SST — epi 3

SST — epi 3

அத்தியாயம் 3

 

ஜிம்மி சூ, உலக புகழ்பெற்ற காலணி வடிவமைப்பாளர் மலேசியாவின் பினாங்கு நகரில் பிறந்தவராவார். இவரது வடிவமைப்பு மறைந்த இளவரசி டயானாவால் விரும்பி அணியப்பட்டது.

 

அதே நேரம் குருவும் இவளைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தான் அல்லது கொதித்துக் கொண்டிருந்தான் என கூற வேண்டுமோ!

“திமிர் பிடிச்ச சைக்கோ! என்ன பேச்சு பேசறா! பேரழகின்னு நினைப்பு அவளுக்கு”

வெள்ளிக் கிழமை வேலை முடிந்து எப்போதும் நண்பர்களுடன் அரட்டை, அல்லது பார் ஹோப்பிங் (ஒரு பாரில் இருந்து இன்னொரு பாருக்கு செல்வது. விடியும் வரை இப்படியே சுற்றிக் கொண்டிருப்பார்கள்) என பொழுதைக் கழிப்பவன் இன்று நேராக வீட்டுக்கு வந்து விட்டான். உடை மாற்றி ஜிம்முக்குப் போனவன், தன் கோபம் முழுவதையும் ட்ரெட்மில்லில் காட்டினான். வியர்வை ஆறாய் வழிய ஓடிக் கொண்டே இருந்தான்.

‘சரியான கீலாக்காரச்சி (கீலா என்பது மலாயில் பைத்தியம்) போல. பாவம் பார்த்து வேலைக்கு வரியான்னு கேட்டா, என்னை புழுவ போல பார்க்கறா!’

ஓடி முடித்தவன் வெயிட் தூக்க வந்திருந்தான். இருந்த கோபத்தில் பளுவை மூக்கிலே போட்டிருப்பான். சட்டென சுதாரித்தவன், வெயிட் தூக்கும் இருக்கையில் இருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டான். முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டு, வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

குளிர்ந்த ஷவரின் அடியில் கோபம் தீர நின்றவன் மனம் ஒரு நிலைப்படவும் வெளியே வந்து உடை மாற்றிக் கொண்டு டீவியின் முன் அமர்ந்தான். நெட்ப்ளிக்ஸ் வைத்தவன், ஆங்கில சண்டை படம் ஒன்றை பார்க்க ஆரம்பித்தான்.

வயிறு தான் இருப்பதைக் கத்தி கதறி காட்டவும், கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தான் குரு. இரவு பதினொன்று என காட்டியது. இதற்கு மேல் சமைத்து சாப்பிட மூட் இல்லை. போன் எடுத்து சைனிஸ் டெலிவரிக்கு போன் செய்தான். இருபது நிமிடங்களில் உணவு வந்தது. பணம் கொடுத்து டெலிவரி பாயை அனுப்பிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்ட பாக்சை குப்பையில் போட்டு விட்டு ப்ரிட்ஜை திறந்து பாட்டில் பீரை எடுத்துக் கொண்டு மீண்டும் டீவியின் முன் அமர்ந்தான். ஃபீலான நெஞ்சை பீர் ஊத்தி அணை என்பது அவனின் தாரக மந்திரம். இரண்டு பாட்டில் காலியானது. கண்களும் தூக்கத்துக்குக் கெஞ்சின. டீவியை அணைத்து விட்டுப் போய் படுத்தான்.

படுத்து கண்ணை மூடியதும் அவளின் கோப முகம்தான் கண்ணில் வந்து நின்றது. தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்திக் கொண்டான் குரு.

“நீ ஏன்டி ஜில்லும் பிப்பாவும் கலந்த கலவையா இருந்து தொலைச்ச? அதனால தானே நான் பார்த்தேன்! அதுக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவியா?” காதலன் படத்தில் வடிவேலு கொடுத்த விளக்கம் இன்னும் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. பெண்களில் அழகாகவும் அம்சமாகவும் இருப்பவர்கள் ஜில் எனவும் மயக்கும் உடற்கட்டை உடையவர்கள் பிப்பா எனவும் பிரிக்கப்படுகிறார்கள். அந்த படத்தில் நடித்த நக்மா மனதில் நின்றாரோ இல்லையோ அந்த வசனம் இவன் மனதில் நின்றிருந்தது.

