SST— epi 4

SST— epi 4

அத்தியாயம் 4

மலேசியாவின் தேசிய பானம் தே தாரேக் ஆகும். மலாயில் தாரேக் என்றால் இழுப்பது எனப் பொருள்படும். தேநீரை ஒரு கிளாசில் இருந்து இன்னொரு கிளாசுக்கு மூன்று அடி இடைவெளிக்கு இழுத்து ஆற்றி பறிமாறுவார்கள். காலை மாலை என எல்லா இன மக்களும் இதை விரும்பி அருந்துவார்கள். மாமாக் தே தாரேக் சத்து (இந்திய முஸ்லிம் நண்பர்களை மாமாக் என அழைப்பார்கள் இங்கே! மாமாக் தே தாரேக் ஒன்று என்பதுதான் இதன் அர்த்தம்) எனும் குரலை பல கடைகளில் நாம் தினம்தோறும் கேட்கலாம் (தே தாரெக்கு நானும் அடிமை)

 

‘இவன் என்ன பெரிய இவன்னா? தெரியாம இமேயில் அனுப்பிட்டேன்! நான் வேலை கேட்டு வரது பிடிக்கலனா, சாரி நாட் இன்ட்ரெஸ்டெட்னு ரிப்ளை போட வேண்டியது தானே! ஒரு வாரம் ஆச்சு, இன்னும் ஒரு பதிலையும் காணோம்! சரியான மண்டை கிறுக்குப் புடிச்சவன் போல. பேர மட்டும் பாரு குருவாம் குரு. பேசாம பருன்னு வச்சிருக்கலாம். சேச்சே பருலாம் இல்ல அவனுக்கு. பிறந்த குழந்தை ஸ்கின் மாதிரி பளபளன்னுதான் இருந்தான்’ என குருவைத் திட்டிக் கொண்டே அந்த மேகா மால் ஷாப்பிங் காம்ப்ளேக்சில் காரைப் பார்க் செய்தாள் மிரு.

காசிம் சொல்லியிருந்த துரித உணவு கடையை நோக்கி நடையை எட்டிப் போட்டாள் மிரு. சனிக்கிழமையாதலால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

‘இவங்களுக்கு மட்டும் காசு எங்கிருந்துதான் வருதுனே தெரியலப்பா! ஜாலியா வந்து ஷாப்பிங் பண்ணிட்டு, விதம் விதமா சாப்பிட்டுட்டு, படம் பார்த்துட்டும் போறாங்க! நமக்கு மட்டும் மாசக் கடைசி வரைக்கும் தகிங்கணத்தோம் போடாம ஓட்டவே நாக்கு தள்ளுது’ என எண்ணியபடியே சுற்றித் திரிந்த மக்களை ஏக்கத்துடன் பார்த்தவாறு நடந்தாள் அவள்.

இன்று பார்ட் டைம் வேலைக்கு கம்மிட் ஆகியிருந்தாள் நம் மிரு. மாஸ்கோட் உடை போட்டு பிள்ளைகளுடன் போட்டோ எடுப்பதுடன், ஷாப்பிங் செய்ய வந்த மக்களை சாப்பிட அழைப்பதும் அவள் பணியாகும். ஐந்து மணி நேர வேலை முடிந்தவுடனே கை மேல் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். அந்த பணத்தைத்தான் அம்மாவுக்கு மருந்து வாங்கவும், கணேக்கு புத்தகம் வாங்கவும் உபயோகிக்கத் திட்டமிட்டிருந்தாள் மிரு. கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் ஒரு வெள்ளி கட்டினால் போதும், செக் அப்புடன் மருந்தும் கிடைக்கும். ஆனால் ப்ரைவெட்டிலும் காட்டி வலி நிவாரணி மருந்தை வாங்கி வைத்துக் கொள்வாள் மிரு. அந்த மருந்து போட்டால்தான் முகச்சுளிப்பு இல்லாமல் ராத்திரி நிம்மதியாக தூங்குவார் ரதி.

