Tamil Novel Chakraviyugam 24

24

சக்கரவியூகத்தை உடைக்க நினைப்பவனுக்கு எதுவும் தர்மமே. அதுவே சத்ரிய தர்மம் ஸ்ரீதரா… ஜெயத்ரதன் தடுத்தான் என்று காரணத்தைக் கூறி தர்மன் தப்பித்துக் கொள்ளலாம்… என்னைப் பொறுத்தவரை தர்மன் கோழை… நியாயத்தின் பின்னால் தன்னுடைய கோழைத்தனத்தை மறைத்துக் கொண்டான்…எதையும் எதிர்பாராமல் வியூகத்தை உடைத்துக் கொண்டு சென்றானே அபிமன்யு, அவனது துணிச்சலில் சற்றேனும் இருந்திருந்தால் அர்ஜுனின் மகன் அவ்வளவு அநியாயமாக இறந்திருக்க மாட்டானே…

பாரதப் போர் அனைத்து காலத்திலும் நடந்து கொண்டு தானிருக்கிறது ஸ்ரீதரா… சுற்றி வளைக்கும் சக்கர வியூகங்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்… தர்மத்தை காரணம் காட்டி உன்னை அடங்கிப் போக தூண்டலாம்… ஆனால் திணிக்கப்பட்ட போரில் நியாயங்களை பார்த்து விடாதே…. நீ பார்க்கும் நியாயம் வரலாற்றை மாற்றி விடக் கூடும்…

உன்னுடைய கடமையென்ன? வெற்றி மட்டுமே!

அதனால் கேட்கிறேன் ஸ்ரீதரா நீ அபிமன்யுவா அர்ஜுனனா?

“நான் கிளம்பனும்…” சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீதரன் மேல் சாய்ந்துக் கொண்டு தமிழ் கூற, தேர்தல் செலவு கணக்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன்,

“ம்ம்ம்ம்…” என்று வெறுமனே கூற, தமிழ்நதி அவனை முறைத்துப் பார்த்தாள்.

தேர்தலுக்கான பிரசாரம் அன்றுடன் முடிந்திருந்தது… அடுத்த நாள் தேர்தல் தினமானதால் அன்று சற்று ஓய்வாக கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தான்… பனிரெண்டு மணி அளவில் தேர்தல் பணிமனைக்கு வருவதாகக் கூறியிருந்தான்… மனதில் பரபரப்பு இருந்தாலும் எந்த விதமான பதட்டமும் அவனுக்கு இல்லை… முடிந்த அளவு உழைப்பை கொடுத்திருக்கிறான் என்பதோடு வாமனனின் ஊழல்கள் பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்ததால் பெரும் எதிர்ப்பலை உருவாகியிருந்தது… வாமனனுக்கு எதிராக!

அதை முழுவதுமாக உபயோகித்துக் கொண்ட ஸ்ரீதரன் பெரும் ஆதரவை திரட்டியிருந்தான்…

அதைக் காட்டிலும் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவனுக்கு இருந்தது… முன் வைத்த காலை இனி பின் வைப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்திருந்தான்…

இனி ஆலப்புழையும் மாவேலிக்கரையும் தான் அவனது இருப்பிடம்… சென்னைக்கு செல்வதென்ற பேச்சே இல்லை என்று ராஜீவிடமும் கூறியிருந்தான்… அங்குள்ள தொழிலைக் கவனிக்க நம்பிக்கையானவர்களை சென்னை அனுப்பியிருந்தான்… வாமனனுக்கு செக் வைக்கவும் உடமைகளை பாதுகாக்கவும் ஸ்ரீதரன் இங்குதான் இருக்கிறான் என்பதை அவன் கண்டிப்பாக உணர வேண்டும் அவனைப் பொறுத்தவரையில்!

அதனுடன் தன்னுடைய திருமணம்பற்றிய செய்திகளைச் சென்று சேர வேண்டிய இடங்களுக்குச் சென்று சேருமாறு பார்த்துக் கொண்டான்… செய்தி பரவியதிலிருந்து முணுமுணுப்பாக ஆரம்பித்தது இப்போது சற்று வலுவாகவே திருமணத்திற்கு எதிரான கருத்துக்களும் கோலாத்ரிகளிடையே பரவியிருந்தது…

வேறு யார் அந்தக் கைங்கர்யத்தை செய்திருக்க முடியும்? தேர்தலில் தான் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த வாமனன் தன்னால் முடிந்தளவு திருமணத்திற்கு எதிரான தூபத்தை போட்டுக்கொண்டிருந்தான்…

அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு எப்படி அவனைச் சமாளிப்பது, திருமணத்தை எதிர்ப்பவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றும் யோசித்தபடி அமர்ந்திருந்தவனை பார்த்து,

தமிழ்நதி “டேய்… ஸ்ரீதரா…” சற்று சப்தமாக அழைக்க, திடுக்கிட்டுப் போய் அவளைப் பார்த்தான்…

“ஏய் என்னடி இப்படி என்னை ஏலம் போடற?” சுற்றும் முற்றும் பார்த்தான்… யாரும் கண்ணில் படவில்லை… ஒரு நிம்மதி பெருமூச்சோடு அவளைப் பார்க்க,

“பின்ன… நானும் எவ்வளவு நேரம் தான் கிளம்பனும்ன்னு சொல்லிட்டே இருப்பேன்… நீயும் ம்ம்ம் ம்ம்ம் ன்னே ம் கொட்டிட்டு இருப்ப… கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு?” கொடுத்து வந்த மரியாதையை எல்லாம் காற்றில் பறக்க விட்டாள் தமிழ்நதி… , மெலிதாக புன்னகைத்து விட்டு மீண்டும் கணக்கை பார்க்க குனிந்து கொண்டான்…

“இப்ப என்னதான் சொல்ற?” கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்டாள்.

