Tamil Novel Chakaraviyugam 23

23

பாரதப் போரே துரோகங்கள் மற்றும் வஞ்சங்களினால் சூழப்பட்டதுதானே ஸ்ரீதரா… ஆச்சாரியர் துரோணரை வீழ்த்தியதும் கிருஷ்ணனின் வஞ்சம் தானே. அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்பதை பதினைந்தாம் நாள் போரில் வீமனை வைத்துக் கூற வைத்தாலும் அவர் கிருஷ்ணனை நம்பவில்லையே! எதிரியிடமும் தர்மத்தை கடைபிடிக்கும் ஏமாளியான தர்மனிடம் அல்லவா உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார்.

அப்போதும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டி தர்மன், “ஆம் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்… அவன் ஒரு யானை…” என்றுக் கூற, அவன் யானை என்பதை மட்டும் தனது சங்கநாதத்தால் மறைத்தானே அந்த கிருஷ்ணன், அவன் வஞ்சகனில்லையா? ஆனால் தர்மனே, இப்போதும் தர்மத்தை கடைபிடிக்க நினைக்கிறாயே, அந்த பதினாறு வயது சிறுவனை, அர்ஜுனனின் மகனை, தர்மமில்லாத வழிமுறைகளில் கொன்றாரே துரோணர்… அது எத்தகைய தர்மம் என்று தானே அந்த பரந்தாமனும் கேள்வி கேட்டான்…

அதனால் நானும் கேட்கிறேன் ஸ்ரீதரா … போரில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?

அப்படியானால் நீ அபிமன்யுவா அர்ஜுனனா?

வாமனன் கூண்டுப் புலியாக அந்தப் பெரிய அறைக்குள் உலவிக்கொண்டிருந்தான்… மனம் கொதித்துக் கொண்டிருந்தது… அன்று காலை மனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தான், ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு!

உடன் தன்னுடைய தொண்டர் படையோடு தான் சென்றான்… அவன் மனுதாக்குதல் செய்து விட்டு வெளியே வரவும் ஸ்ரீதரன் உள்ளே வரவும் நேரம் சரியாக இருக்க, வாமனனுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது…

இதுவரை மாவேலிக்கரையையே தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்த ஸ்ரீதரனுக்கு திடீரென்று அரசியலில் ஏன் ஆர்வம்?

இந்தக் கேள்வி அவனை உலுக்கிக்கொண்டிருந்தது…

அவன் பெரிதாக எதையோ திட்டமிடுகிறான் என்று தோன்றியது…

ஸ்ரீதேவி மெளனமாக அவனுக்குத் தேநீரை கொண்டு வந்தாள்…

அவள் வாமனனின் மனைவி…

அவனது இரண்டு குழந்தைகளின் தாய்… அவனுடைய செயல்கள் பலவற்றுக்கும் ஒப்புதல் இல்லாதவள்… முறையில் ஸ்ரீதரன் அவளுக்குத் தம்பி… சாக்தரின் ஒன்று விட்ட அண்ணனின் மகள்.

சொத்துக்காகவும் வாரிசுரிமைக்காகவும் சாக்தரையும் ஸ்ரீவித்யாவையும் கிருஷ்ணர் கோவிலில் வைத்துக் கொலை செய்யுமளவு துணிந்தவனின் செயல் அவளை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது… இயல்பிலேயே ஸ்ரீதேவியின் பால் பாசம் கொண்டிருந்த குடும்பத்தை நிர்மூலமாக்கியவனின் மனைவி என்ற பட்டத்தையே வெறுத்தாள் அவள்…

ஆனாலும் இரண்டு குழந்தைகளுக்காக இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டிருந்தாள்… இது போன்ற குடும்பங்களின் சதிகளையும் சூழ்ச்சிகளையும் பார்த்து வளர்ந்தவள் தான்… ஆனால் கண் முன் வாமனனால் அரங்கேற்றப்பட்ட அநியாயங்களைப் பார்த்தபிறகு வாழ்க்கையில் பற்று விடுபட்டிருந்தது…

அவளுக்காகப் பெரிய இழப்புக்களை எல்லாம் மென்று விழுங்கிக்கொண்டு எதுவும் வேண்டாமென்று மனம் வெறுத்துப் போன ஸ்ரீதரனின் முகத்தைப் பார்க்கவும் வெட்கமாக இருந்தது…

ஆனால் அவன் வெடிக்கவும் நேரமாகிவிடாதே! அதை இவர் புரிந்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவனையே தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாரே!

