20
சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அபிமன்யுவை துரோணர் எப்படியாவது வீழ்த்த எண்ணி அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யுவின் வில்லை முறித்தான். துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வில்லை துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான்.
மாவீரன் அபிமன்யு குதிரையையும், வில்லையும், வாளையும், கேடயத்தையும் இழந்தாலும் வீரத்தை இழக்கவில்லை. ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான். பல வீரர்களைக் கொன்றான்.
முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன் யாரும்அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான்.
உடம்பெல்லாம் புண்ணாகி, குருதி ஒழுக, நிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும், அதர்மயுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். ஆயுதம் இல்லை என்றால் என்ன? அபிமன்யுவின் வீரம் இன்னும் மிச்சம் இருக்கிறதே. அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் தாக்கினான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கி, அபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். கையில் ஆயுதமும் இன்றி துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை, மாவீரனான அபிமன்யுவை, நரிகள் ஒன்று சேர்ந்து கொன்றது. வீர மரணம் எய்தினான் அபிமன்யு. மரண தேவன் கூட அவன் உயிரை எடுக்க சில கணம் தயங்கினான் என்கிறது மஹாபாரதம்.
ஆகையால் கேட்கிறேன் ஸ்ரீதரா… நீ அபிமன்யுவா இல்லை அர்ஜுனனா?
அன்று திருமணம். மதுரையில்!
தமிழ்நதிக்கு உள்ளுக்குள் பரபரப்பாக இருந்தது…
தங்கையின் திருமணம் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்று நூறாவது முறையாக மதுரை வீரனுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தாள்…
இன்னும் சற்று நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும். லோகாவும் சித்ராவும் காலில் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருந்தனர்.
இருவருக்குமே வருத்தம் தான்… தமிழ் பூச்சி மருந்தை அருந்தியது லோகாவை முற்றிலுமாக நிலைகுலைத்திருந்தது. பெண்ணைப் பெற்றவளாகத் திருமணம் செய்து பார்ப்பது தவறா என்றகேள்வியில் மனம் வெறுத்துப் போயிருந்தார்.
இந்தப் பெண் திருமணம் வேண்டாமென்றால் சொல்ல வேண்டியதுதானே… அதை விடுத்து இப்படியொரு முடிவை எடுக்கத் துணிவாளா என்ற கோபம் உள்ளுக்குள் கனன்றது.
அவர் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தமிழிடம் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்தார் லோகா. சுந்தரமும் அப்படியே!
சித்ராவுக்கு கோபம் இருந்தாலும் தமிழிடம் பேசாமல் தவிர்க்கவில்லை. ஆனால் அந்தப் பழைய ஒட்டுதல் அவரிடம் இல்லை. சந்திரனுக்குக் கோபம் இருந்தாலும் அதை இழுத்துப் பிடிக்க வைக்க முடியவில்லை.
“ம்மா… பொங்கலுக்கு அத்தை பானை வைக்கப் போறங்களாம்… ரெண்டு பேரையும் வரச் சொன்னாங்க…”
சித்ரா அவர்களது பானைக்கு பொட்டிட்டு கொண்டிருக்க, லோகா அரிசியை அளந்து கொண்டிருந்தார்.
“ம்ம்ம்… வர்றோம்…” சித்ராவின் முகத்தில் சிறிதும் புன்னகை இல்லை.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல இன்ஸ்டன்ட் பெண்ணாக வாஸந்தியை மணமேடைக்கு அனுப்பப் போகும் வருத்தம் அவருக்கு இருந்தாலும் ஸ்ரீதரை விட வேறு நல்ல மருமகன் கிடைப்பானா?
அதுவும் ஒரு வாரத்திற்கு முன் இந்தப் பெண் செய்து வைத்த குழப்பத்திற்கு வேறு யாருமாக இருந்தால் பிரச்சனை பெரிதாகி இருக்கும். ஸ்ரீதராக இருக்கப் போக அனைத்து விதமான குழப்பங்களும் தெளிவாகி இருந்தது.
சித்ராவுமே முகத்தைத் தூக்கி வைத்திருப்பது தமிழுக்கு வேதனையாக இருந்தது.
தான் தவறு செய்து விட்டோமா என்று லட்சமாவது முறையாக மனசாட்சியைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு அப்போது வேறு வழி தெரிந்திருக்க வில்லை.
எத்தனைப் பேர் அவளைத் திட்டினாலும் அவன் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் திருமணத்தை மறுத்து விட்டாள்… முழுவதுமாக!
ஆனால் அவன் வரவே இல்லையே!
வீட்டில் அவ்வளவு பிரச்சனை நடந்த போதும் சரி, இரு பக்கமும் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்த போதும் சரி அவன் வரவே இல்லை.
அவனுக்காகத் தான் அத்தனை பிரச்னைகளையும் தான் எதிர்கொண்டு இருக்கிறோம் என்பதைக் கூடவா அறியாமல் இருப்பான்?
ஒரு முறை பேசக்கூட இல்லை என்றபோது என்ன சொல்லிப் பெற்றோரைச் சமாதானப்படுத்துவது?
கடைசி வரைக்கும் இந்த உயிரை விடத்துணிந்தது யாருக்காக என்பதை அவள் கூறவே இல்லை.