எத்தனை முறை அவனை இழுத்துப் பிடித்தாலும் அவளது ஜம்பம் எல்லாம் அவனிடம் செல்லுபடியாகவில்லை… இரண்டு நாட்கள் என்றுக் கூறிவிட்டு பதினைந்து நாட்களாகி இருந்தது…

அவள் வந்த அன்று அமர்ந்து பேசியதுதான்… அடுத்த நாள் முதலே அவன் வெகுவாகப் பிசியாகி இருக்க… அவள் தான் நேரத்தை நெம்பித் தள்ள வேண்டியிருந்தது அந்த மிகப்பெரிய வீட்டில்… எப்போது வருகிறான் எப்போது செல்கிறான் என்பதும் கூட அவள் அறியாதது தான்…

தேர்தல் வேலைகளைப் பார்ப்பவர்களுக்குப் பெரிய வீட்டிலேயே உணவு தாயாரானது… தோட்டத்தில் ஷாமியானா பந்தலிட்டு அங்கு விருந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது…

ஆனாலும் அதிலும் அவளுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை… பணிக்கர் மேற்பார்வை பார்த்துக் கொண்டார்… எவ்வளவு பெரிய கூட்டத்தையும் சமாளிக்கும் திறன் அவருக்கு இருந்தது…

ஒவ்வொரு வேலைக்கும் அங்காங்கே ஒவ்வொருவர்… அவர்களாகவே செய்து கொண்டிருப்பது போல இருந்தாலும் அவை அத்தனையும் ஸ்ரீதரனின் மேற்பார்வையின் கீழ் பணிக்கரின் பணி போல… அதையும் அவர் சொல்லித்தான் அவள் அறிவாள்…

“ஏன் பணிக்கர் அங்கிள் வீட்டுக்கு அவங்க யாரும் வரமாட்டாங்களா?” தோட்டத்தோடு சென்று விடுபவர்களை பார்த்துத் தமிழ்நதி கேட்க, அவர் அவ்வளவு மரியாதையோடு,

“வெல்லிய கொட்டாரத்துனுள்ளே வர எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது மோளே… இதனோட பெருமை உங்களுக்குப் போகப் போகத்தான் புரியும்…” என்று கூற, அவள் புரியாமல் தான் பார்க்க வேண்டியிருந்தது…

“அதென்ன அவ்வளவு பெரிய விஷயமா?” புரியாமல் இவள் கேட்க,

“மோளே… உங்களது கையிலிருப்பது கண்ணாடி கல் அல்ல… பழம் பெருமை வாய்ந்த வைரம்…” என்று பணிக்கர் புன்னகைக்க… அவளால் எதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தான் ஸ்ரீதரனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து டிபன் வாங்கிக்கொள்ள சொன்ன சம்பவம் அவளது கண்முன் வந்துபோனது… ஸ்ரீதரனின் இயல்பை அவளால் உள்வாங்க முடியவில்லை… இப்படியும் கூட இருக்க முடியுமா என்றும் தோன்றியது…

அதுபோல அவளது அறைக்கு அவன் தவறியும் கூட வருவதில்லை… அவனது அறைக்கும் அழைத்துச் சென்றதில்லை அவனிருக்கும்போது… அந்த அணுகுமுறையே அவன் பால் உள்ள ஈர்ப்பை அதிகரித்தது…

அதிலும் மனுதாக்கல் செய்ய அவளையும் வலுகட்டாயமாக அழைத்துச் சென்றபோது, தன்னை இடிக்க வந்தவனிடம் காட்டினானே அந்த ருத்திர ரூபம்… அவளை முழுவதுமாகச் சாய்த்திருந்தான் அன்று!

லோகாவிடம் அவள் பொய்யெல்லாம் கூறவில்லை… ஆனால் பெரிதாக உண்மையும் கூறிவிடவில்லை…

கம்பெனி வேலைக்காகத் தன்னை கொச்சி அனுப்பியிருப்பதாக இங்கு வந்த அன்றே கூறிவிட்டாள்… தற்போதெல்லாம் அவள் எப்போது ஊருக்கு வருகிறாள் என்பதையே லோகா கேட்பதை விட்டிருந்தார்… அவள்மேல் கொண்ட கோபம்…

சரி… அவரது கோபத்தையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைத்துக் குறைத்து விடலாம் என்றுதான் எண்ணிக்கொண்டாள்… தமிழ்நதி ஏன் இங்கு இருக்கிறாள் என்பதை சொன்னால் அவர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ள போவதில்லை… தேவையில்லாத வருத்தம் தான் மிஞ்சும்…

தன்னை தனியாகச் சென்னையில் விடுவதில் அவனுக்கிருந்த பயத்தை உணர்ந்தாள்… அதுவும் நியாயமாகச் சற்றே தோன்றியிருந்தது…

ஆனால் தன்னை ஊருக்கு அனுப்ப எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்யாமல் இவன் என்னதான் செய்கிறான் என்று எரிச்சலாகவும் இருந்தது… எத்தனை நாட்கள் இப்படியே இங்கே இருக்க முடியுமாம்? அதிலும் திருமணம் ஆகாத நிலையில்?

அதோடு அன்று மனு தாக்கலின் போதே வாஸந்தியின் கணவனின் வியந்த பார்வையையும் கிண்டல் கேலிகளையும் எதிர்கொண்டாயிற்று… அவனுக்குத் தான் இங்கு வந்ததும் தெரிந்தாயிற்று…

“ஆஹா மச்சினிச்சி இங்க தான் இருக்கியளா?” அவளைப் பார்த்தவுடனே அவர்களது வட்டார மொழியிலேயே முகம் முழுக்க சிரிப்புடன் கிண்டலாக அவன் கேட்ட விதத்தைப் பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது… ஹிஹி என்ற சிரிப்பை மட்டும் சிரித்து வைக்க,

“சகலை அதுக்குள்ளே டியூட்டிக்கு வந்துட்டீங்க போல… வாசு எப்படி விட்டுச்சு?” நடுவில் புகுந்து கொண்டு ஸ்ரீதரன் வெர்மா புது மாப்பிள்ளையை அவர்களது தொனியிலேயே கலாய்க்க, அவன் சலித்துக் கொண்டான்…

“என்ன சகலை பண்றது? கடமை அழைக்கிறது… இல்லறம் துரத்துகிறது… அழைக்கற கடமையை முதல்ல பார்க்கலாம்ன்னு வந்துட்டேன்…” சிரித்துகொண்டே கூற,

“உங்களையும் துரத்தியாச்சா? அக்காவுக்கும் தங்கச்சிக்கும் இந்த விஷயத்துல ரொம்ப ஒற்றுமை தான் சகலை… நேத்து நான் வாங்கி கட்டினேன் பாருங்க…” என்று அருகில் நின்றுக்கொண்டிருந்த தமிழ்நதியை பார்வைட்டுக் கொண்டே கூற,

“ஆனா உங்க திறமை யாருக்கு வரும் சகலை? வாங்கி கட்டினாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி கெத்து காட்றீங்க பாத்தீங்களா… அங்க நிக்கறீங்க…” என்று ஸ்ரீதர் வாய் விட்டுச் சிரித்தான்.

