SST–EPI 20

SST–EPI 20

அத்தியாயம் 20

துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசின் ஐந்தாவது தலைவராவார். மலேசியாவின் உயரிய விருதான ‘துன்’ விருதைப் பெற்ற முதல் இந்தியரரும் இவரே. எஸ்டேட் எஸ்டேட்டாக சென்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் பத்து வெள்ளி சேகரித்து தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் நிறுவி பல இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர். இவரை மலேசிய காமராஜர் எனவும் அழைக்கிறார்கள்.

 

பஸ்சில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே மிருவுக்கு கணேவிடம் இருந்து மேசேஜ் வந்திருந்தது.

“அக்கா, அம்மா இஸ் அட்மிட்டேட்! கோலாலம்பூர் வந்ததும் கால் மீ” என அனுப்பி இருந்தான்.

இவள் அழைக்க முயன்ற போது, அவன் போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தான்.

‘நல்லாத்தானே இருந்தாங்க! சர்க்கரை அளவு கூட நான் வீட்டுல செக் பண்ண போது நார்மல் ரீடிங் தானே காட்டுச்சு!’ மனதுக்குள் தவியாய் தவித்தாள் மிரு.

அழுகையை முயன்றுக் கட்டுப்படுத்தி நார்மலாக காட்டிக் கொண்டாள். குரு என்ன என கேட்டப் போது கூட இதை சொல்ல விரும்பவில்லை அவள். இதற்கு முன் எப்படியோ, அவன் உருகி காதல் சொன்னதில் இருந்து அவனிடம் கூட தனது கவலையைப் பகிர விரும்பவில்லை மிரு. அதனாலேயே தலை வலி என காரணம் சொல்லி அமைதியாக இருந்தாள். அவனை இறக்கி விட்டதும், திரும்பிக் கூட பார்க்காமல் விரைந்தாள் மிரு.

காரை ஓட்டிக் கொண்டே கணேவுக்கு அழைத்து எந்த மருத்துவமனை, என்ன வார்ட் எல்லாம் கேட்டுக் கொண்டாள் அவள். ரதியின் மருத்துவ ரெக்கார்டுகள் ஹாஸ்பிட்டல் கோலாலம்பூரில் தான் இருந்தன. அங்கேத்தான் அவர் எப்பொழுதும் செக் அப்காக வருவார். இப்பொழுது அட்மிட் ஆகி இருந்ததும் அந்த அரசாங்க மருத்துவமனையில் தான்.

மிருவின் கையில் கார் பறந்தது. அம்மாவின் நிலையைப் பற்றி கணே ஒன்றும் சொல்லவில்லை. நேரே வா பேசலாம் என போனை வைத்துவிட்டான். மிருவுக்கு கண் இரண்டும் உடைப்பெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தன. மருத்துவமனையை அடைந்தவள், பார்க் செய்து விட்டு ஓட்டமும் நடையுமாக கணே சொன்ன இடத்தை நோக்கி ஓடினாள். வார்டை கண்டுப்பிடித்துப் போனவள், அம்மாவையும் தம்பியையும் கண்டுக் கொண்டாள். ரதி கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க, கணே அவர் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

“கணே, என்னடா ஆச்சு அம்மாவுக்கு?” கண்களில் கண்ணீர் வழிய மெல்லிய குரலில் கேட்டாள். மகளின் மெல்லிய குரல் கூட தூக்கத்தில் இருந்த ரதிக்குக் கேட்டு விட்டது. கண் விழித்தவர்,

“மிரும்மா பத்திரமா வந்துட்டியாடா? ட்ரீப்லாம் எப்படி போச்சு?” லேசாக மூச்சு வாங்க கேட்டார்.

கையில் ட்ரீப்ஸ் ஏற முகம் வெளுத்துப் போய் பார்க்கவே பாவமாக இருந்தார் ரதி.

கட்டிலில் ஏறி அவர் அருகே அமர்ந்துக் கொண்ட மிரு,

“நான் பத்திரமா வந்துட்டேன்மா! உங்களுக்கு என்னாச்சு? நான் கிளம்பறப்போ நல்லாத்தானே இருந்தீங்க?” என சின்னக் குழந்தைப் போல தேம்பினாள்.