மனம் வெதும்பிப்போய் தான் வாமனனுடனான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தாள்… ஒரு கூரையின் கீழ் இருந்தாலும் இருவரின் குண விசேஷங்கள் நேர் எதிராக இருப்பதில் வாமனனுக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை… அவன் தான் என்றுமே யாரையும் லட்சியம் செய்ததில்லையே!

அவனுக்கிருந்த ஒரே செண்டிமெண்ட் அவனது மகனும் மகளும் மட்டுமே! அளவற்ற பாசம் அவர்களின் மீது! அவர்களுக்கு ஒன்றென்றால் அவன் துடித்து விடுவதுண்டு… அவர்களுக்காகத்தான் அவன் என்று அடிக்கடி கூறுவதும் உண்டு.

அவனது அந்தப் பிள்ளைகள் மேலான பாசத்துக்காகத்தான் ஸ்ரீதேவியும் அவனைப் பொறுத்துக் கொண்டிருந்தாள்… அதோடு அவளைக் கொடுமையெல்லாம் செய்தது இல்லை… ஆனால் பெரிதாக அவள்மேல் காதல் கொண்டதெல்லாம் இல்லை…

அவனைப் பொறுத்தவரை வீட்டில் ஸ்ரீதேவி ஒரு உடமை… சோபா, டைனிங் டேபிள் போல அவளும் ஒரு பொருள்… அவளுக்கும் உணர்வுகள் இருப்பதை அவன் அங்கீகரித்ததில்லை… ஆனால் அவனுடைய குழந்தைகளின் தாயாக அவர்களைக் கண்ணின் மணியாகப் பார்த்துக் கொள்பவளை அவனுக்குப் பிடிக்கும் அவ்வளவே!

அன்று காலை ஸ்ரீதரனை பார்த்தது முதல் கொதித்துக் கொண்டிருந்தது… அவனை முழுவதுமாக முடித்து விடவும் முடியவில்லை… முக்கியமானவைகள் அனைத்தும் இப்போது அவன்வசம் அல்லவா இருக்கிறது…

பல்லைக்கடித்துக் கொண்டு வருடக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்… அந்தக் காத்திருப்பை வீணாக்க விட முடியாது… கண்டிப்பாக முடியாது…

அதிலும் காலையில் ஸ்ரீதரன் அந்தப் பெண்ணோடு வந்ததை வாமனனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

அதிலும் ஸ்ரீதரனின் வார்த்தைகள்…

“இவள் தான் என்னுடைய மனைவியாகப் போகிறவள் வாமனா… தமிழ்நதி… என்னவோ செய்வதாகக் கூறினாயே… முடிந்தால் கை வைத்துப் பார்…” உணர்வைக் காட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக அவன் கூறினாலும் அவனது வார்த்தைகளின் உறுதி வாமனனின் ரத்தத்தை சூடு படுத்தியது… இருக்கும் இடத்தைக் கணக்கில் கொண்டு அவன் சிரித்து மழுப்ப வேண்டி வந்தது…

ஆனாலும் ஒன்றை கூர்மையாகக் கவனித்து விட்டான்… கலெக்டர் அலுவலக வரவேற்பறை சிறிதாக இருக்க, அங்கே இரண்டு தரப்பினருக்கும் இடம் இல்லாமல் சற்று சிரமமாக இருந்தது… வாமனன் மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தான்… ஸ்ரீதரன் உள்ளே வந்துக்கொண்டிருந்தான்…

