SST–EPI 28

SST–EPI 28

அத்தியாயம் 28

மலேசியாவின் தேசிய காராக ப்ரோட்டோன் சாகா 1985ல் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக வளர்ச்சிக் கண்ட ப்ரோட்டோன் நிறுவனம், பல கைகள் மாறி இப்பொழுது வெளி நாடுகளுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

 

குரு ஹரியிடம் மட்டும் சொல்லி இருந்தான் தான் ஈப்போ வருவதாக. சுல்தான் அஸ்லான் ஷா ஏர்போர்டில் இறங்கியவன், டாக்சி அமர்த்திக் கொண்டு தனது இல்லத்தை நோக்கிப் பயணப்பட்டான்.

அன்று காலையிலேயே கணே குருவின் கொண்டோவுக்கு வந்திருந்தான். வரும் போதே மிருவுக்குப் பிடித்த நாசி லெமாக்வும் வாங்கி வந்திருந்தான். மூவரும் காலை உணவு உண்ண அமர, குரு சொல்லாமலே அவனுக்கு ப்ரேட் டோஸ்ட் செய்துக் கொடுத்தாள் மிரு. தம்பிக்கும் தனக்கும் டீ கலக்கிக் கொண்டவள், குரு அருந்தும் க்ரீன் டீயை செய்துக் கொடுத்தாள். முகம் மலர க்ரீன் டீயை அருந்தி ரொட்டியையும் உண்டான் குரு.

அக்காவும் தம்பியும் யாருக்கு பொரித்த முட்டை நாசி லெமாக், யாருக்கு அவித்த முட்டை நாசி லெமாக் என வாதாடி பின் இரண்டிலும் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கி ஜகஜோதியாய் தங்களின் அன்றைய நாளை ஆரம்பித்தார்கள். அவர்களையே சிரிப்புடன் பார்த்திருந்தவனை, ஓரக்கண்ணால் கவனித்தாள் மிரு.

“கணே, நாசி லெமாக்ல 600 கலோரி இருக்குத் தெரியுமா? இப்படி அடிக்கடி இதெல்லாம் சாப்பிடாத இனி!”

“ஸ்கூல்ல நாலாவது மாடி என் கிளாஸ்! ஒரு நாளைக்கு நாலு முறையாச்சும் ஏறி இறங்கறேன். பந்து விளையாட்டு விளையாடறேன். நான் ரெண்டு நாசி லெமாக் சாப்பிட்டாக் கூட கரைஞ்சிரும் மை டியர் சிஸ்டர். சாப்பிட்டதும் மதமதன்னு இருக்குடான்னு சொல்லிட்டு கால் நீட்டி கப்புன்னு நாற்காலில சாஞ்சி உட்காரற நீயெல்லாம் கலோரி கணக்க பத்திப் பேசக்கூடாது. சாமி குத்தமாகிரும்” என தன் அக்காவுக்கு நோஸ் கட் கொடுத்தவன் கையைக் கழுவி விட்டு ஹாலுக்குப் போய் விட்டான் தனது ஹோம் வோர்க் செய்ய.

மிரு முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு வர, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான் குரு. அவன் அருகில் வந்தவள்,

“என்ன பாஸ் ஆணவ சிரிப்பா இல்ல அகங்கார சிரிப்பா?” என கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும்..” இல்லை என சொல்ல வந்தவன் வாயில் பாதி முட்டையைத் திணித்திருந்தாள் மிரு.

“அவிச்ச முட்டைத்தான் பாஸ்! ஃபுல் ஆப் ப்ரோட்டின்! அம்மா கிட்ட வாதாட எனர்ஜி வேணும்ல, அதுக்குத்தான்” என கண் சிமிட்டினாள்.

கிண்டல் தொனியில் சொன்னாலும், அவள் முகத்தில் உள்ள கலக்கத்தைக் கண்டுக் கொண்டவன்,

“பயப்படாதே மிருது! எல்லாம் நல்லபடியா நடக்கும்” என சமாதானப்படுத்தினான். என்னதான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாலும், ஆனந்தியின் ஆசியும் வேண்டும் என அவள் எதிர்ப்பார்ப்பது குருவுக்குப் புரிந்தே இருந்தது. தனது அம்மாவின் பிடிவாதத்தை அறிந்திருந்தவன், அதற்கு மேல் மிருவுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்க விரும்பவில்லை.

