SY12

சரி © 12

நிச்சயம் இது ரிதுவோட வீடேதான், என்று உறுதிப் படுத்தினான் சித்து.

 

அப்ப, ரிது எங்க பாஸோட மகளா?, என்று யோசித்தவாறே கேட்டான் யோகி. சித்துவையும் சற்று நேரம் பார்த்துக்கொண்டே நின்றான்.

 

சரி, வா மச்சி. உள்ள போவோம், இதுவர வந்துட்டு, நின்னுகிட்டே இருந்தா நல்லாருக்காது. நாமதான் எப்பவுமே, எதையுமே கடைசிவரைக்கும் போய் பாத்துட்டுதான முடிவெடுப்போம். கமான் மச்சி!

 

கிட்டத்தட்ட யோகியை இழுத்துக்கொண்டு அந்த பிரமாண்ட மாளிகைக்குள் சென்றான் சித்து. அவனுக்கு சம்யுக்தாவை பார்க்க வேண்டும் என்ற அவசரம்.

 

ஏற்கனவே வரும்பொழுது யோகிக்கு அது பிரமாண்டாகத் தெரியவில்லை. இப்பொழுது அதன் செழுமை அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம், முன்பு தன் வேலை விசயமா முதலாளியைப் பார்க்க வந்தான்.

 

ஆனால், இப்போது ரிதுவை ஹு அம் ஐ டு ரிது?, என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே சித்துவுடன் ஒவ்வொரு அடியாக மாளிகையின் உள்ளே எடுத்து வைத்தான்.

 

 

வார்ம் வெல்கம் டு யோகி அன் சித்து!, என்று ரிது அவர்கள் இருவரையும் புன்னகையுடன் வரவேற்பரையின் நடுவே ஒரு பார்பி பொம்மை போல் நின்று வரவேற்றாள்.

 

அவளின் இருபுறமும், சம்யுக்தாவும், யாஷிகாவும் நின்று அவர்கள் வருவதையே ஆர்வமாக பார்த்தவண்ணம் நின்றனர். சம்யு, வரும் இருவரையும் நோக்கி சில அடிகள் எடுத்துவைத்ததும், மற்ற தோழிகள் இருவரும் அவள் பின்னால் வரவேற்பதுபோல் முன்வந்தனர்.

 

அதற்குள் ரிதுவின் தாயார் திலோத்தமை அங்கிருந்த ஒரு அறையில் இருந்து வெளிப்பட்டார். வாங்க தம்பி, வாங்க தம்பி, என்று இருவரையும் தனித்தனியாக பார்த்து வரவேற்றார். பின்பு, என்ன யோகி, புதுசா வர்ற மாதிரி யோசிக்கிறீங்க?என்றார்.

 

வணக்கம்மா, சித்து.

 

வணக்கம் மேடம்! சார் இருக்காறா?, யோகி.

 

சாரப் பாக்கவா வந்தீங்க? மொதல்ல உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க? ஹெல்த் டிரிங் எதுனா எடுத்துட்டு வரவா?, திலோ.

 

அம்மா எத வேணாக் கொடுங்க! ஆனா நல்லாருக்கணும்! என்ன யோகி சரியா?, என்று யோகியையே உற்று நோக்கினாள் ரிது.

 

ம், யோகி.

 

பீ கூல், யோகி! சித்து ஒங்க ஃப்ரண்ட் ஏன் இப்டி அப்நார்மலா இருக்காரு? கொஞ்சம் சொல்லக் கூடாதா?, ரிது சித்துவைக் கேட்டாள்.

 

ரிது, நீங்க இவன் பாஸோட டாட்டரா?, சித்து.

 

ஆமா, அதுனாலென்ன?, ரிது.

 

இவ்ளோ நாளா ஏன் இதப் பத்தியெல்லாம் ஒன்னுமே சொல்லல?, யோகி.

