Tamil Novel Chakraviyugam 21

21

சத்ரியனுக்கு போரில் வீரம் மட்டும் முக்கியமல்ல ஸ்ரீதரா… விவேகம் அதை விட முக்கியம். சக்கரவியூகத்தை உடைக்க மட்டுமே தெரியும் என்ற நிலையில் அபிமன்யு உடைத்துக் கொண்டு சென்றது விவேகமாகாது. அவனை காக்க அர்ஜுனன் அருகில் இல்லை. தன் மற்ற தகப்பனார்களின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே சென்றான் ஆனால் விதி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை.

உடைக்கத் தெரிந்தவனுக்கு வெளியேறவும் தெரிய வேண்டும்… தன் முழு பலத்தையும் சரியாக கணக்கிட தெரிந்தவன் தான் எதிரியை வீழ்த்த முடியும் ஸ்ரீதரா!

உண்மையை காக்க நினைப்பவர்களும் அந்த சக்கரவியூகத்துனுள் மாட்டிக்கொள்பவர்கள் தான். அங்கே தர்மங்களுக்கு வேலை இல்லை…அதர்மம் நான்கு பக்கமிருந்தும் போர்த் தொடுக்கும். அங்கே அபிமன்யுக்களுக்கு வீரமிருந்தாலும் உயிர் மீதமிருக்காது. அர்ஜுனனாக இருந்தால் மட்டுமே மையத்தை நெருங்கி வீழ்த்தி வாகை சூட்ட முடியும்.

இப்போது சொல் நீ அர்ஜுனனா அபிமன்யுவா?

வெகுநாட்களுக்குப் பிறகு கிருஷ்ணன் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது… வெகுவருடங்களுக்குப் பிறகு… கோவிலில் நடந்த கொலைகளுக்குப் பிறகு நித்ய பூஜைகள் மட்டுமே நிகழ்ந்து வந்தது… பராம்பரியத்தை காப்பாற்ற வேண்டி!

அதிலும் ஸ்ரீதரன் இல்லாத சமயத்தில் கோவிலைத் தலைகீழாகப் புரட்டியும் பார்த்திருப்பான் போல… அவன் தேடிய ஒன்று கிடைக்கவே இல்லை… அதன் எரிச்சலை கோவில் நடைமுறைகளில் காட்டியிருந்தான் வாமனன்…

அரசியல் பின் புலத்தோடு கோவில் அதிகாரங்களைக் கைப்பற்ற முயன்றாலும் கேரளத்தின் அடிப்படை சட்டதிட்டங்கள் அதைச் செய்ய விடவில்லை… சமஸ்தானங்களின் அடிப்படை கட்டமைப்பு விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லையென்ற தார்மீக முடிவைக் காரணம் காட்டியிருந்தனர்…

மூன்று வருடங்களாக முயன்று தோற்றிருந்தான்…

வடக்கு கொட்டாரத்தின் சட்ட ரீதியான வாரிசு தான் தான் என்று நீதிமன்றத்தில் நிலை நாட்டி உரிமையை அடைய நினைத்தாலும், நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது…

மருமக்கதாயத்தை இன்னமும் முறையாகக் கடைபிடித்து, அதன் வழியாகவே ஸ்ரீ சுதர்சனரும் ஸ்ரீதரனை வாரிசாக நியமித்து விட்ட படியால் தாங்கள் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டிருந்தது.

வாரிசை நியமிக்காமல் அவர் இறந்திருந்தால் இந்த வாதத்தை ஏற்று கொள்ளலாம் என்றும் வாமனன் தன்னுடைய மாமனின் சொத்துக்களுக்கும் அதன் வழி மரியாதைகளுக்கும் அவனே வாரிசாக இருக்கும்போது வடக்கு கொட்டாரத்தின் வாரிசுரிமையை கேட்பது முறையல்ல என்று குட்டும் வைத்திருந்தது…

சட்ட ரீதியாகவும் அதர்ம ரீதியாகவும் முயன்று தோற்றிருந்ததால் கிருஷ்ணன் கோவிலுக்குப் பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான் வாமனன்… கிருஷ்ணன் கோவிலுக்குக் கொடுக்கும் தொந்தரவுகள் அனைத்தும் வல்லியகொட்டாரத்துக்கானது அல்லவா!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீதரனின் கண் முன் வந்து போய்க்கொண்டிருந்தது…

