22
போரில் மட்டுமல்ல காதலிலும் அனைத்தும் நியாயமானவையே! all is fair in love and war என்பது உனக்குத் தெரியும்தானே ஸ்ரீதரா? அபிமன்யு போரில் இறந்த போது அவனது மனைவி உத்தரை கருவுற்றிருந்த செய்தியைக் கூட அவன் அறியவில்லையாம்… மகா வீரனாக இருந்தால் மட்டுமே போரில் வெற்றிப் பெற்றுவிட முடியாது… சக்கரவியூகத்தினுள் நுழைந்த அபிமன்யு அறிய மாட்டான் தன் மகன் பரிஷித் இந்த உலகம் புகழும் மன்னனாவான் என்று… அந்த பாவப்பட்ட ஆத்மாவை நினைத்தால் எனக்கு மனதை பிசைகிறது ஸ்ரீதரா!
இப்போது சொல், நீ அபிமன்யுவா அர்ஜுனனா?
கண்களைப் பிரிப்பது சிரமமாக இருந்தது தமிழ்நதிக்கு. தெளிவாக எதுவும் தெரியவில்லை… இருள் சூழ்ந்து இருந்தது அறையில்… சில்லென்ற காற்று உடலைத் தழுவியது!
படுத்திருந்த மெத்தை மிகவும் சுகமாக இருப்பது போலத் தோன்றியது… மேகப்பொதியில் மிதப்பது போல… இன்னும் சற்று நேரம் மிதக்க மாட்டோமா என்று தோன்றியது…
இது என்ன இடம்?
தான் முதலில் எங்கிருக்கிறோம்?
விடுதி அறைக்குச் செல்வதற்காக டாக்சி புக் செய்தது மட்டுமே நினைவில் இருந்தது… அதுவும் கூட டாக்சி பார் யூ கம்பெனி டாக்சி தான்…
அவனைத் திருமணத்தில் பார்த்தது முதல் வாஸந்தியின் கணவன் அறிமுகப்படுத்தும் வரையில் சொர்க்கத்தில் தான் மிதந்திருந்தாள்.
ஆனால் அவனைப் பற்றி ஸ்ரீதர் அதாவது வாசந்தியின் கணவன் கூறியபோது மனம் திடுக்கிட்டது…
ஒருமுறை கூடச் சொல்லவில்லையே… எத்தனை முறை அவனைக் கேட்டிருந்தாள்… ஏன் மறைத்து வைக்க வேண்டும்? ஊரெல்லாம் அவளைக் கேலி செய்வது போலத் தோன்றியது…
அதனால் தான் அவன் கடைசி வரை அவனாகக் காதலை சொல்லவே இல்லை போல… தான் அல்லவா வலுகட்டாயமாகச் சொல்லியது… அதுவும் இல்லாமல் அவனுக்காகத் தற்கொலை முயற்சி எல்லாம் செய்து…
ச்சே… எப்படிப்பட்ட முட்டாளாக இருந்திருக்கிறேன்… தன்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் அவன் கேலி செய்து சிரித்திருக்கக்கூடும்… தன் மேல் விழுந்து பழகும் பெண்ணாக நினைத்திருக்கக்கூடும்…
இந்த மாதிரியாகத் தன்னை தானே கீழிறக்கி கொள்ள வேறு யாராலும் முடியுமா? சத்தியமாக முடியாது… தன்னை காட்டிலும் ஒரு முட்டாள் வேறு யாராகவும் இருக்க முடியாது…
மனம் கனத்து போனது என்று சொல்வதெல்லாம் குறைவு… அடிபட்டுத் துடித்தது… யாரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்தது… என்ன சொல்வது? எதைச் சொல்வது?
தான் ஏமாந்த கதையைச் சொல்வதா? அவன் தெளிவாகத்தானே இருந்திருக்கிறான்… அவள் அல்லவா பட்டிகாட்டான் கணக்காக விழுந்தது…
அவர்களைப் போன்றவர்களைப் பொறுத்தவரை தன்னை போன்றவர்கள் வந்து போகும் மேகம்! அவ்வளவே! அதற்கு மேல் என்ன?
அவளது மனசாட்சி அவளை நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்க… பதில் கூற முடியாமலும் அவனை மேலும் பார்க்க விரும்பாமலும் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தாள்… அவளுக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை… மனதில் வழிந்த குருதியை யாருக்கும் காட்டவும் பிடிக்கவில்லை…
அன்று இரவே புறப்பட்டுச் சென்னை வந்திருந்தாள்…
யாரிடமும் எதையும் கூறாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது அழையா விருந்தாளியாக அவன் வந்து அமர்ந்து கொண்டான்… அவளது நினைவுகளில்!
அந்த நினைவு ஒரு புறம் சுகமாக இருந்தது… மறுபுறமோ கொடுமையிலும் கொடுமையாக இருந்தது…
வலித்தது… கண்கள் கரித்துக் கொண்டு வந்தது…
அவனை நினைக்கக் கூடாது என்று நினைக்க நினைக்க மீண்டும் மீண்டும் அவனில் மூழ்கியது நெஞ்சம்…
“தமிழ்… இன்னும் நீங்க நார்மல் ஆகலையா?” பார்த்திபன் அப்போது கையில் டீயோடு வந்தான்… அவளுக்கும் சேர்த்து…
அவள் திருமணத்தை மறுத்து விட்டாள் என்பது மட்டுமே அவன் அறிந்தது… அதனால் வாஸந்திக்கு திருமணம் செய்ததும் தெரியும்… அதற்கு மேல் எதையும் அறியவில்லை…
அவனது கையிலிருந்த டீ அவளைப் பார்த்துச் சிரித்தது… அதில் தெரிந்த ஸ்ரீதரன் அவளைப் பார்த்து மீண்டும் மீண்டும் கைகொட்டி சிரித்தான்… அவளது ஏமாளித்தனத்தை பார்த்து…
பதில் பேசாமல் டீயை உற்று பார்த்திருந்தவளை வித்தியாசமாகப் பார்த்தான்…
“இஞ்சி டீ தமிழ்… குடிச்சுட்டு சுறுசுறுப்பா வேலை செய்ங்க பார்க்கலாம்…” எப்போதும் போலக் கேலியாகப் பேசி அவளைச் சரி செய்யலாம் என்று அவன் எண்ணியது நடக்கவில்லை… அவளையும் மீறிக் கண்கள் கலங்க பார்த்தது…
“பார்த்தி… ஸ்ரீதரன் உங்களுக்கு எப்படிப் பழக்கம்?” நேராக அவனை அவள் கேட்க… புருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவன் பார்த்தான்…
“ஏன் தமிழ்?”
