அத்தியாயம் 14
இங்குள்ள மக்கள் ஓரளவுக்கு நாகரிகமாக இருந்தாலும் தங்களது பாரம்பரிய உடையை அணியத் தயங்குவதில்லை. சேலை, சுடிதார்களை மலாய் மற்றும் சீன மக்களும் அணிகிறார்கள். அதே போல மலாய்க்காரர்களின் பாஜூ கூரோங் (சுடிதார் போல முட்டிவரை நீண்டிருக்கும் டாப்ஸ், கீழே நீள பாவாடை) இந்தியர்களாலும் சீனர்களாலும் விரும்பி அணியப்படுகிறது. சீனர்களின் சியோங்சாம் இந்தியர்களாலும் அணியப்படுகிறது.
காலையில் காரில் ஏறிய குரு மிருவைப் பார்த்து திகைத்துப் போனான்.
“மார்னிங் பாஸ்”
“மார்னிங் மிரு” எப்பொழுதும் அமர்ந்ததும், சாய்ந்து ரிலேக்சாக அமர்ந்துக் கொள்பவன், இன்று அப்படியே ஆணி அடித்தது போல அமர்ந்திருந்தான்.
“பாஸ், சீட்டைப் பின்னால நகர்த்திக்குங்க! எனக்கு சைட் மிரர் மறைக்குது” என மிரு சொல்லவும் தான் சீட்டை நகர்த்தி அமர்ந்தான்.
“என்ன இன்னிக்கு இப்படி?”
“இப்படினா எப்படி பாஸ்?”
“பாஜூ கூரோங் போட்டிருக்கியே, அதைக் கேட்டேன். எப்பவும் ப்ளவுஸ் போட்டிருப்ப! பொறந்த புள்ளய சுத்தி வைக்கற மாதிரி ஷால் போட்டு உடம்ப சுத்தி வச்சிருப்பே! இன்னிக்கு புதுசா இப்படி பாக்கவும் ஆச்சரியமா ஆகிருச்சு. ஆரஞ்சு கலர் ட்ரெஸ் கண்ணை அப்படியே கட்டுது” என வம்பிழுத்தான் குரு. வாய் பேசினாலும் கண்கள் மட்டும் அவளையே சுற்றி வந்தன.
அவன் கிண்டலை கிடப்பில் போட்டாள் மிரு. இந்த கொஞ்ச நாட்களாகத் தான் அவனை அறிந்து வைத்திருக்கிறாளே! அவன் நல்ல மூடில் இருக்கும் போதெல்லாம் இவளை எதாவது சொல்லி உசுப்பேற்றுவான், இவள் தாம்தூம் என்று குதித்தால் பாய்ண்ட்டோடு எதையாவது சொல்லி இவளை ஆப் ஆக்கிவிடுவான். அந்த ங்கொய்யாலேக்குப் பிறகு நடந்த மூக்குடைப்புக்குப் பின் இவன் ஏதாவது கிண்டல் அடித்தால் எகிறாமல் இவளும் அவன் வழியிலே போய் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.
அன்று அவள் முகம் போன போக்கில் வாய் விட்டு சிரித்தான் குரு. அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. லிப்டை நெருங்கியும் பட்டனை தட்டாமல், சுவற்றில் சாய்ந்து நின்று கலகலவென சிரித்தான்.
அவன் புன்னகையைப் பார்த்திருக்கிறாள் மிரு. வாய் விட்டு சிரிப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறாள். டாலடித்த அவன் வெள்ளைப் பற்களை ஆசையாகப் பார்த்திருந்தாள் மிரு.
‘எந்த ப்ராண்ட் தூத்பேஸ்ட் யூஸ் பண்ணறான்னு கேட்கனும். நாமளும் தான் தேய் தேய்ன்னு தேய்க்கறோம், இந்த அளவுக்கு வெள்ளையா ஆகமாட்டுதே நம்ம பல்லு’
“ஜோக் சொன்னா சிரிக்கனும் மிரு! இப்படி முகமெல்லாம் சிவக்க, மூக்கை விரிச்சுக் கத்தக் கூடாது. குருவி எதாவது பாத்துச்சுனா உன் விரிஞ்ச மூக்குல கூடு கட்டிரும்” என சொன்னவன் இன்னும் சிரித்தான்.