அன்று ஸ்ரீதரின் கைப்பேசியிலிருந்து அவன் பேசியிருந்தான். ஸ்ரீதருக்கு எப்படியும் அவனைத் தெரிந்திருக்கும் என்று நம்பினாள்… ஆனால் அவனிடம் என்னவென்று பேசுவது? எப்படிப் பேசுவது? தயக்கமாக இருந்தது…
ஆனால் வீட்டில் அனைவருமே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தான் அலைந்தனர். வாஸந்திக்கும் மனதில் வருத்தம் இருக்கும் போல… அவளும் சரியாகப் பேசவில்லை. புகழேந்தி ஒருவன் மட்டுமே சற்று சகஜமாக இருந்தான்.
மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அவளைப் பொறு
த்தவரை திருமணம் நடக்க வேண்டும்.
வருத்தங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுத் திருமணத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவே முயன்றாள்.
முந்தைய தினம் திருமணத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது கூட,
“சித்தி… எனக்கு ஏதாவது வேலைச் சொல்லு…” சற்று ஆற்றாமையோடு தமிழ் கேட்க, சித்ரா அவளை முறைத்துப் பார்த்தாள்.
“ஆமா… என்னைச் சித்தின்னு தானே ஒதுக்கிட்ட… என்கிட்டே கூட ஒண்ணுமே சொல்லலை தானே…” கோபமாகக் கூற,
“சித்தி ப்ளீஸ்… போனதை விடு… அம்மாவும் இப்படியே இருக்காங்க, அப்பத்தாவும், நீயும் இப்படி இருந்தா நான் என்னதான் செய்வேன்?” அவளால் கண்களின் நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை…
“இந்த அக்கறை மருந்தைக் குடிக்கும்போது எங்க போச்சு?”
“எனக்கு அப்ப வேற வழி தெரியலை சித்தி… என்னால இன்னொருத்தனை நினைக்கவே முடியல…”
“அதை நிச்சயமாகிறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கணும்… இல்லைனா அப்புறமாவது சொல்லியிருந்தா பிரச்சனை வந்திருக்காதே…”
“ஆமா… சொல்லியிருக்கணும் தான்… ஆனால் உங்களை எல்லாம் ஏமாற்ற எனக்கு மனசு வரலைச் சித்தி…” அவளது கண்களில் கண்ணீர்.
“இத்தனை வருஷம் ஆளாக்கின பொண்ணை மொத்தமா தூக்கி கொடுக்கிறதை விட அதுவொன்னும் பெரிய காரியம் இல்லடி… மருந்தைக் குடிக்கிற அளவு தைரியம் இருக்க உனக்கு விஷயத்தை எங்க கிட்ட சொல்லத் தைரியம் இல்லையா?”
சித்ராவினால் அவளது வாதத்தை ஏற்கவே முடியவில்லை. கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண் செய்த காரியம் அனைவரையுமே நிலை குலைய செய்திருந்தது.
இப்படி எல்லாம் தன்னை தனியாகப் போராட விட்டுவிட்டானே என்று மனதுக்குள் கோபம் எழுந்தாலும் இது நீயாக இழுத்து விட்டுக்கொண்ட காதல் என்று மனம் கடிந்து கொண்டது.
‘நானாக அவனிடம் காதலை சொன்னதால் தன்னுடைய காதலை அவன் மதிக்கவே இல்லையோ? ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அவனது அக்கறையையும் ஈர்ப்பையும் தான் உணர்ந்தது பொய்யா? அந்த ஈர்ப்பில் தானே தான் கரைந்து போய் அவனிடம் விழுந்தது… ’
இதுதான் முக்கியமான விஷயம்… அவனுக்கு இருந்தது வெறும் ஈர்ப்பு மட்டுமே… ஆனால் அதை நீதான் காதலாக உருவகப்படுத்திக் கொண்டாய்… என்று மனசாட்சி உண்மையைப் பேசியது.
மனசாட்சியின் இடக்கைச் சோகமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். மனம் போராடிக்கொண்டிருந்தது… அந்தப் போராட்டத்தினை சகிக்க முடியாமல் தானே அவள் திருமணத்திலிருந்து விடுதலைப் பெற நினைத்ததும். அவனானால் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் எப்படி இப்படி இருக்க முடிகிறது? அவனுக்கு உண்மையிலேயே காதல் இருக்கிறதா இல்லையா?
மனதுக்குள் போராடிக்கொண்டிருந்ததை அவள் காட்டிக்கொள்ளாமல் கசப்பாகப் புன்னகைத்தாள்…
“தைரியம் இல்ல சித்தி… என் மேல உயிரையே வெச்சிருக்க உங்களையெல்லாம் நோகடிச்சுட்டு நான் நல்லா இருக்க முடியுமா? இல்ல சித்தி… அம்மா கிட்ட இன்னும் கூட என்னால பேசவே முடியல… அப்பா முகத்தைப் பார்க்கக் கூட முடியலை… எல்லாரும் என்னை ஒதுக்கி வைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு… இப்பதான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோணுது…” உடைந்த குரலில் அவள் கூறி முடிக்க முடியாமல் உடைந்து விட… கேட்டுக்கொண்டிருந்த சித்ராவுக்கு மனம் பக்கென்று இருந்தது…
“ராசாத்தி… ஏன்டி இப்படி சொல்ற ? உன்னை ஒதுக்கி வைக்க நாங்க நினைப்பமா? எனக்கு நீதான்டி மூத்த பிள்ளை… உன்னை விட்டுட்டு உன் தங்கச்சிக்கு முதலில் கல்யாணத்தை பண்றதையே என்னால் தாங்க முடியலடி… உனக்கொரு நல்ல காரியத்தைப் பண்ண முடியலையேன்னு தான்டி நாங்க எல்லாருமே உக்கறோம்…” அவரால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை… தன் பெண் மனையில் உட்காரும் நேரம் தான் கண்ணீர் வடிப்பது ஆகாது என்ற முறைமையை மீறிக் கண்ணீர் விட்டழுதார்…
கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த தமிழ்நதியின் கண்களில் விழுந்தது உணர்வற்ற மரமாக நின்றுகொண்டிருந்த லோகாம்பாள்!