அவன் கிளம்பிக் கொண்டிருக்கும் போது ரூமுக்கு வந்தவள், அவனிடம் ஒரு செக்கை நீட்டினாள்.

“என்னதிது மிரு?”

“மீதப் பணம். நான் செலவு செஞ்சது போக மிச்சத்த உங்கக்கிட்டயே திருப்பிக் குடுக்கறேன் பாஸ். உங்களையும் எடுத்துக்கிட்டு உங்க பணத்தையும் எடுத்துக்கறது ரொம்ப தப்பு”

“என்னை நீ இன்னும் எடுத்துக்கவே இல்லையே மமி மரு!”

முறைத்தவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் குரு.

“கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்களுக்குன்னு ஒரு புதுமொழி இருக்குத் தெரியுமா மிரு?”

“என்னது பாஸ்?”

“வாட் யுவர்ஸ் இஸ் மைன், வாட் மைன் இஸ் மைன்! அதனால பணத்த நீயே வச்சிக்கோ. அதோடு சேர்த்து என்னையும் வச்சிக்கோ!”

“இப்படி பேசி பேசி கொல்லற ஆளையெல்லாம் வச்சிக்கத்தான் முடியும்! கட்டிக்க முடியாது பாஸ்!”

“அப்படிலாம் சொல்லக் கூடாது மிருஜி! வச்சிக்கனும்னா முதல்ல கட்டிக்கனும்! ஐ மீன் தாலிய சொன்னேன்!” என வம்பிழுத்தவன், பின் சீரியசாக,

“என் கிட்ட உள்ளது எல்லாம் இனி உன்னது மிரு. உன் கிட்ட உள்ள உன்னைத் தவிர, மத்தது எல்லாம் உன்னதுதான்” என குழப்பி விட்டு நெற்றியில் அழுந்த முத்தமிட்டுக் கிளம்பி விட்டான்.

டாக்சிக்கு செட்டில் செய்து விட்டு வீட்டில் நுழையும் முன்னே வாசலிலே எதிர்ப்பட்டார் ஆனந்தி. மகனைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தவர்,

“வாப்பா குரு! வா, வா!” என அழைத்தார்.

முகம் மலர நின்றிருந்தாலும், சிவந்திருந்த கண்களும் அதை சுற்றி இருந்த கரு வளையமும், தொண்டைக் கட்டியது போல இருந்த குரலும் குருவை நிதானிக்க வைத்தது. மிரு மீண்டும் தன்னிடம் வந்துவிட்ட விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கிறது என புரிந்துக் கொண்டான் குரு. தன்னை வேவு பார்க்கும் தன் தாயின் குணத்தை அறவே வெறுத்தாலும், இது கோபப்படும் நேரம் இல்லை என அமைதிக்காத்தான் குரு.

குருவின் கைப்பற்றி அழைத்துப் போய் சோபாவில் அமர்த்தியவர்,

“உனக்குப் பிடிச்ச ஐட்டம்லாம் சமைச்சு வச்சிருக்கேன் குரு! இன்னும் லஞ்ச் டைம் ஆகலியே! இப்போ ஜீஸ் குடி” என்றவர் சமையல் அறையை நாடிப் போனார். குருவுக்குப் பிடித்த வாட்டர்மெலன் ஜீஸ்சை தன் கையாலேயே தயாரித்தவர், மகனிடம் கொண்டு வந்துக் கொடுத்தார். வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமைதியாக இருக்கும் மகனை பார்த்தப்படியே அவன் முன் அமர்ந்திருந்தார் ஆனந்தி.

குரு பழச்சாறைக் குடித்து முடிக்கும் வரை மகனையே உச்சி முதல் பாதம் வரை அளவிட்டவர், கிளாசை அவன் மேசையில் வைத்ததும் வாயைத் திறந்தார்.

“கல்யாணம் நான் செஞ்சு வைக்கனுமா? இல்லை நீயே செஞ்சிக்கப் போறியா குரு?”

குரல் கோபமாக வந்தாலும் அதில் இருந்த நடுக்கத்தைக் கண்டுக் கொண்டான் மகன்.

அம்மா என அழைக்க வந்தவனை கை நீட்டி பேச வேண்டாம் என தடுத்தவர்,

“எனக்கு லேசா தலைவலியா இருக்கு! அப்புறம் பேசலாம் குரு” என சொல்லியவர் அவசரமாக எழுந்து தனதறைக்குள் சென்று கதவடைத்தார். அவர் செல்லும் முன் கலங்கி இருந்த கண்களைக் கண்டுக் கொண்டான் குரு.