“இல்ல சொல்லுங்க…”
“ம்ம்ம்… என்னோட ரூம்மேட்…” என்று கூற, அதிர்ந்து அவனைப் பார்த்தாள்… அவளால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை…
“ரூம் மேட்டா?”
“ம்ம்ம்… ஆமா… அவங்க பேமிலி நல்ல வசதிபோல இருக்கு… என்ன பிரச்சனையோ சென்னைக்கு வந்துட்டான்… எவ்வளவு வசதி இருந்தாலும் கொஞ்சம் கூடக் காட்டிகிட்டது இல்ல… அவ்வளவு டவுன் டூ எர்த்… ஒரு நாள் பேச்சுவாக்குல டாக்சி வாங்கிவிட்டா நல்ல லாபம்ன்னு பேசிட்டு இருந்தோம்… டக்குன்னு வாங்கினான்… பெரிய அளவா இப்ப போயிட்டு இருக்கு… ஆனாலும் இப்பவும் அதே ஸ்ரீதரன் தான்…”
எதையும் மிகைப்படுத்தாமலும் குறைவாகக் கூறாமலும் பார்த்தி கூற, கண்களிருந்து வழிந்த கண்ணீரை அவனறியாமல் சுண்டி விட்டாள்…
“வேற எந்த விவரமும் அவரது குடும்பத்தைப் பற்றித் தெரியாதா?”
“ம்ஹூம்… தெரியாது தமிழ்… முதல்ல அவன் யாரையுமே நம்பி தன்னை பற்றிச் சொன்னதில்லை… என்கிட்டே தான் ரொம்ப க்ளோசா பேசுவான்… ஆனா எனக்குக் கூட அவனோட குடும்பத்தைப் பற்றித் தெரியாது…”
பார்த்தி இயல்பாகத்தான் கூறினான்… ஆனால் அவன் கூறிய அந்த நம்பிக்கை என்ற வஸ்து அவளைக் கூறுப்போட்டது… உன்னையும் நம்பி தன்னை பற்றிக் கூறாத ஒருவனைத்தான் நீ உயிராக நினைத்து உயிரைக் கொடுக்க நினைத்தாய் என்று கேலியாகக் கூறியது…
“ஏன் தமிழ்… ஸ்ரீதரனை பற்றி இவ்வளவு கேட்கறீங்க… என்னாச்சு?” கூர்மையாக அவளைப் பார்த்துக் கேட்க… இனியும் இவனிடம் நின்று பேசினால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்வது போல என்று நினைத்துக் கொண்டாள்…
“இல்ல… பார்த்தி… நத்திங்…” என்று கழண்டுக் கொண்டவள், தான் தங்கியிருந்த அறைக்குச் செல்ல டாக்ஸிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்…
உள்ளுக்குள் கோபமும் ஆற்றாமையும் ஏமாற்றமும் போட்டிப்போட்டுக் கொண்டு கொதிக்க ஆரம்பித்திருந்தது…
நம்பிக்கை என்ற ஒரே அச்சாணியில் சுழல்வதே உறவெனும் சக்கரம்… அதுவே இல்லாத ஒரு உறவை அவளால் ஏற்கவே முடியவில்லை… அவன்மேல் வைத்த காதல் அவளைப் பார்த்து எள்ளி நகையாடுவது போலத் தோன்றியது…
அவளுக்கு அருகில் வந்து நின்றது ஒரு கார்… புக் செய்த டாக்ஸி தான் போல என்று அவள் அதன் எண்ணைப் பார்க்க முயல… அதன் டிரைவர்…
“மேடம்… நீங்கத் தானே தமிழ்நதி?” என்று கேட்க…
அவளும் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை… மனதின் பாரம் அவளை யோசிக்க விடவில்லை…
“ஆமா…” என்று கூற,
“நீங்கத் தானே இப்ப டாக்ஸி புக் செய்தீங்க…”
“ம்ம்ம்… ஆமா… மெசேஜ்ல வேற டேக்ஸி நம்பர் வந்துதே…” நெற்றியை சுருக்கிக் கொண்டு அவள் யோசிக்க…
“இல்ல மேடம்… ஏதாவது மிஸ்டேக் ஆகிருக்கும்…” என்றவன் பின்னாலிருந்த கதவைத் திறந்து விட… அதற்கும் மேல் யோசிக்காமல் ஏறி அமர்ந்தாள்…
ஒரு இரண்டு நிமிடம் மட்டுமே ஸ்மரணை இருந்தது… தனக்கு என்னவாகிறது என்று யோசிக்கும் முன்பே அவள் மயக்கமாகத் துவங்கியிருந்தாள்…
கடத்தப்பட்டிருந்தாள்!
நடந்தவைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, அவளுக்குப் பகீரென்றது!
ஆம் கடத்தத்தான் பட்டிருந்தாள்! சிரமமாகக் கண்களை விழித்து அது என்ன இடமென்று பார்த்தாள்… அவளால் சற்றும் அடையாள கண்டுபிடிக்க முடியவில்லை…
ஏதோ ஒரு அறை… ஆனால் மிகவும் ஆடம்பரமான அறையாகத் தோன்றியது… குளிரில் உடல் நடுங்கியது… போர்வை போர்த்தி விட்டிருந்தார்கள் போல… அதையும் மீறிக் குளிரெடுக்க, போர்வையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
தலை வின்வின்னென்று வலித்தது… பசி வேறு!
எவ்வளவு நேரமாக மயக்கமாக இருந்திருப்பாள் என்று தெரியவில்லை… பசியில் தலை சுற்றியது!
அதைக் காட்டிலும் அந்த இடத்திலிருந்து எப்படித் தப்புவது என்று அவசரமாக யோசித்தாள்… அதோடு தன்னுடைய உடைகளை அவசரமாக ஆராய்ந்தாள்…
எல்லாம் சரியாகத்தான் இருந்தது…
“என்ன மேடம்… எழுந்துட்டீங்க போல இருக்கு…”
குரல் வந்த திசையை அவசரமாகப் பார்த்தாள்… உள்ளே வந்தவன் லைட்டை ஆன் செய்ய, அந்த அலங்கார விளக்கு மெல்லிய மஞ்சள் ஒளியை சிந்தியது!
ஸ்ரீதரன்!
குறுஞ்சிரிப்போடு… அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
அதிர்ந்து அவனைப் பார்த்தாள்…
“என்ன… இவ்வளவு ஷாக்?” என்று அவளுக்கு அருகில் அவன் வர, தமிழ்நதிக்கு உள்ளுக்குள் பயம் பீடித்தது, ஏனோ!