இருவரையும் பார்த்துத் தமிழ்நதி முறைத்தாலும் அவளது மனம் நிறைவாக இருந்தது… இருவருக்குமிடையே எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்று அவள் வேண்டாத தெய்வமில்லை… இவர்களிடையே இந்த நட்பு போதுமே என்று மனம் சந்தோஷித்துக் கொண்டது!

தாக்கல் செய்யப் போகும் மனுவைச் சரிபார்த்துவிட்டு ராஜீவ் வந்து அழைக்கும் வரை இருவருமாகத் தமிழ்நதியை மையப்படுத்தி கலாய்த்துக் கொண்டிருந்தனர்…

வாஸந்தியின் கணவனுக்குத் தமிழ்நதி இங்கிருப்பது தெரியுமென்றாலும் இங்கேயே இருப்பதை அவன் நல்ல விதமாக எடுத்துக்கொள்ளவே முடியாது என்பதை வெகுவாக நம்பினாள்…

ஆனால் ஸ்ரீதரன் அவளை இங்குப் பிடித்து வைத்திருந்த காரணமே வேறு என்பதை அவன் உணர்த்தவே இல்லை… தேர்தல் செலவுக்கணக்கை ஸ்ரீதரன் பார்த்துக் கொண்டிருக்க, அவனை விடாமல் சுரண்டிக் கொண்டே இருந்தவளை சற்று எரிச்சலாகப் பார்த்தான்…

“ஏய் ஏன்டி இப்படி டிஸ்டர்ப் பண்ற? எவ்வளவு முக்கியமான கணக்கைப் பார்த்துட்டு இருக்கேன்… நீ என்னடான்னா இப்படி நச்சு பண்ணிட்டு இருக்க?”

“நானும் உங்க கிட்ட கேட்டுகிட்டே தான் இருக்கேன்… நான் கிளம்பனும்ன்னு… என்னைக் கிளப்பி விட்டுட்டா உங்களை நான் எதுக்கு நச்சு பண்ண போறேன்?” ரோஷமாக அவள் கேட்க,

“அதெல்லாம் இப்ப முடியாது… உன்னை அனுப்பிட்டு எப்ப உன்னை வாமனன் கடத்துவான்னு நானா பயந்துட்டு உட்கார்ந்துட்டு இருக்க முடியாது…” கறாராக அவன் கூறிவிட,

“ரெண்டு நாள்ன்னு சொல்லித் தானே என்னை இருக்க வெச்சீங்க… அப்புறம் ஆள் கண்ணுக்கே தட்டுப்படலை… ஏன் இப்படி பண்றீங்க?”

“ரெண்டு நாள்ன்னு சொன்னா தானே ஒத்துக்குவ… இங்கயே இருன்னு சொன்னா கேட்கவா போற?” கிண்டலாகக் கூறிவிட்டு லேப்டாப்பில் மீண்டும் ஆழ்ந்து கொள்ள…

“இன்னும் எத்தனை நாள் அப்படி என்னை நீங்கப் பாதுகாக்க முடியும்? ஒரு நாள் இல்லைன்னாலும் ஒரு நாள் நான் போய்தானே ஆகணும்?” அவளுக்குமே எரிச்சல் படர ஆரம்பித்தது…

“இல்ல… முடியாது… உன்னைவிட முடியாது…” அவன் உறுதியாகக் கூற,

“இதென்ன பிடிவாதம்? கொஞ்சமாவது உணர்ந்து தான் பேசறீங்களா?”

“நான் நல்லா புரிஞ்சுதான் பேசறேன்… இப்ப தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே தமிழ்…” என்று கறாராகக் கூறியவன்… குரலைச் சற்று தழைத்துக் கொண்டு… “இதையெல்லாம் இப்படி ஹால்லை வெச்சுட்டு பேசாதே… சுற்றிலும் வேலையாட்கள் இருக்காங்க… அதை நினைவுப்படுத்திக்கோ…” அவளுக்கு ஒரு குட்டும் வைத்து விட்டு லேப்டாப்பில் மீண்டும் புதைந்து கொள்ள,

“அப்ப நான் எப்ப தான் பேசறது? பேச உங்க கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கனுமா? இல்லை அதுக்கு பிளேஸ் சூஸ் செய்து உங்களுக்கு இன்பார்ம் பண்ணனுமா?”

“நீ எப்போது வேண்டுமானாலும் பேசலாம்… என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால் இப்படி ஹாலில் வைத்துப் பேசாதே என்று தான் சொன்னேன்… சுவற்றுக்கும் காதுகள் உண்டு… கண்களும் உண்டு… அதைப் புரிந்துக் கொள்…”

அவளை நிமிர்ந்து பார்த்துச் சற்று நிதானமாக அவன் கூற,

“இதைப் பேசக் கூடாது அதைப் பேசக் கூடாது… அதைவிட இங்க பேசக் கூடாது அங்க பேசக் கூடாது… பேசாமல் நான் வாய் மூடிக்கொண்டு ஊமையாகி விடுகிறேன் ஸ்ரீதர்… அது இன்னும் பெட்டர் இல்லையா?”