எண்ணங்கள் பயணித்து மீண்டும் அவள் முகத்தைப் பார்த்த நொடிக்கே சென்று நின்றன.

“சார். டோட்டலா பத்து வெள்ளி”

வாலட்டில் இருந்து பணத்தை எடுத்தப்படியே நிமிர்ந்துப் பார்த்தவன் திகைத்துப் போனான். பால் நிறம், பொன் நிறம், கருப்பு, மஞ்சள் இப்படி பல வகையான நிறத்தில் இருக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறான் குரு. இவள் இதில் எல்லாம் அடங்காத ஒரு கலரில் இருந்தாள். தங்கத்தில் தேனைக் குழைத்தால் எப்படி இருக்கும்? மினுமினுவென அந்த நிறத்தில் இருந்தாள் அவள். ஜெனிபர் லோபேசையும் ஷக்கிராவையும் கலந்து கட்டி வைத்த வர்ணம். துடைத்து வைத்தது போல எந்த அலங்காரமும் இன்றி மூக்கும் முழியுமாக இருந்தாள். ஃபுல் லிப்ஸ் என்பார்களே அது போல மேல் உதடும் கீழ் உதடும் சதைப்பற்றோடு லிப்ஸ்டிக் இல்லாமலே பளபளத்தன.

“சார், பத்து வெள்ளி” அவனின் நிலைப் புரியாமல் கையை அவன் முன்னே நீட்டினாள் மிரு.

குனிந்து அவள் கையைப் பார்த்தவனின் பார்வை, அவனை அறியாமலே இரு நொடிகள் அதிகமாக அவள் பெண் தான் என நிரூபிக்கும் உடல் பாகத்தில் நிலைத்து நின்றன.

“சார்!!”

பதில் இல்லாமல் போகவும் மறுபடியும் அழுத்திக் கூப்பிட்டாள் மிரு.

“சார், எனக்கு கண்ணு ரெண்டும் இன்னும் கொஞ்ச மேல இருக்கு. நிமிர்ந்து பார்த்தா தெரியும்!”

பட்டென பார்வையை அவள் முகத்தில் நிலைக்க வைத்தான் குரு. அவள் கண்களில் அனல் பறந்தது.

“சாரி சாரி! மிஸ்?” பெயர் அறிய விழைந்தான்.

அவள் பதில் அளிக்கவில்லை. அவன் கையில் இருந்த சிகப்புத் தாளைப் பிடுங்கிக் கொண்டவள், அவன் இறங்குவதற்காக காத்திருந்தாள்.

“பெயர் சொல்ல மாட்டீங்களா மிஸ்?”

“கண்ண பார்த்து பேசத் தெரியாத கண்ட கபோதிக்கெல்லாம் நான் பேரு, ஊரெல்லாம் சொல்லுறது இல்ல” அனல் தெறித்தது அவள் வார்த்தையில்.

அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலையில் படங்களில் மட்டுமே இந்த மாதிரியான பேச்சுக்களைக் கேட்டிருந்தவன் திகைத்துப் போனான்.

“வாட்!!!! கபோதியா?”

“ஆமா! கொஞ்சம் கீழ இறங்கனீங்கனா நான் பாட்டுக்கு கார எடுத்துட்டுக் கிளம்பிட்டே இருப்பேன்”

பயப்படாமல் அவன் முகம் பார்த்து முறைத்தாள் மிரு.

“வாட் தே….” வாயில் வந்த ஆங்கில கெட்ட வார்த்தையை வாய்க்குள்ளேயே அடக்கினான் குரு.

“கெட் அவுட் ஃப்ரம் மை கார் அண்ட் மேக் இட் ஃபாஸ்ட் யூ பெர்வெர்ட்(பெண்களிடம் தப்பாக நடப்பவன்)”

“வாட்! புதுசா பார்க்கறவங்க கிட்ட இப்படிதான் மரியாதை இல்லாம பேசுவியா மிரு?” போனில் இருந்த கிரெப் அப்ளிகேஷனில் அவள் பேரைத் தேடிப் பார்த்து கூப்பிட்டான் குரு.