தட்டில் ஆப்பம் போல இருந்தது… கையோடு எடுத்து வந்திருந்தான்… அருகில் இருந்த டீபாய் மேல் வைத்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்…
கண்களில் ரசனை! எப்போதும் போல லாங் ஸ்கர்ட் டியுனிக் ஷர்ட் தான்… அன்று சேலையில் பார்த்ததை நினைவுப்படுத்திக் கொண்டான்… அந்த ரசனை இப்போதும் கண்ணில் பிரதிபலித்தது…
அந்த நேரத்தில் அவனை அங்கு அந்தச் சூழ்நிலையில்… அவள் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது… எப்போதுமே அவள் எதிர்பார்த்திருந்தாள் தான்…
ஆனாலும் மனம் திடுக்கிட்டது!
“ஏன் இப்படி பண்ணீங்க?” உணர்வைத் துடைத்துக் கொண்டு அவள் கேட்க,
“ம்ம்ம்… உன்னைப் பார்க்கனும்ன்னு தோன்றியது… அதான்…” வெகுசாதாரணம் போல அவன் தோளைக் குலுக்கிக் கொண்டு குறும்பாகக் கூற,
அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள். தோன்றியதாம் அதனால் கடத்தி வந்தானாம்!
விளையாடுகிறானா?
அவள் அவனுக்காக அவன் பொருட்டு விஷம் குடித்து மருத்துவமனையில் இருந்தபோது ஒரு முறையாவது வந்து பார்க்கமாட்டாயா என்று கெஞ்சினாளே… அப்போது தோன்றவில்லையாமா?
“ப்ச்… என்ன விஷயம்… உண்மையைச் சொல்லுங்க… தேவையில்லாம நடிக்க வேண்டாம்…” அவனைப் பார்க்கவும் இஷ்டப்படவில்லை அவள்! உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள்… அவனது நம்பிக்கையின்மை அவளை வாட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை அவன் அறியவில்லை…
“எதுக்காக நான் நடிக்கணும்… நிஜமாவே உன்னைப் பார்க்கணும்ன்னு தோனுச்சு தமிழ்…”
அவன் கூறுவதை உண்மையென்று நம்பத்தான் ஆசைப்பட்டது மனம்… அறிவே இல்லாத மனம்!
ஆனால் உண்மைகள் அவளைத் தடுத்தாட்கொண்டது…
“வேண்டாம்… உங்களுக்கும் எனக்கும் சத்தியமா ஒத்துவராது… என்னை விட்டுடுங்க…” அவனைப் பார்க்காமல் கூறிவிட்டு படுக்கையிலிருந்து எழ முயல… மயக்கமருந்தின் தாக்கம் இன்னும் இருக்கும் போல… தலை சுற்றிப்போய் மீண்டும் படுக்கையிலேயே அமர்ந்தாள்…
அவளது தடுமாற்றத்தை பார்த்துப் பதட்டமாகி அவளருகில் வந்தவனை கைக்காட்டி தடுத்து நிறுத்தினாள்.
“உளறாதே தமிழ்…”
“இப்ப தான் நான் தெளிவா இருக்கேன்…” என்றவள் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவள் எழ முயல… அவன் அவளுக்கு கை கொடுத்துத் தூக்கி விட முயன்றான்…” வேண்டாம்… தொடாதீங்க…” கோபமாகக் கூறிவிட்டு தானே எழுந்து நின்றாள்…
மேலே அணிந்திருந்த டாப்ஸ் அபாயகரமாகக் கீழிறங்கி இருக்க, சட்டென்று இழுத்து விட்டுக்கொண்டாள்…
“ஏன்… திடீர்ன்னு என்னாச்சு…” அதுவரையுமே அவன் அவள் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை… ஆனால் அப்போது உணர்ந்தான்… அவள் ஒரு முடிவாகத்தான் பேசுகிறாள் என்று!
“திடீர்ன்னு எல்லாம் ஒன்னும் இல்லையே… அடிப்படையே இல்லாம ஒரு கட்டிடத்தைக் கட்ட முடியுமா? அதனாலத்தான் சொல்றேன்… ரெண்டு பேருக்கும் சரி வராதுன்னு…” அவனைப் பார்க்காமல் கூறி முடிக்க,
“என்ன அடிப்படை இல்லைன்னு சொல்ற?” சற்று கோபமாக அவன் கேட்க… அவன் புறம் திரும்பி நின்று அவனை நேராக ஏறிட்டாள்…
“நம்பிக்கை… காதல்… வெளிப்படைத்தன்மை… இதுதான் இரண்டு பேருக்கிடையே இருக்க வேண்டிய அடிப்படை விஷயம்… இது எதுவுமே உங்ககிட்ட இல்லை…”
“புரியல…” புருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவன் கேட்க,
“ஒருத்தர் மேல் நம்பிக்கை வைத்தாதான் காதல் வரும்… காதல் இருந்தா கண்டிப்பா எதையுமே மறைச்சு வைக்கத் தோன்றாது… வெளிப்படையாத்தான் இருக்க முடியும்… இதில் எதுவுமே இல்லையே உங்ககிட்ட… அதான் சொல்றேன்… அடித்தளம் இல்லாத கட்டிடம் நிலைச்சு நிற்க முடியாது…” நீளமாகப் பேசி முடித்துவிட்டு அவனைப் பார்க்க…
கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்… அவனிடம் எந்த உணர்வையும் வகைப்படுத்த அவளுக்குத் தெரியவில்லை…
“ம்ம்ம்… வெல்… திடீர் ஞானோதயம் இல்லையா உனக்கு…” என்று அவளைப்பார்த்து கேட்க… அவள் அதற்குப் பதில் கூறவில்லை…
“ஆனா அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இந்தப் பதிலைச் சொல்லலியே தமிழ்… என்னவா இருந்தாலும் பரவால்லை… காலம் முழுக்க காத்திட்டு இருக்கக் கூட ரெடின்னு தானே சொன்ன?” அவனைப் பார்க்காமல் திரும்பிய அவளை வலுக்கட்டாயமாக அவன் புறம் திருப்பினான்…
“அதற்குத் தான் அர்த்தமே இல்லாம செய்துட்டீங்களே…”
“என்ன அர்த்தம் இல்லாம செய்துட்டேன்… அப்ப இருந்த மாதிரிதான் இப்பவும் இருக்கேன்… அதே முகம், அதே வாய், அதே கை, அதே கால்… புதுசா எதுவுமே இல்ல…”
“இன்னமும் நீங்கப் புரிஞ்சுக்கவே இல்ல… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… நான் போறேன்…”
“நீ லவ் பண்றேன்னு சொன்னா உடனே சரின்னு சொல்றதுக்கும்… லவ் பண்ணலைன்னு சொன்னா உடனே விட்டுட்டு போறதுக்கும் வேற ஆளைப் பாரு… எனக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்…” நிமிர்ந்து நின்று அவன் கேட்க…
“உங்க இஷ்டத்துக்கு மட்டுமே செய்வேன்னு சொல்றது நீங்கத் தான்… நீங்க என்னை நம்பலை… அதைத் தான் இவ்வளவு நேரமா நான் சொல்லிட்டு இருக்கேன்… அது கூட உங்களுக்குப் புரியலைன்னா தப்பு என்கிட்டே இல்ல…” அவளது பொறுமை பறந்து விடும் போலத் தோன்றியது…
“எவ்வளவு நாளா பழகிட்டோம்? நம்பிக்கை இல்லை, நம்பிக்கை இல்லைன்னு புலம்பற? ஜஸ்ட் டூ டேஸ்…” என்று சொல்லிக்கொண்டே போக… அவனைக் கண்களில் வலியோடு பார்த்தாள்…
“ஜஸ்ட் டூ டேஸ் தான்… எனக்கு நீங்கத் தான் வேணும்ன்னு முடிவு பண்ணி… கல்யாணத்தை தடுக்க முடியாம என்னோட உயிரை விட்டுட முடிவு செய்றதுக்கு அந்த டூ டேஸ் பழக்கம் மட்டும் போதும்னு நினைக்கிறீங்களா? எல்லாத்துக்கும் மேல உங்க மேல நான் வச்ச காதல், அதீத நம்பிக்கை… அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையா?”