 

நாகூடக் கேட்டேன், ஏன்டீ சொல்ல மாட்டேங்குறன்னு? என்னையும் சொல்லக் கூடாதுன்னு வாயடச்சுட்டா!, யாஷிகா.

 

ஆனால், சித்து ரிது, யாஷிகாவை தவிர்த்துவிட்டு, சம்யுவுடன் பார்வையாலேயே பேசிக் கொண்டிருப்பதை கவனித்த தாயார் திலோத்தமை, சம்யு, வாம்மா கொஞ்சம் கிச்சன் வரைக்கும் போய்ட்டு வருவோம், என்று தற்காலிகமாக பிரித்தாள்.

 

இருங்க வறோம்! என்று பொதுவாக சொல்வதுபோல், சம்யுக்தா சித்துவைப் பார்த்துக் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

 

யாஷிகா மீண்டும் யோகியைப் பார்த்து,அவங்கப்பா வீட்லதான் இருக்காரு. உங்களப் பாக்குறதுக்காக வெயிட்டிங்! ஆனா, நீங்கன்னு அவருக்குத் தெரியாது, யாரோ ஃப்ரண்ட்ஸ் வராங்கன்னு நெனச்சுகிட்டு இருக்கார், என்று கூறினாள்.

 

ரிது புன்னகைத்துக் கொண்டே நண்பர்களைப் பார்த்து, என்ன கைஸ்! இவ்ளோ யோசிக்கிறீங்க? எங்கப்பா எல்லார்ட்டயும் கேஷுவலா பழகுவார். இந்தா யாஷிகாட்டயே கேளுங்க!

 

பழகுவார், அதெல்லாம் ஓக்கே! ஆனா, இங்கதான், இவர்தான் என்று தெரிந்திருந்தால் நாங்களும் கொஞ்சம் மைன்ட் செட்டோட வந்திருப்போம், என்று உண்மையாய் பேசினான் யோகி.

 

திலோத்தமையுடன் உள்ளே சென்ற சம்யுக்தா தனியாக வந்து, ஆன்ட்டி, அங்கிள கூப்ட போய்ட்டாங்க, என்று கூறிக்கொண்டே வந்தாள். பின்னாள் ஒரு பணிப் பெண். அவர்களுக்கு பருகுவதற்கு ஏதோ கொண்டுவந்து வைத்தாள்.

 

சம்யுக்தா கூறியவுடன், நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர். எதுவானாலும் பார்த்துக்கொள்வோம் என்பது அதன் அர்த்தம்.

 

தோழிகள் மூவரும் ஆளுக்கொரு குவளையை கையில் எடுத்தனர். சம்யுக்தா சித்துவுக்கு கொடுத்தாள். ரிது யோகிக்குக் கொடுத்தாள்.

 

அவங்களும் வந்துரட்டுமே! என்றான் யோகி.

 

ஆனா, நம்மோடத நாம தான குடிக்கணும்!, யாஷிகா.

 

அப்பறமா சிரிக்கிறோம்!, யோகி.

 

நீங்க சிரிக்காட்டிக் கூட பரவால்ல, தனியாச் சிரிச்சுறாதீங்க, என்று ரிது.

 

எப்பவோ சொன்னத, இப்பவும் சொல்றீங்க! நைஸ், என்று புகழ்வது போல் பேசினான் யோகி.

 

வரவேற்பறைக்கு வரும் முன்பே வாசனை அனைவரையும் சுண்டி இழுத்தது, மஸ்ரூம் சூப்! ரிதுவையும், யாஷிகாவையும் கஃபேயில் சந்தித்த ஞாபகம் வந்தது இரு நண்பர்களுக்கும்.

 

ஞாபகம் வரவேண்டும் என்பதற்காக சம்யுக்தா ஏற்பாடு செய்ததுதான் அது என்பது, அன்னை உட்பட யாருக்கும் தெரியாது.

 

அனைவரும் பருகி முடிப்பதற்கும் ராஜசிம்மன் – திலோத்தமை தம்பதி வருவதற்கும் சரியாக இருந்தது.

