SST–EPI 15
SST–EPI 15
அத்தியாயம் 15
மலேசியாவில் வியாபரம் என்றால் சீனர்களே முதலிடம் வகிப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு ஈடாக மலாய்க்காரர்களும் ஏன் இந்தியர்களும் கூட வணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். நம் இந்தியர்களுக்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் லிட்டில் இந்தியா என ஒரு வியாபார மையம் இருக்கும். கோலாலம்பூரில் ப்ரீக்பீல்ட்ஸ், சிலாங்கூரில் துங்கு கிளானா கிள்ளான் என பல இடங்கள் நம் வியாபாரிகள் வணிகம் செய்யும் இடமாக இருக்கின்றன. இங்கே இந்திய உணவகங்கள், இந்திய துணி மணி கடைகள், நகைக்கடைகள் என கூட்டம் எப்பொழுதும் ஜேஜேவென இருக்கும்.
அந்த சனிக்கிழமை காலை வேளையில் பீ.டபில்யூ.டீ.சீ(PWTC) வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. மிரு தன் தம்பியுடனும் மார்க்கஸ்சுடனும் அங்கே நடைப்பெறும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தாள். பெரும்பாலும் கோலலம்பூரில் நடைப்பெறும் கண்காட்சிகள், வியாபார சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் இங்கே நடைபெறும்.
காபி பீனில் சந்தித்த பிறகு மீண்டும் ஒரு முறை மார்க்கஸ்சுடன் டின்னருக்கு சென்றிருந்தாள் மிரு. மார்க்கஸ்சின் அமைதியான பேச்சு, அணுசரனையான அணுகுமுறை மிருவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருவரும் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள். அவன் காதல், கல்யாணம் என எதையும் இன்னும் பேசாததால் மிருவுக்கு அவனோடு பழகுவது இலகுவாக இருந்தது. ஒரு வேளை அவன் ப்ரோபோஸ் செய்திருந்தாள், கொஞ்சம் தயக்கம் இருக்கும் அவனுடன் ஃப்ரீயாகப் பழக. ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவனிடம் சிரித்துப் பேசி, கேலி செய்து சிரிப்பது இவளுக்குப் பிடித்திருந்தது. குருவைப் போல திருப்பிக் கொடுக்காமல் இவள் எது சொன்னாலும் சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் மார்க்கஸ்சை ‘நமக்கு சிக்கிய அடிமை’ என ஏற்றுக் கொண்டாள் மிரு.
மலிவு விலையில் நிறைய புத்தகங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பள்ளி பாட புத்தகங்கள், சிறுவர்கள் புத்தகங்கள், போட்டோகிராபி புத்தகங்கள், காதல் கதை புத்தகங்கள், இப்படி எல்லாம் மொழி வாரியாக பிரித்து அடுக்கப் பட்டிருந்தன. மிருவுக்குப் புத்தகங்களைப் பிடிக்கும். புத்தகங்களுக்குத்தான் மிருவைப் பிடிக்காது. களைத்துப் போய் வீட்டுக்கு வருபவள், தூங்கும் முன் எதாவது படிக்கலாம் என புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பாள். அதில் உள்ள பொல்லாத எழுத்துக்களோ எழுந்து நின்று நடனம் ஆடி, பாட்டுப் பாடி மிருவைத் தூங்க வைத்து விடும். முந்நூறு பக்கம் உள்ள புத்தகத்தைப் படித்து முடிக்க நம் மிருவுக்கு முந்நூறு நாட்கள் ஆகும்,
மார்க்கஸ் கணேவுடன் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என மேசேஜ் போடவும், இவளும் சரி என சொல்லி விட்டாள். இந்த மாதிரி கண்காட்சி இடங்களில் உணவு ஸ்டால்களும் நிறைய இருக்கும். அதனாலேயே ஒத்துக் கொண்டாள் மிரு. பாட புத்தகங்கள் இருக்கும் இடத்தில் மார்க்கஸ்சும் கணேவும் புத்தகங்களைப் பார்க்க, மிரு நகர்ந்து உணவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தாள். ரெசிபி இருக்கும் புத்தகங்களை எடுத்து தனக்குப் பிடித்த ஐட்டங்கள் செய்முறையைப் போட்டோ எடுத்துக் கொண்டாள். தடிமனான அந்தப் புத்தகங்களின் விலை இவளுக்குக் கட்டுப்படியாகாது. இவளுக்காக எதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் எந்த விலையும் கட்டுப்படியாகாது மிருவுக்கு. இதே அம்மா, தம்பிக்கு என்றால் முடிந்த அளவு செலவு செய்வாள் இவள்.
