T-T20

அத்தியாயம் – 20:

சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து, செழியனின் காஞ்சிபுரம் வீட்டிற்கு வந்தடைந்தனர்.

அன்றைய இரவு லட்சுமி மற்றும் ஜெயராமனை அழைத்துக்கொண்டு ஸ்வாமிநாதன், தன் தம்பி விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றுவிட, அகிலனும் கவிதாவும்… செழியன், ப்ரியாவுடன் அங்கேயே தங்கினர்.

செழியன் இரவு உணவு முடித்தவுடனே மேலே ஒற்றை அறைக்கு சென்றுவிட்டான்.

ப்ரியா சிறிதுநேரம் கழித்து மேலே சென்றாள்.

மனதில் ஒரு சின்ன படபடப்பு. அதிலும் அந்த புடவை. ‘இதை ஏன் அண்ணி கட்டிவிட்டார்கள். படியில் ஏறக்கூட முடியவில்லையே’ என தட்டுத் தடுமாறி மேலே சென்றாள்.

அங்கே செழியன் அவன் அறையில் மும்பையிலிருந்து கொண்டுவந்திருந்த பழைய புத்தகங்கள், டைரிக்களை அலமாரியில் அடிக்கிக்கொண்டிருந்தான்.

‘இன்று எதற்கு இந்த முதலிரவெல்லாம்?! அனைத்தும் படித்து முடித்து பார்த்துக்கொள்ளலாமே. இசை வந்தவுடன் பேசவேண்டும்’ என நினைத்து, வேலையில் கவனம் செலுத்தினான்.

ப்ரியா ஒருகையில் புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலுடன் “இதை பிடி இளா” என்று கத்த… என்னமோ ஏதோ என்று பதறி வெளியே வந்த செழியன், அவள் நின்றதை பார்த்து சிரித்துக்கொண்டே அவளிடம் பாட்டிலை வாங்கிக்கொண்டான்.

படியேறும் போது புடவையை மிதித்திருப்பாள் போல.

‘புடவையெல்லாம் எதற்கு? உனக்கு தான் அது சரிவராதே’ புன்னகையுடன் மனதில் கவிதா திருமணத்தின் போது அவளை பார்த்தது வந்து சென்றது.

அவன் தன்னையே பார்ப்பது புரிய, இப்போது இரண்டு கைகளாலும் புடவையை பிடித்துக்கொண்டு… “வாஷ் ரூம் போய் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வந்துடறேன். டூ மினிட்ஸ்” என்று விட்டு அவன் கண்ணில் அதற்கு மேல் படாமல் ஓடிவிட்டாள்.

‘இதுதான் வெட்கமோ?! அடக் கடவுளே. இதுவரை எவ்ளோ நாள் அவன் கூட இருந்திருக்கேன். இன்னைக்கு என்னென்னமோ தோணுதே. ப்ரியா… கண்ட்ரோல். எல்லாம் படிச்சி முடிச்சப்புறம் தான்’ தனக்கு தானே புன்னகைத்துக் கொண்டு வெளியே வர, அந்த மொட்டை மாடியில் காற்று சில்லென்று வீசியது.

உள்ளே அவனை எதிர்கொள்ள கொஞ்சம் வெட்கம்… கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அங்கிருந்த தடுப்பில் சாய்ந்த படி நிற்க, சில நிமிடங்களில் அவளை தேடி அவன் வெளியே வந்தான்.

அந்த சிறிய விளக்கு ஒளியில், அவளுடைய சின்ன சின்ன ஆபரணங்கள் மின்ன, எப்போதும் போல மேலுதட்டை மெலிதாக கடித்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவன் மனதில் சின்ன தடுமாற்றம்.

அவன் வெளியே வருவதை பார்த்த ப்ரியா, அவனை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள். அவள் மனதில் சின்ன படபடப்பு.

அவள் பக்கத்தில் அவன் நின்றவுடன், இவரிடத்தில் கொஞ்ச நேரம் மௌனம். அந்த மௌனத்தை கலைத்தாள் ப்ரியா.

“கனவு போல இருக்கு இளா. எல்லாம் எவ்ளோ சீக்கிரம் நடந்து முடிஞ்சிடுச்சில்ல” அவள் சொன்னதும் புன்னகைத்தான் செழியன்.