 

ஹலோ யோகி! என்ன இது சர்ப்ரைஸ் விசிட்? எங்கிட்ட வீட்டுக்கு வரதா ஒன்னுமே சொல்லலயே?, ராஜு யோகியை மட்டும் பார்த்துக் கேட்டுக்கொண்டே வந்தார்.

 

எனக்கேத் தெரியாது சார்!, என்றான் யோகி புதிராக.

 

என்ன சொல்றீங்க மிஸ்டர்?, என்று பக்கத்தில் நின்ற சித்துவையும் அப்போதுதான் பார்த்தார்.

 

அவங்க இப்ப ஒங்க கம்பெனிக்காரங்க இல்ல. நம்ம பொண்ணுகளோட ஃப்ரண்ட்ஸ். நாந்தான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு ஒங்கட்ட மொதல்லயே சொல்லல?, என்றார் திலோத்தமை புன்னகையுடன்.

 

எல்லாருமே ஒரே மாதிரித்தானா? எத்தன பேருக்கு ஒரே நேரத்துல சர்ப்ரைஸ் கொடுப்பீங்களோ?, என்று யோகி தனக்குள் கேட்டுக்கொண்டான்.

 

யு நோ ஒன் திங்? இன்னக்கி ஈவ்னிங் நா யோகிய வரச் சொல்லி டிஸ்கஸ் பண்ணனும்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா, இப்ப டூ இன் ஒன்னா ஆயிருச்சு, என்று ராஜு மகிழ்ச்சியாய் ஆரம்பித்தார்.

 

போதும், போதும்! உங்க கம்பெனி விசயமெல்லாம் அப்பறம் வச்சுக்கலாம், என்று கூறிக்கொண்டே சூப்பை எடுத்து ராஜுவின் கையில் கொடுத்தார் திலோ. தானும் எடுத்துக்கொண்டார்.

 

எப்படி ஒங்களுக்கும், இவங்களுக்கும் ஃப்ரண்ட்ஷிப்?, சித்துவைப் பார்த்து நேரடியாகக் கேட்டார் ராஜு.

 

சில பேர் ஆக்ஸிடென்ட்டலா மீட் பண்ணுவாங்க சார்! ஆனா நாங்க மீட் பண்ணிகிட்டதே ஆக்ஸிடென்ட்லதான் சார்!, என்று சித்து ஆச்சரியப்பட வைக்க முயற்சித்து, ஆரம்பித்து வைத்தான் ஒரு சிறு பிரச்சனையை.

 

ஸோ யூ ஆர் மிஸ்டர் சித்தார்த்!, என்பதுபோல் புருவத்தை உயர்த்திப் பார்த்தார் ராஜசிம்மன்.

 

ஆமா சார். நான்கூட அன்னக்கி அவசரமா கால் பண்ணி லீவு கேட்டேன்ல சார், என்று அவருக்கு ஞாபகப்படுத்துவது போல் பேசினான் யோகி.

 

ஆனால், தோழிகள் மூவரும் அதுவரை அந்த விசயத்தை ராஜசிம்மனிடம் கூறவில்லை என்பது நண்பர்களுக்கு அந்த நேரத்தில் மறந்துவிட்டது.

 

சாரி டாடி! ஒங்கட்ட அதப்பத்தி எல்லாம் சொல்லல. பயந்தான் டாடி! ஆனா, அம்மாட்ட சொல்லிட்டோம். , என்று ரிதுவந்திகா மெதுவாக தந்தையிடம் மன்னிப்புக் கேட்கும் பாணியில் பேசினாள்.

 

ஸோ, நீங்க எல்லாருமா சேர்ந்து எங்கிட்ட ஒரு விசயத்தை மறச்சிட்டீங்க? அப்படித்தான!, என்றார் ராஜு.