‘ஓ, ஜோக் தான் பண்ணானோ! நாம தான் எப்பொழுதும் போல வாய விட்டுட்டோமோ! எப்படி சமாளிக்கறது இப்போ?’
கோப முகத்தை சட்டென மாற்றி அசட்டு சிரிப்பை படர விட்டாள்.
“ஜோக்கா பாஸ்! ஹிஹி! நல்லா சொன்னீங்க ஜோக்கு! இந்த மாதிரி ஜோக்லாம் யாரும் என் கிட்ட சொன்னது இல்லையா, அதான் கடுப்பாகிட்டேன்!”
“அது சரி, ங்கொய்யாலன்னா என்ன மிரு?”
‘அடச்சை! பீட்டர் கிட்ட போய் தமிழ் பிலிம் காட்டிட்டேனே!’
“ங்கொய்யாலன்னா எப்படி சொல்ல.. அது வந்து..ஆஹ்ம்..அப்படினா கொய்யா ப்ளஸ் இலை ஈக்குவல் டூ ங்கொய்யால! நீங்க கொய்யா இலை மாதிரி அருமையானவருன்னு சொன்னேன் பாஸ்”
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான் குரு.
“கொய்யா இலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”
“கொய்யா இலைல ஆண்டியோக்சிடேன்ட், நிறைய விட்டமின்லாம் இருக்காம் பாஸ். அது எப்படி மனுஷனுக்கு சக்தி கொடுக்குதோ, அதே மாதிரி எங்க பாஸ்சான உங்களப் பார்த்தாலே எங்களுக்கு சக்தி வந்துரும். அதான் உங்கள பாசமா கொய்யா இலைன்னு கூப்பிட்டேன் பாஸ்.” சொல்லிவிட்டு இளித்து வைத்தாள் மிரு.
“என்னமோ திட்டிருக்கே என்னை, இப்போ பேச்சை மாத்தற! தட்ஸ் ஓகே! மூட் அவுட்ல இருக்கியேன்னு விடறேன்.”
‘யப்பா தப்பிச்சோம்டா சாமி! இனிமே நோ கோபம்! ஒன்லி ஓம் ஓம் பிராணாயாமம்! அமைதி அமைதி மிரு! அன்னிக்குப் பார்த்தல பாஸோட ஆளு, அவங்களப் பார்த்தும், உனக்கு என்ன இப்படி சட்டுன்னு கோபம் வந்துருச்சு! அவங்க எங்க, நீ எங்க! உன் கிட்டலாம் பாஸ் புருஷன், புண்ணாக்குன்னு பேசுனா அது ஜோக்காத்தான் இருக்கும்னு கூட புரியாத மட்டியா இருக்கியே!’ தன்னையே கடிந்துக் கொண்டவள், அதில் இருந்து அவன் என்ன சொன்னாலும் கோபப்படுவதில்லை.
“மிரு!”
“என்ன பாஸ்?”
“கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல”
“இன்னிக்கு என் பேஸ்ட் ப்ரேண்ட் காசிமோட நிக்காஹ் பாஸ். காலையிலே அவங்க முறைப்படி எல்லாம் நடக்கும். சோ பகல்ல நெருங்கினவங்களுக்கு மட்டும் விருந்து. கண்டிப்பா வர சொன்னான். போகலைனா காது தீயற அளவுக்கு ஏசி விட்டுருவான்.”
“ஹால்ப் டே அப்ளை செஞ்சிட்டியா?”
“ஹ்ம்ம்! சிஸ்டம்ல போட்டுட்டேன். டீம் லீட் அப்ரூவ் பண்ணிட்டார்”
“உன் ப்ரேண்ட் கல்யாணத்துக்குலாம் போற! நீ எப்போ மிரு எனக்கு கல்யாண சாப்பாடு போட போற?”
“இப்போதைக்கு இல்ல பாஸ்! தம்பி படிச்சு முடிச்சு, வேலைக்குப் போகட்டும்!”
“அதுக்குள்ள நீ கிழவி ஆகிருவியே மிரு!”
“ஆயிட்டுப் போறேன்! எனக்கேத்த கிழவன தேடி கட்டிக்கறேன்!”
“அந்த டைம்ல நானும் கிழவன் ஆகியிருப்பேன் நினைக்கறேன்! கடமைலாம் முடிச்சுட்டு என்னைக் கட்டிக்கறியா மிரு?”