கோவிலைக் கையகப்படுத்த தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை அனுப்பியதும் அவனே… அதை எதிர்பார்த்திருந்த ஸ்ரீதரனும் தேவசம்போர்டில் விவாதித்து முடிவெடுக்க மூன்று மாத அவகாசம் கேட்டிருந்தான்…

எப்படி இருந்தாலும் அரசாங்கத்தில் ஆரம்பித்துவிட்ட இந்தப் பிரச்சனை என்பது செயின் ரியாஷன் போலத்தான்… என்றைக்கிருந்தாலும் மீண்டும் வெடிக்கத்தான் செய்யும்… அதற்குள் தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் மீண்டும் உருப்போட்டுக்கொண்டான்…

கிருஷ்ணன் கோவிலில் கன்யா மாத விழா என்றதும் ஆலப்புழையும் சுற்றியுள்ள மற்ற ஊர் மொத்தமும் அங்குக் குவிந்திருந்தது… முல்லக்கால் பகவதி அம்மன் திருவிழாவும், நாகராஜன் கோவில் வெட்டிக்கோடு ஆயில்ய திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தக் கன்யா மாதத்தில் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா என்பது எல்லோருடைய புருவத்தையும் உயர செய்தது தான்…

ஆனால் இந்த விழா ஸ்ரீதரன் வாமனனுக்கு விடுத்த வெளிப்படையான சவால் என்பது புரிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று!

நானிருக்கும்போது முடிந்தால் இதைத் தடுத்துப்பார் என்று அவன் விடுத்த சவால்!

கோலஸ்வரூபத்தின் ரத்தம் அல்லவா! அதிலும் உரிமைப்பட்ட ரத்தமாயிற்றே!

மிருதங்கமும் சைம்பலும் ஒலிக்கத் துவங்கியிருந்தது…

ஒட்டன் துள்ளல்… கலாமண்டலம் கீதானந்தன் பச்சை அலங்காரத்தில் மேடையில் கருடன் கர்வ பங்கக் களி நிகழ்த்த ஆரம்பித்து இருந்தார்… கருடனின் கர்வத்தை பகவான் மகாவிஷ்ணு எப்படி பங்கம் செய்தார் என்பதை விளக்கும் நாட்டிய நாடகம்!

ஸ்ரீதரனுக்கு மிகவும் பிரியமானது இந்த ஒட்டன் துள்ளல்… நேருவும் கூட எளியவர்களின் கதகளி என்று விவரித்தாராம் ஒட்டன் துள்ளலை… புராணக் கதைகளை இன்றைய நிகழ்வுகளோடு அந்தக் கலைஞர்கள் அழகாக நையாண்டி செய்து, விமர்சித்து, பாடிக்கொண்டே ஆடும் அந்த ஒட்டன் துள்ளல் ஒரு காலத்தில் அருகிலிருந்த அம்பலப்புழா கோவில்களில் தடை செய்யப்பட்டு இருந்ததாம்…

கோவில்களில் நடக்கும் ஊழல்கள், சக நடன கலைஞர்களின் ஆடம்பரப் பிரியங்கள், அம்பலவாசி நம்பியார்கள் எனப்படும் பிராமணர்களின் தவறுகள் என ஒன்றையும் விடாமல் அனைத்தையும் எள்ளி நகையாடுவது ஒட்டன் துள்ளலின் அலங்காரம்.

இந்த எளிய அலங்காரம் அப்போதைய சாக்கியர் கூத்து ஆட்களுக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை என்று எண்ணினான்… ஏனென்றால் சாக்கியர் கூத்தை உயர் குடியினர் மட்டுமே ஒரு காலத்தில் பார்க்க முடியும்… அப்போது கோவிலுக்குள் தாழ்ந்த சாதியினருக்கு அனுமதியும் கூட இல்லை… சாதிய அமைப்புகள் மிக வலுவாகக் காலூன்றி இருந்த நேரமது!