 

அது வந்து அங்கிள்…”, என்று சம்யுக்தாவும் இழுத்தாள்.

 

நீ ஒன்னுமே சொல்லலையே யாஷிகா?, ராஜு.

 

மறச்சதில எனக்கும் பங்குண்டு அங்கிள், என்று அவளும் ஒத்துக்கொண்டாள்.

 

நீங்க எல்லாரும் எங்களப் புரிஞ்சுகிட்டது அவ்ளோதான்!, தன் மனைவி திலோவைப் பார்த்தார் ராஜு.

 

திலோத்தமை முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், ரிதுவையே நோக்கிக்கொண்டிருந்தாள். அனைவரும் அமைதியாக, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என பார்த்திருந்தனர்.

 

ராஜு தொடர்ந்தார், ரிது அம்மாட்ட ஆக்ஸிடென்ட் பத்தி சொன்ன அன்னக்கி ராத்திரியே, திலோ எங்கிட்ட முழுசா சொல்லிட்டா. இன்ஃபாக்ட், அந்த செலவெல்லாம் நம்ம கம்பெனி ஆடிட்டர கன்சல்ட் பண்ணி, எல்லாத்தையும் லேபர் எக்ஸ்பென்ஸ், மெடிக்கிளைம்னு நா ஏற்பாடு பண்ணிட்டேன். ஸோ, அம்மா கைலருந்து ஒரு பைசா செலவு பண்ணல தெரியுமா?

 

ஆக்ஸிடென்ட்டுக்கு செலவு செஞ்சதாச் சொல்லியே, எனக்கு ஒரு மாசமா பைசாத் தரலியே, ராஜமாதா!, ரிது மனதுக்குள் பொங்கினாள்.

 

திலோவுக்கு எந்த ஒரு விசயத்தையும், எங்கிட்ட மறச்சுப் பழக்கமில்ல. அதே நேரத்துல காசோட அருமை நல்லாத் தெரியும். அதுனாலதான் நேரடியாக கிளினிக்க கான்ட்டாக்ட் பண்ணாம, எங்கிட்ட எல்லாத்தையும் சொன்னதோட, தன்னோட மகளையும் நா திட்டக் கூடாதுன்னு அன்புக் கட்டளை வேற!, என்று அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டே, திலோத்தமையையும் அர்த்தத்தோடு பார்த்தார் ராஜு.

 

அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த யோகி, எக்ஸ்ஸலன்ட் சார்!, என்றான்.

 

யாரு நானா, திலோவா?, ராஜு.

 

போத் ஆஃப் யூ சார்!, யோகி.

 

சிங், சாங், யாஷிகா தொண்டை வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டாள்.

 

இதப்பத்தி, இப்பவும் நா ஒங்கட்ட சொல்லாம மறச்சுருக்கலாம். ஆனா, எதிர்காலத்துல உங்களுக்கும் ஒரு குடும்பம்னு ஆகும் போது, கணவன், மனைவி உறவுல இதெல்லாம் ஃபாலோப் பண்ணா நல்லதுன்னு என்னோட அனுபவத்துல சொல்றேன்

 

அது வரை அவரையே எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த ராஜு, சரி, நான் பேசுனா, நா மட்டுந்தான் பேசிகிட்டே இருப்பேன். கிளாஸ் எடுக்கற மாதிரி இருக்கும். அதுனால நா உள்ள இருக்கேன். யூ வுட் பி ரிலாக்ஸ், என்று எழுந்தார்.

 

உடன் திலோத்தமையும் எழுந்தாள். ஆனால், ராஜு கண்களாலேயே தன் மனைவியை அமருமாறு கூறிவிட்டு, யோகியைப் பார்த்தார். யோகியும் அவரையேப் பார்த்தது, உத்தரவுக்காகக் காத்திருந்தது போல் தெரிந்தது.

 

ஓக்கே சில்ரன், நீங்க எல்லாரும் பேசிகிட்டிருங்க. யோகி! நாம கொஞ்சம் தனியாப் பேசலாமா?, என்றார்.