கண்ணீர்!!!! அவன் பயப்படும் ஆயுதம். அதுவும் தன் அம்மாவிடமும், மிருவிடமும் அதனைக் கண்டால் ஆடிப் போய்விடும் அவன் மனம். தலையைப் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் குரு. ஹாலில் மாட்டி இருந்த தன் அப்பாவின் புகைப்படத்தை சற்று நேரம் வெறித்தப்படி அமர்ந்திருந்தவன், மனம் மெல்ல சாந்தி அடைய தனது ரூமுக்குள் புகுந்துக் கொண்டான். ஈப்போ வந்து விட்டதாக மிருவுக்கு மேசேஜைத் தட்டி விட்டான். சில நாட்களாக சரியாக தூங்காமல் இருந்ததன் பலன், கண்கள் எரிச்சலைத் தர, மனம் வேறு சோர்ந்திருக்க கட்டிலில் சாய்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான். மாலையில் பேபிம்மா வந்து தான் அவனை எழுப்பினாள்.

“குருப்பா! வென் டிட் யூ கம்?” என கேட்டவாறே அவன் முதுகில் ஏறி குதித்தாள் ரேஷ்மி.

குட்டியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், ஆசைத்தீர முத்தமிட்டான். அவளுடன் பேசிய படியே கட்டிலில் இருந்து எழுந்தவன், கதவோரம் சாய்ந்தபடி தன்னைப் பார்த்திருக்கும் ஹரியை பார்த்து புன்னகைத்தான்.

“பேபி, கோ ட்ரிங்க் யுவர் மைலோ!” என தன் மகளை வெளியே அனுப்பி வைத்தான் ஹரி.

“போய் முகம் கழுவிட்டு வாங்க ப்ரோ, பேசனும்”

முகம் கழுவியது மட்டுமில்லாமல் குட்டி குளியலையும் முடித்துக் கொண்டு வந்தவன், அலமாரியில் வைத்திருக்கும் தனது டீ ஷர்டையும் ஷார்ட்சையும் அணிந்துக் கொண்டான். அவன் உடுத்தி முடிக்கவும், கையில் டீயுடன் அவனை எதிர் கொண்டான் ஹரி. கட்டிலில் அமர்ந்து டீயை உறிஞ்சியவன், தம்பியியைப் பார்த்து சொல் என்பது போல சைகை செய்தான்.

“வீட்டுல குட்டி சூறாவளி ஒன்னு கரையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருக்கு ப்ரோ! நாங்க எல்லாம், ஈவன் பேபிம்மா கூட நேத்துல இருந்து கப்சிப்னு இருக்கோம். அப்படி இருந்தும் எனக்கு ரெண்டு டோஸ் விழுந்துருச்சு. மேனுக்கு எத்தனை விழுந்துச்சுன்னு தெரியல. அம்மா மேல உள்ள கடுப்ப எல்லாம் என் கிட்ட காட்டுறா! பிரஷா வேற ஒரே அழுகை போன்ல. எப்படி இருக்கீங்க அம்மான்னு போன் அடிச்சா, இன்னும் குழிக்குள்ள போகாம இருக்கேன்னு நினைச்சு சந்தோஷப் படுன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்களாம். நலம் விசாரிச்சது ஒரு குத்தமான்னு என் கிட்ட அழறா! உங்கம்மா நேத்துல இருந்து ஒழுங்க சாப்பிடல ப்ரோ. ரூம்குள்ளயே அடைஞ்சி கிடக்கறாங்க! கிட்ட நெருங்கினா எங்க டைம் பாம்ப் வெடிச்சிருமோன்னு நாங்களாம் பயந்துட்டே இருக்கோம் ப்ரோ”

“லஞ்ச் சாப்பிட்டாங்களா?”