அவள் கண்ணீரைத் துடைத்த ரதி,

“ஒன்னும் இல்லடி! லேசா மூச்சிரைப்பு. அதுக்குள்ள உன் தம்பி இங்க கொண்டு வந்து தள்ளிட்டான்” என மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தார்.

“என்ன லேசா மூச்சிரைப்பு? பாருக்கா பேசறத! காலையில எழுந்ததும், மூச்சு விட முடியாம கண்ணு கிண்ணெல்லாம் மேல சொருகிகிச்சு. நான் ஆடிப் போயிட்டேன். ஆம்புலன்சுக்கு போனைப் போட்டுட்டு, விக்ஸ் எடுத்து மெல்ல நெஞ்சுலயும் முதுகுலயும் தேச்சு விட்டு சுடு தண்ணி குடுத்து என்னனமோ செஞ்சேன்கா. அப்பயும் மயக்கம் போட்டுட்டாங்க. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? என்னை பீதியாக்கிட்டு லேசா மூச்சிரைப்பாம்!” இவ்வளவு நேரம் பெரிய மனிதன் போல அம்மாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருந்தவன், அக்கா வரவும் மீண்டும் சின்னவனாகி இருந்தான். அக்காவின் கையைப் பற்றிக் கொண்டு அவனும் கண்ணீர் விட்டான்.

அழுது கொண்டிருக்கும் தன் இரு செல்வங்களையும் பார்த்த ரதி,

“நான் நல்லாத்தான் இருக்கேன்! சீக்கிரம் பேரு வெட்டி வீட்டுக்கு அனுப்பிருவாங்க. அழாம இருங்க ரெண்டு பேரும்” என சமாதானப்படுத்தியவரும் கண் கலங்கினார்.

“ஆமா, ரதிதேவின்ற பேர வெட்டிட்டு, ராகுல் ப்ரீட் சிங்னு நம்ம அம்மாவுக்கு பேரு வைக்கப் போறாங்க” என நிலைமையை சகஜமாக்க கிண்டல் அடித்தான் கணே.

“எங்கம்மா அழகுக்கு எந்த பேரு வச்சாலும் அழகுதான், போடா!”

“அவங்க எனக்கும்தான் அம்மா!” என அவன் சிலிர்த்துக் கொள்ள, அவன் தோளில் கைப்போட்டு வெளியே காரிடோருக்கு அழைத்துப் போனாள் மிரு.

“தூங்குங்கம்மா! நாங்க வெளிய இருக்கோம்” என சொல்லிவிட்டே வந்தாள் மிரு.

“டாக்டர் என்னடா சொன்னாரு கணே?”

“இங்க ஆம்புலன்ஸ்ல இமெர்ஜென்சிக்கு வந்ததும் டாக்டர் மூச்சு சீராக ஆக்சிஜன் போட்டு விட்டாங்கக்கா. எக்ஸ்ரேயும் எடுத்தாங்க. ரத்தம் வேற குத்தி எடுத்துருக்காங்க! ஞாயித்துக் கிழமை வேறயா, மெதுவாத்தான் ரிசால்ட் வரும். வெயிட் பண்ணுவோம். இப்போ கொஞ்சம் பெட்டரா மூச்சு விடறாங்கக்கா”

அரசாங்க மருத்துவமனையானாலும் இங்கே ஓரளவு கவனிப்பு நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும் லேசான மெத்தன போக்கு இருக்கத்தான் செய்யும். அக்காவும் தம்பியும் டாக்டரின் வரவுக்காக காத்திருந்தனர். நர்ஸ்கள் அவ்வப்போது வந்து சர்க்கரை லெவலயும், பீபீயும் செக் செய்து விட்டுப் போனார்கள். இவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறது என ஒவ்வொரு தடவையும் கேட்க,

“நன்த்தி டொக்டோர் அக்கான் சக்காப்”(பிறகு டாக்டர் சொல்லுவார்) எனும் ஒரே பதில்தான் கிடைத்தது. லேசாக மூச்சு வாங்கும் போது, பக்கத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை மிருவே மாட்டி விட்டாள்.

