எனைப் படைத்த ஈசனுக்கும், எழுத்தறிவித்த குருவுக்கும், எனை ஈன்ற தாய்-தந்தைக்கும், எனது அன்பு தோழமைகளுக்கும், சரியா யோசித்து, வாசிக்கும் நாவல் பிரியர்களுக்கும் எனது முதற்கண் மகிழ்வான வணக்கம்.
சரியா யோசி…
எனது புதிய படைப்பிற்கு, தங்களின் மேலான ஆதரவையும் அன்பான விமர்சனங்களையும் எதிர்நோக்கி, யோசித்தபடியே ஆரம்பிக்கின்றேன் இந்த நாவலை.
கதையின் தலைப்பைப் பற்றி ரொம்ப யோசிக்க வேண்டாம்!
அது படிக்க ஆரம்பித்தவுடனேயே புரிந்துவிடும் தலைப்பு. இது வழமையான பொழுதுபோக்கு நாவல்!
கதையைப் பற்றி இப்போதே கூறிவிட்டால், சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இத்துடன் என் முன்னுரையை முடித்துக்கொண்டு கதைக்குள் செல்கிறேன்.
இதுவரை நான் எழுதிய நாவல்களுக்கு தாங்கள் அளித்த பேராதரவையும், கருத்துகளையும், விருப்புகளையும்போல, இந்நாவலுக்கும் தங்களது மேலான ஒத்துழைப்பை நல்கி, அன்போடு ஆரம்பிக்கிறேன்.
vvv
சரி – 1
அவர்களின் வருகைக்காக அந்த மூவரும் காத்திருந்தார்கள், சாளரத்தையே பார்த்திருந்தார்கள். அலைபேசி ஒலித்தது.
அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள் ரிது.
எதிர்முனையில், “ஹாய் ரிது…!”
“ஹாய் சித்து…!”
“நாங்க வந்துட்டோம். நீங்க சொன்ன நம்ம ஆக்சிடன்ட் ஜோனத் தொட்டாச்சு. அப்பறம் எந்தப் பக்கம், எவ்வளவு தூரம்?”
“ரொம்ப தூரம் எல்லாம் ஒன்னுமில்லை அப்படியே ஒரு ரைட் எடுத்து பாருங்க! எதிரில் ஒரு ப்ளூக்கலர் பில்டிங் தெரியும். அதுதான் நம்ம இடம்!”
“என்னது ப்ளூக்கலர் பில்டிங்கா!”
எதிர் முனையில் ஆயிரம் கேள்விகளுடன் அவன் முகம் அவர்களுக்கு தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள். அவர்கள் இருந்தது அந்த ஏரியாவின் பெரும்புள்ளி ராஜசிம்மனின் மாளிகைதான் அது!
ரைட் எடுத்து பார்த்தால் ஒரு தெருவையே தனக்கென்றே, தன் மாளிகைக்கு வந்து போவதற்கென்றே சிறப்பாக அமைத்து வீட்டை (இல்லை ஒரு அரண்மனையையே) கட்டி வைத்திருந்தார் ராஜசிம்மன்.
சென்னை வேளச்சேரிக்கு அருகில் மாநகரைவிட்டு சற்று ஒதுங்கிய பகுதியில் இருக்கும் அந்த மாளிகைக்கு அவர்கள் ஏற்கனவே வந்து போயிருக்கிறார்கள். அதனால்தான் அந்த அதிர்ச்சி.
அருகில் இருந்த மாளிகையை அடைந்து வண்டியை விட்டு இறங்கிக்கொண்டே
“டேய் என்னடா இங்க இருக்குதுங்க?”, என்றான் சித்து என்ற சித்தார்த்.
“இந்த வீட்ல இதுக எப்படி? இது ஒருவேள ரிதுவோட வீடோ? எனக்கென்னமோ அப்படித்தான் தோணுது!” என்றான் யோகிதாஸ், ராயல் என்ஃபீல்டை ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே!
