t11
t11
தொடுவானம் 11
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போஉன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
கங்காவைத் தன்னுடன் அழைத்துச் சென்று விடலாம் என்ற நோக்கத்துடன் ஆகாஷின் வீட்டுக்கு வந்தார் காசிராஜன். உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்த காரசாரமான விவாதத்தில் பேத்தி படும் துயரைக் கண்டவர் மனம் பதறி உண்மையைக் கூற வந்தார்.
இதனால் தான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது.
“வேணாம் தாத்தா… எதுவும் சொல்லாதீங்க…” என்று கெஞ்சிய கங்காவை ஆதரவாக அணைத்துக் கொண்டவர்,
“என் பாவங்களை எந்த கங்கையில் மூழ்கினாலும் கரைக்க முடியாதும்மா. கடைசி காலம் வரை உன் முகத்தைப் பார்த்துகிட்டு இருந்தாலே எனக்கு போதும். என்னைச் சொல்ல விடு. இதனால் எனக்கு என்ன தண்டனை கிடைக்குமென்றாலும் பரவாயில்லை” என்றவர், எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததிலிருந்து கூறத் தொடங்கினார்…
உடன்குடியுடன் சேர்ந்த குலசேகரப்பட்டினம் தான் கங்காவின் பூர்வீகம். அந்த ஊரின் பெரும் பகுதி நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டு, ஊரின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு செல்வாக்கான மனிதர் சந்தனபாண்டியன். அவரது இல்லத்தரசி லஷ்மி.
ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும், சந்தனபாண்டியன் பெண்கள் விஷயத்தில் மிக மோசமானவர். கிராமத்து சொலவடை ஒன்று உண்டு, “கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல ____” என்று. இவர் சுத்தி இருந்த அத்தனை ஊர்களிலும் ஊருக்கொரு குரங்கு வைத்திருந்தார்.
அவர் முகத்தின் முன் புகழ்பவர்கள் கூட அவருக்கு பின் இகழ்ந்துதான் பேசினர். லஷ்மி பெயருக்கு ஏற்றவாறு மிகவும் சாந்தமானவர். கணவரது தவறுகள் தெரிந்தாலும் தட்டிக் கேட்க முடியாத கோழை அவர். கணவரை மீறி எதையும் செய்யும் தைரியமின்றி அனைத்தையும் தனக்குள்ளே போட்டுப் புழுங்கும் சாதாரணப் பெண்மணி அவர்.
திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துதான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. தன் மகனுக்கு தர்ம ராஜன் எனப் பெயரிட்டு வாழ்வின் ஆதாரம் இனி தன் மகனே என்று எண்ணி வளர்த்தார். அவன் தந்தையிடம் இல்லாத ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் தன் மகனுக்குத் தாய்பாலுடன் சேர்த்துப் புகட்டினார்.
தர்ம ராஜனுக்கு ஒரு வயதாகும் போது, அவ்வூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம் என்று குழந்தையுடன் சென்றார் லஷ்மி. குழந்தையின் பெயரில் அர்ச்சனையை முடித்துவிட்டு வெளியே வந்தவரின் கால்களில் வந்து விழுந்தாள் ஒரு பெண்.
“என் வாழ்க்கையே நாசமாப் போச்சு ம்மா… எனக்கு ஒரு வழிய சொல்லுங்கம்மா…” என்று கதறி அழுதாள்.
பதறிய லஷ்மி, “,அம்மாடி, என்ன ஆச்சும்மா? என் கால்ல ஏன் வந்து விழற.”
அவள் கூறிய விஷயங்கள் லஷ்மியை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. இதுவரை கணவனின் லீலா வினோதங்கள் தெரியாதவரல்ல; இருந்தாலும் வலுக்கட்டாயமாக யார் வாழ்க்கையையும் அழித்ததில்லை, என்று எண்ணியிருக்க ; சிறு பெண் என்றும் பாராது , இவளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கணவனை வெட்டிப் போடும் வெறி எழுந்தது.
கையில் குழந்தையோடு தானும், வயிற்றில் குழந்தையோடு இவளும் இருக்கும் நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்தார். அவளைக் கையோடு அழைத்துச் சென்று அவரிடம் நியாயம் கேட்க, திமிரான பதிலே கிடைத்தது.