கடையை அடைந்ததும் மேனேஜரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், காசிமின் கன்பேர்மேஷன் மேசேஜை அவரிடம் காட்டினாள். அவரும் கரடி காஸ்டியூமை அவளிடம் கொடுத்து அணிந்து வர சொன்னார். அதைத் தூக்கிக் கொண்டு ரெஸ்ட் ரூமை நாடிப் போனாள் மிரு. முழுதாக மூடி இருந்த அந்த மாஸ்கோட் காஸ்டியூமில் கண் பகுதியில் மட்டும் லேசாக ஓட்டை வைத்திருந்தார்கள். நேராக பார்க்க முடியுமே தவிர இடம் வலம் பார்ப்பது கஸ்டம். அதை அணிந்தால் வேர்த்து வழியும் என ஏற்கனவே அறிந்திருந்தவள் மெல்லிய டீசர்ட் தான் அணிந்திருந்தாள். ஜீன்ஸ் கூட அடிக்கடி துவைத்து சாயம் போய் மொரமொரப்பு இல்லாமல் மிருதுவாக இருந்தது. பாக்கேட்டில் கார் சாவி, கொஞ்சமாக பணம், செல் போன் மட்டும் வைத்திருந்தாள். தன் உடைக்கு மேலாகவே காஸ்டியூமை அணிந்துக் கொண்டவள், மெல்ல ஆடி அசைந்து நடந்தாள்.

ஆடி அசைந்து வரும் புசு புசு கரடியைப் பார்த்ததும் குழந்தைகளுக்கு ஒரே குதூகலம். பிள்ளை மனம் கொண்ட பெரியவர்களுக்கும் சந்தோஷம் தான். கடை முன்னே நின்றவள், லேசாக ஆடியபடியே கை ஆட்டி மக்களை கடைக்குள் வர சொல்லி சைகையால் அழைத்தாள். பிள்ளைகள் அவள் கையைப் பிடித்து இழுத்தார்கள். பெற்றவர்களோ பிள்ளைகளை அவள் அருகில் நிறுத்தி வித விதமாக போட்டோ எடுத்தார்கள். இவளும் பீஸ் காட்டி, குனிந்து பிள்ளைகளுக்கு ஈடாக அமர்ந்து வித விதமாக போஸ் கொடுத்தாள்.

நல்ல பிள்ளைகள் பத்து இருந்தாள், குறும்புக்குப் பெயர் போன நான்கு பிள்ளைகளாவது இருப்பார்களே! அந்த வால் இல்லாத குழந்தைகள் அவளை அங்கிங்கு கிள்ளி  வைத்தார்கள். ஓடி வந்து அடித்து விளையாடினார்கள். அவர்கள் தள்ளிய வேகத்துக்கு ஒரு தடவை கீழே கூட விழுந்து வைத்தாள் மிரு. அதைக் கூட விளையாட்டாக எண்ணி கைகொட்டி சிரித்து மகிழ்ந்தார்கள் வாண்டுகள். இவளுக்கு வலியில் கண்ணீர் வந்தது. காஸ்டியூம் கண்ணீரை மறைக்க, கையை ஆட்டி ஆட்டி விளையாட்டு காட்டினாள் மிரு. உள்ளே வேர்த்து வழிந்து தொப்பலாக நனைந்திருந்தாள்.

இடுப்பிலும் முதுகிலும் வலி பின்னி எடுத்தது. நின்றபடியே இருப்பது கால் வேறு வலித்தது. நேரம் ஆக ஆக அரிக்க வேறு செய்தது. ஐந்து மணி நேர நரக வேதனை முடிந்து, மாஸ்கோட்டை கழற்றினாள் மிரு. ரெஸ்ட் ரூமில் முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவியவள், வியர்வையில் பிசுபிசுத்திருந்த கழுத்தையும் கழுவினாள். காரில் மாற்றுடை வைத்திருந்தாள். லேசாக உடம்பு கழுவி மாற்றிக் கொள்ளலாம் தான். ஆனால் பார்க்கிங் வரை நடக்க முடியாது என தோன்றவும், நனைந்த டீசர்டும் அது காட்டும் மேனி வடிவையும் பற்றி கவலைப்படவில்லை அவள்.