 

ஷ்யூர் சார், யோகி.

 

ராஜு எழுந்து, தனது அலுவலக அறையை நோக்கி நடந்தார். யோகியும் பின்தொடர்ந்தான்.

 

என்ன டாடி! இங்கயும், இப்பவும் உங்க கம்பெனி வேலய ஆரம்பிச்சுட்டீங்களா?, ரிது கெஞ்சினாள்.

 

ஒரு டென் மினிட்ஸ் பேபி!, என்று கூறிக்கொண்டே நடந்தார்.

 

அவர் அகன்றதும் திலோ,சரி விடுங்கடீ என்று கூறிவிட்டு, தம்பி என்ன பண்றீங்க? எங்க தங்கியிருக்கீங்க? வீட்ல அம்மா, அப்பா பத்தில்லாம் சொல்லுங்களேன்!, என்று சித்துவைப் பார்த்து அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார்.

 

அம்மா, எல்லாத்தையும் நாங்க அப்பறமா சொல்றோம். இப்ப டாடி சொன்ன மாதிரி, கொஞ்சம் ரிலாக்ஸ், ப்ளீஸ்!, என்றாள் ரிது.

 

மகளின் ஆதங்கத்தால், சித்துவை விட்டுவிட்டு, சகஜமாக சில விசயங்கள் பேசிக்கொண்டிருந்தார் திலோ. சிறிது நேரத்தில், ராஜுவுடன் அலுவலகம் சார்ந்த பேச்சை முடித்துக்கொண்டு, யோகியும் அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்டான். அவனிடமும் பேசிய திலோத்தமை, சற்று நேரத்தில் உள்ளே சென்றுவிட்டார். ஆனால், வரவேற்பறையில், அவர்கள் அனைவரின் மேலும், ஒரு கண் வைத்தவராகவே ஏதோ வேலையாக இருந்தார்.

 

நேரம் போவது தெரியாமல் அனைவரும் ஆர்வமாய் பேசி மகிழ்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜசிம்மன், பேசிகிட்டே டின்னரை முடிச்சிருங்களேன்! யாஷிகா, சம்யு நேரமாகுதில்ல?, என்றார். சபை கலைக்கப்பட்டது.

 

திலோத்தமை ஏற்கனவே அனைவருக்கும் உணவு பரிமாற வசதியாக எல்லாவற்றையும் சாப்பாட்டு மேசைக்கு கொண்டு வந்து வைத்திருந்தாள். அங்கிருந்த பணிப்பெண்ணும், மேசை, நாற்காலிகளை அனைவரும் அமர்வதற்கு ஏற்றவாறு சரிசெய்துவிட்டு அகன்று நின்றுகொண்டாள்.

 

சம்யுக்தா, ரிதுவந்திகா, யாஷிகா மூவரும் ஒரு பக்கமும், யோகிதாஸ், சித்தார்த் இருவரும் அவர்களுக்கு எதிரிலும் அமர்ந்துகொண்டனர்.

 

ராஜசிம்மன் உள்ளே செல்ல முற்படுவதை பார்த்த திலோத்தமை, நீங்களும் வாங்க, புள்ளைங்களோட சேந்து சாப்பிடலாம்!, என்றார் அவசரமாக.

 

நா எதுக்கு! அவங்க மொதல்ல சாப்பிடட்டும், அப்பறம் நாம சேந்து சாப்டுவோமே?, ராஜு.

 

நீங்க இந்நேரம், இந்த மாதிரி இருக்கறதே ரொம்ப அபூர்வம்! நீங்க வாங்க! எனக்கு அப்பறம் பாத்துக்கறேன், திலோ.

 

மனைவியின் சொல்லை மதித்து, ராஜு அமைதியாக சித்துவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். சித்து சற்று அசௌகரியமாக உணர்ந்தான்.

