T-T-13A

அத்தியாயம் – 13A

செழியனும் இந்துமதியும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருந்து, பள்ளி படிப்பை முடித்தனர்.

செழியன் எப்போதும் போல, பள்ளியில் முதலிடம்.

ஸ்வாமிநாதனுக்கு மகன் கம்ப்யூட்டர் குரூப் எடுத்து படித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால் செழியனுக்கோ, மெக்கானிக்கல் குரூப் எடுத்து படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்கு சேரவேண்டும் என்பது கனவு.

அதற்கு சம்மதிக்கவில்லை ஸ்வாமிநாதன். அவருக்குத் தேவை படித்தவுடனே வேலைவாய்ப்பு. அதுவும் மதிக்கத்தக்க வேலை… கைநிறைய வருமானம். தன்னைப்போல மகன் கஷ்டப்படக்கூடாது என்பதே அவர் எண்ணம்.

செழியனுக்கு தெரியும், அவன் மதிப்பெண்ணுக்கு, மிகவும் பிரபல கல்லூரியில் அவன் விருப்பப்படும் பிரிவு கிடைக்கும் என்று.

என்ன செய்வது என தெரியாமல், உடனே இந்துமதிக்கு அழைத்தான். அவள் தந்த அறிவுரை, ‘இந்த படிப்பு தான் உன் வருக்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. எது படித்தால் மனநிறைவுடன் படித்து நல்ல வேலைக்கு போகமுடியும் என்பதை யோசி’ என்றாள்.

அதற்கு நொடிப்பொழுதில் அவன் தந்த பதில் ‘மெக்கானிக்கல்’ என்பது தான்.

அவள் புன்னகையுடன், ‘அப்போ அதையே செலக்ட் செய். அப்பாவிடம், ஒருவேளை மெக்கானிக்கல் சார்ந்த துறையில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எந்த பிரிவு எடுத்தாலும் ITயில் வேலை நிச்சயம் கிடைக்கும். கவலை பட வேண்டாம் என்று சொல்’ என்றாள். செழியனும் சரி என்றான்.

இருந்தும் தந்தையிடம், அதுகுறித்து பேச சின்ன தயக்கம். கவுன்செல்லிங் நாளும் வந்தது. ஸ்வாமிநாதனும் செழியனும் உள்ளே செல்ல, அவன் நினைத்ததுபோலவே, எந்த பிரிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதை சொன்னபின், தந்தையை பார்த்தான்.

சில பல போராட்டத்துக்குப்பின், இந்துமதி சொன்னதையும் சொல்லி, அவரை ஒருவழியாக சம்மதிக்க வைத்து, மெக்கானிக்கல் தேர்வு செய்தான்.

‘எந்த போராட்டமில்லாமல், தன் வாழ்வில் தானே முடிவெடுக்கும் நாள் எப்போது வரும்’ என்று நினைக்கத்தோன்றியது அவனுக்கு.

இந்துமதியும் அவள் வீட்டின் பக்கத்தில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தாள்.

தினமும் பேசுவார்கள். அவன் நடந்ததை அவளிடம் சொல்வான். அவளும் அவள் கல்லூரி குறித்து பேசுவாள். அடிக்கடி சந்தித்தனர்.

செழியன் தனது துறையில் நன்றாக படித்தான். ஆசிரியர்கள் அவனின் திறமையை பார்த்து வியந்தனர்.

ஆனால் எப்போதும் போல யாருடனும் பேசமாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பான். இந்துமதியும் பலமுறை சொல்லிவிட்டாள். சகஜமாக இரு என்று. ஏனோ அவனால் இருக்க முடியவில்லை.  

ஒருமுறை இருவரும் சந்திக்கும்போது… “செழியா அங்க பாரேன். அந்த பொண்ணு உன்ன சைட் அடிக்குது” என அவனை கிண்டல் செய்ய, அந்த பெண் யார் என்று பார்க்கக்கூட அவன் திரும்பவே இல்லை.