அருகில் நிலழாட நிமிர்ந்துப் பார்த்தாள் மிரு.
“எதாச்சும் பிடிச்சிருக்கா மிரு?” என கேட்டான் மார்க்கஸ்.
“சும்மாத்தான் பார்த்துட்டு இருக்கேன் ச்சேகு. கணேக்கு மட்டும்தான் வாங்க வந்தேன். புக்கெல்லாம் நமக்கு செட் ஆகாது” என சிரித்தாள் மிரு.
“ச்சேகு வேணாமே மிரு. ப்ளிஸ் கால் மீ மார்க்கஸ்.”
“சரி சரி, மார்க்கஸ்! பட்டுன்னு வாயில ச்சேகுன்னு வந்துருது. நீங்க ரெண்டு பேரும் புக்ஸ் தேர்ந்தெடுத்துட்டீங்களா?” என கேட்டாள் மிரு.
“எடுத்தாச்சு மிரு!”
அதற்குள் அவள் அருகில் வந்தான் கணே.
“க்கா!”
“இல்ல இல்ல முடியாது!” அவனது குரலை வைத்தே பெரிதாக எதையோ கேட்கப் போகிறான் என அறிந்து மறுத்திருந்தாள் மிரு.
“அக்கா!!!”
“என்னடா?”
“அவெஞ்சர்ஸ் புக்ஸ் செட்டா விக்கறாங்கக்கா! வாங்கிக் குடு, ப்ளிஸ்”
“கணே! வீட்டுல இருந்து வரப்போ என்ன சொல்லிக் கூட்டி வந்தேன்?”
“ஸ்கூல் புக் மட்டும் வாங்கனும்னு! பட் ப்ளிஸ்க்கா, இது நூறு வெள்ளிதான். சேல் இல்லைனா இன்னும் விலையா இருக்கும்கா. அதோட ஃப்ரீ போஸ்டர், தொப்பி எல்லாம் குடுக்குறாங்கக்கா. லிமிடெட் எடிஷன் வேற, ரொம்ப குறைச்சிப் போட்டுருக்காங்க. ப்ளிஸ்க்கா” மிருவை நெருங்கிக் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் கணே.
பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள்,
“எடுத்துக்கோ போ” என அனுமதி கொடுத்தாள்.
“தேங்க்ஸ்கா, தேங்க்ஸ்கா!” குதூகலத்துடன் அவளை அணைத்துக் கொண்டான். இவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தான் மார்க்கஸ்.
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பில் கட்ட ஒரே கவுண்டருக்குப் போனார்கள். மார்க்கஸ் அவன் புத்தகத்தை வைக்க, மிரு சற்று தள்ளி கணேவின் புத்தகங்களை வைத்தாள். ஆனால் மார்க்கஸ் இவர்களுடையதுக்கும் சேர்த்து பணம் செலுத்தி இருந்தான். கணேவுடன் பேசிக் கொண்டிருந்த மிரு, எல்லா புத்தகங்களையும் பேக் செய்யவும் தான் கவனித்தாள்.
“மார்க்கஸ், நீ ஏன் கட்டுன?” என முறைத்தாள் இவள்.
அவனோ புன்னகையுடன் புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.
“உன் வாத்தி என் கிட்ட இப்போ வாங்கிக் கட்டப் போறான் பாரேன்” என தம்பியிடம் எகிறினாள் மிரு.
கூட்டத்தில் அலை மோதி வெளியே வந்தவர்கள், கூட்டம் இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கி நின்றார்கள்.
“உன்ன யாரு வேடிக்கைப் பார்த்துட்டு நிக்க சொன்னா? பாரு சார் கட்டிட்டாரு! என் இமேஜ் உன்னால டேமேஜ் ஆச்சு” என கிண்டல் செய்து சிரித்தான் கணே.