அந்த நேரத்தில் எளியவர்களின் குரலாக ஒலித்த ஒட்டன் துள்ளலும், பறையன் துள்ளலும் உயர்சாதியினரை எரிச்சல் படுத்ததானே செய்யும்… அவர்களாலேயே செம்பகச்சேரி மன்னர் இந்த நாட்டியத்தை அம்பலபுழாவில் தடை செய்தாராம்…

அந்நாளிலேயே அதாவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற நாட்டியத்தை தோற்றுவித்து புரட்சியைச் செய்த குஞ்சன் நம்பியார் உண்மையில் புரட்சியாளர் தான்!

கலாமண்டலம் கீதானந்தனை மிகவும் ரசிப்பான் ஸ்ரீதரன்… அவரது உடல் மொழி, உணர்வு வெளிப்பாடு, அதிலும் அந்தக் கம்பீரக் குரல்… அதில் தெறிக்கும் எள்ளல்! ஒட்டன் துள்ளல் பிடிக்க ஆரம்பித்ததும் கூட அவரால் தான் என்று தோன்றியது!

நினைவு தெரியாத நாட்களில் சாக்கியர் கூத்துக்களை ரசித்த மனம் இப்போதெல்லாம் பொதுவுடைமையில் ஆழ்ந்து போகிறது.

உண்பது நாழி, உடுப்பது இரண்டு மட்டுமே அல்லவா!

எத்தனை இருந்தாலும் கொண்டு செல்வது வெறும் கையைத் தானே?

சொத்துக்களோ, சொந்த பந்தங்களோ, எதுவுமே உடன் வரப் போவதில்லை. ஆனாலும் இருக்கும் வரை தனக்கான கடமைகளை மறக்கக் கூடாது, மறுக்கக் கூடாது… இது மட்டுமே அவனது கொள்கை!

இதையேத்தான் தன்னுடைய வாரிசுகளும் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்… வாரிசுவரைக்கும் போயாகி விட்டதா என்று கேலியாகக் கேட்டது மனம்!

வாரிசைப் பற்றி நினைவு வந்தவுடன் அழையா விருந்தாளியாகத் தமிழ் அவனது மனதோரம் அமர்ந்துக் கொண்டாள்…

ஸ்ரீதரின் திருமணத்தன்று பார்த்தது…

அதிர்ந்து விழித்த முகம் இப்போதும் அவன் கண் முன்!

ஏன் அவ்வளவு அதிர்ச்சி என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை…

கண்ணோரம் நீர் துளிர்க்க, வாழ்வே இனி இல்லை என்பதை போல அவள் அந்த இடத்தை விட்டு விலகியது ஏனோ நல்லதாக அவனுக்குப் படவில்லை… அவளைக் கண்ணோடு கண் நோக்கிக் கதைகள் பல பேச ஆசைதான்… ஆனால் உடன் வந்திருக்கும் ஜோசை வைத்துக்கொண்டு, தங்களை சேர்ந்தவர்கள் பலரை வைத்துக்கொண்டு அவளை வெளிப்படையாக்க அவனுக்கு விருப்பமில்லை… ஸ்ரீதரையும் அதனால் தானே எச்சரித்திருந்தான்.

அது அவனே அவளுக்கும் ஆபத்தைத் தருவித்து தந்துவிடாதா?

அவளைப் பார்க்க வேண்டும்… பார்த்தாகிவிட்டது… பேச வேண்டுமா? சற்று பொறு மனமே என்று தவித்த மனதுக்கு சமாதானம் கூறினான்.மனதை அடக்கிக்கொண்டு அப்போது விடைபெற்று விட்டாலும் கண்கள் அவளைத் தேடி அலைந்தன… போகும் முன் ஒரு முறையாவது தன்னை காண மாட்டாளா என்று துடித்தது மனம்!

ஆனால் அவள் வரவில்லை… அவன் காரில் ஏறும் வரை அவள் வரவே இல்லை! ஏமாற்றம் மனதை அறுக்க, மனமே இல்லாமல் தம்பதிகளிடம் விடைபெற்று ஆலப்புழையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.