டியூட்டி டாக்டர் மாலை மங்கிய வேளையில் தான் வந்தார். ரதிக்கு நிமோனியா கண்டிருப்பதாகவும், அதனால் தான் மூச்சு விட பிரச்சனையாகி இருக்கிறது எனவும் சொன்னார். அதோடு நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாகவும் அதற்கு சிறிய சர்ஜரி செய்ய வேண்டும் என்றார். டையபெட்டிசும் இருப்பதால் கொஞ்சம் காம்ப்ளிகேஷனாக இருப்பதாகவும், மருத்துவமனையிலே இருந்து இன்சுலின் ஊசி போட்டு சக்கரை லெவல் ரீடிங்கை நார்மலாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். சரியான உணவு, மருந்துகள் எல்லாம் கொடுக்க ஓரளவு தேறி வருவார், பயப்படத் தேவையில்லை எனவும் மூன்று நாட்கள் கழித்து சர்ஜரி வைத்துக் கொள்ளலாம். ஒன்றும் அவசரமில்லை என்றுவிட்டார்.

“பாரேண்டா, ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொல்லிட்டுப் போராரு டாக்டர்” என பல்லைக் கடித்தாள் மிரு.

“சுத்திப் பாருக்கா, எல்லா பெட்டும் ஃபுல்லா இருக்கு! சீரியஸ் கேச மொதல்ல பார்ப்பாங்களா இருக்கும். அப்படி பாத்தா அம்மா நிலைமை சீரியஸ் இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறாருக்கா. பீ ஹெப்பி”

இப்பொழுதுதான் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது மிருவின் உதட்டில்.

“சில சமயம் நான் அக்காவா இல்ல நீ அண்ணனா தெரியலடா கணே”

“போதும் போதும்! ஓவரா ஐஸ் வைக்காதே! போய் எனக்கு சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வாக்கா! செம்ம பசி.”

“நீ போய் வாங்கிட்டு வாயேண்டா! அக்காவுக்கு மலாக்கா போயிட்டு வந்ததுல செம்ம டயர்ட்டாயிருக்குடா கணே. தொட்டுப் பாரேன் காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்கு”

“அதெல்லாம் நான் நம்ப மாட்டேன்! நீ நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வந்த! நான் ஆம்புலன்ஸ், ஹாஸ்பிட்டல்னு அலைஞ்சேன். இதுக்கு மேல என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. ஒழுங்கா போய் வாங்கிட்டு வா” என தான் இன்னும் சின்னவன் தான் என மிருவுக்குக் காட்டினான் கணே. புன்னகையோடு காபிடேரியாவை நாடிப் போனாள் மிரு.

கணேவுக்கு நாசி கோரேங் (ப்ரைட் ரைஸ்) ஆர்டர் செய்தவள், தனக்கு ஒரு தே தாரேவும் பன்னும் வாங்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள். டீயைக் குடித்துக் கொண்டே போனை பேக்கில் இருந்து வெளியே எடுத்தாள் மிரு. சைலண்டில் போட்டிருந்த போனில், ஐந்து மிஸ்ட் கால்களும் நிறைய வாட்ஸாப் மேசேஜ்களும் வந்திருந்தன. குருதான் போன் செய்திருந்தான். மேசேஜும் அவனிடம் இருந்து தான் குவிந்திருந்தன. தலைவலி என சொல்லி விருட்டென கிளம்பி சென்றிருந்தவள் எப்படி இருக்கிறாளோ எனும் கவலையில் இருந்தான் குரு.

“மிரு, ஆர் யூ ஓக்கே?” என கேட்டிருந்தவன் பதில் இல்லாமல் போக பத்து நிமிடத்துக்குப் பிறகு,

“ஆர் யூ ஆல்ரைட் மிரு?” என் அனுப்பி இருந்தான். பத்து நிமிட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் அதே அர்த்தம் தரும் கேள்வி வேறு வேறு வார்த்தைகளில் கேட்கப்பட்டிருந்தது. அவள் ஆன்லைனிலே இல்லாமல் இருக்கவும் தான் போன் செய்திருக்கிறான். கடைசி மேசேஜாக,

“தூங்கறியா மிரு? எழுந்ததும் ப்ளிஸ் ரிப்ளை மீ” என இருந்தது.