ஆம், அவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்ட இடமான ஆக்சிடன்ட் ஜோன் என்று சித்து குறிப்பிட்ட அந்த இடம், இந்த மாளிகைக்கு யோகிதாஸின் வேலை நிமித்தமாக வந்து செல்லும்போதுதான் அந்த விபத்து அன்று நிகழ்ந்தது…!
vvv
அன்று இவர்கள் வளைவைத் தொடும் சற்று தூரத்தில்தான் அந்த காஸ்ட்லி கார் வந்துகொண்டிருந்தது. காரில் சம்யுக்தா, ரிதுவந்திகா மற்றும் யாஷிகா.
ரிது, “ஏய் சவுண்ட கொஞ்சம் கம்மி பண்ணுடீ! அதுதான் வீடு வந்துருச்சுல்ல!”
“நீ மொதல்ல ஸ்பீட கொஞ்சம் கம்மி பண்ணு!”, என்று யாஷிகா கூறிக்கொண்டிருக்கும்போதே காரில் ஒலித்த இசையின் அதிக அதிர் ஒலியால் வெளியில் இருந்து ஒலித்த டூவீலர் ஹாரன் ஒலியை கேட்காமல் வளைவில் திரும்பும்போது டமால்…!!!
வெளியே அந்த இரண்டு இளைஞர்கள்…!!!
‘ஐயோ என்னாயிற்றோ!’ என்று மூவரும் பதறி காரைவிட்டு கீழே இறங்கினர்.
வண்டியை ஓட்டி வந்த யோகி சற்று தடுமாறி வண்டியை விட்டுவிட்டு காரின் பேனட்டில் மோதியெழுந்தான். பின்னாலிருந்த சித்தார்த் கைபேசியில் கவனத்தை சிதறவிட்ட காரணத்தால் இந்த திடீர் நிகழ்வுக்குள் திரும்புவதற்குள் வண்டியுடன் அவனும் கீழே சாய்ந்தான்.
கால் மட்டும் வண்டிக்கு கீழே மாட்டிக்கொண்டதால் அவனால் வேகமாக எழ முடியவில்லை. வண்டியின் பாரம் அவன் காலை பதம் பார்த்துக்கொண்டிருந்தது.
காரின் மீது மோதி நிலை தடுமாறினாலும் வண்டியைவிட்டு துள்ளிக் குதித்து நின்றான் யோகி. மறுநிமிடமே பின்னால் அமர்ந்திருந்த ஆருயிர் நண்பனை பார்த்தான். அவன் நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கவே, சுதாரித்து வண்டியை தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான். ஆனால் சித்து எழுவதற்கு சற்று சிரமப்பட்டதால் அவனுக்கும் கைகொடுத்து தூக்கிவிட்டான்.
“சாரிடா மச்சி! நா பாத்துத்தான் வந்தேன். நல்ல வேளை ஓவர் ஸ்பீடு இல்லாததால…!” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே
“சாரி…! என்னாச்சு?” என்று கேள்வியோடு வந்தாள் ரிது.
கோபம் வந்தாலும் சாரி என்ற வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து சினத்தை அடக்கி சித்துவை தாங்கிப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்தான் யோகி.
“ஒன்னுமில்ல! கொஞ்சம் பாத்து வரக்கூடாதா!” என்றான் சத்தமாக.
“சாரி சார்! வளைவுன்றதுனால பாக்க முடியல! அதான்…!” என்று இழுத்தாள் ரிது.
“பாத்துன்னா அந்த பாத்தில்ல. கவனமா வரக்கூடாதான்னு கேட்டேன்”, என்றான் யோகி.
“நானும் அதத்தான் சொன்னேன். வளைவாக அதுவும் இவ்வளவு உயரமான சுவருக்குப் பின்னால் ஏதாவது வண்டி வரும் என்ற கவனம் இல்லாமல் வந்துட்டோம்!” லேசாக சமாளித்துப் பார்த்தாள் ரிது.
“வண்டிக்கு ஏதாவது ப்ராபளமா சார்!” என்று யாஷிகா முன் வந்தாள்.