அவ்வளவு ஆசையாகத்தானே பார்த்துக்கொண்டிருந்தாள்… தன்னை வைத்த விழியை அகற்றாமல்! அதற்கு முன்போ அவனது ஒரு வார்த்தை போதும் என்றவளாயிற்றே… அவளது அந்த ஏமாற்றம் நிறைந்த முகம் அவனது மனதை ஆட்டுவித்தது…

ஏன் அவ்வளவு ஆற்றாமை?

ஏன் அந்தக் கலக்கம்?

அவனுக்குப் புரியவில்லை… இப்போதைக்கு அவளைச் கைப்பேசி வழியாகத் தொடர்பு கொள்ளவும் அவன் முனையவில்லை… ஏனென்றால் தன்னை வாமனன் அத்தனை வழிகளிலும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். தன்னுடைய மனைவியாக அவன் நினைத்துக் கொண்டிருந்த பெண்ணை அவன் தேடிக்கொண்டிருக்கிறான் என்பதும் அறிந்ததே!

நீர் வழி செல்லும் புனைப் போல ஆற்றின் முறைவழி சென்று கொண்டிருந்தது நிகழ்வுகளெல்லாம்!

“சர்… வாமனன் வந்துட்டு இருக்கார்…” அருகில் வந்த ராஜீவ் கிசுகிசுப்பாகக் கூற… அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் போல நிமிர்ந்து பார்த்தான்…

தன்னுடைய ஆதரவுப்படையோடு வாமனன் கோவிலுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீதரன் ராஜீவுக்கு கண்ணைக் காட்ட, கோவிலைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்த அவனது ஆட்கள் கூர்ப் பார்வையோடு தயாரானார்கள்!

வாமனனின் பார்வையும் சுற்றிலும் படிந்து மீண்டது… அவனது கண்களில் ஜாக்கிரதை உணர்வு வந்து போனது… அவனுடன் ஒரு பத்து பேர் மட்டுமே இருந்தனர்…

ஸ்ரீதருக்கு தோன்றியது… இந்த நேரத்தில் வம்பு வளர்க்க வாமனன் வந்திருக்க முடியாது என்று…

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவனது பெயரைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பமாட்டான்…

“என்ன ஸ்ரீதரா, திருவிழாவை முன்ன நின்னு நடத்தற போல இருக்கே…” பார்வையில் நரித்தனம்… பேச்சில் குழைவு!

“ஆமா வாமனா… உனக்கும் செய்தி சொல்லச் சொல்லி இருந்தேனே… இல்லைன்னாலும் உனக்குத் தெரியாம இங்க ஓர் அணுவும் அசையாதே…” அவனது வார்த்தையில் பிரதிபலித்த எள்ளலை வாமனன் மிகச் சரியாக உணர்ந்து கொண்டான்.

இருவருக்குமே ஒருவரை பற்றி ஒருவர் மிக நன்றாகத் தெரிந்திருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை…

தரிசனத்துக்காக மிக நீண்ட வரிசை காத்துக்கொண்டிருக்க… கிருஷ்ணர் கையில் வெண்ணையோடு கோபாலகிருஷ்ணனாக காட்சி தந்துக் கொண்டிருந்தார்…

இருவரை பற்றியும் அறிந்தவர்களின் வியந்த பார்வை வேறு!

“ம்ம்… ஆனால் மூத்தவன் நானிருக்க நீ தன்னிச்சையாக இந்த வேலையைச் செய்திருக்கக் கூடாது…” வாமனன் எரிச்சலாகக் கூற,

“மாவேலிக்கரையை பொறுத்தவரை நான் தான் முடிவெடுக்க வேண்டும் வாமனா… உன்னுடைய அதிகாரத்தைத் திருவல்லாவில் வைத்துக்கொள்…” சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அவன் கூற,

“இது என்னுடைய மண்… எனக்கு மட்டும் உரிய மண்… நீ மீண்டும் மீண்டும் என்னுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்கிறாய் ஸ்ரீதரா… இது நல்லதுக்கல்ல…” சற்று குரலை உயர்த்தி அவன் பேச, ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த ராஜீவின் ஆட்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்…

பேசிக்கொண்டிருந்த வாமனனுக்கு தூக்கி வாரிப் போட்டது…

ஸ்ரீதரனை பார்த்தான்… உணர்வுகளைக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அங்குத் தெறித்த கோபத்தை அவன் உணர்ந்து கொண்டான்… ஸ்ரீதர் வந்தது முதலே இரு பிரிவினருக்கும் ஆங்காங்கே கைக்கலப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது என்றாலும் அவன் நேரடியாகக் களத்தில் இறங்க மாட்டான் என்று தான் நினைத்திருந்தான்… ஆனால் அதை இப்போது பொய்யாக்கி விடுவான் போலிருக்கிறதே!