‘நான் தூங்கனா மட்டும்தான் ரிப்ளை பண்ணாம இருப்பேன்னு அவ்வளவு நம்பிக்கை பாஸ்க்கு!’

அவள் ஆன்லைன் வந்ததைக் கவனித்து இவள் ரிப்ளை போடுவதற்குள் அவன் மேசேஜ் செய்திருந்தான்.

“மிரு, யூ தேர்?”

“இருக்கேன் பாஸ்! இப்போத்தான் தூங்கி எழுந்தேன்” என பொய்யாய் பதில் அனுப்பினாள்.

“தலைவலி எப்படி இருக்கு மிரு?”

“நீங்க எப்படி இருக்கீங்க பாஸ்?” என கேட்டாள் மிரு.

“நான் உன்னைக் கேட்டேன் மிரு!”

“என் தலைவலியே நீங்கதானே பாஸ்! அதான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்”

“வெரி ஃபன்னி!”

இவள் நாக்கை நீட்டி சிரிக்கும் இமோஜியை அனுப்பி வைத்தாள்.

அதற்குள் ப்ரைட் ரைஸ் ரெடியாகி இருக்க, கவுண்டரில் இருந்து பெல் அடித்தார்கள்.

“சரி பாஸ். வேலை இருக்கு, பாய்!” என அனுப்பி விட்டுப் போனை பேக்கில் போட்டாள் மிரு. அவசரமாக மீதி டீயைக் குடித்தவள், உணவுடன் நடையைக் கட்டினாள்.

மிரு வேலையில் இன்னும் நிரந்தரம் ஆகாததால் அடிக்கடி லீவ் போட முடியாது. நண்பன் வரையறையில் குரு நின்றிருந்தால் அவனிடம் விஷயத்தை சொல்லி லீவ் கேட்டிருப்பாள் மிரு. கணவனாக வரத் துடிப்பவனிடம் எந்த வித சலுகையைப் பெறவும் அவள் விரும்பவில்லை.

“கணே, அக்கா அடிக்கடி லீவ் போட முடியாதுடா! சர்ஜரி அன்னிக்கு லீவ் அப்ளை பண்ணறேன். மத்த நாளெல்லாம் என்னடா செய்யறது?” என கவலையுடன் கேட்டாள்.

“இன்னிக்கு நைட் நீ வீட்டுக்குப் போக்கா! அப்படியே காலையிலே வேலைக்குப் போயிரு. சர்ஜரி மூனு நாள் கழிச்சுத்தானே! ரெண்டு நாளைக்கு நான் ஸ்கூல் லீவ் போடறேன். சர்ஜரி அன்னிக்கு நீ லீவ் போடு, நான் ஸ்கூல் போறேன். அப்புறம் மறுபடியும் நான் லீவ் போடறேன். சனி ஞாயிறு வேற வரும். அப்படியே மாத்தி மாத்தி சமாளிக்கலாம். பயப்படாதே!”

இருட்ட ஆரம்பிக்கவும் வீட்டுக்குப் புறப்பட்டாள் மிரு. ரதியை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றி சென்றது பலருக்குத் தெரிந்திருந்தது அவர்கள் குடியிருப்பில். கலந்துப் பழகாவிட்டாலும், யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து தான் வைத்திருந்தனர். அந்த விஷயம் நம் படிக்கட்டு பண்ணாடைகளுக்கும் தெரிந்திருந்தது தான் மிருவுக்கு வினையாகிப் போனது. தனியாக வீட்டுக்குத் திரும்பி வந்தவளையும் கவனித்து தங்கள் தகாத திட்டத்தைத் தீட்டி எல்லோரும் உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் அவள் வீட்டு பூட்டை உடைக்க ஆரம்பித்திருந்தனர் அவர்கள்.