“உனக்கு இமேஜ்லாம் இருக்கா என்னா? செவென் கழுதை வயசாச்சு இன்னும் வெளிய வந்தா குழந்தைப் புள்ள மாதிரி எதாச்சும் கேட்டு அழறது!”
“நான் எங்க அழுதேன்? நீ வாங்கி குடுத்தது ஒன்னும் எனக்கு தேவையில்ல போ” என முறுக்கிக் கொண்டவன், அந்த அவெஞ்சர் புத்தகம் இருந்த பையை கீழே வைத்து விட்டு விடு விடுவென முன்னே நடந்து விட்டான்.
“டேய் கணே, போ போ! எனக்குத் தெரியாது, நான் பையை எடுக்க மாட்டேன். யாராச்சும் வந்து தூக்கிட்டுப் போட்டும்” என மிருவும் நடக்க ஆரம்பித்தாள். எடுக்க வந்த மார்க்கஸ்சை வேண்டாம் என சைகை காட்டினாள் மிரு. விடுவிடுவென வந்தான் கணே விட்டுப் போன பையை எடுக்க. அதற்குள் இவள் எடுத்துக் கொண்டு ஓட, அவன் துரத்த என ஒரே ரகளை.
சண்டைப் போட்டு சமாதானமான பின், பர்ஸில் இருந்துப் பணத்தை எடுத்து மார்க்கஸ்சிடம் நீட்டினாள் மிரு.
“மார்க்கஸ், ப்ளீஸ் எடுத்துக்கோ! இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சாப்பாடு வாங்கி குடுக்கறது எல்லாம் ஓகே, ஆனா இந்த மாதிரி செலவெல்லாம் நாட் ஓகே!”
“காசு வேணா மிரு. வேணும்னா இன்னிக்கு நீ சாப்பாடு வாங்கிக் கொடு” என புன்னகைத்தான் மார்க்கஸ்.
‘நார்மல் ஃபூட் ஸ்டால்ல சாப்பிடலாம்னு நினைச்சேன். புக்குக்கு கட்டன காசுக்கு ஈடா சாப்பாடு வாங்கிக் குடுக்கனும்னா நல்ல ரெஸ்டாரண்டுக்குல்ல போகனும்! போவோம்!’ என முடிவெடுத்தவள் வெஸ்டர்ன் ஃபூட் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனாள்.
சிரித்துப் பேசிக் கொண்டே, மூவரும் வயிறு முட்ட சாப்பிட்டார்கள். அந்த நேரத்தில் தான் மிருவுக்கு மேசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“மிரு, மண்டே என்னைப் பிக் அப் பண்ணிக்க!”
“ஹ்ம்ம்…..ஓகே பாஸ்”
“எதுக்கு இந்த ஹ்ம்ம்?”
“இத்தனை நாளா நான் பிக் பண்ண வர வேணாம்னு சொல்லிட்டு சொந்தமா ஆபிசுக்கு வந்தீங்களே, இப்போ என்னாச்சுன்னு நினைச்சேன் பாஸ்”
“அந்த ஹ்ம்ம்கு இவ்வளவு பெரிய விளக்கமா? சரி, சீ யூ மண்டே” என பதில் போட்டவன் இவள் கேட்ட கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லவில்லை.
சிங்கப்பூருக்குப் போய் வந்த குரு, மிருவுக்கு மேசேஜ் போடுவதை அறவே நிறுத்தி இருந்தான். இவளுக்கு சுருக்கமாக ஒரு இமெயில் அனுப்பி இருந்தான். இனிமேல் அவன் சொல்லும் வரை ட்ரைவர் வேலை பார்க்க வேண்டாம் என. ஏன் என இவள் பதில் போட்டதற்கு, இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் என திருப்பி அனுப்பி இருந்தான். அதோடு பார்க்கிங், அலவன்ஸ் எல்லாம் எப்பொழுதும் போல கிடைக்கும், ஆகவே காரிலேயே அவள் வரலாம், ரயில் எடுக்க வேண்டாம் எனவும் அனுப்பி இருந்தான். உனக்கு தேவையில்லாத விஷயம் என அவன் சொல்லி விட இவளும் போடா டேய் என இருந்து விட்டாள்.