“கிழவனத்தான் கட்டிக்கறேன் சொன்னேன்! குடுகுடு கிழவன கட்டிக்கறேன்னு சொல்லல பாஸ்!” என சொல்லியவள், வேண்டுமென்றே கெக்கேபெக்கேவென சிரித்தாள்.
“போதும் போதும்! ரோட்டைப் பார்த்து ஓட்டு!” சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான் குரு.
மிருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கஸ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
‘யார் கிட்ட! இனிமே கிண்டல் பண்ணுவ நீ! அடக்கி உட்கார வச்சோம்ல!’ உல்லாசமாக ரேடியோவில் ஓடிய பாடலுடன் சேர்ந்து ஹம்மிங் செய்தாள் மிரு. பட்டென கை நீட்டி ரேடியோவை நிறுத்தினான் குரு.
“எனக்குத் தலை வலிக்குது! கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வரியா?”
“யெஸ் பாஸ்!”
பாதி வழி வந்திருப்பார்கள், குருவின் காலை யாரோ சுரண்டுவது போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தான் அவன். மிருதான் ஒற்றை விரலால் சுரண்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன?”
“வாய மூட சொல்லிட்டிங்களே பாஸ் அதான் சுரண்டினேன். இப்ப வாய திறக்கவா?” என கேட்டாள்.
“அதான் திறந்துட்டியே, சொல்லு!”
“எண்ணெய் ஊத்தனும் பாஸ். முடியப் போதுன்னு லைட் அடிக்குது!” டயங்கி தயங்கி சொன்னாள்.
“அதெல்லாம் நேத்து நைட்டே..”
அவன் பேசி முடிப்பதற்குள்,
“சாரி சாரி பாஸ்! ராத்திரி கிரேப் ஓட்டிட்டு வரப்பவே செம்ம தூக்கம். கண்ண அலசிருச்சு! அதான் ஸ்ட்ரேய்டா வீட்டுக்குப் போய்ட்டேன்! சாரி, சாரி!” கண்ணை சுருக்கி உதட்டைக் குவித்துக் கெஞ்சினாள்.
திட்ட வந்தவன் அவள் குவிந்த உதட்டைப் பார்த்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.
“சரி, போ!”
அடுத்த எண்ணெய் ஸ்டேசனில் கொண்டு போய் காரை நிறுத்தினாள் மிரு. அவள் இறங்க முனைய,
“உட்காரு மிரு! நான் ஊத்தறேன்” என இறங்கினான் குரு.
தனது கிரேடிட் கார்டை வைத்து டேங்கை ஃபுல்லாக நிரப்பினான். பின் கதவைத் திறந்தவன்,
“மிரு காரைப் பார்க் பண்ணிட்டு வேய்ட் பண்ணு! நான் சம் திங்ஸ் வாங்கனும்.” என சொல்லி விட்டு சென்றான்.
எண்ணெய் ஊற்றும் இடங்களில் சின்னதாக அங்காடி இருக்கும். பானங்கள், உணவு பொருட்கள், மருந்து வகைகள், புத்தகங்கள் இப்படி பலதரப்பட்ட பொருட்களை விற்பார்கள் அங்கே.
ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவன் கையில் ப்ளாஸ்டிக் பை இருந்தது. அவன் அமர்ந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள் மிரு. பையில் இருந்து பெரிய சைஸ் டைரி மில்க் சாக்லேட்டை வெளியெ எடுத்தான் குரு. அதைப் பிரித்தவன் சின்ன துண்டாக உடைத்து வாயில் போட்டுக் கொண்டான். இன்னொரு துண்டை உடைத்து மிருவுக்கும் நீட்டினான்.
அவள் தயங்காமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள். மீத சாக்லேட்டை மடித்துப் பையில் வைத்து மிருவின் காலடியில் இருந்த அவள் பேக்கில் வைத்தான்.
“என்ன பாஸ், என் பேக்குல வைக்கறீங்க?” என கேட்டாள் மிரு.
“எனக்குப் போதும் மிரு”
“போதுமா பாஸ்? கொஞ்சமாத்தான் சாப்பிட்டீங்க!”