கேவலை நடுத்தொன்டையில் அடக்கியபடி அவர் நின்றுகொண்டிருந்த தோரணை அவளது கைகால்களை உணர்விழக்க செய்தது.
“ம்மா…” பசுவிற்கு ஏங்கிய கன்றாக அவரை நோக்கி அழைக்க… முந்தானையை வாய்க்குக் கொடுத்தபடி அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்… ஒருவாரமாகப் பேசாமலேயே மௌன விரதமிருந்த அந்தப் பெற்றவள்!
“ம்மா… சாரிம்மா… இனிமே இந்த மாதிரி முட்டாள்தனத்தை பண்ணவே மாட்டேன் ம்மா… சாரிம்மா…”
முகத்தை மூடியபடி அழுகையில் கரைந்த பெண்ணைப் பார்த்தவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம்… திருமணக்கோலத்தில் இருக்க வேண்டிய பெண் இப்படி அழுது கொண்டிருக்கிறாளே என்ற வேதனையில் இருந்தது அவரது மனம்.
“உன்னை நான் புரிஞ்சுக்கவே இல்லை தமிழு…” அதே வேதனையோடு அவர் கூற,
“ஐயோ ம்மா… அப்படில்லாம் இல்ல… நான் தான் உங்களையெல்லாம் புரிஞ்சுக்கலை… நீ இப்படி கஷ்டபட்டா என்னால் தாங்க முடியலம்மா…”
“உன்னை அந்த நிலைமையில் பார்க்க நான் உயிரோட இருப்பேன்னு நினைச்சியா தமிழு… எனக்கு இருக்கிறது நீமட்டும் தான்டி… உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நானும் அப்பாவும் பின்னாடியே வந்தற மாட்டமா?” அவரது அந்தச் சொற்கள் அவளது மனதைத் தைத்தது…
“ம்மா… உங்களையெல்லாம் வருத்தப்பட வைக்க வேண்டாம்ன்னு தான் நான் அந்த முடிவை எடுத்தேன்… மனசில் ஒருத்தனை வெச்சுட்டு இன்னொருத்தனுக்கு எப்படிம்மா கழுத்தை நீட்டுவேன்… அது ரெண்டுபேருக்குமே செய்யற துரோகம் இல்லையா?”
“அப்ப… நாங்கள்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையா… இப்ப பழகின ஒருத்தனுக்காக உயிரைத் தரத் துணிஞ்ச உனக்கு… உன்னையே உலகமா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்க நாங்க கண்ணுக்குத் தெரியலையா?” கண்களில் கண்ணீருடன் அவர் கேட்டது நெஞ்சத்தை அறுக்க,
“ம்மா… இல்ல ம்மா… போதும்… என்னால் எந்தக் குழப்பத்தையுமே தானாக முடியலை… எதைன்னு பார்ப்பேன்… இந்தப் போராட்டத்தைத் தாங்க முடியாமத்தான் நான் அந்த முடிவை எடுத்ததேன்… நீயும் என்னை வாட்டாதே…” கையெடுத்து வணங்கி அவள் அழுகையில் கரைய…
“இல்ல தமிழு… உன்னை நான் வாட்டலை… நீயா எப்ப வந்து எனக்கு நீ கல்யாணம் பண்ணி வைன்னு சொல்றியோ அப்பக் கண்டிப்பா நீ கைகாட்றவனுக்கு செய்து வைக்கிறேன்… ஆனால் மனசுக்குள்ள ரணமா இருக்குடி… என் பொண்ணுன்னு இனிமே என்னால் சொல்லிக்க முடியுமான்னு தெரியலை…” என்று கூறிவிட்டு திரும்பிப் போக… அவரையே பார்த்துக்கொண்டிருந்த தமிழ்நதிக்கு உள்ளுக்குள் துக்கம் பொங்கியது!
“ம்மா… உங்களுக்கா எப்ப உங்களுக்கு மனசு வருதோ அப்ப என்னைக் கூப்பிடுங்க… அதுவரைக்கும் நான் சென்னைலையே இருக்கேன்… வாசு கல்யாணத்தை மட்டும் பார்த்துட்டு போய்டறேன்…” அதற்கும் மேல் பேச முடியாமல் குரல் உடைந்தது…
சித்ரா கோபமாக நிமிர்ந்தார்… லோகாவுக்கும் உள்ளுக்குள் கோபம் பொங்கினாலும் மகளே தள்ளி நிறுத்திப் பார்க்கிறாளே என்ற துக்கத்தில் கண்ணீர் வடித்தார்…
“ஏன்டி… நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா? நாங்க பார்த்து வளர்ந்த மொளைக்காத மொட்டை… உனக்கு அவ்வளவு வாய் வந்துடுச்சா? அதென்னடி கல்யாணத்தை மட்டும் பார்த்துட்டு போறேன்னு சொல்ற?” விட்டால் முடியைப் பிடித்து ஆட்டி விடும் கோபம் வந்தது…
லோகா திட்டும் போதெல்லாம் அவரை அடக்குபவர் இன்று கோபத்தில் கொதித்தார்.