“சாமியாரே. உன்ன கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு பாவம் டா” என தலையில் அடித்துக்கொள்ள, செழியன் முறைத்தான்.

“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. இந்த வயசுல இதெல்லாம் பண்ணணும் செழியா. காலேஜ்ல ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி, லவ் பண்ணுடா. ஜாலியா இரு” அவள் சொன்னவுடன்…

“என்னயெல்லாம் யாரு லவ் பண்ணுவா சொல்லு? என்னைப் போல இருக்கவங்கள யாருக்கும் பிடிக்காது இந்து. மோர்ஓவர் எனக்கு அதுல இன்டெரெஸ்ட் கூட இல்ல. ஏன் நீ லவ் பண்ணவேண்டியது தானே” என்றான்.

“ஏன், என் வீட்ல என்னை உப்புக்கண்டம் போடவா? லவ்’னா அது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம். அப்பறம் படிக்கவே வேணாம்னு சொல்லி புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. ஏற்கனவே என்னோட மாமா வெய்ட்டிங். அத்தை எப்போடான்னு இருகாங்க முடிச்சு வைக்க” என்றாள் சலிப்புடன்.

பின், “ஆமா உனக்கென்ன குறை? பார்க்க நல்லா இருக்க. உன்ன மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க எந்த பொண்ணும் குடுத்துவச்சுருக்கணும். என்ன கொஞ்சம் அமைதியான டைப். அவ்ளோதான்” என்றாள் அவனை பற்றி நன்றாக தெரிந்திருந்த இந்துமதி.

இதுவரை ஒரு முறை கூட எந்த பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்த்திடாது, அவனுடன் அவள் இருக்கும் நேரத்தில் அவன் எடுக்கும் சின்ன சின்ன சிரத்தை, அந்த பாதுகாப்பான உணர்வு, ‘நான் ஆண்மகன்’ என்று பெருமை பட்டுக்கொள்ளாமல், தலைக்கனமில்லாமல் அவன் இருப்பதை, அவள் நிறைய முறை பார்த்திருக்கிறாள்.

அது அவளுக்கு பிடிக்கும். அவள் வீட்டிலும்… அவளை சுற்றிலும்… இதுபோல ஆண்கள் ஒருவர் கூட இல்லையே என்ற மனவருத்தமும் வந்து செல்லும்.

இந்துமதி லவ், சைட் குறித்து வகுப்பு எடுத்தாள் அவனுக்கு. அப்போது செழியன்… “அதெப்படி திடீர்னு ஒருத்தங்க மேல லவ் வரும்?” என்று கேட்க…

இந்துமதி, “எனக்கு மட்டும் தெரியுமா? ஆனா ஃபிரண்ட்ஸ் சொல்லுவாங்க செழியா. அது ஒரு ஸ்பார்க் ஆம். ஒருத்தரை பார்த்தவுடனே அந்த ஃபீல் வருமாம். அவங்களோட நடவடிக்கை, இல்ல ஏதோ ஓன்னு நம்மள அவங்ககிட்ட ஈர்க்குமாம். அவங்கக்கூட பேசணும், பழகணும் தோணுமாம். சத்தியமா எனக்கு இதுவரை யாரைப்பார்த்தும் தோணல. உனக்கு?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

அவனும் புன்னகையுடன் இல்லை என்று தலையசைத்தான். இப்படியாக இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார்.

இவர்கள் இருவரின் நட்பு வீட்டில் தெரியும். ஸ்வாமிநாதன் வேலைபார்க்கும் கல்லூரியில் தான் இந்துமதியின் குடும்பத்தில் பாதி பேர் படித்தனர். ஆகையால் அவர்களுக்கு ஸ்வாமிநாதனை தெரியும். செழியனை பற்றியும் தெரியும்.

அவ்வப்போது கவிதா காஞ்சிபுரம் வருவாள். அவளும் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். கவிதா, இந்துமதி, இருவரிடம் மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக பேசுவான்.