ஸ்ரீதரனின் அருகில் மிரண்டபடி அந்தப் பெண் நின்றிருந்தாள்… அவளுக்கு இவையெல்லாம் புதிது போல… அவன் ராஜீவிடம் எதோ பேசிக்கொண்டிருக்க, அந்தப் பெண்ணைத் தாண்டிச் சென்ற ஒருவன் அவள்மேல் மோதுவது போல வந்துவிட, சட்டென்று அவளைத் தன் புறம் இழுத்துக் கொண்டான் ஸ்ரீதரன்…

அந்த நொடியில் மோத வந்தவனை அவன் பார்த்த பார்வையும், அதில் தெரிந்த ரௌத்திரமும்… வாமனனுக்கே சட்டெனக் கிலி பரவியது! சம்பந்தபட்டவனை உடனே ராஜீவ் அப்புறப்படுத்தினாலும் ஸ்ரீதரனின் அந்தக் கோபாக்னி தெறித்த முகம் வாமனனுக்கு நிறைய அர்த்தங்களைச் சொல்லிக்கொடுத்தது…

ஸ்ரீதரனின் வீக்னஸ் அந்தப் பெண்… அதாவது தமிழ்நதி!

அவள் பார்க்க அப்பாவியாகத்தான் தெரிந்தாள்… வெகு அழகும் கூட… ஆனால் அது மட்டுமே போதாதே!

தங்களது அந்தஸ்த்துக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத அந்தப் பெண்ணைத் தம்புராட்டியாக ஏற்பதா? ஒருக்காலும் முடியாது… தம் குடும்பங்களின் ரத்த சொந்தத்தில் எத்தனையோ பெண்கள் இருக்க… அதிலும் அவனுக்காகப் பேசப்பட்டிருந்த திருவிதாம்கூரின் ஸ்வர்ணலக்ஷ்மி காத்திருக்க, எதைக் கண்டு இந்தப் பெண்ணிடம் மயங்கினான் ஸ்ரீதரன்?

அவன் திருவிதாம்கூரின் பக்கம் சென்று விட்டால் மாவேலிக்கரையை தான் கைப்பற்றி விடலாம் என்பது அவனது ரகசிய திட்டமும் கூட… ஆனால் அதற்கு வாய்ப்பு தராமல் ஏதோ ஒரு தமிழ் பெண்ணை அதிலும் சற்றும் பொருந்தாத அந்தப் பெண்ணை வாமனனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை…

ஜெயந்தன் வந்தான்… அவன் வாமனனின் உதவியாளர்… வலது மற்றும் இடது கை… அவனது அத்தனை நடவடிக்கைகளையும் அறிந்தவன்… என்ன வேண்டுமானாலும் செய்துக் கொடுப்பவன்…

“சர்… நேற்று கொச்சி ஹார்பருக்கு வந்த நம்ம கன்சைன்மென்ட்…” என்று இழுக்க, என்னவென்று பார்த்தான்…

“காணவில்லை சர்…” அவனது குரல் உள்ளே சென்றுவிட்டது… வாமனனுக்கு தூக்கி வாரிப் போட்டது… ஒரு கன்சைன்மென்டின் மதிப்பு சில கோடிகள்…

“ஜெயந்தா விளையாடாதே… அதெப்படி காணாமல் போகும்?” கோபமாக அவன் கேட்க,

“அதுதான் தெரியவில்லை சர்… நம்முடைய ஆறு கன்சைன்மென்ட் மட்டும் காணாமல் போயிருக்கிறது…” மெல்லிய குரலில் அவன் கூற, வாமனன் உச்சபட்ச அதிர்வில் அவனைப் பார்த்தான்…