“யாருக்கு மரியாதை குடுக்கனும்னு எனக்குத் தெரியும். பெரிய புத்தன் மாதிரி அட்வைஸ் பண்ணாம இடத்தைக் கழுவு! (இடத்தைக் கழுவு என்பது, இங்கிருந்து கிளம்பு என இந்நாட்டில் பொருள்படும்)” முகம் கோபத்தில் சிவந்திருக்க கடுப்பில் பேசினாள்.

“தட்ஸ் இட்! நான் போறேன்! உன்னை மாதிரி திமிர் பிடிச்சவ கிட்ட எனக்கு மட்டும் என்ன பேச்சு!”

அவசரமாக காரில் இருந்து இறங்கியவன், கதவை மூடும் முன்னே தனது நேம் கார்ட் ஒன்றை எடுத்து சீட்டில் போட்டான்.

“வேலை வேணும்னா ஈமெயில் அனுப்பு. இண்டர்வியூக்கு கூப்பட சொல்லுறேன்” என்றபடியே அறைந்து கதவை சாத்தினான்.

“பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர, உன் கிட்ட வேலைக்கு வர மாட்டேன், போடா” என கத்தி விட்டு வேகமாக காரை அழுத்திப் பறந்துவிட்டாள் மிரு. ரியர் வியூ கண்ணாடியில் அவன் முறைத்துக் கொண்டு நிற்பது கண்ணில் பட்டது.

தலையணையை முகத்தில் இருந்து எடுத்தவன், தன்னையே கடிந்துக் கொண்டான்.

‘அவ அப்படி திமிரா பேசியும் வேலைக்கு வான்னு கார்ட் குடுத்துட்டு வந்திருக்கனே, என்னை எதால அடிக்க? என்னைப் பத்தி இன்னும் மோசமா நினைச்சிருப்பா. சும்மா பியூ செகண்ட் கண்ணு அங்க போயிருச்சு, அதுக்கே இந்த குதி குதிக்கறா! எத்தனையோ ஆராய்ச்சி செஞ்சு ஆம்பளைங்களே இப்படித்தான், அவங்க கண்ணும் அப்படித்தான், சொன்ன பேச்ச கேட்காமலே இப்படி பார்க்க கூடாத இடத்த பார்த்திரும்னு நிரூபிச்சிருக்காங்களே அதெல்லாம் அவளுக்குத் தெரியாதா? படிச்சவ தானே! எல்லா ஆம்பளைங்களும் விவேகானந்தர் மாதிரி இருப்பாங்களா என்ன! மத்த பொண்ணுங்க இப்படி யாராச்சும் பார்த்தா தெரியாத மாதிரி இருந்துக்கறாங்களே, இவளும் ஈசியா எடுத்துட்டுப் போக வேண்டியது தானே! நான் பார்த்ததையும் கவனிச்சு, அதுக்கு நல்லா திருப்பி வேற குடுத்தாளே’

அவள் சொன்ன கண் இரண்டும் மேலே இருக்கிறது எனும் வாக்கியம் ஞாபகம் வர குருஞ்சிரிப்பு ஒன்று உதட்டில் வந்தமர்ந்தது.

‘சரியான ஊசிப்பட்டாசு! வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு கேசு’ என புன்னகைத்தப்படியே உறங்கிப் போனான் குரு.

இரண்டு நாட்களாக கார்டை கையில் வைத்தப்படி திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிரு. அவன் வீடு இருக்கும் பகுதிக்கு கார் ஓட்டப் போகாமல் வேறு இடத்தில் ஓடிக் கொண்டிருந்தாள் அவள். நண்பனும் இன்னும் எந்த வேலைக்கும் அழைக்கவில்லை.

பாசெஞ்சர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு பார்க் ஒன்றில் போய் அமர்ந்தாள் மிரு. ரோட்டோரமாய் இருந்த ஸ்டால் ஒன்றில் தே தாரேக்(டீ) ஒன்றை வாங்கி வந்திருந்தாள். மாலை நேர ஜாகிங் செய்பவர்களைப் பார்த்துக் கொண்டே பானத்தைப் பருகினாள். சூடான பானம் உள்ளே இறங்க, கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. நன்றாக அமர்ந்து யோசித்தாள்.