முன்பு போல இல்லாமல் கவிதா கல்லூரியில் சேர்ந்த பின், கொஞ்சம் கலகலப்புடன், சந்தோஷத்துடன் இருப்பதாக உணர்ந்தான் செழியன்.

ஆனால் அவனுக்கு தெரியாதது, அந்த மாற்றத்திற்கு காரணம் ‘அஜய். அஜய்யை அவள் விருப்புகிறாள் ‘ என்பது.

செழியன் படிப்பில் ஒவ்வொரு செமெஸ்டரில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தான். இறுதியாண்டும் வந்தது. அப்போது கவிதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்தது.

செழியனுக்கு இந்துமதியுடனான நட்பும் ஆழமாக வளர்த்தது. எந்தவித பச்சாதாபத்தினாலும், பரிதாபத்தினாலும், பாவமெனவும் நினைத்து இந்துமதி பழகவில்லை. அந்த குணம்தான் அவனுக்கு மிகவும் பிடித்தது.

தினமும் அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. பேசாமல் கடினம் என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதில் துளியளவும் நட்பை தவிர வேறு எந்த விதமான எண்ணமும் இல்லை அவனிடம்.

இப்படி இருக்க, ஸ்வாமிநாதனின் மனநிறைவுக்காக ஒரு IT கம்பெனியில் கேம்பஸ் மூலமாக வேலையை உறுதி செய்துகொண்டான்.

பின், இறுதி செமெஸ்டரில் ப்ராஜெக்ட் செய்வதற்கான நேரமும் வந்தது. அதற்காக மிகவும் சிரத்தை எடுத்து வேலையில் இறங்கினான். அதுவும் நல்ல வடிவம் பெற்றது.

அந்த சமயம், கவிதாவின் கல்யாண வேலைகள் ஆரம்பித்தது. அகிலன் என்கிற ஒருவனை அக்காவிற்கு பார்த்துள்ளதாக ஸ்வாமிநாதன் சொன்னார். அகிலனை பற்றி பெருமையாக பேசினார்.

செழியனுக்கு மிகவும் சந்தோஷம். அக்காவின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டது என்று.

அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள இந்துமதியை அழைத்தான். அழைப்பு செல்லவில்லை. பலமுறை முயற்சித்தான். பலனில்லை. ஏனோ ஒரு வித ஏமாற்றம் அவனுள்.

ஒருபுறம் இறுதியாண்டு தேர்வுகள் ஆரம்பிக்க, இங்கே வீட்டில் கவிதாவின் திருமணம் நாற்பது நாளில் குறிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் ஒருபுறம் சீக்கிரம் நடக்க, இந்துமதியை சுத்தமாக தொடர்பு கொள்ளமுடியவில்லை செழியனால்.

ரிட்டன் தேர்வுகள் முடித்து, ப்ராஜெக்ட் வைவா (viva) மட்டும் மீதம் இருந்தது.

அப்போது தான், ஒரு நாள் வீட்டில் இருக்கும்போது… ஸ்வாமிநாதனை அழைத்திருந்தான் அகிலன்.

இருவரும் பேச பேச, திடீரென, ஸ்வாமிநாதன்… “என்ன கல்யாணத்த நிறுத்தணுமா மாப்பிள?” என்று கேட்டபடியே, போனை கீழே போட்டவர், நெஞ்சை பிடித்துக்கொள்ள, இதை கேட்டுக்கொண்டிருந்த செழியன் அதிர்ந்து தந்தையிடம் சென்றான்.

சில நொடிகளில் அவர் வலி அதிகமாக, மயக்க நிலைக்கு செல்லும்போது கவிதா அழைத்தாள். செழியனுக்கு கண்கள் கலங்கிவிட்டது. பேச்சு வரவில்லை.

அக்காவின் வாழ்க்கை என்ன ஆகுமோ, தந்தைக்கு என்ன ஆகுமோ என பல எண்ணங்களுடன், கவிதாவை வர சொல்லிவிட்டு, போனை வைத்தான்.