“ஏய்… என் கூட இருந்தவளுக்கெல்லாம் நான் தாலி கட்டனும்னா, இந்த வீட்ல இடமே பத்தாதுடி. அப்புறம் நீயும் உன் பிள்ளையும் தெருவுக்குத்தான் போகனும்.”
“பெண் பாவம் பொல்லாததுங்க. அந்தப் பொண்ணு வயித்துல உங்க வாரிசு வளருதுங்க”
“அட ச்சீ… எவடி இவ, என் வாரிசு இதோ இருக்கானே என் புள்ள தர்மன், இவன்தான்டி. ஒரு நேரம் படுத்து எந்திரிச்ச சாதி கெட்டவ பெத்ததெல்லாம் என் வாரிசாகுமா?”
“போய், அஞ்சோ பத்தோ காசக் குடுத்து அவள பத்தி விடற வழியப் பாருடி. பெருசா எனக்கு புத்தி சொல்ல வந்துட்டா…”
மேலும் வாதாடிய லஷ்மிக்கு கிடைத்தது அடியும் உதையும் மட்டுமே. அது மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணையும் தகாத வார்த்தைகள் கூறி அடித்து விரட்டினார் சந்தன பாண்டியன்.
அந்தப் பெண் வயிற்று பாட்டுக்கு ஆடுகள் மேய்க்கும் பெண். அவள் பெயர் சந்திரா. தாய் தந்தையை இழந்த அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒரு பாட்டி மட்டுமே. ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாகச் சென்ற சந்தன பாண்டியன் பார்த்து ஆசை கொண்டு, அவள் வாழ்க்கையை நாசப்படுத்தியது மட்டுமல்லாமல், நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும் சென்றார்.
வயிற்றில் குழந்தை வளரவும் செய்வதறியாது தவித்தவள், லஷ்மியைத் தஞ்சமடைந்திருந்தாள். மானத்தையும் இழந்து, வாழ்க்கையையும் இழந்து, வயிற்றில் பிள்ளையோடு அடித்து விரட்டப்பட்ட சந்திரா, இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போனாள்.
கணவரிடம் ஆனமட்டும் போராடிப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காவது ஏதேனும் செய்வோம் என்று, சந்திராவைத் தேடி வந்த லஷ்மி பார்த்தது, ஊர் கிணற்றில் விழத் தயாராக நின்றிருந்த சந்திராவைத்தான்.
ஓடிச் சென்று அவளைத் தடுத்த லஷ்மி, “என்ன காாரியம் செய்யப் போற சந்திரா? உன் வயித்துல வளர்ற குழந்தை என்ன பாவம் பண்ணுச்சி? அதுவும் உன்னோட சேர்ந்து அழியனுமா?”
கதறி அழுத சந்திரா, “நான் பாவப்பட்ட ஜென்மம் ம்மா… பெத்தவங்க இல்லாம அநாதையா, கால் வயித்து கஞ்சிக்கு கஷ்டப் பட்டாலும், மானத்தோட இருந்தேன். இப்ப கழுத்துல தாலியேறாம, வயித்துல பிள்ளையோட மானம் போய் வாழறதுக்கு சாகறதே மேல்”
“ஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குன உங்க புருஷனோட வம்சமே நல்லாயிருக்காது. அவர் பெத்த பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தா சும்மா இருப்பாரா?”
கையைக் கூப்பி கண்ணீர் விட்டு அழுத லஷ்மி, “ஐயோ… சாபம் விடாதம்மா… உன் கால்ல விழுந்து கேட்குறேன். உன்னையும் உன் பிள்ளையையும் நான் பார்த்துக்கறேன். ஏற்கனவே யார் விட்ட சாபமோ எங்க வம்சத்தில இதுவரை பெண்பிள்ளையே பிறந்ததில்லை. இன்னோரு சாபத்தைக் குடும்பம் தாங்காதும்மா” என்று கதறினார்.
ஒருவாறாக சந்திராவை சமாதானப்படுத்தி அழைத்து வந்த லஷ்மி, அவளது பாட்டியுடன் அந்த ஊரின் ஒதுக்குப் புறமாக இருந்த வீட்டில் குடிவைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
பிரசவத்தின் போது சந்திரா இறந்துவிட, குழந்தையை பாட்டியின் பொறுப்பில் விட்டு வளர்த்தார். அந்தக் குழந்தைக்கு காசிராஜன் எனப் பெயரிட்டார். தனது மகனிடமும் காசியை உனது தம்பி என்று கூறி, அவனை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்த்தார்.