கண்களில் நீர் கோர்த்து கொள்ள, மனம் கலங்கிப் போய் அவள் கூற… லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்… மனம் உருகிப்போனது…

அவளுக்கு இப்படியொரு வாழ்க்கை தேவையா என்று அவனது மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது…

“சரி… இப்ப உனக்கு என்ன பிரச்சனை?” நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டு அவன் கேட்க… அவளுக்கு எரிச்சலாக வந்தது… இதை ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பானா? அதற்கு மேலும் இருக்கலாம்… ஆனால் ஒரு முறை கூட அவளது பிரச்சனையைத் தீர்த்து வைக்கவில்லையே…

“இங்க வந்து பதினைந்து நாளாகுது… நான் சென்னை போகணும்… எனக்கும் வேலை இருக்கு… அதைக் கொஞ்சம் கூட உணர மாட்டீங்களா?” இருக்கும் கோபத்தையெல்லாம் அவன்மேல் கொட்ட,

“இல்ல தமிழ்… இனிமேல் நீ இங்கே தான்… தேர்தல் முடிந்த பின் நம்முடைய திருமணம்… போவதை பற்றி இனி யோசிக்காதே…” நிதானமாக ஆனால் உறுதியாக அவன் கூறிவிட,

“திருமணமா?” என்று அதிர்ந்தவள்…” அந்தத் திருமணத்தைக் கூட நீங்க மட்டும் தான் முடிவு செய்வீங்களா? எதற்கும் நான் தேவையே இல்லையா? என்னோட அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, தம்பி, தங்கை இவங்களையெல்லாம் கலந்து முடிவெடுக்க வேண்டாமா? இதென்ன தான்தோன்றித்தனம் ஸ்ரீதர்?” அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை…

திருமணம் என்பது அவ்வளவு சாதரணமாகப் போய்விட்டதா இவனுக்கு?

“இதில் என்ன தான்தோன்றித்தனம் இருக்கு தமிழ்?” அவனுக்கும் புரியவில்லை… உத்தரவிட்டே பழக்கப்பட்டுவிட்டான் அவனையும் அறியாமல்… அதுவே அவளிடமும் இயல்பாகிறது என்பதை அவன் உணரவில்லை…

“ஒன்றுமே இல்லை… ஆனால் என்னால் இந்தச் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ள முடியாது… நானும் சக மனுஷி… அதை முதலில் உணருங்க ஸ்ரீதர்…” என்று தொண்டையடைக்க கூறியவள் எழுந்துக் கொண்டாள்… இனியும் இவனிடம் விவாதிப்பது வீண் என்று தோன்றியது…

எழுந்தவள் நேராகத் தனது அறைக்குச் சென்று விட, அவளது அந்தக் கலங்கிய முகம் அவனை நெருடியது…

ஒருவேளை தன்னை விரும்பியிருக்காமலிருந்தால் அவள் நிம்மதியாக இருந்திருப்பாளோ?

மனம் கனத்தது…

தன் கண் முன் இருக்கும் பிரச்சனைகளையும் வேலைகளையும் கணக்கிட்டான்… வலுகட்டாயமாக அழைத்து வந்து வைத்துக் கொண்டு அவளுக்குச் சற்றும் நேரத்தை ஒதுக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அதுவும் தெரியாத இடம், தெரியாத மொழி, தெரியாத மக்கள் அவளால் எப்படி சமாளிக்க முடியும்?

அவளது அறைக்கு முன் நின்று கதவைத் தட்டினான்…

அந்த வீட்டிற்கு அவள் வந்தபிறகு அந்த அறைக்கு அவன் செல்வது முதல் முறை…

கதவைத் திறந்தவளின் கண்கள் கலங்கியிருக்க, முகம் சிவந்திருந்தது, அழுகையினால்! அவளைத் தாண்டி அறையினுள் சென்றான்…

“ஏன் தமிழ்? இவ்வளவு கோபமும் அழுகையும்?” என்று ஸ்ரீதரன் கேட்க,

அவன் கேட்கும் வரை மட்டுபட்டிருந்த கண்ணீர் மீண்டும் வழிய…

“ஒன்னும் இல்ல… எல்லா இடத்திலையும் லவ் பண்ணும்போது சந்தோஷமா இருப்பாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் தான் இப்படியெல்லாம் அழுகாச்சி இருக்கும்ன்னு கேள்விபட்டிருக்கேன்… ஆனா என்னோட விதி இப்பவே இப்படி இருக்கே… இன்னும் பின்னாடில்லாம் எப்படி இருக்குமோ?” மூக்கை உறிந்துக் கொண்டே கண்களைத் துடைத்தவாறு அவள் கூறியத் தோரணை அவனுக்குச் சிரிப்பை வரவைத்தது…

பழைய இலகுவான ஸ்ரீதரன் தலைத் தூக்கினான்…

“ம்ம்ம்… ஆமா இங்கிலீஷ்… எனக்கும் கூட அந்தப் பயமிருக்கு…” என்றவன் சற்று இடைவெளி விட, நிமிர்ந்து அவனைப் பார்த்த அவளது பார்வையில் கடுப்பு தெரிந்தது… மலர்ந்த புன்னகையை அடக்கிக் கொண்டு,

“அதனால் என்ன பண்ணலாம்னா…” என்று நிறுத்திவிட்டு அவளது முகத்தைப் பார்க்க, அவள் அவனது முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து வேறுபுறம் பார்க்கத் துவங்கினாள்… எரிச்சலில்!

“கல்யாணமே வேண்டாம்… ஒய் டோன்ட் வி ட்ரை லிவிங் டூகெதர்?” சிரிக்காமல் அவன் கேட்க… அதிர்ந்து அவனைப் பார்த்தவள் அவனது குறும்புத்தனத்தை உணர்ந்து, அவனை அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாகத் தேடத் துவங்கினாள்…

“ஹே… இங்க பார் இங்க்லீஷ்… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்… வன்முறைல இறங்கக்கூடாதாக்கும்… சொல்லிட்டேன்…” என்று சிரித்துக்கொண்டே அவன் கூற,

“சொல்லுவீங்க சொல்லுவீங்க… கேக்கறவ கேணச்சின்னா கேப்பைல நெய் வடியுடிதுன்னானாம்… எவ்வளவு கொழுப்பு இருந்தா இப்படி கேப்பீங்க… லிவிங் டூகேதராம்… லிவிங் டூகெதர்… லோகாம்பா என்னை வெட்டிப் போட்டுடுவா…” அழுகை மாறிச் சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குத் தயாரானவளை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்…

“இங்கிலீஷ்… அதென்னவோ நெய்ன்னு சொன்னியே… அந்த ப்ரோவேர்ப்க்கு அர்த்தம் என்ன?” கண்ணடித்து கேட்டவனை முறைத்தாள்…

“ம்ம்ம்… சுரக்காய்க்கு உப்பில்லைன்னு அர்த்தம்…” கடுப்பாக அவள் கூற…

“சுரக்காய்க்கு எதுக்கு உப்பு?”