அதுவரை இடது காலை ஊன்றவே முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சித்து கோபத்துடன்
“வண்டிக்கு மட்டுந்தான் ப்ராப்ளமா? இங்க காலே போச்சு!” என்று கத்தினான்.
அப்பொழுதுதான் அவன் சற்று காலை தாங்குவதைப் பார்த்தார்கள் மூவரும்.
“காலில் அடிபட்ருச்சு போல!”, என்று அவர்களுக்குள் கேட்குமாறு மெதுவான குரலில் சொன்னாள் சம்யுக்தா.
உடனே ரிது, “பக்கத்தில் ஏதாவது கிளினிக்ல என்னாச்சுன்னு பாக்கலமா?”, என்றாள்.
“என்னாச்சுடா ரொம்ப வலிக்குதா?”, என்றான் யோகி.
“ஆமா மச்சி. வண்டி வெயிட்டெல்லாம் காலில் சாஞ்சு, என்னாச்சுன்னு தெரியல!”, என்றான் சித்து வலியுடன்.
“பக்கத்துல ஏதாவது கிளினிக் பாக்கலாமாடா?”, என்றான் யோகி.
“ம்…”, என்று ஓரெழுத்தில் பதில் வந்தது.
பெண்கள் பக்கம் திரும்பிய யோகி, “நாங்க இந்த ஏரியாவுக்கு புதுசு. இங்க பக்கத்துல ஏதாவது கிளினிக் இருக்கா?”, என்று பொதுவாக கேட்டான்.
“வாங்க நாங்க கூட்டிட்டுப் போறோம்!”, என்று ரிது வேகமாக முன்வந்தாள்.
கூறியவள் உடனே காருக்கு நகன்றாள். பின்னாலேயே மற்ற இரு பெண்களும் காரில் ஏறிவிட சரேளென காரை ரிவர்ஸ் எடுத்து மெயின் ரோட்டுக்கு திருப்பினாள்.
“என்னடி ஏதாவது காசக் குடுத்துட்டு கௌம்பலாமே?”, என்றாள் யாஷிகா.
“எனக்கும் அப்படித்தான் தோனுது!”, என்றாள் சம்யுக்தா.
“அவங்க சொன்னதை கவனிச்சியா? ஊருக்கு புதுசு மாதிரித் தெரியுது. அதுவும் நாம தப்புப் பண்ணிட்டு நடுரோட்லயே விட்டுட்டு போக மனசு வரலடி. அதான் நம்ம பக்கத்துல இருக்குற ரொம்ப ஏமாத்தாத ஒரு கிளினிக்ல அட்மிட் பண்ணிட்டுப் போயிருவோமே ப்ளீஸ்…”, என்றாள் ரிது.
மற்ற இருவரும் அதற்குமேல் ஏதும் பேசவில்லை. ஏனென்றால் ரிது முடிவெடுத்தால் எடுத்ததுதான். அது நல்லதாகத்தான், நல்லதுக்காகத்தான் இதுவரை இருந்திருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும் என்று அமைதி காத்தனர். கார் வேகமெடுத்தது.
யோகி சித்துவை வண்டியில் அமரவைத்து அந்த காரை பின் தொடர்ந்தான்.
மெயின் ரோடு வந்தவுடன் சிறிது தூரத்திலேயே ஒரு தனியார் மருத்துவமனை படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததற்குள் காரை நுழைத்தாள்.
காரை பார்க் செய்துவிட்டு யோகி, சித்துவுக்காக வரவேற்பில் காத்திருந்தார்கள் மூவரும். யோகி வண்டியை பார்க் செய்துவிட்டு சித்துவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு மிகவும் மெதுவாகத்தான் வந்தான். சித்து யோகியின் ஆதரவில் கிட்டத்தட்ட ஒரு காலில்தான் வந்தான்.
“பேர், அட்ரஸ் சொல்லுங்க சார்”, என்றாள் ரிசப்சனிஸ்ட்.
“சித்தார்த், 10, படித்தொரை, ஆரப்பாளையம் மெயின் ரோடு, மதுரை” என்றான் யோகி.