அவளது அந்த வலி அவனையும் வலிக்கச் செய்தது… ஆனால் இருக்கும் சூழ்நிலையை அவளுக்கு எப்படி புரிய வைப்பது?
“நீ சொல்றது எனக்குப் புரியுது… நான் ஏன் திரும்பி ஆலப்புழை வந்தேன்னு நினைக்கற? உன்னோட வாழப் போற என் லைப் ஸ்மூத்தா போகணும்… இன்னொரு இழப்பை என்னால தாங்க முடியாது… அதுக்கு எல்லா பிரச்னையும் முடிக்கணும்… இப்போதைக்கு என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும் தமிழ்…” என்று இடைவெளி விட்டவன்…
“இதற்கு மேல என்னால இப்போதைக்கு சொல்ல முடியாது… அது உன்மேல் நம்பிக்கை இல்லாமன்னு நினைக்காதே… எந்தப் பிரச்னையும் உனக்கு வேண்டாம்ன்னு நான் நினைக்கறேன்…” என்று இடைவெளி விட்டவன்,
“சில விஷயங்களைப் பேச முடியாது… சில விஷயங்களைப் பேசக் கூடாது…” என்று அவளது கண்களை நேராகப் பார்த்துக் கூற,
“எனக்கு இந்த மாதிரியான ஒரு லைப் வேண்டாம்… நான் ரொம்ப சாதாரண வாழ்க்கை போதும்னு நினைக்கறேன்… வெளிப்படைத் தன்மை இல்லாத கணவன், அவன் கிட்ட பேச அனுமதி வாங்க வேண்டிய மனைவி போன்ற விஷயங்கள்… இதெல்லாம் எனக்குச் சரியா வராது… என்னைப் பொறுத்தவரைக்கும் இது வாழ்க்கை கிடையாது… நான் ஆசைப்பட்ட ஸ்ரீதரன் வேற…” கண்களில் நீர் சூழ அவள் வேதனையோடு கூற,
அவளது வேதனை அவனையும் வருத்தியது…
“சரி போய்க்க தமிழ்…” முடிந்த வரை அவனுடைய உணர்வை வெளிக்காட்டக் கூடாது என்று அவன் நினைத்தாலும் அவனையும் மீறிக் கனத்தது குரல்!
“என்னோட வாழற வாழ்க்கை உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு நீ நினைச்சா நீ விலகிப் போறதை நான் தடுக்க மாட்டேன்…” என்றவன் சற்று இடைவெளிவிட, அவளுக்குமே அது வலியைத்தான் கொடுத்தது.
“ஆனா இப்ப வேண்டாம்… என்னோட ஒய்ப்ப தேடிட்டு இருக்கான் வாமனன்… நீயா வெளிய போய் மாட்டிக்காதே…” என்று கூற,
“ஒய்ப்பா? என்ன?” முறைத்தவாறே ஒன்றும் புரியாமல் அவள் கேட்க, அவனது முகத்தில் மெல்லிய குறும்புப் புன்னகை. அதுவரை இருந்த கனமான மனநிலை சற்று இளக்கமானது!
“உன்னை என்னோட ஒய்ப்ன்னே முடிவு பண்ணிட்டு தேடிட்டு இருக்காங்க… அதான் உன்னை இங்க கொண்டு வரச் சொன்னேன்…”
அதைக் கேட்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…
“அதையும் நீங்கதான் முடிவு செய்வீங்களா? எனக்குன்னு எந்த உணர்வுமே இல்லையா? என்கிட்டே சொல்லனும்ன்னு தோன்றாதா? இல்ல கேட்கணும்ன்னு கிடையாதா? ஏன் இப்படி சர்வாதிகாரி மாதிரி நடக்கறீங்க?” அவளது முகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தை கண்டவனுக்கு ஏனோ அந்த நேரத்தில் அவளை வம்பிழுக்கத் தோன்றியது!
பழைய ஸ்ரீதரனாக,
“சரிங்க மேடம்… இனிமே உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டே செய்யறேன் மேடம்…” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவன் கூற, அவனை முறைத்தாள்.