இவையனைத்தும் ஊர்மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரியவரவும், காசிராஜனை இகழ்ந்து பேச ஆரம்பித்தனர். விபரம் அறியாத வயதில் இவையெல்லாம் புரியாவிட்டாலும், சற்று விபரம் வந்த பிறகு பெரிதும் அவமானமாக உணர்ந்தார் காசி.
இதற்கிடையில் காசியைப் பார்த்துக் கொண்ட பாட்டியும் இறந்துவிட தனித்து இருந்த காசியின் எண்ணங்களில் சாத்தான் வாசம் செய்யத் தொடங்கினான்.
தர்ம ராஜன், தம்பி என்று காசியின் மீது பாசமாக இருந்தாலும், காசிக்கு தர்மனின் மீது பெரும் வஞ்சம் இருந்தது. ஒரே தகப்பனுக்குப் பிறந்திருந்தும், தர்மனுக்கு கிடைத்த மாளிகை வாசமும் , பெரிய வீட்டுப் பையன் என்ற அந்தஸ்தும், வசதி வாய்ப்புகளும் தனக்குக் கிடைக்காததில் உள்ளுக்குள் பழிவெறி தாண்டவமாடியது.
பிள்ளைகள் இருவரும் வளர்ந்து வாலிபம் அடைந்தனர். லஷ்மி சந்திராவின் குழந்தையை வளர்க்கப் பணம் கொடுப்பது சந்தன பாண்டியனுக்கும் தெரியும். தன்னைத் தொந்தரவு செய்யாத வரை அவர் எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், லஷ்மியை நம்ப முடியாமல், சீர் கெட்டு வரும் தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தனது அனைத்து சொத்துக்களுக்கும் ஏகபோக வாரிசு தர்மனே என்று, உயில் எழுதி வைத்திருந்தார்.
சந்தன பாண்டியனின் மறைவிற்குப் பிறகு வெளிவந்த இந்த உயில், காசியை மேலும் கடுப்பேற்றியது. லஷ்மி தனது தாய் வீட்டு சீதனமாக வந்த சொத்துகளை இரண்டு பாகமாகப் பிரித்து தர்மனுக்கும் காசிக்கும் எழுதி வைத்தார்.
காசியையும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்து, இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தர்மரிடம் கேட்டுக் கொண்டார் லஷ்மி.
இருவருக்கும் பெண் பார்க்கும் போது மீண்டும் சிக்கல் துவங்கியது. தர்மனுக்கு பெண் கொடுக்க முன் வந்தவர்கள் காசிக்குத் தரத் தயங்கினர். இதனால் வேற்று இனத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணான விஜயாவை காசிக்கும், தங்கள் இனத்துப் பெண்ணான புவனாவை தர்மனுக்கும் மணமுடித்து வைத்தார் லஷ்மி.
இதன் காரணமாகவும் தர்மனின் மீதான காசியின் துவேஷம் அதிகரித்தது.
தர்மனுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், காசிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தன. தன் வம்சத்தில் பெண் வாரிசு அற்றுப் போனதே என்ற கவலையிலேயே லஷ்மியின் உயிர் பிரிந்தது.
தர்மன் காசியைத் தனது வலது கை போல எண்ணியிருந்தார். தம்பியைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை அவர். ஊராரின் பேச்சுக்கள் சற்று அடங்கியிருந்தாலும், தர்மனுக்குக் கிடைப்பது போல மதிப்பும் மரியாதையும் காசிக்குக் கிடைப்பதில்லை.
காசி கொஞ்சம் கொஞ்சமாக, அண்ணனை ஏமாற்றி பெருவாரியான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி இருந்தார். வெகுளியாக இருந்த தர்மரும் தன் தம்பி போடச் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்.
கடைசியாக பரம்பரை பரம்பரையாக குடி இருந்த பெரிய மாளிகையும் தர்மனின் கையைவிட்டு காசியின் புறம் சென்றபோது இருவரது வாரிசுகளும் வாலிபப் பருவத்தை அடைந்து திருமணம் முடித்திருந்தனர்.
தர்மனின் மூத்த பிள்ளைக்கு வெகு காலமாக குழந்தையில்லாமல் இருந்து, பிறகு பிறந்தவள் தான் கங்கா. மற்ற அனைவருக்கும் ஆண் வாரிசுகளே.