‘போய் தொலையட்டும்! டீசர்ட் நனையாம இருந்தா மட்டும் பார்க்காமலா போயிருவானுங்க!’ என நினைத்தவள், அப்பொழுதும் மனது கேட்காமல் கை கழுவி காய வைக்கும் மிசின் அருகே போய் நின்றாள். யாராவது பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தவள், கையைக் காய வைப்பது போல நன்றாக குனிந்து டீ சர்டையும் அதன் உள் நுழைத்தாள். ரெஸ்ட் ரூம் உள்ளே ஆள் வரும் அரவம் கேட்கவும், வடிவேலு ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டு ஒன்றுமே இல்லாதது போல பாவ முகத்தைக் காட்டி விசில் அடித்துக் கொண்டே நழுவி விடுவது போல இவளும் வெளியே நடையைக் கட்டினாள்.

நடந்துக் கொண்டே தானாகவே இடுப்பைப் பிடித்து விட்டுக் கொண்டவள், வேடிக்கைப் பார்த்தவாறே வந்தாள். அந்த துரித உணவு கடையில் காஸ்டியூமைத் திருப்பிக் கொடுத்தவள், பணத்தை வாங்கிக் கொண்டாள். அவளது சேவைக்கு ஃப்ரீயாக உணவு தந்தார்கள். அதை அப்படியே தம்பிக்கு பேக் பண்ணிக் கொண்டவள், நடக்க முடியாமல் மெல்ல அடி வைத்து நடந்தாள்.

இந்த மாதிரி மால்களில் இருக்கும் ஃபூட் கோர்ட்டை தேடி சென்றவள், அக்கடாவென அமர்ந்து விட்டாள். பத்து நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட மிரு, மெல்ல எழுந்து தே தாரேக் ஒன்றும், மீ கோரேங்(நூடுஸ்ல்) ஒன்றும் ஆர்டர் செய்து வாங்கி வந்து அமர்ந்தாள். உறைப்பாக இருந்த மீ கோரேங்கை சுவைத்து சாப்பிட்டாள் அவள். உறைப்புக்கு, சூடான பானம் வாயில் இறங்கவும் சொர்க்க சுகமாக இருந்தது அவளுக்கு. கண்ணை மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள் மிரு. வாழ்க்கையில் கஸ்டங்களை மட்டுமே அனுபவித்தாலும், சின்ன சின்ன விஷயங்களில் சுகத்தைத் தேடிக் கொள்பவள் இவள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து பட்ஜெட்டுக்குள் வாழ வேண்டும் என்பது இவளின் கொள்கை.

சாப்பிட்டு முடிக்கவும் மேசேஜ் வரவும் சரியாக இருந்தது. காசிம் தான் மேசேஜ் போட்டிருந்தான்.

“முடிஞ்சதா?”

“யெஸ்!”

“கிளம்பிட்டியா?”

“தோ, கிளம்பப் போறேன்! சாப்பட வந்தேன். நீ என்ன செய்யற?”

“தொழுகைக்குப் போகனும். அதுக்குள்ள எல்லாம் ஓகேவான்னு கேட்கதான் மேசேஜ் போட்டேன். பத்திரமா போ. சீக்கிரம் கண்டிப்பா உனக்கு நல்ல வேலையா வாங்கிக் குடுக்கறேன் மிரு. பாய்”

“பாய்டா”

போனை மூடி வைக்கும் முன் இந்த ஒரு வாரமாக செய்வது போல ஈமெயிலை செக் செய்தாள். புதியதாக ஒரு ஈமேயில் வந்திருந்தது. அவசரமாக திறந்துப் பார்த்தாள் மிரு. குருவின் நிறுவனத்தில் இருந்து தான் வந்திருந்தது. திங்கள் அன்று நேர்முகத் தேர்வுக்கு காலை பத்து மணிக்கு வரும்படி எச்.ஆர் டிபார்ட்மெண்டில் இருந்த மோனிக்காவிடம் இருந்து அந்த ஈமெயில் வந்திருந்தது. வருவதாக இருந்தால் அக்செப்ட் பட்டனை அமுக்கவும், இல்லையென்றால் டிக்ளைன் பட்டனை அமுக்கவும் என சொல்லியிருந்தாள் அந்த மோனிக்கா.