அவன் மேலே அவள் சாய்ந்துகொள்ள, அவள் கையை அவன் பற்றிக்கொண்டான்.

காற்று கொஞ்சம் பலமாக வீச… “இசை காத்து ஒரு மாதிரி இருக்கு. சளி பிடிச்சுடும். வா உள்ள போலாம்” அவன் அழைத்தவுடன், அவன் கையை அவள் இறுக பற்றிக்கொண்டாள் வேண்டாம் என்பதுபோல.

“நல்லா இருக்கு இளா. காலைல இருந்து அது இதுன்னு ஒரே தொல்லை. இப்போ தான் நிம்மதியா மூச்சு கூட விட முடியுது” என்றாள் காற்றை ரசித்தபடி. அவன் அவளை ரசித்தபடி நின்றிருந்தான்.

வானம் சின்ன சின்ன தூறல்களைத் தூவ, ப்ரியா அவன் கையை விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளிச்சென்று “வாவ்… மழை பெய்யப்போகுது” என்றாள் வானத்தை பார்த்து. அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது.

இப்போது பலத்த காற்றுடன், தூறல் அதிகமாக, காற்றுக்கு ஏற்றாற்போல அவள் புடவையும் அங்கும் இங்கும் அசைந்தது.

“உள்ள போலாம் இசை” என்றான் மறுபடியும். காதில் விழாதது போல இருந்தாள் அவள். அவன் கண்கள், அவன் போட்டுக்கொண்ட எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீற, ‘ஐயோ கேட்க மாட்டேங்கறாளே’ என உடனே முகத்தை திருப்பிக் கொண்டான்.

திடீரென பெருத்த மழை ஆரம்பித்தது.

“வா இசை… போதும். மழை ஆரம்பிச்சிடுச்சு” என அவள் கைப்பற்றி கொஞ்சம் பலத்துடன் இழுக்க, அதை எதிர்பார்க்காத ப்ரியா அவன் மேலே மோதி விழப்போக, அவள் விழாமல் இருப்பதற்கு, அவள் இடை சுற்றி பற்றிக்கொண்டான்.

“ஹே பார்த்து” என முடிக்கவில்லை மழை பலமாக கொட்ட ஆரம்பித்தது. இருவரும் முற்றிலுமாக நனைந்தனர். அவன் கை பட்ட இடம் அந்த மழையிலும் சிலிர்த்தது அவளுக்கு.

இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது. 

ப்ரியா கண்கள் அகல, கொஞ்சம் பதட்டத்துடன் மேல் உதட்டை மறுபடியும் சின்னதாக கடித்தபடி பார்க்க, அவன் அவனுக்கே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது.

அவள் கண்களில் இப்போது பல பரிமாணங்களை பார்த்தான் செழியன். 

அவனின் ஒரு கை அவள் இடை சுற்றியிருக்க, மற்றொரு கையால் அவள் கன்னத்தை பற்றி, பெருவிரலால் கன்னத்தில் இருந்த மழைநீரில் கோலமிட்டான். ப்ரியாவின் கண்கள் படபடத்தது.

பின் அவன் மேல் உதட்டை மெல்ல வருடி அதற்கு விடுதலை தர, அந்த தொடுகையில் ப்ரியாவின் உடல் முழுவதும் சிலிர்த்தது.

அவள் கண்களில் அடுத்தென்ன என்ற ஆர்வம் தெரிந்ததோ அவனுக்கு?!

மெதுவாக அவள் இதழருகே அவன் குனிந்தவுடன், அவனின் அந்த மூச்சுக்காற்றில் முற்றுலுமாக தடுமாறினாள் ப்ரியா. 

அவளறியாமல் அவள் கண்கள் மூட, அவள் இதழ்களை அவனிதழ் கொண்டு இணைக்கும் நேரம்… சிவபூஜையில் கரடியாய் இடி இடித்தது!

அதில் தன்னிலைக்கு வந்த இருவரும் அசடு வழிந்து சட்டென விலகினார்!