வீட்டில் தனியாக இருந்த மிருவுக்கு உறக்கமே வரவில்லை. அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. இரவு மீண்டும் மூச்சுத் திணறல் வந்ததாகவும், மாஸ்க் போட்டவுடன் ஓரளவு சீராக மூச்சு விடுகிறார் எனவும் போனில் சொல்லி இருந்தான் கணே. சர்க்கரை நோய் வந்ததில் இருந்து அடிக்கடி எதாவது நோய் ரதியை விசிட் செய்து விட்டுப் போகும். மருந்து மாத்திரையோடு அவை சரியாகியும் போகும். கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இதுதான் முதல் முறை மருத்துவமனையில் தங்குவது. அம்மாவை நினைத்துக் கண்ணீர் உகுத்தப்படியே தூங்காமல் அமர்ந்திருந்தவளுக்கு வெளியே அவர்கள் பேசிய சத்தம் துல்லியமாகக் கேட்டது.

பயத்தில் மனம் படபடக்க, உடல் தடதடக்க என்ன செய்வது என யோசித்தாள் மிரு. வேகமாக எழுந்து லைட்டைப் போட்டாள் முதலில். சத்தமான குரலில்

“999. பென்ச்சூரி ச்சூபா மசூக் ரூமா. தோலோங் சாயா!”(வீட்டில் திருடர்கள் நுழைய பார்க்கிறார்கள்! காப்பாற்றுங்கள்) என போலிசுக்குப் பேசுவது போல நடித்தாள்.

வீடு இருட்டாக இருக்கிறது! தூங்கிக் கொண்டிருப்பாள், ஒரே அமுக்காக அமுக்கி விடலாம் என வெளியே நின்றிருந்தவர்கள் ஜெர்க்கானார்கள்.

“மச்சி, வெடக்கோழி சர்க்கார (போலிசை இப்படியும் இங்கே அழைப்பார்கள்) கூவி அழைச்சிருச்சுடா! புடிச்சானுங்க பின்னால அடிச்சே கிழிச்சிருவானுங்கடா! ஓடுங்கடா!”

ஓடும் முன்னே தலைவன்,

“(_________________) {கோடிட்ட இடத்தில், தங்களுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தையை நிரப்பிக் கொள்ளவும். எனக்கு அது மாதிரி எதுவும் தெரியாது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்} எங்களையா மாட்டி விடற! உன்னை எப்படியும் பிரிச்சு மேயாம ஓய மாட்டோம்டி” என கத்தி விட்டேப் போனான்.

வேகமாக மூங்கில் நாற்காலியை நகர்த்தி கதவின் முன்னே போட்டவள், டைனிங் மேசையையும் நகர்த்திப் போட்டாள். அந்த மேசை மேலேயே ஏறி அமர்ந்தவளின் உடல் நடுங்கியது. குரு தொட்டு, முத்தமிட்டு அறிமுகப்படுத்திய நுண்ணிய உணர்வுகள், அம்மாவும் தம்பியும் இல்லாத தனிமை துயர், பொறுக்கிகள் காட்டிய மரண பயம், கால் மசாஜ் செய்ததில் லேசாக காய்ச்சல் வருவது போல இருந்த உடம்பு என எல்லாம் சேர்ந்து தைரியமான மிருவையே ஆட்டம் காண வைத்திருந்தன. உடல் குளிர் காய்ச்சல் வந்தது போல நடுங்கியபடியே இருந்தது அவளுக்கு. தன்னைத் தானே கட்டிக் கொண்டு நடுங்கியபடியே அமர்ந்திருந்தாள் மிரு.