“ஆமா… எந்த வேலையும் எனக்குத் தர மாட்டேங்கற… என்னை எதுலையுமே சேர்த்துக்க மாட்டேங்கற… அப்புறம் வேற என்ன சொல்வேன் சித்தி?” ரோஷமாகத் தமிழ் கூற,
“இங்க பாருடி… அக்கா இருக்கும்போது தங்கச்சிக்கு கல்யாணத்தை நடத்தறமேன்னு கொஞ்சம் கோபம் இருக்கு தான்… அதுக்குன்னு நீ எங்க பொண்ணு இல்லைன்னு ஆகிடாது… கன்னாபின்னான்னு பேசி அம்மா மனசை கஷ்டப்படுத்தாம ஒழுங்கா போய் வேலையப் பாரு…” ஒரேடியாகச் சித்ரா முடித்தாலும் அவ்வப்போது அனைவருமாகக் கோபத்தைக் காட்டிக்கொண்டு தான் இருந்தனர்.
அன்று திருமணத்தில் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது மனம் கனமாகி அழுந்தியது. மாப்பிள்ளையாக இருக்கும் ஸ்ரீதரிடம் சென்று அவனைப் பற்றிக் கேட்பது சரியல்ல என்று தோன்றியது.
அவனது தாய் வேறு அவளைக் காணும் போதெல்லாம் கழுத்தை ஒடித்து முறைத்து விட்டுப் போகிறார். அவனது தந்தையோ அவளைப் பார்க்காதது போலவே காட்டிக்கொண்டிருந்தார்.
அவள் எதுவும் பேசாமல் வாஸந்திக்கு அலங்கரித்துக்கொண்டிருந்தாள். அழகு நிலையப் பெண்களோடு!
முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
வாசந்தி முகத்தைத் திருப்பவில்லை ஆனால் பேசவுமில்லை.
அவளைப் பார்க்கும்போது மட்டுமே அவளுடைய குற்ற உணர்வு தலைதூக்கியது.
“நான் தப்பு செய்துட்டதா நினைக்கிறியா வாசு?” குரல் தொண்டையை அடைத்தது.
பதில் பேசாமல் அவளைப் பார்த்தாள். வாஸந்தி அழகு நிலையப் பெண்ணுக்குத் தலையைக் கொடுத்தவாறு உணர்வற்ற முகத்தோடு அமர்ந்திருந்தாள்.
“ஏதாவது பேசு வாசு? ப்ளீஸ்… உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையா?”
தலைகுனிந்து தமக்கையிடம் பேச விருப்பம் இல்லாமல் அமர்ந்திருந்தவள் சட்டென நிமிர்ந்தாள்.
“அப்படி சொல்ல நானொன்னும் உன்னை மாதிரி முட்டாள் கிடையாது…” எரிச்சலாக அவள் கூற,
“அப்புறம் ஏன்டி பேசவே மாட்டேங்கற…”
“பின்ன… நீயென்ன ஒழுங்கான காரியத்தையா செய்து வச்ச? உன்னைக் கொஞ்ச? ஏன் க்கா… உனக்கே அது முட்டாள்தனமான வேலையா தெரியலையா?” வாஸந்தி அவளது பங்குக்கு ஆரம்பிக்க, அவசரமாக அவளது வாயை மூடினாள்.
“சரி தாயே… நீயும் ஆரம்பிக்காதே… இன்றைக்கு உன் கல்யாணம்டி ஆத்தா…”
“தெரியுது…” என்றவள் அவளது முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“சரி… கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் இரேன் வாசு… ஸ்ரீதர்க்காக… ப்ளீஸ்…” மூக்கைச் சுருக்கியபடி அவள் கெஞ்ச,
“ம்ம்… அவருக்காக நீ ஒன்னும் ரிக்கமண்டேஷன் பண்ண வேண்டாம்…” உதட்டைச் சுளித்துக் கொண்ட தங்கையைப் பார்த்துப் பக்கென்று சிரித்தாள்.
“அடக்கடவுளே… இந்தப் பக்கி படிப்பை விட்டுட்டு கல்யாணம் பண்றதுல சோகமா இருக்கும்ன்னு தப்பா நினைச்சுட்டேனே…” என்று மீண்டும் சிரிக்க,
“ம்ம்ம்… அவர் மாதிரி ஒருத்தரை வேண்டாம்ன்னு சொல்லவே முடியாது தமிழக்கா…”
ரசனையாக மாறிய தங்கையின் முகத்தை ஆசையாகப் பார்த்தாள் தமக்கை. நல்லவேளை… ஸ்ரீதர் வாசந்தியின் வாழ்க்கை எப்படியும் சீராகிவிடும்.
“ஆஹான்…” வடிவேலுவின் குரலில் தமிழ் அவளைக் கலாய்க்க,
“போக்கா…” வாஸந்தி வெட்கத்தோடு சிரித்தாள். “ஆனா நினைச்சு பாரேன்… பத்து பிகரை பார்க்கணும்… அதுல எட்டை வடிகட்டனும்… அதுக்கப்புறம் அஞ்சு கூடக் கடலைப் போடணும்… அப்புறம் ரெண்டை தேத்தனும்… அப்புறம் பைனலா ஒன்னை டிக் பண்ணனும்ன்னு சொல்லிட்டு இருந்தேன்…. இப்ப என்னோட கல்யாணம் நடக்கறதை பார்த்தா எனக்கு சிரிக்கத் தோன்றுது அக்ஸ…” என்று கிண்டலாகக் கூற, தமிழ் அவளை ஆதூரமாக பார்த்து சிரித்தாள்.