“நூறு கிராம் சாக்லேட்டுல 526 கலோரி இருக்கு மிரு. அதை இறக்கறதுக்கு ஓன் ஹவர் ஸ்பீட் வால்க் செய்யனும் தெரியுமா!” என கேட்டான்.
‘அய்யோ, நாம ரெண்டு ப்ளேட் சோறு சாப்பிடறோமே நைட்டுல, அதுக்கு எத்தனை ஹவர் நடக்கனும்? நடந்தா பத்தாது போல இருக்கே! உருண்டு பொரண்டு ரெண்டு ஹவர் ஓடனா கூட கரைக்க முடியாது போலவே!’
“ஓஹோ! அப்படி கலோரி கணக்குப் பார்க்கறவர் எதுக்கு சாக்லேட் சாப்டீங்க?”
“என்னமோ சாப்படனும் போல இருந்துச்சு மிரு. ஆசைய அடக்க முடியல!” என சொல்லியவன் அவள் உதட்டையேப் பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்திருந்தான்.
“டயட்ல ஃபர்ஸ்ட் ரூலே ஆசைய அடக்கக் கூடாது. எதாச்சும் சாப்படனும்னு தோணுனா, கட்டுப்படுத்திக்காம கொஞ்சமா சாப்பிட்டு அந்த ஆசைய அடக்கிறனும். இல்லைனா ஆசை பேராசையா ஆகி முழுசா சாப்பிட வச்சிரும்” பெருமூச்சுடன் சொன்னான் குரு.
“எக்சர்சைஸ் செய்யாம ஈசியா கலோரிய பேர்ன் பண்ண முடியாதா பாஸ்?” தனக்கு எதாவது டிப்ஸ் கொடுப்பானா என இந்த கேள்வியைக் கேட்டு வைத்தாள் மிரு. கொஞ்ச நாட்களாகவே பேண்டின் ஜிப்பைப் போட சிரமமாக இருந்தது அவளுக்கு.
அவன் முகத்தில் குறும்புப் புன்னகை வந்து அமர்ந்தது. காரை ஓட்டியவள் அதைக் கவனிக்கவில்லை.
“இருக்கு ஒரு வழி! ஆனா உனக்குப் பிடிக்குமான்னு தெரியலையே மிரு”
“ஆடனும், ஓடனும், பாயனும் இப்படி இல்லாம வேறு என்னவா இருந்தாலும் இந்த மிரு கண்டிப்பா ஒரு ட்ரை குடுப்பா! சும்மா சொல்லுங்க பாஸ்”
“நெஜமா சொல்லவா மிரு?”
“சொல்லுங்கன்னு சொல்லுறேன்”
“ஓன் ஹவர் விடாம லிப் டூ லிப் கிஸ் அடிச்சா 91 கலோரி இறங்குமாம். ரெண்டு பேரும் அடிச்சுக்கலாமா? நான் ரெடி, நீ ரெடியா மிரு?”
குப்பென முகம் சிவந்துப் போனது மிருவுக்கு. சமாளித்துக் கொண்டவள்,
“நானும் ரெடிதான் பாஸ்! ஆனா உங்கள மாதிரி அங்கிள் வேணாம் பாஸ். எனக்குன்னு ஒருத்தன் வருவான், அப்போ சேர்த்து வச்சிருக்கற கலோரிய எல்லாம் இறக்கிக்கிறேன்.” என அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்து விட்டு கார் ஓட்டுவதில் கவனமானாள்.
பல்லைக் கடித்தான் குரு. பார்வை மட்டும் சிவந்துப் போய் கிடந்த அவள் முகத்திலேயே இருந்தது. சட்டென கை நீட்டி அவள் உதட்டை மெல்ல வருடினான்.
“என்ன பண்ணறீங்க பாஸ்?” கத்தினாள் மிரு.
“சாக்லேட் மிரு! உதட்டுல ஒட்டி இருந்துச்சு, துடைச்சு விட்டேன்! நீ கார் ஓட்டிட்டே எப்படி துடைப்பன்னு தான் ஹெல்ப் பண்ணேன்”
ஒரு கையில் ஸ்டீரிங் வீலை பிடித்தவள், இன்னொரு கையால் தன் உதட்டைத் துடைத்தாள்.
