தது அந்த சிறகொடிந்த கிளி. பேச்சு இல்லை, சிரிப்பு இல்லை, விழிகளில் அருவியும் நிற்கவில்லை.

இந்தப்புறம் பிள்ளையை ஈன்றெடுக்கப் போகும் மனையாள், அந்தப்புறம் சோகத்தை எல்லாம் குத்தகை எடுத்திருந்த தமக்கை. யாரைப் பார்ப்பான் வெங்கி! அதட்டி உருட்டி அக்காவிடம் விஷயத்தைக் கறந்தவன் கலங்கிப் போனான். எவ்வளவு எடுத்து சொல்லியும் பாலாவுடன் வாழப் போக மாட்டேன் என சாதித்துவிட்டாள் அபி.

“அவர் வாழனும்டா வெங்கி. புள்ளைக்குட்டியோட நல்லா வாழனும். வம்சம் பெருகி தழைச்சு நிக்கனும்டா. நான் வேணாண்டா அவருக்கு. இப்போ காதல்னு என்னை ஏத்துக்கிட்டாலும், என்னைக்காச்சும் நமக்குப் புள்ளை இல்லாம போச்சேன்னு அவர் லேசா கலங்கிட்டாக் கூட உன் அக்கா மனசால செத்துப் போயிருவாடா! அதுக்கு இப்போவே விட்டுட்டு வந்துறது நல்லதுடா! நான் அவர் ஆசைப்பட்டப்படி நடக்கல! நடந்துக்கத் தெரியல. இப்போ அவருக்குப் பாத்துருக்கற பொண்ணு நல்லா கலகலன்னு இருக்காளாம். உன் பொண்டாட்டி கடுப்புல சொன்னா! அவ என் மாமன சந்தோஷமா வச்சிக்குவாடா! அதைத்தான் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்.”

“அவர மறந்து மீதி வாழ்க்கைய வாழ்ந்துருவியாக்கா?”

“முடியாதுடா வெங்கி! சத்தியமா முடியாதுடா! என் மாமாவ மறந்துட்டு நான் வாழமாட்டேன். இனிமே அவர் அடுத்தவ புருஷனா ஆகிட்டாலும் அவர நினைச்சிட்டேதான் இருப்பேன். வானத்து நட்சத்திரத்த பாத்து ரசிக்கற நான் அதை தொட முடியுமாடா? அதே மாதிரி தான் என் மாமாவ மனசுல வச்சி ரசிச்சிக்குவேன். தொட்டுப் பார்க்கனும்னு நினைக்கமாட்டேன்! நினைக்க மாட்டேண்டா வெங்கி!” என சொல்லி தன் தம்பியின் தோளில் சாய்ந்து கதறி அழுதாள் அபி.

ரூமுக்குள் வந்த கீதா கேட்டது கடைசியாக அபி பேசி கதறியதைத்தான். தன் அண்ணன் மேல் இவ்வளவு காதல் வைத்திருக்கும் இவரை மறந்து அவன் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்து விட்டானே என மனம் புழுங்கினாள்.

வெங்கியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதுவும் செய்யக் கூடாது என தன் மேல் ஆணை வைத்து சத்தியம் பெற்றுக் கொண்டாள் அபி.

இவளின் வற்புறுத்தலில் வெங்கியும் கீதாவும் பாலாவின் திருமணத்துக்கு சென்று வந்தார்கள். அபி கேட்டது போல கேமரா ஒன்று வாடகைக்கு வாங்கிப் போய் திருமணத்தைப் படம் பிடித்து ப்ரின்ட் போட்டு வாங்கி வந்தார் வெங்கி. ஆசையாக வாங்கிப் பார்த்தாள் அபி. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

அன்று இரவு படுத்தவள் மறுநாள் எழுந்திரிக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது. டாக்டர் ஏற்கனவே கீழே விழுந்திருந்ததால் தலையில் ரத்தக்கட்டி இருந்திருக்கிறது. அது பல நரம்புகளை அழுத்தியதால் உயிர் பிரிந்திருக்கலாம் என்றார். அல்லது உடலை சரியாக பராமரிக்காததால் நிகழ்ந்திருக்கலாம் என பல காரணங்கள் சொன்னார். வெங்கிக்கு மட்டும் தானே தெரியும், தன் அக்கா புருஷனை விட்டுக் கொடுத்து விட்டதை தாங்காமல் போய் சேர்ந்துவிட்டாள் என.

மனைவி பிள்ளைத்தாங்கி இருப்பதால் இவர் காரியம் செய்யக் கூடாது என சொல்லிவிட்டார்கள். தங்கள் அப்பாவை வைத்து காரியங்கள் செய்து கொள்ளி வைக்கப் போன போது சரியாக வந்தான் பாலா. கொள்ளியை வாங்கி தன் மனைவியின் சிதைக்குத் தீ முட்டியவன், அப்பொழுதே மொட்டைப் போட்டுக் கொண்டான். திரும்பி போகும் முன்,

“என் தங்கச்சிய பாத்துக்க மச்சான்! நான் ஊரை விட்டு வடக்கேப் போறேன்! இனி இந்தப் பக்கம் வர மாட்டேன்” என கலங்கிய கண்களுடன் விடைப்பெற்றான்.

“மாமா!”

“பயப்படாதே! என் புதுப்பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டுத்தான்” என விரக்தியாக புன்னகைத்தவன், கிளம்பிப் போய்விட்டான்.

சரியாக அபி இறந்து பத்து நாள் கழித்து பூமிக்கு வந்தாள் கவிலயா, தன் அத்தையையே உரித்து வைத்துக் கொண்டு.

இறந்து போன அபிதான் ஆத்மா சாந்தியடையாததால் மீண்டும் பிறந்து வந்துவிட்டாளோ என நினைத்து கவலையில் ஜன்னியே வந்து விட்டது கீதாவுக்கு.

கதையை சொல்லி முடித்த வெங்கி தன் மகளையும் மருமகனையும் ஏறிட்டுப் பார்த்தார்.

 

(கொட்டும்)

 

(இந்த ப்ளேஸ்பேக்குக்கும் கவி நடந்துக்கறதுக்கும் என்ன லிங்க்னு யாருக்காச்சும் புரிபடுதா? எனி கெஸ்? காமெண்ட்ல ஷேர் கரோ ஜி.)