காலையில் அவனின் அலாரம் சர்விஸ் இல்லாததால் இப்பொழுதெல்லாம் சொந்தமாகவே அலாரம் வைத்து எழுந்து தம்பிக்கு வேண்டியதை செய்துக் கொடுக்கிறாள் மிரு. அம்மாவுக்கும் சமையல் செய்து வைத்து விட்டு வேலைக்கு வருகிறாள்.
ஆபிசில் இவளைக் கண்டால் கூட மில்லிமீட்டர் அளவு உதட்டைப் பிரித்து புன்னகை என ஒன்றைக் காட்டிவிட்டு போய் விடுவான் குரு.
‘பார்த்து பார்த்து வாய் கோணிக்கப் போகுது!’ என அவன் புன்னகையைப் பார்த்து மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுப்பாள் மிரு.
‘சரியான லூஸ் கிறுக்கனா இருப்பான் போல. மூட் இருந்தா அவ்வளவு அழகா சிரிச்சுப் பேசறான். அதே மூட் அவுட்னா கொரில்லா கொரங்கு கக்கூஸ் போற மாதிரி மூஞ்ச உம்முன்னு வச்சிருக்கான். எவ இவன கட்டிக்கிட்டு இவன் மூட் ஸ்வீங்ல சிக்கி சின்னாபின்னமாகப் போறாளோ! கடவுளே அந்தப் பாவப்பட்ட ஜீவன காப்பாத்து’ என நினைத்தப்படியே போனை பேக்கில் வைத்தாள் அவள்.
“அக்கா, நான் டாய்லேட் போய்ட்டு வரேன்” என எழுந்துப் போனான் கணே.
அவன் போனதும் ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து மிருவிடம் நீட்டினான் மார்க்கஸ்.
“என்னதிது?” என கேட்டாள் மிரு.
“என்னோட ஸ்மால் கிப்ட் உனக்கு மிரு!” என புன்னகைத்தான் அவன்.
இவள் பிரிக்கப் போக,
“தனியா இருக்கறப்போ பிரிச்சுப் பாரு” என சொன்னான் மார்க்கஸ்.
“புக் மாதிரில இருக்கு! சரி வீட்டுல போய் பிரிச்சுப் பார்க்கறேன்” என சிரித்தாள் மிரு. அதன் பிறகு மூவரும் பிரிக்பீல்ட்ஸ் போனார்கள். ரோட்டோரமாக விற்ற வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே, அங்கே அருகிலேயே இருந்த நூ செண்ட்ரல் எனும் மாலுக்குப் போய் சுற்றினார்கள்.
திங்கட் கிழமை காலை, நீண்ட நாட்கள் கழித்து அலாரம் சர்விஸ் வேலையை ஆரம்பித்திருந்தது. மேசேஜ் வரவும் எடுத்துப் பார்த்தாள் மிரு.
“ஸ்வீட் மார்னிங் மிரு”
‘ஸ்வீட்டா? மூட் நல்லாகிருச்சுப் போல பாஸ்க்கு. இது எத்தனை நாளைக்கோ?’
“மார்னிங் பாஸ்”
“நான் எப்படி விஸ் பண்ணேன் மிரு?”
“ஸ்வீட் மார்னிங்னு”
“நீ எப்படி விஸ் பண்ண?”
“வெறும் மார்னிங்னு!”
“உனக்கு மட்டும் மார்னிங் ஸ்வீட்டா இருக்கனும்! ஆனா எனக்கு மட்டும் ஒன்னும் இல்லாம வெறும் மார்னிங்கா இருக்கனுமா?”
‘ஆரம்பிச்சிட்டாண்டா, ஆரம்பிச்சிட்டான்!’
“ஸ்வீட் மார்னிங் பாஸ்”
வாயைப் பிளந்து சிரிக்கும் இமோஜி இரண்டை பதிலாக அனுப்பி வைத்தான் குரு.
‘ஐ சிரிக்கிறியே! ஆண்டவன் புண்ணியத்துல நீயாவது எப்போதும் இந்தப் புன்னகையோடயே இருடா என் கண்ணா!’ என மனதில் பழைய பட வசனத்தை சொல்லி பழிப்புக் காட்டியவள், மறக்காமல் மூன்று சிரிக்கும் இமோஜியை பதிலாக அனுப்பி வைத்தாள். இல்லாவிட்டால் அவனிடம் அதற்கு வேறு பல்பு வாங்க வேண்டுமே!