‘எதை அமுக்கலாம்? அக்செப்ட் ஆர் டிக்லைன்? ரோஷமா? பணமா? அம்மா ஹெல்த்தா? என் கெத்தா? தம்பி படிப்பா? என் ஈகோவா? எது, எது, எது?’ சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு அம்மாவும் தம்பியும் ஜெயிக்க அக்சேப்ட் எனும் பட்டனை அமுக்கினாள் மிரு.

இவள் பதில் வந்ததும், அடுத்த கணமே அந்த ஈமேயில் குருவுக்கு பர்வர்ட் செய்யப் பட்டது மோனிக்காவால். சனிக்கிழமை ஓய்வில் இருந்தவளுக்கு மேசேஜ் செய்து ஈமெயில் ஐடி கொடுத்து இண்டெர்வியூ அரேஞ் செய்ய சொன்னவன், பதில் வந்தால் உடனுக்குடன் தெரிவிக்க சொல்லி பணித்திருந்தான்.

மிருவுக்கு கொடுத்த கார்ட் அவனின் பெர்சனல் கார்ட் ஆகும். அவள் அனுப்பிய ஈமெயில் நேராக இவனுக்குத்தான் வந்தது. அவள் மேல் மிகுந்த கோபத்தில் இருந்தவன் மிரு-ஃபோர்-யூ எனும் ஜீமெயில் அக்கவுண்டிலிருந்து ஈமேயில் வரவும் அவள்தான் அது என புரிந்துக் கொண்டான்.

செத்தாலும் உன்னிடம் வேலைக்கு வரமாட்டேன் என்றவள் இப்பொழுது வேலை வேண்டும் எனும் தலைப்பில் மெயில் செய்திருந்தது இவனுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது.

‘இப்போ ஈமேயில் அனுப்பனது அவளோட ஆவியோ!’ என கிண்டலாக நினைத்தான் குரு.

அந்த ஈமெயிலை திறந்து கூட பார்க்காமல் கிடப்பில் போட்டவன் தன் சொந்த வேலையில் மூழ்கிப் போனான்.

‘அவ்வளவு பேசுனா, கொஞ்ச நாளைக்கு வேலைக்கு கூப்புடுவாங்களா இல்லையான்னு தவிக்கட்டும் அந்த ஜில்பா(ஜில்+பிப்பா)’ என நினைப்பவன் திறக்காததால் போல்ட்டாக இருக்கும் அவளது ஈமெயிலில் அடிக்கடி பார்வையை நிலைக்க விடுவான். கைத்தொட்டு தட்டி தட்டிப் பூவை எழுப்பு எனும் பாடல் வரிகளுக்கேற்ப அவனின் விரல்கள் மவுசில் விளையாடி அந்த மெயிலை கொஞ்சி விட்டு வரும். ஆனால் மனதை அடக்கி பூவை அனுப்பிய பூமடலை இவன் தட்டி திறக்கவே மாட்டேன் என சத்தியாகிரகம் செய்தான்.

அப்படியே நாட்களைக் கடத்தியவன், வேறு ஏதும் வேலை கிடைத்திருக்குமோ அவளுக்கு எனும் திடீர் எண்ணம் தோன்ற அவசரமாக மெயிலை திறந்துப் படித்தான். படித்தவனுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

‘சரியான அராத்து! என்னைப் பாரு என் கண்ணைப் பாருன்னு பின்குறிப்பு போட்டு வச்சிருக்கா! சாண்ஸ்லெஸ்!’ சிரிப்புடன் எச்.ஆர் மேனேஜருக்கு ஈமேயில் அனுப்பி மிருவை நேர்முகப் பேட்டிக்கு அழைக்க சொன்னான். பதில் வந்தால் உடனடியாக அதை தனக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டான்.

‘என்ன சொன்ன? கபோதியா? வாடி ஜில்பா, இனி உன்னை எங்க வைக்கனுமோ அங்க வைக்கறேன்!’ சிரிப்புடன் சாப்பிடக் கிளம்பி போனான் குரு.