 

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கம் உள்ள குடும்பத்தில் இருப்பான் போல என்று ராஜு மனதில் நினைத்துக்கொண்டார். சித்து தன் தந்தையுடன் சரிசமமாக அமர்ந்தே பல வருடங்கள் ஆகிவிட்டதால் வந்த சங்கோஜம் அது.

 

இருந்தாலும் தோழிகள் தங்கள் பேச்சுத் திறமையால் அந்த சூழலை சரி செய்தனர். அனவரும் அதிகம் பேசாமல் உணவில் கவனம் செலுத்தி, சாப்பிட்டு முடித்தார்கள்.

 

முதலில் முடித்தவர் ராஜுதான். சம்யு, யாஷிகா கிளம்பும்போது சொல்லுங்க, என்று கூறுவதுபோல், சீக்கிரம் கிளம்புங்கள் நேரமாகிறது என்பதை தெரிவித்துச் சென்றார் ராஜு.

 

அவர் சென்ற பின்பு, அந்த இடம் சகஜ நிலைக்குத் திரும்பியது. இன்னக்கித்தான் நாங்க இவ்ளோ சீக்கிரமா டின்னர முடிச்சிருக்கோம், என்றான் சித்து.

 

ஏன் ரொம்ப லேட்டாகுமா? நைட் சாப்பாடுன்னா எட்டு மணிக்குள்ள முடிச்சிருங்க தம்பி, அப்பத்தான் நல்லது, திலோ.

 

சில சமயம் வேலய முடிக்கறதுக்கே நைட் பத்தாயிரும். அப்பறம் எப்படி மேடம், என்றான் யோகி.

 

வேலக்கு எடைல சாப்பாட்ட முடிச்சிற வேண்டியதுதான! அதென்ன அஞ்சு நிமிஷம் ஆகுமா?

 

அத நெனக்கிறதுக்குக் கூட நேரமிருக்காது மேடம், யோகி.

 

இங்க, இவர் பண்றதும் அப்படித்தான இருக்கு. அதே மாதிரித்தான் நீங்களும் இருப்பீங்க!, திலோ.

 

உங்களுக்கென்ன வேல? நீங்களாவது ஆன்ட்டி சொல்ற மாதிரி ஒழுங்கா, சீக்கிரமா டின்னர முடிக்க வேண்டியதுதான?, சம்யு சித்துவைப் பார்த்துக் கேட்டாள்.

 

இனிமே ட்ரைப் பண்றேன், என்று சுருக்கமாக முடித்தான் சித்து.

 

நண்பர்கள் இருவரும் கிளம்பியவுடன். சம்யுக்தாவும், யாஷிகாவும் தாங்கள் கிளம்புவதாக ராஜுவிடம் கூறினர்.

 

இருங்கம்மா, எனக்கும் அந்தப்பக்கம் கொஞ்சம் வேலே இருக்கு, என்று கூறியவர் ஏற்கனவே கிளம்பி தயாராக இருந்தார்.

 

அவரும் தனது காரை எடுத்துக்கொண்டு தோழிகளின் பின்னாலேயே வந்தவர், யாஷிகாவின் விடுதி வந்ததும், காரிலிருந்தபடியே இருவரிடமும் விடைபெற்று, வேறு சாலைக்கு மாறி வீடு வந்து சேர்ந்தார்.

 

உண்மையில் அவருக்கு வேலை ஏதும் இல்லை என்றாலும், பெண்களின் பாதுகாப்பிற்காக வந்தவர், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

©©¨©©

 

என்ன யோகி! எப்படி எங்க சஸ்பன்ஸ்?, என்று விடுதி அறைக்குச் சென்ற யோகியிடம் பேச ஆரம்பித்திருந்தாள் ரிது.

 

அத சஸ்பன்ஸ்னு சொல்லாதிங்க! சர்ப்ரைஸ்னு சொல்லுங்க! திடீர்னு அதள பாதாளத்துக்குப் போன மாதிரி கலங்கிட்டேன். நார்மலுக்கு வரவே ரொம்ப நேரம் ஆச்சு தெரியுமா?, யோகி.