மலேசியா ஆப்பிரிக்கா கோலாபேரஷேனில் உதித்த அவள் பார்க்க வித்தியாசமாக இருப்பது அவளுக்கே தெரியும். குட்டி குட்டியாய் சுருண்ட கேசம் அவளுடையது. அப்படியே அவளின் அப்பாவைப் போல. அதை சீவி சிங்காரிக்க முடியாமல்தான் குட்டையாக வெட்டி வைத்திருக்கிறாள். அவளது அப்பாவைப் போலவே நெடுநெடு உயரம். அதற்கேற்ற உடற்கட்டு.

அவளுக்கு பிடிக்காத ஒன்று அவளிடம் இருக்கிறது என்றால் அது வருங்காலத்தில் தன் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க என பிரம்மன் படைத்திருந்த படைப்புதான். அவள் வயது பெண்களை விட சற்றே பெரிய அளவில் அமைந்து விட்டன அவை. சின்ன வயதில் இருந்தே அதன் வளர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது. பள்ளியில் யாருக்கும் ஒன்றும் இல்லாத போதே இவளுக்கு உள்ளாடை வாங்கி அணிய வேண்டிய நிலை. ஆசிரியர் முதற்கொண்டு பார்க்கும் ஆண்களின் பார்வை முதலில் அங்கே தொட்டுத்தான் பின் இவள் முகத்தில் நிலைக்கும். கூசிப் போய்விடுவாள் பெண். வீட்டுக்கு வந்து தாயை கட்டிக் கொண்டு அழுவாள்.

“எனக்கு வேணாம்ம்மா இது! எல்லாம் முறைச்சு முறைச்சுப் பார்க்கறாங்க! எனக்குப் பிடிக்கல. போக சொல்லு இதை” என கதறுவாள். என்ன செய்ய முடியும் ரதியால். வசிக்கும் இடமும் ஆபத்தானது, ஆண் துணை இல்லாமல் இரு பிள்ளைகள். அதில் அழகாக மட்டும் இல்லாமல் அதி வேக வளர்ச்சியில் மொட்டு விட்டிருக்கும் மகள். எப்படி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வளர்க்கப் போகிறேனோ என கவலை அரித்துத் தின்றது அவரை. தனக்கு தெரிந்த அளவில் எட்டு வயது மகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுத் தர மட்டும்தான் முடிந்தது அவருக்கு. புரியாமல் விழித்த மகளை,

“அங்க யாரையும் தொடக் விடக்கூடாது. இல்லைனா சாமி கண்ண குத்திரும்” என மிரட்டி வைத்தார் அவர்.

அம்மா சாமி என சொல்லவும், சாமி படத்தின் முன் நின்று அழுவாள். அவராவது எதாவது செய்ய மாட்டாரா என எண்ணி.

“சாமி, இத சின்னதாக்கிக் குடு! தினமும் நூறு தடவை தோப்புக்கரணம் போடறேன்” என அவருக்கு வைத்த வேண்டுதலும் கிடப்பில் தான் போனது.

யாரிடம் கதறி என்ன செய்ய, ஹோர்மோன் சுரப்பது நிற்கவா போகிறது. போக போக இந்த மாதிரி பார்வைகளைப் பழகிக் கொண்டாள். சில நேரம் பார்வைகளைப் பொறுத்துப் போனாலும், பல நேரங்களில் எகிறிவிடுவாள். அப்படித்தான் வாங்கி கட்டி இருந்தான் குரு.

அவளிடம் பழகும் பெரும்பான்மையான ஆண்கள் அவளை ஒரு போகப் பொருளாகத்தான் பார்த்தார்கள். அந்த பரந்த நெஞ்சுக்குள்ளும் அழகான மனம் இருக்கிறது என பலருக்குப் புரிவதில்லை. இவள் லேசாக சிரித்துப் பேசினாலே, அவர்களின் மனதில் பலான எண்ணங்கள்தான் உதித்தது. அதனாலேயே ஆண்களிடம் ஒரு அளவோடுதான் பழகுவாள். தம்பி, அவளின் தோழன் காசிம்(மலாய் நண்பன்) இருவர் மட்டுமே அவள் உண்மையாய் பாசம் வைத்திருந்த இரு ஆண்கள். காசிம் தான் ரெக்ரூட்மெண்ட் செண்டரில் வேலை செய்கிறான். தந்தையை சரியாக இவளுக்கு நினைவு இல்லை. வீட்டில் இருந்த போட்டோவில் பார்த்து இவர் தான் தந்தை என்பது மனதில் பதிந்திருந்தது.