“சமைச்சது எல்லாம் அப்படியே இருக்கு! உங்கண்ணா சாப்பிடாம தூங்கறான்! எழுப்பி சாப்பிட வை! வேலை வேலைன்னு அங்கயே விழுந்துக் கிடக்காதே! வளர்த்து விட்ட அண்ணன்காரன் வயிறு வாடிக் கிடக்க, உனக்கு அங்க என்ன வெட்டி முறிக்கற வேலைன்னு வாய்ஸ் நோட் போட்டாங்க! அதான் சீக்கிரம் வந்துட்டேன் ப்ரோ. அவங்களும் இன்னும் சாப்பிடல! போய் கூப்பிடுங்க! என்ன கோபம்னாலும் உங்க கிட்ட காட்ட மாட்டாங்க! அதுக்குத்தான் என்னையும் என் குடும்பத்தையும் நேர்ந்து விட்டுருக்காங்களே!” என சலித்துக் கொண்டான் ஹரி.

“பாசம் உள்ளவங்க கிட்டத்தான்டா கோபத்தைக் காட்ட வரும்”

“ஹ்க்கும் நம்பிட்டோம்! போங்க ப்ரோ போங்க! சீக்கிரம் உங்க ச்சார்ம்ம காட்டி உங்கம்மான்ற சூறாவளிய சுருட்டி வைங்க! மிடில”

புன்னகையுடன் எழுந்தவன், கிச்சனுக்குள் புகுந்தான். மேனகாவிடம் ட்ரேயில் இருவர் சாப்பிடுவது போல உணவு எடுத்து வைக்க சொன்னான். அவனுக்காக சப்பாத்தி, க்ரீன் கறி, மிக்ஸ் வெஜிடேபிள் என சமைத்திருந்தார் ஆனந்தி. அதையும், அம்மாவுக்காக சாதமும் எடுத்துக் கொண்டவனுக்கு மெல்ல புன்னகை எட்டிப் பார்த்தது. ஆனந்திக்கும் சாதம் இல்லாமல் இருக்க முடியாது மிருவைப் போலவே!

ஹரி கூட வந்து அறைக் கதவைத் தட்ட, ட்ரேயைப் பிடித்தப்படி நின்றிருந்தான் குரு. கதவைத் தட்டியும் சத்தமே இல்லை.

“அம்மா!” என குரு அழைக்க,

“ஹ்ம்ம்! வரேன். அஞ்சு நிமிஷம் இரு” என பதில் வந்தது.

ஐந்து நிமிடங்களில் கதவைத் திறந்தார் ஆனந்தி. அழுதிருப்பார் போல, முகத்தைக் கழுவி அவசரமாக பவுடரை ஒற்றி இருந்தார்.

ட்ரேயையும் மகன்களையும் மாறி மாறிப் பார்த்தவர், மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டார்.

“பெஸ்ட் ஆப் லக் ப்ரோ” என சொல்லிய ஹரி கழண்டுக் கொண்டான்.

தன் விரல் நகங்களைப் பார்த்தப்படி அமைதியாக அமர்ந்திருந்தார் ஆனந்தி. சாதம் இருந்த தட்டை எடுத்து, அதில் கறி ஊற்றி காய்கறிகளைப் பரிமாறி அன்னையிடம் நீட்டினான் குரு. தட்டை வாங்காமல், அப்படியே அமர்ந்திருந்தார் அவர். பெருமூச்சுடன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து, உணவைத் தன் தாய் வாய் அருகே கொண்டுப் போனான் குரு.

“சாப்பிடுங்க அம்மா”

வேண்டாம் என தலையை இடம் வலம் ஆட்டினார் அவர்.

“என் கூட சண்டைப் போடவாச்சும் எனர்ஜி வேணும்ல! சாப்பிடுங்க” என கெஞ்சினான் குரு.

“எனக்கு என்ன தலையெழுத்தா பெத்து ஆசை ஆசையா வளத்தப் புள்ள கிட்ட சண்டைப் போட!”

“சரி, நீங்க சண்டைப் போட மாட்டீங்க! நான் போடற சண்டைய தாங்கிக்கவாச்சும் எனர்ஜி வேணும்ல! அதுக்கு சாப்பிடுங்க”

“ஒன்னும் தேவையில்ல!” சின்னப் பிள்ளைப் போல அடம் பிடித்தார் ஆனந்தி.

“நேத்துல இருந்து நான் சரியா சாப்பிடலம்மா! இப்ப நீங்க சாப்பிட்டு முடிச்சாத்தான் நான் சாப்பிடுவேன்! இல்லைன்னா இன்னிக்கும் பட்டினி கிடப்பேன்” என கெஞ்சலை விடுத்து மிரட்டலைக் கையில் எடுத்தான் குரு. பசி எனும் அஸ்திரம் தன் அம்மாவை மட்டுமல்லாது தனது பொம்மாவையும்(மிரு) என்ன பாடு படுத்தும் என அறியாதவனா குரு! அஸ்திரம் சரியாக வேலை செய்தது.