அலாரம் வைத்து எழுவதை விட இன்று மனம் உற்சாகமாக இருக்க, அந்த சினிமா வசனத்துக்குப் பிறகு வரும் சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ எனும் பாடலைப் பாடிக் கொண்டே வேலைகளைப் பார்த்தாள் மிரு.
சரியாக எட்டு மணிக்கு குருவை ஏற்றிக் கொண்டாள் மிரு.
“ஹாய் மிரு”
“ஹாய் பாஸ்”
“எப்படி இருக்க மிரு?”
‘இவ்ளோ நாள் நல்லாத்தான் இருந்தேன். இப்போ நீ மறுபடி பேச ஆரம்பிச்சிட்டியே, இனி நாளொரு நக்கலும் பொழுதொரு பல்புமா வாழ்க்கை செம்மையா போகும்’
“நல்லா இருக்கேன் பாஸ். நீங்க?”
“இத்தனை நாளா நான் நல்லா இல்ல மிரு. இப்போத்தான் என் உலகமே ஜிலு ஜிலு குளு குளு ஆன ஃபீல்!” என சொல்லி சிரித்தான் அவன்.
“வேற ஒன்னும் இல்ல பாஸ்! காலையிலே மழை வேற, ஏர்கொண்ட் வேற கூட்டி வச்சிருக்கேன், அதான் அந்த ஃபீல். இப்போ குறைச்சிருறேன்!”
அவள் பதிலில் மெல்ல புன்னகைத்துக் கொண்டான் குரு.
“அப்புறம் மிரு, லைப்லாம் எப்படி போகுது?”
“ஜோரா போகுது பாஸ்! அதே மிரு அதே துருதுரு!” என சிரித்தாள்.
அவள் சிரிப்பதை ஆசையாகப் பார்த்திருந்தான் குரு. இருவரும் இத்தனை நாள் இடைவெளி இல்லாததைப் போல எப்பொழுதும் போல ஒருவர் மற்றவரை கிண்டலடித்தப்படி பேசிக் கொண்டே வந்தனர்.
சீட் பின்னால் இருந்த புத்தகப் பை இவன் கவனத்தைக் கவர, எட்டி அதை எடுத்தான்.
“பாஸ் அது எனக்கு மார்க்கஸ் குடுத்த கிப்ட்”
“ஓஹோ!” என சொல்லியபடியே பிரிக்க ஆரம்பித்தான் அவன்.
“ஹலோ பாஸ்! என் கிப்ட் அது, ஒழுங்கா வைங்க” என ஒரு கையில் ஸ்டீயரிங்கைப் பிடித்தப்படியே மறுகையால் பையை இழுக்கப் போனாள் மிரு.
“ரோட்டைப் பார்த்து ஒட்டு மிரு! பிரிச்சுத்தானே பார்க்கறேன்! நானேவா எடுத்துக்கப் போறேன்! புக் மாதிரி தானே இருக்கு, என்னமோ சீக்ரேட் கிப்ட் மாதிரி ஏன் பிடுங்கற?” என சொன்னவன் அதை பிரித்திருந்தான். அது ஒரு மலாய் நாவல்.
“ச்சின்தா பண்டாங் பெர்தாமா!(முதல் பார்வையிலேயே காதல்). பரவாயில்லையே, வாத்தி காதல் பாடம் சொல்லிக் கொடுக்க ரெடியாகிட்டாரு போல! படிக்க நீயும் ரெடியாகிட்டியா மிரு?”
‘தனியாகப் பிரித்துப் பார்க்க சொன்னானே! சூசகமாக காதலை சொல்லத்தானோ!’ மனம் பிசைந்தது மிருவுக்கு. தன் மீது இருக்கும் ஓர் ஈர்ப்பில் தான் டேட்டிங் அழைத்திருக்கிறான் மார்க்கஸ் என புரிந்தே இருந்தது மிருவுக்கு. ஆனாலும் நேரடியாகக் கேட்கும் வரை அதை பற்றி யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என தள்ளிப் போட்டிருந்த விஷயம் கண் முன்னே புத்தகமாக காணவும் இவளுக்கு மனதை என்னவோ செய்ததது.