“சொன்னேன்ல! பாத்தியா பசங்க வெளியூருதான்!” என்றாள் ரிது மெல்லிய குரலில்.
“கம்ப்ளைன்ட் என்ன சார்?”, ரிசப்சன்
“காலில் லேசான வலி. வண்டியில் இருந்து விழுந்துட்டான்!”, யோகி.
‘ரொம்ப வலிக்குதுடா!’ என்று சித்து மைன்ட்வாய்சில் பேசினான்.
“விழுந்துட்டார்னா எப்படி ஆக்சிடென்ட்டா?”, என்றவாரே சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மூவரையும் கண்களாலேயே அர்த்தத்துடன் பார்த்தாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை மேடம். ஆர்த்தோ இருந்தா கொஞ்சம் அப்பாய்ன்மென்ட் கொடுங்க. பார்த்துக்கிறோம்”, என்றான் யோகி.
“இல்ல சார்! ஆக்ஸிடென்ட்னா சில ஃபார்மலிட்டி இருக்கு. அப்பறம் பெரிய டாக்டர் எங்களை திட்டுவார். ஏன்னா அப்பாய்ன்மென்ட் பண்ணும்போதே சரியாக செய்யனும்பார். அதான் கேக்கறேன்”, என்றாள் விடாப்பிடியாக.
உடனே ரிது சற்று முன் வந்து “பெரிய டாக்டர் யாரு மேடம்?”, என்றாள்.
“ஏன் மேடம் கேக்குறீங்க?”, என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.
இவர்களின் பேச்சுவார்த்தையின்போதே சற்று தொலைவில் இருந்த அறையில் இருந்து சற்று வயதான அந்த மருத்துவர் தன் உதவியாளரிடம் ஏதோ பேசிக்கொண்டே வெளியேறிக் கொண்டிருந்தார். அதை கவனித்த யாஷிகா, “ரிது… அங்கிள்” என்று அழைத்து அந்த மருத்துவரை நோக்கி ரிதுவிடம் கையைக் காட்டினாள்.
இவள் போட்ட சத்தம் சிறிதுதான் என்றாலும், அமைதியான அந்த கிளினிக்கின் சூழல் அந்த மருத்துவரை திரும்பிப்பார்க்க வைத்தது. அவரும் ரிதுவும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சார்தான் மேடம் பெரிய டாக்டர்!”, என்று அவசரப்பட்டாள் ரிசப்ஷனிஸ்ட்.
“ஹாய் ரிது…!”, என்றவாறே அருகில் வந்துவிட்டார் அந்த பெரிய டாக்டர்.
“ஹாய் அங்கிள்!”, என்றவாறே ரிதுவும் புன்னகைத்தாள்.
“என்னம்மா ஏதும் பிரச்சனையா?”, அருகில் நின்ற இரு இளைஞர்களையும் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தவாறே நேரடியாக ரிசப்ஷனிட்டை நோக்கி கேட்டார்.
“ஒன்னுமில்லை சார்! புதுசா இருந்ததால கொஞ்சம் விசாரிச்சேன்”, என்று பொதுவாக கூறினாள்.
“யாரு ரிதுவையா சொல்ற?”, என்றார்
“ஆமா சார்! இல்ல சார்…! இவங்க ரெண்டு பேரையும்…”, என்று சுதாரித்தாள் ரிசப்ஷனிட்.
“அதான பார்த்தேன், இங்க யார் வேணா புதுசா இருக்கலாம். ஆனா ரிது இங்கயே பிறந்தவமா!”, என்று ரிதுவுக்கும் அந்த கிளினிக்கிற்கும் உள்ள சம்பந்தத்தை படார் என உடைத்தார் டாக்டர் பிரம்மானந்தம்.
“ரிது வாம்மா! என்னோட ஓப்பிக்கு போயி பேசலாம்”, என்று தன்னறைக்கு நடக்கத் தொடங்கினார்.
யோகி, சித்துவை அங்கிருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்துவிட்டு ரிது தன் தோழிகளுடன் மருத்துவரை பின்தொடர்ந்தாள்.