வாயை ஆவென திறந்தார் ஆனந்தி. புன்னகையை வாயினுள்ளேயே அடக்கியவன், தனக்கு ஊட்டி வளர்ந்த அம்மாவுக்கு தன் கையால் ஊட்ட ஆரம்பித்தான். வீம்புக்காக பசியில் கிடந்திருப்பார் போல. மட மடவென உணவு இறங்கியது. அதோடு தான் சீக்கிரம் சாப்பிட்டால் தானே, மகன் சாப்பிடுவான் என்பதாலும் சீக்கிரமாகவே உண்டார் ஆனந்தி. பின் மகனைக் கட்டிலில் அமர்த்தி தன் கையால் சப்பாத்தியை கறியில் நனைத்து ஊட்டிவிட்டார்.

இனி இந்த கொஞ்சல், ஊட்டல், சீராட்டல் எல்லாம் சாத்தியப்படுமா என மனம் வேறு கலங்கித் தவித்தது. மீண்டும் மிருவை மகன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறான் எனும் செய்தியை ஸ்பை மூலம் அறிந்தவருக்கு பூமியே தட்டாமாலை சுற்றியது. விலகிப் போக பணம் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள், தன்னை ஏமாற்றி மீண்டும் மகனிடம் சேர்ந்து விட்டாள் என்றே எண்ணினார். ஒரு சின்னப் பெண்ணால் தான் முட்டாளடிக்கப் பட்டிருக்கிறோம் எனும் செய்தியே அவருக்கு கோபத்தைக் கொடுத்தது. அதோடு தான் பேசிய பேச்சுக்கு இனி மகனைத் தன்னிடம் அண்ட விடுவாளா என மனம் கலங்கித் துடித்தது. தன் குருப்பா இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவன் மேல் கண்மூடித்தனமாக அவ்வளவு அன்பை வைத்திருந்தார் ஆனந்தி. தன் மகனுக்குக் கிடைக்கும் எல்லாமே தெ பெஸ்டாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர் இது வரை அதை நடத்தியும் வந்திருந்தார். தரமான அணிமணிகள், படிப்பு, என பார்த்து பார்த்து செய்தவர் அவன் தாரமாகப் போகிறவளும் அவ்வாறே இருக்க வேண்டும் என கோட்டைக் கட்டி வைத்திருந்தார்.

அந்தக் கோட்டையை மகன் தகர்த்திருக்க, எல்லா தாய்மார்களைப் போலவே தகர்த்தவனை விட்டுவிட்டு கோட்டையின் ராணியைத் தரம் தாழ்த்திப் பேசி தப்பு செய்திருந்தார் ஆனந்தி. உணவு உண்ட இருவரும் அமைதியாகவே கட்டிலில் அமர்ந்திருந்தனர். அவர் பேசட்டும் என இவனும், மகன் பேசட்டும் என அம்மாவும் அமைதிக் காத்தனர்.

மெல்ல நகர்ந்து தன் அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான் குரு. வளர்ந்ததில் இருந்து ஒரு அடி தள்ளி நின்ற மகன், சின்னப் பிள்ளையில் செய்வதுப் போல தன் மடி சாயவும், கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டது ஆனந்திக்கு. மெல்ல தன் மகனின் சிகையில் கைவிட்டு அளைந்தவர்,

“நான் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு தெரியுமா குரு?” என கேட்டார்.

“தெரியும்மா!” என பதில் அளித்தான் குரு.

“உங்கப்பா போனதுக்கு அப்புறம் நான் வாழறதே உங்களுக்காகத்தான்டா! என் குரு, என் ஹரி, என் பிரஷான்னு உங்கள முன்னிருத்தியே என் வாழ்க்கை இருக்கு குரு”

“தெரியும்மா!”

“உன் தம்பிக்கு, தங்கைக்கு எல்லாம் பாத்து பாத்து செஞ்ச நான், உசிரையே வச்சிருக்கற உனக்கு கெட்டது நினைப்பேனா குரு?”

“நினைக்க மாட்டீங்கம்மா”

“அவ வேணாப்பா குரு!”