“ம்ம்ம்… கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனைல வைக்கிற மாதிரில்ல இருக்கு… நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா கொழுப்பு கொண்டாடிட்டு இருக்கீங்களா?”

நிஜமாகவே அவனுக்குப் புரியவில்லை… மேலோட்டமாக அவனால் தமிழில் புரிந்துக் கொண்டு மலையாளம் கலந்த தமிழில் பேசிவிட முடியும்… சென்னையில் மூன்று வருடங்களாக இருந்ததால் அதுவொன்றும் பிரச்சனை இல்லை… ஆனால் இந்த மறத் தமிழச்சியோ அதிலும் மதுரை மண்ணின் மறத்தமிழச்சியாகப் பழமொழியைப் போட்டுத் தாக்க அவனுக்கு உண்மையில் புரியவில்லை… ஆனாலும் அவனைத்தான் கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது…

“ஓகே ஓகே… சீஸ்பயர்… சீஸ்பயர்… நீ சொல்ற ப்ராவர்ப் எல்லாம் நானும் தெரிஞ்சுகிட்டு உனக்குப் பதில் சொல்றேன்… அதையெல்லாம் விடு…” என்று கண்ணடித்தவன்…” உங்க அம்மா தானே வெட்டிப் போட்டுடுவாங்கன்னு சொல்ற தமிழ்…” என்று கேட்க… அவள் புரியாமல் பேயெனப் பார்த்தாள்… ‘இவன் என்ன சொல்ல வருகிறான்? ’

“அதுக்கு?”

“உனக்கு ஓகே தானே…?” குறும்பாக அவன் கேட்க…

“யூ… யூ… ஸ்டுபிட்… இடியட்… அத்தனையும் திமிர்… இந்த அழகுல கடத்திட்டு வேற வந்து… ப்ச்… எதுக்குமே என்னோட கன்சென்ட் அவசியமே இல்லைல்ல உங்களுக்கு…” கையில் கிடைத்த சோபா திண்டால் அவனை அடிக்க… அவன் சிரித்துக் கொண்டே அவளது கையைப் பற்றிக் கொண்டான்…

“ஓகே ஓகே… ஜோக்ஸ் அப்பார்ட்…” என்றவன் அவளைத் தன்னோடு அங்கிருந்த சோபாவில் அமர வைத்துக் கொண்டான்…

அது ஆலப்புழையில் இருக்கும் அவர்களது கொட்டாரம்… மாவேலிக்கரை மாளிகையை விடுத்து ஆலப்புழையில் அவர்களது முன்னோர் குடியேறிய போது கட்டியது… இதுவும் பழையதுதான் என்றாலும் மாவேலிக்கரை மாளிகை வெகுபழையது… பழைய கால கேரள பாணியிலான மாளிகை அது… திருவிதாங்கூரின் தொடர்புகள் இருந்ததால் அந்தப் பாரம்பரியத்தை சேர்ந்த மாளிகை அது!

ஆலப்புழையில் இருக்கும் இந்த மாளிகை பாரம்பரியமும் அதே சமயத்தில் நவீனமும் சேர்ந்து இருக்கும்… இங்கு வந்துவிட்டாலும் மாவேலிக்கரை மாளிகையும் முழுவதுமாக வல்லிய கொட்டாரத்தினுடையது தான்… அதனைக் கைப்பற்றத் தான் வாமனன் போராடுவதும்!

அந்த மாளிகை அவர்களை பொறுத்தவரை அதிகாரத்தின் குறியீடு!

“நீ சொல்வதெல்லாம் எனக்கும் புரியுது தமிழ்… ஆனால் ஒன்றை நீ புரிந்து கொள்ள வேண்டும்… உன்னைச் சென்னையிலோ மதுரையிலோ விட்டுவிட்டு என்னால் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது… வேலையிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது…” என்றவன்… அவளது கையைப் பிடித்துக்கொண்டே, “அவர்கள் எந்தளவுக்கு மோசமானவர்கள் என்பது உனக்குத் தெரிந்ததுதானே?” என்று அவன் கேட்க… அவள் தலையாட்டினாள்…

“ஆனா அம்மா அப்பாவுக்குத் தெரியாம…” என்று அவள் இழுக்க…

“ஹேய்… நான் என்ன உங்க அம்மா அப்பாவுக்குத் தெரியாம உன்னோட ஹனிமூனா கொண்டாடிட்டு இருக்கேன்…?” என்று மீண்டும் கிண்டலாகக் கேட்க…

“அடப்பாவி…” என்று அவனது முதுகில் ஒன்றை வைத்தாள். அவன் சிரித்துவிட்டு,

“உன்னை சேஃபா வெச்சுட்டு இருக்கேன்டி…” என்று கண்ணடிக்க…

“வெ… வெச்சுட்டு…” அவனைக் கடுப்பாகப் பார்த்துக் கூறிவிட்டு…” நீயெல்லாம் திருந்தவே திருந்தாத கேஸ்டா…” என்று எழுந்தவள், சட்டென்று திரும்பி…

“இவ்வளவு போராட்டம் அந்த வாமனனோட எதுக்கு? நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை போதாதா? நம்முடைய நிம்மதியை விட வீடு பெரிதா? அது வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆனதுங்க… அது நம் கூட வரப் போவதில்லை…”

அவனது கண்களை நேராகப் பார்த்து அவள் கேட்க, மெளனமாக அவளையே பார்த்திருந்தான்… அவளது கேள்வியின் பொருள் அவனுக்குப் புரிந்தது…