 

அதத்தான் பாத்தேனே! சாரி யோகி, ஒங்கள இவ்ளோ பாதிக்கும்னு நெனக்கல, ரிது வழக்கம் போல் பேசினாள்.

 

ஆனால், யோகியின் மனதில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பமானது. அது அவன் பேச்சிலும் தெரிந்தது. பாதிப்பு அப்டீனெல்லாம் சொல்ல முடியாது. பட் சின்ன அதிர்ச்சி, அவ்ளோதான், யோகி.

 

நா ஒங்க பாஸோட பொண்ணுன்னு டிஸ்ட்டன்ஸ் மெயின்டெயின் பண்ண மாட்டிங்கல்ல?, ரிது தேவையானதை கேட்டாள்.

 

அது போகப் போக சரியாயிடும்னு நெனக்கிறேன்!, யோகி.

 

போகப் போகன்னா? அப்ப, இப்ப சரியா இல்லையா?, ரிது.

 

சரியாத்தான் இருக்கேன். இனியும் சரியா இருப்பேன். போதுமா?

 

சரி, ரோமியோ சித்து என்ன பண்றார்?

 

அவனுக்கென்ன, அவனோட ஆளப் பாத்த சந்தோஷத்துல இருக்கான். வந்ததுமே, சம்யுகிட்டருந்து கால் வந்துச்சு, கொஞ்ச நேரந்தான் ரெண்டு பேரும் பேசுனாங்க, அப்பறம் சேட்டிங்ல ஒக்காந்துட்டான். என்ன பண்றாங்களோ! யாருக்குத் தெரியும்?

 

ஒங்களுக்கும் அப்டி ஒரு நெலம வந்தாத்தாத்தான் தெரியும்!, ரிது.

 

வேண்டாம்டா சாமி! வேண்டவே வேண்டாம்! அதெல்லாம் எனக்கு ஒத்து வராது, யோகி.

 

நீங்க ரெண்டு பேருமே எல்லா விசயத்திலுமே ஒன்னாத்தான இருக்கீங்க! அப்பறம் என்ன இதுல மட்டும் தப்பிச்சிருவீங்களா என்ன?, ரிது.

 

பாப்போம் ரிது! எல்லாம் நம்ம கைல இல்ல. நாம எல்லாருமே, மேல இருக்கறவனால ஏற்கனவே செஞ்சு வச்ச ப்ரோக்ராம்தான!, யோகி.

 

என்ன திடீர்னு வேற மோடுக்குப் போறீங்க?, ரிது.

 

மூடு சரியில்லன்னா, நாம போற மோடுதான அது!, யோகி.

 

கம்மான் யோகி! நார்மல் மோடுக்கு வாங்க, ப்ளீஸ்!

 

உங்களுக்குக்கென்ன எல்லாம் விளையாட்டாப் போச்சு ரிது. நீங்க குடுத்தது ஒரு சர்ப்ரைஸ்னா, ஆக்ஸிடன்ட் பத்தி அம்மா ஏற்கனவே அப்பாட்டச் சொன்னது இன்னொரு சர்ப்ரைஸ், அதெல்லாம் விட உங்கப்பாவும் ஒரு சர்ப்ரைஸ் குடுத்துருக்காரு தெரியுமா?

 

என்ன யோகி சொல்றீங்க! அப்பா சர்ப்ரைஸ் கொடுத்தாரா? என்ன சொன்னார், ப்ளீஸ் சொல்லுங்களேன்!

 

அத இப்போதைக்கு யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு, கையில அடிக்காத குறைய சத்தியம் வாங்கிட்டார் ரிது

 

இப்ப நீங்கதான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க

 

ஒங்கள விடவா? குடும்பத்தோட இல்ல கொடுக்கறீங்க!

