Tamil Novel Chakraviyugam 25

25

“ஸ்ரீதரன் வெர்மா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் கேரள அரசின் அமைச்சராகவும், உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்புமின்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், என் தாய் தந்தை மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

ஸ்ரீதரன் வெர்மா என்னும் நான் கேரள அரசின் அமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்தப் பொருளையும் அமைச்சரின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று எனது தாய் தந்தை மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்…”

கேரளத்தின் கவர்னர் பதவிப்பிரமானமும் ரகசிய காப்புப் பிரமானமும் செய்து வைக்கக் கேரள அரசின் சமூகநலத் துறை மற்றும் தேவசம்போர்டுகளின் அமைச்சராக ஸ்ரீதரன் வெர்மா பொறுப்பேற்றுக் கொண்டான்…

மனம் மகிழ்ச்சியில் ஆர்பரிக்க வேண்டிய நேரம் தான் ஆனாலும் ஏதோ ஒரு அமைதியில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலைக்காக அவன் என்றுமே ஆசைப்பட்டதில்லை… பார்க்கப் போனால் எதுவுமே வேண்டாமென்று தான் சென்னைக்கும் சென்றதே… ஆனால் காலம் தன்னை இங்கேயே இழுத்து வந்து அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது என்றால் அதற்குரிய மரியாதையை தான் செலுத்தியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்…

எத்தனை எத்தனை சூழ்நிலைகளைத் தாண்டி இந்த இடத்திற்கு தன்னை காலம் அனுப்பியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டான்… தான் போட்டியிட அவனது தரப்பிலிருந்து முன் வைத்த ஒரே கண்டிஷன் தன்னை தேவசம்போர்டுகளின் அமைச்சராக்க வேண்டும் என்பதுதான்… அதை ஒப்புக்கொண்டு தான் ஸ்ரீதரனை தங்களது கட்சிக்கு அழைத்தனர்…

ஏனென்றால் அந்தப் பகுதி என்று மட்டுமல்ல… கேரளம் முழுவதிலும் அவர்களுடைய குடும்பத்திற்கு அவ்வளவு மதிப்பு இருந்தது… திருவிதாம்கூருக்கு அடுத்து மாவேலிக்கரா வல்லிய கொட்டாரம் பெயர் பெற்றிருந்தது… அவர்களுடைய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வருவது புதியது இல்லை என்றாலும் சாக்தரோ சுதர்சனரோ பதவிகளுக்கு ஆசைப்படவில்லை…

அவர்களுடைய வாழ்நாளை அமைதியாகக் கிருஷ்ணர் சேவையில் கழித்து விடத்தான் எண்ணியிருந்தனர்… ஆனால் பல சதிராட்டங்கள் அவர்களது வாழ்க்கையை முடித்து விட்டது, எண்ணியதற்கு மாறாக!

வாமனன் உருவில்!

இப்போதும் அவனைச் சமாளித்து கிருஷ்ணர் கோவிலைக் காக்க வேண்டியே ஸ்ரீதரனின் இந்த அரசியல் பிரவேசமும்… தந்தையின் பெரும்போக்கையோ ஏமாளித்தனத்தையோ தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்பதை வாமனனுக்கு அழுத்தம்திருத்தமாக உணர்த்தியிருந்தான்.

ஏனென்றால் தேர்தலையும் கூட அமைதியாக நடத்த விடவில்லை வாமனன்… தான் தோற்பது உறுதி என்பது தெரிந்ததாலோ என்னவோ பெரும் ரவுடிப் படைகளை இறக்கியிருந்தான்… அவர்களைச் சமாளிக்க ஸ்ரீதரனும் அவனது ஆட்களை இறக்கவேண்டி இருந்தது… பல இடங்களில் வாமனனின் ஆட்கள் வேண்டுமென்றே அடிதடியில் இறங்கினர்…

அந்த இடங்களில் எல்லாம் ஸ்ரீதரனின் ஆட்கள் முதலில் பொறுமையை கடைப்பிடித்துவிட்டு, இறுதியாகத்தான் திருப்பி அடித்தனர்… அதுவும் பல இடங்களில் பொதுமக்களும் சேர்ந்து வாமனனின் ஆட்களைத் துரத்தி விட்டனர் என்று தான் கூற வேண்டும்… அதாவது பொதுமக்கள் என்ற போர்வையில் வாமனனின் ஆட்களைத் துரத்தியது ஸ்ரீதரனின் ஆட்கள்…

இதனால் கெட்டு போயிருந்த வாமனனின் பெயர் இன்னமுமே கெட்டுப் போனது… ஆனாலும் அவன் அடங்கவே இல்லை… தேர்தல் தினத்திலும் கூட வாக்கு பூத்துக்களை தன் கட்டுபாட்டில் கொண்டு வர முயன்று ஸ்ரீதரனின் தரப்பால் தோற்று போயிருந்தான்… பல வழிகளில் முயன்று கொண்டிருந்த வாமனனை ஸ்ரீதரனே சட்டைக் கையை ஏற்றி விட்டுக் கொண்டு நேரடியாகப் பூத்துகளுக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு கண்காணிக்க வேண்டியிருந்தது…

ஒரு பூத்தையும் விடாமல் நேரடியாகப் போய் அமர்ந்தான்… ராஜீவோடு! பணிக்கரும் மற்ற கட்சினரும் சேர்ந்துக் கொள்ள, தேர்தல் நாளில் ஒரு நிமிட நேரமும் விடாமல் கண்காணித்தனர்…

மாவட்ட நிர்வாகம் ஸ்ரீதரனுக்கு பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்தது… வாமனனால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களை அடக்கி, ரவுடித்தனம் செய்தவர்களை எல்லாம் ஒடுக்கியது…

இதிலும் வாமனன் பெரிதாக அடிப்பட்டுப் போனான்…

அவன் செய்த அத்தனை அராஜகத்தையும் ஒவ்வொரு நிலையிலும் எதிர்கொண்டு எதிர் தாக்குதல் கொடுத்து ஒருவாறாகத் தேர்தல் முடிந்த பின் தான் சற்று ஓய்வாக அமர முடிந்தது ஸ்ரீதரனால்!