ஆனால் பதிலில்லை… பதில் கூறவில்லை… அதற்கான பதிலை அவன் கூறத் தலைப்படவில்லை…

அதற்கான பதிலைத் தேடித்தான் மூன்று வருடத்திற்கு முன்பு ஆலப்புழையை விட்டுச் சென்னை வந்தான்… அப்போது நிம்மதி என்ற ஒற்றை சொல் அவனுக்குப் போதுமானதாக இருந்தது… ஆனால் தனது நிம்மதியை விடக் காலம் காலமாகக் காத்து வரும் சில தர்மங்கள் மிகவும் முக்கியமல்லவா…

ஒவ்வொருவரின் பிறப்புக்கும் ஒரு அர்த்தம் இருந்தாக வேண்டும்… தன்னுடைய பிறப்பின் அர்த்தத்தை அனர்த்தமாக்கிக் கொள்ள அவன் விருப்பப்படவில்லை…

“இது வீடல்ல தமிழ்… வெறும் கல்லால் கட்டப்பட்ட கட்டிடமுமல்ல… எத்தனையோ தலைமுறைகளாக உயிரைக்கொடுத்து காத்து வந்திருக்கும் தர்மம்… முன்னோர்கள் காப்பாற்றி வந்த நியாயம்… அவர்கள் வைத்த நம்பிக்கை… அவர்கள் உயிராகக் காத்து வந்த கொள்கைகள்… நம் நிம்மதியை விட அந்தச் சில தர்மங்களை காப்பாற்றுவது முக்கியம் தமிழ்… நம்முடைய நிம்மதியை விட, சந்தோஷத்தைவிட, ஏன் உயிரைவிட முக்கியம் அந்தத் தர்மம்… நம்முடைய வாழ்நாளில் அந்தத் தர்மத்திற்கு ஒரு கெடுதலும் வந்துடக் கூடாது… நான் வாமனனுக்கு கொடுக்க மறுப்பதின் காரணம் என்னோட சுயநலத்தால் இல்லை… அவனின் சுயநலத்தால் தான்… அனைத்தையும் விட முக்கியமானது அந்தச் சில தர்மங்கள் தான்!” என்று முடிக்க,

அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்… அவளுக்கு இவையெல்லாம் புதிது… அவளைப் பொறுத்தவரை அத்தனையும் ஒரு வட்டத்துக்குள் தான்… அதைத் தாண்டி என்றுமே அவள் வெளிவந்ததில்லை… அவளுடைய தாய் லோகாம்பாள் வகுத்துக் கொடுத்த வட்டம் அது!

படிப்பும் வேலையும் கூட அந்த வட்டத்துக்குள் சதுரமாக அமைந்தது தான்… சற்றும் வெளிவராமல் கிடைத்த ஒன்று தான்… அதுவே அவளது வாழ்நாள் சாதனை… ஆனால் இவனைப் பார்க்கும்போது சில சமயம் பிரமிப்பாக இருந்தது… தன்னை சற்றும் கண்டுக்கொள்ளாதபோது எரிச்சலாகவும் இருந்தது…

அவளது மௌனமான பார்வையை உணர்ந்து… “அந்தத் தர்மத்தை காப்பாற்றத்தான் என்னுடைய பெற்றோர் இருவரையும் காவு கொடுத்தேன் தமிழ்… வாமனன் கிருஷ்ணன் கோவிலில் வைத்தே கொலை செய்தான்… இருவரையும்…”

முதன்முறையாக அவனது பெற்றோரின் இறப்பைப் பற்றிய உண்மையை அவளிடம் அவன் கூற, திடுக்கிட்டு அவள் பார்த்தாள்… அது அவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி! அவனது தாய் இல்லையென்று கூறினான்… ஆனால் அது… கொலையா?

அதிர்ச்சி தாள முடியாமல் வாயை மூடிக்கொண்டாள் தமிழ்…

“ஸ்ரீ…” அவனையே பார்த்துக் கொண்டிருக்க… அவனோ சற்றும் உணர்ச்சியைக் காட்டாமல் கற்சிலையை போல அமர்ந்திருந்தான்… வெகுவாக மரத்து போயிருந்தது அவனது மனது…

“எப்படி அவனைச் சும்மா விட்டீங்க?” உள்ளுக்குள் அவளுக்கே பொங்கியது கோபம்…

“ஸ்ரீதேவிக்காக…” கண்களை மூடிக்கொண்டு அவன் கூறினான்… உணர்வுகளைப் பிரதிபலிக்க விட முடியவில்லை அவனுக்கு! “உடன் பிறக்கவில்லை என்றாலும் அவள் என்னுடைய தமக்கை… அவனைத் திருமணம் செய்து கொண்ட பாவப்பட்ட பிறவி…” என்று வலியோடு கூறிவிட்டு…

“அதோடு ஒருவனுடைய மரணம் தான் நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் நாம் அவர்களிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள் தமிழ்… அவனைக் கொன்று நான் என்னுடைய வெற்றியைத் தேர்ந்துடுத்துக் கொள்ள மாட்டேன்… அவனும் இருக்க வேண்டும்… ஏன் தான் இருக்கிறோமோ என்று அவன் தினம் தினம் கதற வேண்டும்… இந்த மன முதிர்ச்சியை அடைய எனக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது… இனி அவனை நான் கதற வைப்பேன்…”

நிதானமாகக் கூறினாலும் அவனது வார்த்தைகள் அவளுக்குள் நடுக்கத்தை விதைத்தன… அவனது அந்த முகச்சுளிப்பைப் பார்த்துக் கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தவனை நெருங்கி அமர்ந்துக் கொண்டு அவனது கையைப் பற்றிக் கொண்டாள்… அவனை நிதானமாக்க வேண்டி!