இருவர் முகத்திலும் ஒரு சின்ன ஆசை, தவிப்பு. இத்தனை நாட்களில் இதுபோல உணர்வுகளுக்கு அதிகம் ஆட்படாமல் இருந்தார்கள். இப்போது உரிமையின் எல்லை அதிகரிக்க, அவர்களுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்.

“நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்” தயக்கத்துடனும் தவிப்புடனும் சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட, ப்ரியாவிற்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது அவளுடைய உடை கீழே இருக்கிறது என்று.

‘இவன் வேறு உள்ளே சென்றுவிட்டான், என்ன செய்வது’ என்ற யோசனையுடன் மழையிலே நின்றாள்.

உடை மாற்றாமல் வெளியே வந்த செழியன், “மழைலையே நிக்காத இசை. உடம்புக்கு வந்துடும். இங்க வா” என்று அழைத்து, “உன் டிரஸ் எதுவும் இங்க இல்லைல. இப்போ கீழ போக வேணாம். இந்தா டவல். அப்புறம் இந்த டிரஸ் மாத்திக்கோ. பாத் ரூம்ல போய் மாத்திக்கோ” என அவனுடைய ஒரு உடையை கொடுத்தான்.

அவள் முகத்தில் புன்னகை. எட்டி அவன் கன்னத்தில் ஒரு சின்ன முத்தத்தை கொடுத்த ப்ரியா… “தேங்க்ஸ் இளா” என்றுவிட்டு அதே புன்னகையுடன் சென்றுவிட்டாள்.

செழியன் தான் அப்படியே விழி விரித்து நின்றான். கை தானாக அவள் இதழ் பட்ட இடத்தை தொட்டு பார்க்க, அவன் முகத்திலும் புன்னகை.

முன்பு அவன் உடையை அவள் உடுத்திய போது இருந்த தயக்கம் இப்போது இல்லை அவளிடம். உடை மாற்றிக்கொண்டு அவள் உள்ளே வர, அவனும் உடை மாற்றிவிட்டு அறையை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான்.

“என்ன இளா இதெல்லாம். ரொம்ப பழசா இருக்கே” என கேட்டபடி அவன் பக்கத்தில் வந்து பார்க்க… “பழைய புக்ஸ் இசை. நான் எதையுமே டிஸ்க்கார்ட் (discard) பண்ண மாட்டேன். என்னோட KG புக்ஸ் கூட இருக்கு” புன்னகைத்துக்கொண்டே பெட்டியில் அடுக்கி வைத்தான்.

அனைத்தையும் மேல் அடுக்கில் வைத்துவிட, அலமாரியில் ஒரு போட்டோ இருந்தது.

“ஆண்ட்டி’யா? அழகா இருக்காங்க” கேட்டபடி அவள் எடுக்க… “ஹ்ம்ம்” மிகவும் குறைந்த குரலில் பதில் தந்தான்.

அவள் திரும்பிப்பார்க்க, அவன் புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

“ஸாரி இளா” அவள் சொன்னதும், “ஹே எதுக்கு ஸாரி. நீ டையர்ட்’டா தெரியற. படுத்துப்போமா” என்று அவன் படுக்கையை சரி செய்தான்.

அவளுக்காக புது படுக்கை என அனைத்தையும் மாற்றியிருந்தான் செழியன்.

அவளுக்கு படுப்பதில் இப்போது விருப்பம் இல்லை என்பதுபோல, “இந்துமதி பத்தி சொல்றேன்னு சொன்னியே இளா. இப்போ சொல்லு” நன்றாக சம்மணமிட்டு அவள் படுக்கையில் உட்கார்ந்தபடி கேட்டாள்.

செழியன் திருமணத்திற்கு கணவன் குழந்தையுடன் இந்துமதி வந்திருந்தாள். அவள் வருவாள் என்று நினைக்கவே இல்லை செழியன். அவன் நண்பர்கள் என்று வந்தது அவளும், மற்றொரு கல்லூரி நண்பனும் மட்டுமே. அப்போது இந்துமதி குறித்து சொல்கிறேன் என்று சொல்லியிருந்தான்.

ஒரு பக்கமாக படுக்கையில் படுத்தவன், இந்துமதியை பார்த்தது, பின் அவளுக்கு திருமணம் ஆனது என அனைத்தையும் சொன்னான்.