‘நான் அப்படி சத்தம், போட்டுருக்கக் கூடாதுதான்! அவரு முதல்ல கண்ண தானே பார்த்தாரு! மத்தவங்க மாதிரி எடுத்ததும் அங்க பார்க்கலையே! நம்ம மேக் அப்படி, எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்குது. அதுக்கு யார குத்தம் சொல்லி, கோபப்பட்டு என்ன ஆகப் போகுது. பார்க்க டீசண்டா தான் இருக்காரு. வேலைக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம். இப்ப இருக்கற பண நெருக்கடியில நமக்கும் வேற வழி இல்ல. ஒன்னும் சரி வரலனா இருக்கவே இருக்கு கிரெப். வேலையைத் தூக்கிப் போட்டுட்டு கார் ஓட்ட வந்துரலாம்’ முடிவெடுத்தாள் மிரு.

முடிவெடுத்தப் பின் என்ன தயக்கம்! போனை எடுத்து மடமடவென ஒரு ஈமேயிலைத் தயார் செய்தாள்.

‘தங்களிடம் வேலை செய்ய வாய்ப்பு வேண்டும். என்றைக்கு நேரடிபேட்டிக்கு வரலாம்?’ என கேட்டு அனுப்புனர் இடத்தில் மிருதுளா ஸ்ரீ என டைப் செய்தவள், என்னை ஞாபகம் இருக்குமா தெரியலையே என யோசித்து ‘என்னைப் பாரு என் கண்ணைப் பாரு கிரெப் ட்ரைவர்’ என முடித்திருந்தாள்.

அனுப்பும் முன், செத்தாலும் சாவேனே தவிர உன்னிடம் வேலைக்கு வர மாட்டேன் என சொன்ன வாசகத்தை நினைத்துக் கொண்டாள்.

“வாய விட்டுட்டியே மிரு! இனிமே வேலை கேட்டா நம்மள கேவலமா நினைக்க மாட்டான்?” வாய் விட்டேப் புலம்பினாள்.

‘சோத்த விட நமக்கு மானம் ரோசம் முக்கியம். இந்த வேலை இல்லனா வேற வேலை கிடைக்காமலா போயிரும்! ச்சில் பேபி’ என தன்னையே தேற்றிக் கொண்டு இமேயிலை அழிக்கப் போனாள்.

அப்பொழுது பார்த்து ஜோகிங் போனவருடன் வந்த நாய் ஒன்று இவள் அருகே ஓடி வந்தது. கலவரத்தில் போனை அழுத்திப் பிடித்தவள், நாய் தன் மேல் பாய்ந்து விடாதபடி இரு கையையும் தன் உடம்புக்கு முன்னே பாதுகாப்பாய் நீட்டினாள். அதற்குள் அதன் உரிமையாளர் சாரி கேட்டு அந்த நாயைப் இழுத்துக் கொண்டு போய் விட்டார்.

“அம்மா! ஜஸ்டு மிஸ், கால் கிலோ கறிய உருவிருக்கும் இந்த நாய்” என முனகியவள் போனைப் பார்த்தாள். கை அழுத்தத்தில் இமேயில் செண்ட் ஆகி இருந்தது.

“அலாமாக், மம்போஸ்!” (போச்சுடா தொலைஞ்சேன்ன்னு வச்சிக்கலாம். மலாய் வார்த்தைகளுக்கு கரேக்டான ட்ராண்ஸ்லேஷன் கொடுப்பது கொஞ்சம் கஸ்டம் எனக்கு. இங்கே எல்லோரும் எல்லா மொழியையும் கலந்தடிப்பதால், இந்த கதையில் மலாய் வார்த்தைகள் ஒன்றிரண்டு வரும்.)

 

தவிப்பான்…

error: Content is protected !!