இங்கேயே இருப்பது தனக்கு ஆபத்தாக முடியும் என்பது நன்றாகவே புரிந்தது மிருவுக்கு. போலிசுக்கு போன் செய்து அவர்கள் வருவது என்றால், நேரம் எடுக்கும். அதோடு அக்கம் பக்கமெல்லாம் பெயர் நாறி போகும். ஏற்கனவே நீக்ரோவுக்குப் பிறந்தவள் என இவளை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். இதில் ஆண்கள் வீட்டில் நுழைய முயன்றார்கள் என தெரிந்தால் அவ்வளவுதான். உதவ கூடிய ஒரே நட்பான காசிமும் தேனிலவுக்கு பாலி சென்றிருந்தான். வேறு வழி இல்லாமல் போனை எடுத்தவள், நடுக்கத்துடன் டயல் செய்தாள். இரண்டு ரிங்கில் மறுபக்கம் போன் எடுக்கப்பட்டது.

“மிருது என்னாச்சு? இந்த நேரத்துல போன் அடிச்சிருக்க! இஸ் எவிரிதீங் ஓகே?” என படபடப்பாக கேட்டான் குரு.

“பாஸ்!” குரல் லேசாக கம்மியது மிருவுக்கு.

“மிரு! என்னாச்சு?”

“வரீங்களா பாஸ்?”

“லைன்லயே இரு மிரு!” என்றவன் அவசரமாக ஜீன்சையும் டீசர்டையும் அணிந்துக் கொண்டு போனை மறுபடியும் காதுக்குக் கொடுத்தான்.

“மிரு! நான் வந்துக்கிட்டே இருக்கேன். அரை மணி நேரத்துல வந்துருவேன்!”

“அட்ரஸ்?” தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவள் குரல் நடுங்குவது இவனுக்கு நன்றாக தெரிந்தது.

“என் கிட்ட இருக்கு” அவன் மனம் அவனுக்கே தெரிந்த பிறகு அவளது டீடெய்ல்ஸ் எல்லாம் போனிலேயே வைத்திருந்தான் குரு.

கீ ஹோல்டரில் இருந்த கார் சாவியை மெல்லிய நடுக்கத்துடன் எடுத்தான் அவன். மிருவிடம் என்ன ஆனது என கேட்டு அவளைப் பேச வைத்தப்படியே பார்க்கிங் ஏரியாவுக்கு ஓடினான்.

காரை நெருங்க நெருங்க இதயம் பட்பட்டென அடித்துக் கொண்டது குருவுக்கு. அவனுக்காக கார் பார்க்கிங்கில் காத்திருந்தது அவனது அப்பா பயன்படுத்திய பழைய மாடல் பென்ஸ் கார். அந்தக் காரில் தான் அவர் உயிரை விட்டிருந்தார். கார் ஓட்டும் போதே ஹார்ட் அட்டாக் தாக்க, கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நின்றிருந்தது. குருவின் துரதிர்ஸ்டம் அந்த நேரத்தில் அவனும் அப்பாவுடன் அந்தக் காரில் இருந்தான். நெஞ்சை அடைத்தப் போது கூட மகனைக் காக்க அவசரமாக காரை நொடித்துத் திருப்பி, மெல்ல மரத்தில் மோதி நிறுத்தி இருந்தார் அவனின் அப்பா. கார் ஓட்டியபடியே மரணத்தைத் தழுவிய தந்தையை நேரடியாகப் பார்த்த  குருவுக்கு அதன் பிறகு கார் ஓட்டுவது என்றாலே ஒரு வித ஃபோபியா. கை நடுங்க ஆரம்பித்து விடும். அதனாலேயே ஆனந்தி அவனுக்கு ட்ரைவர் ஏற்பாடு செய்திருந்தார். கார் வியாபாரத்தில் இருந்தாலும் கார் ஓட்ட மாட்டான் அவன். தம்பி தலை எடுக்க அவசர அவசரமாக தொழிலை அவனுக்கு மாற்றிக் கொடுத்தான் குரு.

இந்தக் காரை கூட பழுதுப்பார்த்து விற்காமல் போற்றி பாதுகாத்தான். அப்பாவின் ஆன்மா அதில் இருப்பது போன்ற மாயை அவனுக்கு. ஹரி கோலாலம்பூர் வரும் போதெல்லாம் அதை ஓட்டி சர்விஸ் செய்து வைத்து விட்டுப் போவான். வாரம் இரண்டு முறை காரை ஸ்டார்ட் செய்து, அதனுடன் உறவாடி விட்டுப் போவான் குரு.