“மச்சி என்னடா ரொம்ப வலிக்குதா?”, என்றான் யோகி.
“ஆமாடா, இருக்க இருக்க கூடுதுடா!”, சித்து.
“ஆள் பெரிய ஆளாத்தான் இருப்பா போல! சீக்கிரம் டாக்டரப் பாத்துரலாம்டா. ஏதாவது பெயின்கில்லர் எடுத்துக்கிட்டா சரியாயிரும்னு நெனக்கிறேன்”
“இல்ல மச்சி. சின்னதா ஏதோ ஃப்ராக்சர் மாதிரி தெரியுது!”
“ஓஹ்! அப்ப ஒரு எக்ஸ்ரே எடுத்து பாத்துரலாம்டா!”
“ஆமாடா, அதத்தான் டாக்டரும் சொல்லுவாறு பாரேன்!”
“சரி மச்சி பாப்போம்…! நா போய் பக்கத்துல குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரவா?”
“இல்லடா நீ பக்கத்துலயே இரு. அது போதும். இதுக வேற உடனே வந்துருங்கன்னு நெனக்கிறேன். அதுனால” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சம்யுக்தா வெளியே வந்தாள்.
“வாங்க ஆர்த்தோட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு”
‘இன்னும் எவ்வளவு தூரம் இந்த காலோட நொண்டியடிக்கறதுன்னு தெரியலையே’ என்று மனதுக்குள் எண்ணியவாறு “எங்க?” என்றான் சித்து.
“அதோ அந்த கடைசி ரூம்”, சம்யு.
‘அடப்பாவிகளா அத மட்டும் கடைசில வச்சிருக்கீகளேடா!’, சித்து.
யோகி, சித்து எழவும், நடக்கவும் தோள் கொடுத்து அந்த காரிடாரின் கடைசியில் இருந்த ஆர்த்தோவின் அறையை அடைந்தனர்.
“வாங்க மிஸ்டர். என்னாச்சு?”, என்றார் ஆர்த்தோ அனந்தராமன்.
உண்மை முழுவதும் உண்மையாகவே சொல்லிவிடலாமா அல்லது ஆக்சிடன்ட் இல்லை என்று ரிசப்ஷனில் ஆரம்பித்ததுபோல் ஆரம்பிக்கலாமா என்று தெரியாமல் சம்யுக்தாவை ஒருசேரப் பார்த்தனர் யோகியும், சித்துவும். பார்வையை புரிந்துகொண்ட சம்யுக்தா
“சொல்லுங்க, அங்கிள்கிட்ட (பெரிய டாக்டர்) எல்லாத்தையும் ரிது சொல்லிட்டா!”, என்றாள் ‘எல்லாத்தையும்’ என்பதில் அழுத்தம் கொடுத்து.
“வண்டியில் வரும்பொழுது சின்னதா ஒரு ஆக்ஸிடன்ட் டாக்டர். வண்டி சாஞ்சு கால்ல விழுந்துருச்சு”, சித்து
“சரி, அந்த பெட்ல போய் படுங்க!”, என்று ஆர்த்தோ அருகில் இருந்த சகல மருத்துவ வசதி பொருந்திய கட்டிலைக் காட்டினார்.
சித்துவை யோகி கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வைத்தான். ஆர்த்தோ அவனருகில் வந்து அவனது பேன்ட்டை சற்றே உயர்த்தி காலைப் பார்த்தார்.
அப்பொழுதுதான் யோகியும் காலைப் பார்த்தான் காலில் சைலன்சர் உரசி லேசாக வெந்திருந்தது. வண்டி எடுத்து சிறிது நேரத்திலேயே நிகழ்ந்ததாலும், சித்து சற்று சுதாரித்து காலை விலக்கியதாலும் சைலன்சரின் பாதிப்பு அதிகம் இல்லை. லேசான காயத்துடன் வண்டியின் அழுத்தத்தால் எலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
காலை அழுத்திப் பார்த்தார் ஆர்த்தோ. அழுத்தும் பொழுது சித்துவால் வலி தாங்க முடியவில்லை. சிறிது துடித்தான்.