மகனிடம் அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

“எனக்கு அப்புறம் நீதான் இந்தக் குடும்பத்துக்கு எல்லாமுமா இருந்து செய்யப் போறவன். இப்பவே நீதான் எல்லாம் பார்க்கற, இல்லைன்னு சொல்லல! நான் சொல்ல வரது, சொந்தப்பந்தங்க விஷேசத்துக்குப் போறது, நல்லத்து கெட்டதுல கலந்துக்கறது இதெல்லாம்! உன் கூட உன் சரிபாதியும் இதுல எல்லாம் கலந்துக்கனும் குரு! அந்த இடத்துல என்னால இவள இமேஜின் பண்ணிப் பார்க்கவே முடியலடா குரு!”

“எந்த சொந்த பந்தத்த சொல்லறீங்கம்மா? அப்பா இறந்ததும், எங்க கடன் கிடன்ன்னு நாம வந்துருவோமோன்னு தகனம் பண்ணிட்டு வர முன்னுக்கே இடத்தைக் காலி பண்ணவங்களையா? நான் கஸ்டப்பட்டு எல்லாத்தையும் சரி செஞ்சதும் வந்து ஒட்டிக்கிட்ட பந்தபாசங்களையாம்மா?”

மகன் கேட்ட கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வார் ஆனந்தி!

“சரி அவங்கள விடு! உன்னோட பிஸ்னஸ் சர்க்கிள்ல அவள என்னன்னு அறிமுகப்படுத்துவ? அவளால சோசியலைஸ் பண்ண முடியுமா குரு?”

“என் பிலவ்ட் வைப்னு அறிமுகப் படுத்துவேன்! என்ன சோசியலைஸ் பண்ணனும்மா? வைன் குடிக்கனுமா, இல்ல ஆங்கிலத்துல பேசனுமா? இல்ல பார்ட்டிவேர் போட்டுட்டு வந்து எல்லாருக்கும் காட்சி குடுக்கனுமா? இதை எல்லாம் கொஞ்சம் கைட் பண்ணா என் மிருவாலயும் செய்ய முடியும்மா! அவளுக்கும் இஸ்டம் இருந்தா நானே கைட் பண்ணுவேன்! ஆனா மாசத்துல ஒரு தடவை வரப் போற இந்த மாதிரி நிகழ்வுக்காக என் வாழ்க்கையையே பணயம் வைக்க முடியாதும்மா”

“அவள உனக்கு மனைவியா என்னால ஏத்துக்கவே முடியல குரு! தமிழச்சியா இருந்தா, எந்த ஜாதினாலும் பரவாயில்லன்னு ஒத்துக்குவேன்! அவள பார்த்தாலே தெரியுதேடா கலப்படம்னு! என்னால முடியலயே குரு”

“ஒருத்தரோட பிறப்பு அவங்க கையில இல்லம்மா! உங்களுக்கும் அப்பாவுக்கும் நான் பிறந்தது என்னோட அதிர்ஸ்டம். இப்படி கலப்படமா பிறந்தது அவளோட தலைவிதிம்மா! அவளா ஆசைப்பட்டா அப்படி பிறந்தா? கடவுள் சித்தம் அது. அதுக்காக அவள ஒதுக்கறது எந்த வகையில நியாயம்மா? என் மிருவ பாடி ஷேமிங் செஞ்சிருக்கீங்க! உங்கள தவிர வேறு யாராச்சும் நான் அந்த விஷயத்துல மயங்கிக் கிடக்கேன்னு சொல்லி இருந்தா நான் என்ன செஞ்சிருப்பேன்னே எனக்குத் தெரியாது! உங்களால எப்படிம்மா உங்க மகனையே கேவலப் படுத்தற அளவுக்கு இப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிஞ்சது? என் மனசு சுக்கு நூறா உடஞ்சிப் போச்சும்மா! என் கேரக்டர் இப்படிதான்ற மாதிரி நான் இவ்வளவு நாளா வாழ்ந்துருக்கேன்! அதான் பட்டுன்னு நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க! உங்க மகன் கறை படிஞ்சவன்மா! அவ, என் மிரு ப்யூர் கோல்ட் மா! அவ கிடைக்க நான் தான்மா குடுத்து வச்சிருக்கனும்!”

“நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டாளா?” என குற்ற உணர்ச்சியில் கேட்டார் ஆனந்தி. மகன் மனம் வெதும்பி பேசியது வேறு அவரை பாதித்திருந்தது. கோபத்தில் என்ன பேசுவது என அறியாமல் தன் மகனைத் தானே கேவலப்படித்தி இருப்பதை குரு சொல்லும் போதுதான் உணர்ந்துக் கொண்டார்.