வாஸந்தியின் கணவனும் கூட,

“கொஞ்சம் ரெஸ்ட் எடு ஸ்ரீ… நாங்க இருக்கோம்ல… அவன் கண்ணுல விரலை விட்டு ஆட்டிட மாட்டோமா?” என்று ஆற்றாமையுடன் கேட்க… சோர்வாகப் புன்னகைத்தான். இருவரும் நீ வா போ என்று அழைத்துக் கொள்ளுமளவு நெருக்கமாகியிருந்தனர்…

“அவன் உனக்கெல்லாம் அப்பன் சகலை… எந்த ஒட்டைக்குள்ளவும் போயிட்டு வந்துடுவான்…” என்று சிரிக்க,

“நம்ம ஸ்டாமினாவையும் குறைச்சு எடை போடாத சகலை… விட்டு ஓட்டிற மாட்டோம்…” என்று பதிலுக்குச் சிரித்தவன், அதைச் செயல்படுத்தியும் காட்டியிருந்தான். வாமனனின் ஆட்களின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கியிருந்தது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த காவல்துறை…

தேர்தல் முடிவு வரும் நாளில் காலையிலேயே கிளம்பி மாவேலிக்கரா கிருஷ்ணர் கோவிலுக்கு வந்துவிட்டான் ஸ்ரீதரன்… தமிழ்நதியுடன்!

மனம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது…

வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது இந்தக் கிருஷ்ணரின் விருப்பமே என்ற நிலையிலிருந்தான்.

மெளனமாக கோவிலைச் சுற்றிவிட்டு உன்னியிடம் சென்றான்.

அவனை பாசமாகத் தும்பிக்கையால் தன்னோடு வளைத்துப் பிடித்துக் கொண்டது உன்னி. தமிழ்நதி தான் பயந்துவிட்டாள்… அவ்வளவு பெரிய

யானை அவனை வளைத்துக் கொண்டபோது அவளது இருதயம் நின்று பின் துடித்தது.

“ஹேய் தமிழ்… இவனைப் பார்த்தா பயப்படுற? உன்னி என்னோட செல்ல நண்பன்…” என்று உன்னியின் தும்பிக்கையை கட்டிக் கொண்டவனை விநோதமாகப் பார்த்தாள்…

“ஹையோ எனக்குப் பயமா இருக்கு…” உன்னியின் அருகில் செல்லப் பயந்துக்கொண்டு அவள் தள்ளிப்போக,

“அட பயந்தாங்கொள்ளி… இவன் உன்னை ஒண்ணுமே பண்ண மாட்டான்… ரொம்ப நல்லவன்…” என்று அவளை ஆற்றுப்படுத்த முயல… அவளது நடுக்கமோ குறையவே இல்லை…

“ம்ஹூம்… முடியாது…” அவள் மேலும் தள்ளிப்போக…

“ஒரு நிமிஷம் என்னை விடுடா உன்னி… அவளை இழுத்துட்டு வரேன்…” என்று மலையாளத்தில் அவனிடம் கூறிவிட்டு தமிழ்நதியை நோக்கி வந்தவனைப் பார்த்து,

“வேண்டாம்… நான் வரமாட்டேன்… எனக்கு யானைன்னா சின்ன வயசுல இருந்தே பயம்…” அழாத குறையாக அவள் கூற,

“இங்கிலீஷ்… அவன் யானையே இல்லைன்னு நினைச்சுக்க… எனக்கு ஒரு தம்பி இருந்தா அவன்ட்ட பேச மாட்டியா? அது மாதிரி நினைச்சுக்க… அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சுருக்காம்…” என்று அவளது கையைப் பற்றிக்கொண்டு அழைக்க, அவனிடமிருந்து விடுபட முயன்றுக்கொண்டே,

“ம்ம்ம் உங்க கிட்ட சொல்லுச்சாக்கும்? உடான்சை பாரு…” என்று அவள் பயந்துக்கொண்டே நொடிக்க,

“அவன் பேசற பாஷை எனக்குப் புரியும்… நான் பேசறது அவனுக்குப் புரியும்… அவ்வளவு தோஸ்த்தும்மா எனக்கு அவன்…” என்று அவன் சிரிக்க,

“அடப்பாவி… இன்னும் யார் யாரெல்லாம் உங்க ப்ரெண்டு?” அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

“இருக்காங்க… எல்லாரையும் இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்… இப்ப அவன்ட்ட வந்து ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடு… பாரேன் எவ்வளவு ஏக்கமா பார்க்கறான்…” என்று உன்னியை காட்டி தமிழ்நதியிடம் கூற, அவளுக்குத்தான் உன்னியின் பாஷைப் புரியவில்லை… ஆனாலும் ஸ்ரீதரனின் கையைப் பிடித்துக்கொண்டே அவனருகில் செல்ல… உன்னி அவளையும் பாசமாக அணைத்துக் கொள்ளப் பார்த்தது…

“ஹய்யோ… எனக்குப் பயமா இருக்குங்க…” என்று ஸ்ரீதரனை இறுக்கி கட்டிக்கொள்ள…

“அவன் ஒன்னும் பண்ண மாட்டான்… உன்னைக் கொஞ்சறான்…” என்று தமிழ்நதிக்கு அவனைப் புரியவைப்பதற்குள் ஸ்ரீதரனுக்கு தான் தொண்டை காய்ந்துவிட்டது.