“நடைமுறை வேற, நம்மோட கனவுகள் வேற தங்க்ஸ்… அதுதான் ரீசன்…”
“ஆனாலும் என்னோட வேண்டுதலை இந்த கருப்பன் இப்படி போட்டுத் தள்ளக் கூடாது…” என்று கூறியவுடன் தமிழ் சிரிக்கத் துவங்கினாள்…
அக்காவை பார்த்த மாப்பிள்ளை தன்னை ஓகே செய்யக்கூடாது என்று விளையாட்டாக கருப்பனிடம் அப்ளிகேஷன் போட்டவளாயிற்றே!
“இங்க பாருடி… உனக்கு அவர் தான் அவருக்கு நீ தான்… சூப்பர் ஜோடிப்பொருத்தம் தெரியுமா?” என்று அவளை சமாதானப்படுத்த, அவளது முகம் இன்னமும் அதே உணர்வில் தான் இருந்தது….
அவளது பூ அலங்காரத்தை முடித்து விட்டு ஒட்டியாணத்தைச் சரி செய்து தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள் தமிழ். திருப்தியாக இருந்தது.
தேவதையைப் போல இருந்த தங்கையைக் கண்களால் நிரப்பிக்கொண்டாள்.
“எப்படிக்கா என்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னார் அவர்? என்னால் இன்னமும் நம்ப முடியலைத் தெரியுமா?” சற்றே ஆச்சரியமாக அவள் கேட்க, தமிழ் அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.
“ஏன் என் தங்கச்சிக்கு என்ன குறைச்சல்… செப்பு செலையாட்டம் இருக்க உன்னைக் கட்டிக்க கசக்கிறதா?”
“உன்னளவுக்குக் கலரா இல்லல்ல…” சற்றே ஏக்கமாக அவள் கேட்க… தமிழுக்கு மனம் உருகிப்போனது.
“ம்ம்ம்… பக்கி… நல்ல நாளதுவுமா திட்டு வாங்காதே…” என்று அவள் முறைக்க,
“இல்ல தமிழக்கா… சும்மாவே நீ அழகு… அதுவும் இந்த சாரில நகையெல்லாம் போட்டுட்டு செதுக்கி வெச்ச சிலையாட்டம் இருக்க… ஆனா நான் பார்… எனக்குத் திருப்தியாவே இல்லக்கா… என்னைப் போய் எப்படிக்கா?” மனதில் எதையும் இருத்திக்கொள்ளாமல் அவள் கூற
“இப்ப நீதான் லூசு மாதிரி பேசற… அப்படியே தேவதை மாதிரி இருக்க வாசு… உனக்கென்ன குறை?”
“இல்லக்கா… நான் நிஜமாகத்தான் சொல்றேன்… மனசில் ஒரு குழப்பம்… அவருடைய மனசுக்கு சரி ன்னு பட்டுதான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னாரா இல்ல வேற வழி இல்லாமல் சொன்னாரான்னு தெரியலை… கஷ்டமா இருக்கு… எப்படி இருந்தாலும் நீ வேண்டாமென்று சொன்னதாலத்தானே… செகண்ட் ஆப்ஷன் தான் நான் இல்லையா?” மனதை மறையாமல் வாஸந்தி கூறியதை கேட்டவளுக்கு பகீரென்றது.
தன் ஒருத்தியின் பொறுப்பில்லாத்தனத்தால் எத்தனை இடர்கள்!
கண்களில் கலக்கத்தோடு தங்கையைப் பார்த்தாள். கண்ணீர் சூழ பார்த்தது.
“சாரி வாசு… இந்த மாதிரி ஒரு சங்கடத்தை நான் உனக்குக் கொடுத்திருக்கக் கூடாது… ஆனால் எனக்கு வேற வழி தெரியலை… ஆனால் இந்த நிலைலையும் கொஞ்சம் கூடக் கலங்காமல் அடுத்தது என்ன செய்யனும்ன்னு யோசிச்சு… ரெண்டு வீட்டுக்கும் பாதகமாகம உன்னைக் கல்யாணம் செய்ததுக்க கேட்டார் பார் வாசு… நிஜமா ஸ்ரீதர் ரொம்ப நல்லவர் தான்… என்னோட நிலைமைய யார்கிட்டவும் சொல்ல முடியல… அதான் பிரச்சனை… அதை மனசில் வெச்சுட்டு ஸ்ரீதரை வாட்டிடாதே வாசு… அந்த நல்ல மனுஷனுக்கு வைரமா நீ கிடைச்சு இருக்க… நீங்க ரெண்டு பேருமே மேட் பார் ஈச் அதர் தான்டி…”
தமிழுக்கு தொண்டையடைத்தது.அவளது கலங்கிய முகத்தைப் பார்த்த வாஸந்தி, மென்மையாகச் சிரித்து,
“என்னக்கா… பேயறஞ்ச மாதிரி பார்க்கற… வாசுவிடம் சிக்கினோர் கைவிடப் படார்…” என்று குறும்பாகக் கண்ணடிக்க, இழுத்துப் பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டாள் தமிழ்…
“ஸ்ரீதர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், நீதான் அவரை வழிக்குக் கொண்டு வரணும் வாசு… தயவுசெய்து புரிஞ்சுக்க…”
“சரி சரி… நம்ம கலெக்டர் சாரை வழிக்குக் கொண்டு வர வேண்டியது இந்த வாசுவோட பொறுப்பு… ஓகே வா?” என்று சிரித்தாள்.
“ஒரு நிமிஷத்தில் அரண்டு போயிட்டேன்டி…” என்று அவளது முதுகில் அடித்தாள். இருவருமாகச் சிரிக்க,
“எப்பவும் இப்படியே சிரிக்கணும்… சரியா?” என்று தமிழ் அவளுக்குத் திருஷ்டி வழிக்க, புகழேந்தி அறைக்குள் வந்தான்.