 

சரி, இப்ப நீங்க என்ன கேட்டாலும் சொல்ல மாட்டீங்க. நா சொல்ல வந்தத சொல்லிடறேன்!,

 

என்ன?

 

சம்யுவையும், சித்துவையும் அம்மா ஸ்மெல் பண்ணிட்டாங்க. அதுனால, ஒங்காள சீக்கிரமா அடுத்த கட்ட நடவடிக்கைல எறங்கச் சொல்லுங்க

 

அப்படியா! பாருங்க இதெல்லாம் எதுவுமே தெரியாத மாதிரி ரெண்டும் சேட் பண்ணிட்டு இருக்குதுங்க!

 

பண்ணட்டும், பண்ணட்டும். இன்னும் எத்தன நாளைக்கு? ஓக்கே, பை யோகி. குட்நைட்!

 

குட் நைட் ரிது, அலைபேசியை அணைத்துவிட்டு அருகில் மும்முரமாய் சேட் செய்துகொண்டிருந்த சித்துவைப் பார்த்தான். அவன் இவனைப் பார்ப்பதாக இல்லை.

©©¨©©

 

மறுநாள் காலை ரிதுவின் தாய் திலோத்தமையிடமிருந்து, சம்யுவின் தாய் அனுசியாவிற்கு அழைப்பு பறந்தது. இருவரும் அடிக்கடி அலைபேசியில் கதைப்பது சகஜம்தான்.

 

ஹலோ அனு, என்ன பண்றீங்க?, திலோ.

 

ஹலோ! அக்கா நல்லாருக்கீங்களா?, அனு.

 

ம், சம்யு நேத்து என்ன சொன்னா? வேலைக்குப் போய்ட்டாளா?

 

வந்ததும் நார்மலாத்தானக்கா இருந்தா! எப்பவுங்கூட ஒரு மணி நேரமா போன்லயே பேசுறவ, நேத்து அதக்கூடச் செய்யலையே! உள்ள போய் படுத்துட்டா. நானும் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு விட்டுட்டேன்

 

சம்யுக்தா சித்தார்த்துடன் வாட்ஸ்அப்பில் சேட் செய்தது தாயார் அனுசியாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அட, போங்க அனு நீங்க நல்லா வாட்ச் பண்ணுங்க. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு

 

என்னக்கா சொல்றீங்க?, பதறினாள் தாய் அனுசியா.

 

அனுசியாவின் பதட்டத்தை தணிக்கும் அளவில், அதே சமயத்தில் எதைக் கூற வேண்டுமே அதை தெளிவாக கூறிமுடித்தார் திலோத்தமை. சம்யுக்தா, சித்தார்த் பேச்சில் காதல் தெரிவதாகவும், அதனால் சம்யுக்தாவை அனுசியா நன்கு கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

எனக்கும் ஏதோ பிரச்சனைன்னு தோனுச்சு, ஆனா நம்ம பொண்ணுங்களுக்குள்ள ஏதோன்னு நெனச்சேன்க்கா

 

அன்னக்கி நம்ம பேசிக்கிட்டதுக்கப்பறம்தான் நானும் கவனிச்சேன். இவளுங்க அடிக்கடி அவனுங்களப் பத்தி பேசுறதும், நாம பக்கத்துல போனா, பேச்ச வேற டிராக்குல கொண்டு போறதுமா இருந்தாளுங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துறலாமேன்னுதான், கெட்டுகதர்னு சொல்லி, பசங்கள வீட்டுக்கே வரச்சொல்லிப் பாத்தேன். காதல் கன்ஃபாம் அனு!, என்று படம்பார்த்து கதை சொல்வதுபோல் கூறினார் திலோத்தமை.

 

தோழர்களுக்கோ, தோழிகளுக்கோ இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை.

 

ஆனால், தோழிகளின் எண்ணங்களோ வேறு மாதிரி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன! தோழர்களின் நிலைமை?

©©|©©