“இதுக்கும் முறைக்கறீங்க… அதுக்கும் முறைக்கறீங்க… சரி சாப்பிட்டுட்டு முறைக்கலாம்ல…” சூழ்நிலையை மாற்ற வேண்டி அவன் வெள்ளைக்கொடி பிடிக்க…
“எனக்கு வேண்டாம்…” பசி வயிற்றை கிள்ளினாலும் அந்த உணவை அவள் உண்பதாக இல்லை… வேறெங்காவது ஓடி விட வேண்டும் என்று தோன்றியது…
“உங்களுக்கு வேண்டாம் மேடம்… ஆனா எனக்கு வேண்டுமே…” என்றவன்…” செம பசிடா… ப்ளீஸ் வா சாப்பிடலாம்…”
“உங்களுக்கு வேணும்னா நீங்கச் சாப்பிடுங்க… நான் போகணும்…” அவன் புறம் திரும்பாமல் அவள் கூற, அவளையே பார்த்தபடி அவளருகில் வந்தவன், அவளை மென்மையாகப் பின்னோடு அணைத்துக் கொண்டான்…
“நீங்க ஆங்க்ரி பேர்ட்ன்னு தெரியும் இங்க்லீஷ்… ஆனா கொஞ்சமாவது சமாதானம் ஆகுங்க…” அணைப்பை இறுக்கிக் கொண்டே அவன் கூற, அவள் அவனிடமிருந்து விலக முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்…
“இப்ப என்னை விடப் போறீங்களா இல்லையா?” அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்ள அவள் பெருமுயற்சி செய்ய… அவற்றையெல்லாம் அவன் சுலபமாகத் தடுத்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
“ம்ஹூம்… முடியாது…” என்றவன் அவளது பின்பக்க கேசத்தை ஒதுக்கி வெண்மையான அந்தச் சங்குக்கழுத்தில் முத்தமிட, அவளது தேகம் நடுங்கியது… அந்த நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது இடையை மேலும் இறுக்கிக் கொள்ள… அவளால் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை…
அவனோடு போராடி தன்னை விடுவித்துக்கொண்டவளை மீண்டும் இழுத்துப் பிடித்து,
“நான் இன்னும் உன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை தான்… இன்னும் நம் காலம் எவ்வளவோ இருக்கு… எனக்குப் உன்னைப் புரிய வையேன்… இன்னும் நிறைய நிறைய லவ் பண்ணலாம்… திகட்ட திகட்ட சண்டை போடலாம்… ஒரு கொடூரமானப் போரை நாம் அரங்கேற்றலாம் இங்க்லீஷ்… இந்தத் தீவிரம் இல்லாத காதல் என்ன காதல்?
இனி உனக்கும் எனக்கும் ஒன்றுமே இல்லையென்று சொல்லவேண்டும்… நீ வேண்டவே வேண்டாம், இனி உன் முகத்தில் விழிக்கவே மாட்டேனென்று அழுது திரும்பிப்பார்க்காமல் பிரிந்து செல்ல வேண்டும்… இரவினில் உறக்கம் வராமல் புரண்டு, விடியாத இரவாக போய்விடுமோ இந்த இரவு என்ற ஏக்கத்தில் கண்கள் வீங்க வேண்டும்!
அடுத்த இரண்டு நாட்கள் நீயின்றி எப்படி வாழ்வேன் என்று இருவருமே திணறத் திணற யோசித்து, மூன்றாம் நாள் வெட்கத்தில் முகம் சிவக்க…. என் மேல்தான் தவறு என்று மாறி மாறி மன்னிப்புக் கேட்டு… கட்டியணைத்துக் கொள்ளாத காதல் என்ன காதல்? இவை அத்தனையையும் செய்யலாம், ஆனால் இங்கிருந்தபடியே… ஓகே வா?”
அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டே அவன் கேட்க… அவன் தன்னை மெஸ்மரைஸ் செய்வதை போல உணர்ந்தாள்… ஆனாலும் தனது கோபத்தை எல்லாம் இழுத்துப் பிடித்துக் கொண்டு,
“முடியாது… முடியாது… உங்க வசனத்தைஎல்லாம் நான் நம்பிட்டு இருப்பேன்னு நினைக்காதீங்க… என்னை விடுங்க…” என்று அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்ள போராட,
“ஹேய்… இவ்வளவு நீளமா வசனமெல்லாம் பேசிருக்கேன்…. முன்ன பின்ன லவ் பண்ணில்லாம் பழக்கம் இல்லடி… கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்க…” பாவமாக அவன் தன் முகத்தை வைத்துக் கொண்டுக் கூற, அவளால் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை… கோபம் கண்ணீராக வழிந்தது!
“ம்ம்ம்… நாங்கள்லாம் நாலு தடவை லவ் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் ஆகியிருக்கமாக்கும்? லொள்ளை பாரு…”
கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு அவள் அறையிலிருந்து வெளியேற முயல… அவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவே இல்லை…
“ஓகே… ஓகே… இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை… சொன்னாத்தானே புரியும்…”
“தெரியல… ஆனா பயமா இருக்கு…”
கதவருகில் நின்று கண்களை மூடிக்கொண்டு அவள் கூற, அவளது மூடிய அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… அவளது அந்த நிலை அவனை உருக்கியது… பெரிதாகப் பயந்திருக்கிறாள்…
அறையில் படர்ந்திருந்த மெல்லிய மஞ்சள் விளக்கொளியில் தேவதை ஓவியமாக நின்றிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு! அவள் முன் நின்றவன், அவளது கண்களைத் துடைத்து விட, தமிழ் அவளது கண்களைத் திறக்கவில்லை…
அவளது அந்த நிலவு முகத்தைப் பார்த்தவன், குனிந்து மென்மையாக அந்தக் கண்களில் முத்தமிட்டான்… உதடுகளில் கண்ணீரின் சுவை!
“என்ன பயம்?”
“ம்ஹூம்… சொல்லத் தெரியல… ஆனா பயமா இருக்கு… தகுதிக்கு மீறி… இது சரியா வருமான்னு…” திக்கித் திணறி அவள் கூற, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தெளிவாகப் புரிந்தது… அவளைத் தின்றுக் கொண்டிருப்பது எதுவென்று!
“அதுவுமில்லாம உங்களைப் பற்றி எதுவுமே சொல்லாம… மத்தவங்க சொல்லி நான் தெரிஞ்சுகிட்டு… எனக்கு அப்ப அவ்வளவு கஷ்டமா இருந்தது… எல்லாருமே கேலி பண்ற மாதிரி…” தயங்கி திணறி அவள் கூறிக் கொண்டிருக்க, அவன் பதில் கூறாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்…
“அதைவிட எனக்கு என்ன தோனுதுன்னா… இந்த ரிலேஷன்ஷிப் ஒத்துவரும்ன்னு ஜஸ்டிபை பண்ணிக்கவே முடியல…” அவனைப் பாராமல் இதையெல்லாம் கூறுவது இவளுக்கு எளிதாகப்பட்டது!