“இங்கே கொட்டிக்கிடந்தாலும் அந்தப் பணம் தான் சாஸ்வதமான ரத்த உறவுகளைக் கூடப் பகையாக்கியது… சொந்த அத்தையையும் மாமனையும் கொலை செய்யச் சொன்னது… அத்தை மகனை ஜென்ம விரோதியாக்கியது… எல்லாவற்றையும் மீறி… காலம் காலமாகப் பாதுகாத்து வரும் தர்மங்களை சீர்குலைக்கச் சொன்னது…”

அவனது மன உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்…

“அரசியலும் என்னைத் தற்காத்துக் கொள்ள அல்ல தமிழ்… வல்லிய கொட்டாரத்தின் தர்மங்களை காப்பாற்ற…”

மனதின் வேதனைகளை முதன் முதலாக அவளிடம் மனம் திறந்துக் கூறியவனை ஆழ்ந்து பார்த்தாள்… இவனுக்கு என்ன இல்லை? எல்லாமிருந்தும் எதுவும் இல்லாதவனை போல ஏன் இந்த வேதனை? பணம் தான் முக்கியம் என்று குடும்ப உறவுகளைச் சிதைத்துக் கொள்பவர்களுக்கு மத்தியில் இப்படி தர்மத்தை காக்க வேண்டியே அத்தனை துன்பத்தையும் ஏற்கிறேன் என்று கூறும் இவனை என்னவென்று கூறுவது?

ஒரு புறம் அவனை நினைத்துப் பெருமையாக இருந்தாலும் மறுபுறத்தில் வாமனனை நினைத்துப் பயமாக இருந்தது… சொந்த அத்தையையே கொன்றிருப்பவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்? ஸ்ரீதரனின் பாதுகாப்பு?

நினைக்கும் போதே மனம் நடுங்கியது…

கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தவளின் கைகளின் நடுக்கத்தை உணர்ந்தவன், அவளது முகத்தைப் பார்த்தான்… அவனது பார்வையை மெளனமாக எதிர்கொண்டவள் வெளியில் அவளது உணர்வுகளைக் காட்டி அவனைக் குழப்பக் கூடாது என்று நினைத்தாலும்… அவளது கை நடுக்கம் காட்டி கொடுத்தது…

“பயமா இருக்கா தமிழ்?”

“ம்ம்ம்… உங்களுக்கு ஒன்னுமாகக் கூடாதேன்னு பயமா இருக்கு…” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீரோடு அமர்ந்திருந்த அவனது காதலியைப் பார்த்தவனுக்கு மனதுக்குள் கனமாக இருந்தது…

“எனக்கு ஒன்னுமாகாதுடா… அவனுக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்க…” என்று உணர்வும் இல்லாமல் கூற… அந்தத் தொனி அவளை மேலும் பயமுறுத்தியது…

“வேண்டாங்க… யாருடைய பாவமும் நமக்கு வேண்டாம்… நம்முடைய வாழ்க்கை நல்லா இருந்தா போதும்…” அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்க…

“ஷத்ரியனா பிறந்துட்டு, போர் வீரர்களோட மரபில் வந்துட்டு பாவம் புண்ணியத்துக்காகப் பயப்படறதா?” அவனது வார்த்தைகளில் ஏளனம் இருந்தது.

“கடவுளே… நீ தான் காப்பாற்றனும்…” அவனது கையைப் பிடித்துக் கொண்டே அவள் கூற, அவளது கண்களில் கண்ணீர்! அவளது தலையைத் தன் தோள்மேல் சாய்த்துக் கொண்டு, ஆதூரமாகத் தடவிக்கொடுத்தவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

“அழறது எனக்குப் பிடிக்காது தமிழ்… அதிலும் என்னுடைய அம்மா அழுது நான் பார்த்ததே இல்லை… அவர்கள் கம்பீரமானவர்கள்… இந்த மாளிகையின் தம்புராட்டியாக ஆட்சி செய்தவர்கள்… எந்த நேரத்திலும் அவர்கள் கலங்கியதே இல்லை… மரணத்தைக் கூடக் கம்பீரமாக வரவேற்ற பெண்மணி அவர்கள்… அவர்களுக்குப் பிறகு நீ… அதை நீ உணர்ந்துக் கொள்ள வேண்டும்…” என்று உறுதியாக அவன் கூற, அவள் மிரண்டு போய்ப் பார்த்தாள்… ஆனால் உள்ளுக்குள் அவனது தாயை நினைத்தபோது பெருமையாக இருந்தது.

எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க… அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான், இந்த உணர்வுகளை அவள் எவ்வளவு தூரம் தாங்குவாள் என்று அவனுக்குச் சரியாகப் புரியாதபோது மேலும் அவளைப் பயமுறுத்தக் கூடாதே!

“ஏன் தான் இவனை லவ் பண்ணமோன்னு பீல் பண்றியோன்னு நினைக்கறேன்…” அவளைச் சமாதானப்படுத்த வேண்டி வேண்டுமென்றே அவன் கள்ளப்புன்னகையோடு அவன் கூற… அது சரியாக ஒர்க் அவுட் ஆனது… தோள் வளைவில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள்…

“நினைப்ப நினைப்ப… எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி வேற என்னை நினைப்ப? உனக்கெல்லாம் உன்னை வெச்சு தாளிக்கறவ தான் சரி… கொழுப்புக் கொழுப்பு… அத்தனையும் கொழுப்பு…” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனைத் தள்ளிவிட்டு எழுந்துக் கொள்ள முயல…

“ஹேய் என்னடி அடிக்கடி மரியாதை தேயுது?” என்று அவன் சிரித்துக் கொண்டே அவளைத் தன்னை நோக்கி இழுக்க,

“ம்ம்ம்… போதும் போதும் இந்த மரியாதையே உங்களுக்குப் போதும்…” அவனிடமிருந்து தப்பிக்க பார்த்தாலும் சாட்டையாக நீண்டிருந்த தலைமுடியைப் பற்றி இழுத்து அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டான்…

“ஸ்ஸ்ஸ்… வலிக்குதுடா…” முடியை அவனது கையிலிருந்து பிரிக்கப் பார்க்க,

“அப்படியா…” என்றவன் கிறக்கமாக அவளைத் தன்னுடைய அணைப்புக்குள் கொண்டு வந்து “ஹேய் இங்க்லீஷ்ஷ்ஷ்…” என்று குரலைத் தழைத்தவன் கிசுகிசுப்பாக அவள் காதில் எதோ கூற, கண்களைத் திறந்து அவனைப்பார்த்தவளின் முகம் செவ்வானமாகச் சிவந்தது…

“யூ… யூ… ச்சீ…” கோபத்தோடு வெட்கமும் போட்டி போட அவனைத் தள்ளிவிட முயல, அவனோ விடாமல் தன்னோடு அணைத்துப் பிடித்தான்… அவனது மனம் வெகுவான அமைதியில் ஆழ்ந்திருந்தது அப்போது! அதன் காரணம் வேறென்ன? தமிழ்நதி மட்டுமே அல்லவா!

