தொடுவானம்  7

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன்மனம் அறியாதா
பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம்தானே மானே
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதிவைச்சேன்
அது மழையில் அழியாம கொடைபுடிச்சேன்
மழைவிட்டும் நான் நனைஞ்சேன்…

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடுகட்டி காதல் வளர்த்தேன்

ஏய் இதயத்தின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒண்ணை தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள உன்னை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதைக் கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னைக் கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதைச்சேன் …

ஒரு வாரம் கடந்து விட்டது, கங்கா அங்கு வந்து சேர்ந்து.  இந்த ஒரு வாரத்தில் இந்த சூழலுக்கு சற்று பழகி இருந்தாள் கங்கா. பெரும்பாலான பொழுதுகள் மஞ்சுளாவுடனும், ஹோமில் உள்ளவர்களுடனும் கழிந்தாலும். அபியுடன் பேசிக் கொண்டிருக்கும் மாலை வேளையையும், அபியுடன் ஆகாஷும் இணைந்து அவளை கல கலப்பாக வைத்திருக்க முயற்சி செய்யும் காலை வேளையையும் அவள் மனம் இயல்பாக எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தது.

நெற்றியில் இருந்த காயம் வெகுவாக ஆறிவிட்டிருந்தது.  இந்த ஒரு வாரமாக தினமும் மருத்துவமனைக்கு செல்லும் முன் , அவளது காயத்திற்கு மருந்திட்டு செல்பவன் அவளுடன் கல கலப்பாக பேசிச் சிரிக்க வைத்து விட்டுதான் செல்வான். உடன் அபியும் சேர்ந்து விட்டால் அவள் அண்ணனுடன் அடிக்கும் கொட்டத்தில் கங்காவின் அகமும் புறமும் புன்னகையில் நிறைந்திருக்கும்.

உடல்நிலையில் பெரிதாக மாற்றம் இல்லாமல் இருந்தாலும் , அவள் இருக்கும் பாதுகாப்பான இந்தச் சூழல் முகத்தில் தெளிவையும், சற்று மலர்ச்சியையும் கொண்டு வந்திருந்தது.   மாலை ஆகும் போது அபியின் வரவுக்காய் காத்திருப்பாள்.  அபி வந்ததும் அவள் கல்லூரியில் நடந்த கலாட்டாக்களைச் சுவைபடக்  கூறுவதைக் கேட்டிருக்கும் போது, மனம் பழைய நினைவுகளைத் தேடி ஓடினாலும், அபியுடன் கழியும் கணங்களை அவள் மனது பெரிதும் விரும்பும்.

இந்த ஒரு வாரத்தில் ஹோமில் இருந்த அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தாள் கங்கா.

ஹோமில் உள்ள வயதானவர்களுக்கு  அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்துக் காட்டுவதில் தான் துவங்கும் கங்காவின் காலைப் பொழுது. அன்று ஞாயிறு விடுமுறை தினமும் கூட. அபியும் கங்காவும் காலையிலேயே ஹோமில் உள்ள  வயதானவர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் செய்து விட்டு சற்று ஓய்வாக  அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

அபி அவளின் கல்லூரி கலாட்டாக்களைக் கூறிக் கொண்டிருந்தாள்.  கங்கா அதனை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.  அப்போது அங்கு வந்த ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தலைக்குக் குளித்து, காயாத முடியை விரித்து விட்டிருந்தாள் கங்கா . காதோரத்தில்  இரு கற்றைக்  குழல்களை எடுத்து பின்புறம் சிறு கிளிப்பில் அடக்கியிருந்தாள்.  முன்பிருந்தது போல இடை தாண்டிய  கூந்தல் இல்லாவிட்டாலும், தோளைத் தாண்டிப்  படர்ந்து இருந்தது அவள் கூந்தல். இதழ்கள் சிறு புன்னகையில் விரிந்திருக்க, அவனைக் கண்டதும் இதழ்களின் புன்னகை கண்களை எட்டச் சிரித்தவளை ரசனையுடன் தழுவிக் கொண்டன அவனது விழிகள்.