திங்கள் காலை, இடியுடன் கூடிய மழையோடு விடிந்தது. இனி உன் வாழ்க்கையில் இடி இடிக்கும் மின்னல் மின்னும் என இயற்கை மிருவைப் பார்த்து சிம்பாளிக்காக சொன்னதோ என்னவோ! துரிதமாக கிளம்பியவள், அம்மா கலக்கிக் கொடுத்த டீயில் நான்கு ஹப் சேங்(இங்கே பிரபலமான பிஸ்கட் இது) பிஸ்கட்டை அமுக்கி சாப்பிட்டாள். பிஸ்கட் தொட்டதால் லேசாக எண்ணெய் மிதந்த டீயை ஒரே வாயில் குடித்தவள், கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டாள்.

“மிரும்மா”

“என்னம்மா?”

“ஷால் மறந்துட்ட பாரு”

“தேங்க்ஸ்மா”

நேர்முகத் தேர்வுக்காக முழுக்கை வைத்த பிங்க் பிளவுஸ் அணிந்து கருப்பு நிற பேண்ட் போட்டிருந்தாள். குட்டை முடியை அழகாக வாரி, முன்னே சுருண்டு விழுந்த முடியை பின் வைத்து அடக்கி, மிதமான ஒப்பனையுடன் தயாராகி இருந்தாள். ஷாலை எடுத்து கழுத்தை சுற்றி முன்னே வரும் படி போட்டுக் கொண்டாள்.

“அம்மா, முன்னுக்கு அசிங்கமா தெரியுதாமா?”

“இல்லம்மா! ஷால் மறைச்சிருச்சு. அதைப்பத்திக் கவலைப்படாம இண்டெர்வியுவ நல்லா செஞ்சுட்டு வா” என மகளை வாழ்த்தி அனுப்பினார்.

கார் எடுத்துப் போக யோசனையாக இருந்தது மிருவுக்கு. அவன் அலுவலகம் இருந்த பில்டிங் நகரின் மத்தியில் இருந்தது. அங்கே எல்லாம் பார்க்கிங் போட்டால், சொத்தையேப் பிடிங்கி விடுவார்கள். மோனோரயிலில் போய் விடலாம் என நேற்றே முடிவெடுத்திருந்தாள். குடையைப் பிடித்துக் கொண்டே ரயில் ஸ்டேசன் போய், கூட்டத்தோடு முண்டி அடித்து ஏறி 9.45க்கு எல்லாம் அவனின் அலுவலகத்தை அடைந்திருந்தாள். பேக்கில் வைத்திருந்த ஃபைலை எடுத்து மறுபடியும் செக் செய்தாள். செர்டிபிகெட்டுக்கள், ரெசியூம் எல்லாம் பக்காவாக இருந்தன. கீழே இருந்த ரிசப்சனில் ட்ரைவிங் லைசென்ஸ் கொடுத்து விசிட்டர் பாஸ் வாங்கியவள், லிப்டில் ஏறி பதினைந்தாம் நம்பரை அழுத்தினாள்.

இருதயம் படபடவென அடித்துக் கொண்டது.

‘வேலைக் கிடைக்குமா? இல்ல திட்டிட்டேன்னு, கூப்டு வச்சு அவமானப்படுத்த வர வச்சானா தெரியலையே! சரி விடு. வந்தா வேலை, போனா ஹேர்! ச்சில் பேபி’

சிரித்த முகத்துடன் ஆபிசுக்குள் நுழைந்தவளை தனது ரூமில் இருந்து புன்னகையுடன் கவனித்தான் குரு. சில நிமிடங்களே காரில் அவளைப் பார்த்திருந்தான், அதுவும் அப்பொழுது அவள் அமர்ந்து தான் இருந்தாள். நேரில் பார்க்க உயரமாகத் தெரிந்தாள் மிரு. முழுவதும் மூடி இருந்தாலும் அவள் நடந்து வரும் போது, ஏற்ற இறக்கங்களும் வளைவு சுழிவுகளும் பார்ப்பவர்களின் கண்களுக்குத் தப்பாமல் போகாது. குருவும் கண் கொட்டாமல் அவளைத் தான் பார்த்திருந்தான்.

‘மிருதுவான மிருதுளாஸ்ரீ’

“மிருது” வாய் திறந்து சொல்லிப் பார்த்தான். சொன்னவனின் வாய் மட்டுமல்ல மெய் கூட மிருதுவாகிப் போனது.

 

(தவிப்பான்)

error: Content is protected !!