“நீ ரிசல்ட் பத்தி கேட்டப்ப சொன்னேனே… ப்ராஜக்ட் மார்க் குறைஞ்சுடுச்சுன்னு? ஒரே ஸ்ட்ரெஸ்ட் ஆஹ் இருந்தேன் இசை. நான் நல்லா பேசுற அக்கா, இந்துமதி… ஒரே சமயம் ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு போனது… அவங்க லைஃப். எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி ஆயிடுச்சு.” விட்டதை பார்த்து சொன்னான்.

அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த ப்ரியா… “சரி அதான் இப்போ உன் அக்காவும் இந்துமதியும் சந்தோஷமா இருக்காங்களே. மார்க் அதுல போனா என்ன இளா… மாஸ்டர்ஸ்’ல சேர்த்து வச்சு எடுத்துட்டயே” என்றவுடன், அவளை பார்த்து புன்னகைத்தான்.

ப்ரியா மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க… திடீரென “இளா அந்த சிவா இருக்கானே… அவனுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுபோல. FBல அப்டேட் பண்ணிருக்கான்” ப்ரியா சொன்னதும், “யாரு?” என்று புரியாமல் பார்த்தான்.

“அதான் அந்த அமெரிக்கா செட்டில்ட். வீட்ல மொதல்ல பார்த்தங்களே” என்றாள்.

“ஓ” என்றவன், சில நொடிகள் மௌனத்திற்கு பின், “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே இசை?” அவன் கேட்டவுன், இப்போது ப்ரியா புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு ஏதாச்சும் வேணும்னா, இனி என்கிட்ட கேளு ப்ளீஸ். ஏதாவது வழி பண்ணி நம்மளே மேனேஜ் பண்ணிடலாம். பட் வீட்ல கேட்காத. ஏற்கனவே அப்பா அன்னைக்கு ‘நான் சரியா சம்பாதிக்கல. உன்னை நான் நல்லா பார்த்துக்கறது கஷ்டம். அந்த அமெரிக்கா பையனுக்கே கல்யாணம் பண்ணிடுங்க’ன்னு பேசினது ரொம்ப சங்கடமா இருந்துச்சு”

அவன் கொஞ்சம் தயங்கி சொன்னவுடன்… ‘அன்று அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும், யாருக்குமே அது தன்மான பிரச்சனை தானே’ என்று புரிந்த ப்ரியா, அவன் அருகில் படுத்துக்கொண்டு…

“நான் அன்னைக்கே பேசியிருப்பேன் இளா. பட் அப்போ நான் ஏதாச்சும் சரியா பேச தெரியாம பேசி வச்சு, புதுசா ஏதாச்சும் ப்ராப்லம் வந்துடுமோன்னு தான் பேசல. எல்லாம் நல்லபடியா முடியணும்னு கொஞ்சம் சுயநலமா யோசிச்சுட்டேன் ஸாரி” 

“அம்மா கூட சொன்னாங்க. நீ கல்யாணத்துக்கு செயின், ரிங், பிரேஸ்லெட் எதுவும் வேணாம்னு சொல்ற. உன்கிட்ட பேச சொல்லி சொன்னாங்க. நான் அவனுக்கு வேணாம்னா விட்டுடுங்கன்னு சொல்லிட்டேன். அப்புறம் அக்கௌன்ட்’ல பணம் போடறோம் செலவுக்குனு வீட்ல சொன்னாங்க. அது கண்டிப்பா உனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரியும்… வேணாம், நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அவன் முகத்தில் புன்னகை. ‘தன்னை பற்றி எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறாள்’ என நினைத்து… “தேங்க் யு” என்றான்.

“இரு இன்னும் முடிக்கல. என் கல்யாணத்துக்குன்னு சேர்த்து வச்ச பணம்னு சொன்னாங்க. அவங்களையும் கஷ்ட படுத்த மனசில்லை. சோ அத FD போட்டு குடித்துடுங்க… நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். நம்ம அத எடுக்க வேண்டாம். ஒகே தானே” அவள் அவனை பார்க்க… அவள் முகத்தில் புரண்ட கூந்தலை காதுக்கு பின் தள்ளி… “அது உனக்கு அவங்க பண்றது. அத தடுக்க எனக்கு உரிமை இல்ல” என்றான் புன்னகையுடன்.