“என்ன பதில காணோம் மிரு? நீயும் ரெடியான்னு கேட்டேன்?”
ஏற்கனவே மன குழப்பத்தில் இருந்தவள், இவன் அழுத்திக் கேட்கவும் கோபமானாள்.
“ரெடியோ ரெடி இல்லையோ, அதப் பத்தி உங்க கிட்ட நான் எதுக்கு சொல்லனும்? இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் பாஸ்!” என அவன் கொடுத்ததை அவனுக்கேத் திருப்பிக் கொடுத்தாள் மிரு.
“ஆப் கோர்ஸ், என் பிஸ்னஸ் இல்லத்தான். சாரி மிரு!” சட்டென இறங்கி மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு கேட்பவனிடம் இன்னும் என்ன கோபப்படுவது என இவளும்,
“பரவாயில்ல பாஸ்! நானும் ஹார்ஷா பேசிட்டேன். சாரி!” என மன்னிப்பைக் கேட்டாள்.
“விடு மிரு” என்றவன் அழகாய் புன்னகைத்தான்.
கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவாறே அமைதியாக வந்தான் அவன். இவளும் அமைதியைக் கலைக்கவில்லை. ஆபிஸ் நுழையும் முன்னே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவன்,
“கல்யாணத்துல கலட்டி விட்டுப் போறான் ஒருத்தன். மனசு ஒடிஞ்சுப் காஸ்மீர் போறா! அங்க ஒரு காதல், அதுல ஒரு வில்லி. அப்புறம் மலேசியா வரா, காஸ்மீர் காதலனும் பின்னாலேயே வரான். அப்புறம் என்னாச்சுன்னு கடைசி பக்கம் பார்த்து படிச்சுக்க மிரு” என சொல்லி சிரித்தான்.
“கதைய சொல்லிட்டீங்களே பாஸ். இனி எனக்கு எப்படி படிக்க மூட் வரும்?”
‘அதுக்குத்தானே சொன்னேன்!’ மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.
“எப்படி அதுக்குள்ள படிச்சீங்க?”
“ஆரம்பத்துல ரெண்டு எபி, நடுவுல ரெண்டு எபி, கடைசி ரெண்டு எபி. ஃபினிஸ்ட்!” சிரித்தான் அவன்.
இவளும் வாய் விட்டு சிரித்தாள். சிரித்த முகமாகவே இவள் வேலையைத் தொடங்க, அவனோ யோசனையாகவே அவன் இடத்தில் அமர்ந்திருந்தான்.
அன்று மாலை எச்.ஆரில் இருந்து அனைவருக்கும் ஒரு இமேயில் வந்திருந்தது. அடுத்த மாதம் டீம் போண்டிங் செமினார் நடக்கப் போவதாகவும், அது மலாக்காவில்(மலேசியாவின் ஒரு மாநிலம்) நடைபெறும் எனவும் இருந்தது. சனிக்கிழமை காலையில் கிளம்பி மறுநாள் மாலை திரும்பி வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம், கண்டிப்பாக அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என சொல்லி இமெயில் முடிக்கப்பட்டிருந்தது.
‘அம்மாவையும் தம்பியையும் விட்டுட்டு எப்படி ஒரு நைட் வெளிய தங்கறது? கண்டிப்பா எல்லாரும் வரனும்னு சொல்லிருக்காங்களே!’ ஒரே யோசனையாக இருந்தது மிருவுக்கு. படிக்கும் போது வெளியே தங்கித்தான் படித்தாள். ஆனால் ரதியின் தற்போதைய உடல் நிலைக்குப் பிறகு இவள் இரவு வெளியே தங்கியதில்லை. வீட்டில் இருவரிடமும் பேசிவிட்டு நாளை இமெயிலை ரிப்ளை செய்யலாம் என வேலையைப் பார்த்தாள் மிரு.
மலாக்கா பயணம் தன் வாழ்க்கையைத் தடம் மாற்றிப் போட போகிறது என அப்பொழுது தெரிந்திருக்கவில்லை மிருவுக்கு.
(தவிப்பான்)