பல தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த ஒற்றைப் பெண் வாரிசு கங்கா. அவளைத் தரையில் விடாமல் தாங்கினர் அனைவரும். வீட்டின் அனைவருக்கும் செல்ல இளவரசியாக வளர்ந்தாள்.
கங்காவுக்கு ஐந்து வயதாகும் போதுதான், தனது தம்பி தன்னை ஏமாற்றி அனைத்துச் சொத்துகளையும், அவனது பெயருக்கு மாற்றிக் கொண்ட விபரம் தர்மருக்குத் தெரிய வந்தது. தனது தம்பி தன்னை ஏமாற்றி விட்ட அதிர்ச்சியில் அவரது உயிரும் பிரிந்தது.
அதன் பிறகு தயவு தாட்சண்யம் இல்லாமல், தர்மரின் வாரிசுகள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார் காசிராஜன். சொந்த மண்ணில் சொத்துக்கள் இல்லாமல், ஏமாந்து போன அவமானத்தோடு வாழ முடியாமல், ஊரை விட்டு வெளியேறினர் கங்காவின் அப்பா சித்தப்பா அனைவரும்.
எங்களது தந்தையை ஏமாற்றி பிடுங்கியது இந்த சொத்துகள் அனைத்தும். எல்லா சொத்துகளுக்கும் நேர் வாரிசு எங்கள் தந்தை தர்மரே. காசி முறையற்று பிறந்தவர் என்று கோர்ட்டில் கேஸ் ஒன்றைப் போட்டுவிட்டு, வேலூர் வந்து சேர்ந்தனர்.
அண்ணன் தம்பிகள் மூவரும் மளிகைக் கடை ஒன்றை வைத்து கடுமையாக உழைத்தனர். பின்னர் வேலூரில் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டை வாங்கி அதில் குடியேறினர்.
பழைய பிரச்சனைகளைச் சற்று மறந்து, சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் மேலும் சந்தோஷத் திருப்பமாக, கோர்ட்டில் அவர்கள் போட்டிருந்த கேஸ் அவர்கள் புறம் தீர்ப்பாகியது.
இனி எந்தக் கஷ்டமும் இல்லை, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக நடைபெற்ற வழக்கு சாதகமாக முடிந்தது, இனி நம்முடைய பூர்வீக வீட்டில் வசிக்கலாம் என்று சந்தோஷமாக எண்ணினர்.
ஆனால் காசியோ வெறியின் உச்சத்தில் இருந்தார். வழக்கில் தோற்றுச் சொத்துக்களை இழந்தது மட்டுமில்லாமல், முறையற்று பிறந்தவர் என்று நிரூபணமானதில் அனைவரையும் கொன்று விடும் அளவு ஆங்காரத்தோடு இருந்தார்.
தர்மராஜன் இருந்த காலத்தில் இருந்து அந்த வீட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் வரதன் என்பவர். தர்மரிடம் விசுவாசமாக இருந்தவர், அவரது பிள்ளைகள் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி மிகவும் வருந்தியவர் அவர்.
பெரிய வீட்டில் காசி செய்யும் அத்தனை செயல்களையும் கங்காவின் அப்பாவுக்குச் சொல்வதும், வழக்குக்கு தேவையான ஆவனங்களை காசிக்குத் தெரியாமல் எடுத்துத் தருவதுமாக உதவியாக இருந்தார். வழக்கில் வென்றதும் வேலூருக்கு கங்காவின் பெற்றோர்களைப் பார்க்க வந்தார் வரதன்.
“ஐயா, வழக்குல நீங்க ஜெயிச்சதுல, சின்னவரு(காசி) வெறி வந்தாப்புல இருக்காருங்க. நீங்க மறுபடி ஊருக்குள்ள வந்துரக் கூடாதுன்னும், உங்க வம்சத்துல யாரும் உசிரோட இருக்கக் கூடாதுன்னும் மவனுங்கள்ட்ட பேசிகிட்டு இருந்தாருங்க.”
“ஐயா, இனி நீங்க வெளியூருல இருக்கறது அவ்வளவு உசிதமில்லீங்க. நம்ம ஊருக்குள்ள வந்துட்டீங்கன்னா அவரால ஏதும் செய்ய முடியாதுங்க. அதனால இரண்டு மூனு நாள்ல இந்த ஊர காலி பண்ணிட்டு நம்ம ஊருக்கு வந்துருங்கய்யா” என்று கூறிச் சென்றார்.