“கங்கா, நீ தமிழ் இளங்கலை தானே எடுத்த? முதுகலை முடிச்சிட்டியா?” அவள் தனது படிப்பைத் தொடரவில்லை என்று தெரிந்து இருந்தாலும், ஒருவேளை ஊட்டியில் தொடர்ந்திருப்பாளோ என்ற எண்ணத்துடன் வினவினான்.

“இல்லை… முதுகலை முதல் வருடம் மட்டுமே படித்தேன் பிறகு தொடரவில்லை. தொடரும் மனநிலையிலும் அப்போது நான் இல்லை.”

“ அதனால் என்ன கங்கா? நீ விருப்பப் பட்டா  இப்பக்கூட தொடரலாம். அபி படிக்கிற கல்லூரில சேர்த்து விடட்டுமா?”

“ எனக்கு விருப்பம் இல்ல டாக்டர் சார்”

“ இல்லம்மா நீ இப்படியே வீட்ல அடைஞ்சு கிடக்கக் கூடாது. படிக்கறது உனக்கு வெளி உலக அனுபவத்தை தரும்” என்றான்.

பதில் கூறாமல் சங்கடமாக அமைதியாக அமர்ந்திருந்தாள்.  அவன் மீண்டும், “ இல்ல கங்கா , நான் என்ன சொல்றேன்னா..” என்று ஆரம்பிக்கவும் இடைமறித்த அபி,

“ அட ட டா…! உன் தொல்லை தாங்க முடியலயே!  என்னைதான்  வம்படியா படிச்சே ஆகனும்னு தொல்லை பண்றன்னு பார்த்தா, இவங்களையுமா…?”

“ மச்சி,  இவன் நல்லா படிச்சதால வாழ்க்கையில நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?  எங்க ஸ்கூல் டீச்சர்ல ஆரம்பிச்சு டியூஷன்ல, அக்கம் பக்கத்து வீட்ல இருக்கறவங்க, சொந்தகாரங்க எல்லாரும் அண்ணன மாதிரி படி ,அண்ணன மாதிரி படி ன்னு  ஒரே டார்ச்சர்.

வராத படிப்ப வா வான்னு சொன்னா எப்படி வரும்? அதில இவன் தொல்லை பெரிய தொல்லை. அந்த மேஜர் எடு இந்த மேஜர் எடுன்னு.  நான் ஈசியா கஷ்ட படாம ரசித்து படிப்பேன்னு தமிழ் இலக்கியம் எடுத்து படிக்கிறேன். இப்ப உங்ககிட்ட ஆரம்பிச்சிட்டான்.”

“நானும் உன்ன மாதிரிதான் அபி.” என்று கங்கா சிரிக்கவும் , இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

“ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா?  சுத்தம்…  இவ வெளிய  போய் தைரியமா எல்லாம் ஃபேஸ் பண்ணனும்னு தான் சொன்னேன்.”

“அதுக்கு  படிக்கதான் போகனும்னு அவசியம் இல்ல… நாங்க எம்ப்ராய்டிங் , யோகா , இல்லைன்னா குக்கரி கிளாஸ் போறோம் . ஓகே வா மச்சி!”  என்றாள்.

“இல்ல அபி… நான் எங்கயும் வரல… எனக்கு அதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல… எனக்கு வெளில போகவே பிடிக்கல. நான் இங்க ஹோம்ல இருக்கறவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இப்படியே இருக்கிறேன். நீ வேணும்னா போய்ட்டு வா.” அமைதியாகச் சொன்னவளைக் கூர்ந்து கவனித்த ஆகாஷ் , “ உன் பரதத்தை யாவது நீ தொடரலாம் இல்ல? அது உனக்கு பிடித்தது தானே?” என்றான்.