“பயந்து விட்டாயா ஸ்ரீதரா?” மெத்தனமாக ஸ்ரீதரனை வாமனன் கேட்க, பற்களைக் கடித்துக் கொண்டு சிரித்தான் ஸ்ரீதரன்…

“பயந்து போய் ஆயுதம் இல்லாதவர்களையும் திருப்பித் தாக்க முடியாதவர்களையும் தாக்கிக் கொலை செய்வது உனக்குக் கை வந்த கலை வாமனா… உன்னைப் போட்டுத் தள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் நீ இப்போது உயிருடன் என் முன் நின்றுப் பேசிக்கொண்டிருக்க மாட்டாய்…”

கொலைவெறி முகத்தில் தாண்டவமாடினாலும் வார்த்தைகளில் சற்றும் பதட்டம் இல்லை… தீர்க்கமாக முடிவு செய்து கொண்டவனின் தோரணை அது!

“திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? … மனைவி தமிழ்ப் பெண்போல…” என்று சம்பந்தம் இல்லாமல் கிண்டலாக வாமனன் கூற… ஸ்ரீதரனின் முகம் கோபத்தில் சிவந்தது… அதை வெகுவாகக் கட்டுப்படுத்திக்கொண்டு,

“மனைவியா என்ன உளறுகிறாய்?” எரிச்சலாக அவன் கேட்க…

“ம்ம்ம்… தமிழ்நதி… அதுதானே அவளது பெயர்…” என்று கூறி இடைவெளி விட்டு அவனது முகத்தைப் பார்க்க… அவன் சற்று அதிர்ந்தான்… அதைத் திருப்தியாக உள்வாங்கிக் கொண்டவன், “ஆனால் உன்னுடைய மனைவி ஏன் வேலைக்குப் போகிறாள்… அதுதான் எனக்குப் புரியவில்லை… சென்னை டாரசில் தானே வேலை பார்க்கிறாள்… அவள் எங்குத் தங்கியிருக்கிறாள் என்ற தகவல் உனக்கு வேண்டுமா…” மிகவும் சாதாரணம் போல அவன் கூறிக்கொண்டே செல்ல அவனது முஷ்டி இறுகியது… ஆனால் காட்டிக்கொள்ளாமல்,

“அவள் என் மனைவியா?” என்று சிரிக்க…

“இல்லையென்று கூறப் போகிறாயா? அவள் உனக்கு யாருமில்லை என்றாலும் பரவால்லை… அவளை முடிக்கச் சொல்லிவிட்டேன்… என்ன ஸ்ரீதரா… இப்போதும் அவள் உனக்கு யாருமில்லை தானே…” என்று அவன் சிரிக்க, ஸ்ரீதரனின் கோபம் எல்லை மீறிக் கொண்டிருந்தது…

அவன் இப்போதே அவனது கழுத்தைப் பிடித்துவிட முடியும்… ஆனால் இப்போது அவன் தன்னிடம் தமிழை பற்றிப் போட்டு வாங்கிக்கொண்டிருக்கிறான்… அப்படி இருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டால் அடுத்த நிமிடம் அவளது உயிரை அவன் பறித்து விடக்கூடும் என்று அறிவு அறிவுறுத்திக் கொண்டிருந்தது…

“யாரோ ஒரு பெண்ணை என் மனைவி என்று…” என்று சிரித்தவன்…” என்னுடைய மனைவி பாதுகாப்பாக இருக்கிறாள்… அவளை நீ பார்க்க வேண்டுமா வாமனா? கண்டிப்பாக அவளை இங்கே நான் அழைத்து வருவேன்… கவலைப்படாதே…” முடிந்த வரையில் தன்னுடைய உணர்வுகளை வெளிகாட்டிக்கொள்ளாமல் கூற… அவனது புருவம் முடிச்சிட்டது…