“பாஸ்!”

கொஞ்ச நேரமாக குருவிடம் இருந்து எந்த சத்தமும் வராமல் போக, அவனை அழைத்தாள் மிரு.

“இருக்கேன் மிரு!” என சொல்லியவன், பெருமூச்சுடன் காரின் கதவைத் திறந்து அமர்ந்தான். கை நடுங்க சாவியை அதன் இடத்தில் விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

“மிரு! என் கிட்ட பேசிக்கிட்டே இரும்மா!” என்றவன் ப்ளூ தூத்தை காதில் சொருகி கொண்டான். அவள் குரல் வழி திடம் பெற்றவன், காரை மெல்ல செலுத்த ஆரம்பித்தான். கரங்களின் நடுக்கத்தை ஸ்டீயரிங் வீலை இறுக பற்றி நிறுத்த முயன்றான். மிருவிடம் பேச பேச, கவனம் அவளிடம் போக கையும் காலும் தன்னிச்சையாக காரை இயக்க ஆரம்பித்தன.

அரை மணி நேரம் என்றவன், மனதுடனும் உடலுடனும் போராடி மிருவின் இடத்தை அடைய முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டான். லிப்ட் வேலை செய்யாததால் படிகளில் தாவி ஏறினான் குரு. அவள் வீட்டை அடைந்தவன் கதவைத் தட்டியபடியே,

“மிரு, மிரு” என அழைத்தான்.

பொருட்கள் இழுபடும் ஓசை கேட்டது. பின் கதவைத் திறந்தாள் மிரு.

“வா..வாங்க பாஸ்” சட்டென உள்ளே நுழைந்தவன் கதவை மூடினான்.

குருவைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள் மிரு. வெளுத்த முகமும், நடுங்கிய கீழுதடும், அழுததால் சிவந்திருந்த கண்களும் அவள் நிலையை குருவுக்கு உணர்த்தின.

“என் கிட்ட கூட எதுக்கு இந்த தைரியசாலி வேடம் மிருது?” என்றவன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அணைப்பில் அடங்கி இருந்தவளின் உடல் சூட்டை இவனால் நன்றாக உணர முடிந்தது.

“வா போலாம்”

“எங்க பாஸ்”

“நம்ம வீட்டுக்கு”

“இல்ல வேணா! இங்க இருந்து தனியா வெளிய போக பயமா இருந்தது. அதுக்குத்தான் கூப்பிட்டேன். என்னை பட்ஜேட் ஹோட்டல்ல விடுங்க பாஸ். நான் இருந்துப்பேன்”

அவள் உடல் நடுக்கத்தைக் குறைக்க அழுத்தமாக அணைத்திருந்தவனை நிமிர்ந்துப் பார்த்து சொன்னாள் மிரு.

“நான் லவ் சொன்னத இன்னிக்கு ஒரு நாள் மட்டும் மறந்துரு மிரு! தோழியா என் வீட்டுக்கு வா! ப்ளீஸ்” என்றவன் தன் கைவளைவிலேயே அந்த வீட்டில் இருந்த ஒற்றை அறைக்கு அவளை நடத்தி சென்றான்.

“பேக் இருக்கா மிரு?”

“எதுக்கு பாஸ்”

“துணி எடுத்துக்க” என்றவன் அவள் காட்டிய பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒற்றை அலமாரியைத் திறந்தான். அவள் ஆபிசுக்குப் போட்டு வரும் சட்டைகளைப் பார்த்தவுடன் கண்டுக் கொண்டவன், எல்லாவற்றையும் அள்ளி பேக்கில் திணித்தான். ஒன்றுமே பேசாமல் அவன் செய்வதைப் பார்த்தப்படி நின்றிருந்தாள் மிரு.

“பேஸ்ட், ப்ரஸ் எல்லாம் நம்ம வீட்டுல புதுசு இருக்கு. டவல் என்னோடத யூஸ் பண்ணிக்கலாம். வாசமாத்தான் இருக்கும்”

“வேணா, வேணா!” அவசரமாக மறுத்தாள் மிரு.