“ஏய் பிராடு… என்ன பண்ற?” இடையில் கோலமிட்ட அவனது கைகளைத் தள்ளிவிட முடியாமல் அவள் நெளிய…

“என்ன பண்ணலாம் இங்கிலீஷ்…” என்று மயக்கமாக அவன் கேட்க…

“ஒன்னும் பண்ண வேண்டாம்… நீங்க உங்க வேலையப் பாருங்க… நான் என் வேலையப் பார்க்கறேன்… உங்களுக்கு மட்டும் இந்தக் கொலஸ்ட்ரால எக்கச்சக்கமா வெச்சு பேக் பண்ணி அனுப்பிட்டாங்க போல இருக்கு… அதுவும் இந்த மவுத் கொலஸ்ட்ரால்…” என்று அவள் உதட்டைச் சுளித்து விட்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழ,

“என்னோட இப்போதைய வேலை இதுதான்…” என்று அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“ஹப்பா… வேண்டாம் சிரிக்காதீங்க… வில்லன் மாதிரியே இருக்கு…” நின்று கொண்டு இடுப்பில் கைவைத்துக் கொண்டுக் கூற… அவளை ரசனையாகப் பார்வையிட்டான்…

“அடிப்பாவி… ஹீரோவா நினைக்க வேண்டியவனை வில்லனா ஆக்கிட்டியே…”

“நீங்க ஹீரோ வேலையா பண்றீங்க? அத்தனையும் வில்லத்தனம்…” உதட்டைச் சுளித்துக் கொண்டு அவள் கூற,

“வில்லத்தனமா? இனிமே தான்…” என்று எழவும், கைப்பேசி அழைக்கவும் சரியாக இருக்க, எடுத்தவனின் முகம் மாறியது…

அதுவரை இருந்த இலகுவான மனநிலை மாறி இறுக்கமாகப் பேச ஆரம்பித்தான். பேச்சுவார்த்தை முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது…

“திருமணம் என்னுடைய தனிப்பட்ட நிகழ்வு… அதற்கு உங்கள் அனைவரின் அனுமதியும் கண்டிப்பாகத் தேவைதான் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக என்னுடைய மனதுக்கு பிடித்தவளை விட்டுக் கொடுத்து விட முடியாது…”

அந்தப் பக்கமிருந்து என்ன பதில் வந்ததென்று அவளுக்குத் தெரியவில்லை… ஏதோ தன்னை மையப்படுத்திய பிரச்சனை என்பது வரை அவளுக்குப் புரிந்தது… அவன் தனிமையில் பேசட்டும் என்று அவள் விலகிப் போக முயல… அவன் அவளது கையைப் பிடித்துத் தன்னுடன் வைத்துக் கொண்டே அவன் தொடர்ந்து பேசினான்.

“நீங்கள் அனைவரும் பெரியவர்கள்… எனக்குக் கண்டிப்பாக வழி காட்ட வேண்டியவர்கள்… எனது தாய் தந்தைக்குப் பின் உங்கள் அனைவரின் ஆதரவும் கண்டிப்பாக எனக்குத் தேவை… ஆனால் திருமணம் என்னுடைய விருப்பம் தான்… ஸ்வர்ணலக்ஷ்மியை நான் அதுபோல நினைக்கவில்லை… அப்படி எதுவும் இருந்திருந்தால் கண்டிப்பாக நான் உங்களிடம் கூறியிருப்பேன்… எனக்கான பெண்ணை நான் முடிவெடுப்பது தவறில்லையே… இதில் பாரம்பரியம் எதுவும் பாதிக்கப்படாது… ஆலோசித்து விட்டு நல்ல முடிவாகச் சொல்லுங்க…”

என்று இடைவெளி விட, மறுப்பக்கம் கூறிய பதிலை அடுத்து,

“நாளைத் தேர்தல் முடியட்டும்… இது சம்பந்தமான முடிவுகளை அதன் பின் எடுக்கலாமே… இப்போதைக்கு வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியாது… அதுவரை பெரியவர்கள் அனைவரும் ஆலோசித்து விட்டுப் பிறகு எனக்கு வழிகாட்டுங்க…” என்று முடித்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகம் முன் எப்போதையும் விட இறுக்கமாக இருந்தது…

“என்னாச்சு ஸ்ரீதர்?” அவளது குரல் வெகுவாக உள்ளே சென்றிருக்க, வார்த்தைகள் வெளிவர மறுத்தன… அவன் தானும் புரிந்துகொள்ள வேண்டிதான் ஆங்கிலத்தில் உரையாடியது புரிந்தது…

அவனிருக்கும் நிலையில் அத்தனைப் பெரியவர்களையும் எதிர்த்துப் பேசிவிடவும் முடியாது அதே சமயத்தில் அவர்களின் எதிர்ப்பையும் ஒப்புக்கொள்ள முடியாது… அவர்கள் கூறியதற்கு முழுவதுமாக ஒப்புக்கொள்ளாமல் தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் என்றுக் கூறி சமாளித்தான்…

அவன் எதிர்ப்பு வருமென்று நினைத்திருந்தாலும் இவ்வளவு விரைவில் அதுவும் திருவிதாங்கூரிலிருந்து வருமென்று நினைத்திருக்கவில்லை.

அப்போதுதான் அவன் அதைக் கூறினான்.

அவன் கூறியதை கேட்டவள் அதிர்ந்து நின்றாள்!

ரத்தத்தின் நிறம் ஒன்றே என்பவன் ஏமாளி… நீலத்துக்கும் சிவப்புக்குமான வேற்றுமையை அன்று தான் முழு வீச்சோடு உணர்ந்துக் கொண்டாள்.