“என்ன சொல்ற ஜெயந்தா…” அவனது குரல் நடுங்கியது…

“ஆமாம் சர்… டான்சானியா டாங்காவில் க்ராஸ் எக்சாமைன் செய்து விட்டேன்… அங்கே ஷிப்மென்ட் ஆகியிருக்கிறது… எஸ்எஸ்சிசி நம்பர் ஜெனரேட் ஆகி நம்மிடம் இருக்கிறது… ஆனால் கன்சைன்மென்ட்டை காணவில்லை… எப்படி என்றே புரியவில்லை…” நடுவில் என்ன ஆனது என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் அவன் குழம்பினான்…

வாமனன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்… அடுத்து என்ன செய்வது? போர்ட்டில் இதுபோலக் காணாமல் போவது சாதாரணமல்ல… அதிலும் ஒரே நேரத்தில் ஒருவருடைய ஆறு கன்சைன்மென்ட்டும் ஒன்றைப்போலவே காணாமல் போவதென்றால் அது ஏதாவது சதி வேலையாக இருக்குமோ?

தனக்கு எதிரிகள் யார் யார் என்று பட்டியலிட்டது மனம்… ஒன்றா இரண்டா? ஸ்ரீதரை நிறுத்திப் பார்த்தான்…

“ச்சே… ச்சே… அவனுக்கு அவ்வளவு தெரியுமா என்ன?” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அடுத்து யார் என்று அசைபோடத் துவங்கினான்…

ஒவ்வொருவருவராக நினைவில் வந்தாலும் யாரையும் தீர்க்கமாக நினைக்க முடியவில்லை…

இவன் இங்கே இப்படிக் குழம்பிக்கொண்டிருக்க, ஸ்ரீதரன் வாமனனை வளைத்துப் பிடித்து வீழ்த்த வியூகம் வகுத்துக்கொண்டிருந்தான்…

ஸ்ரீதரனை சுற்றி வளைத்த சக்கரவியூகத்தின் ஒவ்வொரு சக்கர அடுக்கையும் அவன் வீழ்த்திக் கொண்டிருக்க, சுழலும் அந்த மரண இயந்திரத்தினை அவன் வெற்றிக் கொள்வானா? அல்லது அந்த வியூகம் அவனை விழுங்கி விடுமா?

சக்கரவியூகத்தினை உடைத்துக் கொண்டு மையத்திற்கு சென்று விட்ட ஸ்ரீதரன் மீண்டு வருவானா? அவன் அர்ஜுனனா இல்லை அபிமன்யுவா?

******

மீடியா மக்கள் குவிந்திருந்தனர்… கசகசவெனப் பேச்சு சப்தத்தால் நிறைந்திருந்தது ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கான்பரன்ஸ் ஹால்…

ஆலப்புழை ஆட்சியரை மீடியா மக்கள் மொய்த்திருந்தனர்… அனைவரின் முகத்திலும் பரபரப்பு… அதிலும் தேர்தல் அறிவிப்பு வெளிவந்திருக்கும் வேளையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமே!

“மொத்தமாக ஆறு கன்சைன்மென்ட்டில் இந்தப் போலி டான்சானியா சந்தனக் கட்டைகளைக் கொச்சி போர்ட் மூலமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள்… அவை அரசு சந்தன எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சப்ளை செய்வதற்காக இறக்குதி செய்யப்பட்டவை என்று தெரியவருகிறது…” என்று ஜோஸ் இடைவெளி விட… அருகில் நின்றிருந்த துணை ஆட்சியர் ஸ்ரீதர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்…

“போலி டான்சானியா சந்தனக் கட்டைகள் என்றால் என்னவென்று சொல்லுங்க கலெக்டர் சர்…” என்று நிருபர் பக்கமிருந்து கேள்வி வர,

“நாம் சந்தன எண்ணெய் தயாரிக்க சந்தன மரத்தைத் தான் உபயோகம் செய்வோம்… ஆனால் இந்த டான்சானியா சந்தனம் என்று அழைக்கப்படும் இது புதர் வகையைச் சேர்ந்த ‘ஓசிரிஸ் டேனிபோலியா’ என்றழைக்கப்படும் இதற்குச் சந்தன வாசம் உண்டே தவிர, சந்தனமாகாது… சந்தன எண்ணையும் அவ்வளவு எடுக்க முடியாது… ஆனால் பார்ப்பவர்களைச் சந்தனம் என்று நம்ப வைக்க முடியும்… அதனால் தான் போலி சந்தனம் என்று குறிப்பிடுகிறோம்…”

ஜோஸ் நிதானமாக விளக்க,

“சுமாராக எத்தனை வருடமாக இப்படி மோசடி நடந்திருக்கும்?”