ஒரு வழியாக இருவரையும் பேச வைத்துச் சமாதானப்படுத்தி, அவள் கையால் கரும்பினை எடுத்துக்கொடுத்து அவளைக் கொடுக்க வைத்துவிட்டுத்தான் கொட்டகையை விட்டு வெளியே வந்தான்… தமிழ்நதிக்கும் பயம் சற்றுபோய் மகிழ்ச்சியாக இருந்தது… செல்லப் பிராணிகளை வளர்த்தெல்லாம் அவள் பழகியதில்லை… அவளது அப்பத்தா கோழி ஆடு என்று வளர்ப்பார்… ஆனாலும் அவள் அதனிடம் சென்றதுமில்லை…

இப்போது அதற்கு மாறாக யானையைச் செல்லமாக வளர்க்கும் ஸ்ரீதரனை பார்த்து அவளுக்கு வியப்புத்தான் ஏற்பட்டது…

எதிர்படும் அனைவரும் ஸ்ரீதரனை அவ்வளவு மரியாதையாக வணங்கிவிட்டு போக, தமிழ்நதிக்கு ஒருமாதிரியாகத்தான் இருந்தது…

“நான் அன்னைக்கு உங்களுக்கு டிபன் வாங்கிக்க சொல்லிப் பணம் கொடுத்தேனே… அப்ப என்ன நினைச்சீங்க?” வெகுநாட்களாக உறுத்திக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள். திரும்பி அவளைப்பார்த்தவன்,

“ஏன் கேட்கற?” என்று குறும்பாகச் சிரிக்க,

“இல்ல சொல்லுங்க… நீங்கத் தான் இம்புட்டு பெரிய அப்பாட்டக்கர்ன்னு எனக்குத் தெரியல…” என்று உதட்டைச் சுளித்துக் கொண்டு அவள் கேட்க,

“முதலில் ஒன்றை தெரிந்துக் கொள் தமிழ்… நீ என்னோட மனைவியாகப் போகிறாய்… நான் உன்னோட கணவனாகப் போகிறேன்… இதை நல்லா மனதில் பதிந்து வைத்துக்கொள்… இனி இந்தத் தகுதி அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காதே…” என்று உறுதியாகக் கூற,

“அது இருக்கட்டும்… நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க…” அவள் விடாப்பிடியாகக் கேட்க…

“சிரிப்பு தான் வந்தது தமிழ்… அவ்வளவுதான்… அதுவொன்றும் எனக்குப் புதிதும் இல்லையே… டிரைவர் வராவிட்டால் நாம் தான் போயாக வேண்டும்… அப்போது இது எனக்குச் சகஜம் தான்…” என்று மிகவும் இயல்பாகக் கூற… திரும்பி நின்று அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்.

என்னவென்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க…

“ரியலி யூ ஆர் இம்பாசிபிள்… இவ்வளவு எளிமையை எங்குக் கற்றுக்கொண்டீங்க? இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் உங்களுக்கு அந்த உணர்வு கொஞ்சம் கூட வரவில்லையா?” வியந்து போய் அவள் கேட்க,

“எளிமை என்னுடைய தாயும் தந்தையும் எனக்குச் சொல்லித் தந்தது தமிழ்… அவர்கள் இறுதி வரை அதைக் கடைப்பிடித்தார்கள்… அதுவே எனக்கும் பழகிவிட்டது… அதோடு அனைத்துமே கிருஷ்ணருக்கு அர்ப்பணம் என்று சொல்லியே என்னை வளர்த்தார்கள்… பின் நான் எப்படி இருப்பேன்?” என்று அவன் கேட்க,

அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்…

அவன் சிரித்துக் கொண்டான்… அதன் பின் நிதானமாகக் கோவிலைச் சுற்றி வந்தவிட்டு கர்ப்பக் கிரகத்தின் முன் அமர்ந்துக் கொண்டான்.

அவனது முகத்தில் அமைதி மட்டுமே… சற்றும் பதட்டமில்லை…

தமிழ்நதிக்கு தான் பக் பக்கென்று இருந்தது… இது போன்ற சூழ்நிலைகளை அவள் சந்தித்ததே இல்லையே… அவன் எவ்வளவு செலவு செய்தான் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது… அவன் கூறியதுமில்லை… ஆனால் அவ்வளவு உழைப்பை இந்த நாட்களில் அவள் கண்டிருக்கிறாள்…

அதன் பின் மௌனம் பாதி பேச்சு பாதியாக அங்கேயே நேரம் கழிந்தது…

கைப்பேசி அழைத்தது… ராஜீவ் தான் அழைத்திருந்தான்.

“தும்போளி, கொம்மாடி, பூந்தோப்பு வார்டுகளில் ரிசல்ட் வந்து கொண்டிருக்கிறது… நாம் லீடிங்கில் இருக்கிறோம்…” சொன்னவனின் குரலில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அமைதியாகக் கேட்டுக்கொண்டான் ஸ்ரீதரன். சற்றும் ஆர்பாட்டமில்லை.