“சும்மா உன்னை டீஸ் பண்ணேன் மிரு” என புன்னகைத்தவன் பேக்கை ஒரு கையிலும் மிருவை ஒரு கையிலும் பிடித்தப்படி வீட்டை சாத்தினான். உடைக்கப்பட்டிருந்த பூட்டை இறுகிய முகத்துடன் படம் எடுத்துக் கொண்டவன், மெல்ல நடத்தி அவளை அழைத்து சென்றான்.

திரும்பி வரும் போது, நடுங்கிய ஒரு கையை மிருவின் கைப்பிடித்து சமாளித்தவன், இன்னொரு கையால் ஸ்டீயரிங் வீலை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

தன் வீட்டை அடையும் வரை மிருவை கைவளைவிலேயே வைத்திருந்தான் குரு. அவன் வீட்டுக்கு முதன் முறையாக வந்த மிருவுக்கோ அதை ரசிக்கும் மனநிலையோ, உடல்நிலையோ இல்லை.

“பாஸ்!”

“ஹ்ம்ம்”

“என்னை விடுங்க பாஸ்! எனக்குத் தூக்கம் வருது” என அவன் பிடியில் இருந்து விலக முயன்றாள் மிரு.

“முதல்ல மருந்து குடிக்கலாம். உடம்பு சூடா இருக்கு மிரு. நீ போட்டிருக்கற சட்டையையும் மீறி என் வரைக்கும் அனல் அடிக்குது” என்றவன் தனது அறைக்கே அவளை அழைத்து சென்றான்.

“இங்க வேணா பாஸ். நான் சோபாவுல படுத்துக்கவா?”

“ஏன் வேணா? படத்துல தான் காய்ச்சல் வந்தா கட்டிப் பிடிச்சு பலான தப்பு செஞ்சிருவாங்க மிரு. நெஜத்துல மனுஷனுக்கு அந்த டைம்ல எனர்ஜியே இருக்காது. எனர்ஜி இல்லாத உன்னைக் கட்டிப் புடிச்சு தப்பு செஞ்சு என்ன சுகத்த நான் காண போறேன்?”

“காய்ச்சல்காரிக்கிட்ட இந்த மாதிரி பேசி வைக்கறதெல்லாம் வேற லெவல் பாஸ்”

“நான் சொன்னத கேட்டு நடந்தா, ஏன் கடுப்பாகற அளவுக்கு கருத்து சொல்லப் போறேன்!” என்றவன் மருந்து எடுத்து வரப்போனான்.

அவன் வருவதற்குள் உறங்கி இருந்தாள் மிரு. அவள் சிணுங்க சிணுங்க எழுப்பி அமர வைத்தவன், மருந்தைக் கொடுத்து விட்டே படுக்க விட்டான். அவள் போர்த்தி இருந்த போர்வையை மெல்ல உருவி எடுத்தவன், ஏசியின் குளிரை அதிகப்படுத்தினான். ரூம் லைட்டை அணைத்தவன், பெட் சைட் விளக்கை எரிய விட்டான். சற்று நேரம் கைக்கட்டி அங்கேயே நின்று உறங்கும் மிருவையேப் பார்த்திருந்தான் குரு. மீண்டும் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன், முன்னறைக்கு வந்து சோபாவில் சுருண்டுக் கொண்டான். மருந்து மயக்கத்தில் அவள் ஆழ்ந்து உறங்க ஒரு மணி நேரம் கொடுத்தவன், சத்தமில்லாமல் மீண்டும் தனதறைக்குள் நுழைந்தான். லேசாக சூடு விட்டிருக்க, உறங்குபவளையேப் புன்னகையுடன் பார்த்திருந்தான் குரு.

பின் கட்டிலில் ஏறியவன்,

“மமை மமி மரு” என முணுமுணுத்தவாறே மிருவைப் பின்னிருந்து கட்டிக் கொண்டான்.

‘இத்தனை நாளாய் தேடிய தேடல்

நீதானடி முடிவு’

(தவிப்பார்கள்)

error: Content is protected !!