அவர் கூறுவதும் சரி என்று படவே, கடையை நம்பகமான ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு, வீட்டையும் அவரிடமே விற்றுவிட்டனர். பிள்ளைகள் படிப்பைக் கூட அங்கு சென்று தொடர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
அனைத்து சாமான்களையும் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒரு வண்டியில் குலசேகர பட்டினத்துக்கு கிளம்பிச் சென்றனர்.
ஆனால், இவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த காசி, அவர்கள் செல்லும் வண்டிக்கு விபத்தை ஏற்படுத்த ஆட்களை ஏற்பாடு செய்தார். அப்போது நடந்த விபத்தில் அனைவரும் இறந்து விட்டதாக அவருக்கு தகவல் போனது.
ஆனால் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிய கங்காவை அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்த விபரம் அவருக்கு சற்றுத் தாமதமாக் கிடைத்தது. விரைந்து வந்தவர், தன் அண்ணனின் வாரிசுகள் இறந்துவிட்டனர் என்று பொய்யாக அழுது நாடகமாடி, அனைவரது உடல்களையும் முறையாகப் பெற்று அடக்கம் செய்தார்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சரணடைந்ததால், போலிஸும் இதனை விபத்து என்றே முடிவு செய்தனர். கங்காவை அனுமதித்திருந்த மருத்துவமனை ஊழியரைப் பணத்தைக் காட்டி தன் வசம் சாய்த்த காசி, மருத்துவமனையிலேயே அவளைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தார்.
ஆனால், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ரோசி, கங்காவைக் கொல்ல நடக்கும் சதியை அறிந்து மனம் வருந்தியவர், தன்னுடைய கணவரின் துணைகொண்டு, ஊட்டியில் இருந்த ஸிஸ்டர் ஸாண்ட்ராவிடம் அனைத்து விபரங்களையும் கூறி கங்காவை அனுப்பி வைத்தார்.
ஊட்டியில் கங்காவுக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்து அவளை மீண்டு வரச் செய்தார் ஸாண்டரா ஸிஸ்டர். அவள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலேயே அவளை வெளியே எங்கும் விடாமல் பார்த்துக் கொண்டார்.
அவரது மறைவுக்குப் பின் அங்கே இருக்க முடியாமல் வெளியே வந்த கங்கா, காசியின் ஆட்கள் கண்ணில் பட்டாள். அவளைக் கொல்லத் துரத்தும் போது ஆகாஷின் காரில் விழுந்தாள் என்று பழைய கதையைக் கூறி முடித்தார் காசி.
கங்காவின் விசும்பலைத் தவிர வேறு சத்தமில்லாமல் அறையே மௌனமாக இருந்தது. கேவலம் சொத்துக்காக தன்னை ஆளாக்கிய குடும்பத்தையே அழித்த காசியின் மீது அடக்க முடியாத கோபம் கணன்றது அனைவருக்கும்.
“இந்த விபரமெல்லாம் நாங்க சொல்லிதான் இந்த பிள்ளைக்கு தெரியும். ஆனா அப்பவும் எம் மேல கோபப்படாம மன்னிச்சுவிட்ட என் பேத்தி முன்னாடி நான் கூனிக்குறுகி நிக்கறேன். காலமெல்லாம் அவ காலடியில சேவகம் செஞ்சாலும் என் பாவம் தீராது…” என்று கதறி அழுதார் காசி.
ஒரு குடும்பத்தையே வேரோடு அழித்த காசியின் மீது அனைவருக்கும் வெறுப்பே எஞ்சியிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவளே அவரை மன்னிக்கும் போது, இதைவிட சிறந்த தண்டனையை அவருக்குத் தந்துவிட முடியாது என்றே தோன்றியது. காலமெல்லாம் செய்த தவறை எண்ணிக் கூனிக்குறுகி நிற்பதே பெரிய தண்டனை அல்லவா?
கங்காவை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் அபி. கங்காவை நினைத்து பெரிதும் ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. தன்னால் இப்படி ஒரு மன்னிப்பை எதிரிக்குத் தர முடியுமா என்றால், முடியாது என்றே தோன்றியது. அவளுக்கு எந்த கஷ்டமும் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.