“ மச்சி சொல்லவே இல்ல உனக்கு பரதம் ஆடத் தெரியுமா?”

“அவ  பத்தாவது படிக்கும் போதே   அரங்கேற்றம் பண்ணிட்டா. அவளுடைய டான்ஸ் பர்பார்மென்ஸ் நான் பார்த்திருக்கிறேன்.  நல்லா ஆடுவா” என்றான்.

“அப்புறம் என்ன மச்சி , நீங்க பரதத்தில் மாஸ்டர்ஸ் பண்ணலாமே?  ப்ளீஸ் மச்சி  எனக்காக ஏதாவது ஒரு பாட்டுக்கு ஆடிக் காட்டுங்க மச்சி”

“ஹையோ வேணாம் அபி … எனக்கு எல்லாம் மறந்து போச்சு.”

“கத்துகிட்ட கலை எப்படி  மறந்து போகும்?  அடுத்த மாதம் ஆரம்பத்தில் இருந்து , மருத்துவமனைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்கூல்ல டான்ஸ் டீச்சரா  வருவன்னு சொல்லி இருக்கேன். ஸ்கூல் நிர்வாகி அம்மாவுக்கு பழக்கம்தான், ரொம்ப நல்லவங்க. யாராவது டான்ஸ் டீச்சர் வேணும்னு அவங்க  கேட்டப்ப உன் நியாபகம்தான் வந்தது.  நீ கண்டிப்பா வருவன்னு சொல்லிட்டேன்.”

அவள் மறுக்க முடியாதவாறு அழுத்திக் கூறியவனை இயலாமையாகப் பார்த்தவள்,  சரி என்பது போல தலையை அசைத்தாள். அப்போது மஞ்சுளாவின் அழைப்பைக்  கேட்ட கங்கா எழுந்து செல்லவும், அபி ஆகாஷிடம்,

“ஏன் ண்ணா இவ்வளவு கட்டாயமா சொன்ன? அவங்க முகமே மாறிடுச்சி . நீ சொல்றியேன்னுதான் அவங்க சரின்னு சொல்லிட்டு போறாங்க. அவங்களுக்கு விருப்பமே இல்ல.”

“இங்க வந்தப்ப இருந்த கங்காவுக்கும் இப்ப இருக்கற கங்காவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இல்லயா?  அவ சின்ன குழந்தைகளோடு பழகும் போது  இன்னும் நார்மலா மாறிடுவா.  அவ எவ்வளவு கல கலப்பா இருந்தவ தெரியுமா? அந்த வீட்ல அவளுடைய சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் கேட்டு கிட்டேதான் இருக்கும்.

அந்த அளவு இல்லாட்டியும் அவள கொஞ்சமாவது பழையபடி மாத்தனும் அபி. அவளுடைய இழப்பு பெரியதுதான் ஆனா அவ அதிலிருந்து மீண்டு வரனும்னு தான் இந்த ஏற்பாடு.”

“அதுமட்டுமில்லாம ஸ்கூல்க்கு என் கூட தானே  வந்தாகனும். அப்போ  அவ கூட கொஞ்சம் பேசிப் பழகலாம்ல அதான்”  என்று கண்களைச் சுருக்கிச் சிரித்தான்.

“டேய்…  அதானே பார்த்தேன், சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  நீ நடத்து மகனே… எப்படியோ சீக்கிரம் அண்ணி மனசுல இடம் பிடிச்சிட்டு எனக்கு பெரிய ட்ரீட் குடு.” என்று கல கலத்தவளைப் பார்த்து சிரித்தவனின் முகத்தில் அழகான வெட்கம்.

அப்போது தேநீர் கோப்பைகளை ஏந்தியவாறு அங்கே வந்தனர் மஞ்சுளாவும் கங்காவும்.  அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது நினைவு வந்தவனாக,

“அம்மா, சொல்ல மறந்துட்டேன். சுபாஷ் அவன் குடும்பத்தோட  இன்னும் இரண்டு நாள் கழிச்சு வரானாம். இன்னைக்கு காலையில் போன் பண்ணும் போது சொன்னான்.”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் பா.  ஜோஷி பிறந்தப்ப பார்த்தது. ஒரு வருஷம் இருக்குமில்ல?”