“எத்தனை வருடங்கள் என்பதை இனிமேல் தான் விசாரணை நடத்த வேண்டும்… ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக முழு வீச்சில் நடந்திருப்பதாகத் தெரிய வருகிறது”

“இவ்வளவு அதிகமாக இறக்குமதி நடந்திருக்கிறது… அதையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறதே…”

“அப்படி கிடையாது… இந்த வகையைப் பார்த்துக் கண்டுபிடிப்பது கடினம்… சில அடிப்படை சோதனைகள் செய்து பார்க்க வேண்டும்… ஒவ்வொரு முறையும் விஞ்ஞானிகள் இது சந்தனம் தான் என்று பார்த்து அங்கீகரிக்க வேண்டும்… இதுதான் விதி… ஆனால் இதில் அதுவும் மீறப்பட்டிருக்கிறது… திரு.மன்சூர் எந்த அடிப்படையில் இதை உண்மையான சந்தன மரம் என்று சான்று வழங்கினார் என்று தெரியவில்லை… கண்டிப்பாக அதையும் விசாரிப்போம்…” என்று நிருபர்களைப் பார்த்து நீளமாகப் பேசியவன்,

“கொச்சி போர்ட்டில் வந்திருக்கிறது ஆனால் ஆலப்புழை நிர்வாகம் கைபற்றியிருக்கிறது என்றால் எங்கோ இடிக்கிறதே?”

“பாரஸ்ட் டிவிஷனின் பறக்கும் படை கொச்சியிலிருந்து ஆலப்புழை எடுத்துச் செல்லப் பர்மிட் பாஸ் கொடுத்து இருக்கிறார்கள்… அதனால் தான் இவர்கள் இங்கு மாட்டியிருக்கிராகள்… விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன…”

“இந்தப் போலி சந்தனக் கட்டைகளை யார் இறக்குமதி செய்தது, யார் அரசாங்க தொழிற்சாலைகளுக்குச் சப்ளை செய்தது?”

“விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது… விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்…”

“எங்குப் பார்த்தாலும் போலிகள் மயமாக இருக்கிறது… உண்ணும் உணவிலிருந்து அனைத்திலும் போலிகளின் ஆதிக்கம்… இதைத் தடுக்க அரசாங்கத்தால் முடியாதா?”

“கண்டிப்பாக முடியும்… அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் வேண்டும் அல்லவா… போலிகளை யார் சப்ளை செய்வது? வேறு யாரும் அல்ல… அந்தப் பொதுமக்களில் ஒரு சிலர் தானே? சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லாமல், தங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பொறுப்பற்று நடந்து கொள்வதால் தானே இந்தப் போலி சீன முட்டைகளும், அரிசியும் உள்ளே வருகிறது? அரசாங்கத்துக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அதே அளவுப் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது…”

ஜோஸ் சற்று நீளமாகக் கூற,

கடத்தல் சமாசாரம் தான் ஆனால் உள்ளுக்குள் இருப்பவர்களுக்குத் தான் தெரியும், அது முழுக்க முழுக்க பெரும் ஊழல் என்று!

சிக்கியிருப்பது பெரும் முதலை ஆயிற்றே!