ஆனால் தன் அண்ணனை ஏன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கங்கா கூறினாள் என்கிற விஷயம் மட்டும் புரியவில்லை அவளுக்கு. அதையே ஆகாஷ் கேள்வியாக எழுப்பினான்.
அவள் அருகே வந்தவன்,
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… உனக்கு இருக்கற பெருந்தன்மை எனக்கு கிடையாது கங்கா…”
அவளது கைகளைப் பிடித்துக் கொண்டவன், “இனி எந்த கஷ்டமும் உன்னை நெருங்காம என்னால பார்த்துக்க முடியும். நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கங்கா”
மெல்ல கரங்களை விடுவித்துக் கொண்டவள் கண்களில் கண்ணீரோடு விரக்தியாகச் சிரித்துக் கொண்டாள்.
அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பார்த்தவனை நோக்கி, “கடவுள் என் வாழ்க்கையில நிறைய சோதனைகளை தந்திருக்காரு சார். நீங்க நினைக்கறது இந்த ஜென்மத்துல நடக்காது…
அடுத்து ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா நம்ம ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறனும்னு நான் கடவுள்ட்ட வேண்டிக்கறேன்” என்றவளின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
அவளுடன் நின்றிருந்த காசி, சுந்தரம் சுகுமாறன் மூவருக்குமே அடக்க முடியாத அளவு அழுகை பொங்கியது.
பெரிதாக ஏதோ வரப்போகிறது என்று அவன் இதயம் தாளம் தப்பித் துடிக்க, உள்ளத்தின் நடுக்கத்தோடு கேட்டான், “என்ன சொல்ற…?” “ஏன் என்னாச்சு…?”
ஆகாஷ், அபி, மஞ்சுளா மூவரும் அவள் முகத்தையே பார்த்திருக்க, இறுகக் கண்களை மூடித் திறந்தவள் மெல்லிய குரலில், “ நான் என்னுடைய வாழ் நாட்களை எண்ணிகிட்டு இருக்கேன்.”
“எனக்கு எயிட்ஸ் இருக்கு”
“வாட்…?”
“என்னது…?”
“என்னம்மா சொல்ற…?”
ஏக காலத்தில் குரல்களை எழுப்பினர் மூவரும். ஆகாஷ் அதிர்ச்சி மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மஞ்சுளாவின் விழிகள் நீரால் நிறைந்தது. அபியோ தலையை மறுப்பாக ஆட்டியவாறு,
“நான் நம்ப மாட்டேன் மச்சி… நீங்க பொய் சொல்றீங்க… அதெல்லாம் மோசமான ஆளுங்களுக்குத்தான் வரும். உங்களுக்கு அதெல்லாம் இருக்காது…” என்று கதறி அழுதாள்.
துக்கம் தொண்டையை அடைக்கத் தலையில் அடித்துக் கொண்டு அழுத காசி, “ என் பேத்தி சொக்கத் தங்கம் மா… அவளோட இந்த நிலமைக்கும், பாழாப்போன இந்த படுபாவிதான்மா காரணம்.”
“ஐயோ … என் உசுரு இந்த பூமிக்கு பாரமா இன்னும் இருக்கே… “ என்று கதறி அழுதவர் தன்னால் தன் பேத்திக்கு நடந்த கொடுமையைக் கூறத் தொடங்கினார்.
“அந்த ஆசுபத்திரியில என் பேத்தி உயிருக்கு என்னால ஆபத்துன்னு தெரிஞ்சதால, அவசரஅவசரமா அவளுக்கு வைத்தியம் நடந்துச்சி. அப்ப அவளுக்கு ரொம்ப கஷ்டபட்டுதான் இரத்தம் கிடைச்சிருக்கு.
அவசரத்துல கவனக்குறைவா சரியா சோதனை பண்ணாத இரத்தத்தை ஏத்திட்டாங்க. இந்தப் படுபாவியால என் பேத்தியோட வாழ்க்கையே போச்சும்மா…”
அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட கங்கா, “ஊட்டிக்கு போய் ஒரு வருஷம் எனக்கு எந்த அறிகுறியும் பெருசா தெரியல. என் குடும்பத்தோட இழப்புல நான் உடைஞ்சு போயிருந்த காலகட்டம் அது.