“ஆமாம் ம்மா, இங்க அவங்க அம்மா வீட்ல ஜோஷி முதல் பிறந்த நாள் கொண்டாடதான் வராங்க.”

“ஹையோ! சுபா ண்ணா வராங்களா ஜாலி.  அப்ப உன் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கெட்டுகெதர் வைப்ப. இந்த வாரம் முழுக்க வீடே களைகட்டும். எனக்கு ஜாலிதான்.”

“கங்கா, உன்னையும் சுபாஷ் விசாரிச்சதா சொல்ல சொன்னான்.”

“சுபாஷ் அண்ணா நல்லா இருக்காங்களா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கான். சென்னையில் எம்எம்எம் ஹாஸ்பிடல்ல வேலை பார்க்குறான்.”

“ மச்சி,  மத்த நாள்ல தான் இவங்க டாக்டர் பந்தா எல்லாம் , இவங்க பிரண்ட்ஸ் க்ரூப் ஐந்து பேர் இருக்காங்க எல்லாரும் ஒன்னா கூடினா விடிய விடிய ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

இவங்க ரெண்டு பேரும் டாக்டர், ஒரு அண்ணா இங்க கோயம்புத்தூர்ல டி.எஸ்.பி யா இருக்காங்க, ஒரு அண்ணா  சேலத்துல பிஸ்னஸ் பண்றாங்க,  இன்னோருத்தர் ஊட்டில எஸ்டேட் வச்சிருக்காங்க,

கடைசியாகப் பேசும் போது அபியின் கன்னங்கள் சிவப்பதை ஆச்சர்யத்துடன் கவனித்த கங்கா அவளைக் கேள்வியாக நோக்கினாள்.

“அந்தப் பையனத்தான்மா  அபிக்கு பேசி முடிச்சிருக்கு. இவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வைக்கறதா இருக்கோம்.”

கண்கள் சந்தோஷத்தில் மலர, வாய் கொள்ளா சிரிப்புடன் “ஹேய்!  வாழ்த்துகள் அபி… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த அண்ணா பேர் என்ன? அவங்களையெல்லாம் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. அதானா அவங்களை பத்தி பேசும் போது உன் கன்னம் அப்படி சிவந்துச்சி ? ரொம்ப அழகா இருக்க அபி நீ.”  என்று கூறவும்.

“சும்மா இருங்க மச்சி…” என்று வெட்கி சிரித்தவள் உள்ளே ஓடிப்போனாள்.

“அவன் பேரு நந்த குமார் கோயம்புத்தூர் ல டி.எஸ்.பி. யா இருக்கறவன் பேரு ரஞ்சன், சேலத்தில இருக்கறவன் ராஜா . நாங்க ஐந்து பேரும் ஸ்கூல்  பிரண்ட்ஸ் “ என்று கங்காவிடம் கூறினான் ஆகாஷ்.

சந்தோஷமாக அபியைப் பார்த்திருந்த மஞ்சுளா ஆகாஷிடம், “அப்படியே உனக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டா நான் நிம்மதியா இருப்பேன்”என்றார்.

“என் மனசுக்கு பிடிச்ச பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அவசரப்படாம  இருங்கம்மா. அபி கல்யாணத்தை முதல்ல முடிக்கலாம்”

“உங்க மனசுக்கு பிடித்த பொண்ணு யாரு டாக்டர் சார்? பார்த்துட்டீங்களா அவங்களை?” என்று சிரிப்புடன் வினவினாள் கங்கா.