ஸ்ரீவாமனன் வெர்மா, திருவல்லா எம்எல்ஏ… தற்போது ஆலப்புழையின் ஆளும்கட்சி வேட்பாளர்… இந்த ஊழல் இப்போது வெளிவருவது அவருக்கு மட்டுமல்லாமல் அவரது கட்சிக்கும் சேர்த்து அல்லவா பெரும் பாதிப்பாக அமையக்கூடும்…

இருவரின் எண்ண ஓட்டமும் அதுவாகத்தான் இருந்தது…

“சர்… மேலிடத்திலிருந்து ப்ரெஷர் அதிகமாக இருக்கிறது… இந்த விஷயத்தைக் கைவிட சொல்லி…” ஸ்ரீதர் ஜோஸின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு கூற,

“முடியாது ஸ்ரீதர்… கண்டிப்பாக இந்த விஷயத்தைவிட முடியாது… இந்த வாமனனை இதை விட்டால் வேறெந்த வழியிலும் மாட்டி வைக்க முடியாது… அதனால் நாம் இதைச் செய்தேயாக வேண்டும்…”

“ஆனால் சீப் செக்ரட்டரியே ப்ரெஷர் கொடுக்கிறாரே…”

“இப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கின்றன ஸ்ரீதர்… நம்மை இவர்கள் பயமுறுத்தி வேறு பக்கம் மாற்ற முடியாது… இந்த நேரத்தை விட்டால் மற்ற நேரங்களில் நாம் துணிந்து இறங்க முடியாது… யாருடைய போனையும் இரண்டு நாட்கள் அட்டென்ட் செய்யாதே… முழுமையாக விஷயத்தை முதலில் முடித்து விடலாம்…”

“அப்படி என்றால் முடித்து விட்டே மீடியாவிடம் பேசியிருக்கலாமே சர்…”

“இல்லை ஸ்ரீதர்… நடுவில் எப்படி வேண்டுமானாலும் தடங்கல் வரலாம் இல்லையா? அதனால் அட்லீஸ்ட் மீடியா மக்களுக்குத் தெரிந்து விட்டால் அவர்கள் கண்டிப்பாக ஆராய்ந்து எழுதி இந்தப் பிரச்சனையை உயிர்ப்புடன் வைத்து விடுவார்கள்… இந்த வாமனன் போன்ற ஆட்களை இப்படித்தான் சமாளிக்க முடியும்…” என்று முடித்து விட, ஸ்ரீதரும் தான் அசந்து போனான்…

ஸ்ரீதரன் தம்புரான் தங்கள் இருவரையும் அழைத்து இந்த ஆதாரங்களை எல்லாம் கொடுத்தபோது கூட அவன் இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நினைக்கவில்லை…

விஷயம் இதுதான்…

கேரளத்தில் உள்ள அரசாங்கத்தின் சந்தன எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சந்தன மர கட்டைகளைச் சப்ளை செய்ய வாமனன் உரிமை பெற்றிருந்தான்… கடந்த ஐந்து வருடங்களாக அவன் தான் முழு சப்ளையரும் கூட… ஆனால் அவன் சப்ளை செய்வது தரம் குறைந்த மரம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக முனுமுனுப்பு எழுந்து கொண்டு இருந்தது… அதை அவனது அதிகாரத்தால் அடக்கி விட்டாலும் அதிருப்தி தொடர்ந்துக் கொண்டு தானிருந்தது…

இந்த நிலையில் தான் ஸ்ரீதரன் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தான்… வாமனனின் இறக்குமதிகள் அனைத்தும் கொச்சி ஹார்பரை சார்ந்தது தான்… அதை ஆராய்ந்தபோது அவன் சந்தன மர கட்டைகளை இறக்குமதி செய்திருப்பது தெரியவந்தது…

சந்தன மரங்களை வெட்டுவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அரசு சந்தன மரக் கட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது… ஆனால் இவன் இறக்குமதி செய்ததோ சந்தன மரம் என்ற பெயரில் ‘ஓசிரிஸ் டேனிபோலியா’ அதாவது டான்சானியாவில் வளரும் இவ்வகை புதரானது சந்தன மரத்தைப் போன்ற இயல்பைக் கொண்டது ஆனால் சந்தனம் அல்ல…