“பைன் ராஜீவ்…”

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குத் தங்களது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தான்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீதரனின் பிரதிநிதியாக ராஜீவ் இருந்தான்…

ஜோசும் ஸ்ரீதரும் ஆலப்புழை முழுக்க அலைந்துக் கொண்டிருந்தனர்… எங்கும் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் இருப்பதை அவர்கள் உறுதி செய்தாக வேண்டுமே… ஒரு ரவுண்ட்ஸ் போய்விட்டு அதன் பின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க அவர்கள் அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும்…

ஸ்ரீதரை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான தேர்தல்… அவனுக்குமே இதுப் பெரிய பயிற்சி என்பதோடு, எதிர்காலத்தில் தன்னுடைய உறவினனாகப் போகும் ஸ்ரீதரனின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகும் தேர்தல்… வாமனனின் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டு வரப்போகும் தேர்தல் அல்லவா!

பதட்டத்தோடு தான் அவன் அலைந்துக் கொண்டிருந்ததும்.

பள்ளத்துருத்தி, முல்லக்கால், பழவீடு வார்டுகளின் முடிவுகள் வந்துக் கொண்டிருந்தது…

பள்ளத்துருத்தி, முல்லகாலில் ஸ்ரீதரனும் பழவீட்டில் வாமனனும் லீடிங்கில் இருந்தனர்…

கடைசியாக ஆராட்டுவழி, கஞ்சிரம்சிராவை எண்ணுவதற்காக எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களை திறந்த போதே ஸ்ரீதரன் வெகுவாக முன்னேறி இருந்தான்… கிட்டத்தட்ட சந்தேகமில்லாத இமாலய வெற்றிதான் அது…

கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச வாக்குகள் கொண்ட ஆலப்புழா சட்டசபை தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் வாங்கி ஸ்ரீதரன் அந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தான்.

அவன் சார்த்த கட்சியும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது…

காரணம் வாமனனின் ஊழல்களைத் தொடர்ந்து ஸ்ரீதரன் தரப்பு முயற்சி மேற்கொண்டு வெளிப்படுத்தியிருந்த மற்றவர்களின் ஊழல்கள்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதமென்றால், வெளியாகிய ஊழல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன…

அனைத்துக்கும் பின்னணியில் ஸ்ரீதரன் இருந்தான்… அதற்கான நன்றிதான் அவனுக்குக் கிடைத்த அமைச்சர் பதவி!

அன்றுமாலையே, அவன் அமைச்சராக அறிவிக்கப் பட… அவனது தரப்பில் கொண்டாட்டம் களைக் கட்டியது… அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஸ்ரீதரன் மட்டுமே!

அவனது முகத்தில் தெரிந்த ஆழ்ந்த அமைதியை பார்த்த தமிழ்நதிக்கு அவனது அந்த இயல்பு பெரும் வியப்பைக் கொடுத்தது…

“எப்படி இப்படி உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியுது?”

“நான் உணர்ச்சிவசப்படவில்லை என்று யார் சொன்னது?”

“கொஞ்சம் கூடக் காட்டிக்கவே இல்லையே…”

 “எனது உணர்வுகளைப் பொதுவில் காட்டுவதில்லை என்று எப்போதோ முடிவு செய்து விட்டேன் தமிழ்… தனி அறையில் இந்தக் கேள்வியைக் கேள்… பதில் சொல்கிறேன்…” என்று அவன் புன்னகைக்க… அவளது முகம் சிவந்தது…

“அதோடு… இந்த நேரத்தில் எனது அன்னையும் தந்தையும் அவர்கள் பிணமாக இந்தக் கோவிலிலிருந்து கொண்டு வந்ததும் தான் நினைவுக்கு வருகிறது…”

எங்கோ பார்த்துக்கொண்டு அவன் கூறியதை அதிர்ச்சியுடன் பார்த்தாள்… அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை… பதில் பேசாமல் அவனது கைகளைப் பிடித்துக் கொள்ள, மூச்சை இழுத்து விட்டுத் தன்னை சமன்படுத்திக் கொண்டான்…

“அவங்க ஆத்மா இங்க எங்கேயோ தானே தமிழ் இருக்கும்? இந்த நேரத்தில் அவங்களோட இருக்கறதுதானே நியாயமும் கூட… என்னோட வெற்றிகளைப் பார்த்து அவங்களைத் தவிர வேற யார் சந்தோஷப்பட்டுட முடியும்? அதனால் தான் அவர்களோட கடைசி மூச்சு கலந்து இருக்கும் இந்தக் கோவிலைத் தேடி இப்போது வந்துட்டேன்…”

இப்போது அவளுக்குப் புரிந்தது… அவன் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கிறான் என்பது!

வெளியே அவ்வளவு அமைதியாகக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவனது தாய் தந்தைக்காகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் புரிந்தது… அவனைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,

“நீங்க முதல்ல சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருது…” என்று இடைவெளி விட்டவள்,

“நாம் எல்லோருமே ஒரு முகமூடியை விரும்பித்தான் போட்டுக்கறோம் இல்லையா? முகமூடி உண்மையா? முகம் உண்மையா? என்றெல்லாம் கேட்கக் கூடாது தானே… கடல் அமைதியா இருப்பது போலத் தோன்றினாலும் அதன் ஆழமும் ஆக்ரோஷமும் அதன் இன்னொரு முகம் அல்லவா…” என்று மீண்டும் அவள் இடைவெளி விட…

“ஆமாம் தமிழ்… ஆனால் நம்முடைய முகமூடிகள் எப்போதுமே நமது முகமாகிவிடாது… ஒவ்வொரு இடத்துக்குத் தகுந்தார் போல முகமூடிகள் வேண்டுமானால் மாறுபடலாம்… அவை உண்மையாகவும் இருக்கலாம்… ஆனால் முகங்கள் மாறுபடாது… அவை சாஸ்வதம்…” என்று முடிக்க, தமிழ்நதி புன்னகைத்தாள்.