“சீக்கரம் க்கா… தமிழக்கா அக்காவை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க…” அவசரப்படுத்தியவனின் முகம் பூரித்திருந்தது, இருவரில் யாராக இருந்தாலும் ஸ்ரீதர் அவனுக்கு ஐத்தானாகப் போகும் மகிழ்ச்சி!
வேஷ்டி சட்டை அணிந்து பெரிய மனிதனாக வேறு ஆகியிருந்தான். அதிலும் அவனது ஒல்லியான உடல் வாகிற்கு வேஷ்டி மிகவும் அவனை ஒல்லியாகக் காட்ட… தமிழுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“டேய்… குச்சி மாதிரி இருந்துட்டு உனக்கெதுக்கு இந்த அலட்டல்? ஒழுங்கா பேன்ட் ஷர்ட் போடுடா…” என்று கிண்டலடிக்க,
“இங்க பார் தமிழக்கா… நான் தான் இப்ப பெரிய மனுஷன்… என்னுடைய தயவுல தான் உங்க ரெண்டு பேர் கல்யாணமும்… அதனால் என்னைக் கலாய்ச்சீங்க, உங்களுக்கு எந்தச் சீரும் செய்யமாட்டேன்… ஞாபகம் வெச்சுக்கங்க…” என்று மிரட்ட, அவள் பயந்து கொள்வது போல நடித்தாள்.
“அய்யா சாமி… உங்களைப் போய்ப் பகைச்சுக்க முடியுமா…” என்று வாஸந்தி வணங்க,
“ம்ம்ம்… இதையே மெயின்டையின் பண்ணு… இதுதான் பியுச்சருக்கு நல்லது…” கலாட்டாவாக மணமகள் அறையை விட்டு வெளியே வந்த மூவரும் சற்று அடங்கினர். அடக்கமான பிள்ளைகளாம்!
மணமகள் மாறியதைக் குறித்து உறவினர் கூட்டம் கேட்டபோது அனைவருமே சொல்லிவைத்தார் போல, பெரியவளின் வேலையைக் காரணம் காட்டி அவள் வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறிவிட, ஒருவாறாக விஷயம் அடங்கியிருந்தது.
ஆனாலும் வம்பு பேச நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாதல்லவா! தமிழை பார்க்கும் போதெல்லாம் தங்களுக்குள் கிசுகிசுப்பவர்களை அவளும் அறியாமலில்லை… நெருப்பின் மேல் நிற்பது போன்ற ஒரு பிரமை!
அத்தனையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்கையின் திருமணத்தைக் கவனிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.
வாஸந்தியை அழைத்துக்கொண்டு மணவறையை நோக்கி வந்தாள். ஸ்ரீதர் அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். அவளது முடிவை அங்கீகரிப்பது போல!
அவளுக்குச் சற்று ஆச்சரியமாகக் கூட இருந்தது. அவனை மறுத்துவிட்ட பின்னும் அதை இந்தளவு ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் எவ்வளவு இருக்க வேண்டும்… அவளைச் சுற்றி இருக்கும் அனைவருமே ஒவ்வொரு வகையில் உயர்ந்தவர்களாகத் தோன்றினர்… அவரவர் செயல்களில் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தனர்…
வாஸந்தியை ஸ்ரீதர் அருகில் அமரச் செய்துவிட்டு நிமிர்ந்தவள், உறைந்து நின்றாள்…
உலகம் நின்று விட்டதோ என்று தோன்றியது! தான் பார்த்துக்கொண்டிருப்பது உண்மையா என்று தனக்குத் தானே கேள்விக் கேட்டுக்கொண்டாள்… அருகில் நின்றிருந்த புகழ் எதற்காகவோ அவளது கையை உலுக்கினான்… ஆனால் எதற்கு என்ற ஸ்மரணை இல்லாமல் போயிற்று…
கண்கள் நிலைகுத்தி நின்றது… அவனை நோக்கியே!
எதிரில் முதல் வரிசையில் அவளையே பார்த்தபடி ஸ்ரீதரன்!
கால்மேல் காலிட்டு, கைகளைக் கட்டிக்கொண்டு, அவளை நோக்கிய பார்வையோடு நடுநாயகமாக அவன் அமர்ந்திருந்ததை பார்த்தவளுக்கு உலகம் மறந்து போனது!
அவன் தானா? அவனே தானா? மனம் வெவ்வேறு விதமாகக் கேள்வி கேட்டாலும் கண்கள் உண்மையைத் தான் உரைத்துக் கொண்டிருந்தது.
உடல் நடுங்கியது… கண்களில் நீர் தேங்க, அவனைத் தவிர அனைத்தும் பார்வையிலிருந்து மங்கியது!
எவ்வளவு நேரம் இப்படி பார்வை பரிமாற்றம் நடைபெற்றதோ…
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…”
மேள சப்தத்தோடு பெண்கள் குலவையிடும் சப்தமும் கேட்க, சுற்றுபுறத்தை மறந்து அவனில் நிலைத்திருந்த கண்களை அதிர்ந்து விலக்கினாள்.
அவசரமாகத் தாயையும் தந்தையையும் பார்த்தாள்… அருகில் நின்று கொண்டு தாலி கட்டும் சடங்கைக் கவனித்துக் கொண்டிருந்தனர், உடன் சித்தப்பா சித்தியோடு! ஏமாற்றம் கண்களில் இருந்தாலும் வாஸந்தியும் அவர்கள் பெண் தானே… ஒருவாறு ஜீரணித்துக் கொண்டனர்.