அதற்குள் எப்படி இந்த விஷயத்தைக் கண்டுப்பிடித்து, சர்ஜரிக்குப் போன மிருவை அழைத்து வந்தான் என எல்லாவற்றையும் சொன்னான் குரு.

“நீங்க பேசனதுல மனசு நொந்துப் போய், குறைச்சிக்க சர்ஜரி வரைக்கும் போய்ட்டாம்மா! அப்படி மட்டும் செஞ்சிருந்தான்னா, வாழ் நாள் முழுக்க உங்க மகன் குற்ற உணர்ச்சில குமைஞ்சி குமைஞ்சி செத்துருப்பான்மா! நான் காதலிச்சது அவ மனசதான்மா! நீங்க சுட்டி காட்டன விஷயத்தை இல்லம்மா!”

ஆனந்தியின் மடி நனைய ஆரம்பித்தது. குழந்தையாய் மாறி கண்ணீர் விடும் தன் மகவைப் பார்த்து அதிர்ந்துப் போனார் அவர்.

“குருப்பா!”

கண்களில் நீருடன் அவரை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“எனக்கு மிரு வேணும்மா! உங்களுக்கு அப்புறம் அவ தான்மா எனக்கு எல்லாம்! அவள என்னால விட முடியாதும்மா! உங்க சம்மதத்தோட அவள கரம் பிடிக்கனும்! ப்ளீஸ்ம்மா!” என கெஞ்சினான்.

சிறுவனாக இருந்தப் பொழுது, குருவுக்கு ரிமோட் கார்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்குப் பார்த்தாலும் வாங்கிக் கொடுக்க சொல்லி அடம் பிடிப்பான். அவன் அப்பா பல தடவை வாங்கிக் கொடுத்தாலும், சில தடவைகள் மறுத்து விடுவார். அந்த சமயங்களில் கண்ணில் நீருடன் இப்படித்தான் ஆனந்தியைப் பார்ப்பான் குரு. இவருக்கு உடனே உருகி விடும். தனது பணத்தில் இருந்து அப்பொழுதே வாங்கிக் கொடுத்து மகனை சிரிக்க வைத்து விடுவார்.

ரிமோட் கார் வேண்டும் என கண்ணிர் விடும் குட்டி குருவை மீண்டும் பார்த்ததில் அவருக்கும் கண்கள் கலங்கியது.

“என் சந்தோஷமே உன்னை சுத்திதான் குருப்பா! உனக்கு நல்லது செய்யறேன்னு நான் நினைக்க, நீ அப்படி இல்லைன்னு புரிய வச்சுட்ட. உனக்காக ஒத்துக்கறேன்! என் மகன் சந்தோஷத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்! ஆனா…”

கேள்வியாக நோக்கிய மகனை,

“என்னால உன் மிருகிட்ட ஒட்ட முடியுமான்னு தெரியல! நான் அந்தஸ்து, பாரம்பரியம் அப்படி இப்படின்னு வாழ்ந்துட்டேன்! என் இடத்த விட்டு என்னால இறங்கி வர முடியுமான்னு தெரியல. ஆனா மனசு நோக ஒன்னும் சொல்ல மாட்டேன்! ஒதுங்கிப் போயிருவேன்” என தன் மனநிலையை தெளிவாக சொன்னார் ஆனந்தி.

எப்படி மிருவைத் தன் தாயிடம் நீ அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டும் என வற்புறுத்தவில்லையோ, அதே போல தன் தாயிடமும் தன் மனைவியை அட்ஜஸ்ட் செய்துதான் ஆக வேண்டும் என கேட்கவில்லை குரு. இருவரையும் தான் ஒருவனே அட்ஜஸ்ட் செய்து போய்விட முடிவெடுத்தான் அவன். தாயையும் தாரத்தையும் வாழ்க்கை எனும் தராசில் சரிசமமாய் நிறுத்தி வைக்க முடிவெடுத்தான் குருப்ரசாத். ஆனந்தியும் அவன் ஆனந்தமும் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார்களா, அல்லது தீராத மண்டை வலியைக் கொடுப்பார்களா????

(திருமணத்தில் சிக்கிக் கொள்வார்கள்)

error: Content is protected !!