இதுதான் ஸ்ரீதரன்.

ஸ்ரீதரனின் பதவியேற்பு விழாவில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கண்களில் நீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழ்நதி… அருகில் வாஸந்தி!

வாஸந்தியின் கணவன் தான் பக்குவமாக விஷயங்களைத் தன்னுடைய மனைவியின் வீட்டினருக்கு எடுத்துக் கூறினான், தேர்தல் முடிவுக்கு முன்னரே! கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியை தாண்டி, சுந்தரமும் அவரது தம்பியும் ஒப்புக்கொள்ளாமல் கோபத்தில் கத்த, ஸ்ரீதர் தான் சமாதானப்படுத்தினான்.

“எல்லாம் படிக்க வெச்ச திமிர் தானே அவளுக்கு… என்ன பண்ணினாலும் அப்பா கண்டிக்க மாட்டாங்கன்னு தைரியம்… இதைக் கூட அவ நேர்ல வந்து கேட்க முடியாதாமா?” கோபத்தில் சுந்தரம் கொதிக்க,

“இல்ல மாமா… அங்க கொஞ்சம் நிலைமை சரியில்லை… தமிழை தனியா எங்கயுமே விடறது ரிஸ்க்…” என்று தயங்கிக்கொண்டே கூற,

“ரிஸ்க்ன்னா?” அதிர்ந்து போய் அனைவரும் பார்க்க…

“அங்க தம்புரானுக்கு எதிரா இருக்கவங்களால நம்ம தமிழுக்கு கொஞ்சம் ஆபத்து… அதனால் தான் தம்புரான் தமிழை இப்ப ஆலப்புழைல பாதுகாப்பா இருக்க வெச்சுருக்காங்க… சீக்கிரமா சரி பண்ணிடுவோம் மாமா…”

“தம்புரான்னா… யாரை சொல்றீங்க தம்பி?” அதிர்ந்து போய் சுந்தரம் கேட்க…

“என்னோட கல்யாணத்துக்கு வந்தாரே… மாவேலிக்கரா கொச்சு தம்புரான்…” தயங்கியவாறே அவன் கூற, அனைவரிடமும் வெகுவான அதிர்ந்த பார்வை…

“அதான் வாசுன்னு அவ்வளவு தெரிஞ்ச மாதிரி சொன்னாரா?” வேளை கெட்ட வேளையாக வாஸந்தி உளறி வைக்க… சித்ரா முறைத்தார்…

“அவ்வளவு பெரிய இடத்துக்கு எல்லாம் என் பொண்ணைக் கொடுக்க முடியாது தம்பி… கொடுத்துட்டு உறுக்குன்னு இருக்க முடியாது… கஷ்டமோ நஷ்டமோ நமக்குள்ள இருந்துக்கனும்… நம்ம பயலுகளுக்கு மட்டும் தான் கொடுப்பேன்…” சுந்தரம் உறுதியாகக் கூற, அவரது பேச்சை லோகா மறுக்கவில்லை… ஆனால் தன் பெண்ணிடம் தங்களது இந்த வார்த்தை எவ்வளவு தூரம் எடுப்படுமென்று அவருக்குத் தெரியவில்லை…

அதே உணர்வோடு சித்ராவை பார்க்க, அவருக்குமே இதே எண்ணம் என்பது புரிந்தது… ஆனால் எதுவும் மறுத்தும் பேச முடியாத நிலையிலிருந்தார்… ஆண்கள் பேசும்போது பெண்கள் பேசக் கூடாது என்பது அங்கு எழுதப்படாத சட்டம்…

“அண்ணா… தமிழுக்கு பிடிப்பில்லாமையா உசுர உட்டுர முடிவு பண்ணுச்சு? அது முடிவு பண்ணதுக்கு அப்புறம் நாம பேசறது சரி கிடையாது…” என்று சந்திரன் எடுத்துக்கூற,

“அதுக்காக நம்ம புள்ளைங்களுக்கு நல்லது கெட்டது நாம சொல்லக் கூடாதா? அதுங்க முடிவு பண்றதெல்லாம் சரின்னு சொல்லிட்டு போகச் சொல்றியா?” இப்போது சுந்தரம் அவர்மேல் பாய,

“இருக்கட்டும்… அந்தப் பையன் நேர்ல வரட்டும்… அப்புறமா பேசிக்கலாம்…” என்று தன் அண்ணனிடம் கூறிவிட்டு… ஸ்ரீதரின் புறமாகத் திரும்பி…

“இப்ப பொண்ணை வரச் சொல்லுங்க… இப்பவே பொண்ணை அங்க விட்டு வைக்கறது எங்களுக்கு அசிங்கம் தம்பி… எதுவா இருந்தாலும் நாங்க பாத்துக்குவோம்… நம்ம பயலுக எதுக்கு இருக்கானுங்க… நம்மளை விடத்தான் அங்க பாதுகாப்பு இருந்துட போகுதா?” என்று தனது மாப்பிளையை பிடித்து அவர் எகிற,

“இல்ல மாமா… இப்போதைக்கு தம்புரான் இங்க வர்றது கஷ்டம்… அங்க எலெக்ஷன் வேலை இருக்கு… எலெக்ஷன் ரிசல்ட்டை எதிர்பார்த்துட்டு இருக்கோம்…”

ஸ்ரீதர் கூறியது யாருக்கும் புரியவில்லை… என்ன எலக்ஷன்? என்ன ரிசல்ட்? என்ற குழப்பம் அனைவரின் மனதிலும்…

“என்ன எலக்ஷன் தம்பி?” என்று சுந்தரம் கேட்க…

“தம்புரான் இந்த எலக்ஷன்ல நிக்கறார்…” அவனுக்குத் தயக்கமாக இருந்தது… இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று!