நாளைடைவுல என்னைக் கொஞ்சம் தேத்திக்கிட்டு அங்க இருந்த குழந்தைகளுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்துகிட்டு இருந்தேன். அப்ப, எனக்கு அடிக்கடி ஜுரம் வந்து உடம்பும் வீக் ஆனதும், ஸிஸ்டர் என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க .
இரத்தப் பரிசோதனைகள்ல தான் எனக்கு எயிட்ஸ் இருக்கற விஷயம் தெரிய வந்தது. எனக்கு எப்படி வந்திருக்கும்னு யோசிச்சப்பதான், அந்த விபத்துல இரத்தம் ஏத்தினதாலதான் இருக்கும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.
விஷயம் தெரிஞ்சு ரோசி ஆண்ட்டியும் ஊட்டிக்கு வந்து ஒரேடியா உடைஞ்சு போயிட்டாங்க. தன்னோட அலட்சியத்தாலதான் எனக்கு இப்படி ஆகிடுச்சின்னு அழுதவங்க, அவங்க வேலையை விட்டுட்டாங்க.”
விரக்தியாகப் புன்னகை செய்தவள், “இதுல நான் யார் மேலயும் குத்தம் சொல்ல விரும்பல. எந்த ஜென்மத்துல யார் விட்ட சாபமோ எனக்கு இப்படி ஆகிடுச்சி.
ஸாண்ட்ரா ஸிஸ்டர் இறந்த பிறகு, என்னை அங்க இருக்கறவங்க ரொம்ப இழிவா பேசினாங்க. சின்ன குழந்தைகளுக்கும் என் நோய் பரவிடும்னு என்னை ஒதுக்கி வச்சாங்க. அதனாலதான் அங்க இருந்து வெளியில வந்தேன்.” என்று கூறியவாறு அவளுடைய மருத்துவ அறிக்கைகளை எடுத்து ஆகாஷிடம் கொடுத்தாள்.
“அன்னைக்கு எனக்குத் தேவையான மாத்திரைகளை வாங்கத்தான் ஜி.ஹெச். போனேன்” என்று அபியைப் பார்த்தாள்.
அவளுடைய மருத்துவ அறிக்கையைப் படித்தவனது மனம் கணத்துப் போனது. அடைத்தத் தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டவனின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது.
“இந்த ஜென்மம் மட்டுமில்ல, எந்த ஜென்மத்துலயும் நம்ம பிரியக் கூடாது கங்கா. எனக்கு நீதான் மனைவி. இதை நான் மாத்திக்கறதா இல்ல.”
“சந்தோஷத்தக் கூட இருந்து பங்கு போட்டுக்கறது மட்டுமில்லை காதல். கஷ்டத்திலயும் வேதனையிலயும் கூட இருந்து பங்கெடுத்துக்கறதுதான் உண்மையான காதல். நம்ம லவ் உண்மையானது கங்கா.”
“இப்ப மெடிக்கல் ஃபீல்டு நிறைய முன்னேறியாச்சு. நாம கண்டிப்பா ஒரு நல்ல வாழ்க்கைய வாழ முடியும் கங்கா.”
“இல்ல டாக்டர் சார்…இதெல்லாம் சரி வராது… ப்ளீஸ், என்னை என் போக்குல விட்ருங்க”
“எதையும் இனிமே மறுத்து பேசாத கங்கா. நான் சொல்றதைக் கேளு.”
“அம்மா… இந்த வாரத்திலயே இருக்கற மாதிரி ஒரு முகூர்த்த தேதி பிக்ஸ் பண்ணுங்க. கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல முடிச்சிட்டு, ரிஜிஸ்டர் பண்ணிடலாம்”
கங்காவின் தாத்தாவைப் பார்த்தவன், “எனக்கு உங்களைப் பார்க்கக் கூட விருப்பமில்லை. ஆனா அவளுக்கு இருக்கற ஒரே சொந்தம் நீங்கதான். அதனால கல்யாணம் வரை இங்க இருங்க, அதுக்கப்புறம் இந்தப் பக்கம்கூட வந்திராதீங்க” என்று கோபமாகக் கூறியவன், விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினான்.
அன்றிரவு அனைவரும் உறங்கிய பின், யாருக்கும் தெரியாமல் ஆகாஷ் வீட்டை விட்டு வெளியேறினாள் கங்கா. அவளது அறையில் அவள் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகாஷிற்காக படபடத்துக் காத்திருந்தது.
********
போ நீ போ
போ நீ போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
___தொடுவோம்.