பின் அவன், “அப்புறம் நீ படிச்சு முடிச்சிட்டு கரியர் பர்சியூ (career pursue) பண்ணனும் இசை. இவ்ளோ படிச்சது வீணாகக்கூடாது. ஸெல்ஃப் இண்டிபெண்டன்ஸ் இஸ் மோர் இம்பார்ட்டண்ட் (self independence is more important). யார் இருந்தாலும் இல்லைனாலும், உன்னோட வேலை உன் கூடவே உனக்கு துணையா இருக்கும்” அவன் சொன்னவுடன், கண்கள் கலங்கியது ப்ரியாவிற்கு.

நீட்டியிருந்த அவன் கைகளில் வந்து அவனிடம் ஒடுங்கிக் கொண்டாள்.

“ஹே என்னாச்சு இசை” அவன் கேட்டவுடன், கண்களில் கண்ணீர் கோர்க்க,  “அம்மா சொன்னாங்க இளா. வேலைக்கு போறேன்னு அடம் பண்ணாத. கல்யாணம் ஆனா பொண்ணுங்களுக்கு வீடு தான் முதல் ப்ரையாரிட்டி… வீட்டை பார்த்துக்கோ வேலை எல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க. நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்” 

“ஹ்ம்ம் தெரியும் இசை என்கிட்டயும் சொன்னாங்க. அப்போ ஆர்கியூ பண்ண வேணாம்னு விட்டுட்டேன். உன்கிட்ட பேசிக்கலாம்னு இருந்தேன். நம்ம வீட்டை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துப்போம்” சேர்ந்து’ என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து அவன் சொன்னவுடன், கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள்.

சில நொடிகளுக்கு பின், “அப்புறம் இளா” அவள் கொஞ்சம் தயங்கி… “படிச்சு முடிக்கறவரை, அந்த விஷயத்துல நம்ம கொஞ்சம் safe ஆஹ் இருந்துப்போமா” மறைமுகமாக கேட்க, “நீ சொல்லவே வேணாம். எல்லாம் நம்ம கைல தான் இருக்கு… பார்த்துப்போம்” என்றான் புன்னகை முகம் மாறாமல்.

அவன் கைவளைவிற்குள் அவள். அவளை அணைத்தபடி அவன். இருவரும் சிறிது நேரம் அப்படியே வாழப்போகும் வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார்கள்.

பின் தூக்கம் வருகிறது என்று சொல்லி அவள் அப்படியே தூங்க, அவளை பார்த்தபடி அவனும் தூங்கிவிட்டான்.

அடுத்தநாள், கிட்டத்தட்ட மதியம் நெருங்கும் போது தான் அவன் எழுந்தான். ப்ரியா அப்போதும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் முழித்தவனுக்கு கனவு போல இருந்தது. மெதுவாக அவள் ஏழாவண்ணம் நெற்றில் இதழ் பதித்துவிட்டு வெளியில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

வெளியே கவிதா, மொட்டை மாடி கதவை தட்டி தட்டி திறக்கப்படாமல் போக, மெதுவாக தள்ளினாள் கதவு திறந்தது.

செழியன் அறைக்கதவும் திறந்திருக்க, “செழியா” என குரல் கொடுத்தாள். குளியல் அறையில் இருந்து அவன் குரல் கேட்டது.

அறைக்கதவை தட்டிக்கொண்டே கவிதா ப்ரியாவை அழைத்தவுடன், தன் வீடு என நினைத்த ப்ரியா… “குட் மார்னிங் அண்ணி” சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தாள்.

கவிதா அவளை பார்த்து புன்னகைக்க, அப்போதுதான் சுற்றி பார்த்தாள் ப்ரியா. பின் தன்னை பார்த்தாள். செழியன் உடையில் இருந்தது அப்போதுதான் உறைத்தது. 

அவள் முகம் வெட்கத்தை காட்ட… “உன் டிரஸ் எல்லாமே கீழ இருந்துச்சு. அத்தை வேற நீ எந்திரிக்கலன்னு உன்னை எழுப்ப அனுப்பினாங்க” என்று ப்ரியாவின் உடையை கொடுக்க… அது புடவை.