சுந்தரத்திற்கு நெஞ்சு வலிக்கும் போல இருந்தது… அவ்வளவு அழுத்தம் கூடியது மனதினுள்…

“என்ன தம்பி சொல்றீக? அரசியல்ல இருக்க பையன் நமக்கு ஒத்துவருவாரா? அதையும் எப்படி தம்பி நம்ம தமிழ் நம்புச்சு?” விட்டால் புலம்பித்தள்ளி விடுவார் போல… அவர் கூறியதை கேட்டவன்,

“இல்ல மாமா… எனக்கு நல்லா தெரியும் அவரையும் அவரோட குடும்பத்தைப் பற்றியும்… ரொம்ப நல்ல மனிதர்… அவரை மாதிரி ஆட்களைப் பார்க்கறது ரொம்ப ரேர் மாமா… இன்னும் எங்க கலெக்டரை விட்டா அவரோட புகழை பாடிகிட்டே இருப்பார்… தமிழ் தவறானவரை சூஸ் செய்யல…” என்று மனதார அவன் கூறியதை கேட்டவருக்கு மனம் கசிந்தது.

“நீங்களும் தான் மாப்பிள்ளை எவ்வளவு நல்ல மனிதர்… எதையுமே மனதில் வெச்சுக்காம தமிழுக்கே இப்படி சப்போர்ட் பண்றீங்க பாருங்க… எங்க வாசுவும் கொடுத்து வெச்சவ தான்…” சுந்தரம் மனம் கசிந்துக் கூற,

“ஸ்ரீதரன் வெர்மா என்னோட ப்ரென்ட் மாமா…” அவன் பெருமையோடுக் கூறினான்.

அதே பெருமையோடு பதவியேற்பு விழாவுக்கு வாஸந்தியையும் புகழேந்தியையும் அழைத்துக் கொண்டு போனான்… அனைவருக்குமே

தலை கொள்ளாத பெருமைதான் தான் என்றாலும் பதவியேற்பு விழாவுக்கு வர மறுத்துவிட்டனர்…

ஸ்ரீதரன் வெர்மாவும் கைப்பேசியில் அழைத்தான்…

“எல்லாரும் வாங்க மாமா… ராஜீவ் எல்லா அரேஞ்ச்மென்ட்சையும் பண்ணிடுவார்… கூடவே ஸ்ரீதரும் இருக்கார்… நாங்க எல்லாரும் பார்த்துக்குவோம்…” என்று அழைக்க,

“கொண்டான் கொடுத்தான் வீட்டுக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்து சாப்பிடறது முறை இல்ல தம்பி… எல்லாம் முடிச்சுட்டு நீங்க வாங்க… உட்கார்ந்து பேசி விசேஷம் வெச்சுட்டு அப்புறமா வர்றோம்… என்று அவர் உறுதியாகக் கூற,

“தமிழ் தான் ரொம்ப புலம்பறா… உங்களையெல்லாம் நினைச்சு… அவ எதுக்குமே காரணம் இல்லை… என்னை மன்னிக்கணும் நீங்க… நிலைமை அப்போ சரியில்லை… அதான் அவளை இங்கயே இருக்க வைக்க வேண்டியிருந்தது…” அவரிடம் நேரடியாக விஷயத்தைக் கூறி மன்னிப்பும் கேட்க… அவர் உண்மையில் உருகித்தான் போனார்.

“சரிங்க தம்பி… ஆனா இனிமேலாச்சும் கொஞ்சம் பொண்ணை இங்க அனுப்பி வைக்கலாம் இல்லையா?” ஆற்றாமையுடன் அவர் கேட்க…

“புரியுது, ஆனா இன்னும் நிலைமை கொஞ்சம் சரியாகலை… அவளை அங்க விட்டுட்டு என்னால இங்க நிம்மதியா வேலை செய்யவே முடியாது மாமா… அவ என் கண் முன்னாடி இருந்தாப் போதும்…” அவன் மனதிலிருந்து உண்மையை மட்டுமே கூறிக்கொண்டிருக்க… கேட்டுக்கொண்டிருந்த சுந்தரத்திற்கும் மனம் கசிந்தது…

ஆனால் அவனது உள்மனதில் பெற்றோரைப் பறிகொடுத்த வடு இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை யாரும் உணரவில்லை… அதை உணர்ந்ததால் தான் தமிழ் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் மௌனியாகியிருந்தாள்… அதே போலத் தமிழுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் தான் அவனை முதலிலிருந்தே ஆட்டிப் படைத்தது… அதனால் தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளைக் கொண்டு வந்து அவனுடனே இருக்க செய்துவிட்டான்…

அவனுடைய இடத்தில் அவனால் எவ்வளவு பாதுகாப்பையும் செய்துவிட முடியும்… அவள் கண் முன் இருக்கும் பட்சத்தில் அவனால் மலையைக் கூடப் புரட்டிவிட முடியும்… ஆனால் அவளில்லாவிட்டால் அணுவும் அசைந்துவிடாது அவனுக்கு!

அந்தளவு அவனுக்குள் புகுந்திருந்தாள் தமிழ்!

பதவியேற்பு விழாவைத் தமிழ்நதியோடு வாஸந்தியும் புகழேந்தியும் பார்க்க…

“ஸ்ரீதரன் வெர்மா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் கேரள அரசின் அமைச்சராகவும், உண்மையாகவும், உளச்சான்றின் படியும்…” என்று அவன் கூறிவிட்டு தாய் தந்தை மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்று கூறி அவன் பதவியேற்றபோது அவளது கண்களில் கண்ணீர் பிரவாகம்!

துடைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவளை மற்ற இருவரும் கண்கள் கலங்க பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அக்கா… கண்ணைத் துடை… எல்லாரும் பார்க்கறாங்க பார்…” என்று வாஸந்தி கூறிக்கொண்டிருக்கும் போதே, அவளைக் கேமரா விழுங்கத் துவங்கியிருந்தது.

முதலிலேயே ஸ்ரீதரனின் காதலியை பற்றிக் கிசுகிசுவாக எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கு அது அல்வா கிடைத்தது போல அல்லவா! அதிலும் ஸ்ரீதரன் வெர்மா இப்போது அமைச்சர் வேறு! மாவேலிக்கரையின் அடுத்த தம்புராட்டி இவர்தான் என்று தமிழ்நதியின் படத்தைப் போட ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு அவளைக் கேமராவில் பதிவு கொண்டிருந்தனர்…

“அக்ஸ்… போட்டோ வேற எடுக்கறாங்க… போச்சு போ… இந்த அழுமூஞ்சி அக்காவையா நீங்கக் கட்டிக்க போறீங்கன்னு எல்லாரும் மாம்ஸ கலாய்க்க போறாங்க…” என்று புகழேந்தி கிண்டலடிக்கும் போதே தெரிந்தது யார் அந்த வேலையைச் செய்வார்கள் என்று!

“டேய் நீதாண்டா அந்த வேலைய செய்வ…” என்று வாஸந்தி அவனை வார,

“நீ மட்டும் என்ன ஒழுங்கா? கல்யானமாகிடுச்சுன்னு ரொம்ப நல்லவளாட்டம் சீனைப் போடாதே…” என்று அவளை அவன் வார…

இருவரையும் பார்த்து தமிழ்நதி சிரித்தாள்…

“அக்ஸ்… நீ பன்னதுலையே நல்ல காரியம் என்ன தெரியுமா?” தமிழ்நதியை பார்த்து அவன் கேட்க… அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“என்னடா?” பொறுக்க முடியாமல் வாஸந்தி கேட்டாள்…” நீயும் தான் குட்டி அக்ஸ்…” என்று வாஸந்தியையும் பார்த்து அவன் கூற… இருவருமே புரியாமல் அவனைப் பார்த்தனர்…

“ரெண்டு பேருமே கேரளால இருக்க போறதுதான்…” என்று அவன் சிரிக்காமல் கூற… இருவருக்கும் இன்னமும் புரியவில்லை…

“அதனால என்னடா…” என்று இருவரும் ஒரே குரலில் கேட்க,

“பின்ன… நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா எனக்கு எவ்வளவு யூஸ் தெரியுமா? கேரளா பொண்ணுங்க எல்லாம் செம அழகா இருக்காங்க… நல்ல சூப்பர் கேரளா பிகரா பார்த்து ரெண்டு பேருமே எனக்குச் செட் பண்ணி விடலாம்…” என்று கூறிக்கொண்டே போக… இருவருமாக அவனை மொத்துவதற்கு நினைத்தாலும் சுற்றி அமர்ந்திருந்த மக்களைக் கணக்கில் கொண்டு வஞ்சத்தை நெஞ்சிலேயே வைத்துக்கொண்டனர்…

“டேய் மகனே… உனக்குக் கேரளா பொண்ணு என்ன… கர்னாடகா பொண்ணு ஆந்திரா பொண்ணு, தெலுங்கானா பொண்ணு, ஈவன் மார்ஸ் ஜூபிடர்ல லாம் கூடப் பொண்ணு கிடைக்காது… கிடைக்கத்தான் நாங்க விட்டுடுவோமா?” தமிழ்நதி வில்லியை போலக் கூற…

“அடப்பாவி அக்கா… நீயும் ஒரு அக்காவா? இப்படி உன் தம்பி வாழ்க்கைய நாசம் பண்ண பார்க்கறியே…” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு…

“நீங்க ரெண்டு பேரும் இனிமே எனக்குத் தேவையே இல்ல… ரெண்டு மாம்ஸ் இருக்காங்க எனக்கு… அது போதும்…” என்று கண்ணடிக்க…

“டேய் அவங்களை நீ மாமாவாவே மாத்த பார்க்கறியேடா…” வாஸந்தி கடுப்படிக்க,

“பின்ன… இந்தப் புகழுக்கு பிகர் செட் செய்யறதை விட அவங்களுக்கு வேறென்ன வேலை?” என்று சிரிக்காமல் அவன் கேட்க…

“டேய் வீட்டுக்குப் போனவுடனே இருக்குடி உனக்கு…” வாஸந்தி எச்சரிக்கை செய்தாலும் அவன் மதித்தால் தானே!

“ஆனா அக்ஸ்… மாம்ஸ் செம்ம ஹான்சம்… நீ எப்படி அவருக்கு மேட்ச் ஆவ?” மேடையில் வெள்ளை வேஷ்டி சட்டையில் கையில் ரோலக்ஸ் வாட்ச், கண்களில் ரிம்லெஸ் கண்ணாடியோடு அவன் பதவியேற்றதை பார்த்த வாஸந்தி தமிழை கலாய்க்க… புகழும் சேர்ந்து சிரித்தான்.