ஸ்ரீதரனுக்கோ இதற்கான பதிலை அவன் கூறுவதை விடச் செயல்படுத்துவது தான் சரியென்று தோன்றியது… சற்று நேரம் மௌனமாக அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்…
அவனிடமிருந்து பதில் வராததால் கண்களைத் திறந்து அவனைப் பார்க்க… மென்மையாகப் புன்னகைத்தபடி அவளை முத்தமிட்டு விடுவித்தான்…
“சரியா வருமா வராதான்னு நீ ஏன் யோசிக்கற பொண்ணே… நான் பார்த்துக்கறேன் அதை…”
“ஏன்… நான் யோசிக்காம? பக்கத்து வீட்டுக்காரியா யோசிப்பா?” சிலிர்த்து கொண்டு எழுந்தவளை பார்த்து ஜெர்க்கானான்… இவ்வளவு நேரமாகச் சமாதானம் செய்ததெல்லாம் விழலுக்கு இரைத்த நீரா? ஆனாலும் அவளது அந்தச் சிலிர்ப்பு அவனைச் சிரிக்க வைத்தது… மேடம் பேக் டூ பெவிலியன் என்று புன்னகைத்துக் கொண்டான்…
“அட பக்கத்து வீட்டுக்காரியா? ஆள் எப்படி உன்னை மாதிரி சுமாரா இருக்குமா இல்லை சூப்பர் பிகரா இருக்குமா?” கண்ணடித்து கேட்க… அவளது முகம் கோபத்தில் சிவந்தது…
“நான் சுமாரா? சொல்லுவடா சொல்லுவ… என் பின்னாடி எத்தனைப் பேர் சுத்தறாங்க தெரியுமா?” என்று காளி அவதாரம் எடுத்தவளை பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தான்…
“அவங்க எல்லாம் கண்ணு தெரியாதவங்க இங்கிலீஷ்…” என்று அவனது கலாய் மோடை ஆன் செய்ய… அவளுக்கு அவனைப் போட்டு உலுக்கும் கோபம் வந்தது…
“அப்ப உங்களுக்கும் கண்ணு தெரியாதா?” கோபமாக உதட்டைச் சுளித்துக் கொண்டே அவள் கேட்க…
“எனக்குக் கண்ணு தெரியாதா? யார் சொன்னா? நல்லாத் தெரியுமே… அதனாலத் தான நீ ஏதோ சுமாரா இருக்கன்னு தெரிஞ்சுது…” சிரிக்காமல் அவளை வம்பிழுக்க,
“நான் தான் சுமாராத்தான் இருக்கேன்னு தெரியுதே… அப்புறமும் ஏன் சாமி என்னை லவ் பண்றீங்க? யாராவது நல்ல பிகர் கிடைப்பாளுங்க… அவளுங்களை ட்ரை பண்ண வேண்டியதுதானே?” கடுப்பாக அவள் கேட்க,
அவனோ மிகவும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“அவங்களுக்கு எல்லாம் ஆள் செட் ஆகிடுவாங்க இங்கிலீஷ்… ஆனா உனக்கு?” என்றவன் இன்னும் பாவமாக, “அதான் நான் தியாகம் செஞ்சுட்டேன்… என்னோட வாழ்க்கையை தியாகம் செஞ்சுட்டேன்…” என்று கூற, தமிழின் முகம் ஜிவுஜிவு எனச் சிவந்தது…
“ஆஹா… தியாகி பொன்மனச் செம்மல் அய்யா ஸ்ரீதரன் வாழ்கன்னு ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சுட்டு, அது பக்கத்துலையே உட்கார்ந்துக்காங்க… அடுத்து வரப் போற தலைமுறைக்கு இந்த இம்சை அரசனோட வரலாறு தெரியனும் இல்லையா…”
“கண்டிப்பா… அதோட இந்த இம்சை அரசனோட வீட்டுக்காரி ரொம்ப சுமார் தான்னும் தெரியனும் இல்லையா?” என்றவன் அவளது கழுத்தில் கைப்போட்டுத் தன்னோடு இழுத்துக் கொள்ள,
“இப்ப மரியாதையா விடப் போறீங்களா இல்லையா?”
குறும்பாகச் சிரித்தவன், “ம்ஹூம்… முடியாது…” என்று சிரிக்க,
“ஒழுங்கா விட்டுடு…” ஒற்றை விரலைக் காட்டி அவள் மிரட்ட, அவளது செயல் அவனுக்கு ஏனோ சிறுபிள்ளைகளை நினைவுப்படுத்தியது… அவனது குறும்பு சிரிப்பும் விரிந்தது…
“ம்ஹூம்… முடியவே முடியாது…” என்றவன் அவளை மேலும் தன்னோடு இழுத்துக் கொள்ள, அவள் அவனிடமிருந்து விடுபடப் போராடினாள்…
“ஹய்யோ… விடுடா… ஒழுங்கா விடப் போறியா? இல்ல்ல்… லை…” என்றவளை முடிக்க விடாமல் செய்ய வேண்டிய முறையில் செய்ய, ஒருவாறாக அவனிடமிருந்து தன்னை பியைத்து கொண்டவளின் உதடுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்…
வலித்தது… ஆனாலும் பிடித்திருந்தது… வெட்கப் புன்னகையோடு கோபமும் சேர்ந்துக் கொள்ள… அவனை அடிக்கத் துவங்கினாள்…
“பிராடு… போர்டுவண்டி…” என்றவளை பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவன்…
“செம பசில இருக்கேன்… ஒழுங்கா சாப்பிட வந்துடு… இல்லைன்னா…” என்று சிரித்தபடியே அவன் மிரட்ட,
“சரி… சரி… வர்றேன்… அதுக்காக இப்படி வன்முறைல இறங்காதீங்க…”
“இன்னும் இறங்கிப் பார்க்கவே இல்லையே இங்கிலீஷ்… ஷால் வி ட்ரை சம்திங் வைல்ட்?” என்று அவன் கள்ளப்புன்னகையோடு கேட்க…
“பிச்சு பிச்சு…” என்று அவனை மிரட்டியவள்,
“ஆனா அம்மா அப்பாவுக்குத் தெரியாம இங்க இருக்கறது சரியில்லைங்க… தெரிஞ்சா அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும்… முதல்லையே அவங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… சீக்கிரம் நான் சென்னைக்குப் போகணும்…” அவள் போக்கில் சொல்லிக்கொண்டு போக,