“என்ன வண்டி?”, ஆர்த்தோ.
“என்ஃபீல்ட் 350 சிசி டாக்டர்”, சித்து.
ஆர்த்தோ நெற்றியை லேசாக தேய்த்துக்கொண்டார்.
“சரி, முதலில் ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க. அப்புறம்தான் பாதிப்பு எப்படி, எந்த அளவு இருக்குனு எதுவும் சொல்ல முடியும். மேலே இருக்கும் வூண்ட் ஆற ஒரு ஆயின்மென்ட் எழுதி தரேன். வாங்கிக்கங்க. மேல தண்ணி படாம கொஞ்ச நாள் பார்த்துக்கங்க!”
காயத்தில் பேண்ட் உரசினால் எரிவதால் ஏற்றிவிட்ட பேண்ட்டை இறக்காமலேயே யோகியின் துணையுடன் எக்ஸ்ரே எடுக்கக் கிளம்பினான் சித்து.
ஆர்த்தோ பார்க்கும் வரை சித்துவும் சரியாக காயத்தை பார்க்கவில்லைதான். அதனால் மிகவும் குழம்பிய நிலையில் எக்ஸ்ரே எடுத்துவிட்டு காரிடாரில் வந்துகொண்டிருந்தனர் மூவரும்.
அப்பொழுது பிரம்மானந்தத்தை பார்த்து விளக்கமாக பேசிவிட்டு எதிரில் வந்தாள் ரிது, யாஷிகாவுடன். வந்தவள் ஒரு சிறு குண்டைப் போட்டாள்.
“சித்து… சித்தார்த்தன உங்க பேர்… டாக்டர்ட பேசிட்டேன். இங்கயே இன் பேசண்ட்டா ரெண்டு நாளாவது இருக்கணும்னு டாக்டர் சொல்றார்”, என்றாள் ரிது.
“இன்னும் எக்ஸ்ரேவே வரல, அதுக்குள்ள எப்படி சொல்றார்?”, குழப்பத்துடன் யோகி கோபித்தான்.
“இல்ல, நீங்க எக்ஸ்ரே எடுத்தவுடனே டாக்டரோட மானிட்டரில் உங்களோட எக்ஸ்ரே வந்திருச்சு. அத பாத்துதான் அவர் சொன்னார். அவர் பார்க்கும்போது நான் அங்கதான் உங்களைப் பத்தி பேசிக்கிட்டிருந்தேன்”, ரிது அவசரமாக பதிலளித்தாள்.
“அட்மிட்லாம் ஆகமுடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கே…”, என்று தயக்கமும் பயமும் கலந்த குரலில் கூறினான் சித்து.
“மச்சி பாத்துக்கலாம்டா”, என்றான் யோகி.
“கைல எவ்வளவுடா இருக்கு?”, என்றான் சித்து மெதுவாக.
“பாத்துக்கலாம்டா!”, என்றான் யோகி நம்பிக்கையுடன்.
“செலவைப் பத்தி யோசிக்காதீங்க. உங்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டாங்க. நான் சொல்லிட்டேன். அங்கிள் அப்பாவோட ஃப்ரண்ட்தான்”, என்றாள் ரிது அமைதியாக பணக்காரத்தன பந்தா இல்லாமல்.
அப்பொழுதுதான் சித்துவுக்கும், யோகிக்கும் ஒன்று தோன்றியது. அதாவது அட்மிட் கார்ட் முதல் எக்ஸ்ரே வரை அவர்கள் எந்த பணமும் செலவிடவில்லை. சித்துவுக்கு தன்மானம் கொஞ்சம் தலைதூக்கியது.
“இல்ல, அதெல்லாம் வேண்டாம். நாங்க பாத்துக்கறோம்”, என்றான் பதற்றமாக.
“தப்பா எடுத்துக்காதீங்க. என்னால இப்படி ஆயிடுச்சுன்னு நானே கவலையில இருக்கேன். இதையும் நீங்க ஏத்துக்கலைனா எனக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா போயிரும், ப்ளீஸ்…”, என்றாள் ரிது சற்று கெஞ்சலாக.