மீண்டும் ஸ்ரீதரனைப் பார்த்தாள். அருகிலிருந்தவரிடம் சிரித்தபடி எதையோக் கூறிக்கொண்டிருந்தான். அவனது தோற்றத்திலும் மிகுந்த வேறுபாடு இருந்தது… இன்னும் கம்பீரமாய்! தேஜசாய்! வசீகரமாய்! ஒரு இளவரசனின் ஆளுமையோடு அமர்ந்திருந்தவனை கண்களில் நிரப்பிக்கொண்டாள்.
ஸ்ரீதர் அழைத்திருப்பானோ? அவசரமாகத் தங்கையின் கணவனின் பக்கம் திரும்ப, எதிரில் அமர்ந்திருந்தவனை பார்த்து ஸ்நேகப்பூர்வமாகச் சிரித்தான்.
புன்னகைத்துக் கொண்டே ஸ்ரீதரன் கட்டைவிரலை உயர்த்திக் காட்ட இங்குத் தங்கையின் கணவனும் அதை அங்கீகரித்துச் சிரித்துக் கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.
என்ன பரிபாஷை இது?
அவளுக்குக் குழப்பமாக இருந்தது. இருவருக்குமிடையில் இவ்வளவு பழக்கமா?
தமிழின் மண்டை காய்ந்தது… என்னவென்று புரியாமல்!
பேசிக்கொண்டிருந்த இருவரும் எழுந்தனர். பின்னோடு டவாலி வந்து நிற்க, தமிழின் குழப்பம் அதிகரித்தது… உடன் பாதுகாப்பு அதிகாரிகள் வேறு, கூட்டத்தை விலக்கி விட!
புருவத்தை உயர்த்திக்கொண்டாள்… பெரிய இடத்து நட்பை எல்லாம் பிடித்து வைத்திருக்கிறான் போல… என்று நினைத்துக் கொண்டவளுக்கு தன்னையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.
அவளது முக மாறுதல்களைக் கவனித்துக் கொண்டே இருந்த ஸ்ரீதரனின் மனதுக்குள் காதலெனும் நதி பொங்கி பிரவாகமாகிக் கொண்டிருந்தது. அவனது அந்தராத்மா மட்டுமே அறியும், அவனது காதல் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருப்பதை. அவனைப் பார்த்தது முதல் பெரும்பாலும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடலாமா என்றும் கூடத் தோன்றியது.
சுற்றுப்புறத்தை கவனத்தில் கொண்டு தன்னை வெகுவாக அடக்கி வைத்தான்…
அதிலும் அவளை அந்தப் பட்டில், முழு அலங்காரத்தில், தோளில் வழிந்த பூவோடு பார்க்கையில் அவளைக் கவர்ந்து கொண்டு போய்விட்டால் என்னவென்று தான் தோன்றியது… அந்தச் சின்னஞ்சிறிய மூக்குத்தி வேறு அவள் திரும்பும் போதெல்லாம் மின்னி அவளது அழகை பன்மடங்காக்கி காட்ட, அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பகீரத முயற்சி செய்ய வேண்டியிருந்தது.
இடையை தழுவியிருந்த ஒட்டியாணத்தை பொறாமையாகப் பார்த்தான்… அந்த மெரூன் வண்ண பட்டுப்புடவையை இறுக்கிப் பிடித்து இடையின் வளமையையும் வெண்மையையும் அது காட்டிக்கொண்டிருக்க, அதன் மென்மையை உணர்ந்தவனால் முற்றும் துறந்த முனிவனைப் போல இருக்க முடியவில்லை…
மனம் பேயாட்டம் போட்டது. அவளது அண்மையை வேண்டியது உடலின் ஒவ்வொரு செல்லும். அவளை இறுக்கமாக கட்டியணைத்து ஏதேதோ செய்ய வேண்டும் போல தோன்றியது… முன்னெப்போதும் இல்லாத அளவு மனம் தடுமாறியது…
தனக்காக, தன்னை வேண்டி, அவள் செய்த செய்கை அவனை முற்றிலுமாக வீழ்த்தி இருந்தது… இல்லை வீழ்ந்திருந்தவனை முழுவதுமாகச் சாய்த்திருந்தது! அன்று பார்க்க வர முடியாது என்று சொல்லிவிட்டானே தவிர, அவனால் அங்கு முழுமையாகக் கவனத்தை செலுத்த முடியவில்லை.
அது ஒரு விதமான அவஸ்தை… வேலைகள் எவ்வளவு இருந்தாலும் இந்தக் காதல் அவஸ்தை பொல்லாதது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துக் கொண்ட நாட்கள் அவை… ஆனாலும் தன்னுடைய கவனத்தை சிதற விடவில்லை என்பது வேறு விஷயம்.
ஸ்ரீதர் திருமணமென்று அழைத்தபோது ஜோஸ்ஸோடு கிளம்பி விட்டான்… தன்னுடன் தம்புரான் வருவது ஜோஸ்ஸுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது… அதனால் என்ன ஸ்ரீதரனுக்கு நன்மை விளைந்தது என்றால் இப்போதைய ஆலப்புழை மாவட்ட நிர்வாகம் மாவேலிக்கர வடக்கு கொட்டாரத்திற்கு ஆதரவாகத்தான் செயல் படும் என்ற தகவலைப் பரப்ப முடிந்தது…
அது வாமனனின் எரிச்சலை அதிகப்படுத்தும் என்பது தின்னமாயிற்றே!