“ஐயோ அண்ணி. மறுபடியும் புடவையா…” சலித்தபடி கேட்டாள் ப்ரியா. “அத்த தான் குடுத்தாங்க…” என்று சொல்லும்போது செழியன் வந்தான்.

“இந்த அம்மாவ… அண்ணி நீங்க இங்கயே இருங்க. நான் குளிச்சிட்டு வந்துடறேன். கட்டி விடுங்க” என்று அவள் அவசரமாக குளியல் அறைக்குள் சென்று விட்டாள்.

“ஏன் கா… வேற டிரஸ் குடுக்கலாம்ல பாவம்” புன்னகையுடன் அவன் கேட்க, “நான் என்ன பண்ணுவேன்… அவங்க தான் குடுத்தாங்க டா” என்று இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள்.

கவிதாவும் ப்ரியாவும் உள்ளே புடவை கட்டிக்கொண்டிருந்தனர். செழியன் வெளியில் காத்திருந்தான்.

‘இவர்களை இன்னமும் காணவில்லையே’ என்று அகிலனும் மேலே வந்தான் கையில் காபி ட்ரேயுடன். 

செழியன் வெளியில் நிற்பதை புரியாமல் அகிலன் பார்க்க, “அக்கா உள்ள சாரீ கட்டிவிட்டுட்டு இருக்காங்க” என்றான் கொஞ்சம் தயங்கி.

“அம்மா அப்பா பக்கத்துல கோவிலுக்கு போயிருக்காங்க செழியா. மாமாவும் கூட போயிருக்கார். எதுவும் சாப்பிடாம இருக்கீங்களே ரெண்டு பேரும். டீயும் ஆறிடும்னு எடுத்துட்டு வந்தேன். ப்ளாக் டீ தானே” என்று புன்னகையுடன் அகிலன் அவனுக்கு தந்தான்.

செழியனுக்கு ஏதோ ஒரு நல்ல உணர்வு மனதினுள். இதுபோல சொந்தமெல்லாம் அவன் பார்த்ததில்லை. பழகியதில்லை.

அப்போது சரியாக ப்ரியாவும் கவிதாவும் வெளியே வந்தனர்.

அகிலன் ப்ரியாவுக்கும் டீயை கொடுத்து, “அம்மா வர்றதுக்குள்ள வந்துடுங்க. இல்ல திட்டு விழும் ப்ரியா” புன்னகையுடன் கவிதாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.

“ஏன் திட்டுவாங்க?” செழியன் புரியாமல் கேட்க, “காலைல ஆறு மணிக்கு எந்திருச்சுடணும். சமையல் முழுசும் பார்த்துக்கணும். ஒழுங்கா குடும்பத்தை பார்த்துக்கணும். உன்னை வா போன்னு சொல்லக்கூடாது. மரியாதையா கூப்பிடணும்னு நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. டிபிக்கல் ஓல்ட் டைப்” சலிப்புடன் சொன்னாள்.

அவன் சிரித்தான். அந்த சிரிப்பு அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை ரசித்துக் கொண்டே, இருவரும் படியிறங்க… ப்ரியாவிற்கு அவனிடம் அந்த படியில் நின்று, அகிலன் திருமண சடங்கின் போது  ‘எப்படி உடை உடுத்த வேண்டும்’ என்று சொன்னது, அதற்கு அவன் முழித்தது என்பதெல்லாம் நினைவுக்கு வர, திரும்பி அவனை பார்த்தாள்.

அவன் ‘என்ன’ என்று பார்க்க, எம்பி அவன் கன்னத்தில் ஒரு சின்ன முத்தம் கொடுத்து… “ஐ லவ் யு” சொல்லிவிட்டு புடவையை தூக்கியபடி ஓடிவிட்டாள்.

இப்போதும் செழியன் ‘பே’ என விழித்தான். பின் புன்னகை ஒட்டிக்கொண்டது.

அன்றைய தினம் அப்படியே கழிய, இருவரும் மும்பை கிளம்பத் தயாரானார்கள் புது வாழ்வை அழகாக துவங்க… ஆனால் அவர்களுக்காக அங்கே காத்திருப்பது?!