“இவ அப்படித்தான் ரொம்ப ஃபீல் பண்ணுவா, ப்ளீஸ் ஏத்துக்கோங்க”, என்றாள் சம்யு.
ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதி காத்தனர்.
“சரி வாங்க ஆர்த்தோ டாக்டரை பாக்கலாம்”, என்றாள் சம்யு அமைதியை கலைத்து.
“பாத்துக்கலாம் மச்சி…”, என்று இப்போதும் சொன்னான் யோகி.
இருவரும் ஆர்த்தோவின் அறைக்குச் சென்றனர். பெண்கள் மூவரும் பின்தங்கினர்.
“காலில் லேசான ஃப்ராக்சர் ஏற்பட்டிருக்காம்டி. பாவம் என்ன வேலை செய்யிறாரோ…!”, என்றாள் ரிது.
“சரி, ரொம்ப ஃபீல் பண்ணாத! எல்லாம் சீக்கிரமா சரியாயிடும்”, என்று நம்பிக்கையூட்டினாள் யாஷிகா.
ஆர்த்தோவின் அறையில்…
“நீங்க சீக்கிரம் அட்மிட் ஆயிருங்க. நான் கட்டுப் போட்டுவிடுறேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. மத்தத அப்பறம் பாக்கலாம்”, என்றார் அனந்தராமன்.
“கொஞ்சம் ரெஸ்ட்னா எத்தனை நாள் டாக்டர்?”, என்று தயங்கினான் சித்து.
“இப்போது ஏதும் சொல்ல முடியாது ரெண்டுநாள் அப்சர்வேசன்ல இருந்தாதான் சொல்ல முடியும். அப்பறம் வீட்டுக்குப் போயிகூட ரெஸ்ட் எடுத்துக்கலாம்”, ஆர்த்தோ.
“ம். சரி டாக்டர்”, சித்து.
“எங்க இருக்கீங்க? என்ன வேலை பாக்குறீங்க?”, ஆர்த்தோ.
“சாஃப்ட்வேர் அட்மினா இருக்கேன். நுங்கம்பாக்கத்துல ரூம்ல தங்கியிருக்கேன். ஆனா வீடு மதுரை டாக்டர்”
சம்பிரதாயமாக கேட்ட ஆர்த்தோ அனந்தராமன் மற்ற சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து கிளினிக்கில் காலியாக இருந்த அறை எண் 120ல் சித்துவை அட்மிட் செய்தார்.
டாக்டர் அறையை விட்டு வெளியே வந்தவுடன், “நாங்க கௌம்பறோம்”, என்ற ரிதுவின் குரல் வந்த திசையைப் பார்த்தனர் இருவரும். அங்கு மூவரும் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
“காலைல வீட்டை விட்டு வந்தது. இருட்டாயிருச்சு! வீட்டுக்கு இன்னும் சொல்லல! தேடுவாங்க! நாங்க கிளம்பறோம்!”, என்றாள் சம்யு.
“ம்” என்ற ஒற்றை எழுத்தில் இருவரும் பதிலளித்து அவர்களை அனுப்பிவிட்டனர். வேறேதும் அவர்களிடம் கேட்க வேண்டும் பேச வேண்டும் என்று அப்போதைக்கு இரு பிரிவினருக்கும் தோன்றவில்லை.
vvv
அறை எண் 120ல்
“மச்சி, அம்மாட்ட போன் பண்ணி சொல்லிறலாமா?” சித்து
“சொல்லலாம்டா… ஆனா அவுங்க உடனே புறப்பட்டு வந்துருவாங்க. உங்கப்பா வேற ஏதாவது கோபப்படுவார்”, யோகி.
“சொல்லாம எப்படி மச்சி என்னால சமாளிக்க முடியுமா?”, சித்து.
“நான் பாத்துக்கறேன்டா மச்சி. கம்பெனில எனக்கு லீவு இருக்கு. மொதல்ல ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல என்ன சொல்றாங்கன்னு பாப்போம்”, யோகி.