“கொஞ்சம் அவங்களை சமாளி தமிழ்… ஒரு டூ டேஸ்… நான் ப்ரீ ஆகிடறேன்… நேரா நானே உன்னை மதுரைக்கு அழைச்சுட்டுப் போய் உன்னை எனக்குத் தரச் சொல்லிக் கேக்கறேன்… என்ன ஓகே வா?” என்று அவன் கேட்க… அதுவும் கூட நல்ல யோசனையாகத்தான் தோன்றியது… ஆனாலும் அவர்களுக்குத் தெரியாமல் இங்கே தங்குவது சரியாகப் படவில்லை…
“இல்லைங்க… உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… ஆனா அவங்களுக்கு நீங்கப் புது ஆள் இல்லையா? டூ டேஸ் இருக்கறதெல்லாம் கஷ்டம்… ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க…”
“என்னடா… எனக்காக ஒரு ரெண்டு நாள்… வீட்டில் இருக்க மாட்டியா? நானும் தனியாவே எவ்வளவு நாள் இருக்கறது?” அவன் அப்படி கேட்டபோது மிகவும் பாவமாகத்தான் இருந்தது… ஆனாலும் அதை ஒப்புக்கொள்ளப் பயமாகவும் இருந்தது… சிறுவயது முதலே அந்த வட்டத்திலிருந்து பழக்கப்பட்டவளுக்கு திடீரென்று அதிலிருந்து வெளியே வரத் தயக்கமாக இருந்தது…
“இனிமே லைப் முழுக்க சேர்ந்துதானே இருக்கப் போறோம்… ஏன் இப்படி பேசறீங்க?” என்றவள் சற்று இடைவெளி விட்டு… “ஓகே ஒன்லி டூ டேஸ்… அதுக்கு மேல என்னை இங்க இருக்க சொல்லக் கூடாது…” என்று பெரிய மனது வைத்து அவள் ஒப்புக்கொள்ள, அவன் புன்னகைத்தான்…
“ஹப்பா… மேடமுக்கும் கொஞ்சம் கருணை இருக்கு போல…” என்று சிரிக்க…
“ம்ம்ம் சொல்வீங்க…” என்று சிரித்துக் கொண்டே உணவைக் கையிலெடுத்து கொண்டாள். மீதி இருந்தவைகளை அவன் எடுத்துக் கொண்டு அறைக்குள் இருந்து வெளியே வர, அவனுக்குப் பின் வந்தவள் இனிமையாக அதிர்ந்து நின்றாள்…
இரவின் மெல்லிய வெளிச்சத்தில் அந்தப் படகு வீடு நீரில் மிதந்து கொண்டிருந்தது…
அறைக்கு வெளியே ஒரு டைனிங் டேபிள் இருக்க… சுற்றிலும் நான்கைந்து இருக்கைகள்… மெல்லிய மஞ்சள் ஒலியைச் சிந்திக்கொண்டிருந்த விளக்கு… கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாருமே இல்லாத தனிமை… சில்லென்று வீசிய காற்று… அவளையும் அறியாமல் தேகம் சிலிர்த்தது…
கையில் வைத்திருந்ததை டேபிளின் மேல் வைத்து விட்டுத் திரும்பி ஸ்ரீதரனை பார்த்தாள்… அதே கள்ளப்புன்னகையோடு குறும்புக் கண்ணனாக அவன்!
“வாவ்…” என்றபடி சுற்றிலும் பார்க்க, அவளைப் பார்த்தவாறு இருக்கையில் அமர்ந்தான் அவளது ரசனையை ரசித்தபடி…
கைப்பேசி அழைத்தது… வாட்ஸ்அப் வாய்ஸ் கால்…
ராஜீவ் தான் அழைத்திருந்தான்…
“சொல்லு ராஜீவ்…”
“சர்… விஷயம் ஓகே… கட்சித் தலைவர் ஓகே சொல்லிட்டார்… வாமனன் இந்த முறை ஆலப்புழாவில் நிற்பதும் ஊர்ஜிதமாகிவிட்டது…” என்றுக் கூற, கண்களை மூடித் திறந்தவன்,
“ஃபைன்… தென்…” என்றான்.
“இன்னைக்கு நைட் கொச்சின் போர்ட்டுக்கு வரக் கன்சைன்மென்ட் எஸ்எஸ்சிசி நம்பரை மாத்தியாச்சு… ஷிபு வேண்டியதை செய்துட்டார்… இதோட மொத்தம் நாலு கன்சைன்மென்ட்… நெக்ஸ்ட் ஸ்டெப் போகலாமான்னு கேக்கறாங்க சர்…”
“வெரி குட்… இன்னும் ரெண்டு கன்சைன்மென்ட் நம்மகிட்ட வரட்டும்… அப்புறமா ஆரம்பிக்கலாம்… இப்போதைக்கு அவனுங்க கன்சைன்மென்ட்டை தேடிகிட்டே இருக்கட்டும்… ஒரு சின்ன டேட்டா கூடச் சிக்கக் கூடாது ராஜீவ்…”
“கண்டிப்பா சர்… அசெட் ஐடெண்டிபிகேஷன் நம்பரை வெச்சு அவ்வளவு பெரிய போர்ட்ல இந்தக் கன்சைன்மென்ட்டை தேடிக்கண்டுபிடிக்கறதுக்குள்ள செத்தானுங்க…” என்று அவன் சிரிக்க…
“ம்ம்ம்… நாளைக்கு ரெடியாகிக்கோ ராஜீவ்… வேட்பு மனு தாக்கல் பண்ண போறோம்…”
“சியூர் சர்… ரொம்ப சந்தோஷம்… ஆல் தி பெஸ்ட் சர்…” என்று அவனது சந்தோஷத்தை வெளிப்படுத்த…
“தேங்க்ஸ்… என்னோட திருமணத்தை இன்னொரு ஒரு வாரத்துல அனௌன்ஸ் பண்ணிடலாம்… தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் திருமணம்… எல்லா பக்கமும் தகவல் போகணும் ராஜீவ்…”
“கண்டிப்பா சர்… ஆனா…” என்று அவன் தயங்க…
“சொல்லு ராஜீவ்…”
“மற்ற கொட்டாரங்கள்ல இருந்து எதிர்ப்பு வரலாம்… அதிலும் திருவிதாம்கூரிலிருந்து எதிர்ப்பு வந்தா அது தேர்தலுக்கும் நல்லதல்ல தம்புரானே… கொஞ்சம் யோசிச்சு முடிவு செய்யலாமே… எனக்குத் தோன்றியதை சொன்னேன்… தவறுன்னா மன்னிச்சுடுங்க…” தயங்கியவாறே அவன் கூற… ஒரு நொடி யோசித்தவன்,