“இத்தனை சமாதானங்கள் எதற்கு? பேசாமல் பணிந்துப் போய்விடேன்…”

“புலி தனது இரையை ஓட விட்டுப் பதுங்க விட்டுத்தான் அடிக்குமாம்… நீயும் ஓடிக்கொள்… உன்னால் முடிந்த வரை ஓடிக்கொள்…” சற்றும் உணர்வைக் காட்டாமல் அவன் கூற…

வாமனன் அலட்டிக்கொள்ளாத தோரணையில், “நீ என்னை விரட்டப் போகிறாயா? இந்தத் தேர்தலில் நான் நிற்பது எதற்காக? இந்த முறை அமைச்சராகி இந்தக் கிருஷ்ணன் கோவிலை என் பிடியில் கொண்டு வரத்தான் ஸ்ரீதரா… தேர்தல் முடியட்டும்… அதன் பின் என் ஆட்டத்தைப் பார்ப்பாய்…”

அமைதியாக அவன் கூறினாலும் குரலில் அவனது ஆத்திரம் தெளிவாகத் தெரிந்தது…

ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்த ஸ்ரீதரன்,

“உன்னால் செய்ய முடிந்ததை செய்… என்னால் என்ன செய்ய முடியும் என்று நானும் காட்டுகிறேன்…” உறுதியாக என்றவன்… மேலும் அவனிடம் வாதிட விரும்பாமல் கர்ப்பக்கிருகத்தை நோக்கிப் போனான்…

அவன் போன திசையையே எரிச்சலாகப் பார்த்திருந்தான் வாமனன்… அருகில் இருந்தவனிடம்,

“அந்தப் பெண் தமிழ்நதியை தூக்க சொல்லிவிடு… அதன் பின் எப்படி இருந்தாலும் இவன் பணிந்து தான் ஆக வேண்டும்…” என்று கூறிவிட்டு கோபமாகச் செல்ல,

கிருஷ்ணரின் முன் நின்று கொண்டிருந்த ஸ்ரீதரன் அதை எதிர்பார்த்திருந்தாலும் வாமனனை நினைத்து முகம் கோபத்தில் சிவந்திருந்தது. தன் பெற்றோருக்கு நேர்ந்த கொடுமையின் போதே அவன் வெடித்து எழ வேண்டியது… ஆனால் கடமை தடுத்திருந்தது…

வேறெதையும் பல நூறாண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வரும் ரகசியங்கள்… உணர்ச்சிவசப்பட்டால் ஒரே நொடியில் அத்தனை பேரின் நம்பிக்கையும் வீணாகிவிடும்…

ஆனால் இப்போது எந்தக் காரணமும் இல்லாமல் தன்னை நேசித்த ஒரே குற்றத்துக்காகத் தமிழையும் பறிக்க முயல்பவனை கொன்று விட மனம் துடித்தாலும் மீண்டும் அவனது அதே கடமை தடுத்தது.

இன்னொரு முறை கிருஷ்ணரை காரணம் காட்டி ரத்த ஆறு ஓட வேண்டுமா?

உணர்வுகளை வெளிக்காட்டாமல் கம்பீரமாக அந்தக் கோபாலகிருஷ்ணனின் முன் நின்றிருந்தாலும் மனதில் புயலடித்துக் கொண்டிருந்தது…

இந்த முள் பாதையை நானாகத் தேர்ந்தெடுக்கவில்லையே… பிறப்புக்கு அர்த்தமென்று அனைத்தையும் ஏற்றுக் கொண்டாலும் வாமனன் இப்போது தன்னை எல்லையில் நிறுத்தி இருக்கிறான்…

வேறு வழியில்லை… மூன்று வருடமாக நிம்மதியை தேடி சென்னையில் இருந்ததை போல இனியும் தன்னால் இருக்க முடியாது…

செய் அல்லது செத்து மடி!