சில நிமிடங்களில், அகிலனிடம் இருந்து அழைப்பு வர, சொல்லமுடியாத கோபம் அகிலன் மேல் வந்தது செழியனுக்கு.

திருமணத்தை நிறுத்த சொல்லிவிட்டு, இப்போதெதற்கு மறுபடியும் அழைக்கிறான் என்கிற கோபம் அவனுள்.

அழைப்பை துண்டித்தான். சித்தப்பாவிற்கு தகவல் சொல்லிவிட்டு, தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.

ஓரிரு மணிநேரத்தில் ஸ்வாமிநாதனுக்கு சிகிச்சை அளித்தபின், ‘மைனர் அட்டாக், பயப்படத்தேவையில்லை’ என்றனர். அவனுக்குள் கொஞ்சம் நிம்மதி. ஆனால் ‘அக்காவின் வாழ்க்கை’ என நினைக்க, அகிலன் மேல் ஆத்திரமாக வந்தது.

அந்த கோபத்திற்கு காரணமான அகிலன் சில நிமிடங்களில் அவன் முன் வந்து நின்றான்.

கொஞ்சம் பதட்டத்துடன் இருந்த அகிலன், சித்தப்பா விஸ்வநாதனிடம் ஸ்வாமிநாதன் குறித்து கேட்டான்.

‘செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போதெதற்கு வந்திருக்கிறான்’ என்று செழியன் நினைக்க, அகிலன் செழியனை பார்த்தவண்ணம் ICU’விற்குள் சென்றான்.

அகிலன் மேல் கொலை வெறியில் இருக்கும்போது கவிதா அங்கே அழுதுகொண்டே வந்தாள். தந்தையை பற்றி அவளிடம் சொன்னபின், அகிலன் மேல் இருந்த கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான்.

மனம் பாரமாக இருந்தது. இந்துமதியை அழைத்தான். பயனில்லை.

சில மணிநேரம் கழித்து தந்தையை பார்க்க சென்றபோது, உள்ளே ஸ்வாமிநாதன் அகிலனிடம் கைகூப்பி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து இன்னமும் கோபம் அதிகமானது செழியனுக்கு.

‘எதற்கு அப்பா இவனிடம் கெஞ்ச வேண்டும்? கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்பவனிடம் எதற்கு கெஞ்ச வேண்டும்? அக்காவிற்கு வேறு மாப்பிள்ளை கிடைக்காதா என்ன?’ என்று அவன் மனம் கனன்றது.

இருந்தும் அவனால் நேரடியாக கேட்கமுடியவில்லை. கவிதாவின் முகத்தில் துளியும் சந்தோஷமில்லை. அதைப் பார்க்க இன்னமும் கஷ்டமாக இருந்தது செழியனுக்கு.

கவிதாவிடம் ‘உனக்கு திருமணதிற்கு சம்மதமா?’ என கேட்டான். அவளும் எதுவும் சொல்லாமல் ஆம் என்றாள் தந்தையின் உடல் நிலையை மனதில் வைத்து.

அவளுக்கே சம்மதம் என்கிறபோது, இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை செழியனுக்கு.

அப்போதுதான் வைவா நடப்பதற்கான நாளும் வந்தது. அவன் கல்லூரிக்கு செல்லும்போது, புது எண்ணில் இருந்து அழைப்பு.

யோசனையுடன் அவன் எடுக்க, இந்துமதியின் குரல்.

அடுத்து அவள் ‘தனக்கு திருமணம் ஆகிவிட்டது’ என்பதுடன் இன்னும் சில விஷயங்களை சேர்த்து சொல்லிவிட்டு ‘இனி உன்னுடன் பேசுவது கடினம் செழியா’ என்று சொன்னவுடன், செழியனின் மனதில் சொல்லமுடியாத அழுத்தம்.

எதுவும் பேசமுடியவில்லை அவளிடம். கண்கள் கலங்கியது. அதே மனநிலையில் வைவா’வில் கலந்துகொள்ள சென்றான்!