“இதோ, இப்படி துடைச்சிக்குவேன்! இனிமே எதா இருந்தாலும் வாயால சொல்லுங்க, கை வைக்காதீங்க! எனக்குப் பிடிக்காது!”
சரண்டர் என்பது போல கையைத் தூக்கினான் குரு.
“இனிமே தொட மாட்டேன், சாரி மிரு”
அதற்கு மேல் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
‘நான் தொடக்கூடாதா!’ என அவனும்,
‘எப்படி என்னை தொடலாம்!’ என இவளும் மனதிலேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
காரை பார்க் செய்து விட்டு அமைதியாகவே இருவரும் ஆபிசுக்குள் நுழைந்தார்கள்.
முற்பகல் பதினொரு மணி போல எல்லோருக்கும் ஆரஞ் கப் கேக்ஸ் விநியோகிக்கப்பட்டது. மிருவுக்கும் ஒன்று கிடைத்தது. லாப்டாப்புக்குள் விட்டிருந்த தலையை வெளியே எடுத்தவள் மோனிக்காவிடம்,
“இன்னிக்கு யாருக்கு பேர்த்டே?” என கேட்டாள்.
“யாருக்கும் பேர்த்டே இல்ல மிரு! பாஸ்சோட ட்ரீட் இன்னிக்கு.”
“எதுக்காம்?”
“இன்னிக்கு அவர் வாழ்க்கையோட முக்கிய கட்டத்தைத் தொட்டுட்டாராம். அதுக்குத்தான் இந்த ட்ரீட். இன்னும் பல வெற்றிய தொட்டு பாஸ் பெரிய லெவலுக்குப் போவாரு.”
“ஓஹோ!”
“மிரு கப் கேக்கும் உன் சட்டைக் கலரும் ஒரே மாதிரி இருக்கு பாரேன்! இந்த அவுட்பிட்ல ரொம்ப கியூட்டா இருக்க நீ” என சொல்லி விட்டுப் போனாள் மோனிக்கா.
பசி லேசாக தெரிய ஆரம்பித்திருந்தது. இரண்டு மணிக்கு மேல்தான் காசிம் வீட்டில் சாப்பாடு கிடைக்கும். அதுவும் மாட்டிறைச்சி தான் மெயினாக இருக்கும். இவளுக்காக அவன் கோழி அயிட்டம் எதாவது ஆர்டர் கொடுத்திருப்பான் தான். அதுவரை தாங்க வேண்டுமே என, குருவின் மேல் கோபம் இருந்தாலும் கேக் என்ன பாவம் செய்தது என நினைத்து அதற்கு ஆதரவு கொடுத்தாள் மிரு.
வேலையில் கவனமாக இருந்தாலும் மனம் கொதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு.
‘பாஸ்ன்னு சிரிச்சுப் பேசுனா, உடனே உதட்ட தொடுவானா? அவனுக்கு யார் அந்த அதிகாரத்தக் கொடுத்தது? பாபி பெத்தோல்!’ (சரியான பன்னி நீ- இங்கே மற்றவர்களை திட்டப் பயன்படுத்தப்படும் மலாய் வார்த்தை)
அவள் கவனத்தை ஆபிஸ் மெசெஞ்சர் ஒலி கலைத்தது. திறந்துப் பார்த்தாள் மிரு.
“கேக் குடுத்தேனே, சாப்பிட்டு கூலாயிட்டியா மிரு?”
இவள் ரிப்ளை போடவில்லை.
“இன்னும் கோபமா?”
அப்பொழுதும் இவள் பதிலளிக்கவில்லை.
“மிரு…நீ படிக்கறேன்னு தெரியும். ப்ளிஸ் ரிப்ளை மீ”
“நீங்க எப்படி அப்படி செய்யலாம்?”
“உனக்கு கோபம் வர அளவுக்கு என்ன செஞ்சேன் மிரு?”
“நீங்க என் லிப்ஸ்ச தொட்டீங்க பாஸ்”
“அதுக்குத்தான் சாரி சொல்லிட்டேனே மிரு! நீ எப்போ எனக்கு சாரி சொல்லுவ?”
“நான் எதுக்கு சாரி சொல்லனும்?”
“நீ இன்னிக்கு என் தொடைய சுரண்டனல அதுக்கு”
“வாட்????”
“கமான், சாரி சொல்லு மிரு!”