ஒரு வகைப் புதர்… மிகவும் விலை குறைவானது… அதை இறக்குமதி செய்து சந்தனக்கட்டைகள் என்ற பெயரில் அரசாங்கத்தின் தொழிற்சாலைகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததை ஸ்ரீதரன் கண்டுபிடித்து, வந்த ஆறு கன்சைன்மென்ட்டுகளின் எஸ்எஸ்சிசி எனப்படும் ட்ராக்கிங் நம்பரை ஷிபுவை வைத்து மாற்றச் செய்திருந்தான்… அதுவுமே மிகப்பெரிய ரிஸ்க் தான் ஆனாலும் அதை முடித்ததால் தான் அவனது கன்சைன்மென்ட்டை கைப்பற்ற முடிந்தது…

இந்தக் கணக்கு வழக்குகள் முழுவதும் அறிந்தது தமிழகத்தின் மதுரையை சேர்ந்த பெண் ஆடிட்டர் தான் என்பதால் தான் அவ்வளவு அவசரமாக மதுரைக்கு அவன் சென்றான். அந்த ஆடிட்டரிடம் இவன் கொண்ட தொடர்பை வாமனன் அறியக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். அதன் பின் தான் இந்தப் பிரச்சனை முழு வேகத்தை அடைந்தது.

முழு விவரத்தையும் ஜோசிடமும் ஸ்ரீதரிடமும் தெரிவித்தபோது அவர்களுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி… அதிலும் தேர்தல் நேரத்தில் எனும்போது அதன் தாக்கம் மிகப்பெரியது அல்லவா!

இருவருமே இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக இறங்கி விட்டனர்… யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல்! இருவருமே நேர்மையான அதிகாரிகள் என்பதோடு எதையாவது சாதிக்க வேண்டும் என்று மனதார நினைத்து ஆட்சிப்பணிக்கு வந்தவர்கள்… வந்த கையோடு ஆள்பவர்களின் தலையீடுகளினாலும் ஊழல் அரசியல்வாதிகளின் மிரட்டல்களினாலும் தாங்கள் செய்ய நினைப்பதை செய்ய முடியாமல் தவிப்பவர்கள்!

அவர்கள் இருவருக்குமே இந்த விஷயம் பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது… பின்னாலிருந்து ஸ்ரீதரன் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கொடுத்த நம்பிக்கை வேறு!

வெகு உற்சாகமாக வாமனனுக்கு எதிராகக் களமிறங்கி விட்டிருந்தனர்!

அதோடு ஸ்ரீதரன் தரப்பு யாரும் அறியாமல் இந்தத் தகவல்களை மீடியாவில் கசிய விட்டுவிட்டது… ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களோடு!

அடுத்த ஒரு வாரத்தில் தீப்பற்றிக் கொண்டது… வாமனனுக்கு எதிராக! அந்தத் தீயை சற்றும் அணையாமல் பார்த்துக் கொண்டான் ஸ்ரீதரன்… தொடர்ச்சியாக ஊழல் செய்திகளைத் தீனிகளாகக் கொடுத்து.

வாமனன் வாக்கு சேகரிக்க செல்லுமிடமெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பை அவன் எதிர்கொண்டான்… ஊழல்வாதி என்று! சிலர் அவனை வெளிப்படையாகத் துரத்தவும் செய்தனர்… பத்திரிக்கைகளில் விடாமல் வந்து கொண்டிருந்த வாமனனின் ஊழல் கதைகள் அவர்களது கோபத்துக்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தன…

அதோடு அவன் சார்ந்த கட்சிக்கும் அது மிகப்பெரியக் கெட்ட பெயர் என்பதால் கட்சிக்குள்ளும் எதிர்ப்பை அவன் சமாளிக்க வேண்டியிருந்தது…

ஸ்ரீதரன் பிரசாரத்திற்காக மெனக்கெடவே தேவையிருக்கவில்லை…