“ஒன்னும் பிரச்சனையில்லையா மச்சி?”, சித்து
“உன்னவிட வேற எதுவும் எனக்கு முக்கியமில்லடா மச்சி. பாத்துக்கலாம்டா…”, யோகி
யோகியின் ‘பாத்துக்கலாம்’ என்ற இந்த ஒரு வாரத்தைதான் சித்துவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எந்த பிரச்சனையாயிருந்தாலும் இந்த வார்த்தையில்தான் துவங்கி இனிதே முடித்து வைப்பான் நண்பன்.
“அய்யோ, மச்சி மறந்தே போய்ட்டேன்டா, கிளையன்ட் கால் பண்ணிருந்தார்டா”, சித்து
“என்ன செய்யணும் சொல்டா”, யோகி
“இல்ல, என்னோட லேப்டாப் வேணுமேடா. ரொம்ப அவசரம்”
“டேய் இப்ப மாத்திரை சாப்டவுடனே தூங்கப் போற, அதுக்குள்ள என்ன செய்வ? இங்கருந்து ரூம் போய்ட்டு வர லேட்டாகும்டா”, என பாவமாக கூறினான் யோகி.
“ஆமா, அதுவும் சரிதான். கம்பெனிக்கு இன்ஃபாம் பண்ணிட்டு அப்படியே லீவும் சொல்லிற்றேன். எத்தனை நாள்னு தெரியல. இப்போதைக்கு ரெண்டு நாள் கேக்கவாடா மச்சி?”
“ஆமா மச்சி, எனக்கும் அப்படித்தான் தோனுது. அப்பறம் வொர்க் அட் ஹோம் பேசிஸ்ல கூட பாத்துக்கலாம்லடா?”
“ஆமாடா”
பேசிக்கொண்டிருக்கும் போதே டாக்டர் அறைக்குள் வந்தார். உடன் செவிலியரும் வந்து காயத்தில் ஆயின்மென்ட் போட்டுவிட்டார். அதற்கு சற்று கீழேதான் எலும்பில் லேசான ஃப்ராக்சர். அதனால் அந்த இடத்தில் மாவுக்கட்டு போட்டுவிட்டு மற்ற சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு அனந்தராமன் அறையை விட்டு அகன்றார்.
“சரி, நீ கம்பெனிக்கு கால் பண்ணிட்டு ரெஸ்ட் எடு. அதுக்குள்ள நா ரூம் போய் ரெண்டு செட் ட்ரஸ் எடுத்து அப்படியே ஒன்னோட லேப்டாப்பையும் எடுத்துட்டு வந்துடறேன். வேற எதுவும் வேணுமா மச்சி?”, யோகி.
“இப்போதைக்கு ஒன்னும் தோனல. டைரிய, பேனா, சார்ஜர், ஃப்ளாஸ்க், அப்படியே தட்டு, டம்ளர்…”, என்று அடுக்கிக்கொண்டே போனான் சித்து.
“டேய், டேய் நிப்பாட்றா. ஒன்னுந் தோனலைன்னுட்டு இவ்ளோ அடுக்குற? தேவையானது என்னன்னன்னு எனக்கும் தெரியும். எடுத்துட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு. ஓகே?”
“ஓகே”, என்று கட்டிலில் சாய்ந்தான் சித்து.
யோகி பாத்ரூம் சென்று ரெஃப்ரெஷ் ஆகி வெளியில் வருவதற்குள் சித்து அயர்ந்து தூங்க ஆரம்பித்தான்.
அறையைவிட்டு வெளியேறி ரிசப்ஷனில் நண்பன் தனியாக இருப்பதையும், வேறு வழி இல்லை என்பதையும் கூறிவிட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு சித்துவும் தானும் தங்கியிருக்கும் அறைக்கு விரைந்தான்.
பலவிதமான எண்ணங்களுடன் திடீரென மாறிய சூழலுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட கவலையோடு, இதற்கெல்லாம் காரணம் ரிது என்ற கோபமும் அவனுள் எட்டிப்பார்த்தது.
கோபம்! என்னாகும்? என்னவாக ஆக்கும்?
———————