“நீங்க என் உதட்ட தொட்டதும் நான் உங்க தொடைய சுரண்டனதும் ஒன்னா பாஸ்? நான் தொட்டது ஐ மீன் சுரண்டனது ப்ரேண்ட்லியாத்தான்”
“அதெப்படி நீங்க தொட்டா மட்டும் நட்பு, அதே நாங்க தொட்டா போச்சு கற்பு? இது டிஸ்க்ரிமினேஷன் தெரியுமா மிரு”
‘ஐயோ!!! வாத்தியார் மோட்டுக்கு மாறிட்டானே!’
ஆண் என்றாலே இப்படித்தான் என் முத்திரைக் குத்தி அவனை கேவலப்படுத்துவது தான் டிஸ்க்ரிமினேஷன் என பாடத்தை ஆரம்பித்தான் குரு. நொந்துப் போனாள் மிரு.
“அன்னைக்குப் பார்க்கிங் போறப்போ இன்னொரு கார் மோதற மாதிரி வேகமா வந்ததுன்னு நீ என் கைய புடிச்சு இழுக்கல மிரு? அதை நான் தப்பா எடுத்துக்கிட்டேனா? அதே மாதிரிதான் இதுவும் மிரு. என் ப்ரேண்ட்னு நினைச்சுப் ப்ரெண்ட்லியா தான் துடைச்சு விட்டேன். உனக்குப் பிடிக்கலனதும் சாரி சொல்லிட்டேன். இனிமே தொட மாட்டேன்னும் சொல்லிட்டேன். கோபமா இருக்கியேன்னு சமாதானப்படுத்த கேக்கும் வாங்கிக் குடுத்துட்டேன். உனக்குன்னு தனியா எப்படி குடுக்கறதுன்னு எல்லோருக்கும் வாங்கிக் குடுத்தேன். இன்னும் என்ன செஞ்சா கோபத்தை விடுவ? சொல்லு மிரு” பெரிதாக டைப் செய்து அனுப்பி இருந்தான் குரு.
‘என்னை சமாதானம் செய்யத்தான் கேக் கொடுத்தானா? அடப்பாவி!’
“பாஸ், இப்படி ஆபிசுக்கே செலவு பண்ணற அளவுக்கு மிருவோட கோபம் வொர்த் இல்ல. எப்படியும் நாளைக்கு நானாவே வந்து உங்க கிட்ட பேசிருப்பேன்”
என்னவோ ஐந்து நிமிடங்கள் டைப் செய்தான் குரு. ஆனால் கடைசியாக,
“ப்ரேன்ட்ஸ் அகேய்ன்?” என அனுப்பினான்.
‘உன் கோபமோ, அமைதியோ என்னை ரொம்ப பாதிக்குது மிரு. என் கிட்ட முகத்த தூக்கி வச்சிக்காதே ப்ளீஸ்!’ என டைப் செய்து அழித்து,
‘நீ கோபமா இருந்தா என்னால வேலையேப் பார்க்க முடியல! மைண்ட் உன் கோப முகத்தையே சுத்தி வருது! என் கிட்ட கோபப்படாதே மிரு, ப்ளிஸ்’ என மீண்டும் டைப் செய்து அழித்து கடைசியாகத்தான் ப்ரேண்ட்ஸ் அகேய்ன் என அனுப்பி வைத்தான் அவன்.
“யெஸ் பாஸ்!” என ரிப்ளை செய்தவளுக்கு கோபம் எல்லாம் பறந்துப் போயிருந்தது.
“நீ இன்னும் சாரி சொல்லல மிரு”
“சாரி பாஸ்! இனிமே சுரண்ட மாட்டேன்!!”
குருவுக்கு சிரிப்பாய் இருந்தது. சட்டென கோபம் கொள்பவள் அதே வேகத்தில் சமாதானம் ஆவதை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது.
“ஸ்வீட் மிருது! சாக்லட்ட தொடைச்சதுக்கே இப்படி கோவிச்சுக்கிட்டியே! துடைச்ச சாக்லட்ட நான் சுவைப்பார்த்தது தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்ப?”
அன்றே சிங்கப்பூருக்குப் பறந்திருந்தான் குரு. இரண்டு வாரம் கழித்து திரும்பி வந்தவன் வேறாளாக மாறிப் போயிருந்தான்.
(தவிப்பான்)