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,” பார்த்துகிட்டே இருக்கேன். கூடிய சீக்கிரம் சொல்றேன்” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

அவன் கூறிச் சென்ற வார்த்தைகளின் அர்த்தமும், அவன் பார்த்த பார்வையின் பொருளும் புரியாமல் அவன் போன திசையைப் பார்த்தவாறு உறைந்து போய் அமர்ந்திருந்தாள் கங்கா.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ,  ஆகாஷின் வீட்டிற்கு  குடும்பத்துடன் வந்தான் சுபாஷ்.  அவன் மனைவி ஆர்த்தியும் நன்கு பழகும் இயல்பு உடையவளாக இருந்ததால் இளையவர்களின் கொண்டாட்டத்திற்கு குறையில்லாமல் போனது.

நலம் விசாரிக்கும் படலம் முடிந்ததும், கங்காவைக் கண்ட சுபாஷ், “ பழையதை எல்லாம் மறக்க முயற்சி பண்ணு கங்கா. உன் சோகத்தில் இருந்து நீ மீண்டு வந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கனும். அதுதான் இந்த அண்ணனோட ஆசை சரியா” என்றான்.

சுபாஷின் குழந்தையைப் பார்த்த அபி ஆசையுடன் அள்ளிக் கொண்டாள். அருகில் முகம் மலர சிரித்தபடி,  கொள்ளை அழகுடன் மனதை மயக்கிய  குழந்தையை ஆசையாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கங்கா.

“நீங்களும் தூக்குங்க மச்சி” என்றவள் கங்காவிடம் குழந்தையை தர முயற்சித்தாள். பதறி விலகிய கங்கா “ வேணாம் அபி நீயே வச்சிக்க “ என்றாள்.

வித்தியாசமாகப்  பார்த்த அபியிடம், “ இல்ல எனக்கு குழந்தையை தூக்க தெரியாது” என்றாள்.

ஆர்த்தி,” ஒரு வயசு ஆகிடுச்சி  பயப்படாம தூக்கு கங்கா” என்றாள்.

“இல்லக்கா, வேணாம் … நான் போய் எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று விலகிப் போனவளையே பார்த்திருந்த ஆர்த்தியிடம், “என்னன்னு தெரியல குழந்தைய தூக்க ரொம்ப பயப்படறாங்க. ஆனா ரொம்ப நல்லவங்க ஆர்த்தி க்கா” என்றாள்.

தான் கங்காவைத் தவறாக எண்ணி விடக் கூடாது என்று அபி எண்ணுவதைப் புரிந்து கொண்ட ஆர்த்தி, “உங்க சுபா ண்ணா  கங்காவ பத்தி எல்லா விஷயமும் என் கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்களைப் பார்க்கனும்  ஆறுதல் சொல்லனும்னு தான் நாங்க இங்க வந்ததே.” என்றாள்.

அப்போது அங்கு வந்த நண்பர்கள் இருவரும், “ எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சு, இன்னைக்கு நைட் இங்க நம்ம வீட்ல பிரண்ட்ஸ் பார்ட்டிக்கு.  நாளைக்கு ஜோஷி பர்த் டே  அவங்க வீட்ல செலிபரேஷன்.”

“ஆக மொத்தம் ரெண்டு நாள் ஜாலிதான்”

அன்றிரவு நண்பர்கள் ஐவரும் மொட்டை மாடியில் அமர்ந்து பழைய பள்ளிப் பருவ கதைகளைப் பேசி ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

மாலையில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் சென்ற பின் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு பெண்களும் வீட்டினுள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஹோமில் உள்ள அனைவரும் உறங்கச் சென்று விட்டதால் அப்பகுதி அமைதியாக இருந்தது.

மாடியில் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று நண்பர்களை கலாய்த்துக் கொண்டிருந்த ஆகாஷ் ‘தொம்’ என்ற சத்தம் கேட்டு , சத்தம் வந்த திசையில் கீழே கூர்ந்து பார்த்தவன் விழிகளில் அதிர்ச்சி பரவியது.

___ தொடுவோம்.

 

 

error: Content is protected !!