ஏற்கனவே அவனது தொழிலில் ஏகப்பட்ட தடங்கல்களை உருவாக்கி இருக்கும் நேரத்தில் இதையும் வாமனன் சமாளித்தேயாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
இன்னும் கொச்சி நிர்வாகத்தையும் திருவல்லா நிர்வாகத்தையும் சற்று அசைத்து விட்டால் போதும்… அதோடு கொச்சி ஹார்பரையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் எப்படி வளைப்பது என்ற யோசனையும் இருந்தது…
இறங்கும் பிரச்சனை மிகவும் ஆழமானதுதான்… ஆனால் வாமனனின் வேரைச் சாய்க்காமல் அவனைச் சாய்க்க முடியாது என்பது திண்ணம்! அவனை வேரடி மண்ணோடு பிடுங்காவிட்டால் காலம் காலமாகக் காப்பற்றப்பட்டு வரும் அத்தனை ரகசியங்களும் கிருஷ்ணன் கோவிலும் அவன்வசம் சென்று விடும் என்பதும் திண்ணமாயிற்றே!
இத்தனை பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளி அவனை தென்றலாகத் தீண்டினாள் தமிழ்நதி!
அந்த நிமிடங்களை விரும்பி ரசித்தான் அவன்!
தமிழ்நதியின் ஸ்ரீதரன்!
அவள் அவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்க… யாரும் அறியாமல் கண்ணடித்து வைக்க, அதை எதிர்பாராத அவளது முகம் குப்பென்று சிவந்ததை பார்த்து ரசித்துப் புன்னகைத்துக்கொண்டான்…
ஜோஸ் ஸ்ரீதரை வாழ்த்துவதற்காக எழுந்துக் கொண்டார்… அவருடனே அவனும் எழ, அவனது அந்தக் கண்ணிய தோற்றமும் கம்பீரமும் தேஜசும் அங்கிருந்த ஒவ்வொருவரின் புருவத்தையும் உயர்த்தியது…
ஸ்ரீதரன் வெர்மாவோடு நின்ற ஜோஸ் ஸ்ரீதரை தட்டிக்கொடுத்து அவரது பரிசைக் கொடுக்க, ஸ்ரீதர் தன்னுடைய மனைவிக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தான்.
“இவர் எங்க ஆலப்புழா கலெக்டர்… மேத்யு ஜோஸ்…”
வாஸந்தி புன்னகையோடு வணக்கம் தெரிவித்தாள்…
“விஷ் யூ வெரி ஹேப்பி மேரீட் லைப்…” என்று சிரித்தவாறே அவரது பரிசைத் தர,
“தேங்க்ஸ் சர்…” என்றவன் ஸ்ரீதரனைப் பார்த்து
“அப்புறம் இவர்…” என்று ஆரம்பிக்க… ஸ்ரீதரன் இடையிட்டு…
“ஆயுள் தண்டனை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்…” என்று தமிழில் சிரித்துக்கொண்டே கூற… ஸ்ரீதரும் கேலியாக,
“நன்றி… ஆனால் அந்தத் தண்டனை உங்களுக்கும் காத்திருக்கிறது…” என்று சிரிக்க… தமிழ்நதி முறைத்தாலும் அதில் பெருமையே தொனித்தது… ஸ்ரீதரன் வேறு கீழ்பார்வையாக அவளைப் பார்த்துக் கொண்டான்…
“வெய்ட்டிங்… வெய்ட்டிங்… வேற வழி…” என்று சிரித்தவன் இருவருக்கும் ஆளுக்கொரு வைர மோதிரத்தைக் கொடுத்து,
“வாசு கைல போட்டு விடுங்க மாப்ள சர்…” என்று குறும்பாகக் கூற… வாஸந்திக்கு ஆச்சரியமாக இருந்தது… மிகவும் அறிந்தவனின் தொனியில் அவன் கூறியதால்! அன்றைக்கு இரவு நேரத்தில் பார்த்ததோடு முகம் முழுக்க தாடியாக இருந்தவனை அவளுக்கு அடையாளம் தெரியவே இல்லை.
“ஸ்ரீ… இது மிகவும் அதிகம்…” என்று செல்லமாகக் கடிந்துக் கொண்டாலும் வாஸந்திக்கு அவன் அணிவித்து விட, அவளும் அவளது கணவனுக்கு அணிவித்து விட்டாள்…
“அன்ட்… இது உங்களுக்கான ஸ்பெஷல் கிப்ட்…” என்று குமரகம் தேனிலவு பேக்கேஜை ஸ்ரீதரிடம் நீட்ட,
“சரி சரி… நம்மளை வெச்சு ட்ரையல் பார்க்கறீங்க…” என்று அவன் சிரிக்க…
“எக்சாக்ட்லி…” என்று அவனும் சிரித்தான்…
“வாசு… இவர் யார்ன்னா…” என்றவன் இடைவெளி மிகவும் மரியாதையோடும் முகம் முழுக்க புன்னகையோடும்,
“மாவேலிக்கரயோட அரச பரம்பரையின் தற்போதைய இளவரசர்…” என்று இடைவெளி விட்டு… “தம்புரான் ஸ்ரீதரன் வெர்மா…”
அங்கிருந்தவர்களின் விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்தது.
ஆனால் தமிழோ அதிர்ந்து நின்றாள்! அவளது காதில் விழுந்தது உண்மையா என்று அவளுக்குப் புரியவில்லை… ஸ்ரீதரன்… என்ன சொல்கிறான் இவன்? அவளது காதுகள் மரத்துப் போய்விட்டது போலத் தோன்றியது…
அரச பரம்பரை… இளவரசன்… அவளுக்கு ஏதோ காமிக்ஸ் புத்தகத்தைப் படிப்பது போலத் தோன்றியது… அந்த நேரத்திலும்!