“எதிர்ப்பு என்றைக்கிருந்தாலும் தான் வரும்… சமாளித்துத்தான் ஆக வேண்டும் ராஜீவ்… அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கெல்லாம் கொம்பு முளைத்திருப்பதாக எண்ணம்… எனக்கு அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்று இடைவெளி விட்டவன்,
“தேர்தல் முடிவு நமக்குச் சாதகமாகத்தான் இருக்க வேண்டும்… அப்படி கொண்டு வரும் பட்சத்தில் எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்தலாம் ராஜீவ்…” என்று மெலிதாகச் சிரித்துக்கொண்டேக் கூற,
“சியூர் சர்… ஆஸ் யூ விஷ்…”
கைப்பேசியை வைத்து விட்டு நிமிர்ந்து அவளைப் பார்க்க… அவள் மிகத் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்…
“என்ன மேடம் யோசனை?” என்று கேட்க…
“என்னோட கொள்கைகளைக் கொஞ்சம் தளர்த்திக்கலாம்ன்னு நினைக்கறேன்…” சம்பந்தம் இல்லாமல் அவள் கூற,
“கொள்கையா? உனக்கா? என்னாச்சு இங்கிலீஷ் உனக்கு?” கண்களில் குறும்பு மின்ன அவன் கேட்க…
“ஆமா… மலையாளம் கத்துக்கவே கூடாதுன்னு நினைச்சேன்… அதையே ஒரு கொள்கையா கூட வெச்சுருந்தேன்…” மிகவும் சீரியசான தொனியில் அவள் கூற… அவன் சுவாரசியமாக…
“ஹாங்… அப்புறம்… அந்தக் கொள்கைக்கு என்னாச்சு?” என்று கேட்க…
“கொஞ்சூண்டு கத்துக்கணும் பாஸ்… இல்லைன்னா நான் லவ் பண்ற பக்கி என்னை ஏமாற்றவே மலையாளத்தில் பேசறான்…” அவனும் ராஜீவுமாகப் பேசிக்கொண்டிருந்ததை குறிப்பிட்டு அவள் கூற, அவன் குறும்பாகப் புன்னகைத்து…
“உனக்கு என்ன வேணும்னாலும் நான் சொல்லித்தரேன் இங்கிலீஷ்…” என்று கண்ணடிக்க,
“ஆஹான்… உங்களை நம்பறேன்…” என்று அவள் இழுக்கும் போதே அவள் எந்தளவு அவனை இந்த விஷயத்தில் நம்புவாள் என்பது புரிய, அவனது குறும்புப் புன்னகை விரிந்தது… அவளது இடையோடு கைகளைச் சேர்த்து பிணைத்துக் கொண்டு
“இப்ப உனக்கு ஓகேன்னா கூடச் சொல்லித் தரலாம் தான்ன்ன்…” என்று இழுக்க, அந்தத் தொனியில் அவனது கள்ளத்தனத்தை உணர்ந்தவள், அவனைத் தள்ளி விட்டாள்…
“சரியான கள்ளன்…” என்று முனுமுனுத்தவளை மீண்டும் சேர்த்தணைத்துக் கொண்டு, புருவத்தை உயர்த்துப் பார்த்து,
“ஆனா இப்ப சொல்லித் தர ஆரம்பிச்சா நடுவில் நிறுத்தக் கூடாது… ஓகே வா?” என்று கண்டிஷன் போட,
“ஆஹா… போதுமே…” உதட்டைச் சுளித்துக் கொண்டாள்.
“ஆஹான்… அப்படியா?” என்று அவன் ராகமிழுக்க, அவனை அடிக்கக் கை ஓங்கினாள்… விளையாட்டாக! முகத்தில் வெட்கப் புன்னகை!
“ஓகே… ஓகே… ஜோக்ஸ் அப்பார்ட்… நாளைக்கு காலைல சீக்கிரமா ரெடியாகிடு தமிழ்…” அவளுக்கு ஆப்பத்தை பரிமாறிக்கொண்டே அவன் கூறினான்… இன்னொரு தட்டில் அவனுக்கும் பரிமாறிக் கொண்டான்… நல்ல பசியில் தான் அவனும் இருந்தான்…
அவளை விட்டுவிட்டு தனியாக உண்ண மனமில்லை அவனுக்கு… அதனால் பேக் செய்து அவளிருந்த படகு வீட்டிற்கு வந்துவிட்டான்… இந்தியாவின் வெனிஸ் நகரம் என்றழைக்கப்படும் ஆலப்புழையின் படகு வீடுகள் வெகுபிரசித்தம்… இரவு நேரத்தில் படகு வீட்டை யாரும் காயலினுள்ளே எடுத்துச் செல்வதில்லை… கரையோரத்தில் தான் பெரும்பாலும் நிறுத்துவது… தனிமை தேவைப்படும் நேரங்களில் அவன் இங்குதான் கழிப்பான்… ஒரு காலத்தில் இந்தப் படகு வீட்டில் வெகு அமைதியாக அவனுக்குப் பொழுதுகள் கழிந்திருக்கிறது…
“என்ன விஷயம்?” ஆப்பத்தை சொதியோடு சேர்த்து சாப்பிட்டு கொண்டே அவள் கேட்டாள்… கைப்பேசியில் அவன் மலையாளத்தில் பேசியதால் அதன் சாரம் புரியவில்லை.
ஆப்பம் அந்தச் சொதியோடு சேர்ந்து தேவாம்ருதமாய் சுவைத்தது… தேங்காய் பாலின் வாசத்தோடு மென்மையான மசாலா வாசம்… பச்சை மிளகாயின் காரம் அடிநாக்கில் நின்றுக் கொண்டு இன்னும் வேண்டுமெனக் கேட்டது… இவ்வளவு சுவையான சொதியை அவள் உண்டதே இல்லை… பசியால் சுவைத்ததா? அல்லது சுவை அதிகமாக இருந்ததால் இன்னமுமே பசித்ததா என்று பட்டிமன்றத்தில் பேசுமளவு அந்தச் சுவையில் ஆழ்ந்திருந்தாள்…
“நாளைக்கு மனுத்தாக்கல்…” தலை குனிந்துக் கொண்டே அவன் கூற, அவள் குழப்பமாக அவனை ஏறிட்டாள்…
“மனு தாக்கலா? என்ன?” ஒன்றும் புரியாமல் அவள் கேட்க,
“ஆலப்புழா சட்டசபை தொகுதிக்கு ஸ்ரீதரன் வெர்மா தேர்தல்ல நிற்கப் போறான்… அவனுக்காக நாளை மனுத்தாக்கல் பண்ண போறோம்… நீங்களும் கூட வருவீங்களா மேடம்? வந்தா அவனுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்…” என்று புன்னகையோடு அவன் கேட்க, அவளுக்குப் புரையேறியது!
தலையைத் தட்டிக்கொண்டே அவனை அதிர்ந்து பார்த்தாள் தமிழ்நதி!
ஸ்ரீதரனின் தமிழ்நதி!