“ஏய் அடங்குடி வாயாடி…” என்று தமிழ் சிரிக்க,

“ஏதோ மாம்ஸ் என்னை மாதிரி ஒரு தியாகிபோல இருக்கு…” என்று மீண்டும் அவள் கலாய்க்க…

“ஆமா… நீ, உங்க மாமா எல்லாரும் தியாகி பரம்பரை… அப்படியே கல்வெட்டுல செதுக்கி வெச்சுட்டு அங்கேயே உட்கார்ந்துக்கங்க… வரப் போற சந்ததி எல்லாம் தெரிஞ்சுக்கட்டும்…” என்று தமிழ்நதி சிரிக்க…

“அக்ஸ் எனக்கு ஒரு டவுட்…” வாஸந்தி தமிழின் காதைக் கடிக்க,

“என்னடி?”

“எழுதி வெச்சுட்டு நாங்க அங்கேயே உட்கார்ந்து இருந்தா எப்படி நம்ம சந்ததி அதைப் பார்க்க வரும்… நாம வேலை பார்த்தா தானே சந்ததியே வரும்?” கிசுகிசுப்பாகத் தமிழின் காதைக் கடித்தவளை கொலைவெறியோடு பார்த்தாள் தமிழ்நதி…

“கஷ்டம்டி ஆத்தா… எப்படித்தான் மச்சான் உன்னை வெச்சுட்டு தாட்றாரோ? பாவம் டி அந்த மனுஷன்…” என்று சிரிக்காமல் அவள் கூற…

“ஆமா அக்ஸ்… ரொம்ப கஷ்டபடறார் மனுஷன்… எனக்கே பாவமாத்தான் இருக்கு… ஆனா சிக்கின சிக்கனை எப்படி சிக்ஸ்டி பைவ் போடாம வெச்சு இருக்கறது?” மிகவும் அப்பாவித்தனமாகக் கேட்க… அந்தச் சிக்ஸ்டி பைவ் மட்டும் புகழின் காதில் விழுந்தது… அவன் பதறித் துள்ளி எழப் பார்த்தான்…

“எங்க சிக்ஸ்டி பைவ்… எங்க சிக்ஸ்டி பைவ்…” என்று சுற்றிலும் அவன் தேட…

“டேய் பக்கி… ரொம்ப சீனை காட்டாதே… அடுத்த சிக்ஸ்டி பைவ் நீதான்டி…” வாஸந்தி கலாய்க்க…

மாற்றி மாற்றி அரட்டையடித்துக் கொண்டே விழாவையும் அவர்கள் பார்க்க, அவ்வப்போது அவர்களைப் பார்வையிட்டுக் கொண்டனர் ஸ்ரீதரனும் ஸ்ரீதரும்.

பதவியேற்பு விழாவை முடித்து விட்டு ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சோபாவில் சரிந்தமர்ந்தான் ஸ்ரீதரன்…

உடன் வந்த ராஜீவ், பணிக்கர், ஜோஸ், ஸ்ரீதர் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருந்தது… மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள…

“இனிமே என்ன… அடுத்து திருமணம் தானே?” ஜோஸ் ஆர்வமாகக் கேட்க…

“ம்ம்ம் ஆமாம் ஜோஸ் ஏட்டா… ஆனா திருவிதாங்கூரிலிருந்து ரொம்பவுமே எதிர்ப்பு கிளம்பியிருக்கு… என்னை அங்கீகரிக்காமல் வாமனனை அங்கீகரிக்கப் போறாங்களாம்…” வெகு இயல்பாகக் குண்டைத் தூக்கி போட, அனைவருமே அதிர்ந்துப் பார்த்தனர்…

“என்ன அநியாயம் இது? கோலஸ்வரூபமொன்றும் அவர்களுக்கு அடிமை இல்லையே… அதுவும் இப்போது? அவர்கள் என்ன அங்கீகரிப்பது?” பணிக்கர் சூடாகக் கேட்க…

“அப்படி விட முடியாது பணிக்கரே… அப்படியொரு தீர்மானத்தை அவர்கள் எடுத்துவிட்டால் எனக்குப் பிரச்சனை வரவில்லை என்றாலும் பின்னாளில் எனது வாரிசுகளுக்கு வரலாம்… அதை யோசித்துத்தான் தேர்தல் முடிந்த பிறகு இதைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்…” என்று அவன் கூற…

கனமான மௌனம் சூழ்ந்தது…

“இனியும் அவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று நினைக்கறீங்களா தம்புரானே?” பணிக்கர் யோசனையாகக் கேட்க…

“செய்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு என்ன நெருக்கடி கொடுப்பது என்பதையும் நான் தீர்மானித்து விட்டேன் பணிக்கரே…” என்று அவன் சிரித்தான்…

“இந்த ஸ்ரீதரனை மிரட்டிப் பார்க்கலாம் என்று யாருமே நினைத்து விடக் கூடாது… அப்படி செய்தால் என்ன ஆகுமென்று அவர்களும் அறிந்து கொள்ளட்டுமே…” என்று இறுகிய குரலில் அவன் கூற, அவனைச் சற்று தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நதிக்கு தான் பயம் நெஞ்சைக் கவ்விப்பிடித்தது.

ராஜீவின் கைப்பேசி அழைத்தது…

பேசியவனின் முகம் மாறியது… பேசிவிட்டு வைத்தவனின் முகம் வெளிறிப் போனது…

“என்ன ராஜீவ்…” ஒருமாதிரியாக நின்றிருந்தவனை ஸ்ரீதரன் கேட்க,

“சர்… வாமனன் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறாராம்…” என்று இடைவெளி விட,

“எதற்கு?” ஸ்ரீதரன் இறுக்கமாகக் கேட்க,

“மாவேலிக்கரா கிருஷ்ணர் கோவிலின் நிலவறைகளை திறக்க வேண்டும் என்று…”