மெளனமாக ஸ்ரீகிருஷ்ணரை பார்த்தான்… விளக்கொளியில் அமைதியாகச் சிரித்தபடி காட்சி தந்துகொண்டிருந்தான்… நூற்றாண்டுகளாகத் தன்னுள் புதைத்து வைத்த ரகசியங்களை ரகசியமாகவே வைத்துக் கொண்டிருக்கும் வெண்ணைத் திருடும் கள்வனின் எதேச்சிகார புன்னகையது!

“ராஜீவ்…” ஒரு முடிவினை எடுத்தவனாக ராஜீவை அழைக்க, சற்று தள்ளி நின்றுக் கொண்டு அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவசரமாக அருகில் சென்றான்…

“சர்…”

“இன்னைக்கு ஈவினிங்குள்ள தமிழ்நதி இங்க வந்தாகணும்…” அவனைப் பார்க்காமல் கூற,

“ஓகே சர்…”

ஒரு கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் கேரள கட்சி தலைமை பொறுப்பாளரைக் குறிப்பிட்டு,

“அவர் கிட்ட பேசணும் ராஜீவ்… இன்னைக்குள்ள… சொல்லிடு…” என்று கூற, ராஜீவ் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்… கட்சி, அரசியல் என்றால் காத தூரம் ஓடுபவனாயிற்றே என்ற வியப்பு!

அதுவும் அவர்கள் இப்போது எதிர்கட்சியினர் வேறு… அதிலும் வாமனன் சார்ந்துள்ள கட்சிக்கு எதிராக இருப்பவர்கள்… அதோடு தேசிய கட்சியினரும் கூட!

அவனது குழப்பமான முகத்தைப் பார்த்து அவன் கூறிய பதில் ராஜீவை இன்னமும் குழப்பத்தில் ஆழ்த்தியது… ஆனால் சந்தோஷிக்கவும் செய்தது…

அதிகாரம் தான் ஒருவரின் இருப்பை உறுதி செய்கிறது… அதிகாரம் தான் ஒருவரின் அடையாளத்தைத் தீர்மானிக்கிறது… அதிகாரம் தான் எதிர்ப்பவர்களை நசுக்கவும் செய்கிறது… அதிகாரம் தான் பிம்பங்களைக் கட்டமைக்கிறது… அதிகாரம் தான் கொண்டாடப்படுகின்றது… அதிகாரம் தான் போற்றப்படுகின்றது… அதிகாரம் தான் தூற்றவும் படுகின்றது… அதிகாரம் தான் ரகசியங்களை ரகசியங்களாகவே வைக்கிறது… அதிகாரம் என்றுமே எளியவருக்கானது இல்லை என்று எப்போதுமே உறுதிப்படுத்துகின்றது!

ஆனால் அதே அதிகாரம் சில நேரங்களில் நமக்கு மிகவும் தேவையாகவும் இருக்கிறது!

அதிகாரம் கொடுக்கும் போதையை வேறெந்த போதை வஸ்துவும் கொடுத்து விடப் போவதில்லை… அதிகாரம் கொடுக்கும் மமதையை வேறெந்த செயலும் தீர்மானிக்கப்போவதில்லை… அதிகாரம் கொடுக்கும் அகங்காரத்தை எந்தப் பொருளும் தடுக்கவும் போவதில்லை…

அத்தனை சதிராட்டங்களின் காரணம் அதிகாரம்… அத்தனை சூழ்ச்சிகளின் காரணம் அதிகாரம்… அத்தனை துரோகங்களுக்கும் காரணம் அந்த அதிகாரம்…

அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு ஸ்ரீதரன் தீர்மானித்து விட்டான்…

கிருஷ்ணர் சிரித்தார்!

கைப்பேசி அழைத்தது… கொச்சியிலிருந்து ஷிபு அழைத்திருந்தார்…

“ஒர்க் டன் சர்…” என்று வெளிப்படையாக மகிழ்வை காட்டிக்கூற… ஸ்ரீதரனின் முகம் ஒளிர்ந்தது!

ஷிபு தாமஸ் கொச்சி துறைமுகக் கண்காணிப்பு கஸ்டம்சில் மிக முக்கியமான அதிகாரி!